Tamil eBook Library
Library entries contain information about the series, library and collection of documents to which the book belongs.!

தமிழ்ப் புலவர் அகராதி
ந.சி. கந்தையா



தமிழ்ப் புலவர் அகராதி


1. தமிழ்ப் புலவர் அகராதி
2. தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)
3. அகம் நுதலுதல்
4. நூலறிமுகவுரை
5. கருவிநூல் தந்த ந.சி. கந்தையா
6. பதிப்புரை
7. தமிழ்ப் புலவர் அகராதி (புலவர் அகர வரிசை)


தமிழ்ப் புலவர் அகராதி

 

ந.சி. கந்தையா


நூற்குறிப்பு
  நூற்பெயர் : தமிழ்ப் புலவர் அகராதி
  ஆசிரியர் : ந.சி. கந்தையா
  பதிப்பாளர் : இ. இனியன்
  முதல் பதிப்பு : 2003
  தாள் : 16.0 கி. மேப்லித்தோ
  அளவு : 1/8 தெம்மி
  எழுத்து : 11 புள்ளி
  பக்கம் : 20 + 212 = 232
  படிகள் : 1000
  விலை : உரு. 100
  நூலாக்கம் : பாவாணர் கணினி
  2, சிங்காரவேலர் தெரு,
  தியாகராயர் நகர், சென்னை - 17.
  அட்டை வடிவமைப்பு : பிரேம்
  அச்சு : வெங்கடேசுவரா ஆப்செட்
  20 அஜீஸ் முல்க் 5வது தெரு
  ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006
  கட்டமைப்பு : இயல்பு
  வெளியீடு : அமிழ்தம் பதிப்பகம்
  328/10 திவான்சாகிப் தோட்டம்,
  டி.டி.கே. சாலை,
  இராயப்பேட்டை, சென்னை - 600 014.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வாழ்வும் தொண்டும் (1893 - 1967)


தமிழ்மொழியின் தொன்மையை அதன் தனித் தன்மையை உலக மொழிகளோடு ஒப்பிட்டு விரிவாக ஆய்வு செய்தவர் தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள். தமிழ் இனத்தின் மேன்மையை வரலாற்று நோக்கில் ஆய்வு செய்தவரும் அவரே.

‘தொண்டு செய்வாய்! தமிழுக்குத்
துறைதோறும் துறைதோறும் துடித்தெழுந்தே’

என்பார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார். புரட்சிக் கவிஞரின் கனவை நினைவாக்கும் வகையில், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தமிழின் துறைதோறும் துறைதோறும் அரிய ஆய்வு நூல்களை எழுதியவர். தமது நூல்களின் வாயிலாக வீழ்ச்சியுற்ற தமிழினத்தை எழுச்சி பெறச் செய்தவர்.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப் பணியோ மலையினும் மாணப் பெரியது. ஆயினும் அவருடைய வாழ்க்கைப் பதிவுகளாக நமக்குக் கிடைப்பன தினையளவே யாகும். தமிழர்கள் அந்த மாமனிதரின் தமிழ்ப் பணியைக் கூர்ந்து அறிந்து தக்க வகையில் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பதிவு செய்யத் தவறி விட்டார்கள் என்றுதான் தோன்றுகிறது. இன்று அவருடைய வாழ்ககைக் குறிப்புகளாக நமக்குக் கிடைப்பன மிகச் சிலவாகும். அவை:-

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் ஈழ நாட்டில் கந்தரோடை என்னும் ஊரில் 1893 ஆம் ஆண்டில் திரு நன்னியர் சின்னத்தம்பி என்பாரின் புதல்வராய்ப் பிறந்தார். தக்க ஆசிரியரிடம் பயின்று கல்வியில் தேர்ந்தார். பின்னர் கந்தரோடை என்னும் ஊரில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணி புரிந்தார். ஆசிரியர் பணியிலிருக்கும் போதே தக்க பெரும் புலவர்களைத் தேடிச் சென்று தமிழ் இலக்கிய இலக்கணங்கள் முறையாகப் பயின்று பெரும் புலவராய் விளங்கினார். ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநராய்த் திகழ்ந்தார். பின்னர் மலேசியா நாட்டிற்குச் சென்று சிறிதுகாலம் புகைவண்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் தமிழறிவு ஆழமும் அகலமும் கொண்டது. அவரது வாழ்க்கை முழுமையும் தமிழ் ஆய்வுப் பணியே பெரும் பணியாக அமைந்தது. அவர் பெற்ற ஆங்கில அறிவின் துணையால் தமிழ் மொழி, தமிழினம் தொடர்பான மேலை நாட்டு அறிஞர்களின் நூல்களை யெல்லாம் நுணுகிக் கற்றார் வியக்கத்தக்க கல்விக் கடலாய் விளங்கினார். அறுபதுக்கு மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதினார்.

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் தாம் எழுதிய நூல்களைப் பதிப்பித்து வெளியிட வேண்டும் என்று வேட்கை கொண்டார். இலங்கையில் அதற்குப் போதிய வசதி இல்லை. ஆதலால் தமிழ்நாட்டுக்கு வருகை புரிந்தார். சென்னையில் “ஒற்றுமை நிலையம்” என்னும் பதிப்பகத்தின் உரிமையாளராய்த் திகழ்ந்தவர் வீரபாகு பிள்ளை என்பவர். அவர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டார். பின்னர் முத்தமிழ் நிலையம், ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் ஆகியவற்றின் வாயிலாக ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் நூல்கள் வெளிவரலாயின.

ந.சி. கந்தையா பிள்ளையவர்களின் அருமைத் துணைவியார் இரத்தினம்மா எனப்படுபவர். இவருக்குத் திருநாவுக்கரசு என்றொரு மகனும் மங்கையர்க்கரசி என்றொரு மகளாரும் உண்டு. துணைவியார் பல ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். தமிழ்மொழி, தமிழினம் ஆகியவற்றின் மேன்மைக்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை தமது எழுபத்து நான்காம் வயதில் 1967இல் இலங்கையில் மறைந்தார். எனினும் தமிழ் வாழும் வரை அவரது புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

தமிழறிஞர் கந்தையா பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணி மதிப்பு மிக்கது; காலத்தை வென்று நிலைத்துநிற்க வல்லது. தமிழ்மொழி, தமிழ்நாடு, தமிழ்ப்பண்பாடு, தமிழ்இனம் ஆகியவற்றின் வரலாற்றை எழுதியதில் அவருக்குப் பெரும் பங்குண்டு. அவருடைய ஆய்வுப் பணியைச் சிறிது நோக்குவோம்.

அகராதிப் பணி
தமிழ் மொழியில் முதன் முதலில் தோன்றிய அகராதி வீரமா முனிவர் எழுதிய சதுரகராதியே யாகும். பின்னர் பல்வேறு அகராதிகள் தோன்றின, வளர்ந்தன, வெளிவந்தன. அகராதி வளர்ச்சிப் பணியில் கந்தையா பிள்ளையவர்களுக்கும் பெரும் பங்குண்டு. அவர் படைத்த அகராதிகள் ஐந்து. 1. செந்தமிழ் அகராதி, 2. தமிழ் இலக்கிய அகராதி, 3. தமிழ்ப் புலவர் அகராதி, 4. திருக்குறள் அகராதி, 5. காலக் குறிப்பு அகராதி என்பன அவை.

ந.சி. கந்தையா பிள்ளை அவர்கள் செந்தமிழ் அகராதி முன்னுரை யில் “நாம் தமிழ்த் தாய் மொழிக்குச் செய்யும் பணிகளுள் ஒன்றாக இந் நூலைச் செய்து முடித்தோம்” என்கிறார். “நூலொன்றைச் செய்து தமிழுலகுக்கு உதவ வேண்டும் என்னும் ஆவலால் பலவகையில் முயன்று இந் நூலைச் செய்து முடித்தோம்” என்று கூறுகிறார். தமிழ் இலக்கிய அகராதியில் அகத்தியர் முதல் வைராக்கிய தீபம் ஈறாக ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் அகராதியில் பல நூற்றுக்கணக்கான தமிழ்ப்புலவர்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தொகுத்த திருக்குறள் சொற் பொருள் அகராதி பயன்பாடு மிக்கது. காலக்குறிப்பு அகராதி புதுமை யானது. தமிழ் மொழியில் இது போன்ற அகராதி இதுவரை வெளிவந்த தில்லை “இந்நூல் ஓர் அறிவுக் களஞ்சியம்” என்கிறார் முனைவர். மா. இராச மாணிக்கனார்.

இலக்கியப் பணி
புலவர்களுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த தமிழ் இலக்கியச் செல்வத்தை எளிய மக்களும் படித்துப் பயன் பெறுமாறு உரைநடையில் வழங்கிய வள்ளல் கந்தையா பிள்ளை அவர்கள்.

பத்துப்பாட்டு, அகநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலிங்கத்துப்பரணி, புறப்பொருள் விளக்கம், விறலிவிடுதூது போன்ற இலக்கியச் செல்வங்களை எல்லாம் இனிய எளிய நடையில் உரைநடையில் தந்தவர் கந்தையா பிள்ளை அவர்கள். திருக்குறளுக்கும், நீதிநெறி விளக்கத்திற்கும் அரிய உரை வரைந்தவர்.

தமிழ்மொழி - தமிழினம்
தமிழ்மொழி - தமிழினம் தொடர்பாகப் பதினைந்துக்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியவர் கந்தையா பிள்ளை. தமிழகம், தமிழ் இந்தியா, தமிழர் சரித்திரம், தமிழர்யார்?, வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந்தமிழர், நமதுமொழி, நமதுநாடு, தமிழ் ஆராய்ச்சி, தமிழ் விளக்கம், முச்சங்கம், அகத்தியர், சிந்துவெளி நாகரிகம், தமிழர் பண்பாடு, தமிழர்சமயம் எது? சிவன், சைவ சமய வரலாறு, தமிழ்ப் பழமையும் புதுமையும் போன்ற எண்ணற்ற அரிய ஆயவு நூல்களைப் படைத்தவர். ஆயிரக் கணக்கான நூற்கடலுள் மூழ்கி எடுத்த அரிய கொற்கை முத்துக்கள் அவரது நூல்கள். எத்தனை ஆண்டுகாலப் பேருழைப்பு! நினைத்தால் மலைப்புத் தோன்றும். தமிழின் - தமிழினத்தின் தொன்மையைத் தமிழர்தம் பண்பாட்டை - நாகரிகத்தை, தமிழர்தம் உயர் வாழ்வியலை உலகறியச் செய்த பேரறிஞர் கந்தையா பிள்ளை.

திராவிட நாகரிகமும் - ஆரியத்தால் விளைந்த கேடும்
தொன்மை மிக்க திராவிட நாகரிகத்தின் சிறப்புகளை விளக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். அவை:-

திராவிடர் நாகரிகம், திராவிடம் என்றால் என்ன? திராவிட இந்தியா, தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் போன்ற அரிய ஆய்வு நூல்களை எழுதினார். ஆரியர்களால் விளைந்த கேடுகள் குறித்தும், ஆரியர் தமிழர் கலப்பு, ஆரியத்தால் விளைந்த கேடு, புரோகிதர் ஆட்சி, இராமாயணம் நடந்த கதையா? என்பன போன்ற நூல்களை எழுதினார்.

பிற
மாணவர் தம் அறிவை விரிவு செய்யும் வகையில் எட்டு நூல்களும், மகளிருக்குப் பல்லாண்டுக் காலமாக இழைக்கப்பட்டு வரும் கொடுமைகள் குறித்து மூன்று நூல்களையும் எழுதினார். மேலும் மொழிபெயர்ப்பு நூல்கள் சிலவும் மனித இனத்தோற்றம் குறித்த நூல்கள் சிலவும் எனப் பல நூல்களை எழுதியுள்ளார். புரட்சிக் கவிஞர் கூறியவாறு துறைதோறும், துறைதோறும் எண்ணற்ற நூல்களை எழுதித் தமிழுக்கு வளம் சேர்த்தவர். ந.சி. கந்தையா பிள்ளை. புட்சிக்கவிஞர் பாரதிதாசனார், தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டுகிறார்.

“ந.சி. கந்தையா எனும் நல்லவன், வல்லவன் தமிழ் தமிழின வரலாறனைத்தையும் தொல்பொருள் ஆய்வின் தொகை வகை, விரித்து நிலநூல், கடல்நூல் சான்றுகள் நிறைத்தும் தமிழ் நூற் சான்றுகள் முட்டறுத் தியம்பியும் இலக்கிய இலக்கணச் சான்றுகள் கொடுத்தும் பழக்க வழக்க ஒழுக்கம் காட்டியும் வையகம் வியக்க வரலாறு எழுதினான். பொய் அகன்று மெய்க் கை உயர்ந்தது.”

வாழ்க! ந.சி. கந்தையா பிள்ளையின் பெரும் புகழ்!

தமிழறிஞர் ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் வரலாறே தமிழர் களால் மறக்கப்பட்டு விட்டது. தமிழ்ப் பகைவர்களால் மறைக்கப்பட்டு விட்டது. அங்ஙனமிருக்க அம் மாமனிதரின் ஆய்வு நூல்கள் மட்டும் எங்ஙனம் கிடைக்கும்? ஆழ்கடலிலிருந்து முத்துக்கள் எடுப்பது போல, தங்கச் சுரங்கத்திலிருந்து தங்கத்தை வெட்டி எடுப்பது போல, பெருமுயற்சி எடுத்து ந.சி. கந்தையா பிள்ளை அவர்களின் நூல்களைத் தேடினேன். நூல்நிலையங்களைத் தேடித்தேடி என் கால்கள் அலைந்த வண்ணம் இருந்தன. அதன் விளைவாக ஐம்பது நூல்கள் கிடைத்தன. பெரும் புதையலைத் தேடி எடுத்தது போல் பெருமகிழ்வுற்றேன்.

அன்பன்

கோ. தேவராசன்

அகம் நுதலுதல்


உலகில் வாழும் மாந்தர் அனைவர்க்கும் உள்ளார்ந்த எண்ண ஓட்டங்கள் அலை அலையாய் எழுந்து பல்வேறு வடிவங்களில் வெளிப் படுகின்றன. சங்கக் காலத்துத் தமிழ் மாந்தர் தமது எண்ணங்களை ஒழுங்கு படுத்தி ஒரு வரையறைக்குள் கட்டுப்படுத்தி வாழ முற்பட்டதன் விளைவே நாகரிகத்தின் தொடக்கம் எனலாம்.

உலகில் தோன்றி வாழ்ந்து வரும் எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது இயல்பாக விரும்பி ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகவே உள்ளது. அந்த இன்பத்துககுத் தடையோ இடையீடோ நேரின் அதைப் போக்கிக் கொள்ள முயலும் முறையில் மனிதக் குலத்துக்குத் தனிப் பண்பு சிறப்பாக வெளிப்பட்டிருப்பதைச் சங்க இலக்கியத்தின் வழி நன்கு அறிய முடிகிறது.

தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் என மூன்று பெரும் பிரிவாக மனித வாழ்வின் இயல்பை வகுத்து இலக்கணம் செய்தாலும், அவன் உள்ளத்தில் எழும் உணர்வை வெளிப்படுத்த மொழியும் சொல்லும் அதன் பொருளும் ஒன்றையொன்று பின்னிப் பிணைந்திருக்கின்ற பாங்கு புறத்திணைச் செய்யுளைக் காட்டிலும் அகத்திணைச் செய்யுள்களிலேயே மிகுந்திருப்பதைக் காண முடிகிறது.

தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்றார். குறித்தனவே என்னும் தேற்றேகாரம் பொருள் குறியாத சொல் இல்லை என்பதையே உணர்த்துகிறது. இற்றை நாளில் நம்மில் சிலர் வஞ்சக எண்ணத்துடனும் பலர் மக்களின் சிந்தனை ஓட்டத்தைத் தூண்டி நல்வழிப் படுத்தவும் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதைக் கேட்கிறோம்.

எருதுநோய் காக்கைக்குத் தெரியாது என்று கூறும் போதும் குதிரைக்குக் கொம்பு முளைத்தது போலத்தான் என்று கூறும் போதும் (முயற்கொம்பே) அச் சொல்லின் பொருளையும் அதனால் நுண்ணுணர் வுடையார் அறியும் வேறு பொருளையும் அச் சொல் உணர்த்துவதாக அறிய முடிகிறது. விடுகதைகள் சொல்லி அறிவைத் தூண்டிச் சிந்திக்க வைப்பதும் சிலேடையாகப் பேசி உட்பொருளை உணரத் தூண்டுவதும் இன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அறிவார்ந்த செயல்கள்.

இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்ப் பிரிவின் முடிவும் மனித னின் உள்ளுணர்வை வெளிப்படுத்த முயன்ற முயற்சியே. அகம் - புறம் என்ற பிரிவில் உள்ளத்து உணர்வைத்தான் நுகர்ந்தான் என்பதை எவ்வாறு வெளிப்படுத்துவது? எவ்வாறு அறிவது? அறமோ மறமோ - உயிர் உடல் வேறுபாடுகளால், மொழியால், இசையால், அழுகையால், சைகை என்னும் நாடகத்தால் அல்லவோ வெளிப்படுத்த முடியும். அகத்தில் எழும் காதல் உணர்வை ஒருவனும் ஒருத்தியும் நுகர்ந்த நுகர்ச்சியை இத்தகையது என்று பிறர்க்கு அறிவுறுத்த இயலாது. அகத்தால் மட்டுமே உள் முகமாக நாடி ஆராய்ந்து அறிந்து கொள்ளமுடியும் என்பது உண்மை என்றாலும். இவ்வுணர்வு மனிதக் குலத்திற்கு ஒத்திருப்பதால் சில பல குறிப்புகளை மட்டுமே வெளிப்படுத்தினால் போதும் மற்றவரும் அறிந்து இது இவ்வாறு இருக்கும் என்று உணர்ந்து மகிழவும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யவும் ஏதுவாக இருக்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய மூன்றும் நானூறு நானூறு பாடல்களாலான தொகை நூல்கள். சங்கக்காலச் சான்றோரின் அரிய முயற்சியால் இவ்வாறு தொகுக்கப் பட்டாலும் அகப் பொருள் திணைக் களங்கள் ஐந்தும் இவற்றுள் கலந்துள்ளன. ஆனால் குறுந்தொகை 4 முதல் 8 அடிகளும், நற்றிணை 9 முதல் 12 அடிகளும், அகநானூறு 13 முதல் 21 அடிகளும் கொண்ட அடிவரையறை களையுடையன. ஏனோ அகநானூறு நீண்ட ஆசிரியப் பாவான் அமைந்து நெடுந்தொகை எனப் பெயர் பெற்றாலும் களிற்றி யானை நிரை, மணிமிடைப் பவளம், நித்திலக் கோவை என முப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உயிர் எழுத்துகள் 12 மெய் எழுத்துகள் 18 என்பதால் எழுத்துகள் ஒவ்வொன்றற்கும் பத்துப் பத்தாகக் களிற்று யானை நிரை 12 x 10 = 120 பாடல்களாகவும் மணிமிடை பவளம் 18 x 10 = 180 பாடல்களாகவும் பிரித்தனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. மதங் கொண்ட யானை போன்ற ஐம்புலனையும் ஒழுங்கு படுத்தக் களிற்றுயானை நிரை என்று உயிர் பன்னிரண்டை 120 ஆகப் பகுத்தனரோ! மணிபோன்ற மெய்யான உடலை நிரல்பட மாலையாகத் தொடுக்கப்பட்டதாக எண்ணிப் பதினெட்டை 180 மணிமிடை பவளமாகத் தொகுத்தனரோ! உள்ளமாகிய கடலின் ஆழத்திலிருந்து சேகரித்த நித்திலத்தை முழுமை பெற்ற மாலையாகத் தரித்து மகிழவோ முழுவதும் நூறி எழுந்த வெற்றி யின்பத்தைக் குறிக்கவோ 100 நூறு பாடல்களை நித்திலக் கோவை எனத் தொகுத்தனர் என்று எண்ணத் தோன்றுகிறது. இந்த முப்பான் பிரிவிற்குக் காரணம் முழுமையாகத் தோன்றவில்லை.

வகுபடாமல் ஒற்றைப் படையாய் எஞ்சி நிற்கும் எண்களையுடைய பாடல்கள் உரிப்பொருளால் பாலைத் திணைப் பாடல்களாகவும், இரண்டும் எட்டும் உரிப் பொருளால் புணர்ச்சியை உணர்த்தும் குறிஞ்சித் திணைப் பாடல்களாகவும், நான்கில் முடியும் எண்ணுள்ள பாடல்கள் நான்கு உறுதிப் பொருள்களை எண்ணி உரிப் பொருளால் ஆற்றி இருக்கும் முல்லைத் திணைப் பாடல்களாகவும், ஆறாவது எண்ணில் முடியும் பாடல்கள் தொடர்ந்து செல்லும் ஆறுபோல மனம் ஒருநிலைப் படாமல் மாறி மாறி உடல் கொள்ளவாய்ப்பாக அமைந்து நீர் வளம் மிக்க மருதத்திணைப் பாடலாகவும், முழுமை பெற்ற ஒன்றோடு சுழியைச் சேர்த்தது போன்ற பத்தாம் எண்ணுள்ள பாடல்கள் யான் என் தலைவனோடு சேர்ந்து என்று முழுமை பெறுவோனோ என்று இரங்கி ஏங்கும் உரிப் பொருளால் நெய்தல் திணைப் பாடலாகவும் பகுத்துத் தொகுத்திருக்கும் பாங்கு அகநானூற்றுப் பாடல்களில் மட்டுமே காணப்படும் சிறப்பாகும். முல்லை, மருதம், நெய்தல் ஆகிய முத் திணைப் பாடல்கள் ஒவ்வொன்றும் சமமாக நாற்பது பாடல்களைக் கொண்டு பொதுவாக அமைந்துள்ளது. புணர்ச்சி உரிப் பொருளை உணர்த்தும் குறிஞ்சிப் பாடல்கள் எண்பதாக அமைந்தன; பிரிவை உணர்த்தும் பாலைத்திணைப் பாடல்கள் இருநூறாக உள்ளது வாழ்வில் இன்பம் அடைய துன்பத்தில் மிகுதியும் உழல வேண்டியுள்ளது என்பதை உணர்த்தவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

அகத்துறைப் பாடல்கள் நாடகப் பாங்கில் அமைந்துள்ளன. சொல்ல வந்த கருத்தை நிலை நாட்ட உவமை மூலமாக விளக்குவது மிகவும் எளிது. பெண்கள் நயமாகப் பேசிக் கருத்தை வலியுறுத்திச் செயல் படுத்துவதில் வல்லவர்கள். அகத்துறையில் தோழி அறத்தொடு நின்று பேசும் பேச்சுகள் தமிழ்ப் பண்பாட்டின் தனித்தன்மையைக் காட்டுவன. தோழியின் பேச்சில் உள்ளுறைப் பொருளும் இறைச்சிப் பொருளும் வெளிப்படும் பாங்கு நினைந்து நினைந்து போற்றத்தக்கன.

உள்ளுறை என்பது தெய்வம் நீங்கலாகக் கூறப்படும். அவ்வந் நிலத்துக் கருப் பொருள்களை நிலைக்களனாகக் கொண்டு உணரப்படும் குறிப்புப் பொருளாகும். கருப் பொருள் நிகழ்சசிகள் உவமம் போல அமைந்து அவற்றின் ஒத்து முடிவது போலப் பெறப்படும் ஒரு கருத்துப் பொருளாகும்.

இறைச்சி தானே பொருட் புறத்ததுவே என்பார் தொல்காப்பியர். இறைச்சியிற் பிறக்கும் பொருளுமாருளவே இறைச்சி தானே உரிப் புறத்ததுவே என்றும் பாடம். அகத்திணைக் கருப்பொருள்களின் மூலம் பெறப்படும் குறிப்புப் பொருள் இறைச்சி என்று கொள்ளலாம். அக் குறிப்புப் பொருளிலிருந்து வேறு ஒரு கருத்துப் பெறப்படுமாயின் அக் கருத்தே இறைச்சியில் பிறக்கும் பொருள் என்று கொள்ளலாம். அகநானூற்றில் முதல் கருப்பொருள்களுக்கே சிறப்பிடம் கொடுத்துப் பேசப்படுகிறது. மிக நுட்பமான உள்ளுறை உவமமும் இறைச்சிப் பொருளும் ஆங்காங்கு கண்டு உணர்ந்து மகிழுமாறு அமைந்துள்ளன. ஆசிரியர் சங்க இலக்கியச் செய்யுள்களில் பெரிதும் பயிற்சியுடையவர் என்பதை அவரது உரைநடையால் காணமுடிகிறது. செய்யுள் இலக்கணம் கடந்த உரைநடைப் பாட்டு என்று சொல்லுமளவுக்குத் தொடர்கள் அமைந் துள்ளன. நீண்ட எச்சச் சொற்களால் கருத்தைத் தெளிவுறுத்தும் பாங்கு இவ்வாசிரியர்க்கே கைவந்த கலையாக அமைந்து நம்மை எல்லாம் வியக்க வைக்கிறது.

சங்கக் காலத்தில் வழக்கிலிருந்த சொற்களை நினைவுறுத்தும் பாங்கில் அரிய சொற்களைத் தமது உரைநடையில் கையாண்டு தமிழைப் பழம் பெருமை குன்றாமல் காத்திட இவரது உரைநடை சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதை இந்த அகநானூற்று உரைநடையைப் பயில்வார் உணர்வர் என்பது உறுதி.

அரிய நயம் மிக்க செந்தமிழ்த் தொடரையும் ஆசிரியர் தமது உரையில் தொடுத்துக் காட்டுகிறார். மெய்யின் நிழல் போலத் திரண்ட ஆயத்தோடு விளையாடி மகிழ்வேன் என்று 49 ஆம் பாடலில் குறிப்பிடு கிறார். மெய் - உண்மை அவரவர் நிழல் அவரவரை விட்டுப் பிரியாது அது போல தலைவியை விட்டுப் பிரியாத தோழியரோடு தலைவி விளையாடி யதை எண்ணி மகிழலாம்.

உப்புவிற்கும் பெண் ‘நெல்லுக்கு வெள்ளுப்பு’ என்று கூவிக் கை வீசி நடக்கிறாள். பண்ட மாற்று முறையை இது நமக்கு உணர்த்துகிறது.

நீனிற வண்ணன் குனியா நின்ற ஆயர் பெண்களின் துகிலை எடுத்துக் கொண்டு குருந்தமரத் தேறினானாகப் பானிற வண்ணன் இடையர் குலப் பெண்களின் மானத்தைக் காக்கக் குருந்த மரக் கிளையைத் தாழ்த்தித் தழைகளால் மறைத்துக் காத்தான் என்று கூறும் வரலாற்றைப் பாலைத் திணைச் செய்யுள் 59 இல் கூறியிருப்பது எண்ணி மகிழத்தக்கது. பெண் யானை உண்பதற்கு ஆண் யானை யாமரத்தின் கிளையைத் வளைத்துத் தாழ்த்தித் தருவதைக் கண்டும், மதநீர் ஒழுகும் கன்னத்தில் மொய்க்கும் வண்டுகளை ஓட்டும் தழைகளின் செயலையும் ஒருங்கு இணைத்துப் பார்த்துத் தலைவனின் தண்ணளியை எண்ணி ஆறி இருக்கலாம் என்னும் தோழியின் கூற்றை மிக ஆழமாக ஆசிரியர் விளக்கிய பாங்கு போற்றுதற்கு உரியதாம்.

அன்பன்

புலவர் த. ஆறுமுகன்

நூலறிமுகவுரை


திரு. ந.சி. கந்தையா பிள்ளை 1930-40களில் தமிழ், தமிழிலக்கியம், தமிழ்மொழி, தமிழர் வரலாறு, திராவிட வரலாறு, தமிழ்நாட்டுக் குடிகள் போன்ற பல விடயங்கள் பற்றி அக்காலத்துச் சாதாரண தமிழ் வாசகர் நிலையில் பெரிதும் வாசிக்கப்பட்ட நூல்களை எழுதினார். பண்டைய இலக்கியங்களான அகநானூறு, கலித்தொகை, பரிபாடல் போன்ற வற்றினை உரைநடையில் எழுதி மக்களிடையே சங்க இலக்கியம் பற்றிய உணர்வினை ஏற்படுத்தினார். திருக்குறளுக்கான ஒரு சொல்லடைவைத் திருக்குறள் அகராதி என்னும் பெயரில் வெளியிட்டவர். இவை யாவற்றுக்கும் மேலாக உலக வரலாற்று நிகழ்ச்சிகளைச் சுருக்கமாகக் காலவரிசைப்படுத்தித் தந்தார். செந்தமிழ் அகராதி என்றவோர் அகர முதலியையும் தொகுத்தார்.

இன்று பின்னோக்கிப் பார்க்கும் பொழுது 1940-50களில் இளைஞர் களாக இருந்த பல தமிழ் ஆர்வலர்கள் தமிழ் பற்றிய தங்கள் ஆர்வத்தை வளர்த்துக் கொள்வதற்கான வாசிப்பு விடயங்களை அளித்தவர். இவருடைய பெரும்பாலான படைப்புக்கள் அக்காலத்திற் பிரசுரிக்கப் பட்ட ஒற்றுமை என்னும் இதழின் அலுவலகத்தாலேயே வெளியிடப் பெற்றன. இவர் வெளியிட்டனவற்றுள் பல ஒற்றுமை இதழில் வெளிவந் திருத்தல் வேண்டும். ஆனால், அதனை இப்பொழுது நிச்சயமாக என்னாற் சொல்ல முடியவில்லை. ஒற்றுமை அலுவலகம் இவற்றைப் பிரசுரித்தது என்பதை அறிவேன். ஏனெனில் இலங்கையில் தமிழாசிரியராக இருந்த எனது தகப்பனாரிடத்து இந்நூல்களிற் பெரும்பாலானவை இருந்தன.

திரு ந.சி. கந்தையா பிள்ளையின் பெயர் தமிழகத்திலே தொடர்ந்து போற்றப்படுமளவுக்கு ஈழத்தில் நினைக்கப்படுவதில்லை என்ற உண்மையை மிகுந்த மனவருத்தத்துடன் பதிவு செய்யவேண்டியுள்ளது. அங்கு அவர் அத்துணைப் போற்றப்படாதிருப்பதற்குக் காரணம் ஏறத்தாழ அவர்களது எல்லா நூல்களுமே தமிழகத்திலேயே வெளியிடப் பெற்றன.

இந் நூல்களின் பிரசுரப் பின்புலம் பற்றி எதுவும் தெளிவாகத் தெரியவில்லை. அவற்றின் பொருளியல் அம்சங்கள் பற்றிய தரவுகளும் இப்பொழுது தெரியாதுள்ளன.

ஈழத்துத் தமிழிலக்கிய வரலாற்றிற்கூட இவரது பெயர் முக்கியப் படுத்தப் பெறாது போயுள்ளது. மிகுந்த சிரமத்தின் பின்னர் அவரைப் பற்றிக் கிடைத்துள்ள தகவல்கள் பின்வருமாறு:

சுவாமி ஞானப் பிரகாசர், ந.சி. கந்தையா பிள்ளை போன்ற அறிஞர்களின் தமிழ்ப் பங்களிப்புக்கள் தமிழகத்தில் போற்றப்படுகின்றமை ஈழத்தவர்க்குப் பெருமை தருகின்றது. இவர் எழுதிய நூல்களின் பெயரை நோக்கும்பொழுது தமிழ் வாசகர்களுக்கு உலக நிலைப்பட்ட, தமிழ்நிலைப் பட்ட தரவுகளைத் தொகுத்துத் தருவதே இவரது பெருஞ்சிரத்தையாக இருந்தது என்பது புலனாகின்றது. இப்பதிப்பகத்தின் பணியினை ஊக்குவிக்க வேண்டியது தமிழ்சார்ந்த நிறுவனங்களினதும் தமிழ்ப் பெரியோர்களினதும் கடமையாகும். உண்மையில் இதனை ஒரு அறிவுப்பசிப் பிணித் தீர்வாகவே நான் காண்கிறேன்.
2/7, றாம்ஸ்கேட், அன்புடன்

58, 37ஆவது ஒழுங்கை,

கார்த்திகேசு சிவத்தம்பி

வெள்ளவத்தை, தகைசார் ஓய்வுநிலை பேராசிரியர்

கொழும்பு - 6 யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்.

கருவிநூல் தந்த ந.சி. கந்தையா


தமிழ் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மூலவர்களில் யாழ்ப்பாணம் தந்த பேரறிஞர் ந.சி. கந்தையாவும் ஒருவர். உண்மையான அறிஞர்களைக் காலங்கடந்து அடையாளம் காண்பதும் அவர்தம் படைப்புக்களைத் தேடிப் பிடித்துப் புரப்பதும் தமிழினத்தின் பழக்கங்களில் ஒன்று.

தமிழின், தமிழரின் தொல்பழங்கால வரலாறு தொடர்பாகத் தமிழில் நூல்கள் மிகக் குறைவு. ஓர் ஆயிரம் நூல்களாவது தமிழின் தமிழரின் தொல்பழங்கால வரலாறுபற்றி வெளிவரவேண்டும். விரிவாக எழுதப்பட வேண்டிய தமிழ், தமிழர் வரலாற்று வரைவு முயற்சிக்கு வழிகாட்டும் கருவி நூல்களை வரைந்திருப்பவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

உலகம் முழுவதும் உற்றுக் கவனிக்க வேண்டிய வரலாற்றிற்கு உரியவர்கள் தமிழர்கள். அவர்களே உலக மொழிகளை ஈன்ற மூலமொழிக்குச் சொந்தக்காரர்கள். அவர்களே உலக நாகரிகங்களின் பிறப்பிற்குக் காரணமான உலக முதல் நாகரிகத்தைப் படைத்தவர்கள். இந்த உண்மைகளைத் தமிழர்களும் அறியவில்லை உலகமும் அறியவில்லை.

தமிழர் சரித்திரம், வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட பழந் தமிழர், தமிழர் யார், உலக நாகரிகத்தில் தமிழர்பங்கு, சிந்துவெளித் தமிழர், தமிழ் இந்தியா, தமிழகம், மறைந்த நாகரிகங்கள் ஆகியன ந.சி. கந்தையாவின் குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

உலக முதல் நாகரிகம் என இன்று உலகம் நம்பிக்கொண்டிருக்கக் கூடிய நீல ஆற்றங்கரை நாகரிகம் (Nile Civilisation) தமிழ் நாகரிகத்தின் அதாவது சிந்துவெளி நாகரிகத்தின் வழிப்பட்ட நாகரிகமே என்பதை ஏராளமான சான்றுகளால் விளக்குபவை மேலைய நூல்கள்.

மொழிநிலையில் தமிழின் உலக முதன்மையைப் பாவாணர் நிலைநாட்டினார் என்றால் இன நிலையில் தமிழின உலக முதன்மையை ந.சி. கந்தையா நிலைநாட்டினார் என்று உரைக்கலாம்.

நீல ஆற்றங்கரை நாகரிக முடிவின்பின் நண்ணிலக் கடற் பகுதியில் உருவான பிறிதொரு வழிநாகரிகமே கிரேக்க நாகரிகம். கிரேக்க நாகரிகத் தின் உடைவில் தெறிப்பில் பிறகு மலர்ந்தவையே இன்றைய மேலை நாகரிகம். உலகின் எல்லா நாகரிகங்களையும் தாங்கிநிற்கும் தாய் நாகரிகமே தமிழ் நாகரிகம்.

தமிழ் நாகரிகத் தொன்மையைச் சங்க நூல்களுக்கு அப்பால் சிந்துவெளி அகழ்வாய்வும் உலக வரலாற்றாசிரியர்கள் உலக முதல் நாகரிகம் பற்றித் தெரிவித்திருக்கும் கருத்துக்களும் நமக்கு மேலும் விளக்கும் பகுதிகளாகத் திகழ்கின்றன. இங்கெல்லாம் சென்று நுண்மாண் நுழைபுல முயற்சியால் தமிழின வரலாறு எழுதியவர்தான் ந.சி. கந்தையா பெருமகனார்.

ந.சி. கந்தையா பெருமகனார் நூல்களைத் தமிழரின் தொல்பழங்கால வரலாற்றைக் கற்கும் முயற்சியில் நான் ஈடுபடத்தொடங்கியபோது தேடிக் கற்றேன். பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் சென்ற ஆண்டு இயற்கையெய்திய வரலாற்றுப் பேரறிஞர் கோ. நிலவழகனார் ந.சி. கந்தையா அவர்களைச் சென்னையில் அவர் வாழ்ந்த நாளில் சந்தித்தது பற்றியும் அவரின் பன்னூற்புலமை பற்றியும் எம்மிடம் மகிழ்ந்து கூறுவார். ந.சி. கந்தையா அவர்களின் நூல்கள் பலவற்றையும் அவர் வைத்திருந்தார். அருகிய பழைய நூல்களைப் பேணுவாரிடத்திலும் நூலகங்கள் சிலவற்றிலும் மட்டுமே ஒடுங்கிக்கிடந்த ந.சி. கந்தையா நூல்களை மீண்டும் அச்சில் வெளியிடுவார் இலரே என்று கவலையுற்றேன். அமிழ்தம் பதிப்பகம் இவரின் நூல்களை வெளியிடுகின்றது. உண்மைத் தமிழ் நெஞ்சங்கள் இந் நூல்களை உச்சிமோந்து வாரியணைத்துப் புகழ்ந்து கற்றுப் பயனடைவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

பேரா. கு. அரசேந்திரன்

பதிப்புரை


வளம் சேர்க்கும் பணி
“குமரிநாட்டின் தமிழினப் பெருமையை நிமிரச் செய்தான்,” “சிந்தையும் செயலும் செந்தமிழுக்கு சேர்த்த நூல் ஒன்றா இரண்டா” என்று பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் போற்றப்பட்ட தமிழீழ அறிஞர் ந.சி. கந்தையாவின் நூல்களை மீண்டும் மறுபதிப்புச் செய்து தமிழ் உலகிற்கு வளம் சேர்க்கும் பணியைச் செய்ய முன் வந்துள்ளோம்.

இப்பெருமகனார் எழுதிய நூல்கள் அறுபதுக்கு மேற்பட்டவை யாகும். இந்நூல்கள் சிறிதும் பெரிதுமாக உள்ளவை. இவற்றைப் பொருள் வாரியாகப் பிரித்து இருபதுக்கு மேற்பட்ட நூல் திரட்டுகளாகத் தமிழ் உலகிற்குக் களமாகவும், தளமாகவும் வளம் சேர்க்கும் வைரமணி மாலை யாகவும் கொடுத்துள்ளோம். மொழிக்கும் இனத்திற்கும் அரணாக அமையும் இவ்வறிஞரின் நூல்கள் எதிர்காலத் தமிழ் உலகிற்குப் பெரும் பயனைத் தரவல்லன.

ந.சி. கந்தையா
இவர் 1893இல் தமிழீழ மண்ணில் நவாலியூர் என்னும் ஊரில் பிறந்தவர். பிறந்த ஊரிலேயே பள்ளிப்படிப்பை முடித்து அவ்வூரிலேயே ஆசிரியப் பணியாற்றியவர். பின்னர் மலேசிய மண்ணில் சிலகாலம் தொடர்வண்டித் துறையில் பணியாற்றியுள்ளார். இவர் தமிழ் ஈழ மண்ணில் பிறந்திருந்தாலும் தமிழகத்தில் இருந்துதான் அவர் தமிழ் மொழிக்கும் தமிழ் இனத்திற்கும் பெருமை சேர்க்கும் நூல்கள் பல எழுதினார் என்று தெரிகிறது.

தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களில் ந.சி. கந்தையா குறிப்பிடத்தக்கவர். தன்னை முன்னிலைப் படுத்தாது மொழியையும் இனத்தையும் முன்னிலைப்படுத்திய பெருமைக்குரியவர். உலக மொழி களுள் தமிழ்மொழி தொன்மைமிக்கது. உலகமொழிகளுக்கு வேராகவும் சாறாகவும் அமைந்தது. தமிழர் சமயமும், கலையும் பண்பாடும், வரலாறும், தமிழன் கண்ட அறிவியலும் உலகுக்கு முன்னோடியாகத் திகழ்வன. இவற்றையெல்லாம் தம் நுண்ணறிவால் கண்டறிந்து பல நூல்களை யாத்தவர்.

தமிழியம் பற்றிய ஆய்வை ஆராய்ந்த அறிஞர்கள் பலருளர். இவர்கள் அனைவரும் கலை, இலக்கியம், சமயம், மொழி, வரலாறு, நாகரிகம், பண்பாடு போன்ற பல துறைகளில் பங்காற்றியுள்ளனர். ஆனால், ந.சி.க. இத் துறைகளில் மட்டுமன்றிப் பொது அறிவுத் துறையிலும் புகுந்து புத்தாக்கச் செய்திகளைத் தமிழ் உலகிற்குக் கொடுத்தவர். இவருடைய மொழிபெயர்ப்பு படிப்பாரை ஈர்க்கக் கூடியவை. படித்தலின் நோக்கம் பற்றியும் பல்வேறு பொருள் பற்றியும் கூறுபவை. தமிழ் அகராதித் துறையில் இவர் எழுதிய காலக்குறிப்பு அகராதி தமிழ் உலகிற்குப் புதுவரவாய் அமைந்தது.

தமிழ் மொழிக்கு அரிய நூல்களைத் தந்தோர் மிகச் சிலரே. நிறைதமிழ் அறிஞர் மறைமலை அடிகளும், தமிழ் மலையாம் தேவநேயப் பாவாணரும் தமிழ் மொழிக்கு ஆக்கமும் ஊக்கமும் சேர்க்கத்தக்க நூல்களைத் தமிழர்களுக்கு வைப்பாக எழுதிச் சென்றவர்கள். அவர் தம் வரிசையில் இவர் தம் நூல்களின் வரிசையும் அடங்கும். தமிழ் ஆய்வு வரலாற்றில் இவரின் பங்களிப்பு குறிக்கத்தக்கது. கழகக் காலச் செய்தி களைப் படித்துப் பொருள் புரிந்து கொள்வது பலருக்குக் கடினமாக இருந்தது. இவற்றை எளிதில் படித்துப் பொருள் புரியும் உரைநடைப் போக்கை முதன்முதலில் கையாண்டவர். இவரது மொழிநடை, கருத்துக்கு முதன்மை தருபவை. உரைநடை, எளிமையும் தெளிவும் உடையது. சிறுசிறு வாக்கிய அமைப்பில் தெளிந்த நீரோடை போன்றது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தென்னகம் பெற்றிருந்த நாகரிகப் பண்பாட்டுக் கூறுகளைக் கண்ணுக்குக் காட்சியாகவும் படிப்பாரின் கருத்துக்கு விருந்தாகவும் அளித்தவர்.

நூல் திரட்டுகள் நுவலும் செய்திகள்
1800 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் காலம் தொட்டு இவர் வாழ்ந்த காலம் வரை தமிழரின் வரலாற்றுச் சுவடுகளை நுட்பமாக ஆராய்ந் துள்ளார். அவர் மறைவிற்குப் பிறகு இன்று வரை அவருடைய ஆய்விற்கு மேலும் ஆக்கம் தரும் செய்திகள் அறிவுலகில் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வலுவாய் அமைந்துள்ளன. தமிழும் சிவநெறியும் ஓங்கியிருந்தமை. - தாயாட்சிக் காலம் முதன்மை பெற்றிருந்தது. மொழியின் தோற்றம், சமற்கிருதம் எப்படித் தோன்றியது - ஆரியர் யார் - இந்தியாவிற்கு எப்படி வந்தனர் - தமிழரோடு எவ்வாறு கலப்புற்றனர் - ஆதிமக்களின் தோற்றமும், பிறப்பும் - இந்திய நாட்டின் ஆதிமக்கள், திராவிட மக்கள் - ஆதிமக்கள் பிறநாடுகளில் குடிபெயர்ந்தது - மொழிக்கும், சமயத்துக்கும் உள்ள உறவு - சமற்கிருதம் சமயமொழி ஆனதற்கான ஆய்வுகள் - வழிபாட்டின் தொடக்கம் - வழிபாடு எங்கெல்லாம் இருந்தது - பண்டைய மக்கள் எழுது வதற்குப் பயன்படுத்திய பொருள்கள் - மேலை நாடுகளிலும், சென்னை யிலும் இருந்த நூல் நிலையங்கள் - ஆரியமொழி இந்திய மண்ணில் வேரூன்றிய வரலாறு - தமிழுக்கு நேர்ந்த கேடுகள் - திருவள்ளுவர் குறித்த கதைகள் - வள்ளுவச் சமயம் - பண்டைய நாகரிக நாடுகள் - அந்நாடுகளில் பெண்களைப் பற்றிய நிலை - அகத்தியர் பற்றிய பழங்கதைகள் - திராவிட மொழிகள் பற்றிய குறிப்புகள் - உலகநாடுகளில் தமிழர் நாகரிகச் சுவடுகள் - திராவிட மொழிகளுக்குத் தாய்மொழி தமிழ் - திராவிடரின் பிறப்பிடம் - ஐவகை நிலங்கள், பாகுபாடுகள் - பழக்க வழக்கங்கள் - சிந்து வெளி நாகரிக மேன்மை - புத்தரின் பிறப்பு - அவரைப் பற்றிய கதைகள் - இராமகாதை பற்றிய செய்திகள் - தென்னவரின் குலங்கள், குடிகள், வடவரின் குலங்கள், .குடிகள் - தமிழின் பழமை, தமிழக எல்லை அமைப்பு - பண்டைக்கால கல்வி முறை, உரைநடை - வேதங்கள், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் உள்ள வேறுபாடுகள் - நீர்வழி, நிலவழி வணிகம் சிறந்தோங்கிய நிலை - மலைவழி, கடல்வழி, நிலவழி பொருள்கள் நிரம்பிய காலம் - சுற்றம் தழைக்க வாழ்ந்த நிலை - தமிழ வணிகர், வேற்று நாட்டு வணிகருடன் தொடர்பு கொண்டு மிக்கோங்கியிருந்த காலம் - வானநூல் கலையும், சிற்பக் கலையும், கட்டடக் கலையும் , இசைக்கலையும் மிக்கோங்கியிருந்த காலம் - ஆரியர் வருகைக்கு முற்பட்ட பிறமொழி கலப்பற்ற தூய தமிழ் பெருகி யிருந்த காலம் - உலக நாகரிகங்களுக்குத் தமிழர் நாகரிகம் நாற்றங்கால் - உலகப் பண்பாடுகளுக்குத் தமிழர் பண்பாடு தொட்டிலாக அமைந்தமை - அகராதிகள் - அறிவுத் தேடலுக்குரிய செய்திகள் - இவர்தம் நூல்களின் உயிர்க்கூறுகளாக அடங்கியுள்ளன.

வாழும் மொழி தமிழ்
தமிழ் இளைஞர்கள் தம் முன்னோரின் பெருமையை உணர, எதிர்கால வாழ்விற்கு ஏணிப்படிகளாய் அமைவன இந்நூல்கள். எகிப்திய மொழி, சுமேரிய மொழி, இலத்தீனும், பாலியும் கிரேக்கமும் அரபிக் மொழியும் வாழ்ந்து சிறந்த காலத்தில் தமிழ் மொழியும் வாழ்ந்து சிறந்தது. பழம்பெரும் மொழிகள் பல மாண்டும் சில காப்பக மொழிகளாகவும் அறிஞர்களின் பார்வை மொழியாகவும் இருந்து வரும் இக் காலத்தில் இன்றளவும் இளமை குன்றா வளம் நிறைந்த மொழியாக தமிழ் மொழி வாழ்கிறது என்று நாம் பெருமைகொள்ளலாம்.

ஆனால், இத்தமிழ் மொழியின் நிலை இன்று ஆட்சிமொழியாக அலுவல் மொழியாக, இசைமொழியாக, கல்வி மொழியாக, அறமன்ற மொழியாக , வழிபாட்டு மொழியாக, குடும்ப மொழியாக இல்லாத இரங்கத் தக்க நிலையாக உள்ளது. தாய்மொழியின் சிறப்பைப் புறந்தள்ளி வேற்றுமொழியைத் தூக்கிப் பிடிக்கும் அவல நிலை மிகுந்துள்ளது. முகத்தை இழந்த மாந்தன் உயிர்வாழ முடியாது. எப்படி உயிரற்றவனோ, அவ்வாறே மொழியை இழந்த இனம் இருந்த இடம் தெரியாமல் அழியும் என்பது உலக வரலாறு காட்டும் உண்மை. ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் மொழியை அழித்தால்தான் இனத்தை அழிக்க முடியும். உலக மக்களெல்லாம் தம் கையெழுத்தைத் தம் தம் தாய்மொழியில் போடுவதைப் பெருமையாகக் கொள்வர். ஆனால் தமிழ் மண்ணின் நிலையோ? எங்கணும் காணாத அவலம் நிறைந்தது. மொழியையும் இனத்தையும் உயர்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் உயர்ந்து நிற்கும் உன்னதத்தையும் தாழ்வாகக் கருதிய இனங்கள் உலக அரங்கில் தாழ்வுற்று இருப்பதையும் தமிழர்கள் இனியேனும் அறிவார்களா?

தமிழர்களின் கடன்
இளம் தலைமுறைக்கும் மாணவர்களுக்கும் பயன்படத்தக்க இவ்வரிய நூல்களைத் தொகுத்து 23 திரட்டுகளாகக் கொடுத்துள்ளோம். தமிழ் மொழியின் காப்புக்கும், தமிழரின் எழுச்சிக்கும் வித்திடும் இந்நூல்கள். தமிழர் யார், எதிரிகள் யார் எனும் அரிய உண்மைகளைக் கண்டு காட்டும் நூல்கள். இவரின் பேருழைப்பால் எழுதப்பட்ட இந் நூல்கள் பழைய அடையாளங்களை மீட்டெடுக்கும் நூல்கள். தமிழர் களுக்குள்ள பலவீனத்தை உணர்வதற்கும் பலத்தை உயிர்ப்பிப்பதற்கும் உரிய நூல்களாகும். இந் நூல்களைத் தேடி எடுத்து இளந்தலைமுறைக்கு வைப்பாகக் கொடுத்துள்ளோம். இவற்றைக் காப்பதும் போற்றுவதும் தமிழர்கள் கடன்.

மாண்டுபோன இசுரேல் மொழியையும் பண்பாட்டையும் மீட் டெடுத்த இசுரேலியர்களின் வரலாறு நமக்குப் பாடமாக அமைந்துள்ளது. உலக மக்களுக்கு நாகரிகம் இன்னதெனக் காட்டியவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் உழவுத் தொழிலையும் கடல் வாழ்வையும் வளர்த்த வர்கள் தமிழர்கள். முதன்முதலில் வீடமைப்பும், தெருவமைப்பும் நகரமைப்பும் நாடமைப்பும் கண்டவர்கள் தமிழர்கள். உலகில் முதன்முதலில் மொழியும் கலையும் ஆட்சிப் பிரிவுகளும், சட்டங்களும் பிற கூறுகளும் வகுத்தவர்கள் தமிழர்கள்.
எழுச்சிக்கு வித்திட…
உடம்பு நோகாமல் கை நகத்தின் கண்களில் அழுக்குபடாமல் தமிழகக் கோயில்களைச் சாளரமாகக் கொண்டு வாழும் கூட்டத்தால் தமிழுக்கும் தமிழர்களுக்கும் விளைந்த சீரழிவை இற்றைத் தலைமுறை அறிதல் வேண்டும். மறுமலர்ச்சிக்கும் உரிமைப் போருக்கும் உன்னத எழுச்சிக்கும் அந்தந்த நாடுகளில் இளைஞர்கள் முன்னெடுத்துச் சென்ற வரலாறு நம் கண்முன்னே காட்சியாகத் தெரிகிறது. அயர்லாந்து, செர்மனி, துருக்கி, சப்பானின் அன்றைய நிலையும், இன்றைய நிலையும் - தமிழ் இளைஞர்கள் படித்தால்தான் நம்நாட்டின் எழுச்சிக்கு வித்திட முடியும் என்பதை இந்நூல்களின் வாயிலாக உணர முடிகிறது.

இந் நூல் திரட்டுகள் வெளிவருவதற்கு எனக்குப் பெரிதும் உதவியாக இருந்தவர் சென்னை வாழ் புலவரும், வடசென்னை தமிழ் வளர்ச்சிப் பேரவையின் செயலாளர், நிறுவனருமான புலவர் கோ. தேவராசன், மு.க.,க.இ., ஆவார். இவரின் பேருதவியால் முழுமையாக நூல்களைத் தேடி எடுத்துத் தமிழ் உலகிற்குக் கொடையாகக் கொடுத்துள்ளோம். அவருக்கு எம் நன்றி. இந்நூல்களைப் பொருள் வாரியாக பிரித்துத் திரட்டுகளாக ஆக்கியுள்ளோம். ஒவ்வொரு திரட்டிற்கும் தக்க தமிழ்ச் சான்றோரின் அறிமுக உரையோடு வெளியிடுகிறோம். இவர்களுக்கு என் நன்றி என்றும். இந் நூலாக்கப் பணிக்கு உதவிய கோ. அரங்கராசன், மேலட்டை ஆக்கத்திற்கு உதவிய பிரேம், கணினி இயக்குநர்கள் சரவணன், குப்புசாமி, கலையரசன், கட்டுநர் தனசேகரன், இந்நூல்கள் பிழையின்றி வெளிவர மெய்ப்புத் திருத்தி உதவிய புலவர் சீனிவாசன், புலவர் ஆறுமுகம், செல்வராசன் ஆகியோருக்கும் மற்றும் அச்சிட்டு உதவிய ‘ப்ராம்ட்’ அச்சகத்தார் மற்றும் ‘வெங்க டேசுவரா’ அச்சகத்தாருக்கும் எம் பதிப்பகம் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதிப்பகத்தார்

தமிழ்ப் புலவர் அகராதி (புலவர் அகர வரிசை)


முன்னுரை
இற்றைக்கு நூறு ஆண்டுகளின்முன் தமிழ்ப் புலவர் அகராதி என்னும் நூல் ஒன்று செய்வதற்குரிய முயற்சி செய்யப்படுவதாயிற்று. ஏறக்குறைய நூறாண்டுகளின் முன் இலங்கையில் வாழ்ந்த சைமன் காசிச் செட்டி என்பார் தமிழ்ப் புலவர் வரலாறுகளைத் திரட்டி ஆங்கிலத்தில் எழுதி அகர வரிசைப்படுத்தித் தமிழ்ப் புலவர் (Tamil Plutrach) என்னும் தலைப்புடன் 1859இல் வெளியிட்டார். ஆணல் என்பார் சைமன் காசிச் செட்டி அவர்களின் நூலை மொழி பெயர்த்தும் பிற்காலத்துப் புலவர்கள் வரலாறு சிலவற்றைச் சேர்த்தும் பாவலர் சரித்திர தீபகம் என்னும் தமிழ்ப்புலவர் அகரவரிசை நூலொன்றை 1886இல் வெளியிட்டார். இந்நூல்களையும் வீராச்சாமிச் செட்டியார் எழுதிய விநோத ரசமஞ்சரியையும் பின்பற்றிப் புலவர் வரலாறுகளைக் காலந்தோறும் பலர் எழுதி வருவாராயினர். சபாபதி நாவலர் செய்த திராவிடப் பிரகாசிகை, ஆ. முத்துத் தம்பிப் பிள்ளை செய்த தென்மொழி வரலாறு, தஞ்சை கே. எ°. சீனிவாச பிள்ளை எழுதிய தமிழ் வரலாறு போன்ற நூல்களிலும் தமிழ்ப் புலவர் வரலாறுகள் ஓரளவு காணப்படுகின்றன. எம்.எ°. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் இயன்றவரை தமிழ்ப் புலவர் வரலாறுகளைத் திரட்டி ஆங்கிலத்தில் எழுதித் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் பெயருடன் வெளியிட்டார். இதன்மேல் பேராசிரியர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை வெளியிட்டனர். இந்நூல்களில் புலவர் வரலாறுகள் அங்கு மிங்குமாகக் கூறப்பட்டுள்ளனவேயன்றி, அவர் வரலாறுகளை அகர வரிசையாக எளிதில் நோக்கி அறியக்கூடிய வாய்ப்புக் காணப்படவில்லை.

இதுவரை அச்சிடப்பட்ட தமிழ்ப் புலவர் வரலாறுகளையும், சென்னை அரசாங்க நூல் நிலையக் கையெழுத்துப் பிரதிகள் சரசுவதிமகால் நூல் நிலையக் கையெழுத்துப் பிரதிகள் சம்பந்தமாக வெளிவந்த குறிப்புகளையும், வேறு நூல்களையும் துணைக்கொண்டு தமிழ்ப் புலவர் அகராதி எனும் இந்நூலைத் தொகுத்தெழுதலானோம்.
சென்னை

ந.சி. கந்தையா

விளக்கக் குறிப்பு
இந்நூலகத்துக் காணப்படும் சுருக்கெழுத்துக்களின் சுருக்கம் வருமாறு:
க.இ.உ. - களவியலுரை
சா.த.க.ச. - சாசன தமிழ்க் கவி சரித்திரம்

ச.கை. - சரசுவதிமகால் கையெழுத்துப் பிரதிகளைப் பற்றிய குறிப்பு.
* - சென்னை அரசாங்க நூல் நிலைய கையெழுத்துப் பிரதிகள் சம்பந்தமான குறிப்பு.
( ) - பிறைக் குறிகளுக்கிடையில் நூற்பெயரின் அருகில் இடப்பட்ட இலக்கம், நூல் அச்சிடப்பட்ட ஆண்டைக் குறிக்கும்.

கொ.பு - கொங்குப் புலவர்கள் என்னும் சிறு சுவடி. இந்நூல் கோவை கிழாரால் தொகுக்கப் பெற்று 1950இல் அச்சிடப்பட்டது.
சில புலவர்கள் பெயருக்குப்பின் அவர்கள் செய்தவற்றை மாத்திரம் குறித்துள்ளோம். அவர்களைப் பற்றிப் பிற விபரங்கள் தெரியவில்லை.

தமிழ்ப் புலவர் அகராதி
அகத்தியர்; (காலம்-?) இவர் பொதியமலையில் வாழ்ந்து, தமிழை வளர்த்தவர் என்னும் பழங்கதை வழங்குகின்றது. இவரைக் குறித்த வரலாறுகள், தெளிவின்றிக் கற்பனைக் கதைகள் போன்று வழங்குகின்றன. இவர் கும்பத்தினின்றும் பிறந்தது, கடலை உள்ளங்கையில் அடக்கியது, சுவாமியின் திருக்கலியாணத்தில் தேவர் இமயமலையிற் கூடிய போது உலகம் சரிதலும் இவர் தென்திசை சென்று பொதிய மலையிலிருந்து உலகைச் சமன் செய்தது போன்ற கதைகள் வழங்குகின்றன.

“பதிவெயில் விரிக்கும் கதிரெதிர் வழங்கா
துயர்வரை புடவியி னயர்வுற வடக்கித்
தென்புவி வடபுவி யின்சம மாக்கிக்
குடங்கையி னெடுங்கட லடங்கலும் வாங்கி
ஆசமித் துயர்பொதி நேசமுற் றிருந்த
மகத்துவ முடைய வகத்திய மாமுனி
தன்பா லருந்தமி ழன்பா லுணர்ந்த
ஆறிரு புலவரின் வீறுறு தலைமை
ஒல்காப் பெருந்தவத் தொல்காப் பியமுனி” - இலக்கணக் கொத்துச் சிறப்புப் பாயிரம்.

இவர் 12,000 சூத்திரங்கள் கொண்ட பேரகத்தியம் என்னும் நூலொன்று செய்தாரென்னும் செய்தி வழங்குகின்றது. சேனாவரையர், தெய்வச் சிலையார், சங்கர நமச்சிவாயப் புலவர், யாப்பருங்கல விருத்தியுடையார், அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களால் அகத்திய சூத்திரங்களெனச் சில மேற்கோள்கள் எடுத்து ஆளப்பட்டுள்ளன. “அகத்தியனார் அறுவகை ஆனந்த ஓத்தினுள் இதனை `இயற்பெயர் சார்த்தி யெழுத்தள பெழினே - இயற் பாடில்லா வெழுத்தா னந்தம்’ என்றாரென்க” (யா.வி.ப. 45); “ஈண்டு உரைப்பிற் பெருகுமாதலின் அகத்தியத்துட் காண்க” (யா.வி.ப. 528). உரையாசிரியர்கள் எடுத்தாண்ட அகத்திய சூத்திரங்கள் தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. அண்மையில் அகத்தியம் என்னும் பெயருடன் அச்சேறிய நூல், போலி நூலென்பது வெளிப்படை. சோதிடம் வைத்தியம் முதலிய நூல்கள் பலவும் அகத்தியர் பெயரால் வழங்குகின்றன. இவையும், அகத்தியர் பெயரைக் கொண்ட போலி நூல்கள் என்பது வெளிப்படை. அகத்தியர் கருத்துக்கள் எனச் செவி வழக்கில் வந்த சோதிட மருத்துவமுறைகளைப் பிற்காலத்தார், அவர் பெயர் கொடுத்து நூலாகப் பாடினார்களாகலாம். திருமந்திரத்தில் அகத்தியர் பெயர் காணப்படுகின்றது. கீரனுக்கு அகத்தியர் தமிழுரைத்த வரலாறு திருவிளையாடற் புராணத்திற் காணப்படுகின்றது. அகத்தியர் தொகுத்தது என்னும் கருத்தில் அகத்தியர் தேவாரத் திரட்டு எனத் தேவாரத் தொகுப்பும் வழக்கிலுள்ளது. சுமத்திரா, சாவகம் முதலிய மலாய்த் தீவுகளில் அகத்தியர் வழிபாடு காணப்பட்டது.

‘பாண்டிய அரசரின் ஆசிரியர் அகத்தியர்’, என்பது பழைய பட்டையங் களில் காணப்படுகின்றது. தலைச் சங்கத்துக்குத் தலைவராயிருந்தவர் இவரென இறையனார் களவியலுரை கூறுகின்றது. செம்பூட்சேய், வாய்ப்பியர், அதங்கோட் டாசான், அவிநயர், காக்கை பாடினியார், தொல்காப்பியர், துராலிங்கர், வைகாபியர், பனம்பாரனார், கழாரம்பர், நற்றத்தர், வாமனர் எனப் பன்னிரு மாணவர் இவருக்கு இருந்தனர் என்னும் செய்தியும் உண்டு. தொல்காப்பிய உரையில் மேற்கோளாக வரும் பன்னிருபடலப் பாயிரம், புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம் முதலிய வற்றில் அகத்தியருக்குப் பன்னிரு மாணவர் இருந்தனர் என்னும் வரலாறு காணப்படுகின்றது. பரசுராமனுக்குப் பயந்து வந்து தம்மிடம் அடைக்கலம் புகுந்த ககந்தன் என்பவனை இவர் காத்தார் என்றும், இவரது கமண்டல நீரி லிருந்து காவிரியாறு பெருகியது என்றும் மணிமேகலை கூறுகின்றது.

வேதபாடல்கள் சிலவற்றைச் செய்த அகத்தியர் ஒருவர் அறியப்படு கின்றார். இவருடைய மனைவியாராகிய உலோபாமுத்திரையும் வேத பாடல்கள் சிலவற்றைச் செய்துள்ளார். இதனைக்கொண்டு, தமிழ் முனிவர் எனப்படும் அகத்தியர் ஆரிய மரபினர் எனப் பலர் கூறுவர். வேத பாடல்கள் பலவற்றைச் செய்த முனிவோர் ஆரியர் அல்லாதவராவர் என்றும், அவர்களின் உடல்நிறம் முதலிவற்றைப் பற்றிக் கூறப்படும் செய்திகள் இதற்குச் சான்றாகுமென்றும் “முசிலிம்களுக்கு முற்பட்ட இந்தியா” என்னும் நூலெழுதிய அரங்காசாரியார் குறிப்பிட்டுள்ளார். பழைய சித்திய மக்களிடையே (Scythians) `அகத்திரிசி’ என ஒரு வகுப்பினரும் வாழ்ந்தனர். வேத காலம் முதல் தேவாரத்துக்குப் பிற்பட்ட காலம் வரையில் அகத்தியர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அகத்தியர் மரபில் (கோத்திரத்தில்) வந்தவர்களும் அகத்தியர் எனப் பட்டார்கள் என்பது தெரிகிறது. பல காலங்களில் வாழ்ந்த அகத்தியர்களைப் பற்றிய பழங்கதைகள் திரண்டு அகத்தியர் வரலாறுகளாக வழங்குகின்றன. செங்கோன் தரைச்செலவு என்னும் நூற்பாயிரம் செய்தவர், ஏழ்தெங்க நாட்டு முத்தூரகத்தியனாராவர். பன்னிரு பாட்டியலிலுள்ள சூத்திரங்கள் சிலவும் இவர் செய்தனவாக வழங்கும். அகத்தியத்தில் எழுத்தும், சொல்லும், பொருளும், யாப்பும், சந்தமும், வழக்கிய லும், அரசியலும், அமைச்சியலும், பார்ப்பனவியலும், சோதிடமும், காந்தருவ மும், கூத்தும் பிறவும் அடங்குமென்பர் நச்சினார்க்கினியர்.

அகத்தியர் பெயரால் வழங்கும் மருந்து நூல்கள் பின் வருவன: பெருந்திரட்டு, ஆயுள்வேத பாஷ்யம், விதிநூல் மூவகைக் காண்டம், வைத்திய சிந்தாமணி, செந்தூரம் 300, மணி 4000, சிவ சாலம், சத்திசாலம், சண்முக சாலம், வைத்தியக் கண்ணாடி, வைத்தியரத்நாகரம், வைத்தியம் 1500, வைத்தியம் 1600, கர்மவியாபகம், கரிசில், ப°பம் 200, தண்டகம், பக்ஷணி, நாடி சூத்திரங்கள் சிலவும் இவர் செய்தன என்று வழங்கும்.

அகப்பேய்ச் சித்தர்: (15ஆம் நூ.?) இவர் ‘மனம் பேய்போல அலைவது’ என்ற கருத்தைத் தம் பாடல்களில் வற்புறுத்துகின்றமையால் இப்பெயர் பெற்றார். இவர் சித்தர்களுளொருவர். இவர் செய்த நூல் அகப்பேய்ச் சித்தர் பாடல்.

அகம்பன்மால் ஆதனார்: (சங்ககாலம்) இவர், மதுரை மாவட்டத்தில் பெரிய குளம் பகுதியிலுள்ள அகமலை என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் பாடியது நற்றிணையில் 81ஆம் பாடல். இதில் முல்லைத்திணை அலங்கரித்துப் பாடப்பட்டுள்ளது.

அகளங்கன்: (12ஆம் நூ.) கடலூர் சிவாலயத் தமைந்த கல்லொன்றில் “அக்கியாண்டார் நித்திய பூசனைக்கு புலவன் அகளங்கன் என்பார் 1000 குழிநிலம் அளித்து உதவினர்,” எனக் காணப்படுகின்றது. இச்சாசனம் செய்யுளிலமைந்தது (சாசனத் தமிழ்க்கவி சரிதம்).
அகில கலை வல்லவன் சேரமான் வஞ்சி மார்த்தாண்டன்: (கி.பி. 1448) சோணாட்டு மூவலூர் சிவாலயத்தின் கோபுர வாயிலிலே வெட்டப்பட்ட பாடல்கள் சில உள. அவை ஒன்றனுள் “அகில கலா வல்லவன் சேரமான் பெருமாள் வஞ்சி மார்த்தாண்டன் திருப்பா சொல்லி வரக் காட்டின பாகுடக் கவி” என்ற குறிப்புடன் இரண்டு தமிழ்ப் பாடல்கள் காணப்படுகின்றன. இவர் பழைய சேரநாட்டரசர் என்பது தெரிகிறது.
(சா.த.க.ச.)

அகுமது லெவ்வை அலிம் சாகிபு: (18ஆம் நூ.) இவர் காயற்பட்டினத்தைச் சேர்ந்த நெய்னா லெவ்வை அலிம் சாகிபுவின் புதல்வர். இவர் செய்த நூல்: தாய் மகளேசல்.

அகோர சிவாசாரியார்: (16ஆம் நூ.) இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த ஆதிசைவர்; அகோரபத்ததி செய்தவர். அதி வீரராம பாண்டியருக்கு இவர் ஆசிரியர் என்பர்.

அகோர முனிவர்: (17ஆம் நூ. முற்பகுதி): இவர் அகோர தம்பிரான் என்றும் அறியப்படுவர்; திருவாரூர்க் கோயிலில் அபிடேகக் கட்டளையை மேற்பார்த்தவர்; வடமொழி தென்மொழி வல்லவர். இவர் இயற்றிய நூல்கள்: கும்பகோணப் புராணம் (1118 விருத்தம்), திருக்கானப்பேர்ப் புராணம் (650 விருத்தம்), வேதாரணிய புராணம் (3243 விருத்தம்). இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகருக்கு ஆசிரியர் என்பர்.

அக்காரக்கனி நச்சுமனார்: (-?) இவர் திருவள்ளுவமாலையில், “கலைநிரம்பிக் காண்டற் கினிதாகி” என்னும் வெண்பாவைப்பாடிய புலவராகக் காணப்படு கின்றார். இவர் பெயர், சங்கத் தொகை நூல்களிலோ, இறையனார் அகப் பொருளுரையில் வரும் புலவர் பெயர்களுள்ளோ காணப்படவில்லை. திரு வள்ளுவமாலைப் பாடல்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவ ரொருவரால் சங்கப் புலவர் பெயர்களைக் கொடுத்துச் செய்யப்பட்டவை என்பது அறிஞர் பலர் கருத்தாகும்.

அஞ்சியத்தை மகள் நாகையார்: (சங்ககாலம்) இவர் பாடியது; அகம் 352. அஞ்சிலாந்தை மகனார் நாகையார் எனவும் இவர் பெயர் காணப்படும்.

அஞ்சில் அஞ்சியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 90. இவர் இயற்பெயர் அஞ்சி. அஞ்சில் என்னும் ஊரினராதலின், அஞ்சில் அஞ்சியார் எனப்பட்டார்.

அஞ்சில் ஆந்தைமகள் நாகையார்: (சங்ககாலம்) நாகையார் என்பது இவர் இயற்பெயர். இவர் பெண்பாலினர். அஞ்சிலென்பது ஓர் ஊர். ஆந்தை என்பது இவர் தந்தை பெயர். இவர் பாடியது: அகம் 352. இவர் பெயர், அஞ்சியத்தை மகனார் எனவும் அஞ்சி ஆந்தை மகனார் எனவும் காணப்படுகின்றனது.

அஞ்சில் ஆந்தையார்: (சங்ககாலம்) இவர் அஞ்சில் என்னும் ஊரிலிருந்த ஆதன் தந்தையார். ஆதன் தந்தை ஆந்தை என ஆயிற்று. இவர் பாடியன: நற். 233; குறு. 294. இவற்றுள் குறிஞ்சி, நெய்தல் வளங்கள் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளன.

அடியார்க்கு நல்லார்: (13ஆம் நூ.) இவர் பிறப்பிடம் நிரம்பையூர். கங்கராசன் மகனாகிய பொப்பண்ண காங்கேயன் இவரை ஆதரித்து வந்தான். திருவாரூருக்கு அண்மையிலுள்ள தீபங்குடியில் இவர் வாழ்ந்தார். இவர் சிலப்பதிகாரத்துக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். கலிங்கத்துப்பரணியி லிருந்து மேற்கோள் எடுத்து ஆண்டிருக்கின்றமையின், இவர் 12ஆம் நூற் றாண்டுக்குப் பிற்பட்டவரெனத் தெரிகிறது. நச்சினார்க்கினியர், இவருக்கு முற்பட்டவர்.

அடைநெடுங் கல்வியார்: (சங்ககாலம்) இவர் பாடியன: புறம் 283, 344, 345.
புறநானூறு எட்டுத் தொகையுள் எட்டாவது. கடவுள் வாழ்த்து உட்பட 400 அகவற்பாக்களை உடையது; கடவுள் வாழ்த்து, பாரதம் பாடிய பெருந்தேவ னாராலும் மற்றவை முரஞ்சியூர் முடிநாகராயர் முதல், கோவூர் கிழார் இறுதி யாயுள்ள 158 புலவராலும் பாடப்பட்டவை. இதனைத் தொகுத்தாரின்னாரென்றும் தொகுப்பித்தாரின்னா ரென்றும் விளங்கவில்லை. புறத்தே நிகழும் அறத்தையும் பொருளையுமே பொருளாகவுடைமையின் இஃது இப்பெயர் பெற்றது. இது புறமெனவும் புறப்பாட்டெனவும் வழங்கும்; பொருளாற் றொகுக்கப்பட்டது; இந்நூலால், பண்டைக் காலத்துத் தமிழ் நாட்டிலிருந்த சேர சோழ பாண்டியர் களாகிய முடியுடை வேந்தர், சிற்றரசர், அமைச்சர்,
சேனைத் தலைவர், வீரரென் கின்ற பலருடைய சரித்திரங்களும், கடைச் சங்கப்புலவர் பலருடைய சரித்திரங் களும், அக்காலத்துள்ளாருடைய நடை முதலியனவும், இன்னும் பற்பலவும் நன்கு புலப்படும்; இந்நூற் செய்யுட்களாற் பாடப்பட்டவர்கள், ஒரு காலத்தாரல்லர்; ஒரு குலத்தாரல்லர்; ஒரு சாதியாரல்லர்; ஓரிடத்தாருமல்லர்; பாடியவர்களும் இத்தன்மையரே. இவர்களில் அந்தணர்கள் சிலர்; அரசர் பலர்; வணிகர் பலர்; வேளாளர் பலர்; பாடியவருள் பெண்பாலாருமுளர். இதற்குப் பழைய உரை ஒன்று 266 பாடல்களுக்குண்டு. உரையாரிசியர் இன்னாரென்று தெரியவில்லை.

அட்டாவதானம் கிருட்டிணையங்கார்: (19ஆம் நூ. பிற்.) இவர் முத்து ராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராக இருந்தார். இவர் இயற்றிய நூல்கள்: நாலு மந்திரி கதை, பஞ்ச தந்திரம், வீரகுமார நாடகம், விடநிக்கிரக சிந்தாமணி முதலியன.

அட்டாவதானி: (18ஆம் நூ.) சுப்பிர தீபக் கவிராயர் எனப்படும் இவர், திருவரங்கத்தில் பிறந்த வைணவர். இவர் செய்த நூல்கள் விறலிவிடு தூது; கூளப்ப நாயக்கன் காதல் முதலியன. “18ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் கூளப்ப நாயக்கன் காதல், விறலிவிடு தூது என்ற நூல்களின் ஆசிரியரும் வீரமா முனிவருக்கு உதவி புரிந்த வரும் கிறித்துவ மதத்தைத் தழுவிய வரும் தச்ச சாதியினருமாகிய புலவர்” (தமிழ் இலெக்சிக்கன்). விறலிவிடு தூது என்பது, மதுரையில் மதனாபிடேகம் என்னும் தேவடியாள் ஒருத்தியின் திருவிளையாடல்களைக் கூறுவது.

அணியியலுடையார்: (10ஆம் நூ.) இவர் இயற்பெயர் விளங்கவில்லை. இவர் ‘அணியியல்’ என்னும் இலக்கண நூல் செய்தவராவர். இந்நூற் சூத்திரங்கள் பல, யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக எடுத்தாளப்பட்டுள்ளன. “இந்த இருது வருணனை அணியியலுட் காண்க” (யா.வி.ப. 532.)

அணிலாடு முன்றிலார்: (சங்ககாலம்) இவர் இயற்பெயர் விளங்கவில்லை. முற்றத்தில் அணில் விளையாடுவதாகச் செய்யுள் செய்தமையின், இவர் இப் பெயர் பெற்றார். இவர் பெண்பாலராகலாம். இவர் பாடியது: குறு. 41.

அண்டர் மகன் குறுவழுதியார்: (சங்ககாலம்) இவர் பெயர் அண்டர்முன் குறு வழுதியாரெனவும், குறுவழுதி எனவும் காணப்படுகின்றது. வழுதி என்றமை யால், இவர் பாண்டியர் மரபினர் என்பது அறியப்படும். அண்டர் என்ற சொல், இடையர் எனப் பொருள்படுதலால் இடைக் குலத்துப் பெண் கொண்ட பாண்டியனொருவனுக்கு இவர் மகனார் போலும்; இவர் பாடியன: அகம் 150, 228; குறு. 345; புறம் 346.

அண்ணாமலை ரெட்டியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் பாண்டி நாட்டில் கரி வலம் வந்தநல்லூருக்கு அடுத்த சென்னிக்குளம் என்னும் ஊரிற்பிறந்தவர்; சேற்றூர், ஊற்றுமலை என்னும் செமீன்களிலே அரண்மனைப் புலவராயிருந்தவர். இவர் பாடிய நூல்கள்: ‘காவடிச் சிந்து, சங்கரநாராயண கோயிற்றிரிபந்தாதி, நவ நீத கிருட்டிணன் பிள்ளைத்தமிழ் என்பன.

அண்ணாவப்பங்கார்: (ஸ்ரீ) சீவசன பூஷண வியாக்கியான அரும்பத விளக்கம் செய்த வைணவ ஆசிரியர்.

அதங்கோட்டாசான்: (கி.மு.350?) இவர் தொல்காப்பியருடன் பயின்ற ஒருசாலை மாணவர் எனக்கருதப்படுபவர். அகத்தியர் மாணவர் பன்னிருவரில் இவரொருவராவர். தொல்காப்பியம், இவர் தலைமையிற் கூடிய சபையில் அரங்கேற்றப்பட்டதெனத் தொல்காப்பியப்பாயிரம் கூறுகின்றது. ‘நான்மறை முற்றிய அதங்கோட்டாசாற் கரிறபத் தெரிந்து’ (தொ. பாயிரம்).

அதிகமான்: (கி.மு.62-) இவர் அவ்வையாரை ஆதரித்த குறுநில மன்னர். அதிகரின் தலைநகர் தகடூர். தகடூர் என்பது சேலம் பகுதியிலுள்ள தருமபுரி யாகும். இவர், வள்ளுவரின் மூத்த சகோதரர் எனக் கபிலரகவல் கூறுகின்றது. கபிலரகவல், விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பெருமாள் ஐயர் என்போ ரால் செய்யப்பட்டதென்பது பல்லோர் கருத்து. அதிகமான் ஒளவையாருக்குக் கருநெல்லிக்கனி அளித்த வரலாறு சங்க நூல்களிற் காணப்படுகின்றது. இவர் தமிழ்ப் பற்று மிக்கவர்.

அதிமதுர கவி: (15ஆம் நூ. பிற். பகுதியும் 16ஆம் நூ. முற் பகுதியும்) இவர், காளமேகப் புலவர் காலத்தவர்; இவர் திருமலை ராயனின் அரண்மனைப் புலவர். காளமேகப் புலவர் இவரை வாதில் வென்றார்.

அதியன் விண்ணத்தனார்: (சங்க காலம்) அஞ்சி அதிகமானுக்கு இவர் உறவினர்போலும். இவர் பாடியது: அகம் 301.

அதிராவடிகள்: (9ஆம் நூ.?) இவர் பதினோராந் திருமுறையிலுள்ள மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை பாடியவர். இவரைப் பற்றிய பிற வரலாறுகள் எவையும் தெரியவில்லை.

அதிவீரராம பாண்டியன்: (1564-1604) இவர், பாண்டியர் மரபிற்பிறந்த அரசர்; இவரது இயற்பெயர் அழகன் பெருமாள். இவர் தந்தையார் குலசேகரர்; ஆசிரியர் சுவாமிதேவர். இவர், கொற்கை, தென்காசி என்பவற்றைத் தலைநகர்களாகக் கொண்டு மதுரையை ஆண்டார். இவர் பாடிய நூல்கள்: நைடதம் (1172 பாடல்), காசி காண்டம் (2525 பாடல்), கூர்மபுராணம் (3717 பாடல்), இலிங்கபுராணம், வாயு சங்கிதை, வெற்றி வேற்கை என்பன. சுந்தர பாண்டியன் தொகுதி, நறுந்தொகை என்பன வெற்றி வேற்கையின் மறு பெயர்கள். அதிவீர ராமபாண்டியனின் பெரிய தந்தையார் மகன் வரதுங்க பாண்டியன், பிரமோத்தர காண்டம், கருவை அந்தாதி என்பவற்றைப் பாடினான். இந்நூல்கள் அதிவீரராம பாண்டியன் செய்தவை எனச் சிலர் தடுமாறிக் கூறுவர். அதிவீரராம பாண்டியனின் மறு பெயர்கள் வல்லப தேவன், பிள்ளைப் பாண்டியன், குலசேகரன், குணசேகரவழுதி, தமிழ் வளர்த்ததென்னவன். இவர் வேம்பத்தூர் ஈசான முனிவர், சுவாமி வாசுதேவர், சிதம்பரம் அகோர சிவாசாரியர் என்பவரின் மாணவர் என்பர். கூர்ம புராணம், வரதுங்க பாண்டியன் பாடியதாகவும் கருதப்படும்.

அநதாரி: (16ஆம் நூ.) இவர் தொண்டை நாட்டிலே செங்காட்டூர்க் கோட்டத் திலே வாயல் என்னும் ஊரிற் பிறந்தவர். இவர் மதுரையை ஆண்ட கிருட்டிண வீரப்ப நாயக்கருக்கு அமைச்சராயிருந்த சனிப்பெருமாள் மகன். இவர் திருவிருந்தான் வேண்ட, சுந்தரபாண்டியம் என்ற நூலைத் தமிழிற் செய்தார். இந்நூல் செய்யப்பட்ட காலம் கி.பி. 1564.

மதுரை மாதேவியான தடாதகைப் பிராட்டியின் அவதாரம், திக்கு விசயம், திருமணம் முதலிய வரலாறுகளை, (சுந்தரபாண்டியம் என்னும் பெயர் பெற்று வழங்கிய வட நூலொன்றைத் தழுவி) 3000 பாடற்கு மேலாக விரியவுரைக்கும் நூல் சுந்தர பாண்டியமாகும்.

அநந்த கவிராயர்: மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, உத்தரராமாயண நாடகம் முதலிய நூல்கள் செய்த புலவர்.

அநந்தபாரதி ஐயங்கார்: (1786 - 1846) இவர் உமையம்மாள் புரத்திற் பிறந்தவர்; கவிராச சுவாமிகள் எனவும் இவர் அறியப்பட்டார். இவர் பாடியவை: மருதூர் வெண்பா, முப்பாற் றிரட்டு, உத்தர இராமாயண கீர்த்தனை, பாகவதசம°கந்த நாடகம், யானை மேலழகர் நொண்டிச் சிந்து என்பன.

அநவரத விநாயகம் பிள்ளை. எ°. எம்.ஏ. எல்.டி.: (1939) இவர் திருநெல் வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; சென்னை அரசாங்கம் மேற் கொண்ட தமிழ்ப் பேரகராதித் தொகுப்புக்குத் தலைவராயிருந்தவர். இவர் செய்த நூல்கள்: தமிழ்ப் பெருமக்கள் வரலாறு, சைவ சித்தாந்த வரலாறு முதலிய பல வசன நூல்கள்.

அந்தகக்கவி வீரராகவ முதலியார்: (1654) இவர் காஞ்சிபுரத்துக்கு அயலிலுள்ள பூதூரில் பிறந்தவர். இவர் தந்தை பெயர், வடுகநாத முதலியார். இவர் இலங்கைக்குச் சென்று பராசசேகர அரசனிடம் பரிசில் பெற்று மீண்டவர். இவர் செய்த நூல்கள்: கழுக்குன்றப் புராணம், கழுக்குன்ற மாலை, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், சேயூர்க்கலம்பகம், திருவாரூருலா, சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசனுலா முதலியன.

அந்தி இளங்கீரனார்: (சங்ககாலம்) இளங்கீரனென்பது இவர் இயற்பெயர். இவர் அந்திக்காலத்தை வருணித்திருக்கின்றார். அந்தியூர் என்னும் ஓர் ஊர், பவானிப் பகுதியிலுள்ளது. இவர் பாடியது: அகம் 71.

அந்துவன் கீரனைக்காவட்டனார்: (சங்க காலம்) அந்துபன்கீரனைத்த காநட்ட னார் எனவும் இவர் பெயர் காணப்படுகின்றது. இவர் செய்த பாடல்: புறம். 359.

அந்தோனிக்குட்டி அண்ணாவியார்: (18ஆம் நூ.) இவர் மணப்பாறையிற் பிறந்து வீரமாமுனிவர் காலத்தில் விளங்கியவர். இவர் பரவர் குலத்தைச் சேர்ந்தவ ரென்று சிலரும், ஈழவர் குலத்தைச் சேர்ந்தவரென்று பிறரும் கூறுவர். இவர் கிறித்துவ மதத்தைத் தழுவி வாழ்ந்து, கிறித்துநாதர் மீது பல பாடல்கள் பாடி யுள்ளார்.

அந்தோனிக் குட்டி அண்ணாவியார்: இவர் யாழ்ப்பாணத்தினர், கிறித்து சமய கீர்த்தனம் என்னும் பாடல்கள் செய்தவர். (யாழ்ப்பாணம் 1891.) இவர் முன் கூறப்பட்டவரோ பிறரொருவரோ தெரியவில்லை.

அந்தோனி நாதர்: இவர் புதுச்சேரியினர். பதிமத்தேசு தூஷணமறுத்தலாகிய தர்க்கக் கும்மி என்னும் பாடல் செய்தவர் (1865.)

அபிராமிப்பட்டர்: (18ஆம் நூ.) இவர், முதலாம் சரபோசி மகாராசாவின் அரண்மனைப் புலவராயிருந்தவரும், திருக்கழுக்குன்றத்திற் பிறந்தவருமான பார்ப்பனப் புலவராவர். இவர் செய்த நூல் அபிராமி அந்தாதி.

அப்பண்ண நாயக்கர் கரடிவாவி: இவர் வாணாசுர நாடகம் என்னும் நூல் செய்தவர். (சென்னை 1890)

அப்பர்: (கி.பி. 570 - 655) இவர் திருவாமூரிலே வேளாளர் குலத்தில், புகழனாருக்கும் மாதினியாருக்கும் புதல்வராய்ப் பிறந்து இளமையில் சமணமதத்தை மேற்கொண்டிருந்தார். பின்பு இவர், சைவ சமயத்தைக் கடைப்பிடித்துப் புதுமைகள் பல புரிந்து, புகலூரில் சிவபதமடைந்தார். சம்பந்தமூர்த்தி நாயனார், சிறுத்தொண்டர், மகேந்திரவர்ம பல்லவன் முதலியவர் இவர் காலத்தவர். வாகீசர், திருநாவுக்கரசர் என்பன இவருடைய மறுபெயர்கள். இவர் பாடிய பதிகங்கள் 49,000 என்னும் ஐதீகமுள்ளது; இன்று உள்ள பதிகங்கள் 311. இவர் தேவாரங்கள் 4 முதல் 6 திருமுறைகளாகும்.

அப்பாசாமிச் செட்டி வைசியகுலம்: இவர் வாலிமோட்ச நாடகம் என்னும் நூல் செய்தார். இது சூளை முனிசாமி முதலியாரால் 1908இல் பதிப்பிக்கப்பட்டது.

அப்பாப் பிள்ளை: இவர் யாழ்ப்பாணத்தினர். மருதடி அந்தாதி பாடியவர். (யாழ்ப்பாணம் 1891.)

அப்பாவு பிள்ளை: (19ஆம் நூ.) இவர் எள்ளேரி என்னுமூரினர். ‘செயமுனி சோதிட சூத்திரம்’ என்னும் நூல் இயற்றியவர்.

அப்பாவுபிள்ளை திரிசிரபுரம்: இவர் சித்திராங்கி விலாசம், நன்னெறி சத்திய பாஷ அரிச்சந்திர விலாசம், நூதன புகழேந்தி சபா முதலிய நூல்களியற்றி யவர். (சென்னை. 1886, 1890, 1893.)

அப்பாவு முதலியார்: (19ஆம் நூ.) இவர் முடிச்சூர் அப்பாவுமுதலியார் என அறியப்படுவர். இவர் வைணவ மதத்தினர்; குரேச விசயம், தென்னாசாரியப் பிரபாவ தீபிகை, சற்சம்பிரதாப தீபிகை, விட்டுணுதத்துவ விளக்கம், இராமனுச நூற்றந்தாதி உரை முதலிய நூல்களியற்றியவர்.

அப்பாவையர்: (19ஆம் நூ.) இவர், நெல்லிக்குப்பம் தாண்டவராயன் என்னும் வணிகனால் ஆதரிக்கப்பட்ட புலவர். இவர், அவன் பெயரால் தாண்டவ மாலை என்னும் சோதிட நூல் ஒன்று செய்துள்ளார். இதில் 68 பாடல்க ளுள்ளன.

அப்பியாசாரியர்: சீரங்கமகத்துவம் என்னும் புராணம் செய்தவர்*

அப்பு: திருவிருத்த வியாக்கியான அரும்பத விளக்கம் செய்தவர்.

அப்புக்குட்டி ஐயர்: (18ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூரில் 1797ஆம் ஆண்டு பிறந்தார். இவர் செய்த நூல்கள்: சூது புராணம், நல்லூர்ச் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ் என்பன.

அப்புள்ளையார்: (18ஆம் நூ.) இவர் செய்த நூல்கள்: ஆழ்வார்கள் வாழித்திருநாமம், திருவந்தாதி உரை, திருவிருத்தவுரை முதலியன.

அமிர்த கவிராயர்: (1637-72) இவர் பாண்டி நாட்டிலுள்ள பொன்னங்கால் என்னுமிடத்திற் பிறந்தவர். இவர் இராமநாதபுரத்தை ஆண்ட தளவாய் இரகுநாத சேதுபதியால் (கி.பி. 1649-1685) ஆதரிக்கப்பட்டார். தம்மை ஆதரித்த அரசனின் புகழை நாட்ட இவர், ஒரு துறைக்கோவை என்னும் நூல் செய்தார். ஒரு துறைக்கோவை என்பது, ‘நாணிக் கண் புதைத்தல்’ என்னும் துறை மீது பாடப்பட்ட நானூறு பாடல்கள் கொண்ட நூல்.

அமிர்தம் பிள்ளை: (1845-99) இவர் உறையூரில் பிறந்து முத்துவீர உபாத்தி யாயரிடம் கல்வி கற்றவர். இவர் செய்த நூல்கள்; பெண்மை நெறிவிளக்கம், தமிழ் விடு தூது, யாப்பிலக்கண வினா விடை என்பன. மாகறல் கார்த்திகேய முதலியார், தமது மொழி நூலில் ஓரிடத்தில் எடுத்தாண்டுள்ள தமிழ் விடு தூதுச் செய்யுள், இவர் தமிழ் விடு தூதிலுள்ளதெனத் தெரிகிறது.

அமிர்தசாகரர்: (11ஆம் நூ.) இவர் வேளாள குலத்தைச் சேர்ந்த சமணப் புலவர். யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை என்று இரு யாப்பிலக்கண நூல்கள் இவர் செய்தவை: இவர் குலோத்துங்க சோழனுடைய (1070 - 1118) ஆட்சி 46-வது ஆண்டில் இருந்ததைக் குறிப்பிடும் சாசனம் உள்ளது. யாப் பருங்கலக் காரிகைக்கு, குணசாகரர் என்னும் ஆசிரியர் உரை எழுதியுள்ளார். யாப்பருங்கலத்துக்கு, சைவப் புலவரொருவர் பேருரை விரித்துள்ளார். அமிர்தசாகரர் என்னும் பெயர் அமுத சாகரர் எனவும் வழங்கும்.

அமுதனார்: (1017-) இவர் இராமனுச நூற்றந்தாதி பாடியவர். இவர், திருவரங்கத்த முதனார் என அறியப்படுவர். இவர் பாடிய அந்தாதி, நாலாயிரப் பிரபந்தத்துட் சேர்க்கப்பட்டு, பிரபந்த காயத்திரி என்று கொண்டாடப்படும்.

அம்பலவாண கவிராயர்: (18ஆம் நூ. முற்.) இவர் அருணாசலக் கவிராயர் குமாரர். இவர் செய்த நூல் அறப்பள்ளீசுர சதகம்.

அம்பலவாண தேசிகர்: (17ஆம் நூ.) இவர் திருவாவடுதுறைமடத்தில் 15ஆம் பட்டத் தலைவராயிருந்து, பண்டார சாத்திரத்தில் பதின்மூன்றாகிய அதிசய மாலை, உபதேச வெண்பா, உபாய நிட்டை வெண்பா, உயிரட்டவணை, சன்மார்க்க சித்தியார், சித்தாந்த சிகாமணி, சித்தாந்தப் பஃறொடை, சிவாச் சிரமத் தெளிவு, தசகாரியம், நமச்சிவாய மாலை (பஞ்சாக்கரமாலை), நிட்டை விளக்கம், பாசண்ட நிராகரணம் அனுபோக வெண்பா முதலிய சாத்திரங் களை இயற்றியவர்.

அம்பலவாண நாவலர்: (20ஆம் நூ. முற்.) இவர், யாழ்ப்பாணத்திலே வட்டுக் கோட்டை என்னு மூரிற் பிறந்த வேளாண்மரபினர். இவர் தந்தை பெயர் ஆறு முகம் பிள்ளை. சொற்பொழிவாற்றுவதில் மிக்க திறமை பெற்றவர். சென்ற ஆங்கீரச ஆண்டு சித்திரைத் திங்கள் 23ஆம் நாள் இவர் சிதம்பரத்தில் காலமானார். இவர் அப்பையதீட்சிதர் செய்த பிரம தர்க்க °தவம் என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தார்; திருச்சுழியற்புராணம், நடனவாத்திய ரஞ்சனம், சண்முக சடாட்சரப்பதிகம் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்.

அம்பலவாணபண்டிதர்: (1814-1879), இவர் யாழ்ப்பாணத்திலே கோப்பாய் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் அருளம்பல முதலியார். இவர், சேனாதிராயமுதலியாரிடம் கல்வி கற்றவர். சைவ சமயத்தினர்; சேனாதி ராயமுதலியார் பாடிய நல்லை வெண்பா, நீராவிக் கலிவெண்பா முதலிய வற்றை அச்சேற்றியவர்.

அம்பன் மாலாதனார்: (சங்க காலம்) இவர் பாடியது: நற். 81ஆம் பாடல்.

அம்பிகாபதி: (12ஆம் நூ.) இவர் கம்பர் குமாரர். இவர் சோழ அரசன் குமாரியைக் காதலித்தமையால் அரசனால் கொலையுண்டவர். இவர் செய்த நூல் அம்பிகாபதிக்கோவை. தமிழில் அலங்காரஞ் செய்த தண்டியின் பிதா இவராவர். கம்பராமாயணத்துக்கு “சம்பநாள்” என்ற பாயிரம் கொடுத்தவ ருமிவரே.

அம்பிகாபதி சுப்பையர்: (20ஆம் நூ.) இவர் பூந்துறை என்னுமூரினர்; அம்மானை முதலிய பல நூல்கள் செய்தவர். (கோ. பு.)

அம்பிகானந்தர்: இவர் போகரின் நான்காவது சகோதரர்; முப்புச்சூத்திரம் 25 செய்தவர்.

அம்பிகை பாகர்: (1884-1904) இவர் யாழ்ப்பாணத்தில் இணுவில் என்னும் ஊரில் பிறந்தவர்; சூளாமணி வசனம் இயற்றி அச்சிட்டவர். இணுவையந்தாதி என்னும் ஒரு நூலும் பாடியவர்; தணிகைப் புராணத்தில் நகரப்படலம் முடிய உரை செய்தவர்.

அம்மங்கி அம்மாள்: அம்மங்கி அம்மாள் அஞ்சுகவி.

அம்மள்ளனார்: (சங்ககாலம்) இவர் பாடியது நற். 82-வது பாடல். இவர் பாடலில் முருகவேளும் வள்ளியம்மையும் உவமிக்கப்பட்டுள்ளனர்.

அம்மூவனார்: (சங்க காலம்) ஐங்குறு நூற்றில், நெய்தற்பாட்டு நூறு செய்த வரிவரே. இவர் மலையமான் திருமுடிக்காரியைப் பாடியுள்ளார்; திருமகளைக் ‘கடல் கெழு செல்வி’ என்று குறிப்பிட்டுள்ளார். இவர் பாடியவை: அகம் 10, 140. 280, 370, 390; நற். 4, 35, 76, 138, 275, 307, 315, 327, 395, 397; குறு: 49, 125, 163, 303, 306, 318, 327, 340, 351, 397, 401.

அம்மெய்யனாகர்: (சங்க காலம்) அம்மெய்யன் என்பது இவர் தந்தை பெயர் போலும். இவர் பாடியது நற். 252. பாலைத்திணை இவராற் சிறப்பித்துப் பாடப்பட்டுள்ளது.

அம்மை அப்பர்: (-?) இவர் கொங்கு நாட்டுத் தென்சேரி (செஞ்சேரி)யினர்; தென்சேரிகிரிப் புராணம் பாடியவர் (கொ.பு.)

அம்மைச்சி: (17ஆம் நூ.) இவள் சாதியில் தாசி; காத்தான் என்னும் இயற் பெயருடைய வருணகுலாதித்தன் மீது ‘வருணகுலாதித்தன் மடல்’ என்னும் நூல் செய்தவள். இது சந்திரசேகர கவி என்பவரால் 1775இல் அச்சிடப்பட்டது. அந்தகக்கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் கோவையை அரங்கேற் றும் போது இவள் ஒரு பாடலுக்குத் தடை எழுப்பியதாகக் கதை உண்டு.

அரங்கநாதக் கவிராயர்: (-?) கொங்கு நாட்டுத் தளவாய்ப் பேட்டை (பவானி) யினர்; அருச்சுனன் தீர்த்த யாத்திரை என்னும் நூல் இயற்றிவர் (கொ.பு.)

அரங்கநாத முதலியார். எம்.ஏ. இராவ் பகதூர்: (1837 - 93) இவர் சென்னை இராசதானிக் கலாசாலையில் கணித நூற். பேராசிரியராக இருந்தவர். இவர் செய்த நூல் கச்சிக்கலம்பகம்.

அரசகேசரி: (17ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே பிறந்து வளர்ந்து, ஆழ்வார் திருநகரியிலிருந்து அட்டாவதானம் இராமனுசக் கவிராயரிடம் கல்வி கற்றவர். இவர் வடமொழி, தென்மொழிப் புலமையுடையராய், வடமொழி இரகுவம் சத்தைத் தமிழில் செய்யுள் வடிவில் மொழி பெயர்த்தார். இதற்கு, வித்துவான் கணேசையர் சிறந்த உரை எழுதியுள்ளார். இரகுவம்சத்தின் பாடற்றொகை 2404. இவர் பரராசசேகர அரசரின் மருகர்.

அரதத்தாசாரியார்: (-?) இவர் சோழ நாட்டில் காவிரிக்கு வட கரையிலுள்ள காஞ்சிபுரத்தில், வைணவ குடும்பத்தில் பிராமண வகுப்பில் பிறந்து, சைவ சமயத்தை மேற்கொண்டவர். இவர் செய்த நூல்கள்: சதுர்வேதசாரம், தத்துவ நிரூபணம், அரிஅர தார தம்மியம், சீகண்டபாடிய சமர்த்தனம், உஜ்வலயம், ஞான இரத்தினாகரம், சிவாதித்திய சிகாமணி, பத்தாதிக்ய சிகாமணி, சைவாகம பூஷணம், விபூதிருத்திராக்க பஞ்சகம் முதலியன. இவர், ‘தெய்வம் சிவமே’ என நாட்டுதற்குக் கூறிய இருபத்திரண்டு ஏதுக்களை யுடைய சுலோகம் ஐந்தும், சிவஞான முனிவரால் மொழி பெயர்த்து அகவலாகப் பாடப்பட்டிருக் கின்றன.

அரபத்த நாவலர்: (16ஆம் நூ.) இவர் திருப்பெருந்துறையில் வாழ்ந்த வேளாண்புலவர். இவர் பரதசாத்திர இலக்கணம் என்னும் நூலியற்றினர். அழகர் கலம்பகம் இவராலியற்றப்பட்டதெனவும் கூறப்படும்.

அரிகரபுத்திர உபாத்தியாயர் - பொய்கைப் பாக்கம்: விவேக சிந்தாமணி என்னும் நூல் செய்தவர் (1871). இது நிசகுணயோகி தொகுத்த நூலினும் வேறானது; நீதி சிந்தாமணி, வெள்ளை சிந்தாமணி எனவும் அறியப்படுவது.

அரிகிருட்டிண படையாச்சி: இவர் ‘தமிழ் சுருக்கெழுத்து’ என்னும் நூல் செய்தவர். (கும்பகோணம் 1898)

அரிகேசரி பராக்கிரம பாண்டியன்: (1422-1462) இவன் பாண்டியர் வலி குன்றிய காலத்தில் தென்காசியைத் தலைநகராக்கி ஆண்ட பாண்டியன். இவன் தமிழ்ப் புலமை மிக்கிருந்தானென்பது, தென்காசி விசுவநாதர் ஆலயக் கோபுர நிலைக் கற்களில் இவன் பாடியனவாகக் காணப்படும் பாடல்களால் அறியப்படுகின்றது (சா.த.க.ச.)

அரிசில் கிழார்: (கி.மு. 40) இவர், பெருஞ்சேரலிரும் பொறையைப் பதிற்றுப்பத் தில் எட்டாம் பத்திற்பாடி ஒன்பதாயிரம் காணம் பரிசிலாகப் பெற்றார். அவ் வரசன் தனது அரசிருக்கையையும் அரண்மனையையும் இப்புலவருக்குக் கொடுக்க விரும்பினான். பொன் முடியாரென்ற பெண் புலவரும், அரிசில் கிழாரும் தகடூர்யாத்திரை என்ற உரையிடையிட்ட பாட்டுடைக் காப்பியத்தை இயற்றினார்கள். இது, பெருஞ்சேரலிரும்பொறை தகடூரை முற்றி, அதிக மானைக் கொன்றதைக் கூறுவதாகும். இந்நூலிற் சிற்சில பகுதிகளே கிடைத் துள்ளன. இவர் செய்த பாடல்கள்: குறு. 193; பதிற். 71-80; புறம் 146, 230, 231, 281, 285, 300, 304, 342. திருவள்ளுவமாலை 13-வது பாடல் இவர் பெயரால் வழங்குகின்றது.

அரிதாசர்: (1507 - 1530) இவர் களப்பாளர் குடியிற் பிறந்த வேளாண் மரபினர். இவர், அரிவாசபுரம், அரிதை என்று வழங்கப்பட்ட நகரில் கோயில் கொண்ட திருமாலுக்குத் தொண்டுசெய்து, அவ்வூரிலே வாழ்ந்துவந்தார். அரிவாசபுர மென்பது திருவள்ளூருக்கு வடக்கே 18 மைல் தூரத்திலுள்ள நாகலாபுர மென்ற ஊராகும். இவர், திருமாலே பரம்பொருள் என்று விளக்கும் இருசமய விளக்கம் என்னும் நூல் செய்தார். ஆற்றுக்கு நீராடச் சென்ற இருபெண்கள், சைவ சமயம் வைணவ சமயம் என்னும் இரண்டையும் சீர்தூக்கி வைணவ சமயத்தின் பெருமையைத் தம்முள் பேசிக்கொள்வதாகக் கூறுவது இந்நூல். இவரியற்றிய பிற நூல்கள் சௌமிய நாராயணப் பெருமாள் கும்மிப்பாட்டு, ³ சோபனப்பாட்டு திருநாள் வாகனக்கவி என்பன.

அருணகிரிநாதர்: (15ஆம் நூ.) இவர் தேவதாசி குலத்திலே திருவண்ணாமலை யிற் பிறந்தவர். இவர் முருக அடியாராக விளங்கிப் பதினாயிரம் திருப்புகழ் பாடினார். இன்று கிடைத்துள்ளவை சிலநூறு பாடல்களே. இவர், இளமையில் சிற்றின்ப நுகர்ச்சியி லமிழ்ந்து கிடந்து, பின் முருகனருள்பெற்று அக்கடவுள்மீது பல பாடல்கள் செய்தார். அவை திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூதி, திருவகுப்பு, வேல் விருத்தம், மயில் விருத்தம் என்பவை. இவர், வில்லிபுத்தூரரோடு வாதம் புரிந்து அவரை வென்றாரென்னும் கதையும் வழங்குகின்றது.

அருணந்தி சிவாசாரியர்: (13ஆம் நூ.) இவர் திருத்துறையூரில் அந்தணர் மரபிலுதித்தவர். இவர் ஆகமசாத்திரங்களைப் பயின்று, அவற்றில் வல்லுநராய் ‘சகலாகம பண்டிதர்’ என்னும் சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்; மெய்கண்ட தேவரிடம் ஞானோபதேசம் பெற்று, சிவஞான சித்தி, இருபா இருபஃது என்னும் நூல்களியற்றினார். சிவஞானசித்தி, சைவசித்தாந்த நூல் களுள் மிகச் சிறப்பு வாய்ந்தது. “பார் விரித்த நூலெல்லாம் பார்த்தறிதற்குச் சித்தியிலே யோர் விருத்தப் பாதிபோதும்” “சிவனுக்கு மேற்றெய்வமில்லை, சிவஞான சித்திக்கு மேற் சாத்திரமில்லை” என்னும் வாக்குகள் சிவஞான சித்தியின் சிறப்பை விளக்குவன. சிவஞான சித்தி, சிவஞான போதத்துக்கு வழி நூலாக அமைந்தது. சிவஞானசித்தி, தமிழிலுள்ள சைவ சித்தாந்த சாத்திரம் 14-களுள் நான்காவது; பரபக்கம், சுபக்கம் என இரண்டு பகுதிகளை உடையது; அவற்றுள் 301 திருவிருத்தங்களையுடைய பரபக்கத்தில் உலோகாயதன் முதலிய பரசமயிகளுடைய கோட்பாடுகள் எடுத்துக்காட்டி மறுத்தல் செய்யப்படும்; 308 விருத்தங்களுடைய சுபக்கத்தில், பல சமயிகளாலும் செய்யப்படும் ஆசங்கைகளுக்கெல்லாம் பரிகாரம் கூறித் தன் மதம் நாட்டுதல் செய்யப்படும். இதிலுள்ள பரபக்கத்துக்கு, திருவொற்றியூர் ஞானப் பிரகாசர், அவர் மாணாக்கராகிய தத்துவப் பிரகாசர், வேலப்ப பண்டாரம் முதலியோரும், சுபக்கத்திற்கு மறைஞான தேசிகர், சிவாக்கிர யோகிகள், திருவண்ணாமலை ஆதீனத்து ஞானப்பிரகாச முனிவர், திரு வாவடுதுறையா தீனத்துச் சிவஞான முனிவர், நிரம்பவழகிய தேசிகர் முதலி யோரும் உரை எழுதியுள்ளனர்.

அருணாசலக் கவிராயர். மு. ரா.: (19ஆம் நூ.) இவர், சேற்றூர் செமீனில் வாழ்ந்த இராமசாமிக் கவிராயரின் மகன். இவர் பாடியன: சிவகாசித் திருப்பதிப் பெருமான் மீது பல சிறு பிரபந்தங்கள், சிவகாசிப் புராணம், பல அந்தாதிகள், பிள்ளைத்தமிழ், பலபதிகங்கள், குறுக்குத் துறைச்சிலேடை வெண்பா, ஆறுமுக நாவலர் வரலாறு (செய்யுள் வடிவு) முதலியன. திருச்செந்தூர்ப் புராணம் திருப்பரங்குன்றப் புராணம், திருக்குற்றாலப் புராணம் முதலியவற் றையும் இவர் உரைநடையி லமைத்தார்.

அருணாசலக் கவிராயர்: (20ஆம் நூ.) இவர், வடவழி (கோவை) என்னு மூரினர்; மருதாசலக் கடவுள் பிள்ளைத்தமிழ், யவனகாவியம், பேரூருலா, அவிநாசி உலா, பாம்பண்ண கவுண்டன் குறவஞ்சி முதலிய நூல்கள் இயற்றியவர். (கொ.பு.)

அருணாசலக் கவிராயர்: (1712 - 1779) இவர், சோழ மண்டலத்தில் தில்லையாடி யில் வேளாளர் குலத்தில், நல்ல தம்பிப் பிள்ளைக்கும் வள்ளியம்மைக்கும் புதல்வராகப் பிறந்து, தருமபுர ஆதீனத்து ஆம்பலவாணத் தம்பிரானிடம் இலக்கண இலக்கியங் கற்றுப் புதுவைக்குச் சென்று திரும்பி, சீகாழியில் வந்து தங்கி, சிதம்பரநாத தம்பிரான் சுவாமிகள் கட்டளைப்படி அத்தலத்தில் வசித்து, சட்டநாத புரத்து வேதியர் வேண்டுகோளால் இராமாயண கீர்த்தனை பாடினர். இராம நாடகம், சீகாழித்தல புராணம், சீகாழிக்கோவை, அனுமார் பிள்ளைத்தமிழ், அசோமுகி நாடகம் முதலியன, இவர் பாடிய நூல்கள். இவர், தில்லையாடி மணலி முத்துக்கிருட்டிண முதலியார் முன் இராம நாடகத்தை அரங்கேற்றி, அவரால் பெரிதும் கொடை வழங்கப் பெற்றார். இவர் சேதுபர்வத வர்த்தனியம்மை பிள்ளைத்தமிழும் பாடினார்.

அருணாசலக்கவுண்டர்: (-?) கொங்கு நாட்டுக் கோபாலபுரத்தினர்; மூர்த்தி மலைப்புராண வசனம் என்னும் நூல் இயற்றியவர் (கொ.பு.)

அருணாசல முதலியார்: (18ஆம் நூ. பிற்.) இவர் திருமயிலையிலிருந்த தமிழ் வித்துவான். இவர் பாடிய நூல்கள், கொடியிடைமாலை, சிதம்பரம் சிவகாமி யம்மை பதிகம், திருமுல்லை வாயில் மாசிலாமணியீசர் பதிகம் என்பன.

அருணிதி இராசுதேவன்: (-?) இராமநாதபுரம் மானாமதுரை சோமநாத சுவாமி கோயிற் கிழக்குத் திருமதிலில் உள்ள சாசன மொன்றனுள், அவ்வாலயத்துட் கோயில் கொண்ட சிவபிரானையும், உமாதேவியையும் பற்றி அருள்நிதி இராசுதேவன் என்பார் பாடிய செய்யுளொன்று வரையப்பட்டுள்ளது. இதனால், இவர் தமிழ்ப் புலமை வாய்ந்திருந்தனரெனத் தெரிகிறது (சா.த.க.ச.)

அருணிலை விசாகன்: (13ஆம் நூ.) இவர், மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில், பாரதத்தைத் தமிழிற் செய்தவர். “இவ்வருணிலை விசாகன் பாரதத்தை இனிய செந்தமிழ்ப் படுத்தியவனென்றும் சிவநெறியிலொழுகியவனென்றும்” திருவாலங்காட்டு சாசனம் கூறுகிறது. இப்பாரதம் வழக்கு வீழ்ந்தமையால் அதனமைதி எத்தகையது என்று விளங்க இடமில்லை. (சா.த.க.ச.)

அருண்மொழித் தேவர்: சேக்கிழார் பார்க்க.

அருமருந்து தேசிகர்: (1760-) திருச்செந்தூரில் வாழ்ந்த முருக அடியாராகிய இப்புலவர் 700 விருத்தப் பாக்களடங்கிய ‘அரும்பொருள் விளக்கம்’ என்னும் நிகண்டு நூல் செய்தார். இந்நூல் தில்லையில் அரங்கேற்றப்பட்டது.

அருளப்ப நாவலர்: (19ஆம் நூ. இறுதி) இவர் பூலோக சிங்க முதலியார் எனவும் அறியப்படுவர். இவர் திருச்செல்வரென்னும் உரோமான் கத்தோலிக்க ஞானியாரின் வரலாற்றைத் திருசெல்வராசர் காவியம் எனச் செய்தார். இதனைத் தியாகராசபிள்ளை என்பவர் விளக்கக் குறிப்புகளுடன் பதித்தார். இவர் யாழ்ப்பாணப் புலவர்களுள் ஒருவர். இந்நூல் யாழ்ப்பாணத்தில் 1896-இல் பதிக்கப்பட்டது.

அருளாள தாசர்: (16ஆம் நூ.) இவர் நெல்லி நகரிற் பிறந்து கி.பி. 1543இல் தமிழில் பாகவதமியற்றியவர்; இவர் செவ்வைச் சூடுவார்க்குப் பின் இருந்து ‘வாசுதேவ கதை’ என்ற புராண பாகவதத்தைத் தமிழிற்செய்தவர். இது கி.பி. 1543இல் அரங்கேற்றப்பட்டது. இதில் 9151 விருத்தங்களுண்டு.

அருளாள பெருமாள்: (14ஆம் நூ. பிற்) வைணவராகிய இவர் ஞாய சாரம், பிரமேய சாரம், என்னும் நூல்களியற்றியவர். இவர் பெயர் அருளாளப் பெருமாள் எம்பிரானார் எனவும் வழங்கும்.

அலியார் புலவர்: (18ஆம் நூ. பிற்.) இவர் முகமதிய புலவர்களுள் ஒருவர். இவர் செய்த நூல்கள், இந்திராயன் படைப்போர், இபுனி ஆண்டான் படைப்போர் என்பன.

அல்லங்கீரனார்: (சங்ககாலம்) அல்லம் என்பது மலையாளப் பகுதியிலுள்ள ஓர் ஊர். இவர் நற். 245இல் நெய்தலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

அவலோகிதன்: (-?) இவர் அகத்தியருக்குத் தமிழாசிரியரெனச் சைனர் கூறுவர். “ஆயுங் குணத்தவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டேயும் புவனிக் கியம்பிய தண்டமி ழீங்குரைக்க, நீயுமுளையோ வெனிற்கருடன் சென்ற நீள் விசும்பி, லீயும், பறக்குமிதற்கென்கொலோ சொல்லு மேந்திழையே.”

அவிநயனார்: (கி.பி. 9ஆம் அல்லது 10ஆம் நூ.) அகத்தியரின் மாணவர் ஒரு அவிநயர் எனப்படுகின்றார். இவர் செய்த இலக்கண நூலிலிருந்து பலவற்றை மயிலைநாதர், தமது நன்னூலுரையில் எடுத்தாண்டுள்ளார். இச் சூத்திரக் கருத்துக்கள் நன்னூலுரையிற் காணப்படுகின்றன. தொல்காப்பியர் காலத்திருந்த ஒருவரால் அவிநயம் செய்யப்பட்டதென நம்புதல் இயலாது. மயிலை நாதர், தமது உரையிற் புகழும் இராசபவித்திர பல்வதரையர், இந்நூலுக்குச் சிறந்த உரை யொன்று செய்திருந்தாரெனத் தெரிகின்றது. அவிநயம் செய்தவர், சமண சமயத்தினராகக் காணப்படுகின்றார். யாப் பருங்கல விருத்தியில் அவிநயச் சூத்திரங்கள் பல எடுத்தாளப்பட்டுள்ளன. இவர் சூத்திரங்களில் விருத்தப்பாவிற்கு இலக்கணம் காணப்படுகின்றமை யின் இவர் காலம் பிற்பட்டதேயாகும். இவர் செய்த சூத்திரங்களின் திரட்டு எனப்படுவன பன்னிருபாட்டியலிலுள்ளன.

அவிரோதிநாதர்: (14ஆம் நூ.) சமண முனிவராகிய இவர் அருகக் கடவுள் மீது திருநூற்றந்தாதி பாடியுள்ளார்.

அவ்வை: (கி.மு. 62-) அவ்வையார், அதிகமான் அஞ்சி என்பாரால் ஆதரிக்கப்பட்ட நல்லிசைப் புலமை மெல்லியார். அவ்வையார் என்பதற்குப் பாட்டி அல்லது முதியவர் என்பது பொருள். இவர், திருவள்ளுவரின் உடன் பிறந்தாரென்பது இன்று அறிஞரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இவர் அதிகமானஞ்சியையும், அவன்மகன் பொகுட்டெழினியையும், நாஞ்சில் வள்ளுவனையும், தொண்டைமானையும் பாடியுள்ளார். இவர், தம்மை விறலியாகத் தோன்றும்படி பாடல்கள் பாடியுள்ளமையின், இவர், பாணர் குலத்தவரெனக் கூறுவாருமுளர். அவ்வாறு பாடுதல் அக்காலப்பாடல் மரபு என்பார், அவ்வாறு கொள்ளார். அதிகன், தனக்கு அரிதிற் கிடைத்ததும் சாவைப் போக்குவதுமாகிய கருநெல்லிக்கனியை இவருக்குக் கொடுத்த போது அவனை வாழ்த்திப் பாடியபாடலில் “பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி நீலமணிமிடற்றொருவன் போல மன்னுக” எனக் கூறியிருத்தல் கொண்டு, இவர் சிவபிரான்பால் அன்பு நிறைந்தவரெனத் தெரிகிறது. இவர் பாடியன: அகம் 11, 97, 147, 273. 303; குறு. 15, 23, 28, 29, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388; நற் 129, 187, 295, 371, 381, 390, 394; புறம் 87, 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 286, 290, 295, 311, 315, 367, 390, 392.

அவ்வையார் 2: (12ஆம் நூ.) ஒட்டக் கூத்தர், புகழேந்திப் புலவர் விளங்கிய 12ஆம் நூற்றாண்டில் அவ்வையாரென்னும் பெண்புலவரொருவர் வாழ்ந்தார். இவர் வயதின் முதிர்ந்தவராய், அரசராலும் பிரபுக்களாலும் பொது மக்களாலும் நன்கு மதிக்கப் பெற்றவராய் வாழ்ந்தார் எனத் தெரிகிறது. இவர் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், மூதுரை, நல்வழி, வாக்குண்டாம், பந்தனந் தாதி, அசதிக் கோவை, அட்டாங்க யோகக்குறள், கல்வி ஒழுக்கம், நன்னூற் கோவை, அருந்தமிழ் மாலை, தரிசனப்பத்து, ஞானக்குறள், பிடகநிகண்டு முதலிய நூல்களைப் பாடினார். இவர் பிற்காலத்திருந்த இன்னொரு அவ்வையாரெனக் கருதுவர் சிலர். சுந்தரர் காலத்தும் சேரமான் பெருமாள் நாயனார் காலத்தும் விளங்கிய அவ்வையார் ஒருவரின் பெயரும் அறியப்படுகிறது. Tamil Literature P . 94 எம்.எ°. பூரணலிங்கம் பிள்ளை.) கணபதி ஆசிரிய விருத்தம் (10 பாடல்) ஈச்சுரன் மாலை, பிள்ளையாரகவல் என்னும் நூல்களும் அவ்வையார் பெயரால் வழங்கும். ஈச்சுரன் மாலை, க.வேற் பிள்ளை அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. “கொன்றை வேய்ந்த செல்வனடியிணை, என்று மேத்தித் தொழுவோம் யாமே” என்னும் கொன்றை வேந்தன் பாடல், யா.வி. யில் காணப்படுகிறது.

அழகசுந்தரம் (பிரான்சி° கிங்°பெரி) (1773-1841) இவர் சி.வை. தாமோதரம் பிள்ளையின் புதல்வர்; பி.ஏ. பட்டதாரி; சென்னை அரசாங்கத்தார் தொகுத்த பேரகராதியின் தொகுப்புக்குழுவில் துணையாசிரியராகவும், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆராய்ச்சியாளராகவுமிருந்தவர். இவர் இயற்றிய நூல்கள் ஏசு வரலாறு, அகப்பொருட் குறள், இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம் என்பன. Life of Jesus, Jesus of Nazareth முதலிய நூல்களும் எழுதியுள்ளார்.

அழகிய சிற்றம்பலக் கவிராயர்: (1647-) இவர், சிவகங்கையிலுள்ள மிதிலைப்பட்டியில் வாழ்ந்தவர்; இரகுநாத சேதுபதியின் புகழைச் சிறப்பித்து, தளசிங்க மாலை என்னும் நூலைக்கட்டளைக் கலித்துறையிற் பாடியவர். இவர் வழியில் வந்தவராகிய மங்கைபாக கவிராயர் கொடுங்குன்ற புராணம் செய்தவராவர்.

அழகிய சிற்றம்பல தேசிகர்: திருவுசாத்தானத் தோத்திரம் பாடியவர்.
அழகிய சொக்கநாத பிள்ளை: (19ஆம் நூ.) இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த தச்சலூரிற் பிறந்தவர்; நெல்லைக் காந்திமதி ஆம்மைமீது பிள்ளைத்தமிழ், அந்தாதி பாடியவர். இவர், தம்மைப் போற்றிவந்த முத்துச் சாமிப்பிள்ளைமீது காதலொன்றும் பாடியுள்ளார்.

அழகிய திருச்சிற்றம்பலத் தம்பிரான்: (17ஆம் நூ.) இவர் சுவர்க்கபுரம் மடத்தைச் சார்ந்தவர் இவர் ‘திரிபதார்த்தம்’ என்னும் நூலியற்றினார்.

அழகிய நம்பி: (18ஆம் நூ.) வைணவப் புலவராகிய இவர் “குருபரம்பரை வரலாறு” செய்தவராவர்.

அழகிய மணவாள சீயர்: திரு விருத்த வியாக்கியானம், திருவாய்மொழி வியாக்கி யானம், பன்னீராயிரப்படி, தத்துவ தீபப் பிரகாசம், சாரீரகைக்கண்டியம், பகவத் கீதை வெண்பா முதலிய நூல்கள் செய்தவர்.

அழகிய மணவாளப் பெருமாணாயனார்: (15ஆம் நூ.) இவர் பிள்ளை உலோகாசாரியரின் தம்பி. இவர் செய்த நூல்கள் திருப்பாவை உரை, ஆறா யிரப்படி, மாணிக்கமாலை, ஆசாரிய இருதயம், அருளிச் செயல் இரகசியம், கண்ணினுண் சிறுதாம்பு முதலியவற்றின் உரை முதலியன.

அழகு முத்துப் புலவர்: இவர், மெய்கண்ட வேலாயுத சதகம், மெய்கண்ட திருப்புகழ் முதலிய நூல்கள் இயற்றியவர். (தஞ்சை 1900.)

அழிஞ்சி நச்சாத்தனார்: (சங்ககாலம்) இவர் செய்தது குறு. 271.

அழுகிணிச் சித்தர்: (15ஆம் நூ. ?) அழுகிணிச்சித்தர் பாடல், என வழங்கு வதைவிட இவரைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை.

அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்: (கி.பி.1-) அளக்கர் என்பது பாண்டி நாட்டிலுள்ள ஓரூர். வெள்ளி தென்றிசையிலிருந்தால் மழை குறையுமென்று இவர் புறம் 388இல் குறிப்பதால் இவர், வான நூலறிந்தவரெனத் தெரிகிறது. இவர் பாடியன: அகம் 33, 144, 174, 344, 353; புறம் 388; நற். 297,321, 82; குறு. 188, 215. இவர், குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார்.

அளவியனார்: (-?) பழைய இலக்கண நூலாசிரியருள் ஒருவர். இவர் பெயர், யாப்பருங்கல விருத்தியிற் காணப்படுகின்றது.

அள்ளூர் நன்முல்லையார்: (சங்க காலம்) இவர் சங்க காலப் பெண்பாற் புலவர்களிலொருவர். இவர் பாடியவை அகம் 46; குறு 32, 67, 68, 93, 96, 140, 157, 202, 237; புறம் 306.

அள்ளூர் நன்மூலன்: (சங்ககாலம்) இவர் பாடியது குறு. 157.

அறிவனார்: (-?) பஞ்சமரபு என்னும் நூலியற்றிய ஆசிரியர். இந்நூல் அடியார்க்கு நல்லார் காலத்தில் வழக்கிலிருந்தது.

அறிவானந்தர்: வலங்கை மீகாமன் பார்க்க.

அறிவுடை அரனார்: (-?) கடைச்சங்கப் புலவருள் ஒருவர் (இ.க.உ.)

அறிவுடை நம்பி: (சங்ககாலம்) ‘பாண்டியன் அறிவுடைநம்பி’ என்பவர் இவரே. இவர் பாடியன: அகம். 28; புறம் 188; நற் 15; குறு. 230. ‘சிந்தம்’ என்னும் நூல் செய்த பிறிதோர் அறிவுடை நம்பியார், யாப்பருங்கல விருத்தியில் அறியப் படுகின்றார். “அறிவுடை நம்பியார் செய்த சிந்தம் எப்பாற்படுமோ வெனின், தூங்கலோசைத் தாய்ச் சுரிதகத்தருகு தனிச் சொல்லின்றித் தாழிரும் பிணர்த் தடக்கை என்னும் வஞ்சிப்பாவே போல வந்தமையாற் றனிச் சொல்லில்லா வஞ்சிப்பா என வழங்கலாமோவெனில் வழங்காம்; செவி அறிவுறூஉவாய் வஞ்சியடியால் வந்து பொருளுறுப்பழிந்தமையால் உறுப்பழி. செய்யு ளெனப்படும்” (யா.வி.ப. 352)

அனந்த நாராயண சர்மா: (20ஆம் நூ.) பெருங் கவுண்டன் பட்டியினர்; ‘கஞ்சகிரி சித்தேசர் சதகம்’ பாடியவர் (கொ.பு.)

அனந்த பாரதி ஐயங்கார்: அனந்தபாரதி ஐயங்கார் பார்க்க.

அனந்த வீரியர்: (-?) ‘அகளங்க சூத்திரம்’ என்ற சைன நூலுக்கு உரை செய்த சமண ஆசிரியர்.

அன்னம்மாள் போல் சேலம் - இவர் அழகம்மாள் என்னும் கதை (நாவல்) எழுதியவர். (சேலம் 1907.)

ஆசாரியர் அநிருத்தர்: (8ஆம் நூ.) தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளிப் பகுதிகளைப் பல்லவரின் கீழ் சாமந்தராய் ஆண்டு வந்த முத்தரையன் என்ற அரசருள் ‘பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறன்’ என்ற வேந்தனது வெற்றித் திறங்களைக் குறித்து இப்புலவர் பாடிய பாடலொன்று சாசனங்களிற் சிதைந்து காணப்படுகின்றது (சா.த.க.ச.)

ஆசிரியர் நல்லந்துவனார்: (கி.பி. 100) நல்லந்துவனார் பரிபாடலில் முருகக் கடவுளுக்கு ஒரு பாடலும், வையைக்கு மூன்று பாடல்களு மியற்றினர். “இவர் மருதன் இளநாகனாரால் அகம் 59ல் பாடப்பட்டிருத்தலின், அவர் காலத்தவ ரென்பது தெளிவு. அவர் காலத்திலேயே சோழன் நல்லுத்திரனார் வாழ்ந்தவரென்று தெரிகிறது. மருதனிளநாகனார் மூன்றாவது மருதக் கலியைப் பாடியபின் நாலாவது முல்லைக் கலியை நல்லுருத்திரனார் பாடி யிருத்தல் கூடும். நல்லந்துவனார், எஞ்சியுள்ள நெய்தற் கலியைப் பாடிக் கலித்தொகையைத் தொகுத்தவராவர். கலித்தொகை இலவந்திகை நன்மாறன் காலத்தில் தொகுக்கப்பட்டிருக்கலாம்” (கா.சு.) இவர் பெயரால் திருவள்ளுவ மாலை வெண்பா ஒன்று காணப்படுகின்றது. இவர் செய்த பாடல்கள்; அகம் 43; கலி கடவுள் வாழ்த்து, 118-150; நற். 88; பரி 6, 8, 11, 20. திருவள்ளுவமாலை 18ஆம் பாடல் இவர் செய்ததாகக் காணப்படுகின்றன.

கலித்தொகை: 150 கலிப்பாக்களை யுடையதோர் அகப்பொருளிலக்கியம். இவற்றைப்பாடியோர், “பெருங்கடுங்கோன் பாலை குறிஞ்சி கபிலன், மருதனிள நாகன் மருதம்-அருஞ் சோழ, னல்லுருத்திரன்முல்லை நல்லந்துவ னெய்தல், கல்விவலார் கண்டகலி” என்ற வெண்பாவால் இன்னாரென விளங்கும். இதனை நல்லந்துவனாரியற்றிய தென்று சிலர் சொல்வர். இத் தொகையினீற்றில் “ இத்தொகையை பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்” என்று எழுதியிருப் பது அதற்குக் காரணமாயிருக்கலாமென்று தோன்றுகின்றது. இத் தொகையை, நச்சினார்க்கினியர் எழுதிய சிறந்த உரையுடன் சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்கள் முதலில் அச்சிட்டு வெளியிட்டார்.

ஆசிரியர் பெருங் கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது குறு. 239 காந்தள் மலரை ஊதும் தும்பி பாம்பு மிழும் மணிபோலத் தோன்று மெனக் கூறி யுள்ளார்.

ஆசுகவி ராசசிங்கன்: (-?) “இவர் ஒரு தமிழ்க்கவி. இவர் கடிகையாரைப் புகழ்ந்து பாடியவர். `செந்தமிழார் தங்கள் சீபாத தூளி போல், வந்த புலவோர் தம் மாமணி - கந்தன், அடிகையாற் பரவு மாசுகவிராசன், கடிகையார் கோலா கலன்’” (அபிதான சிந்தாமணி).

ஆடிய அப்பனார்: இவர் திருக்களர்ப் புராணம் செய்தவர். இது பின்னத்தூர் நாராயணசாமி ஐயரால் கும்பகோணத்தில் பதிக்கப்பட்டது. (1902).

ஆடிய அப்பனார், பொன்விளைந்த களத்தூர்: இவர் மாயூரத்தல புராணம் செய்தவர்.

ஆடுதுறை மாசாத்தனார்: (கி.பி. 1-) இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மரணத்தைக் குறித்துப் புறம் 227-இல் பாடியுள்ளார்.

ஆணல் (Arnold): இவர் அருணாசலம் சதாசிவம் பிள்ளை எனவும் அறியப்படுவர். மானிப்பாயென்னுமூரினர்; உதயதாரகைப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். இவர் செய்த நூல்கள்: இல்லற நொண்டி (1887), கீர்த்தனா சங்கிரகம் (1880), நன்னெறிக் கதா சங்கிரகம் (1893), பாவலர் சரித்திர தீபகம் (1886), சாதாரண இதிகாசம் (1858), வான சாத்திரம் (1861), வெல்லையந்தாதி (1890), யேசுநாதர் திருச்சதகம் (1850). இவர் 1898இல் உரிச்சொல் நிகண்டு என்னும் நூலைப் பதிப்பித்தார்.

ஆண்டாள் அல்லது சூடிக் கொடுத்த நாச்சியார்: (9ஆம் நூ.) இவர் பெரிய ஆழ்வாரின் மகள். பெருமாளுக்குப் பெரிய ஆழ்வார் கொடுக்கும் திருமாலை யாகிய கோதையை அவர் மகள் ஆண்டாள் சூடி எடுத்துவைத் திருந்ததறிந்து வேறுமாலை தொடுத்துச் சாத்த முயன்ற காலை, பெருமாள் அதனை மறுத்துச் சூடிக் கொடுத்த மாலையே வேண்டுமென்றார். அவர் அவ்வாறே செய்து பெருமாள் கட்டளைப்படி சூடிக் கொடுத்த நாச்சியாரைப் பெருமாளுக்குத் திருமணஞ் செய்வித்தார். நாச்சியார் திருமொழி நூற்று நாற்பத்துமூன்று, திருப்பாவை முப்பது முதலியன இவர் செய்தவை.

ஆண்டான் கவிராயர்: (19ஆம் நூ.) இவர் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள ஒட்டைப் பிடாரத்திற் பிறந்தவர்; வசைபாடுவதில் வல்லவர்; வைணவ அந்தணர்.

ஆண்டிப் புலவர்: (17ஆம் நூ.) இவர் செஞ்சியை அடுத்த ஊற்றங்கால் கிராமத்திற் பிறந்தவர். இவருக்குப் பிதா பகதேவன். இவருக்குப் பாவாடை வாத்தியார் எனவும் பெயர் கூறுவர். இவர் நன்னூலின் முதலிரண்டு இயல்களுக்கும் உரையறிநன்னூல் என்னும் ஆசிரியவிருத்தப் பாவானமைந்த உரையும், ஆசிரிய நிகண்டு என்னும் நூலும் செய்தார். ஆசிரிய நிகண்டு உரிச்சொல் நிகண்டைப் பற்றிக் குறிப்பிடுகின்றது.

தேசிகர் காலத்து விளங்கிய ஒரு புலவர் (சா.த.க.ச.)

ஆதிநாதர்: (-?) புதுக்கோட்டை நாட்டுக் குடுமியான் மலையிற் குகைவடிவாக வுள்ள சிவாலயத்தமைந்த சாசன மொன்றில் ஆதி நாதர் என்னும் புலவர் பெயர் காணப்படுகின்றது. (சா.த.க.ச.)

ஆதிமந்தி: (கி.மு. 180-) கரிகாலன் தன் சுற்றத்தோடு கழாஅர்ப் பெருந்துறையில் காவிரியின் புதுப் புனல் வருகையைக் கொண்டாட விழாச் செய்ய, அதற்கு வந்திருந்த ஆட்ட நந்தி அப்புனலிற் பலவகையாகக் கூத்தாடி விளையாடக் காவிரி அவனைக் காதலித்து இழுத்துக்கொண்டுபோய்க் கடலுள் ஒளித்து விட்டது. அஃது அறியாத ஆதிமந்தி கலுழ்ந்த கண்ணளாய்ப் பல விடங் களிலும் தேடி உழன்று கடைசியாகக் கடற்கரைக்கு வர அங்கு மருதி என்ற ஒருத்தி அவ்வாட்டநத்தியை ஆதிமந்திக்குக் காட்ட அவள் மிக மகிழ்ந்து கணவனோடு சென்றடைந்தாள். இவ்வாறு பரணராற் கூறப்பட்டுள்ளது. ஆதிமந்தி கரிகால் வளவன் மகள். இவர் செய்த பாடல்: குறு 31.

ஆதிமூல முதலியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் சென்னையில் வாழ்ந்தவர். உவின்சுலோ அகராதி தொகுப்பதற்குத் துணைபுரிந்தவர்; கதாசிந்தாமணி என்னும் நூல் செய்தவர்.

ஆதியப்ப நாவலர்: (1580-) இவர் மாயவரத் தல புராணம் பாடியவர்.

ஆதிவராக கவிராயர்: (18ஆம் நூ.) சோழ நாட்டில் வாழ்ந்த இவர், வட மொழியிலுள்ள காதம்பரி என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர். இது காந்தருவ மகளாகிய காதம்பரி, அவந்தி நகரத்துச் சந்திராபீடனோடு காதல் கொண்ட வரலாற்றைக் கூறுவது.

ஆதிவாயிலார்: (11-13 - நூ.) சமண ஆசிரியராகிய இவர் செய்த நூல் பரதசேனாபதீயம். அடியார்க்கு நல்லார் பரதசேனாபதீயத்திலிருந்து மேற்கோளெடுத் தாண்டுள்ளார்.

ஆத்தான் சீயர்: இவர், திருவாய்மொழி வியாக்கியான அடையவளைந்தான ரும்பத விளக்கம், திருப்பல்லாண்டு வியாக்கியான வரும்பதம் முதலியன செய்தவர்.*

ஆத்திரேய சீனிவாசாரியார்: இவர் இராமாயண சாரம் என்னும் நூல் செய்தவர்.*

ஆத்திரையன் பேராசிரியன்: (-?) இவர் ஒரு தமிழாசிரியர். இவர் செய்த நூல்கள் காணப்படவில்லை. இவர் செய்த “வலம்புரி முத்தின்” எனத் தொடங்கும் பொதுப்பாயிரமொன்று காணப்படுகின்றது.

ஆத்மநாத தேசிகர்: (1650-1728) இவர் சோழ மண்டல சதகம் பாடியவர்.

ஆபத்தாரணர்: மருதூராபத்தாரணர் பார்க்க.

ஆபிரகாம் பண்டிதர், தஞ்சாவூர்: இவர் கர்ணாமிர்த சாகரத்திரட்டு என்னும் சங்கீத நூலை எழுதி வெளியிட்டவர். (சென்னை 1907.)

ஆமூர்க்கவுதமன் சாதேவனார்: (சங்க காலம்). ஆவூர்காவிதிகள் சாதேவனார் என்றும் இவர் பெயர் காணப்படுகின்றது. இவர் பாடியவை: அகம். 159; நற். 264. காவிதி என்பது பாண்டி நாட்டு வேளாளருள் உழுவித் துண்போர் அரசராற் பெறுவதோர் பட்டம்.

ஆராவமுதாச்சாரியார்: இவர் திருச்சுழியல் என்னும் ஊரினர். திருச்சுழியற் புராணம் செய்தவர். (1901.)

ஆரிய அரசன் யாழ்ப் பிரமதத்தன்: (சங்க காலம்.) இவர் செய்த பாடல், குறு 184.

ஆரியப்ப புலவர்: (18ஆம் நூ.) இவர் திருக்குடந்தையிற் பிறந்த வேளாளர்; இவர் விண்டு பாகவதத்தைத் தமிழில் 4970 விருத்தப் பாவிற்பாடியவர்.

ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளைக் கண்ணத்தனார்: (சங்க காலம்.) இவர் பாடியது அகம். 64.

ஆலங்குடி வங்கனார்: (சங்க காலம்). இவர் செய்த பாடல்கள்: அகம். 106; குறு. 8, 45; நற். 230, 330, 400; புறம் 319. திருவள்ளுவ மாலையில் 53-வது வெண்பா இவர் பெயராற் காணப்படுகின்றது.

ஆலத்தூர் கிழார்: (கி.பி. 1-) இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். இவர் பாடியவை: குறு. 112, 350; புறம் 34, 36, 69, 225, 324.

ஆலம்பேரிச் சாத்தனார்: (கி.பி. 100-) இவர் பாண்டியன் இலவந்திகை நன்மாறனைப் பாடியுள்ளார். இவர் பாடியவை: அகம். 47, 81, 143, 175; நற். 152, 255, 303, 338.

ஆலால சுந்தரம் பிள்ளை: இவர் ‘காமாட்சி லீலாப் பிரபாவம்’ என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர் (1906.)

ஆவிடை ஆம்மாள்: இவர் செங்கோட்டையினர்; வேதாந்தப்பள்ளு என்னும் நூல் இயற்றியவர். (திருவாதி 1896.)

ஆவியார் - (சங்க காலம்) இவர் பெயர் ஆலியார், ஆனீயார் என்றும் காணப்படு கின்றது. இவர் பாடியது, புறம் 298.

ஆவூர் கிழார்: (சங்க காலம்) இவர் பாடியது: புறம். 322.

ஆவூர் கிழார் மகனார் கண்ணனார்: (சங்க காலம்) இவர் பெயர் ஆவூர் கிழார் மள்ளனார் எனவும் காணப்படுகின்றது. ஆவூர், சேர நாட்டிலுள்ளது. இவர் தந்தையார் பாடலொன்று புறத்திற் காணப்படுகின்றது. இவர் பாடியது: அகம். 202.

ஆவூர் கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்: (கி.பி. 21) பெருந்தலைச் சாத்தனார் பார்க்க.

ஆவூர்க் காவிதிகள் சாதேவனார்: (கி.மு. 270-) இவர் செய்த பாடல்கள்: அகம். 159; நற். 264.

ஆவூர் மூலங் கிழார்: (கி.பி. 1-) இவர் சோழ நாட்டிற் பிறந்தவர்; வேளாண் மரபினர். இவர் மகனாவார் புகழ் மிக்க பெருந்தலைச் சாத்தனார். இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். மூலம் என்பது இவர் பிறந்த நாளைக் குறிக்கலாம். ஆவூர் உறையூருக்கு அருகிலுள்ளது. அது இப்பொழுது பசுபதீச்சுரம் என வழங்கும். இவர் பாடியவை: அகம். 24, 156, 341; புறம். 38, 40, 166, 177, 178, 196, 261, 301.

ஆழ்வாரப்ப பிள்ளை: (1839-1924) இவர் முருகதாச சுவாமிகள் என்றும் அறியப் பட்டார். இவர் அரசாங்க உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றிருந்தவர். இவர் செய்த நூல்கள்: வள்ளியூர்த் தலபுராணம், வள்ளியூர் காவடி வைபவம். இவர் திருநெல்வேலியினர்.
உரை ஒன்றும் கிடைத்திலது. “நன்னனென்னும் பெயர் தீயோடடுத்தமையின் ஆனந்தக் குற்றமாய் பாடினாரும் பாடுண்டாரும் இறந்தாரென்று ஆளவந்தபிள்ளை ஆசிரியர் குற்றங் கூறினாரெனில் அவரறியாது கூறினார்,” என நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

ஆளவந்தார் 1: (11ஆம் நூ. பிற்.) இவர் மணக்கால் நம்பிக்குப் பின் வந்த வைணவாசாரியர்; வீர நாராயண புரத்திற் பிறந்தவர்; நாதமுனிகள் பௌத்திரர்; ஈசுர முனிகளுக்குக் குமாரர். இவருக்கு யமுனைத் துறைவர் என்றும் யாமுனாசாரியர் என்றும் பெயர். இவர் செய்த நூல்கள் ஆகமப் பிரமாண்யம், புருட நிர்ணயம், ஆத்ம சித்தி, ஈச்சுர சித்தி, கீதார்த்த சங்கிரகம், சிறீதோத்திரம், சதுச் சுலோகி என்பன.

ஆளவந்தார் 2: (18ஆம் நூ.) இவர் வேம்பத்தூரில் வாழ்ந்த பார்ப்பனப் புலவர். இவர், வடமொழியிலுள்ள ஞானவா சிட்டத்தைத் தமிழில் 2055 கவிகளில் மொழிபெயர்த்தார். இதற்கு அருணாசலசாமி என்பார் உரை எழுதினார்.

ஆறுமுக சுவாமிகள்: (16ஆம். நூ.) இவர் குகை நமச்சிவாயரின் மாணாக்கர் ‘நிட்டானுபூதி’ என்ற நூலியற்றியவர். இவர் சிவஞான சித்தியார் சுபக்கத்துக்கு ஓர் உரை எழுதியுள்ளார். நிட்டானுபூதிக்கு முத்துக் கிருட்டிண பிரமம் உரை செய்துள்ளார்.

ஆறுமுகத் தம்பிரான்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணப் புலவர்களுள் ஒருவர். இவர் தருமபுர ஆதீனத்துப் புலவராக இருந்து, மடத்தலைவராக வந்து கதிர்காமம் முதல் செகந்நாதம் வரையில் யாத்திரை செய்து 1836இல் கிறித்துவ மதத்தைத் தழுவி அஞ்ஞானக் கும்மி செய்தவர். இவர் தம்பிரானாயிருந்த காலத்துப் பெரிய புராணத்துக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். இவர் உரை 1885இல் அச்சிடப்பட்டது.

ஆறுமுக நயினார் பிள்ளை: (-1925) இவர் திருநெல்வேலியினர். கொழும்பில் வாழ்ந்த காலை, இவர் மெய்கண்டான் என்னும் திங்கள் வெளியீடு நடத்தினார். இவர் செய்த நூல்கள்: சாலிய அந்தணர் புராணம் (1800 பாடல்), சிவகலைப் புராணம் என்பன.

ஆறுமுக நாயக்கர், காஞ்சீபுரம்: இவர் வருண தருப்பணம் என்னும் நூல் செய்தார்.

ஆறுமுக நாவலர்: (1822- 1879) இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூரிற் பிறந்தவர். இவர் தந்தையார் பெயர் கந்தப்பிள்ளை. இவர் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடம் இலக்கிய இலக்கணங் கற்றார். இவர் உரை நடை எழுதுவதில் வல்லவர். கிறித்தவர்களின் பைபிள் இவரால் மொழி பெயர்க்கப்பட்டது. சொற்பொழிவாற்றுவதில் இவர் இணையற்றவர். இவர் இயற்றிய நூல்கள், முதற் பாலபாடம், இரண்டாம் பாலபாடம், நான்காம் பாலபாடம், முதற் சைவ வினா விடை, இரண்டாஞ்சைவ வினாவிடை, இலக்கண வினாவிடை, இலக் கணச் சுருக்கம், பெரிய புராண வசனம், திருவிளையாடற்புராண வசனம், சிதம்பர மான்மியம், கோயிற் புராணவுரை, சைவ சமய நெறிஉரை, நன்னூற் காண்டிகையுரை முதலியன. இவர் பதித்த நூல்கள் கந்தபுராணம், பெரிய புராணம், சேது புராணம், திருக்குறள் பரிமேலழகருரை, திருக்கோவையா ருரை, தொல்காப்பியம், சேனாவரையருரை, இலக்கணக் கொத்து, தொல் காப்பியச் சூத்திர விருத்தி, பிரயோக விவேகம், தருக்க சங்கிரகம் உரை, நன்னூல் விருத்தி, சூடாமணி நிகண்டு, கோயிற் புராணம், கந்த புராணம், சைவ சமயநெறி, சிவஞான போதம் (1885) முதலியன. பெரிய புராணச் சூசனம் இவர் எழுதியது. இது முற்றுப்பெறவில்லை. தேவகோட்டைத் தலபுராணம் இவர் இயற்றியது.

ஆறுமுகம் பிள்ளை: (19ஆம் நூ. பிற்.) இவர் பூவாரு சுவாமிப் பிள்ளையின் மகன். இவர் அரிச்சந்திர வெண்பா, மதுரை யமகவந்தாதி முதலிய சிறு காப்பியங்கள் செய்தார்.

ஆறுமுகம் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் போளுமாம் பட்டியினர்; பட்டி விநாயகர் மாலை, வாகை விநாயகர் மாலை முதலிய நூல்களியற்றியவர். (கொ.பு.)

ஆறுமுகன்: தணிகை நாற்பாவலங்கல் என்னும் நூல் செய்தவர்.*

ஆறை கிழார்: இவர் கொங்கு மண்டலத்து அவிநாசி ஊரினர்; கார்மண்டல சதகம் இயற்றியவர். (கொ.பு.)

ஆற்றூர் கிழான்: (-?) இவர் தொண்டை மண்டலத்து வேளாளர்; ஆற்றூரிலிருந்த புலவர். (அபிதான சிந்தாமணி).

ஆற்றூர் முத்தானந்தர்: இவர் முத்தானந்தர் குறவஞ்சி என்னும் நூல் செய்தவர்.*

ஆனந்தக் கூத்தர்: (16ஆம் நூ.) இவர் பாண்டி மண்டலத்திலே பொருநையாற்றங் கரையிலுள்ள வீரநல்லூரர்; திருக்காளத்திப் புராணஞ்செய்தவர். திருவாசகத் துக்கு உரை எழுதிய ஒரு ஆனந்தக் கூத்தர் அறியப்படுகின்றார். இவர் காளத்திப் புராணம் செய்தவரோ பிறரோ தெரியவில்லை. இப் புலவர் பரிமளப்புலவரெனவும் அறியப்படுவர்.

ஆன்மலிங்க மாலை ஆசிரியர்: (16ஆம் நூ.) இந்நூல் செய்தவரின் பெயர் ஊர் முதலிய அறியப்படவில்லை. இவர் கமலைஞானப் பிரகாசரின் மாணவர் எனத் தெரிகிறது. இந்நூல் 11 விருத்தப் பாக்கள் அடங்கியது.

இசுமேல்கான் மரக்காயர்: காசிம்படைவெட்டு என்னும் நூலியற்றியவர்.

இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்: (கி.மு. 30 - ) இவர் பத்துப் பாட்டுகளுளொன்றாகிய சிறு பாணாற்றுப் படையைப் பாடியுள்ளார். சிறு பாணாற்றுப்படை பத்துப்பாட்டுள் மூன்றாவதாக உள்ளது. 269 அடிகளை உடையது; பரிசில் பெறக்கருதிய பாணனொருவனைப் பரிசில் பெற்றா னொருவன் ஏறுமா நாட்டு நல்லியக்கோடனிடத்தே ஆற்றுப் படுத்தியதாக அந்நல்லியக் கோடனை இப்புலவர் பாடியது. (பாணர் - பாடுவோர்; இவர் இசைப் பாணரும், யாழ்ப் பாணரும், மண்டைப் பாணருமெனப்படுவர்.) இது நல்லியக் கோடனது வள்ளன்மையையும் அவனுடைய நகரங்களாகிய எயிற்பட்டினம், வேலூர், ஆமூர் முதலியவற்றினியல்பையும் அவற்றிலுள்ளா ருடைய நற்குண நற்செய்கைகளையும் அவனது அரண்மனையின் சிறப்பை யும் பல திறத்தினரும் ஏத்தும்படி பல சிறப்போடு அவர் வீற்றிருத்தலையும் கூறுவதன்றித் தமிழ் நாட்டு மூவேந்தருடைய இராசதானிகளாகிய மதுரை, வஞ்சி, உறந்தை என்னும் மூன்று நகரங்களின் நிலைமையையும், பேகன் பாரி, காரி, ஆய், அதிகன், நள்ளி, ஓரி என்னும் வள்ளலெழுவரும் இன்ன இன்ன கொடையாற் பெயர் பெற்றார்களென்பதையுங் கூறும்.

இடைக் காடர் 1: (கி.பி. 1-) இவர் பெயரால், இவர் இடைக்காடு என்னும் ஊரினரெனத் தெரிகிறது. இடைக்காடு மலையாளப் பகுதியிலுள்ளது. இவர் பாடல்களிலெல்லாம் இடையர்களைப் பலவாறு சிறப்பித் திருத்தலின் இவரும் இடையராகலாம். இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். திருவள்ளுவமாலையில் இவர் பெயரால் ஒரு பாடல் காணப்படுகின்றது. இவர் பாடியவை: நற். 142, 221, 316; புறம். 42; அகம் 139, 194, 274, 284, 304, 374; குறு 251. ஊசிமுறி, அறுபது வருட வெண்பா, மூவடி முப்பது முதலிய நூல்கள் இடைக்காடர் செய்தனவாகக் கூறப்படுவதுண்டு. “ஒழிந்தன இடைக்காடனார் பாடிய ஊசி முறியுட் கண்டு அலகிட்டுக் கொள்க” (யா.வி.ப. 375.) இடைக்காடர் செய்த மூவடி முப்பது என்னும் நூல் மதுரைச் சுந்தரபாண்டியன் ஓதுவாரால் வெளியிடப்பட்டது. அதற்குப் பழைய உரை ஒன்றும் காணப்படுகின்றது. ஊசிமுறி என்னும் நூலில் 54 பாடல் களுண்டென்றும் அவற்றுக்குப் பழைய உரை உண்டென்றும் பூரணலிங்கம் பிள்ளையவர்கள் குறிப்புகளால் விளங்குகின்றன.

இடைக்காடர் 2: (15ஆம் நூ.?) இவர் கொங்கணர்மாணாக்கர்; சங்ககால இடைக்காடரின் வேறானவர்; சித்தருள் ஒருவர்; இடைக்காட்டுச் சித்தர் பாடல் செய்தவர்.

இடைக்குன்றூர் கிழார்: (கி.மு. 60-) இவர் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். குழந்தைகளுக்கு ஐம்படைத்தாலியணிவது அக்கால வழக்கென்று புறம் 77இல் இவர் கூறியுள்ளார். இவர் பாடியவை: புறம் 76, 77, 78, 79.
இடையன் சேந்தன் கொற்றனார்: (கி.மு. 240-) இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்; இளஞ்சேட் சென்னியைப் பாடியவர் (அகம். 375.) வடுகரது தோல்வியை இவர் கூறியுள்ளார்.

இடையன் நெடுங்கீரனார்: (கி.மு. 245.) இவர் பாடியது அகம். 166. வேளூர்வாய்த் தெய்வத்தையும் காவிரி நீர் விளையாட்டுச் சிறப்பையும் இவர் புகழ்ந்து கூறியுள்ளார்.

இந்திர காளியார்: (கி.பி. 11- 13ஆம் நூ.) பன்னிரு பாட்டியற் சூத்திரங்கள் சில இவர் செய்த பாட்டியலிலிருந்து எடுக்கப்பட்டன என்று கொள்ளப்படுகின்றது.

இம்முடி பட்டம் கோபண்ணமன்றாடியார்: மயிலம்பட்டி அப்பையன் குமாரன் சேசையன் சாசனம்.

இம்மென் கீரனார்: (கி.மு. 328?) கீரனா ரென்பது இவர் இயற்பெயர். “நும்மோன் செய்த கொடுமைக்கிம்மென்றலமரன் மழைக் கண்டெண்பனி மல்க” என்று சொல்லுமிடத்து இம்மென்று கூறியது நோக்கி இம்மென் கீரனார் எனப் பட்டனர். இவர் ஆரியரது பொன்படு நெடு வரையை (இமயத்தைப்) புகழ்ந்து கூறியுள்ளார். இவர் பாடியது: அகம். 398.

இரகுநாதையா யாழ்ப்பாணம்: போசராச பண்டிதர் செய்த சரசோதி மாலையைப் பதித்தவர். (1892.)

இரங்கசாமிப் பிள்ளை திரிசிரபுரம்: இவர் புலிப்பாணி சோதிடம் என்னும் நூலைப் பதித்தார்; சோதிடக் கடலகராதி, யோகப் பொருளகராதி, சோதிடக் கடல் போதினி என்னும் சோதிட நூல்களைச் செய்தார். (திண்டுக்கல் 1900.)

இரங்கநாத கவிராயர் - அட்டாவதானம்: இவர் வடமொழிச் செய்யுட்களி லிருந்து சுருக்கமாக மகாபாரதம் ஒன்று செய்துள்ளார். (சென்னை, 1903.)

இரங்கநாத தாசன்: இவர் குதிரைப் பந்தயலாவணி என்னும் நூல் செய்தார். (சிங்கப்பூர், 1893.)

இரசை வடமலையப்ப பிள்ளை: (17ஆம் நூ.) இவர் சோழநாட்டு இரசையிற் கார்காத்த வேளாளர் மரபில் எளிய குடும்பமொன்றிற் பிறந்து தமிழ்ப் புலமை பெற்று, திருமலைநாயக்கர் (1623-59) ஆட்சியிற் தென்பாண்டி நாட்டை அரசப் பிரதிநிதியாக இருந்து ஆண்டு வந்தவர். இவர் செய்த நூல் மச்ச புராணம். நீடூர்த்தல புராணம் இவர் செய்ததெனப் புலவராற்றுப்படை ஆசிரியர் கூறுவர். மச்சபுராணம் 5000 பாடலுடையது; இது 1706இல் அரங் கேற்றப்பட்டது. நானூற்றுக் கோவை, நாற்கவி வண்ணம் முதலியனவும் இவர் பாடியனவாகப் புலவராற்றுப்படைக்காரர் கூறுவர்.

இரட்டையர்: (15ஆம் நூ.) இவர்கள் சோழ நாட்டிலுள்ள ஆலந்துறையில் செங்குந்தர் மரபில் இரட்டைப் பிள்ளைகளாகப் பிறந்தவர்கள். இருவருள் ஒருவர் முடவர்; மற்றொருவர் குருடர். முடவரைக் குருடர் சுமந்து சென்றா ரென்றும் முடவர் வழி காட்டினாரென்றும் செய்தி உள்ளது. இவர்கள் இளஞ் சூரிய ரென்றும், முதுசூரியரென்றும் அழைக்கப்பட்டனர். இவர்கள் இயற்றிய நூல்கள் திருவாமாத்தூர்க் கலம்பகம், ஏகாம்பர நாதருலா, தில்லைக் கலம்பகம் என்பன. இவர்கள் பாடியனவாக வழங்கும் தனிப்பாடல்கள் பல. இரட்டையர், வில்லிபுத்தூரர், அருணகிரி நாதர், காளமேகம் என்போர் ஒரு காலத்தவர். இரட்டையர் வில்லிபுத்தூராரை ஆதரித்த அக்கபாகை ஆட்கொண்டானைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனார்: (கி.மு. 125-) இவர் செங்கண் மாத்து வேள் நன்னன் சேய் நன்னனை மலைபடு கடாத்திற் பாடியுள்ளார். மலைபடு கடாம் பத்துப் பாட்டினுள் பத்தாவது. இஃது 583 அடிகளையுடையது. மலையை யானையாக உருவகித்து அதன்கட் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்தமையின், இப்பாட்டு இப்பெயர் பெற்றது. பரிசில் பெறுதற்குச் சமைந்த கூத்தனொருவனைப் பரிசில் பெற்றானொருவன் பல்குன்றக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்ன னிடத்தே ஆற்றுப்படுத்தியதாக அந்நன்னனை இப்புலவர் பாடியதாகும்; இதனால் ‘இது கூத்தராற்றுப்படை’ எனவும் பெயர் பெறும். இதில் அந்நன்ன னது சிறப்பும், நவிரமென்னுமலையிற் காரியுண்டிக் கடவுளென்னும் பெய ரோடு எழுந்தருளியிருக்கும் சிவபெருமானுடைய மகிமையும் கூறப்படும்.

இரத்தின சபாபதி முதலியார், ஆலந்தூர்: இவர் முருகர் விசித்திர சாவாளிகள் என்னும் இசைப் பாடல்களைச் செய்தார். (சென்னை. 1888.)

இரத்தினவேலு முதலியார், ஈக்காடு: (20ஆம் நூ.) இவர் பரஞ்சோதி திருவிளையாடல், காசி காண்டம், பார்க்கவ புராணம் (விநாயக புராணம்) முதலிய நூல்களைப் பதித்தார். சிவமாபுராணம், ப°ம மஹாத்மியம் முதலிய நூல்களை மொழி பெயர்த்தார். சிறப்புப் பெயரகராதி இவர் செய்தது.

இரத்தினக் கவிராயர், திருமேனி: (17ஆம் நூ.) இவர் பெரியகாரி இரத்தினக் கவிராயரின் புதல்வர்; இரசை வடமலையப்பபிள்ளையின் மீது ‘புலவராற்றுப் படை’ என்னும் நூல் செய்தவர். இது 1692இல் அரங்கேற்றப்பட்டது. திருப்பேரைத் திருப்பணி மாலையும் இவரியற்றியது.

இராகவ ஐயங்கார். ரா: (-1946) இவர் செந்தமிழ்ப் பதிப்புத் தலைவராயிருந்தவர். இவர் தென்னவராயன் புதுக்கோட்டையைச் சார்ந்தவர். இவர் செய்த நூல்கள்: வஞ்சிமாநகர், சேது நாடுந் தமிழும், நல்லிசைப் புலமை மெல்லியலார், தமிழ் வரலாறு, பாரி கதை, அபிஞ்ஞான சாகுந்தலம், தொழிற் சிறப்பு முதலியன.

இராகவ மூர்த்திப் பிள்ளை: இவர் பறையர் உற்பத்தி என்னும் நூல் இயற்றியவர். (சென்னை, 1894.)

இராகவாசாரியர்: சாரசங்கிரக வியாக்கியானம் என்னும் நூல் செய்தவர்.*

இராச இரத்தினம் பிள்ளை, கிறித்தவ கலாசாலை சென்னை: இவர் சி.வை. தாமோதரம்பிள்ளையின் சீவிய சரித்திரம் என்னும் நூல் எழுதினார். (1902); பன்மணிக் கோவை என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார் (1908).

இராச இராசேசுவரி நாடக ஆசிரியர்: (11ஆம் நூ.) இந்நூலைப் பாடிய புலவர் பெயர் தெரியவில்லை. இந்நூல் முதலாம் இராச இராசன் காலத்து இயற்றப்பட்டதாகும். சிறப்புக் காலங்களில் அவன் கட்டிய தஞ்சைக் கோயிலில் இந்நாடகத்தை நடித்துக் காட்டுதற்கு வேண்டிய நிபந்தனைகளை அச்சோழன் மகன் இராசேந்திரன் செய்திருந்தானென்று அவன் சாசனத்தால் தெரிகிறது. (சா.த.க.ச.)

இராசகோபால நாயுடு: இவர் தென்னை, விவசாய விளக்கம் என்னும் நூல்கள் எழுதியவர். (சென்னை, 1904, 1902.)

இராசகோபால பிள்ளை, கோமளபுரம்: இவர் சென்னை பிரசிடன்சிக் கல்லூரி யில் தமிழ்ப் புலமை நடத்தியவர். இவர் நாலடியார், நளவெண்பா, திருவாய் மொழி முதலியவற்றுக்கு உரை எழுதிப் பதித்துள்ளார். தென்திருப்பதி புராணம், திரு நீலகண்ட நாயனார் விலாசம் முதலியனவும் இவராற் பதிக்கப்பட்டன. (1903, 1879, 1859, 1890, 1875.)

இராசகோபால பூபதி, தூசி: இவர் மதிமோச விளக்கம் என்னும் நூல் செய்தவர். (சென்னை, 1907.)

இராசகோபால முதலியார், புதுவை: இவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் செய்த திருவேங்கடமாலைக்கு உரைசெய்து பதித்தவர். (1879.)

இராசகோபாலன்: சுக்கிரீவ விசயம் செய்தவர்.*

இராச பவித்திர பல்லவ தரையர்: (13ஆம் நூ.?) இவர் அவிநயமென்னும் நூலுக்குச் சிறந்த உரை செய்தவர். நன்னூலுக்கு உரை செய்த மயிலை நாதரால் மிகப் புகழப்பட்டவர். “எண்டிசை நிறைபுகழிராச பவித்திரப் பல்லவ தரையன்” (நன்னூல் 359. மயிலைநாதருரை).

இராசப்ப கவிராயர்: (18ஆம் நூ.) இவர் திரிகூட இராசப்ப கவிராயரெனவு மறியப்படுவர். திருக்குற்றாலத் தல புராணம், திருக்குற்றாலக் குறவஞ்சி முதலிய நூல்கள் இவராற் பாடப்பட்டவை. இவர் தமிழ்ப் புலமையும் வாக்கினிமையும் நிரம்பப் பெற்றவரென்பதைக் கற்றார் பலரும் நன்கறிவர். இவர் பெருமை அக்காலத்துப் பாண்டி நாட்டை ஆண்ட நாயக்க அரசராலும் அறிந்து பெரிதும் மதிக்கப்பெற்றது. அவ்வரசர் முத்து விசயரங்கநாத நாயக்கர் (கி.பி. 1706 - 32.) அவர் பாண்டி நாட்டுக் குற்றாலத்துக்குச் சென்றிருந்த காலத்து இராசப்ப கவிராயரின் பெரும் புலமையையும் அருங் கல்வித் திறத்தையுமறிந்து, அக்குற்றாலவளமும், மலைவாணரின் பழக்க ஒழுக்கங்களும், ஆங்கு கோயில் கொண்ட சிவபிரானது மகிமைகளும் விளங்கக் குறவஞ்சிப் பிரபந்த மொன்று பாடும்படி இப்புலவரிடம் தெரிவிக்க அவர் விருப்பின்படி குற்றாலக் குறவஞ்சி என்ற நாடக நூலை இவர் பாடி அரசர்முன் அரங்கேற்றினர். அப்போது இப்பிரபந்தத்தைக் கேட்டுவந்த நாய்க்க வேந்தர் அக்குற்றாலப் பக்கத்தே வேண்டிய பூமிகளை கி.பி. 1718இல் தாமிர பட்டயமூலம் அளித்தனர். அக் கவியரசருக்கு அளித்த பட்டயம் அவர் வமிசத்தவரால் இன்று வரையும் சேமிக்கப் பெற்று வருகின்றது. இராசப்ப கவிராயர் பெற்ற நிலம் குறவஞ்சி மேடு என இக்காலத்தும் பெயர் விளங்கி இக் கவியரசர் வமிசத்தவரால் அனுபவிக்கப் பெற்று வருகின்ற தென்பதும், திருக்குற்றால சந்நிதி வித்துவான்களாக அன்னோர் இன்றும் கோயில் மரியாதைகள் பெற்று வருகிறார்களென்பதும் அறியத்தக்கன (சா.த.க.ச.) குற்றால மாலை, குற்றாலச் சிலேடை வெண்பா, யமக அந்தாதி, குற்றால உலா, குற்றால ஊடல், குற்றாலப் பரம்பொருள் மாலை, குற்றாலக் கோவை, குழல்வாய் மொழி கலிப்பா கோமள மாலை, குற்றால வெண்பா அந்தாதி, குற்றாலப் பிள்ளைத்தமிழ், குற்றால நன்னகர் வெண்பா முதலிய பன்னிரண்டு நூல்களும் அச்சிடாது கையெழுத்து வடிவிலுள்ளன என எம்.எ°. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இராசம் ஐயர் பி.ஏ. (B.A.): (19ஆம் நூ. பிற்.) இவர் எவேக்கின்ட் இந்தியா (Awakened India) என்னும் திங்கள் வெளியீட்டின் ஆசிரியராக விருந்தவர். ஆபத்துக்கிடமான அபவாதம் அல்லது கமலாம்பாள் என்னும் கதை எழுதியவர். (சென்னை 1896.)

இராசேந்திரம் பிள்ளை: இவர் பூலோக விநோதக் கதைகள் என்னும் நூலை 4 பகுதிகளாக வெளியிட்டவர். (சென்னை, 1897 1899.)

இராமகவி: இவர் அத்துவிதானுபவம் என்னும் வேதாந்த நூல் செய்தவர். (1888.)

இராம கவிராயர்: (18ஆம் நூ.) இவர் திருவாய்ப் பாடிப்புராணம், சாரப் பிரபந்தம் முதலிய நூல்கள் செய்தவர்; பிரம்பூர் ஆனந்தரங்கனைப் பாடிப் பரிசு பெற்றவர். இராம கவி பதங்கள் என ஒரு நூல் விசயரங்க முதலியாரால் 1886இல் பதிக்கப்பட்டது. இப்பதங்கள் இவர் பாடியனவோ பிறிதொரு இராம கவி பாடியனவோ தெரியவில்லை.

இராமகிருஷ்ண சித்தாந்தியார்: இவர் மயன்செய்த சிற்ப நூலென்னும் மனையடி சாத்திரத்தைத் திரட்டிப் பதித்தவர். (1885.)

இராமசந்திர கவிராயர், தண்டலம்: இவர் சோமசுந்தர முதலியார் செய்த இரணிய நாடகத்தைப் பார்வையிட்டுப் பதித்தவர். (1888.)

இராமசந்திரர்: இவர் புரூரவச் சக்கரவர்த்தி நாடகம் என்னும் நூல் செய்தவர். (சென்னை. 1897.)

இராமசாமி ஐயர்: இவர் பாரூர் மியூனிசிப் (District munisif of Parur); நகைப் பைத்தியம் என்னும் நூல் செய்தவர். (சென்னை 1898.)

இராமசாமி ஐயர்: (19ஆம் நூ. முற்) இவர் யாழ்ப்பாணத்திலே வட்டுக் கோட்டை யில் வாழ்ந்தவர்; நாடக நூல்கள் செய்வதில் வல்லவர். இவர் செய்த நூல்கள்: அல்லி நாடகம், கதிரை மலைக்கந்தசாமி பேரிற் கீர்த்தனங்கள் என்பன.

இராமசாமிக் கவிராயர்: (19ஆம் நூ. பிற்.) இவர் சுந்தரராசு பாண்டியரின் ஆசிரியர்; பல அரிய தனிநிலைப் பாடல்கள் பாடியவர்; சேற்றூர் செமீனின் அரண்மனைப் புலவராயிருந்தவர். (இ.வ.)

இராமசாமிக் கவிராயர்: (20ஆம் நூ.) இவர் உடுமலைப்பேட்டையினர்; திருப் பேரூர் சிகையறுத்தான் வண்ணம் பாடியவர். (கொ.பு.)

இராமசாமிக் கவிராயர், மிதிலைப்பட்டி: இவர் அழகிய சிற்றம்பலக் கவிராயரின் புதல்வர்; சிவகங்கையிலுள்ள கறுப்பண்ணசாமி மீது கறுப்பண்ணசாமி சதகம் செய்தவர். (சென்னை. 1897.)

இராமசாமிக் கவுண்டர் M.A.L.T.: (20ஆம் நூ.) இவர் சேலத்தினர்; பகவத் கீதையைச் செய்யுளில் மொழி பெயர்த்தவர். (கொ.பு.)

இராமசாமி தீட்சிதர், அகிலாண்ட புரம்: இவர் பத்ம புராணத்திலுள்ள சிவகீதையை வசன நடையில் மொழி பெயர்த்தவர். (1898.)

இராமசுவாமிப் பிள்ளை: (-1901) இவர் இராமநாதபுரத்தினர். ஆறுமுக நாவலருக்கு நண்பர்; ஏகம்பரந்தாதி, முல்லை யந்தாதி, திருவிளையாடற் புராணம் முதற் காண்டம் என்பவற்றுக்கு உரை எழுதியவர்.

இராமசுவாமி சுவாமி, கோயிலூர்: இவர் சிதம்பர சுவாமியின் மாணாக்கர், ஒழிவிலொழுக்கம், இலட்சணாவிருத்தி, சீவன் முக்திப் பிரகரணம், நானா சீவவாதக் கட்டளை, கீதாசாரத் தாலாட்டு, சசிவர்ணன் சரித்திரம் சசிவர்ண போதம், துவாதச நாம சங்கீர்த்தனம் முதலிய நூல்களைப் பதித்தவர். (1887.)

இராமச்சந்திரக் கவிராயர்: (19ஆம் நூ.) இவர் தொண்டை மண்டலத்தில் இராச நல்லூரிற் பிறந்து சென்னையில் வாழ்ந்த இராசுகுலப் புலவர். இவர் பாடிய நூல்கள்; சகுந்தலை விலாசம், தாருக விலாசம், இரங்கூன் சண்டை நாடகம், இரணிய வாசகப்பா, சூது துகிலுரிதல், மகாபாரத விலாசம் முதலியன. இவர் வீரமாமுனிவர் செய்த சதுர அகராதியை 1824இல் அச்சிட்டார்.

இராமச்சந்திர சாத்திரி, விட்டுணுபுரம்: இவர் சங்கராச்சாரியர் செய்த சித்தாந்த பிந்து என்னும் நூலையும், தர்மராச தீட்சிதர் செய்த வேதாந்த பரிபாஷை என்னும் நூலையும் தமிழில் மொழி பெயர்த்தவர். (1906, 1908.)

இராமதாஸர், பாயநகரம்: சக்குபாய் சரித்திரம் செய்தவர்.

இராம தேவர்: (-?) இவர் ஒரு சித்தர்; நாகப்பட்டணத்தில் வீற்றிருந்து சிவ பூசைச் சிறப்பால் எல்லாச் சித்தியுமடைந்தவர். இவர் வைத்திய நூல் செய்திருக்கின் றனர். அதற்கு இராமதேவர் வைத்தியம் என்று பெயர். இவர் காசியிலிருந்து சட்டநாதரை எழுந்தருளச் செய்து நாகையில் தாபித்தனர். (அபிதான சிந்தாமணி).

இராமநாத பிள்ளை: இவர் ஆத்மப்பிரகாச வசனம் என்னும் நூலை இயற்றியவர்.*

இராம பாரதி: (19ஆம் நூ.) இவர் சைவ மதத்தினர்; ஆத்திசூடி வெண்பாச் செய்தவர். ஆத்திசூடி வெண்பா என்பது அறஞ்செய விரும்பு முதலிய ஆத்திசூடிச் சூத்திரங்களை இறுதியில் கொண்டு ஒவ்வொரு சூத்திரத்துக்கும் உதாரணமாகப் புராணக் கதைகளை எடுத்துக்காட்டிடும் நூல்.

இராமயோகி, காஞ்சிபுரம்: இவர், பிரபோத சந்திரோதயத்தை வடமொழியி லிருந்து வசன நடையில் எழுதியவர் (1902). இராமயோகி தனயர் என்னும் ஒருவர் ஞானவேற்றம் என்னும் நூல் செய்துள்ளார். இவர் முன்னவரோ பிறரொருவரோ தெரியவில்லை.

இராமலிங்க குரு விருதுப்பட்டி: இவர் அதிவீரராம பாண்டியன் செய்த மாகபுராணத்தைப் பதித்தவர். (1904.)

இராமலிங்க சுவாமிகள்: (1823 - 1874) இவர் பிறப்பிடம் தென்னாற்காட்டுச் சில்லாவில் மருதூர்; சாதியிற் கணக்கர். இவர் ஐந்து முதல் 24-வயது வரையில் சென்னையில் வாழ்ந்தார். இவர் கடவுள் மீது பாடிய பாடல்களின் தொகுதி அருட்பா என வழங்கும். இவர் செய்த வேறு நூல்கள்: மனு முறை கண்ட வாசகம், சீவகாருணிய ஒழுக்கம். இவர் வடலூரிலிருந்து தமது 56-வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

இராமலிங்க சுவாமி, சிதம்பரம்: இவர் பெரிய புராணத்தை ஆறுமுகத்தம்பிரான் செய்த உரையோடு பதித்தவர். (1885.)

இராமலிங்க தேவர், எழுமூர்: இவர் தினக் கிரமாலங்காரச் சுருக்கம் என்னும் வைத்திய நூலை இயற்றியவர்; அகத்தியர் பஞ்சபட்சி சாத்திரம் என்னும் நூலைப் பதித்தவர். (1907.)

இராமலிங்கத் தம்பிரான்: (19ஆம் நூ.) இவர் கவிபாடுவதில் புலிக்குட்டி என்று பட்டம் பெற்றவர்; துறைசை ஆதீனத்தைச் சேர்ந்தவர்.

இராமலிங்க பிள்ளை, மதுரை: இவர் சிறீ இராமர் வனவாசம் என்னும் நூலை ஆம்மானை யாப்பில் பாடியவர். (1907.)

இராமலிங்க முதலியார் உபாத்தியாயர்: இவர் பெரிய ஞானக் கோவையைத் தொகுத்து வெளியிட்டவர். (1899.)

இராமலிங்க முதலியார், திருமயிலை: இவர் அந்தப்புர இரகசியம் , சீவரத்தினம், பழமொழிக் கதைகள், பங்கச வல்லிக்கதை முதலிய நூல்களை எழுதியவர். (1906, 1901, 1902, 1906.)

இராமலிங்கையர்: (19-ம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூரில் வாழ்ந்தவர்; சந்தான தீபிகை என்னும் சோதிட நூல் செய்தவர்; சரசோதி மாலை என்னும் நூலைப் பதித்தவர்.

இராமன் செட்டி, மதுவூர்: இவர் திருவேங்கட மாலை என்னும் நூலைப் பதித்தவர். (யாழ்ப்பாணம், 1886)

இராமானந்தசாமி, காஞ்சிபுரம்: இவர் மோட்ச சாதன விளக்கம் என்னும் அத்துவைத நூல் செய்தவர். (சென்னை, 1906.)

இராமானந்த யோகி, காஞ்சிபுரம்: இவர் முத்தைய சுவாமி செய்த சின்மயதீபிகையை உரையெழுதிப் பதித்தவர். (1907.)

இராமானுச கவிராயர்: (19ஆம் நூ.) இவர் இராமநாதபுரத்திற் பிறந்து சென்னையில் வாழ்ந்தவர்; திருவாவடுதுறை சோமசுந்தர தேசிகரிடம் கல்வி கற்றவர். இவர் செய்த நூல்கள் பார்த்தசாரதி மாலை, திருவேங்கட சதக அனுபூதி, வரதராசப் பெருமாள் பதிற்றுப்பத்தந்தாதி, பச்சையப்ப வள்ளல் மீது பஞ்சரத்ன மாலிகை முதலியன. திருக்குறள், ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நன்னூல் முதலிய நூல்களுக்கு காண்டிகை உரையும் செய்துள்ளார். ஆத்ம போதப் பிரகாசிகை என்னும் வடமொழி நூல் இவரால் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. இவர் செய்த இலக்கணச் சுருக்கம் ஒன்றுண்டு. துரூ பாதிரியார் (Rev. W.H. Drew) 1840இல் ஒன்றும் 1852இல் ஒன்றுமாக வெளியிட்ட திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு இவர் செய்த திருக்குறள் விளக்க உரையோடு கூடியது. இவர் 1853இல் காலமானார்.

இராமானுச நாவலர்: (-?) இவர் கொங்கு நாட்டிலுள்ள கரடி பாவி என்னு மூரினர்; காரமடைப் புராணம், சத்திரிய புராணம் முதலிய நூல்கள் பாடியவர் (கொ.பு.)

இராமானுச நாவலர், புதுவை: இவர் பாத்மோத்தர புராணம் இயற்றியவர். (1870.)

இராயப்ப உபதேசியார், பாளையங் கோட்டை: இவர் மெய்ஞான வேத ஒளி என்னும் நூல் செய்தவர். (சென்னை, 1904.)

இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்: (சங்க காலம்) இவர் ஆயர் மரபினர். ஒல்லை என்பது ஒல்லையூர். இது பாண்டி நாட்டிலுள்ளது. இவர் பாடியது: அகம் 279.

இருந்தையூர்க் கருங்கோழிமோசி: (-?) இவர் இடைச் சங்கப் புலவருள் ஒருவர். (இறை. களவியலுரை)

இருந்தையூர்க் கொற்றன்புல்லன்: (சங்க காலம்) இவர் செய்த பாடல்: குறு. 335.

இருபாலைச் செட்டியார்: (19ஆம் நூ. முற்.) இவர் யாழ்ப்பாணத்து இருபாலையில் வாழ்ந்த மருத்துவப் புலவர். இவர் செய்த நூல்கள் வைத்திய விளக்கம், சரக்குச் சுத்தி என்பன.

இரும்பிடர்த் தலையார்: (கி.மு. 235) இவர் கரிகாற் சோழருக்கு மாமனார். இவர் கருங்கை ஒள்வாட் பெரும் பெயர் வழுதி என்னும் பாண்டியனது வீரம் கொடை முதலியவற்றைப் பாடியுள்ளார். “பெருங்கையானை இரும்பிடர்த் தலையிருந்து” என (புறம். 3) கூறுகின்றமையால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம்.

இரேவண சித்தர்: (16ஆம் நூ.) இவர் பேரளத்திற்பிறந்து சிதம்பரத்தில் வாழ்ந்த வேளாளப் புலவர். இவர் சிவஞான தீபம், பட்டீச்சுர புராணம், திருவலஞ் சுழிப் புராணம், திருமேற்றளிப் புராணம், அகராதி நிகண்டு முதலிய நூல்க ளியற்றினர். அகராதி நிகண்டு 1594இல் செய்யப்பட்டது. இவர் வாழ்ந்த இடம் சென்னைக்குப் பக்கத்திலுள்ளதும் புலியூரெனப்பட்டதுமாகிய கோடம் பாக்கம் எனவும் சொல்லப்படுகிறது.

இலக்கணம் சிதம்பரநாத முனிவர்: (18ஆம் நூ.) இவர் சிவஞான முனிவரின் மாணாக்கர். திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம் பாடியவர்.

இலாசர° (Rev Lazarus): (-1925) இவர், சென்னை சர்வகலாசாலையில் பி.ஏ., பட்டம் பெற்றவர்; தமிழ்ப்பற்று மிக்கவர். இவர் செய்த நூல்கள், நன்னூல், திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பு, பழமொழி அகராதி என்பன. இவர், தமிழ் மொழி ஆராய்ச்சி சம்பந்தமான கட்டுரைகள் பலவற்றைத் திங்கள் வெளியீடுகளில் வெளியிட்டவர்.

இலிங்கன்: இவர் மலையாள நாட்டிலுள்ள புது நகரமென்னுமூரினர். வராகமிகிரர் செய்த ஓரை சாத்திரத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர். இந் நூலில் 400 பாடல்களுண்டு.*

இலித்தூர்கீ° (Liturgies): இவர் இங்கிலாந்து தேவாலயத்தைச் (Church of England) சேர்ந்த கிறித்துவ பாதிரி. இவர் பதித்த நூல்கள்: ஞானபோசன விளக்கம் (1825), பொதுவான செபப் பு°தகம் (1825), பொதுவான தேவாலயங்களில் வழக்கமாயிருக்கின்ற பொதுவான செபங்களும் ஞான திரவியங்களைப் பரிமாறும் ஒழுங்கும் தாவீதினுடைய சங்கீதங்களுமடங்கி யிருக்கின்ற புத்தகமும் (1819), தேவாலயங்களிலோதும்படி குறிக்கப்பட்ட தாவீதினுடைய சங்கீதங்களும் காலையிலும் அந்தியிலும் செபிக்க வேண்டிய செபத்தின் ஒழுங்கும் (1820), பொதுவான செபங்கள், சமுசார செபங்கள், பொதுவான செபப் புத்தகம் (1846), கருத்தருடைய செபம், தரங்கன்பாடித் திருச்சபையில் வழங்கும் ஞான முறைகளின் விளக்கம் (1781), சுவிசேஷகலுத்தரன் திருச்சபையில் வழங்கும் ஞான முறைமைகளின் புத்தகம் (1878), திருத்தப்பட்ட திருச்சபைகளின் வழிபாடு அல்லது முறைகள் (கொழும்பு 1760), செபத்தியானக் குறள், நித்திய சீவனம் முதலியன.

இழிகட் பெருங் கண்ணனார்: (-?) திருவள்ளுவமாலை 40-வது பாடல் இவர் பாடியதாக வழங்கும்.

இளங்கீரந்தையார்: (சங்க காலம்) இவர் செய்த பாடல் குறு. 148.

இளங்கீரனார்: (சங்க காலம்) எயினந்தை மகன் இளங்கீரனார் பார்க்க.

இளங்கோவடிகள்: (கி.பி. 175) இவர் சேரன் செங்குட்டுவனின் தம்பி. இவர் துறவு பூண்டு தனியே இருந்து வந்தார். முத்தமிழிலும் இவருக்குள்ள அறிவு ஆற்றல் மிகப் பெருமை வாய்ந்தன என்பதற்கு, இவரியற்றிய சிலப்பதிகாரமே சான்றாகும். இவர் சங்க காலப் புலவருள் ஒருவராக எண்ணப் படாவிடினும் அக்காலத்திருந்தவரென்பதை மறுத்தற்கியலாது. இக்காலத்துள்ள இலக்கியங் களில், பண்டைக் காலத்து இசைத் தமிழ், நாடகத் தமிழ்களின் பெருமையை உணர்த்துவது இவரியற்றிய சிலப்பதிகாரமே. இவரைச் சிலர் அருகரென்றும், சிலர் சைவரென்றும் கூறுவர். இவர் பிறந்த குலத்தினரும் இவர் காலத்து ஆட்சி செய்து வந்த இவர் தமையன் செங்குட்டுவனும் சைவ சமயத்தைத் தழுவியவராவர். சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்த மகாமகோபாத்தியாய ஐயரவர்களும் இவரைச் சைவரென்றே கூறுகின்றனர். இவர் நாடுகாண் காதை யில், கவுந்தி, ஐயை, முருகக் கடவுளைத் தொழுதிருப்பதைச் சொல்லியிருப் பதைக்கொண்டு சிலர் இவர் சைனர் என்கின்றனர். ‘குணவாயிற் கோட்டத் தரசு துறந்திருந்த’ என்ற வரிக்கு அடியார்க்கு நல்லார் கோட்டத்தை முருகன் கோயிலென்றனர். கோட்டமென்பது எல்லாக் கோயில்களுக்கும் பொதுப் பெயரேயன்றி, முருகன் கோயிலுக்குமட்டும் உள்ள பெயரன்று. இதை நிகண்டு நூல்களிலும், சிலப்பதிகாரத்து மற்றைய இடங்களிலும், ஏனைய இலக்கியங்களிலும் பார்க்கலாம். அரும்பதவுரை யாசிரியர் கோட்டத்தைக் கோயிலென்றனர். அருகன் கோயிலெனக் கூறவில்லை. இளங்கோவடிகள் ஒவ்வொரு மதத்தையும் பற்றிச் சொல்லுங்காலத்து அவ்வம் மதத்தைச் சேர்ந்தவரென்று படிப்போர் நினைக்கும்படி கூறுமாற்றலுள்ளவர். இவர், ஆய்ச்சியர் குரவையிலும், மற்றிடங்களிலும் திருமாலைப்பற்றிக் கூறுமிடத்து வைணவரெனத் தோன்றும். சிவனைப்பற்றிக் கூறுமிடத்து சைவரெனத் தோன்றும், இதற்கு இரண்டு உரைகள் உள. அரும்பத உரையாசிரியருரை ஒன்று. அது முழுவதற்குமில்லை. (தமிழ் வரலாறு. பக். 14. சீனிவாச பிள்ளை)

சிலப்பதிகாரம், கோவலன் கண்ணகி என்பவருடைய வரலாற்றை விரித்துக் கூறுவது; தமிழ் நாட்டார் மூவருடைய இராசதானிகளாகிய புகார், மதுரை, வஞ்சி என்னும் மூன்றன் பெருமைகளையும் விளக்குவது; சில நீதி களைச் சிலம்பு காரணமாக உலகத்தார்க்குத் தெரிவித்தற் பொருட்டுச் செய்யப் பட்டமையின் இஃது இப்பெயர் பெற்றது; இன்னும் முத்தமிழும் விவரப் பெற்றதாதலின் இயல் இசை நாடகப் பொருட்டொடர் நிலைச் செய்யுளென் றும், நாடகவுறுப்புக்களை யுடைத்தாகலின் நாடகக்காப்பியமென்றும், உரைப்பாட்டும் இசைப்பாட்டும் இடையிடையே விரவப்பெற்றதாதலின் உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளென்றும் இந்நூல் பெயர் பெறும். இது பதிகச் செய்யுளை முதலிற் பெற்று மங்கல வாழ்த்துப்பாடல் முதலிய பத்துறுப்புகளை உடைய புகார்க் காண்டமும், காடுகாண்காதை முதலிய பதின் மூன்றுறுப்புக்களை உடைய மதுரைக் காண்டமும், குன்றக் குரவை முதலிய ஏழுறுப்புக்களை உடைய வஞ்சிக் காண்டமுமாகப் பகுக்கப்பட்டுள்ளது. இதில் இயற்றமிழின் பாகுபாடான வெண்பா அகவற்பா கலிப்பா என்பவைகளும், இசைத்தமிழின் பாகுபாடான ஆற்றுவரி முதலிய பாக்களும், நாடகத் தமிழின் பாகுபாடான உரைப்பாட்டுக்களும் வந்துள்ளன. இதற்கு அரும்பத உரை என்றும் அடியார்க்கு நல்லாருரை யென்றும் இரண்டுரைகளுண்டு.

இளந்திரையனார்: தொண்டைமான் இளந்திரையன் பார்க்க. இளந்திரையம் என்னும் நூல்

இளந்திரையனாற் செய்விக்கப்பட்டதாக இறையனார் களவியலுரையால் தெரியவருகிறது. “செய்வித்தானாற் பெயர்பெற்றன சாதவாகனம் இளந்திரையம் முதியன” (மயிலைநாதர்.)

இளம்புல்லூர்க் காவிதி: (சங்க காலம்) இவர் செய்த பாடல்: நற். 89.

இளம்பூதனார்: (சங்க காலம்) இவர் செய்த பாடல்: குறு. 334.

இளம்பூரணர்: (12ஆம் நூ.) இவர் உரையாசிரியர் எனவும் அறியப்படுவர். தொல்காப்பியத்துக்கு முதன் முதல் உரை எழுதியவர் இவரே. எழுத்து, சொல் என்பவற்றுக்கும், பொருளதிகாரத்துக்கும் எழுதிய உரை இப்பொழுது கிடைத்துள்ளது. “இவர்களுள் இளம் பூரணர் மற்றவர்க்கு முந்தி உரை செய்தவர். ஏனைய உரையாசிரியர்கள், உரையாசிரியர் எனச் சொல்வது இவரையே என்பது, அவரவர் உரையில் ஒட்டியோ மாறுபட்டோ குறிப்பிடு வன இவரது உரையிற் காணப்படுகின்றமையால் விளங்கும். சிலர், உரையாசி ரியர் வேறு இளம்பூரணர் வேறு என்பர். அவர் தாம் வேறுபடுத்திக் கூறும் உரையாசிரியரது இயற்பெயர் முதலிய விபரங்களைக் கூறிற்றிலர். உரையாசிரி யர் கூறியதென உரையாசிரியர்கள் குறிப்பிடும் பகுதிகள் அடங்கிய உரை இளம்பூரணருரையிலன்றி இப்பொழுது காணப்படவில்லை. இவரது உரை தொல்காப்பியம் முழுவதற்குமுள்ளது. ஒல்காப்புலமைத் தொல்காப்பியத் துள்’உளங்கூர்கேள்வி இளம்பூரணரெனு மேதமின்மாதவன்’ என மயிலை நாதரும் `உளங் கூருரையாய இளம்பூரணம்’ என இலக்கணக் கொத்துடை யாரும் எழுதியிருப்பன இவரது பெருமைக்குச் சான்றாகும்.” (தமிழ் வரலாறு - சீனிவாச பிள்ளை) இவர் தொல்காப்பியப் பொருளதிகார உரையில் அகத்தி யம், செயிற்றியம், பன்னிரு படலம், காக்கை பாடினியம் முதலிய இலக்கணங் களிலிருந்து மேற்கொள் எடுத்தாண்டுள்ளார்.

இளம்பெருமானடிகள்: (-?) இவர் பொய்யடிமையில்லாத புலவர் கூட்டத்தவர். இவர் சிவபெருமான் திருமும்மணிக்கோவை என்னும் பிரபந்தம் செய்தவர். அது பதினொராந்திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது.

இளம்பெருவழுதி: (சங்க காலம்) இவர் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி எனவும் படுவர். இவர் பாடியவை: பரி. 15; புறம் 182.

பரிபாடல் என்பது ஒருவகை இசைப்பா; சங்ககாலத்தில் வழங்கியது. தலைச் சங்கத்தார் செய்த வேத்துணையோர் பரிபாடலைப்பற்றி இறையனார் களவியலுரை கூறுகின்றது. வேத்துணையோர் என்பது அரச சபையிலுள்ளோர் செய்தது என்பதைப் புலப்படுத்தலாம். சி.வை. தாமோதரம்பிள்ளை அவர் களின் களவியற் பதிப்பில் வேத்துணையோர் பரிபாடல் என்று காணப்படு கின்றது. இது தவறு; எத்துணையோ என்றிருத்தல் வேண்டுமெனப் பிற்காலத் தவர் கருதினர். எத்துணையோ என்பது, பொருட்சிறப்பின்றாதல் காண்க. பரிபாடல் என்னும் சங்க நூலில் 70 பாடல்களிருந்தன.
இப்பொழுது கிடைத் துள்ள பாடல்கள் இருப்பத் திரண்டே “திருமாற் கிரு நான்கு செவ்வேட்கு முப்பத், தொருபாட்டுக்காடுகாட் கொன்று மருவினிய, வையை யிருபத்தாறு மாமதுரை நான்கென்ப, செய்யபரி பாடற் றிறம்”. அக்காலத்தில் விளங்கிய புலவர்
இப்பாடல்களுக்குப் பண் ணடைவு செய்திருக்கின்றனர் (இசை வகுத்திருக்கின்றனர்.)

இளம்போதியார்: (சங்க காலம்) இளம் போதியார் என்பதனால் இவர் பௌத்த மதத்தினர் போலும். இவர் பாடியது: நற். 72.

இளவெயினனார்: (சங்க காலம்) எயினனென்னும் பெயர்க் காரணத்தால், இவர் வேட்டுவமரபினர் எனத் தெரிகிறது. இவர் பாடியது: நற். 263.

இளவேட்டனார்: (சங்க காலம்) இவர் மதுரை அறுவை வாணிகன் இளவேட்ட னார் எனவும் அறியப்படுவர். “இன்பமுந் துன்பமும்” என வரும் திருவள் ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாக வழங்குகின்றது. இவர் பாடியவை: அகம் 56, 124, 230, 254, 272, 302; குறு. 185; நற். 33, 157, 221, 344; புறம் 329.

இளையான் கவிராயர்: (-?) கொங்கு நாட்டைச் சேர்ந்த குன்றிடத்தினர்; அவிநாசிப்புராணம் பாடியவர் (கொ.பு.)

இறங்குகுடிக் குன்றநாடன்: (சங்க காலம்) இவர் பாடியது: அகம் 215.

இறையனார்: (கி.மு. முதல் நூ.) இவர், கடைச் சங்க காலப் புலவருள் ஒருவர். இறையனார் அகப்பொருள் என்னும் நூல் இவராற் செய்யப்பட்டது. நக்கீரர் காலத்து, இது மதுரைக் கோயிலின் திருவுருவப் பீடத்தின் கீழிருந்து, பூசகராற் கண்டு எடுக்கப்பட்டது. இறையனாரகப் பொருளுக்கு நக்கீரர் செய்த உரை ஒன்றுள்ளது. இது நீண்ட காலம் செவிவழக்கில் வந்தது; கி.பி. 7ஆம் நூற்றாண்டு வரையில் எழுத்துநிலை அடைந்தது. இதில், 750 வரையில் வாழ்ந்த பாராங்குசன்மீது பாடப்பட்ட பாண்டிக்கோவையிலிருந்து மேற் கோள்கள் காட்டப்பட்டுள்ளன. இப்பாடல்கள் ஏடெழுதுவோரால் பிற்காலத் தில் சேர்க்கப்பட்டனவெனக் கூறுவாருமுளர். இவர் செய்த பாடல் குறு. 2. ‘என்றும் புலராது’ என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடிய தாகக் காணப்படுகின்றது. கூடன் மேவிய ஆடன்மேவியார் என்பதும் இறைய னாருக்கு மற்றொரு பெயர். “உலகியனிறுத்தும் பொருண்மரபொடுங்க, மாற னும் புலவருமயங் குறுகாலை, முந்துறும் பெருமறை முளைத்தருள் வாக்கா, லன் பினைந் திணையென்றறுபது சூத்திரம், கடலமுதெடுத்துக் கரையில் வைத்ததுபோற், பரப்பின் றமிழ்ச் சுவை திரட்டி, மற்றவர்க்குத் தெளிதரக் கொடுத்த தென்றமிழ் கடவுள்” என்பது கல்லாடம்.

இனிசந்த நாகனார்: (சங்க காலம்) இவர் பாடியது: நற். 66.

இன்பகவி: (மறைவு 1835) இவர் மணப்பாறையில் பரவ மரபிற் பிறந்த கிறித்துவ கத்தோலிக்க புலவர். இவர் பல தனிப்பாடல்கள் பாடியுள்ளார். அக்காலத்தில் கச்சேரி முதலியராக இருந்த பிலிப்பு உரொட்ரிக்கோ முத்துக் கிரிட்டிணன் மீது குறவஞ்சி ஒன்றும் இவர் பாடியுள்ளார்.

இன்னாசித்தம்பி, திரி கோணமலை: இவர் அந்தோணிகுட்டி அண்ணாவி யாரியற்றிய கிறித்து சமய கீர்த்தன மென்னும் நூலைப் பார்வையிட்டுப் பதித்தவர். (1891)

ஈசான தேசிகர்: (1665-) இவர் சுவாமிநாத தேசிகர் எனவும் படுவர்; திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்தவர்; கல்லாட உரையாசிரியராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளையிடம் கல்வி கற்றவர். தசகாரியம், திருச் செந்திற் கலம்பகம், இலக்கணக் கொத்து திருவண்ணாமலையார் தசகாரியம் முதலிய நூல்கள் இவர் செய்தவை. இலக்கண விளக்க ஆசிரியராகிய வைத்தியநாதநாவலர், இவர் காலத்தவர். சிவஞான போதச் சூர்ணிகைக் கொத்து இவர் செய்ததெனக் கருதப்படும். இவர் சங்கர நமச்சிவாயப் புலவரின் ஆசிரியர்.

ஈசான முனிவர்: (16ஆம் நூ.) இவர் வரதுங்க ராமபாண்டியனுக்கு ஆசிரியர். வேம்பத்தூர் சங்கத்தைச் சேர்ந்தவர். (அபிதான சிந்தாமணி).

ஈசுர பாரதியார்: (17ஆம் நூ.) இவர் பல்பொருட் சூடாமணி நிகண்டு பாடியவர்.

ஈழத்துப் பூதந்தேவனார்: (கி.மு. 180-) இவர் பரணர் காலத்தவர். “கடவுள் போகிய கருந்தாட்கந்து” (அகம் 307) என இவர், அக்காலச் சிவலிங்க வழிபாட்டைக் குறித்துள்ளார். இவர் பாடியன: அகம். 88, 231, 307; குறு. 189, 343, 360; நற். 366. இவர் பிறப்பிடம் இலங்கை, ஈழம் என்பது இலங்கைக்கு மற்றொரு பெயர்.

உகாய்க்குடி கிழார்: (சங்க காலம்) இவர் பாடியது குறு. 63.

உக்கிரப் பெருவழுதி: (கி.பி. 225) இவர் பாண்டிய அரசருள் ஒருவர். இவர் காலத்திலேயே சங்கம் குலைந்த தென்பது பழஞ் செய்தி. உருத்திரசன்மனார் மூலம் அகநானூறு தொகுப்பித்தவர் இப்புலவரே. இவர் வேங்கை மார்பனுக் குரிய கானப் பேரூரை வென்றார். “நான்மறையின் மெய்ப்பொருளை” என வரும் திருவள்ளுவ மாலைச் செய்யுள், இவர் பாடியதாக வழங்குகின்றது. திருக்குறள், இவ்வரசன் சபையில் அரங்கேற்றப்பட்டதென்பது செவிவழிச் செய்தி. இவர் பாடியவை: அகம் 26; நற். 98. கானப்பேரெயிலெறிந்த உக்கிரப் பெருவழுதி என்பவருமிவரே. திருவள்ளுவமாலை 4-வது பாடல் இவர் பாடியதாக வழங்கும்.

உதீசீத் தேவர்: (14ஆம் நூ.) சைன முனிவராகிய இவர், திருக்கலம்பகம் என்னும் நூல் செய்தார். இவர் தொண்டைமண்டலத்தினர்; பௌத்தமதத்தை எதிர்த்துப் போராடியவர்.

உத்தண்ட வேலாயுத கவி: (1536) இவர் திருவதிகைக் கோயிலில் வாழ்ந்துவந்த ஒரு பார்ப்பனப் புலவரென்பது, அக்கோயில் மண்டப மொன்றிற் கண்ட சாசனமொன்றால் அறியவருகின்றது. இவர் பாடியது திருவதிகைக் கலம்பகம். (சா.த.க.ச.) இவர் பெயர், உத்தண்ட வேலாயுத பாரதி எனக் கூறுவர் சோமசுந்தர தேசிகரவர்கள்.

உபேந்திராசிரியர்: (18-ம் நூ. முற்.) இவர், சிநேந்திர மாலை என்னும் சோதிட நூல் செய்த சமணப் புலவர். இதில் 464 பாடல்களுண்டு. இவருக்கு சைநமா முனிவர் என்பதும் பெயர்.

உமட்டூர் கிழார் மகன் பரங்கொற்றனார்: (கி.மு. 180.) இவர் பரணர் காலத்து வாழ்ந்த புலவருளொருவர். இவர் பாடியது: அகம். 69.

உமாபதி சிவாசாரியார்: (14ஆம் நூ.) இவர் சிதம்பரத்துக்கு அண்மையிலுள்ள கொற்றவன் குடியிற் பிறந்த அந்தண மரபினர்; மறைஞான சம்பந்தரின் மாணவர். இவர் செய்தநூல்கள் சிவப்பிரகாசம், கொடிக்கவி, உண்மை நெறி விளக்கம், நெஞ்சுவிடு தூது, வினாவெண்பா, திருவருட்பயன், சங்கற்ப நிராகரணம், போற்றிப் பஃறொடை, கோயிற் புராணம், சேக்கிழார் புராணம், திருத்தொண்டர் புராணசாரம், திருப்பதிகக் கோவை, சிவபுண்ணியத் தெளிவு முதலியன. பௌட்கர ஆகமத்துக்கு உரையும் இவராற் செய்யப் பட்டது. சங்கற்ப நிராகரணம் 1313இல் செய்யப்பட்டது. இவர், பெற்றான் சாம்பானுக்கும் முள்ளிக்கொடிக்கும் முத்தி கொடுத்ததாக வழங்கும் கதை கள் நம்பத்தக்கனவல்ல. இறைவன் இவரிடம் கொடுக்கும்படி பெற்றான் சாம்பானுக்களித்த சீட்டுக்கவியாக வெண்பா ஒன்று வழங்குகின்றது. அது “அடியார்க் கெளியன் சிற்றம்பலவன் கொற்றங், குடியார்க் கெழுதிய கைச் சீட்டுப் படியின்மிசை, பெற்றான் சாம்பானுக்குப் பேதமறத் தீக்கை செய்து. முத்திகொடுக்க முறை” என்பது. திருப்பதிக்கோவை, ஞானபூசை, ஞான திட்சை, பெரிய புராணசாரம், வைப்புத்திருப்பதிக் கோவை முதலிய நூல் களும் இவர் செய்தனவாக சரசுவதிமகால் கையெழுத்து நூற்பட்டிகையிற் காணப்படுகின்றன.

உமறுப் புலவர்: (1665-) இவர் மகமதியப் புலவருள் ஒருவர். இவர் கீழைக்கரைச் சோனகமரபிற் பிறந்தவர். இவர், தந்தை சேகு முதலியார். இவர் 5,027 பாடல் கொண்ட சீறாப்புராணம் பாடி, சீதக் காதி அல்லது பெரிய தம்பி மரக்காயர் என்னும் கொடையாளியின் கருமகாரனாகிய அப்துல் காசிம் மரக்காயர் முன் அரங்கேற்றிப் பரிசு பெற்றவர். இவர் செய்த இன்னொரு நூல் முகமதுவைப் புகழ்ந்து பாடிய முதுமொழிமாலை. இவர், ஒளரங்கசீப்பின் காலத்தவர்.

உம்பற்காட்டு இளங்கண்ணனார்: (சங்க காலம்) உம்பற்காடு என்பது சேரருக்குச் சொந்தமான பல ஊர்களை உடைய தொரு நாடு (உம்பற்காடு - யானைக் காடு) இவர் பாடியது: அகம். 264.

உய்யவந்த தேவ நாயனார்: திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார், திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் பார்க்க.

உருத்திரங் கண்ணனார்: கடியலூர் உருத்திரங் கண்ணனார் பார்க்க.

உருத்திரசன்மர்: (கி.பி. 225) இவர் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர். இவர் தந்தை பெயர் உப்பூரி குடி கிழார். குறுந்தொகையைத் தொகுத்த பூரிக்கோ உப்பூரிகுடி கிழாராகலா மெனச் சிலர் கருதுவர். பாண்டியன் உக்கிரப் பெரு வழுதி, உருத்திர சன்மனாரைக் கொண்டு அகநானூறு தொகுப்பித்தான். இவர், இறையனார் களவியலுரை கேட்டவரென்றும் ஊமைய ரென்றும் இறையனார் களவியலுரை கூறும்.

அகநானூற்றுக்கு நெடுந்தொகை யென்றும் பெயருண்டு. இது 145 புலவர்கள் பாடிய 400 செய்யுட்களை உடையது. இத்தொகைப் பாட்டிற்கு அடி யளவு சிறுமை 13 அடி. பெருமை 31 அடி. இதனைத் தொகுப்பித்தான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. தொகுத்தான் மதுரை உப்பூரி குடி கிழான் மகனாவான் உருத்திர சன்மனென்பான். இது, களிற்றியானை நிரை, மணிமிடை பவளம், நித்திலக் கோவை என மூன்று பகுதிகளையுடையது. இத்தொகைக்குக் கருத்து அகவலாற் பாடினான், இடையள நாட்டு மணக் குடியான் பால் வண்ண தேவ னான வில்லவ தரையன். இதன் 90 பாடல்களுக்குப் பழைய உரை உளது. இதற்குக் கடவுள் வாழ்த்துப் பாடினார் பாரதம் பாடிய பெருந்தேவனார் (கி.பி. 9ஆம் நூ.)

உருத்திரசன்ம கண்ணர்: (-) திருவள்ளுவமாலை 31ஆம் பாடல் இவர் பாடியதாக வழங்கும்.

உருத்திரனார்: (கி.மு. 220?) இவர் குறுந்தொகையில் 274-வது பாடலைச் செய்தவர்.

உரூஉடூர்கிழார் மகனார் பரங்கொற்றனார்: (சங்க காலம்) இவர் பாடியது அகம் 69.

உரொட்லர் (Dr. Rottler): (19ஆம் நூ.) இவர் மேல் நாட்டுப் புரொத்த°தாந்து பாதிரியார். இந்தியாவில் வாழ்ந்தவர். இவர் தமிழ் - தமிழ் ஆங்கில அகராதி ஒன்று தொகுத்தார். இவ்வகராதியின் இருபகுதிகள் 1834-லும் 1837-லும் வெளிவந்தன. இவர் அதன் மேல் மரணமானமையின் Rev. W. Taylor இவ்வகராதியை 1846இல் முற்றுவித்தார்.

உரோடோக்கக் கவுணியன் சேந்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம் 191.

உரோடோக்கத்துக் கந்தரத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 306.

உரோமமுனி: (15-ம் நூ.?) இவர் புசுண்டர் குமாரர். சட்டைமுனி காலத்தவர். உரோமமுனி நூறு, உரோமமுனி ஐந்நூறு, ஐம்புள் நூல் முதலியன இவர் பாடியனவாக வழங்குகின்றன.

உலகநாத கவி: இவர் இரிபு கீதை என்னும் நூலை வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர். இது இரிபு என்பவரால் நிதாகர் என்னும் முனிக்கு உபதேசித்ததாக அமைந்தது.

உலகநாத பிள்ளை, தஞ்சை: (20-ம் நூ.) இவர் தமிழறிவோடு, இக்கால ஆராய்ச்சியுமுடையவர். இவர் செய்த நூல்கள் கன்றுங்கனியுதவும், கரிகால் வளவன் முதலியன.

உலகநாதன்: (18ஆம் நூ. பிற்.) இவர் ஆம்பட்ட மரபினர். உலக நீதி, சாதிபேத விளக்கம் என்பன இவர் செய்த நூல்கள்.

உலகப்பதம்பிரான்: நாற்கரண வுபதேச மென்னும் நூலியற்றியவர்.*

உலோச்சனார்: (கி.மு. 50-) இவர், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியை வாழ்த்தியுள்ளார். இவர் பாடியவை: அகம். 19, 100, 19 0, 200, 210, 300, 330, 400; குறு. 175, 177, 205, 248; நற். 11, 38, 63, 64, 74, 131, 149, 191, 203, 223, 249, 254, 278, 287, 311, 331, 354, 363, 372, 398; புறம் 258, 274, 377.

உவர்க் கண்ணூ ர்ப் புல்லங்கீரனார்: (கி.மு. 52) இவர் பாடியது: அகம் 146.

உவின்சுலோ (Miron Winslow): (19ஆம் நூ. பிற்.) இவர் அமெரிக்க பாதிரி; உவின்சுலோ அகாரதி என்னும் தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதியைத் தொகுத்து வெளியிட்டவர் (1862). இவர் அகராதி தொகுப்பதற்குத் துணை புரிந்தவர்கள் இராமானுசக் கவிராயர், வீராசாமிச் செட்டியார், விசாகப் பெரு மாளையர் முதலியோர். மானிப்பாய்த் தமிழ் அகராதி (1842), உவின்சுலோ அகராதி என்பன சதுர அகராதிக்குப் பின் வெளிவந்த சிறந்த அகராதி களாகும்.

உழுந்தினைம் புலவர்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 333.

உள்ளமுடையான்: (-?) உள்ளமுடையான் என்னும் சோதிடநூல் செய்த புலவர். இந்நூலை இலங்கையிலுள்ள தமிழர் பின்பற்றி, நாளாந்தர கருமங்களைச் செய்கின்றனர் என, சைமன் காசிச் செட்டி தமது “தமிழ் புலுதாக்” என்னும் நூலில் 1856இல் குறிப்பிட்டிருக்கின்றார். இந்நூல் உள்ளமுடையான் சூடாமணி எனவும் படும்.*

உறையனார்: (சங்க காலம்) இவர் பாடியது குறு. 207.

உறையூர் இளம்பொன் வாணிகனார்: (சங்ககாலம்) இவர் செய்த பாடல்: புறம். 264.

உரையூர் இளம் பொன்வாணிகன் சாத்தன் கொற்றன்: (சங்க காலம்) இவர் பெயர் செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றன் எனவும் காணப்படுகின்றது. இவர் பாடியது: அகம். 177.

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்: (கி.மு. 125) அந்துவன் சேரலிரும் பொறைக்கும் முடித்தலைக்கோப் பெருநற் கிள்ளிக்கும் நடந்த போரை இவர் பாடியுள்ளார். இவர் பாடியவை: புறம். 13, 127, 135, 241, 374, 375.

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்: (சங்க காலம்) இவர் பாடியது: நற். 370.

உறையூர்ச் சல்லியங் குமரனார்: (சங்க காலம்) இவர் பாடியவை: அகம். 44; குறு. 309; நற். 141.

உறையூர்ச் சிறுகந்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 257.

உறையூர்ப்பராயனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 374.

உறையூர் மருத்துவன் தாமோதரனார்: (கி.பி. 50-100) இவர், திருமாவளவனை, புறம்.60இல் பாடியுள்ளார். இவர் வெட்சிப்பூவை சிவற்புள்ளிகளுக்கு உவமித் திருத்தல் வியக்கத்தக்கது. இவர் பாடியவை: அகம். 133, 257; புறம். 60, 170, 321.

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்: (கி.பி. 1-) இவர் சோழன் நலங்கிள்ளியைப் பாடியுள்ளார். முதுகண்ணனென்பது அரசர்க்கும் பட்டத்துத் தேவியர்க்கும் உசாத்துணையாக விருந்து ஒழுக்க முறைகளைச் செவியறிவுறுத்துவாரைக் குறிக்கும். இவர் பாடியவை: குறு. 133; புறம் 27, 28, 29, 30, 325.

உறையூர் முதுகூத்தனார்: (கி.பி. 200 ?) உறையூர் முதுகூற்றனார், உறையூர் முதுகொற்றனார் எனவும் இவர் பெயர் காணப்படுகின்றது. இவர் செய்த பாடல்கள்: அகம் 137, 329; குறு. 353, 371, 390; நற். 28, 58 புறம் 331. “தேவிற் சிறந்த திருவள்ளுவர்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாக வழங்குகின்றது.

ஊட்டியார்: (சங்ககாலம்) அசோகந் தளிரினது சிவப்பூட்டாத சிவந்த நிறத்தை ‘ஊட்டியன ஒண்டளிர்ச்செயலை” என்றும் (அகம் 68) ஊனூட்டாத ஆம்பை “ஊட்டியன ஊன்புரளம்பு” என்றும் (அகம் 388) கூறிய சிறப்பு நோக்கி இவர் ஊட்டியார் எனப்பட்டார். இவர் பாடியவை: அகம் 68, 388.

ஊண்பித்தை: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு 232.

ஊர்வசி: ஊர்வசி இரத்தினச் சுருக்கம் என்னும் யோக நூல் செய்தவர்.*

ஊன்பொதி பசுங்குடையார்: (கி.மு. 240) இவர் இளஞ்சேட் சென்னியைப் பாடியுள்ளார். இவர் அரசனிடம் பரிசிலாகப் பெற்ற மிகுந்த அணிகலன் களைத் தம்முடைய உறவினருக்குக் கொடுத்தபோது அவர்கள் நெடு நாளிருந்த வறுமை தீர்ந்து பெருமகிழ்ச்சியால், சீதையை இராணவன் கவர்ந்து சென்றபோது அவள் கீழே எறிந்த அணிகலன்களைக் கண் டெடுத்துத் தவறாக அணிந்த குரங்கின் கூட்டம்போல, விரலிலணிவதைச் செவியி லணிந்தும், செவியிலணிவதை விரலிலணிந்தும், அரையிலணிவதைக் கழுத்திலணிந்தும், கழுத்திலணிவதை அரையிலணிந்தும் இடர்ப் பட்டார் என்றும் கூறினர். இவர் பாடியவை: புறம் 10, 203, 370, 378.

எம்பார்: எம்பார் பத்து வார்த்தை, எம்பார் அனுசந்தானம், எம்பார் இரகசியம் என்னும் நூல்கள் செய்தவர்.*

எம்பெருமான் பத்தர்பாடி: (-?) தக்கை இராமாயணம் பாடியவர்; கொங்கு நாட்டு சங்கரி துர்க்கம் ஊரினர்; மோரூர் நல்லதம்பி என்பவர் தக்கை இராமா யணத்தைப் பாடுவித்தார்.

எயிற்றியனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 286.

எயினந்தை மகனார் இளங்கீரனார்: (சங்ககாலம்) எயினன் + தந்தை = எயினதந்தை; இது எயினந்தை எனமருவிற்று. இவர் வேடர் மரபினர். இவர் பாடல்கள் எல்லாம் பாலைத் திணையைப் பற்றியனவாகும். இவர் பாடியவை: அகம். 3, 225, 239, 289, 299, 361, 371, 395, 399; நற்: 269, 308, 346.

எயினந்தையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 43.

எருக்காட்டூர் தாயங்கண்ணனார்: (கி.பி. 1-) எருக்காட்டூர் தஞ்சை மாவட்டத்தில் நன்னிலப் பிரிவிலுள்ளது. தாயன் என்பது இவரது தந்தையார் பெயர். கண்ணன் இவரது இயற்பெயர். கதையங் கண்ணானாரென்று இவர் பெயர் புறத்தில் அச்சிடப்பட்டுள்ளது. தாயங்கண்ணியாரென்று ஒருவர் புறத்திற் காணப்படுகின்றார். அவர் இவரது உடன் பிறந்தார் போலும். இவர் சேரலரது சுள்ளியாறு கடலோடு கலக்குமிடமாகிய முசிறித் துறைக் கண்ணே யவனர் பொன்னேற்றிய மரக்கலங்களோடு வந்து மிளகேற்றிப் போவதனைக் கூறி யுள்ளார். இவர் பாடியவை: அகம். 149, 319, 357; குறு. 319; நற். 219; புறம் 397.

எருச்சலூர் மலாடனார்: (-?) “பாயிரநான்கில்” என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்க நூல்களில் இப்பெயருடைய புலவரெவரேனும் காணப்படவில்லை. திருவள்ளுவமாலை 10ஆம் நூற்றாண்டளவில் பல புலவர்கள் பெயரைக் கொடுத்து புலவர் ஒருவர் பாடியுள்ளதென்பது அறிஞர் கருத்து.

எருமை வெளியனார்: (சங்ககாலம்) எருமை வெளி என்பது ஓர் ஊர். இவர் பாடியது. அகம் 73; புறம் 273, 303.

எருமைவெளியார் மகனார் மோகனக்கடலார்: (சங்ககாலம்.) இவர் பாடியது: அகம் 72. இவர் பெயர் எருமை வெளியார் மகனார் கடலனார் எனவும் காணப்படுகின்றது.

எலி° (Ellis): இவர் இங்கிலிஷ் பாதிரியாருளொருவர். திருக்குறள் அறத்துப் பாலை 1816இல் பதித்தவர், திருக்குறளின் சில பகுதிகளுக்கு விளக்கம் எழுதியவர்.

எல்லப்ப பூபதி: (1572-) இவர் திருவண்ணாமலைக்கு 25-மைல் தூரத்திலுள்ள தாழைநகரிற் பிறந்தவர். இவர் செய்த நூல்கள் அருணாசல புராணம், திருவிரிஞ்சைப் புராணம், அருணை அந்தாதி, திருவாரூர்க் கோவை, சௌந் தரியலகரி உரை, திருப்பனந்தாள் உலா முதலியன. இவர் பெயர் எல்லப்ப நயினாரெனவும் வழங்கும்.

எல்லப்ப நாவலர்: (17ஆம் நூ.) இவர் சைவ எல்லப்ப நாவலர் எனவும் அறியப்படுவர். இவர் காவிரிப்பூம் பட்டினத்துக்கு அருகிலுள்ள இராத நல்லூரிற் பிறந்தவர்; தருமபுர ஆதினத்தைச் சேர்ந்தவர். இவர் செய்த நூல் கள் அருணைக் கலம்பகம், திருவெண் காட்டுப்புராணம், தீர்த்தகிரி புராணம், திருச்செங்காட்டான் குடிப் புராணம், செவ்வந்திப் புராணம் முதலியன. இவரை யாழ்ப்பாணத்தவரெனவும் கூறுவர் என அபிதான சிந்தாமணி குறிப்பிடுகின்றது.

எழூஉப்பன்றி நாகன்குமரனார்: (சங்க காலம்) இவர் பாடியன: அகம் 138, 240. நுளையர் வலைவளம் தப்பின் ஆம்மகளிர் கிளையுடன் குழீஇச் சுறவுக் கோடு நட்டு வருணனுக்குப் பரவுக்கடன் கொடுக்கும் வழக்கினை இவர் கூறியுள்ளார்.

எறிச்சலூர் மலாடனார்: (-?) திருவள்ளுவமாலை 25-வது பாடல் இவர் பாடியதாக வழங்கும்.

எறும்பி அப்பா: (15ஆம் நூ.) இவர் செய்த நூல்: விலட்சண மோட்சாதிகாரி நிர்ணயம்.

என்னையினாப் புலவர்: (17ஆம் நூ.) இவர் மறுபெயர் வேலன் சின்னத்தம்பி. இவர் முத்துப் புலவரிடமும் நாச்சுமுத்துப் பணிக்கரிடமும் கல்வி பயின்றவர், இவர் செய்த நூல்: முக்கூடற்பள்ளு.

ஏகசந்த ஆசாரி: (-?) ஏக சந்தி என்னும் நூல் செய்தவர் (அபிதான சிந்தாமணி)

ஏகசந்தக்கிராகி: (17ஆம் நூ.) இவர் காவை வடமலையப்ப பிள்ளைமீது வடமலை வெண்பாப் பாடியவர்.

ஏகாம்பர முதலியார், செஞ்சி: இவர் சகாதேவன் செய்தது என வழங்கும் பாச்சிகை சாத்திரத்தை உரை எழுதிப் பதித்தவர் (1905); கலைக்கியான மஞ்சரி வியாக்கியானம், சோதிட கோட்சார சிந்தாமணி மூலமும் உரையும், கன்ன மகாராசன் நாடகம், மதுரைவீர அலங்காரம், மயிலிராவணன் நாடகம், நூதனமனைக் குறிசாத்திரம், சர்வவிடமுறிப்பு மூலமும் உரையும் முதலிய நூல்களை வெளியிட்டவர்.

ஏரம்பையர்: (1847-1914) இவர் யாழ்ப்பாணத்திலே மாதகல் என்னும் ஊரிற் பிறந்தவர். தந்தை பெயர் சுப்பிரமணிய சாத்திரி. இவர் செய்த நூல்கள்: சேது புராணக் கதை, சிரார்த்த விதி, கனாநூல், சூரியனுடைய முற் பிறப்பின் சரித்திரம், நாகேசுவரி தோத்திரம், குவாலலம்பூர் சிவபெருமானூஞ்சல், கவணாவத்தை, வைரவரூஞ்சல், மாதகற்பிள்ளையாரூஞ்சல் முதலியன.

ஏனாதி சாத்தஞ் சாத்தன்: (8ஆம் நூ.) இப்பொழுது கிடைத்துள்ள தமிழ் மூவேந்தர் சாசனங்களிலே பழமையான தென்று கொள்ளத்தக்க வேள்விக் குடிச் செப்பிதழ்களின் தமிழ்ப் பகுதியைப் பாடிய முன்னோர் இவ்வேனாதி யாவர். (சா.த.க.ச.)

ஏனாதிச்சித்தர்: ஏனாதிச்சித்தர் பாடல்.

ஐயம்பெருமாள் சிவந்த கவிராயர்: (16ஆம் நூ.) இவர் கருங்கொல்லர் மரபினர். இவர் புரூரவச் சக்கரவர்த்தியின் கதையைத் தமிழில் பாடி வரதுங்கராமன் அவையில் அரங்கேற்றினார். புரூரவசரிதை என்னும் நூல் 25 படலங் களோடு கூடிய 920 செய்யுட்களை யுடையது.

ஐயடிகள் காடவர்கோன்: (9ஆம் நூ.) இவர் காஞ்சியில் பல்லவர் குலத்திற் பிறந்து துறவு பூண்டு தலயாத்திரை சென்று முத்தியடைந்தவர். இவர் பாடியது சேத்திரத்திருவெண்பா. இது அவர் சென்ற தலங்கள் ஒவ்வொன்றையும் துதித்துப்பாடிய பாடல்கள் அடங்கியது. அந்நூல் பதினோராந் திருமுறையில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஐயம்பெருமாள் பிள்ளை: இவர் மதுரை வீரபத்திரபூபதியின் புதல்வர்; பாண்டிமண்டல சதகம் செய்தவர். தொண்டைமண்டல சதகம் இவரைக் குறிப்பிடுகின்றது (1932.)

ஐயாச்சாமி முதலியார்: (19ஆம் நூ.) இவர் குணங்குடியார் பதிற்றுப்பத்தந்தாதி என ஒரு நூல் மத்தான் சாகிப்பு மீது பாடியுள்ளார்.

ஐயூர் முடவனார்: (கி.பி. 1-) இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். ஐயூர் பாண்டி நாட்டகத்து ஓர் ஊர். இவர் முடவரென்பது வெளிப்படை. தோன்றிற் கோவிடத்து ஓர் ஊர்தி வேண்டிப் பெற்றவர். (புறம். 399). இவர் பாடியன: அகம் 216; குறு. 123, 206, 322; நற். 20, 334; புறம் 51, 228, 314, 399.

ஐயூர் மூலங்கிழார்: (கி.மு. 60-) இவர் கானப்பே ரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியுள்ளார் (புறம் 21) இவர் பாடிய கானப் பேரெயிலென்பது காளையார் கோயிலென இப்பொழுது வழங்கும்.

ஐயனாரிதனார்: (9ஆம் நூ. பிற்.) இவர் சேர அரசர் வழியில் வந்தவர். இவர் செய்த நூல் புறப்பொருள் வெண்பாமாலை: இதில் பிள்ளையார், சிவபெரு மான் முதலிய கடவுளருக்கு வணக்கம் காணப்படுவதால் இவர் சைவ சமயத்தவரெனத் தெரிகிறது. வெண்பாமாலை புறப்பொருட் பன்னிரு படலத் தின் வழி நூலாக அமைந்தது. இவரை எட்டாம் நூற்றாண்டுக்கு முன்னிருந்த வராகக் கூறலாமென்பர், “தமிழ் வரலாற்”றின் ஆசிரியர் சீனிவாச பிள்ளை அவர்கள். புறப்பொருள் வெண்பா மாலைக்குச் சாமுண்டித் தேவ நாயனார் என்பவர் உரை செய்துள்ளார்.

இந்நூல் தமிழிலக்கண மைந்தனுட் பொருளின் பகுதியாகிய அகம் புறமென்னு மிரண்டு திணைகளிற் புறத்தினிலக்கணமாகிய சூத்திரங்களையும் அவற்றினிலக்கியமாகிய வெண்பாக்களையும், அவ்வெண்பாக்களின் கருத்தைத் தனித்தனியே புலப்படுத்திக் கொண்டு ஒவ்வொன்றன் முன்னும் நிற்பனவாகிய கொளுக்களையுமுடையது. (கொளு - கருத்து). இதில் வெட்சிப்படலம் முதற் பெருந்திணைப் படலமிறுதியாகவுள்ள பன்னிரண்டு படலவுறுப்புக்களடங்கி யிருக்கின்றன. இதிலுள்ள வெண்பாக்கள் 361.
ஐயாதிச் சிறு வெண்டரையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம் 363.

ஒக்கூர் மாசாத்தனார்: (சங்ககாலம்: கி.மு. 245) எக்கூர் என்றும் பாடமுண்டு. இவர் பாடியன: அகம் 14; புறம் 248.

ஒக்கூர் மாசாத்தியார்: (சங்ககாலம்) இவர் பாடியன அகம். 324, 384; குறு. 126, 139, 186, 220, 275; புறம் 279.

ஒட்டக் கூத்தர்: (12ஆம் நூ.) இவர் செங்குந்த மரபினராகிய சைவப்புலவர். இவர் அனபாயன் குலோத்துங்கன் காலத்தவர். “அபயனான முதற் குலோத்துங்க சோழன் போலவே அவன் பேரனான அனபாய குலோத்துங் கனும் தமிழறிவு சிறக்கப் படைத்தவனாகவும் புலவர் பலரைக் கொண்டு தமிழ் வளர்ச்சிபுரிந்தவனாகவும் விளங்கினன். இவனது பேரவையைக் கவிச் சக்கரவர்த்தி கூத்தர் சேக்கிழார், பேராசிரியர் நேமிநாதர், தண்டியாசிரியர் முதலியோர் அலங்கரித்தனர். இக் குலோத்துங்கன்மீது பிள்ளைத் தமிழும் உலாவும் கூத்தராற் பாடப்பட்டன. பெரிய புராணமென்னும் சீரிய நூலைச் சேக்கிழாரைக் கொண்டு தமிழுலகிற்கு உபகரித்தவன் இச்சோழனே. பேராசிரியர் நேமிநாதர் இவன் சபையிலிருந்தவரென்பது தமிழ் நாவலர் சரிதையால் தெரிகிறது. இந்நேமிநாதர் தொல்காப்பியத்துக்கு உரையிட்ட ஆசிரியரோ என்ற சங்கையுண்டு. தண்டியலங்காரத்தைச் `செம்பியனவையத்து’ அதனாசிரியர் வகுத்தனரென்று அந்நூற் பாயிரங்கூறும். இச்செம்பியன் மேற்கூறிய அனபாயனே ஆதல்வேண்டும் என்பது இச் சோழனைப்பற்றியும் இவனதவைப் புலவரான கூத்தரைப் பற்றியும் தண்டியாசிரியர் ஆண்டுள்ள பாடல்கள் பலவற்றால் கருதப்படும்” (சா.த.க.ச.)

“இவர் சோழ அரசன் சபைக்கு வருதற்கு முன் வெண்ணெய் நல்லூரிலே சடையப்ப வள்ளலின் தந்தையாகிய சங்கரன் என்பவர்க்குத் துணையாக உதவி புரிந்து வாழ்ந்தாரென்றும், புதுவை என்னுமூரின்கண் கொடையாளி யாய் விளங்கிய காங்கேயன் என்பான்மீது நாலாயிரக் கோவை என்னும் நூல் செய்தனரென்றும் தெரிகிறது. விக்கிரமசோழன் மீதும் அவனுக்குப் பின்வந்த இரண்டாம் குலோத்துங்கன், இராசஇராசன் என்னும் அரசன்மீதும் ஒட்டக் கூத்தர் தனித்தனி உலாப்பாடியுள்ளார். இரண்டாவது குலோத்துங்கன்மீது பிள்ளைத்தமிழ் மாலை ஒன்று இவர் பாடினர். இவர் பாடிய பிறநூல்கள் தக்கயாகப் பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், இராமாயண உத்தரகாண்டம் என்பன. ஈட்டி எழுபது என்னும் நூல் பாடியவருமிவரே. இவர் விக்கிரமன், 2ஆம் குலோத்துங்கன், 2ஆம் இராசஇராசன் என்னும் மூவரசர் காலங் களிலும் வாழ்ந்தவர். விக்கிரமசோழன் மீது இவர் கலிங்கப் பரணி என்னும் ஒரு நூல் செய்தார்”. இது சயங்கொண்டார் செய்த கலிங்கத்துப் பரணியின் வேறானது. ஒட்டக்கூத்தர் குழந்தைகளின் தலைச் சிம்மாசனத்திலிருந்தது. காளி தீபம் பிடிக்க நூல் பாடியது போன்ற கதைகள் கதை சொல்வாரின் படைப்புகளாகும். குலோத்துங்க சோழன் கோவை இவர் நூல் என்பாரு முளர். சங்கர சோழனுலா, நாலாயிரக் கோவை முதலிய நூல்களு மிவர் செய்தன வென்பர். தக்கயாகப் பரணி கலிங்கத்துப்பரணியை யொப்பப் பல வுறுப்புக்களும் அமைந்துள்ளது. சொற்சுவை பொருட்சுவைகளில் மிகச் சிறந்தது; பல விடத்தும் சைவ சமயத்தின் அருமைகளையும் திருத்தொண் டின் மேம்பாட்டையும் பாராட்டிக் கூறுவது; இதிலுள்ள தாழிசைகள் 800. பழைய தமிழ் நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக்காட்டிச் சிறப்புற்று விளங்குவதான பழைய உரை யொன்று இதற்குண்டு. அவ்வுரையாசிரியர் இன்னாரென்று தெரியவில்லை.

ஒட்டியமுனி: ஒட்டிய நூல் செய்தவர்.*

ஒப்பிலாமணிப் புலவர்: (18ஆம் நூ. முற்.) இவர் தஞ்சைச் சரபோசி மன்னர் காலத்தவர். (1711-28) இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரின் மாணவர். இது இவர் தமது கும்பகோணப் புராணத்தில் ஆரியருக்கு வணக்கம் கூறுவ தால் தெரிகிறது. இவர் 4090 பாடலும் 101 சருக்கங்களுமுடைய சிவ ரகசிய மென்னும் நூல் இயற்றினார். இது சிவவழிபாடு, திருவைந்தெழுத்து, சரியை, கிரியை, யோகம், ஞானம் முதலியவற்றின் தன்மைகளைக் கூறுகின்றது.

ஒப்பிலாமணிப் புலவர் - 2: (19ஆம் நூ.) இவர் குமணன் கதையைச் செய்யுள் வடிவிற் செய்தவர்; சிவ இரகசியத்தைத் தமிழில் பெயர்த்த ஒப்பிலாமணிப் புலவரின் வேறானவர்.

ஒருசிறைப் பெரியனார்: (கி.மு. 40-) இவர் நாஞ்சிற்பொருநனைப் பாடியுள்ளார். இவர் பாடியவை: குறு. 272; நற். 121; புறம் 137.

ஒரூஉத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம் 275.

ஒரோடோகத்துக் கந்தரத்தனார்: (சங்க காலம்) ஒரோடகத்து என்பதும் பாடம். இவர் பாடியவை: அகம். 23, 95, 19; குறு. 155.

ஒல்லையூர்ந்த பூதப்பாண்டியன்: (கி.மு. 245-) இவர் மாமூலர் என்னும் புலவர் காலத்தவர். இவ்வரசன் இறந்த காலத்து இவன் மனைவி தீப்பாய்ந்தாள். ஒல்லையூரை வென்று கொண்டமையால் இவனுக்கு ஒல்லையூர்ந்த என்னும் அடை புணர்க்கப்பட்டது. இவன் பாடியவை: அகம். 25; புறம். 71.

ஒன்னாருழவர்: ஓரேருழவர் பார்க்க.

ஓதலாந்தையார்: (சங்காலம்) இவர் பாடியவை குறு. 12, 21, 329; ஐங். 301-400 (பாலைத்திணை).

ஓரம் போகியார்: (கி.மு. 220-) இவர் மருதத்திணைக்குரிய நூறு பாடல்களைப் பாடியுள்ளார். இவர் பாடியவை: அகம். 286, 316; ஐங். 1-100; குறு. 10, 70, 122, 127, 384; நற். 20, 360, புறம். 284.

ஓரிற் பிச்சையார்: (சங்ககாலம்) இவர் மகளிர் போலும். இவர் பாடியது: குறு. 277.

ஓரேருழவர்: (சங்க காலம்) இவர் பாடியது: புறம் 193.

ஓவாதகூத்தர்: (12ஆம் நூ) தஞ்சைச் சில்லா, நன்னிலம் தாலுக்கா பூந்தோட்ட மென்ற ஊரையடுத்துக் காவிரிக்கரைக் கண்ணுள்ள கூத்தனூரில் சரசுவ திக்குக் கோயிலொன்றுள்ளது. இக் கோயிற் கிணற்றருகிற்கிடந்த விக்கிரக பீடமான ஆதாரசிலையிற் கண்ட அரிய சாசனம் வருமாறு “இந்தக் கவிச் சக்கரவர்த்திகள் பேரனார் கவிப் பெருமாளான ஓவாதகூத்தர்” (சா-த. க.ச.)

ஒளவையார்: (கி.மு. 62) இவர் அஞ்சி அதிகமான்பாற் பேரன்புடையர். அவனளித்த நெல்லிக்கனியை உண்டு நெடுங்காலம் உயிரோடிருந்தவர். அதிகமான் ஒருகால் இவரைத் தொண்டை மானிடத்துத் தூதாக விடுப்பச் சென்றபோது தொண்டைமான் தன்படைக்கலச் சாலையைக் காட்டக் கண்டு அது தலைக்கீடாக அதிகனைப் புகழ்ந்து பாடியவர். மூவேந்தரும் கொடை வள்ளலாகிய பாரியின் பறம்பு மலையை முற்றியிருந்த பொழுது பாரி கிளிகளை விடுத்துப் புறத்திருந்த நெற்கதிரைப் பெற்று வாழ்ந்ததை இவர் சுருங்கக் கூறியுள்ளார் (அகம். 303). அவ்வரசர்கள் பாரியை வஞ்சித்துக் கொன்று அவனது மலை முதலியவற்றைக் கைக் கொள்ளலும் அதுகாறும் மணம் புரியா திருந்த பாரி மகளிரிருவரையும் அழைத்துச் சென்ற கபிலர் விச்சிக்கோ இளங்கோவேள் ஆகிய இருவரிடத்துஞ்சென்று இம்மகளி ரிருவரையும் மணம் புரிந்து கொள்கவென வேண்டினார். அவர்கள் மறுத்தனராக, உடனே தம்மையடுத்திருந்த அந்தணர்களின் பாதுகாவலில் அவர்களை வைத்து விட்டுச் சேர நாடு சென்றனர். அப்பால் அங்குவந்த ஒளவையார் பாரி மகளிர் நிலையை அறிந்து அவர்களையும் உடனழைத்துச் சென்று திருக்கோவலூரையடைந்து மலையமான் தெய்வீகனென்பானுக்கு மணம் புரிவித்து மீண்டார். இவராற் பாடப் பட்டோர் அஞ்சி, அவன் மகன் பொகுட்டெழினி, பாரி, பாண்டியன் உக்கிரப் பெருவழுதி, சேரமான், மாவெண்கோ, சோழன், இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கிள்ளி வளவன், தொண்டைமான், முடியன், கொண்கானத்து நன்னன் என்போர். இவர் பாடியனவாக நற்றிணையில் ஏழு, குறுந்தொகையில் 15, அகத்தில் 4, புறத்தில் 30, திருவள்ளுவ மாலையில் ஒன்று ஆக 60 பாடல்கள் உள்ளன. அவ்வையார் பார்க்க.

கங்குல் வெள்ளத்தார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 387.

கச்ச பாலையர்: (-?) இவர் காஞ்சிபுரத்திலிருந்த தமிழ் வித்துவான் (அபிதான சிந்தாமணி).

கச்சிக் காவலன்: (15ஆம் நூ.) திருமலைராயன் சமத்தான வித்துவான்களி லொருவர்.

கச்சி ஞானப்பிரகாசர்: (16ஆம் நூ.) இவர் காஞ்சிபுரத்திலுள்ள சைவமடத் தலை வராயிருந்தவர், கிருஷ்ணதேவராயர் காலத்தவர். இவர் அவர் மீது கிருஷ்ண தேவராயர் மஞ்சரிப்பா, கச்சிக்கலம்பகம் முதலிய நூல்களியற்றியவர்.

கச்சிப்பேட்டு இளந்தச்சனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 260. கச்சிப் பேடு, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓர் ஊர்.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியன: குறு. 213, 216.

கச்சிப்பேட்டு நன்னாகையார்: (சங்ககாலம்) இவர் பெண்பாலினர் போலும், இவர் பாடியவை: குறு. 30, 172, 180, 192, 197, 287.

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்: (சங்க காலம்) இவர் கம்மாள மரபினர். இவர் பாடியன: நற். 213, 144.

கச்சியப்ப சிவாசாரியார்: (11ஆம் நூ. இறுதி அல்லது 12ஆம் நூ. தொடக்கம்). இவர் காளத்தி அப்பருக்கு மகனாகக் காஞ்சிபுரத்திற் பிறந்த சைவப் பிராமணர் ; தமிழ் வடமொழிப் புலமை பெற்றவர்; குமர கோட்டத்தில் கோயிற் பூசகராக விருந்தவர். இவர் வடமொழிச் சிவசங்கர சங்கிதையை அடிப்படையாகக் கொண்டு கந்த புராண மென்னும் நூல் செய்தார். இது 10346 பாடல்க ளடங்கியது. கந்தபுராணத்தின் முதற்பாடலில் ‘திகட சக்கரன்’ என ழகர ளகரங்களுக்கு வேறுபாடின்றிப் புணர்ப்புக் காணப்படுகின்றது. கச்சியப்ப சிவாசாரியரின் மாணவர் கோனேரியப்ப முதலியாரென்றும் அவர் உபதேச காண்டம் செய்தாரென்றும் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார். கோனேரியப்ப முதலியார் கச்சியப்ப முனிவரின் மாணவரென இலக்கிய வரலாறுகாரர் (கா.சு.) கூறியுள்ளார்.

கச்சியப்ப முனிவர்: (18ஆம் நூ.) இவர் தொண்டை மண்டலம் திருத் தணிகையில் வேளாளர் குலத்திற் பிறந்து திருவாவடுதுறைச் சிவஞான முனி வரை ஆசிரியராகக் கொண்டு விநாயகபுராணம், காஞ்சி புராணம் இரண்டாங் காண்டம், ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடு தூது, தணிகையாற்றுப்படை, கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிற்றுப் பத்தந்தாதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ், திருத்தணிகைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருவானைக்காப் புராணம், பஞ்சாட்சரவந்தாதி, பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம் முதலியன பாடியவர். விசாகப் பெருமாள் ஐயர், சரவணப் பொருமாள் ஐயர் என்பவர் களின் தந்தையாகிய கந்தப்பையர் இவரிடம் கல்வி பயின்றவர். இவர் 1799இல் காலமானார்.

கஞ்சமலைச் சித்தர்: (15ஆம் நூ.) இவர் கொங்கு நாட்டிலுள்ள கஞ்சமலை யிலுறைந்த சித்தர்.

கடம்பனூர்ச் சாண்டிலியன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 307.

கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி: (சங்ககாலம்) இவர் பாடியவை: பரி. 15; புறம் 182.

கடலூர்ப் பல்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 380.

கடவுள் மாமுனிவர்: (18ஆம் நூ. பிற்.) இவர் கச்சியப்ப முனிவரின் நண்பர். இவர் செய்த நூல் திருவாதவூரடிகள் புராணம். சைமன்காசிச் செட்டி இதன் ஆறாவது சருக்கத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார் (1861). குமார தேவர் திருவாதவூரர் புராணத்துக்கு ஓர் உரை எழுதியுள்ளார் எனத் தெரிகிறது.*

கடிகை முத்துப் புலவர்: (1665-) இவர் திருநெல்வேலி எட்டையபுரம் குறுநில மன்னரின் அரண்மனைப் புலவராக விளங்கினர். இவர் செய்த நூல்கள்: சமுத்திர விலாசம், தலைவிதிவசம், காமரசமஞ்சரி, சிவகிரி வரகுணராம பாண்டிய வன்னியனார் திக்குவிசயம், திருப்புடை மருதூரந்தாதி, மதன வித்தாரமாலை முதலியன. சமுத்திர விலாசம் 100 பாடல்களுடையது; சிவகிரி சமீன்தாரைச் சமுத்திரத்தோடு ஒப்பிடுகின்றது.

கடியலூர் உருத்திரங் கண்ணனார்: (கி.மு. 220.) கடியல், ஓர் ஊர். உருத்திரன் இவரது தந்தை பெயர். கண்ணன் இவரது இயற்பெயர். இவர் அந்தண மரபினர் (தொல் பொருள். மர. 474. உரை) பத்துப் பாட்டுள் பெரும் பாணாற்றுப்படையும் பட்டினப்பாலையும் இவரால் பாடப் பெற்றவை. தொண்டைமான் இளந்திரையனும் சோழன் கரிகாற் பெருவளத்தானும் இவராற் புகழப்பெற்ற அரசர்களாவர்.

பட்டினப்பாலை பத்துப் பாட்டினுள் ஒன்பதாவது; 301 அடிகளை உடையது; வேற்று நாட்டுக்குச் செல்லத் தொடங்கிய தலைவன் தனது நெஞ்சை நோக்கித் தலைவியைப் பிரிந்துவாரேனென்று செலவழுங்கிக் கூறியதாகக் காவிரிப்பூம்பட்டினத்தையும் சோழன் கரிகாற் பெருவளத்தானது பராக் கிரமத்தையும் அவனது செங்கோலையும் பேரழகு பயக்கச் சிறப்பித்துப் பாடப் பட்டுள்ளது; பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்து இப்பாட்டைக் கரிகாற் பெருவளத்தான் கொண்டானென்பர். இதனை “தழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர்பொன், பத்தோடாறு நூறாயிரம் பெறப், பண்டு பட்டினப் பாலை கொண்ட தும்” எனக் கலிங்கத்துப்பரணி கூறும். பெரும்பாணாற்றுப்படை பத்துப் பாட்டி னுள் நான்காவது; ஐந்நூறு அடிகளையுடைய அகவற்பாவாலமைந்துள்ளது; பரிசில் பெறுதற்கெண்ணிய பாணனொருவனை அது பெற்றானொருவன் தொண்டைமா னிளந்திரையனிடத்தே ஆற்றுப்படுத்திய தாக அவ்விளந்திரை யனை இப்புலவர் பாடியது; இளந்திரையனென்பான் காஞ்சி நகரத்திருந்த ஓரரசன்.

கடியை நன்னியார்: (10ஆம் நூ.?) இவர் பழைய இலக்கண நூலாசிரியருள் ஒருவர் “கைக்கிளை மருட்பாவாகி வருங்கா, லாசிரியம் வருவதாயின் மேவா, முச்சீரெருத்திற்றாகி முடியடி, யெச்சீரானு மோகாரத் திறுமே” இது கடியை நன்னியார் செய்த கைக்கிளைச் சூத்திரம்”. (யா.வி.ப. 204).

கடுகுபெருந்தேவனார்: (சங்ககாலம்) இவர் பாடியவை: அகம் 5 1; குறு 255.

கடுந்தொடைக் காவினார்: (சங்ககாலம்) இவர் செய்த பாடல்: அகம் 109.

கடுந்தோட்கர வீரன்: (சங்க காலம்) இவர் பாடியது: குறு. 69.

கடுவனிள மள்ளனார்: (சங்ககாலம்) கடுவன் ஓர் ஊர் போலும். இவரே அகத்தில் தமிழ்க் கூத்தன் கடுவனிளமள்ளனாரெனவும், கடுவன் மள்ளனாரெனவும் கூறப்படுபவர். இவர் பாடியவை: நற். 150; அகம். 70; 256, 354; குறு. 82.

கடுவனிள வெயினனார்: (சங்ககாலம்) “இவர் பாடியவை: பரி. 3, 4, 5.

கடுவன் மள்ளன்: கடுவனிளமள்ளனார் பார்க்க.

கடுவெளிச் சித்தர்: (கி.பி. 15ஆம் நூ.?) இவர் சித்தர்களுள் ஒருவர். இவர் செய்த நூல் கடுவெளிச் சித்தர் பாடல்.

கடைப்பிள்ளை: கடைப்பிள்ளை அமிர்தபோதம் 125, கடைப்பிள்ளை அமிர்தயோகம்.*

கணக்காயனார்: (கி.பி. 25) தமிழரிச்சுவடிக்குத் தமிழ்க் கணக்கென்றும், நெடுங்கணக்கென்றும் பெயருண்டு: (ஆயம்-கூட்டம்); கூட்டமாகப் பிள்ளை களைச் சேர்த்து வைத்துத் தமிழ்க் கணக்கரைப் பயிற்றுவித்ததால் உபாத்தி யாயர் கணக்காயரெனப்பட்டனர். அங்ஙனமே இவரும் பிள்ளைகளுக்கு உபாத்தியாயராயிருந்தமையின் கணக்காயனாரெனப் பட்டார். குறு. 304ஆம் பாட்டின் கீழ் கணக்காயன் தத்தன் என்றெழுதியிருத்தலால் இவரது இயற் பெயர் தத்தன் என்பதே. இவர் நக்கீரரின் தந்தை. மதுரைக் கணக்காயர் பார்க்க.

கணக்காயன் தத்தனார்: (கி.பி. 25) இவர் நக்கீரரின் தந்தையாகிய கணக்காயரெனக் கருதப்படுவர். இவர் பாடியது: குறு. 304.

கணபதி ஐயர்: (19ஆம் நூ.) இவர் காஞ்சிபுரத்திலிருந்து சென்று யாழ்ப் பாணத்திலே வட்டுக் கோட்டையில் குடியேறியிருந்த பிராமணப் புலவர். இவர் இயற்றிய நூல்கள்: வாளபிமன் நாடகம், அதிரூபாவதி நாடகம், வண்ணை வைத்திலிங்கக் குறவஞ்சி, மலைய கந்தினி நாடகம், அலங் காரரூப நாடகம், வட்டுநகர்ப்பிட்டி வயற் பத்திரகாளி பதிகம் முதலியன. இவர் இற்றைக்கு 150 ஆண்டுகளின் முன் வாழ்ந்தவர்.

கணபதி தாசர்: (18ஆம் நூ. பிற்.) இவர் நூறு பாடல் கொண்ட நெஞ்சறி விளக்கம் என்னும் நூல் செய்தவர்.

கணபதிப் புலவர்: (மறைவு 1895) கணபதிப் பிள்ளை என்று அழைக்கப்பட்ட இவர் யாழ்ப்பாணத்திலே புலோலியிற் பிறந்தவர். இவர் தந்தை பெயர் வல்லிபுரநாத பிள்ளை. இவர் வடமொழி தென்மொழி வல்லுநராகி வில்கணீயம் என்னும் காப்பியத்தைத் தமிழில் மொழி பெயர்த்தார். இவர் இயற்றிய பிறநூல்கள் இரகு வமிசச் சுருக்கம். இந்திர சேனை நாடகம், வாதபுரேசர் கதை (மாணிக்க வாசகர் புராணம்) என்பன.

கணிபுன் குன்றனார்: (சங்க காலம்) புறநானூற்றில் இவர் பெயர் கணிபூங்குன்றன் என்றிருக்கின்றது. பூங்குன்றம் என்பது ஓர் ஊர். கணி, சோதிடஞ் சொல்வோன். இவர் பாடியன: நற். 226; புறம். 192.

கணி மேதாவியார்: (கி.பி. 5ஆம் நூ.) இவர் சைனர். இவர் தமிழாசிரியர் மகனார் மாக்காயனார் மாணாக்கர் கணி மேதாவியார் எனவும் அறியப்படுவர். இவர் இயற்றிய நூல் திணை மாலை நூற்றைம்பது. இதனுள் திணைக்கு முப்பது பாடல்களுள்ளன. ஏலாதியும் இவர் இயற்றியது.

ஏலாதியிற் கடவுள் வாழ்த்து உட்பட 81 பாடல்களுண்டு. ஏலம், இலவங்கம், சிறுநாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவ்வாறும் ஒன்று முதல் ஆறுவராகன் எடையாகச் சேர்ந்த சூரணம் உடலுக்கு நன்மை பயப்பதுபோல் இந்நூல் ஆறு நீதிகளைப் புகட்டி நன்மை பயப்பது.

கணேச பண்டிதர்: (1843 - 1881) இவர் யாழ்ப்பாணத்து வண்ணார் பண்ணையிற் பிறந்த வேதியர். இவர் இயற்றியநூல்: இளசைப் புராணம்.

கண்டராதித்தர்: (11ஆம் நூ.) இவர் திருவிசைப்பாப்பாடிய புலவர்களு ளொருவர். இவர் 10ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதற் பராந்தக சோழன் திருமகனார். (சா.த.க.ச.)

கண்ணகனார்: (கி.மு. 25-) இவர் கோப்பெருஞ்சோழர் பொருட்டுப் புலவர்கள் வடக்கிருந்தமையைக் குறிப்பிட்டுள்ளார். இவர் பெயர் கண்ணனாகனார் எனவும் காணப்படுகின்றது. இவர் இயற்பெயர் நாகன். கண்ணனுடைய மகனாதலின் கண்ணனாகனார் எனப்பட்டார். இவர் பாடியன: நற். 79; புறம். 218; பரி. 21ஆம் பாடலுக்கு இசைவகுத்தவரு மிவராகலாம்.

கண்ணகாரன் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 143.

கண்ணங் கூத்தனார்: (கி.பி. 1ஆம் நூ.) கண்ணனென்பது இவர் தந்தையின் பெயர். இவர் பாடிய நூல் கார் நாற்பது தலைமகனைப் பிரிந்த தலைமகள் கார் காலத்திலே அவன் மீள்வதை எதிர்பார்த்திருப்பதைக் கூறுவதே இந் நூலின் பொருளாகும். கார் நாற்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலொன் றாகும்.

கண்ணங் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 156.

கண்ணஞ் சேந்தனார்: (கி.மு. 100.) இவர் சாத்தந்தையார் மகனார் கண்ணஞ் சேந்தனாரெனவு மறியப்படுவர். இவர் இயற்றியது கீழ்க்கணக்கு நூல்களிலொன்றாகிய திணைமொழியைம்பது. இது ஐந்திணைக்கும் பப்பத்துப் பாட்டு அடங்கியது; இதற்குப் பழைய உரை உளது. இவர் போர்வைக் கோப் பெருநற் கிள்ளியைப் பாடிய சாத்தந்தையாரின் புதல்வர்.

கண்ணம்புல்லனார்: (சங்ககாலம்) கருவூர் கண்ணம் புல்லனார் பார்க்க.

கண்ணனாகனார்: இவர் பரிபாடல் 21ஆம் பாட்டுக்கு இசை வகுத்தவர். கண்ணகனார் பார்க்க.

கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 107, 244.

கண்ணன் சேந்தனார்: கண்ணஞ் சேந்தனார் பார்க்க.

கண்ணுடைச் சம்பந்தமூர்த்தி தேசிதர்: நியதிப்பயன்*

கண்ணுடைய வள்ளல்: (18ஆம் நூ. முற்.) இவர் சீகாழியில் வாழ்ந்த சைவத் துறவி; ஒழிவிலொடுக்கம், கச்சி மாலை, மாயப் பிரலாபம் அதிகாரப்பிள்ளை அட்டவணை, அத்துவைதக் கலிவெண்பா, அதிரகசியம், குருமரபு சிந்தனை, ஞானசாரம், ஞானவிளக்கம், சித்தாந்த தரிசனம், சிவஞானப் பிரகாசம், சுருதி சர்வ விளக்கம், திருமுகப்பாசுரம், உபதேசமாலை, தேவார உரை முதலிய நூல்கள் செய்தவர். ஒழிவிலொடுக்கத்துக்குத் திருப்போரூர்ச் சிதம்பர சுவாமிகள் உரை செய்துள்ளார். ஒழிவிலொடுக்கத்தில் 253 வெண்பாக் களுள்ளன.

கதக்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியன: குறு. 88, 94.

கதிர்வேலு நாடார்: இவர் பகையத மென்னும் படுதோஷி விலாசம் பாடியவர் (சென்னை 1905.)

கதிர்வேல் கவிராச பண்டிதர்: சுப்பிராய முதலியார், முத்திராச கவிராயர், கதிர்வேல் கவிராச பண்டிதர் என்னும் மூவரும் சேர்ந்து மாபாரத கீர்த்தனை பாடியுள்ளார்கள் (1905).

கதிரைவேற் பிள்ளை. கு: (1829-1904) இவர் யாழ்ப்பாணத்து உடுப்பிட்டியினர். இவர் தந்தை பெயர் குமாரசுவாமி முதலியார். இவர் அண்மையில் மறைவெய்திய கௌரவ பால சிங்கத்தின் தந்தையார்; ஊர் காவற்றுறை நியாய மன்றத்தில் நீதிபதியாகக் கடமையாற்றியவர். இவர் தொகுத்த ‘தமிழ்ச்சொல் அகராதி’ மதுரைத் தமிழ்ச் சங்கத்தாரால் அச்சிடப்பட்டது. இவ்வகராதியின் முன்னிரண்டு பகுதிகளுமே இவர் தொகுத்தன. எஞ்சிய பகுதி தீக்கிரை யாயிற்று. இவர் உவைமன் கதிரைவேற்பிள்ளை என அறியப்பட்டார்.

கதிரைவேற் பிள்ளை, தம்பலகாமம்: இவர் திருக்கோண மலையிலுள்ள தம்பலகாமமென்னுமூரினர். இவர் பாடியது கோணேசர் பதிகம். (வல்லு வெட்டித் துறை 1889).

கதிரைவேற் பிள்ளை நா.: (1844-1907) இவர் யாழ்ப்பாணத்துப் புலோலியூரிற் பிறந்தவர்; மரபில் வேளாளர். தந்தையார் பெயர் நாகப்பிள்ளை. இவர் வட மொழி தென் மொழி பயின்றவர். சொற்பொழிவாற்றுவதில் இணையற்றவர்; அட்டாவதானம் சதாவதானம் செய்வதில் கைவந்தவர். இவர் செய்த நூல்கள்: கூர்ம புராண விரிவுரை, பழநித்தல புராணவுரை, சைவ சந்திரிகை, சைவ சித்தாந்தச் சுருக்கம், சிவாலயமகோற்சவ விளக்கம், சுப்பிரமணிய பராக்கிரமமென்பன. இவரோர் அகராதியும் தொகுத் தெழுதி அச்சிட்டுள்ளார். இது யாழ்ப்பாண அகராதி எனப்படும்.

கந்தசாமி சாமிகள்: (-?) கொங்கு நாட்டுச் சிரவணம் பட்டி மடத்தினர்; கௌசைப் புராணம் முதலிய 66 நூல்கள் செய்தவர். (கொ.பு.)

கந்தசாமிக் கவிராயர்: (19ஆம் நூ. பிற்.) இவர் சேற்றூர் இராமசாமிக் கவிராயரின் புதல்வர். இவர் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ் நூற்பரி சோதகராயிருந்து தனிச் செய்யுட்

சிந்தாமணி என்னும் நூல் இயற்றியவர்.

கந்தசாமிக் கவிராயர்: (20ஆம் நூ.) இவர் வடவழி என்னுமூரினர்; அதிசய நாடகம் இயற்றியவர். (கொ.பு.)

கந்தசாமிக் கவிராயர்: (-?) இவர் கொங்கு நாட்டு வீராச்சி மங்கலத்தினர்; சின்னக் கறுப்பண்ண கவிராயரின் புதல்வர். வேளாளர் புராணம் பாடியவர். இந்நூல் 1907இல் முத்துச்சாமி உபாத்தியாயரால் பதிக்கப்பட்டது. (ஈரோட்டு) (கொ.பு.)

கந்தசாமிக் கவிராயர், உடுமலைப்பேட்டை: இவர் கம்பராமாயணம் ஆரணிய காண்டத்துக்கு உரையெழுதியவர் (1903), அரசன் சண்முகனாரியற்றிய மாலைமாற்று மாலையை உரை எழுதிப் பதித்தவர். (1900.)

கந்தசாமிக் கவிராயர், முகவூர்: (20ஆம் நூ.) கொங்கு நாட்டுப் புலவராகிய இவர் வேத நாயகியம்மன் பிள்ளைத் தமிழ் என்னும் நூல் செய்தவர். (கொ.பு.)

கந்தசாமிப் பிள்ளை, ஆ. மதுரை: இவர் அல்லி அரசாணி நாடகம் இயற்றியவர் (சென்னை 1902).

கந்தசாமிப் பிள்ளை, திருச்சினாப்பள்ளி, ஆண்டார் வீதி: இவர் மாட்டின் அனுபோக வைத்திய சிந்தாமணி என்னும் நூலை வெளியிட்டவர். (1895).

கந்தசாமிப் பிள்ளை, பாலைக்காடு: இவர், பால சுப்பிரமணியக் கவிராயர் செய்த பழநித் தலபுராணத்தை வசன நடையில் எழுதியவர் (1905).

கந்தசாமிப் புலவர்: (17ஆம் நூ. பிற்.) இவர் திருப்பூவணத்தில் வாழ்ந்த சைவர். இவர் பாடியவை திருப்பூவணப்புராணம், பூவணஉலா, பூவணவண்ணம், ஆப்பனூர்ப் புராண மென்பன. திருப்பூவண புராணம் 1621இல் பாடப்பட்டது.

கந்தசாமிப் புலவர், மதுரை: இவர் தரும நூல், மிருதி சந்திரிகை, (1826) விவகார சங்கிரகம் (1857). முதலிய நூல்கள் செய்தவர்.

கந்தசாமி முதலியார், களத்தூர், வேதகிரி: இவர் அகத்தியர் வாதகாவியம், அகத்தியர் நாலுகாண்ட வைத்தியம், ஆத்ம இரட்சாமிர்தம் என்னும் நூல்களை அச்சிட்டவர் (1903, 1896, 1874).

கந்தப் பிள்ளை: (19ஆம் நூ. முற்.) இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூரில் 1766இல் பிறந்தார். இவர் தந்தையார் பெயர் பரமானந்தர். இவருடைய மூத்த புதல்வரே ஆறுமுக நாவலர். இவர் பாடியவை: இராம விலாசம், சந்திரகாச நாடகம், ஏரோது நாடகம், கண்டி நாடகம், நிக்கிலா° நாடகம், இரத்தினவல்லி நாடகம், நல்லை நகர்க்குறவஞ்சி என்பன.

கந்தப்பிள்ளைச் சாத்தனார்: (கி.மு. 40-) இவர் கருவூர்க் கந்தப் பிள்ளையின் புதல்வர் எனக் கருதப்படுவர். இவர் பாடியவை: நற். 343, 135; அகம் 350; குறு. 265, 380, 64; புறம். 168. கருவூர்க் கந்தப் பிள்ளை பார்க்க.

கந்தப் பிள்ளை, வேலணை: இவர் தத்துவப் பிரகாசம் என்னும் நூலை அச்சிட்டவர் (1893).

கந்தப் புராணம் கச்சியப்பர்: (17ஆம் நூ.) இவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்தவர்; கந்தபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர். அந்தகக்கவி வீரராகவரின் ஆசிரியர்.

கந்தப் பையர்: (18ஆம் நூ. பிற்.) இவர் சிவஞான முனிவரின் மாணவரான கச்சியப்பரின் மாணவர்; விசாகப் பெருமாளையர் சரவணப் பெருமாளையர் என்போரின் தந்தை. இவர் செய்த நூல்கள்: தணிகை யுலா, தணிகைக் கலம் பகம், தணிகை யந்தாதி, தணிகைப் பிள்ளைத் தமிழ், தணிகாசல வனுபூதி, கடாவிடை உபதேசம் முதலியன. பழமலை யந்தாதி உரை, செந்தினீ ரோட்டக யமகவந்தாதி யுரை முதலிய பல உரைகளும் இவராற் செய்யப் பட்டன. இவர் வீரசைவ மதத்தினர்.

கந்தப்பையர், தென்மாதை: இவர் வெள்ளி கந்தப்பையர் எனவும் அறியப் படுவர். இவர் செய்த நூல் சாரங்கதரயக்சகானம்.*

கந்தாடையப்ப தேவர்: இவர் சரவண தேசிகரின் சீடர், கடாவிடை உபதேசம் என்னும் நூல் செய்தவர். கடாவிடை உபதேச நூல் செய்தவர் கந்தப்பையர் என சென்னை அரசாங்க கையெழுத்துப் பிரதி அகர வரிசையில் (An alphabetical index of Tamil manuscripts in the government oriental manuscripts library Madras - 1932) காணப்படுகின்றது.*

கந்தாடையப்பன் (ஆண் பிள்ளை): பெரிய திருமுடி அடைவு.*

கந்தாடையாண்டான்: மந்திர ரத்தினம்*

கந்தரத்தனார்: உரோடோக்கத்துக் கந்தரத்தனார் பார்க்க.

கந்தியார்: (12ஆம் நூ.) இவர் திருநெல்வேலி மாவட்டத்திலே திருக்குருகூருக் கண்மையிலுள்ள திருப்பேரையிற் பிறந்தவர்; வைணவ மதத்தினர். இவர் 445 பாடல்கள் பாடிச் சிந்தாமணியில் இடைச் செருகலாகச் சேர்த்துள்ளார். இவர் பரிபாடலில் இடைச் செருகலாகச் சேர்த்திருந்த பாடல்கள் பரிபாடலுக் குரை எழுதுமுன் பரிமேலழகராற் கையாளப்பட்டன. இவர்பெண் பாலினர்; பரிமேலழகர். நச்சினார்க்கினியர் என்போருக்கு முன் இருந்தவர்.

கபாலமூர்த்திப் பிள்ளை: இவர் சிவசுப்பிரமணியக் கடவுள் திருமுகவுலா, சித்திரக்கவிப் பஞ்சகம், கம்பை வழி நடைக் கும்மி முதலிய நூல்கள் பாடியவர். (வேலூர், 1902).

கபில தேவர்: கபிலர் பார்க்க.

கபிலர்: (கி.மு. 87-) இவர் பாண்டி நாட்டிலுள்ள வாதவூரிற் பிறந்த அந்தணர். இவர் பாடல்கள் பெரும்பாலும் குறிஞ்சித் திணைக்குரியன. இவர் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப்பத்துள் ஏழாம்பத்திற் பாடி நூறாயிரம் பொற்காசும் நற்றாவென்னும் குன்றமேறி நின்று கண்ணிற் கண்ட நாடனைத் தும் பெற்றவர். பத்துப்பாட்டிற் குறிஞ்சிப்பாட்டு, ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைக் குறித்து நூறு பாடல்கள், கலித்தொகையுள் குறிஞ்சித் திணை, இன்னா நாற்பது என்பவற்றை இவர் பாடியுள்ளார். நற்றிணை, குறுந்தொகை, அகம், புறம் முதலிய நூல்களுள்ளும் இவர் பாடல்கள் உள்ளன. இவர் பாரியின் உயிர்த் தோழனாகவிருந்தார். மூவேந்தர் பாரியின் பறம்பு மலையை முற்றுகை செய்து கைப்பற்றியபின் அவனையும் வஞ்சித்துக் கொன்றனர். இவர் பாரியின் மகளிரை விச்சுக் கோபால் அழைத்துச் சென்று அவரை மணக்குமாறு வேண்டினர். அவன் அதை மறுக்கவே அவர் அவர்களை இளங்கோவேள் பால் அழைத்துச் சென்று அவனை மணக்கும்படி வேண்ட அவனும் மறுத்தான். பின்னர் அவர் எவ்விபாற் சென்று வேண்ட அவன் மறுத்த காலை அவரை அவர் பார்ப்பார்க்கு மணஞ் செய்வித்த பின் வடக்கிருந்து உயிர் விட்டார்.

சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்னும் நூல் கூறுவது வருமாறு: இங்ஙனமே கடைச் சங்கத்தில் விளங்கிய கபிலர் பெருமானைப் பற்றிச் சாசன மூலம் அறியக் கிடக்கும் அரிய செய்தியும் உண்டு. வேள் பாரியின் ஆருயிர்த் தோழரான இப் பெரியார் இவ்வள்ளல் இறந்தபின் அவன் மகளிரை அழைத்துச் சென்று இருங்கோவேள், விச்சிக்கோன் என்ற கோக்குமார்களை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்ட அவர்களிருவரும் மறுத்தனராக, பின் அவர் ஆம் மகளிரைப் பார்ப்பார்ப் படுத்துச் சென்றனர் என்று புற நானூறும் (200, 202, 293), திருக்கோவலூர் மலையமானுக்குப் பாரிமகள் மணம் புரியப்பட்டனள் என்று தமிழ் நாவலர் சரிதையும் கூறுகின்றன. இவ்வாறு முன்னோர் கூறிய வரலாற்றிலுண்மையை 11ஆம் நூற்றாண்டுச்சாசனமொன்று ஆதரித்து நிற்றல் அறியத்தகும். முதல் இராச இராச சோழன் காலத்ததும் திருக்கோவலூர்க் கோயிலுள் அமைந்துள்ளதுமாகிய அச்சாசனத்தின் பகுதி வருமாறு, “மொய் வைத்தியலு முத்தமிழ்க் கபிலன், மூவரின் டடக்கைப் பாரிதன் னடைக்கலப், பெண்ணை மலையற்குதவிப் பெண்ணை, அலைபுன லழுவத் தந்தரிட் சஞ்செல, மினல்புகும் வீடுபே றெண்ணிக், கனல்புகும் கபிலர்க் கல்லது புனல்வளர், பேரேட்டான வீரட்டானம், அனைத்தினு மநாதியானது,” இவ்வடிகளினின்று பாரி மகளிருள் ஒருத்தியை மலையமானுக்கு மணம் புரிவித்த பின் கபிலர் தீப்பாய்ந்தனரென்பது தெரியலாம். அங்ஙனம் உயிர் நீத்ததலம் நடுநாட்டுத் திருக்கோவலூரே என்றும், அவ்வாறு உயிர் துறத்தற்கு அப்புலவர் தீ வளர்த்த பாறை பெண்ணையாற்றங் கரையில் கபிலக்கல் என்று பெயர் பெற்ற துறையென்றும் 11ஆம் நூற்றாண்டுக்குமுன் தமிழ் நாட்டு வழக் கிருந்ததென்பது அறியப்படும். இதனால் பாரி மகளிரைப் கபிலர் பார்ப்பார்ப் படுத்து’ சென்றனர் என்ற புறநானூற்றுக் குறிப்பிற்கு ஆம்மகளிரை அவர் பார்ப்பாரிடம் அடைக்கலம் படுத்திச் சென்றாரென்பதே பொருளென்பது தெளிவாகின்றது. வடக்கிருந்தனர் கபிலரென்பது “பசைந்தாரிற் றீர்தலிற் றீப்புகுதல் நன்று” என்றபடி பாரி பிரிவுக் காற்றாது “இடையில் காட்சி நின் னொடு, உடனுறை வாக்குக உயர்ந்த பாலே” என்று கூறித் தீப்பாய்ந்து அவர் உயிர் துறந்த செய்தியைக் குறிப்பதாம். இதனால் ஊருக்கு வடதிசையில் ஆற்றிடைக்குறை போன்ற ஒதுக்கிடங்களில் இருந்து பட்டினி நோன்பால் உடலை ஒறுத்து உயிர்விடுதல் போலவே தீப்பாய்ந்து உயிர் நீத்தலும் வடக்கிருத்தலாகிய பிராயோ பவேச முறைகளில் ஒன்று என்பது அறிப்படுகின்றது. இனிக் கபிலர் பாண்டி நாட்டில் திருவாதவூரிற் பிறந்தாரென்பது “நீதியார் மதூக நிழல்நெட்டிலை யிருப்பை’ என்றார், காதல் கூர் பனுவல்பாடுங் கபிலனார் பிறந்த மூதூர், சோதி சேர் வகுள நீழற் சிலம்பொலி துலங்கக் காட்டும், வேத நாயகனார் வாழும் வியன்றிரு வாதவூரால்” என்ற பெரும் பற்றப் புலியூர் நம்பி வாக்கால் தெரியலாம். இத் திருவாதவூர் பறம்பு நாட்டதாகும்.

இவரருளிச் செய்தனவாக 278 பாடல்கள் இப்பொழுது உள்ளன. அவற்றுள் அகவற்பாக்கள் 207, (நற். 20; குறு. 29; ஐங். 100; பதிற். 10; அகம். 16; புறம் 30; குறிஞ்சி 1; ‘நெட்டிலை இருப்பை’ என்பது ஒன்று) வெண்பா 42 (திருவள் ளுவ மாலையிலுள்ள ‘தினையளவு’ என்பது 1. இன்னா நாற்பதிலுள்ள பாடல் 41), கலித்தொகையிலுள்ள கலிப்பா 29.

11ஆம் திருமுறையில் வந்துள்ள மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவிரட்டை மணிமாலை, சிவபெருமான் திருவந் தாதி முதலியவற்றைச் செய்த கபில தேவநாயனா ரென்பவர் பிறிதொருவராவர். இவர் காலம் 11ஆம் நூ. அளவில். கபிலர் பாட்டியல் என்னும் நூல் செய்ததாகவும் அவற்றுட் சில சூத்திரங்கள் பன்னிரு பாட்டியலிலுள் ளனவாகவும் வழங்கும்.

குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டில் 8வது; 301 அடிகளுடையது; தலைவியி னது வேற்றுமை கண்டு வருந்திய செவிலிக்கு அறத்தோடு நிற்கும் பாங்கி கூற்றாக ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழறிவுறுத்தற்குக் கபிலர் பாடியது; இது மலை வளங்களையும் இல்லற முறைமைகளையும் தலைவனும் தலைவியும் தம்முள் வைக்கத் தகும் அன்புடைமையையும் கற்பின் இன்றியமையாமை யையும் கூறும். இதில் 99 மலர் விசேடங்கள் கூறப்பட்டுள்ளன. இதனைப் பெருங்குறிஞ்சி என்றும் வழங்குவர்.

கமலமுனி: (-?) இவர் போகர் மாணாக்கரிலொருவர்; பிறப்பாற் கம்மாளர். இவர் செய்த நூல்கள் கமலமுனி 300, இரேகை சாத்திரம் கமலமுனி ஞானச் சுருக்கம் 15.* என்பன.

கமலைஞானப் பிரகாசர்: (16ஆம் நூ.) கமலை என்பது திருவாரூர். இவர் திருவாரூரிற் பிறந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: அனுட்டான அகவல், புட்பவிதி, பூமாலை, சிவபூசை அகவல், பிரசாத மாலை, சிவனந்த போதம், ஞானப்பள்ளு (திருவாரூர் பள்ளு) அத்துவாக்கட்டளை, அண்ணாமலைக் கோவை, ஆயிரப் பாடல், திருமழுவாடிப் புராணம், திருவானைக்காப் புராணம். மழுவாடிப் புராணம் 1565இல் செய்யப்பட்டது. இவர் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர். பழுதை கட்டிய ஞானப்பிரகாசரின் மாணாக்கர். இவருக்குச் சத்திய ஞான பண்டாரம் என்பது இன்னொரு பெயர்.

கமலை வெள்ளியம்பல வாண முனிவர்: முதுமொழி மேல் வைப்பு. (1945)

கம்பர்: (12ஆம் நூ.) இராச இராசேந்திரன், வீர ராசேந்திரன், திரிபுவன வீரன் எனப்பட்ட
மூன்றாம் குலோத்துங்கன் (1178-1216) காலத்திலேயே கம்பர் விளங்கினார் எனச் சாசன தமிழ்க் கவி சரிதம் கூறும். “கவிச் சக்கரவர்த்தி யாகிய கம்ப நாடர் விளங்கியதும் இவன் ஆட்சிக்காலமேயாகும். இப்புலவர் 12ஆம் நூற்றாண்டிறுதியில் தம் காப்பியத்தை இயற்றி முடித்தார். இவ்வாறு கம்பர், குணவீர பண்டிதர், பவணந்தி, குலோத்துங்கன் கோவை யாசிரியர் முதலியோர் விளங்கியது. இச்சோழனது ஆட்சிக்காலத்தே”. (சா. த. க. ச.) புறத்திரட்டில் இராமாயணப் பாடலும் அதற்கு முற்பட்ட இலக்கியங்களிலுள்ள பாடல்களும் காணப்படுதலாலும் ஒட்டக்கூத்தர் பாடல் காணப்படாமை யாலும் கம்பர் 10ஆம் நூற்றாண்டினர் எனக் கூறுவாருமுளர். இவர் சோழ நாட்டில் திருவழுத்தூரில் உவச்சர் குலத்தில் பிறந்தவர். கம்பர் என்னுஞ் சொல் ஏகம்பர் என்பதன் முதற்குறை எனவும் கருதப்படும். இவர் குலத்தினர் காளிகோயிற் பூசனைக்குரியவர். திருவெண்ணெய் நல்லூர் சடையப்ப வள்ளல் இவரை ஆதரித்து வளர்த்தார். இவர் இராமாயணத்தில் ஆயிரம் பாட்டிற் கொருமுறை இவரைப் புகழ்ந்து பாடினார். இவர் பாடி “இராமாயணம் திருவரங்கப் பெரிய கோயிலின் கண் பங்குனி உத்தரநாளில் அரங்கேற் றப்பட்டது. ஏரெழுபது, திருக்கை வழக்கம், சடகோபரந்தாதி, சரசுவதியந்தாதி முதலியன இவர் பாடியவை. கம்பராமாயணப் பாடல்கள் முன் பின் 10,000 வரையில் “இன்னும் பல வடியால் வந்த பஃறொடை வெண்பா இராமாயண மும், புராண சாகரமு முதலாக வுடைய செய்யுட்களிற் கண்டு கொள்க” (யா.வி.ப. 238) என்பதனால் கம்பர் காலத்துக்கு முன் வெண்பா வானியன்ற இராமாயண மொன்றிருந்ததெனத் தெரிகிறது. இவர் கல்வியிற் பெரியன் கம்பனென்று ஆன்றோரால் சிறப்பித்துக் கூறப்படுவர். நன்னூல் விருத்தி யுரையாசிரியராகிய சங்கர நமச்சிவாயர் “திணை நிலஞ்சாதி” என்னும் சூத்திர உரையில் “கரியன் கம்பன்” என்று உதாரணங் காட்டியுள்ளார்.

கயத்தூர் கிழார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 354.

கயமனார்: (கி.மு. 180) இவர் பரணர் காலத்து விளங்கிய புலவர். கயத்தில் முழுகும் பெண்களது கண்களை உப்பங்கழியில் நீர் மிகுந்த இடத்து மலரும் நெய்தற் பூவுக்கு உவமித்தமையால் (குறு. 9) இப்பெயர் பெற்றனர். இவர் பாடியன: அகம் 7, 17, 145, 189, 195, 219, 221, 259, 275, 321, 383, 397; குறு. 9, 356, 378. 396; நற். 12, 198. 279, 293, 305, 324; புறம். 254.

கயாகரர்: கயாகர நிகண்டு செய்தவர்.

கயிலாயச் சட்டைமுனி: கயிலாயச் சட்டைமுனி வாத நூல் 1000.*

கரபத்திர யோகீசுவரர்: இவர் சாம்பிரதாய சிந்தனைகள் என்னும் வேதாந்த நூல் செய்தவர். (1901.)

கருங்குழலாதனார்: (கி.மு. 200-) இவர் கரிகாற் பெருவளத்தானின் வீரம் கொடை முதலியவற்றையும், அவனிறந்தபோது உரிமை மகளிர் அணிகலன் களைந்தமையையும் குறிப்பிட்டுள்ளார். இவர் பாடியன: புறம் 7, 224.

கருணாகரன்: இவர் திருவொற்றியூர் தேப் பெருமாள் குமாரர்; வேதபுரித்தல புராணம் பாடியவர்.*

கருணானந்த சுவாமி: இவர் மதனகாமராசன் கதை, நந்தன் கீர்த்தனை, பவளக்கொடி மாலை முதலிய நூல்களைப் பார்வையிட்டுப் பதித்தவர். (1880, 1870, 1885.)

கருணைப் பிரகாசர்: (17ஆம் நூ.) இவர் காஞ்சி குமாரசுவாமி தேசிகரின் குமாரர்; துறைமங்கலம் சிவப்பிரகாச தேசிகரின் இளைய சகோதரர். இவர் தருமபுர ஆதீனத்து வெள்ளியம்பலவாண சுவாமிகளிடத்து இலக்கண இலக்கியங் கற்று வீரசைவ தீக்கை பெற்று இட்டலிங்க அகவல், சீகாளத்திப் புராணம் (சீகாளத்திச் சருக்கம் வரை) முதலியன இயற்றி 18வது வயதில் காலமானவர்.

கருணையர்: சிதம்பரநாதர் பதிகம் (வீரோதி.)

கருணையானந்த சுவாமி: (-?) குருநாத சதகம் பாடியவர்.

கருப்பையா பாவலர்: (20ஆம் நூ.) இவர் கோட்டாம்பட்டியில் 1844இல் பிறந்தவர். இவர் பாடிய நூல்கள் திருச்செந்தில் திரிபந்தாதி, ஓரெழுத்தந்தாதி, நாமகளிரட்டை மணி மாலை, ஐந்திணைக் கோவை, திருக்கோட்டாற்றுக் கலம்பகம் (1898), விக்டோரியா பேரரசிரியார் வரலாறு முதலியன.

கரும்பிள்ளைப் பூதனார்: (சங்ககாலம்) இவர் பரிபாடல். 10ஆம் பாடல் செய்தவர்.

கருவூர் ஓதஞானி: (சங்ககாலம்) இவர் செய்த பாடல்; குறு. 71, 227.

கருவூர் கண்ணம்பாளனார்: (சங்ககாலம்) இவர் பெயர் கண்ணம்பாணனா ரெனவுங் காணப்படுகின்றது. இவர் பாடியவை: அகம் 180, 263; நற். 148.

கருவூர் கிழார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 170.

கருவூர்க் கண்ணம் புல்லனார்: (சங்ககாலம்) இவர் பாடியவை: அகம். 63; நற். 159.

கருவூர்க் கந்தப் பிள்ளை: (கி.மு. 40-) இவர் நாஞ்சிற் பொருநனைப் பாடியுள்ளார். இவர் பாடியவை: குறு. 265, 380; நற். 135; புறம். 380 என்பன. இவர் பெயர் கருவூர்க் கதப்பிள்ளை எனவும் காணப்படுகின்றது.

கருவூர்க் கந்தப் பிள்ளைச் சாத்தனார்: (சங்ககாலம்) இவர் பெயர் கருவூர் கதப்பிள்ளைச் சாத்தனார் எனவும் காணப்படுகின்றது. இவர் பாடியவை: அகம் 309; குறு. 64; நற். 343; புறம் 168.

கருவூர்க் கலிங்கத்தார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம் 183. நீருண்ட மேகம் கருவுற்ற பிடிபோல இடந்தோறும் உலவுகின்றதென இவர் சுவைபடக் கூறியுள்ளார்.

கருவூர்க் கோசனார்: (சங்ககாலம்) இவர் செய்த பாடல்: நற். 214.

கருவூர்ச்சித்தர்: கருவூரர் நொண்டிமாலை, கருவூரர் சூத்திரம் 116, கருவூரர் வெண்பா.*

கருவூர்ச் சேரமான் சாத்தன்: (சங்ககாலம்) இவர் செய்த பாடல்: குறு. 268.

கருவூர்த் தேவர்: (11ஆம் நூ.) இவர் கொங்கு நாட்டுத் தலங்களுள் ஒன்றாகிய கருவூரில் வாழ்ந்தவர். இவர் கருவூர்ச் சித்தர் எனவும் அறியப்படுவர். இவர் திருக்களந்தை ஆதித்தேச்சரம், கீழ்க்கோட்டூர் மணியம்பலம், திருமுகத் தலை, திரைலோக்கிய சுந்தரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, திருவிடை மருதூர், தஞ்சை இராச இராசேசுரம், கங்கைகொண்ட சோழேசுரம் என்னும் கோயில்களுக்குத் திருவிசைப்பாப் பதிகங்கள் பாடியுள்ளார்.

கருவூர் நன்மார்பனார்: (சங்ககாலம்) இவர் செய்தபாடல்: அகம் 277. தயிர் கடையும் ஓசை புலி முழக்கம் போலும் என்றும், பனையின் செறும்பு பன்றிமயிர் போலுமென்றும், கோழியின் எருத்துச் சிவந்த மயிர் முருக்கின் பூக்கொத்துப்போலுமென்றும் வருணித்துள்ளார்.

கருவூர்ப் பவுந்திரன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 162.

கருவூர்ப் பூதஞ்சாத்தனார்: (சங்ககாலம்) இவர் பெயர் கருவூர்ப் பூதனார் மகனார் சாத்தனார் எனவுங் காணப்படுகின்றது. இவர் செய்த பாடல்: அகம் 50. அன்றில் துணையைப் பிரிந்து துயிலாதென்று இவர் கூறுகின்றார்.

கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார்: (கி.மு. 25-) இவர் கோப்பெருஞ் சோழனைப் பாடியவர். இவர் பாடியது: புறம். 219.

கலியப்பெருமாள் பிள்ளை, தஞ்சை. (20ஆம் நூ.) இவரியற்றிய நூல்கள் ; சிற்றின்ப சிரோமணி, திருமழுவாடிப் புராணவசனம், நட்ட சாதகதீபிகை. (ச.கை.)

கலியாண சுந்தர முதலியார், பூவை: (20ஆம் நூ.) இவர் தாயுமானவர் பாடற் றிரட்டு உரை, பட்டினத்தார் பாடற்றிரட்டு உரை, சித்தாந்த வசன பூஷணம் முதலியன எழுதியுள்ளார். திருவருட்பா, திருவேற்காட்டுப் புராணம், சிவப்பிரகாசம், சித்தாந்தக்கட்டளை முதலிய நூல்களைப் பதித்தார் (1892, 1893, 1890). இவர் வசன நூல்கள் எழுதுவதில் வல்லவர். சைவ சித்தாந்த ஆக்கத்தின் பொருட்டுப் பெரிதும் முயன்று வந்தவர்.

கலியாண சுந்தரம் பிள்ளை, முதுகுளத்தூர்: இவர் அட்டாவதானம் கலியாண சுந்தரம் பிள்ளை யெனவும் அறியப்படுவர். இவர் இயற்றிய நூல் ; மெய்யரிச் சந்திர நாடகம். (1905).

கலைக்கோட்டுத் தண்டர்: (-?) இவர் செய்த நூல் கலைக்கோட்டுத் தண்டு என்னும் நிகண்டு நூல் எனத்தெரிகிறது. நூல் செய்தவனாற் பெற்ற பெயருக்கு எடுத்துக் காட்டு கலைக்கோட்டுத் தண்டு என இறையனார் களவியலுரை கூறும். இடுகுறியாற் பெயர் பெற்றன என்பதற்கு கலைக்கோட்டுத் தண்டை எடுத்துக் காட்டாகக் கூறுவர் மயிலைநாதர்.

கல்பொரு சிறு நுரையார்: (சங்க காலம்) இவர் பாடியது: குறு. 290.

கல்லாடதேவ நாயனார்: (9ஆம் நூ.) இவர் பாடியது: பதினோராந் திருமுறையி லுள்ள திருக்கண்ணப்பதேவர் மறம். நக்கீரரும் இப்பெயருடைய பிரபந்த மொன்று செய்துள்ளார்.

கல்லாடனார்: (கி.மு. 62 - 42) இவரது ஊர் கல்லாடம். அது மலையாளப் பகுதியி லுள்ளது. புல்லிநாட்டிலுள்ள வேங்கடத்தையும், அங்கு யானைக் கன்றைப் பிடித்து வந்து இளைஞர் கள்விற்கும் இல்லிற்கட்டிவிட்டுக் கள்ளருந்திப் போவதையும் இவர் கூறுகின்றார். கோசரது நட்பிற் கோடாப் பெருங் குணத்தினையும் அவர் அகுதையைக் காத்த பெருமையையும் பாணனென்ற சிற்றரசன் படைவீரர் நிரைகவர்தற் சிறப்பினையும், வாகைப் பெருந் துறைப் போரில் பொலம்பூண் நன்னனைக் களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரல் வென்று தான் இழந்த நாட்டை மீளக் கைப்பற்றினதையும், ஆலங்கானப் போரில் நெடுஞ்செழியன் இருபெரு வேந்தரையும் ஐம்பெரு வேளிரையும் வென்ற செய்தியையும் கூறியுள்ளார். முள்ளூர் மன்னன் காரி, கொல்லித் தலைவனான ஓரியைக்கொன்று ஆம்மலையைச் சேரலர்க்கு உரிமையாக்கிய வரலாற்றினையும் கூறினர். திருவள்ளுவமாலை 9ஆம் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. “இருடிகளல்லா வேனையோராகி மனத்தது பாடவும், ஆகவும், கெடவும், பாடறரும், கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச் சாத்தர், இத்தொடக்கத்தாராலும், பெருஞ்சித்திரர் தொடக்கத் தாராலும்”, என்பது யா.வி. (ப. 351).

கல்லாடனார் - 2: (9ஆம் அல்லது 10ஆம் நூ.) இவர் கல்லாடம் என்னும் நூல் செய்தார். இது விநாயகர் வாழ்த்து முருகக் கடவுள் வாழ்த்துட்பட 120 அகவற்பாக்களுடையது. இந்நூற்கு மயிலேறும் பெருமாள் பிள்ளை எழுதியவுரை 37 அகவல்களுக்கு மாத்திரம் விளக்க முறுகின்றது. ஏனைய 63 பாடலுக்கு புதுவை சுப்பிராய முதலியார் பதவுரை எழுதியுள்ளார். தொல் காப்பியத்துக்கு உரை எழுதிய கல்லாடர் ஒருவருளர். அவரைக் குறித்துத் தஞ்சை சீனிவாச பிள்ளை தமது தமிழ் வரலாற்றில் கூறியிருப்பது வருமாறு: ‘கல்லாடர் எனப் பெயரிய சங்கப் புலவர் ஒருவர் இருந்தது உண்மையே. அவர் தொல்காப்பியத்துக்கு உரை எழுதினதாகத் தெரியவில்லை. எழுதியிருந் தாலும் வெகு காலத்துக்கு முன்னே அஃது இறந்துபட்டிருக்க வேண்டும். ஏனைய உரையாசிரியர்கள் அவரைக் குறிப்பிடாதிருப்பதே அதற்குச் சான் றாம். `ஒல்காப் பெருமைத் தொல்காப்பியத்திற்குரையிட்ட விரகர் கல்லாடர்’ என ஒரு தொடர் வழக்கில் இருக்கின்றது. இதன் உண்மை ஆராயற்பாலது. கல்லாடர் உரையென இக்காலத்துள்ளது சொல்லதிகாரத் துக்குமட்டுமேயாம் என அறியப்படுகிறது. அதைப் படித்தோர் பலர் அவ் வுரையை அவ்வளவு உயர்ந்ததாகக் கொள்ளவில்லை. சில சூத்திர உரைகளை யான் பார்த்திருக் கிறேன். நான் பார்த்தவரையில் அவ்வுரையைப்பற்றி முழுவதும் அவர் களுடன் ஒவ்வுகிறேன். இஃது இன்னும் அச்சில் வெளிவரவில்லை. இவ் வுரையெழுதியவர் கல்லாடம் என்னும் புத்தகத்தை இயற்றியவரோ அல்லது அப்பெயர் கொண்ட வேறொருவரோ? கல்லாடர் என்ற ஊரினர் என்பதால் இப்பெயர் அமைந்துமிருக்கலாம். இவர் தொல்காப்பிய உரையாசிரியர்களுள் பிற்பட்டவர் எனத் தோன்றுகின்றது. இவரைப் பாராட்டுவாரைக்
காணேன்.”

கல்லாடம் செய்த கல்லாடர் “பரிபுரக் கம்பலையிருசெவியுண்ணும், குடக்கோச் சேரன் கிடைக்கிது காண்கென” வென்று சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலத்தவரான சேரமான் பெருமாளைக் குறிப்பிடுதலின் அவர் ஒன்பதாம் நூற் றாண்டின் முற்பகுதியில் விளங்கிய சுந்தர மூர்த்தி சுவாமி காலத்துக்குப் பிற்பட்ட வராவ ரென்பது தெளிவாகின்றது. பன்னிருபாட்டியற் சூத்திரங்கள் சில கல்லாடர் செய்த பாட்டியலிலுள்ளன என்பது கொள்ளப்படுகின்றது.

கவி அப்பரச வுடையார்: (-?) தொண்டை மண்டலத்துப் பிள்ளைப் பாளையம் என்ற ஊரிலுள்ள கல்லொன்றில் ஏகாம்ய நாதர்கோயில் திருப்பணியின் பொருட்டு சந்திரகிரி கவியான அப்பரசவுடையார் கன்மமாகச் சில நில வரிகள் இறக்கப்பட்ட செய்தி கூறப்பட்டள்ளது. (சா.த.க.ச.)

கவி குமுதசந்திர பண்டிதன் திருநாராயண பட்டன்: (1097 - ?) இவர் குலோத்துங்கன் சரிதை என்னும் நூல் செய்தவர். இது இன்று வழக்கு வீழ்ந்தது. (சா.த.க.ச.)

கவிக்களஞ்சியப் புலவர்: (18ஆம் நூ. முற்.) இவர் உமறுப் புலவரின் புதல்வர். இவர் இயற்றிய நூல்கள் சீறாப்புராண வண்ணம், சித்திர கவித் திரட்டு, நபியவதார அம்மானை. இது 1713இல் பாடப்பட்டது.

கவிக்களஞ்சியம் - வேதாளக்கதை (செய்யுள்).*

கவிக்குஞ்சரபாரதி - இவர் கவிக்குஞ்சரபதங்கள் என்னும் இசைப்பாடல்கள் செய்தவர் (1876). இவர் ஆனைஐயர் எனவும் அறியப்படுவர்.

கவி சாகரப் பெருந்தேவனார்: (-?) திருவள்ளுவமாலைச் செய்யுள் 36 இவர் பாடியதாக வழங்கும். கவிசாகரம் என்னும் பழைய யாப்புஇலக்கணம் ஒன்று இருந்ததாகத் தெரிகிறது. அவ்விலக்கணத்தை இயற்றினமையின் இவர் கவிசாகரப் பெருந்தேவனார் என்று வழங்கப்பட்டாராகலாம்.

கவிப் பெருமாள்: (13ஆம் நூ.?) இவர் திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர்.

கவிராச பண்டிதர்: (16ஆம் நூ.) பாண்டிநாட்டிலே வீரசோழன் ஊர் என்று ஓர் ஊர் உளது. அது வீரை என்று சொல்லப்படும். அந்த ஊரில் வேம்பத்தூர் அந்தணர் குடும்பங்கள் சில குடியேறியுள்ளன. அவற்றுள் ஒரு குடியிற் கவிராச பண்டிதர் என்பார் பிறந்தார். இவர் சங்கராச்சாரியார் செய்த சௌந் தரிய லகரி, ஆனந்தலகரி என்னும் நூல்களை தமிழில் 103 விருத்தப்பாவால் மொழி பெயர்த்தார். வராகி மாலை, ஆனந்தமாலை என்பவும் இவர் இயற் றியனவாக வழங்கும். இவற்றை இவர் செய்தாரென்பது ஐயத்துக்கிடம். சௌந்தரியலகரியின் உரை செய்தவர் உண்ணாமுலை எல்லப்ப நயினார். (எல்லப்ப பூபதி).

கவிராசபிள்ளை: சேறைக் கவிராசபிள்ளை பார்க்க.

கவிராசர்: (18ஆம் நூ.) இவர் இலங்கையிலுள்ள திரிகோணமலை என்னு மூரினர்: கோணேசர் கல்வெட்டென வழங்கும் கோணேசர் சாசனத்தைப் பாட்டாலும் உரையாலுமியற்றியவர். இவர் பண்டிதராசரியற்றிய கோணாசல புராணத்துக்குச் சிறப்புப் பாயிரமளித்துள்ளார்.

கவிராய பண்டிதர்: (-?) இவர் கொங்கு நாட்டினர்; திருச்செங்கோட்டுப் புராணம் பாடியவர் (கொ.பு.)

கவிராயர் முத்துசாமிப்பிள்ளை: நானார்த்த தீபிகை (அனவரதவிநாயக பிள்ளை (1936).

கவீசுவர சுப்பிரமணிய ஐயர்: (20ஆம் நூ.) இவர் கோவை ஊரினர்; மீனாட்சி யம்மை ஊஞ்சல் பாடியவர். (கொ.பு.)

கவீந்திரர்: சிவாசி சரித்திர வசனம். (ச.கை.)

கவுணியனார்: (10ஆம் நூ.) “சிந்தனைக்கினி” எனத் தொடங்கும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்கப் புலவர் வரிசையில் இவர் பெயரைக் காணோம்.

கவுந்தப்பாடி புதூர் நஞ்சயப் புலவர்: (20ஆம் நூ.) இவர் பல பிரபந்தங்கள் பாடியவர்; குருடர். (கொ.பு.)

கவை மகன்: (சங்க காலம்) இவர் பாடியது: குறு. 324.

கழறிற்றறிவார்: சேரமான் பெருமாள் பார்க்க.

கழாத் தலையார்: (கி.மு. 200-) இவர் வேற்பஃறடக்கைப் பெருநற்கிள்ளியோடு குடக்கோ நெடுஞ் சேரலாதன் பொருது விழுந்ததைக் கண்டு வருந்திப் பாடியுள்ளார். இருங்கோவேள் இவரை இகழ்ந்ததாகப் புறம் 202இல் கபிலர் கூறுவதால் இவர் கபிலருக்கு முற்பட்ட வராகலாம். இவர் பாடியன: புறம். 62, 65, 270, 288, 289, 368.

கழாரம்பர்: அகத்தியர் மாணவர்களுளொருவர். இவர் செய்த இலக்கணம் கழாரம்பம்.

கழார்க் கீரனெயிற்றியார்: (சங்ககாலம்) இவரது ஊர் சோழ நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் மயூரப்பகுதியிலுள்ள கழார். இவர் வேடர் மரபினர். இவர் பாடியன: அகம். 163, 217, 235, 294; குறு. 35, 291, 330; நற். 281, 312.

கழைதின் யானையார்: (கி.மு. 87-) இவர் ஓரியைப் பாடியுள்ளார். இவர் பாடியது: புறம் 204.

களத்தூர் கிழார்: திருவள்ளுவ மாலை 44ஆம் பாடல் இவர் செய்ததாக வழங்கும்.

களந்தைக்குமரன்: (17ஆம் நூ.) இவர் தொண்டை நாட்டிலேயுள்ள களந்தையில் வேளாண்குடியிற் பிறந்தவர். அழகவேளென்பவர் வேண்டத் திருவாஞ்சிப் புராணம் பாடியவர். இது 1616இல் அரங்கேற்றப்பட்டது. திருவாஞ்சிப் புராணத்தில் காப்பு உட்பட 830 விருத்தங்களுண்டு. இந்நூல் இன்னும் அச்சாக வில்லை.

கள்ளம்பாளனார்: (சங்க காலம்) இவர் பெயர் கண்ணம்பாளனார் எனவும் காணப்படுகிறது. கருவூர்க் கண்ணம்பாளனார் பார்க்க.

கள்ளர்பிரான் பிள்ளை: இவர் வெனி°வர்த்தகன் என்னும் சேக்°பியர் கதையைத் தமிழில் எழுதியவர். (1894.)

கள்ளிக்குடிப் பூதம் புல்லனார்: (சங்ககாலம்) இவர் பாடியது; நற். 333; குறு. 190.

கனகசபைப் பண்டாரம்: இராமாயண வசனம்.*

கனகசபைப் பிள்ளை, கூடலூர்: இவர் வருண சிந்தாமணி என்னும் நூல் செய் தார். இது மு.ர. அருணாசலக்கவிராயரால் பதிக்கப்பட்டது. (சென்னை 1901.)

கனகசபைப் பிள்ளை, வி: (1855-1906) இவர் தந்தையார் யாழ்ப்பாணத்து மல்லாகம் என்னும் ஊரினராகிய விசுவநாத பிள்ளை. விசுவநாத பிள்ளை சென்னைக் கல்வித் துறைத்தலைவர் அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாள ராகப் பணியாற்றியவர்; மேலை நாட்டுச் செல்வர் உவின்சுலோபாதிரியாரின் தமிழ் அகராதி வெளி வருவதற்குப் பெரிதும் உதவி புரிந்தவர். கனகசபைப் பிள்ளை அவர்கள் பி.ஏ. பட்டம் பெற்று சென்னை அஞ்சலகத்தே உயர்நிலை மேற்பார்வையாளராக (Suptd. of Post Offices) அமர்ந்திருந்தவர். இவர் செய்த நூல் 1800 ஆண்டுகளுக்கு முந்திய தமிழர் (Tamils 1800 years ago). இவர் களவழி, கலிங்கத்துப்பரணி விக்கிரம சோழன் உலா முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்திய புராதன கலைஞனில் (The Indian Antiquary Vol.XVII) வெளியிட்டார்.

கனகசபைப் புலவர்: (1829-1873) இவர் யாழ்ப்பாணத்து அளவெட்டி என்னுமூரிற் பிறந்தவர்; கிறித்துவ மதத்தைத் தழுவியிருந்தவர். இவர் பல தனிப் பாடல்களும் திருவாக்குப் புராணம் என்னும் கிறித்துவ நூலும் செய்தார்; ஒரு சொற் பலபொருள் நிகண்டு ஒன்றும் பாடியுள்ளார். இவர் 1873இல் காலமா னார். அழகர்சாமி மடல் என்னும் நூலொன்றும் இவர் பாடியதாக அறிய வருகிறது.

கனகசுந்தரம் பிள்ளை: த. (மறைவு 1922) இவர் திரிகோண மலையில் 1863இல் பிறந்தவர்; தந்தை பெயர் தம்பி முத்து. தமிழ் நாவலர் சரிதை என்னும் நூலை இவர் பதிப்பித்தார். இல்லாண்மை என்னும் உரைநடை நூலும் இவராற் செய்யப்பட்டது. சென்னைப் பல்கலைக் கழகத்தார் வெளியிட்ட தமிழ்ப் பேரகாரதி தொகுப்பதில் சில காலம் இவர் தலைவராயிருந்தார்.

கன்னைய தாசர், கடலூர்: இவர் மாகாபக்த விலாசத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவர். (1905.)

கன்னைய நாயுடு, வேலூர்: இவர் கீசக விலாசம் என்னும் நூலியற்றியவர் (1897) சர்வார்த்த சிற்ப சிந்தாமணி என்னும் நூலைப்பதித்தவர் (1905).

காக்கை பாடினியார்: (கி.பி. 10ஆம் நூ.) உரையாசிரியர்கள் மூலம் காக்கை பாடினியார் என்னும் இரு பெண் புலவர்கள் அறியவருகின்றனர். இவர்கள் காக்கை பாடினியம் என்னும் செய்யுள் இலக்கண நூல் செய்துள்ளார்கள். சிறுகாக்கை பாடினியார் செய்தது சிறுகாக்கை பாடினியாம். “அறுசீர் முதலா நெடியவை யெல்லா, நெறி வழியிற் றிரியா நிலத்தவை நான்காய், விளைகுவ தப்பா வினத்துள விருத்தம்’ என்றார் காக்கை பாடினியார்”. “அறு சீரெழு சீரடிமிக வரூஉ, முறைமைய நாலடி விருத்தமாகும்’ என்றார் சிறு காக்கை பாடினியார்” (யா.க.வி.ப. 273) என யாப்பருங்கல விருத்தியிற் காணப் படுதலாலும் இச்சூத்திரங்களுள் விருத்தப்பாவுக்கு இலக்கணம் காணப்படு தலினாலும் இவ்வாசிரியர்கள் கி.பி. 10ஆம் நூற்றாண்டளவில் விளங்கியவர் களாகலாம். “விருத்தம் துறை தாழிசை யென்று காக்கை பாடினியார் வைத்த முறையின் வையாது தாழிசை துறை விருத்தமென்று தம்மதம் படவைத் தன்று; சிறு காக்கை பாடினியார் முதலாகிய ஒரு சாராசிரியர் வைத்த முறை பற்றி வைத்தாரென்க.” (யா.வி.)

காக்கை பாடினியார் நச்செள்ளையார்: (கி.மு. 125-) இவர் வான வரம்பன் என்னும் ஆடுகோட் பாட்டுச் சேரலாதனைப் பதிற்றுப் பத்து ஆறாம்பத்திற் பாடிய பெண் புலவர். “விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே” (குறு. 210) என்று காக்கையைச் சிறப்பித்துப் பாடினமையால் இவர் இப்பெயர் பெற்றார். இவர் நள்ளியைக் குறிப்பிட்டுள்ளார். பதிற்றுப் பத்துப் பாடி அணி கட்டாக 9 துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பெற்றதோடு அரசன் பக்கத்திலிருக்கும் சிறப்பும் பெற்றார். இவர் பாடியவை: பதிற். 51-60; குறு. 210; புறம் ; 278.

பதிற்றுப்பத்து எட்டுத் தொகையுள் நான்காவது; சேரர் குலத்தாரையே பாடியது; இத்தொகையால் அக்காலத்திலிருந்த சேரர் பலருடைய வரலாறுகள் பலவும் அவர்களுடைய வள்ளன்மை வீரம் முதலியனவும் நன்கு புலப்படும். இஃது ஒவ்வொரு புலவர் பப்பத்தாகச் செய்த 100 பாட்டுக்களையுடையது. இதனாலேயே இத்தொகை பத்துப் பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது; அவற்றுள், முதற் பத்தும், பத்தாவது பத்தும் இறந்தன. எஞ்சியவற்றுள் இரண்டாம் பத்து: இமயவரம்பன் நெடுஞ் சேரலாதனைக் குமட்டூர்க் கண்ணனார் பாடியது. மூன்றாம் பத்து: இமய வரம்பன் தம்பி செல்கெழு குட்டுவனைப் பாலைக் கௌதமனார் பாடியது. நாலாம் பத்து: களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலைக் காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது. ஐந்தாம் பத்து: கோச் செங்குட்டுவனைப் பரணர்பாடியது. ஆறாம் பத்து: ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைக் காக்கைபாடினியார் நச் செள்ளையார் பாடியது. ஏழாம் பத்து: செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது. எட்டாம் பத்து: தகடூரெறிந்த பெருஞ் சேரலிரும் பொறையை அரிசில் கிழார் பாடியது. ஒன்பதாம் பத்து: குடக்கோ இளஞ்சேரலிரும் பொறையைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது. இத்தொகையைத் தொகுத்தோரும் தொகுப்பித் தோரும் இன்னாரென்று தெரியவில்லை. இதற்கு அரும்பத உரையாக ஓர் உரையுள்ளது; அவ்வுரையாசிரியர் பெயர் தெரியவில்லை.

காங்கேயர்: (17ஆம் நூ.) இவர் தொண்டை மண்டலத்துச் செங்குந்தர் மரபிற் பிறந்த தமிழ்ப் புலவர்; உரிச்சொல் நிகண்டியற்றியவர்.

காங்கேயன்: வலைவீசுபுராணம் (ச.கை.)

காசிக் கலியன் கவிராயர்: (16ஆம் நூ.) இவர் வரதுங்க இராமனின் அரண் மனைப் புலவர். இவர் அவ்வரசன் மீது முடிசூட்டு மங்கலப் பாடல்கள் பாடி யுள்ளார். (சா.த.க.ச.)

காசிநாதப் புலவர்: (18ஆம் நூ.) இவர் கும்பகோணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் பனையின் பயன்களைக் கூறுவதாகிய தாலபுராணம் செய்தனர். இது கலிவெண்பா யாப்பிலமைந்தது. நூறு ஆண்டுகளின் முன் தெனண்ட் என்பார் எழுதிய இலங்கை (Ceylon) என்னும் நூலின் இரண்டாம் பகுதியில் இந்நூலின் ஆங்கிலமொழி பெயர்ப்புக் காணப்படுகிறது.

காசிபன் கீரன்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 248.

காசிவிசுவநாத முதலியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் செய்த நூல்கள்: இடம்பாச்சாரி விலாசம் (1879), தாசில்தார் நாடகம், கூலிக்கு மாரடிக்கும் கூத்தாடிச்சிகள் நடிப்பு (1870), மேகவெள்ளைக்கு மேலான பரிகாரம்.

காஞ்சி ஞானப் பிரகாசர்: (16ஆம் நூ.) இவர் காஞ்சிபுரம் மடத்துக்குத் தலைவராயிருந்தவர். கச்சிக் கலம்பகம் கிருட்டிணதேவராயர் மஞ்சரிப்பா என்பன இவர் பாடியவை.

காஞ்சிப்புலவர்: (கி.மு. 65) இவரே மாங்குடி மருதனாராவர். இவர் தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை நிலையாமையை அறிவுறுத்தவேண்டி மதுரைக்காஞ்சி பாடியதனால் மதுரைக்காஞ்சிப் புலவரெனவும் காஞ்சிப் புலவரெனவுங் கூறப்படுவாரா யினர்; மாங்குடி மருதனா ரென்பவருமிவரே. இவர் வேளாண் மரபினர். மேற் கூறிய நெடுஞ் செழியனது அவைக் களத்துப் புலவராய் அவனைப்பாடி மகிழ்வித்து வைகு வாராயினர் (புறம் 24.) ஒரு காலத்துச் சேரனுஞ் சோழனும் மதுரையை முற்றிய பொழுது இளைஞனாகிய நெடுஞ்செழியன் வஞ்சினங் கூறுவான், “ஓங்கிய சிறப்பினுயர்ந்த கேள்வி, மாங்குடி மருதன் தலைவனாக” (புறம் 72) என்று இவரைப் பாராட்டிக் கூறினாரெனின் இவருடைய மேன்மையும் கல்வி கேள்விகளினுயர்வும் நம்மனோரால் அளவிடப் படுங்கொல்லோ! இவர் பாடிய மதுரைக் காஞ்சியைப் படிப்பார்க்கு இவரது ஆற்றல் விளங்கும். பின்பொரு பொழுது வாட்டாற் றெழினி யாதனைப் பரிசில் வேண்டிப் பாடி அவனால் ஆதரிக்கப் பெற்று மீண்டு மதுரையை அடைந்து வைகுவாரா யினர். (புறம் 396). இவர் எல்லாத் திணையும் புனைந்துபாட வல்லவர். நெடுஞ் செழியன் போரிலே உள்ளஞ் செலுத்தி அவ்வழியே ஒழுகுவானை நன் னெறிப் படுத்தி மறுமைக்காகிய வற்றைச் செய்யப்பண்ணிய வரிவரே (புறம் 26). தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டிப் பிரிவில் மாங்குடி மருத மென இரண்டு ஊர்கள் ஒன்றையொன்றடுத்துள்ளன. அவற்றுள் முன்னது இவரூரும், பின்னது இவரால் நாட்டப்பட்டதும் போலும். (பி.நா. ஐயர்). இவர் பாடியன: அகம் 89; குறு. 164, 173, 302; நற். 120. 123; புறம் 24, 26. 313, 335, 372, 396; மதுரைக் காஞ்சி. ஓதற்கெளிதாய் என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. மாங்குடி மருதனார் பார்க்க.

காட்டூர் கிழார் மகனார் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் தொண்டைமான் இளந் திரையனது வேங்கடமலையைப் புகழ்ந்துள்ளார். இவர் பாடியது: அகம் 85.

காதிர் சாகிப்பு, பினாங்கு: இவர் ஹாசிய மஞ்சரி என்னும் கதை நூலெழுதியவர். (பினாங்கு 1898.)

காந்திமதிநாத பிள்ளை V.P.: சிவஞான போத உபநியாச பாடம் . (1918).

காபில் முகமத் அல்காகிரி: (Habil Muhamad al Kahiri) - இவர் அராபியிலிருந்து கொரானைத் தமிழில் மொழிபெயர்த்து குறிப்பும் எழுதி லிதோ அச்சிட்டவர். (பம்பாய் 1879 - 1884.)

காப்பியஞ் சேந்தனார்: (சங்ககாலம்) இவரது இயற்பெயர் சேந்தனா ரென்பதே. ஏதேனுங் காப்பியஞ் செய்ததனால் இவ்வடைமொழி கொடுக்கப் பெற்றாரோ அன்றேல் காப்பிய மென்பது இவருடைய ஊர்தானோ தெரியவில்லை. காப்பியன் மகனாகிய சேந்தனா ரென்றும் கொள்ளலாம். இவர் பாலைத் திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது: நற். 246.

காப்பியாற்றுக் காப்பியனார்: (கி.மு. 245-) இவர் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரலைப் பதிற்றுப்பத்துள் நான்காம் பத்திற் பாடியவராவர். இவர் அவ்வரசனிடம் பரிசிலாக நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆண்டதில் ஒரு பாகமும் பெற்றார். இவர் பாடலுள் முதற்கண் திருமால் வணக்கம் கூறப்பட்டுள்ளது.

காமக்கணிப் பசலையார்: (கி.மு. 87-) இவர் மதுரைக் காமக்கணி நப்பசலையா ரெனவும் வழங்கப்படுவர். இவர் பெண் பாலினர். நற். 243 இவர் பாடியது.

காமஞ்சேர் குளத்தார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 4

காம்போதியார்: (சங்ககாலம்) இவர் பெயர் காமப் பொதியார் எனவுங் காணப் படுகின்றது. இவர் பாடியது: குறு. 384.

காரணை விழுப்பரையர்: (13ஆம் நூ.) பாண்டி நாட்டுப் பெருச்சிகோயில் என்ற ஊர்க்கணுள்ள சிவாலயத்தே காணப்படும் சாசனத்தால் மாறவர்மன் சுந்தர பாண்டியனுடைய (1216-1238) வாயிற் புலவராக விளங்கியவர் காரணை விழுப்பரைய ரெனத் தெரிகிறது. காரணை விழுப்பரையன் மடல் என்ப தொரு நூலுமுண்டென்பர். (சா.த.க.ச.)

காரி இரத்தினக் கவிராயர்: (17ஆம் நூ.) இவர் ஆழ்வார் திருநகரியிலிருந்தவர்; மாறனலங்கார உரை, பரிமேலழகருரை நுண்பொருள் மாலை, குழைகாதர் திருப்பணி மாலை என்பன செய்தவர். இவர் திருமேனி இரத்தினக் கவிராயர் எனவும் அறியப்படுவர்.

காரி கிழார்: (கி.மு. 350) இவர் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். (புறம். 6)

காரிக்கண்ணார்: (கி.பி. 100.) இவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனாரெனவும் அறியப்படுவர். “ஐயாறு நூறு” என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம், 107, 123, 285; குறு. 297; புறம் 57, 58. 169, 171, 353 முதலியன.

காரியாசான்: (5ஆம் நூ.?) இவர் மாக்காயனார் மாணாக்கர். இவர் செய்த நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகிய சிறு பஞ்ச மூலம். இது கடவுள் வாழ்த்துட்பட 104 வெண்பாக்களையுடையது. சிறு பஞ்சமூலமாவன கண்டங் கத்தரிவேர், சிறு வழுதுணை வேர், சிறுமல்லி வேர், நெருஞ்சில் வேர், பெரு மல்லி வேரென்பன. ஒவ்வொரு வெண்பாவிலும் நன்மை பயக்கத் தக்கன வாய் ஐந்து நீதிகள் கூறப்பட்டுள்ளன. காப்புச் செய்யுளால் இவர் சைனர் எனத் தெரிகிறது.

காரியார்: (15ஆம் நூ.) இவர் சோழ நாட்டில் முகரியூரிற் பிறந்தவர்; கொறுக்கை யர் குலத்தினர். இவர் செய்த நூல் கணக்கதிகாரம். இந்நூல் விநாயக வணக்கத்தோடு தொடங்குகின்றது.

காரைக்கா லம்மையார்: (6ஆம் நூ.) இவர் நாகபட்டினத்தில் தனதத்தன் என்னும் செட்டியாரின் புதல்வியாகப் பிறந்தவர். இவருடைய கணவருக்கும் இவருக்கும் இணக்கமில்லாமையால் இவர் துறவறம் பூண்டிருந்தார். இவர் சிவபிரான் மீது செய்த பாடல்கள் அற்புதத்திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை, மூத்ததிருப்பதிகம் என்பவை. யாப்பருங்கல வுரையில் காரைக்காற் பேய் என்னும் குறிப்புக் காணப்படுகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகளும் இவரைக் குறிப்பிட்டுள்ளார். ‘கறைப்பற்பெருமோட்டுக் காடு கிழவோட், கரைந்திருந்த சாந்தைத்தொட்டப் பேய், மறைக்க வறியாது மற்றுந் தன் கையைக், குறைக்குமாங் கூர்ங்கத்தி கொண்டு’ “இது பூதத்தாருங் கரைக்காற் பேயாரும் பாடியது” (யா.வி.ப. 352).

கார்த்திகேய முதலியார்: கச்சி இதழ்கலந்தாதி (1907.)

கார்த்திகேய முதலியார், மாகறல்: (-1907) இவர் கிண்டி தியலாசிகல் கல்லூரியில் பண்டிதராயிருந்தவர். தமிழ்ப் பற்றுமிக்கவர். இவர் இயற்றியன: மொழி நூல், தமிழ் விண்ணப்பம் (1914.) இவர் இளமையில் காலமானார்.

கார்மேகக்கவிஞன்: (-?) இவர் பிறப்பிடம் கொங்கு நாட்டிலுள்ள விசயமங்கலம்; கொங்கு மண்டல சதகம் பாடியவர்.

காலகாலன்: (-?) சோணாட்டுத் திருக்கடவூர் வீரட்டானேசுவரர் கோயில் மூன்றாங் கோபுரத்தே பாடலொன்று வரையப்பட்டுள்ளது. அது கால காலன் என்பவராற் பாடப்பட்டதென்றும் அவருக்கு ஈழத்தரையன் அன்றிச் சிங்களத் தரையன் என்ற சிறப்புப் பெயருமுண்டென்றும் தெரிகின்றது. (சா.த.க.ச.)

காலசித்தர்: காலசித்தர் பாடல்.*

காலறி கடிகையார்: (சங்க காலம்) இவர் தமது பாடலில் காலறி கடிகை (நீர்க்கடி காரம்) எனக் கூறினமையால் இப்பெயர் பெற்றார். இவர் பாடியது: குறு: 297.

காலாங்க நாதர்: (-?) இவர் திருமூலரின் மாணாக்கரென்றும் இவர் மாணாக்கர் போகர் என்றும் ஐதீகமுளது.

காலிங்கன்: திருவெண் காட்டுப் புராணம். (ச.கை.)

கால்ட்வெல், இடாக்டர்: (1815-1891) இவர் ஓர் ஆங்கிலப் பாதிரியார்; திருநெல்வேலிச் சில்லாவில் இடையன் குடியில் நெடுநாள் வாழ்ந்தவர். இவர் தமிழையும் அதன் கிளை மொழிகளான கன்னடம் தெலுங்கு துளு, மலையாளம் என்னும் மொழிகளையும் பயின்று ஒப்பிலக்கணம் என்னும் ஒரு நூல் எழுதியுள்ளார். இவர் ஆராய்ச்சிக்குப் பின்பே தமிழ் வடமொழிக்கு இனமில்லாத தனிமொழி என்னும் உண்மை பரவலாயிற்று.

காவட்டனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம் 378.

காவற் பெண்டு: (கி.மு. 125) இவர் போர்வைக்கோப்பெருநற்கிள்ளியின் செவிலித்தாய். இவர் அவனைக் காணுமிடம் போர்க்கள மென அவனது வீரத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார். இவர் பாடியது: புறம் 86.

காவன் முல்லைப் பூச்சாத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 151.

காவன் முல்லைப் பூதனார்: (சங்ககாலம்) காவன்முல்லையென்பது புறத்திணை யில் ஒரு துறை. இவர் இத்துறையில் பாடும் ஆற்றலுடையவர் போலும். காட்டிலுதிரும் நெல்லிக்காயை வட்டாகக் கொண்டு செம்முக மந்தி ஆடும் என்றும், அதிரற்பூ வெருகின் எயிறு போலுமென்றும் கூறியுள்ளார். இவர் பாடியன: அகம் 21, 151, 241, 293, 391; நற். 274; குறு . 104, 211.

காவிரிப்பூம் பட்டினத்துக் கந்தரத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 342.

காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்: காரிக்கண்ணனார் பார்க்க. திருவள்ளுவ மாலை 28ஆம் பாடல் இவர் செய்ததாக வழங்கும்.

காவிரிப்பூம் பட்டினத்துச் செங்கண்ணனார்: (சங்ககாலம்) அவியன் என்னும் கொடையாளியை இவர் புகழ்ந்துள்ளார். குறுந்தொகையில் காணப்படும் சேந்தன் கண்ணன் இவராகலாம். இவர் பாடியன: அகம் 103, 271, நற். 389.

காவிரிப்பூம் பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார்: (சங்க காலம்) இவர் பாடியது பத்துப் பாட்டில் ஐந்தாவதாகிய முல்லைப்பாட்டு. அகத் திணையில் முல்லை ஒன்று. அஃது அத்திணை உரிப்பொருள் கூறும் தொல் காப்பியச் சூத்திரத்தில் சொல்லிய இருத்தல் என்னும் உரிப்பொருளாம். நச்சினார்க்கினியர் முல்லைப் பாட்டு உரையின் தலைப்பில், “இல்லற நிகழ்த்து தற்குப் பிரிந்து வருந்துணையும் ஆற்றியிருவென்று கணவன் கூறிய, சொல்லைப் பிழையாமல் ஆற்றியிருந்து இல்லறம் நிகழ்த்திய இயற்கை முல்லையாமென்று கருதி யிருத்தல் என்னும் பொருள்தர முல்லை யென்று இச் செய்யுட்கு நப்பூதனார் கூறினமையின்” என்று எழுதியிருப்பது இப்பாட்டிற்குப் பெயர் வாய்ந்ததை விளக்கும். “மக்கணுதலிய அகனைந் திணையும் சுட்டி யொருவர் பெயர் கொளப்பெறாஅர்” என்ற அகத்திணை யியற் சூத்திரப் படி தலைவன் பெயர் இப்பாட்டில் கூறப்படவில்லை. இது 103 அடிகளையுடையது. பகை மேற்சென்ற தலைவன் வருமளவும் தலைவி ஆற்றியிருந்த விடத்து அவன் வந்ததனைக்கண்டு தோழி முதலானோராகிய வாயில்கள் தம்முட் கூறியதாகப் பாடப்பட்டுள்ளது.

காவை ஆம்பலவாணத் தம்பிரான்: பிரசாத அகவல் (1934). இவர் சிவப்பிரகாசச் செய்யுட்கள் ஒவ்வொன்றின் கருத்தும் விளங்க நூறு குறள் வெண்பாக்கள் செய்துள்ளார்.*

காவுபால சித்தர்: காவுபால சித்தர் ஆணிக்கோவை.*

காள சித்தர்: காள சித்தர் பாடல்.*

காளமேகப் புலவர்: (14ஆம் நூ. பிற்பகுதியும் 15ஆம் நூ. முற்பகுதியும்.) இவர் கும்பகோணத்து வைணவ அந்தணர்; வரதரென்னும் இயற்பெயரினர்; சீரங்கக் கோயிலில் மடைப்பள்ளி வேலை புரிந்தவர்; மோகனாங்கி என்னும் சிவன் கோயில் தாசியால் சைவராக்கப்பட்டவர். இவர் பாடியவை: திருவானைக்கா உலா, சரசுவதிமாலை, பரப்பிரம விளக்கம், சித்திரமடல், பல தனிப்பாடல்கள். இரட்டையர் அதிமதுரகவி என்போர் இவர் காலத்தவர்.

காளிங்கர்: (13ஆம் நூ.) இவர் திருக்குறளுக்கு உரை செய்தவர்களுள் ஒருவர். “காலிங்கர் எனவும் சில பிரதிகள் தெரிவிக்கின்றன. இவர் உரைப்போக்கி லிருந்து இவரைச் சைனராகக் கருதலாம். ஆகிலும் தம் கொள்கையை வெளிப் படுத்தாது. நூற்பொதுமைக் கேற்ப உரை வகுத்தல் இவரிடமுள்ள சிறந்த குணம். இவர் பரிமே லழகருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்பது வெளிப் படை. சிற்சில இடங்களில் இவருரையும் பரிதியாருரையும் ஒத்தனவாக அமைந்திருக்கின்றன’ (திருக்குறள் உரைவளம்.)

காளிமுத்து: (17ஆம் நூ.) இவள் ஒரு தாசி; கவிபாடவல்லவள். இவள் மயிலை குழந்தை முதலியாரையும் பள்ளிகொண்டான் என்னும் பரதவனையும் பாடிப்பரிசு பெற்றவள். “நெல்லைச் சொன்னா பரணத்தை” என்ற செய்யுளும். “வள்ளிகொண்டான் மயிலேறிக் கொண்டான்” என்ற செய்யுளும் இவள் பாடியன.

காளிமுத்துப் புலவர்: (1422-1482) இவர் பராக்கிரம பாண்டியனைப் பாடிய தனிப் பாடல் ஒன்று காணப்படுகிறது

காளியண்ண பிள்ளை: (20ஆம் நூ.) இவர் பூந்துறை என்னு மூரினர்; பல மாலைகள் பாடியவர்.

கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார்: (சங்ககாலம்) இவரது இயற்பெயர் கண்ணனாரென்பதே. கீரன் தந்தையின் பெயர் போலும். காவிதிப் பட்டம் பெற்றமையால் உழுவித்துண்ணும் வேளாண் மரபினராவர். கிடங்கில் என்பது நடு நாட்டிலுள்ள திண்டிவனம். இவர் பாடியது: நற். 218.

கிடங்கில் காவிதிப் பெருங்கொற்றனார்: (சங்க காலம்) இவர் பாடியது: நற். 364.

கிடங்கில் குலபதினைக்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 252.

கிருட்டிணசாமிப் பிள்ளை அ: அயிந்திர மதத் தமிழுரை (சோதிடம்) (1928).

கிருட்டிணசாமிப் பிள்ளை, தஞ்சை: இவர் சொக்கலிங்க தேசிகரின் மாணவர்; “நளநாடகமென்று வழங்குகின்ற தமயந்தி நாடகம்” இயற்றியவர். (சென்னை 1883.)
கிருட்டிணசாமி முதலியார், சாத்தபாக்கம்: இவர் குசேலமுனிவர் சரித்திரம் என்னும் நூலை உரை நடையிற் செய்தவர். (1893.)

கிருட்டிண சோசியர், நாங்கனேரி மூனாம்பண்ணை: இவர் பஞ்சாங்க கணனம் என்னும் நூலியற்றியவர். (திருநெல்வேலி 1897).

கிருட்டிண பரமாத்மா சாரியர்: சூத சம்கிதாசார சங்கிரகம்.*

கிருட்டிண பாரதி, திருநயம்: இவரும் நரசிம்மர் என்பவரும் அன்பிலாந்துறை மான்மிய மென்னும் நூல் செய்தனர்; (1895); திருவிளையாடல் நாடகம் என்னும் நூலும் இவராலியற்றப்பட்டது.

கிருட்டிணபிள்ளை: (1827-1900) இவர் பாளையங் கோட்டையினர்; கிறித்துவ சமயத்தினர். திருநெல்வேலி C.M. கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பண்டிதராயிருந்தவர். இரட்சணிய யாத்திரிகம், இரட்சணிய மனோகரம், இரட்சணிய குறள் முதலிய கிறித்துமதச் சார்பான நூல்களியற்றியவர். இரட்சணிய யாத்திரிகம் 47 படலங்களும் 4000 பாடல்களுமுடையது.

கிருட்டிண மாச்சாரியார், அரசாணிப் பாலை: இவர் பெரிய திருமொழி, முதலாயிரம், திருவாய் மொழி, அட்டாத தசரகசியங்கள், முமுட்சுப்படி, வசன பூஷணம், வர்த்த மாலை, சப்தகாதை முதலிய நூல்களை அச்சிட்டவர். (1883, 1889, 1889, 1879, 1882, 1882.)

கிருட்டிண மாச்சாரியர் (ஆத்தான சீயரின் சீடர்): திருமந்திரார்த்த விசாரம்.*

கிருட்டிண மாச்சாரியார், வேலாமூர்: இவர், திருப்புல்லைத் திரிபந்தாதி, திருவெவ்வுளூர்த் திரிபந்தாதி, திருக்குருகூர் திரிபந்தாதி, திருக்குருகூர் யமகவந்தாதி, திருநாகைத் திரிபந்தாதி, திரு அரியகுடி திரிபந்தாதி, திரு வரியாய் சிலேடை வெண்பா மாலை, அரியகுடியலார் மேன்மங்கை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்கள் பாடியவர். (சென்னை 1902.)

கிருட்டிணமூர்த்தி ஐயர்: மகாபாரத சதகம். (பிரமோதூத)

கிருட்டிணராசு: (20ஆம் நூ.): இவர் தாசரபட்டியினர்; பலதனிப் பாடல்கள் பாடியவர் (கொ.பு.)

கிருட்டிணர் (யாமுனரின் புதல்வர்): பாசுரப்படி இராமாயணம்.*

கிருட்டிணன்: பாரத அம்மானை. (ச.கை)

கிருட்டிணையர்: சிவகாமியம்மை பிள்ளைத் தமிழ் (1903.)

கிருட்டிணையர், மயிலாடுபுரம்: இவர் திருவையாறு, முத்துச்சாமி பாரதியார் செய்த விசுவ புராணத்துக்கு உரை இயற்றியவர். (1894.)

கிருபை சத்தியநாதன் அம்மாள்: இவர் கமலா, சுகுணா என்னும் இரண்டு சமூகக்கதை நூல்களியற்றியவர். (1896, 1898.)

கிள்ளி மங்கலங் கிழார் மகனார் சோகோவனார்: (சங்ககாலம்) இவர் இயற் பெயர் கோவனென்பதே. சோ என்னும் அடைமொழி பற்பலர் பெற்றிருக்கிறார்கள். இன்ன காரணத்தினால் இவ்வடைமொழி கொடுக்கப்படுவதென்பதும், இன்னபொருள தென்பதும் விளங்கவில்லை. இவர் வேளாண் மரபினர். கிள்ளிமங்கலம் பாண்டி நாட்டிலுள்ள ஓர் ஊர். இவர் பாடியது: நற். 365.

கீரங்கீரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 78.

கீரங்கொற்றனார்: (கி.பி. முதல் நூ.) இவர் நக்கீரர் மகன்; தந்தையிடம் அகப் பொருளுரை கேட்டவர் (இ.க.உ.)

கீரந்தையார்: (கி.பி. 50-) கீரந்தையார் என்பதற்குக் கீரன் தந்தை என்பது பொருள். பரிபாடல் 2ஆம் பாடல் இவர் பாடியது. “தப்பா முதல்” என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. கீரந்தை என்னும் ஒரு புலவர் இடைச்சங்கத்தவராக இறையனார் களவிய லுரை கூறுகின்றது.

குகை நமச்சிவாயர்: (16-ம் நூ.) இவர் திருவண்ணாமலையில் ஒரு குகையில் நிட்டைசெய்து கொண்டிருந்த சித்தர். இவர் குகையிலிருந்ததால் இப்பெயர் பெற்றனர். இவரது மாணாக்கர் குரு நமச்சிவாயர். இவர் செய்த நூல்கள் அருணகிரியந்தாதி, சோணகிரிமாலை முதலியன. குகை என்பது பிராமண ரல்லாத சைவத் துறவிகள் வாழ்ந்த மடம்.

குடபுலவியனார்: (கி.மு. 60-) இவர் புறம் 18இல் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். இவர் பாடியன: புறம். 18, 19.

குடமூக்கிற் பகவர்: (-?) இவர் பழங்காலப் புலவர்களுள் ஒருவர். இவர் வாசுதேவனார் சிந்தம் என்னும் நூல் செய்தாரென்பது “பொய்கையார் வாக்கும் குடமூக்கிற் பகவர் செய்த வாசுதேவனார் சிந்த முதலாகிய வொரு சார் செய்யுட்களும் எப்பாற்படுமோவெனின் ஆருடச் செய்யுள் எனப்படும்” என யாப்பருங்கல விருத்தியில் வருவதாலறியப்படும். (யா.வி.ப. 350.)

குடவாயிற் கீரத்தனார்: (கி.மு. 270.) இவரது ஊராகிய குடவாயில் தஞ்சை மாவட்டத்திலுள்ளது. இவர் நடுகற் சிறப்பையும் அதற்குப் படைக்கப்படும் தோப்பிக்கள்ளையும், இடப்பெறும் ஆட்டுப்பலியையும் சூட்டப்பெறும் மயிற் பீலியையும் பாராட்டியுள்ளார். திருக்கோவலூரரசனான காரியின் பெண்ணையாற்றுக் கொடுங்கான முன்றுறையையும், சேரன் படைத்தலைவர் களான நன்னன், ஏற்றை, அத்தி, கங்கன், கட்டி, புன்றுறை, கணையன் என்பார்கள் ஒன்று சேர்ந்து பெருஞ்சேட் சென்னியைக் கழுமலத்தில் எதிர்த்த செய்தியையும், அக்கழுமலப் போரில் அச்சென்னியின் படைத்தலைவனான பழையன் பட்டிறக்கச் சோழன் சினந்து கணையனை அகப்படுத்திய தோடு கழுமலத்தையும் கைப்பற்றிக் கொண்டமையையும் கூறியுள்ளார். இவர் பாடியன: அகம். 35, 44, 60, 79, 119, 129, 287, 315, 345, 366, 384, 385; குறு. 79, 281, 369; நற். 27, 42, 212, 379; புறம். 242.

குடவாயிலினல்லாதனார்: (சங்ககாலம்) இவர் பெருஞ்சாத்தனைப்பாடிய புலவர். (புறம். 242.)

குடவழுந்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம் 97.

குடிக்கிழார் மகனார் நெய்தற்றத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 243.

குட்டிக் கவுண்டர்: (20ஆம் நூ.) இவர் பேரூர் உடுமலைப் பேட்டையினர்; அரசம்பல விருத்தம் பாடியவர் (கொ.பு.)

குட்டுவன் கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 179 இவர் சேர அரசர் போலும்.

குட்டுவன் கீரனார்: (கி.மு. 125) இவர் ஆய் இறந்ததற்கு வருந்திக் கையறு நிலை பாடியுள்ளார். இவர் பாடியது: குறு. 179.

குணசாகரர்: (12ஆம் நூ.) இவர் யாப்பருங் கலக் காரிகைக்கு உரை செய்தவர்; சைன மதத்தினர்.

குணவீர பண்டிதர் அல்லது நேமிநாத அடிகள் ; (12ஆம் நூ.) இவர் தொண்டை நாட்டுக் களந்தை என்னு மூரிற் பிறந்தவர். இவர் திரிபுவன தேவன் எனப் பெயர் பெற்ற இரண்டாம் குலோத்துங்க சோழன் (1178-1216) காலத்தில் எழுத் தும் சொல்லும் கூறும் நேமிநாதம் என்னும் இலக்கணம் செய்து பண்டிதமுனி என்னும் புலவர் முன்னிலையில் அரங்கேற்றினர். வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் இவரால் இயற்றப்பட்டது. நேமிநாதம் சின்னூல் எனவும் அறியப்படும்

குண்டலகேசி ஆசிரியர்: (7ஆம் நூ.) குண்டலகேசி யென்பது ஒரு பௌத்த நூல். இந்நூல் செய்த ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. குண்டலகேசி ஒரு வணிக கன்னியின் கதையைக் கூறுகின்றது. அவள் அருக்க சந்திரன் என்பவனிடத்தில் பௌத்த தருமத்தைக் கற்று நாவலந்தீவிலுள்ளாரை வாதத்தில் வென்று பௌத்தராக்குவேனென உறுதிகொண்டு பல்லோரு மியங்கும் கோட்டை வாயில் வழியில் நாவல் மரத்தினை நட்டு அவ்வழிச் செல்வாரைத் தடுத்துத் தன்னுடன் வாது செய்ய வந்தாரை வாதில் வென்று பௌத்தராக்கி வந்தனள். ஆவணம் என்னும் நகரில் நாதகுப்தனார் என்னும் அருகரையும் வென்றனள். இதுவே, குண்டல கேசிக் கதைச் சுருக்கம்.

குண்டுகட்பாலி ஆதனார்: (கி.மு. 87) இவர் செல்வக் கோவாழி ஆதனைப் புறம் 387இல் பாடியவர். பாலி என்பது இவர் ஊர். குண்டுக்கண் என்பது இவர் ஆழ்ந்த கண்ணைக் குறிக்கும். இவர் பாடியன நற்: 220; புறம்: 387.

குதம்பேய்ச் சித்தர்: (15-ம் நூ?) இவர் பெண்களைப் பேயென்று கருதுபவர்; சித்தருளொருவர். இவர் பாடியது குதம்பேய்ச் சித்தர் பாடல்.

குதிரைத் தறியனார்: (கி.மு. 87) குதிரைத்தறி என்பது ஓர் ஊர் போலும். இவர் பாடியது: நற். 296.

குப்புச்சாமி இராசு, தஞ்சாவூர்: இவர், பால போதம். தர்க்க கௌமுதி, விருத்திப் பிரபாகரம், விருத்தி இரத்தினாவலி, அபரோட்சானுபூதி, தத்துவ போதம் முதலிய நூல்களை மொழி பெயர்த்தவர்; விசார சாகரம் என்னும் நூலை அச்சிட்டவர்; உத்தர கீதையை வசன நடையில் எழுதியவர். (1898, 1901, 1902, 1905, 1897, 1898, 1898, 1902.)

குப்புச்சாமி முதலியார்: அநுசூயை வெண்பா (1922.)

குப்புச்சாமி முதலியார், கற்குளம்: இவர் ஒரு துறைக்கோவை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், நாலடியார், திருப்பாடற்றிரட்டு, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களை அச்சிட்டவர். (1905, 1903, 1903, 1905, 1902.)

குப்பைக் கோழியார்: (சங்ககாலம்) இவர் பாடிய பாடலில் “குப்பைக் கோழித் தனிப்போர் பெருவிளி” எனக் கூறினமையால் இவ்வாறழைக்கப்பட்டார். இவர் பாடியது: குறு. 305.

குமட்டூர் கண்ணனார்: (கி.மு. 328) இவர் இமயவரம்பன் நெடுஞ் சேரலாதன் மீது பதிற்றுப்பத்து இரண்டாம் பத்தைப் பாடி உம்பற் காடு 500 ஊர் பிரமதாயமும் 38 ஆண்டு தென்னாட்டுள் வருவதிற் பாகமும் பரிசிலாகப் பெற்றவர்; அந்தண மரபினர்; இது பிரமதாயம் பெற்றன ரென்பதால் தெரிகிறது. கண்ணனாரென்று ஒரு புலவருளர்; அவரின் வேறு படுத்தற்கு இவர் இங்ஙனம் வழங்கப் பெற்றார்.

குமர குருதாச சாமிகள் - பாம்பன்: (20ஆம் நூ.) இவர் இயற்றிய நூல்கள் நாலாயிரப் பிரபந்த விசாரம், பரிபூரணானந்த போதம், தகராலயம் (முருகன் வரலாறு), திவோத்ய சடாட்சரோபதேசம் என்னும் சிவஞான தேசிகம் (1893), வேதத்தைக் குறித்த வித்தியாசம் (1903), இராம சேது மான்மியம் (1897), சுப்பிரமணியமென்பதைக் குறித்த வியாசம் (1899), திருப்பா (1899) முதலியன. இவர் பாடிய பாடல்களின் தொகுதி, குமரகுருதாச சுவாமிகள் பாடலும் திருவலங் கற்றிரட்டு முதலாம் இரண்டாம் காண்டமும் என்னும் பெயருடன் அச்சில் வந்தது. (1901).

குமர குருபர தேசிகர்: (18ஆம் நூ. முற்.) இவர் ஆத்தும இராமாயணம், ஞானக் குறவஞ்சி முதலிய நூல்கள் செய்தவர்; பரிமேலழகரின் மரபில் தோன்றியவர்.

குமர குருபரர்: (17ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டில் சீவைகுந்த மென்னும் கைலாச புரத்தில் வேளாளர் குலத்தில் சண்முக சிகாமணி கவிராயருக்கும் சிவகாமியம்மைக்கும் புதல்வராய்ப் பிறந்தவர். இவர் ஐந்து வயதளவும் பேசாதிருந்து திருச்செந்தூர் முருகனருளால் ஊமை நீங்கிக் கந்தர் கலி வெண்பாப் பாடினர். இவர் மதுரைக்குச் சென்று மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடினர். திருமலை நாயகர் வேண்டியதற்கிணங்கி மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணி மாலை, மதுரைக் கலம்பகம், நீதி நெறி விளக்கம் முதலியன பாடினர். இவர் தருமபுரத்து மாசிலாமணி தேசிகரை ஆசிரியராகப் பெற்று ஞானமடைந்து அவர் கட்டளைப்படி காசியாத்திரை செய்து முகமதிய அரசனின் மதிப்புப் பெற்று அங்கு நிலம் கிடைக்கப் பெற்று அங்கு கோயில்களும் மடங்களும் கட்டினார். காசி மடத்தின் கிளை மடமாகவே தஞ்சாவூர்ப் பிரிவிலுள்ள திருப்பனந்தாள் மடம் ஆதியில் ஏற்பட்டது. இவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்காரை வாதில் வென்றார். இவர் செய்த நூல்கள் கந்தர் கலிவெண்பா, மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ், கைலைக் கலம்பகம், மீனாட்சியம்மை குறம், மீனாட்சியம்மை இரட்டை மணி மாலை, மதுரைக்கலம்பகம், நீதி நெறி விளக்கம், திருவாரூர் நான் மணி மாலை, முத்துக்குமார சுவாமி பிள்ளைத் தமிழ், சிதம்பர மும்மணிக் கோவை, சிதம்பரச் செய்யுட் கோவை, சிவகாமியம்மையிரட்டை மணிமாலை, பண்டார மும்மணிக் கோவை, காசிக் கலம்பகம், சகல கலாவல்லி மாலை என்பன. இவர் காசியிலே இந்தி மொழியில் ஆற்றிய கம்பராமாயணச் சொற்பொழிவைத் துளசிதாசர் கேட்டார் என்னும் செய்தியுள்ளது. துளசிதாசர் இராமாயணத்துக்கும் கம்பராமாயணத்துக்கும் நெருங்கிய உறவுண்டு.

குமரக் கடவுள்: குமரக் கடவுள் குமரம் என்னும் இலக்கணம் செய்தாரென்னும் ஐதீகமுள்ளது. இது ஒரு கற்பனைக் கதையாகத் தோன்றுகிறது. “ஆ. முத்துத் தம்பிப் பிள்ளையவர்கள் தென்மொழி வரலாற்றில் கூறியிருப்பது வருமாறு: “அகத்தியத்தின் முதனூல், இயலுக்குக் குமாரமும் இசைக்கும் நாடகத்துக் கும் இசை நுணுக்கமுமென்பர். அகத்தியர் குமரத்தைக் குமரக் கடவுளிடத் தும், இசை நுணுக்கத்தைச் சிவ பெருமானிடத்தும் உபதேசிக்கப் பெற்றார் என்பர்” `தனி நடங்குயிற்றும் சம்பு நம் பெருமான், தமருகப் பறைக்கண் அ இ உ னு வென், றமர்தரு சூத்திர மாதியீரேழ் பெற, வட மொழிக்கியல் பாணினி மாமுனிக்குத், திடமுற நன்கு தெரித்தமைபோல, விந்தமும் வேலை யும் வீறுபோய்க் குன்றக், கந்தமென் கமலக் கரத்தினை விதிர்த்த, வருந்தவக் கொள்கை யகத்திய முனிக்குத், திருந்திசை நுணுக்கச் செந்தமிழியலினைச், செப்பினன்’ என வரும் தாண்டவராய சுவாமிகள் வாக்குகளாற் பெறப்படும்.”

குமார குலசிங்க முதலியார்: (1826-1884) இவர் ஆங்கிலம் தமிழ் என்னும் இரு மொழிகளிலும் புலமையுடையராய் யாழ்ப்பாணத்திலே தெல்லிப்பழை என்னுமூரில் வாழ்ந்த கிறித்தவர். பதிவிரதை விலாசம் என்னும் நூல் இயற்றியவர். இவர் 1884இல் காலமானார்.

குமார சரசுவதி: (16ஆம் நூ.) இவர் கிருட்டிண தேவராயரின் அரண்மனைப் புலவர்களிலொருவர். இவர் பாடிய சில தனிப் பாடல்கள் உள்ளன.

குமாரசாமிப் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் பவானியினர்; பவானிப் பதிற்றுப் பத்தந்தாதி என்னும் நூல் பாடியவர் (கொ.பு.)

குமாரசிங்க முதலியார்: (19ஆம் நூ. முற்.) இவர் யாழ்ப்பாணத்தில் மாந்தோட்டையிலே நாவற் குழியிலுள்ள உயர் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1800இல் அரசினர் விதித்த ஆபரண வரிக்கு மாறாகக் கிளர்ச்சி செய்தமை யால் இவர் அரசினரால் விசாரணை செய்யப்பட்டுச் சவுக்கடித் தண்டனை விதிக்கப்பட்டார். இவர் கிறித்துவ கத்தோலிக்க மதத்தினர். இவர் செய்த பாடல் கள் மாந்தோட்டைப்பகுதிக் கத்தோலிக்க கோயில்களிற் பாடப்படுகின்றன.

குமார சுவாமி அவதானி: (16ஆம் நூ.) இவர் பாடியது தெய்வச்சிலையார் விறலிவிடுதூது. மற்றைய விபரங்கள் ஒன்றும் அறியப்படவில்லை.

குமார சுவாமி உபாத்தியாயர், களவை: இவர் இரணிய விசால மென்னும் நூல் செய்தவர். (சென்னை 1899.)

குமார சுவாமி தேசிகர்: (18ஆம் நூ. மு.) இவர் வீரவ நல்லூரிற் பிறந்தவர்; திருச்செந்தூர் ஆதீனத்தில் வாழ்ந்தவர். இவர் செய்த நூல் குமார சுவாமீயம் என்னும் சோதிட நூல் (1869). இதில் நாலு இயல்களும், 54 படலங்களும், 4312 பாடல்களுமுள்ளன.

குமார சுவாமி தேசிகர், காஞ்சிபுரம்: இவர் நைடதத்துக்கும் திருவாதவூரர் புராணத்துக்கும் உரை செய்துள்ளார். (1842, 1896.)

குமார சுவாமிப் புலவர் - அ: (1850 - 1922) இவர் சுன்னாகத்தில் வேளாண் மரபிற் பிறந்தவர்; தந்தை பெயர் ஆம்பலவாணர். இவர் முருகேச பண்டிதர், நாக நாத பண்டிதர் என்போரிடம் கல்வி பயின்றவர். இவர் பாடிய மொழி பெயர்ப்பு நூல்கள் மேக தூதக் காரிகை, இராமோதந்தம், சாணக்கிய நீதி வெண்பா முதலியன. இவர் செய்த பிற நூல்கள் தமிழ்ப்புலவர் சரிதம், வினைப்பகுபத விளக்கம், சிசு பால சரிதம் முதலியன. வித்துவான் கணேசையர் இவரிடம் கல்வி பயின்றவராவர்.

குமார சுவமிப் புலவர் - வ: (20ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்துப் புலோலி என்னுமூரில் வேளாண் மரபிற் பிறந்தவர்; கவி பாடுவதில் திறமை பெற்றவர். இவர் 1925இல் காலமானார்.

குமார சுவாமி முதலியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் யாழ்ப்பாணத்தைச் சார்ந்த வல்லுவெட்டி என்னுமூரிலே வேளாண் மரபிலுதித்தவர். தந்தை கதிர்காம பூபதி முதலியார். இவரியற்றிய நூல்கள் அருளம்பலக்கோவை, திருவிற் சுப்பிரமணியர் பதிகம், மூளாய்ச் சித்தி விநாயக ரூஞ்சல், நல்லைக் கலித் துறை, கந்தவன நாதர் ஊஞ்சல், இந்திர குமார நாடகம் முதலியன. இவர் பாடுந் திறமைக்கு எடுத்துக் காட்டு பின் வருஞ்செய்யுள் “கல்லைக் கடையர்கள் கைவிட் டெறியக்கனன்றெழுந்து, பல்லைத் திறந்துறுமிக் கவி தெங்கின் பழ முதிர்க்கு, மல்லற் பழனங்கள் சூழ் நல்லை நாதனை வந்தடைந்தோர்க், கில்லைப் பிரமக் குயவன் வனைதற் கேதுக்களே.” நல்லைக் கலித்துறை.

குமார சுவாமி முதலியார்: (20ஆம் நூ.) இவர் சேலத்தினர், கந்தபுராணக் கீர்த்தனை பாடியவர். (கொ.பு.)

குமார சுவாமி முதலியார்: இவர் மதன லீலாவதி என்னும் கதை எழுதியவர். (சென்னை 1901.)

குமார சுவாமி முதலியார், உடுப்பிட்டி: இவர் இயற்றிய பாடல்கள் குமார சுவாமி முதலியார் கவித்திரட்டு என்னும் பெயருடன் வெளியிடப்பட்டன. இவர் உவைமன் கதிரைவேற் பிள்ளையின் தந்தை. (வல்வை 1887.)

குமார சுவாமி முனிவர்: ஞான வந்தாதி (சர்வசித்து)

குமார சுவாமியார்: சிங்கீ°வரி பாரிசாத நாடகம்.*

குமார தேவர்: (18ஆம் நூ.) இவர் கன்னட தேசத் தரசர். இவர் சிலநாள் அரசு செய்து துறவுபூண்டு சாந்தலிங்க சுவாமிகளை ஆசிரியராகக் கொண்டு ஒரு அரசடியில் வாழ்ந்து திருப்போரூர் சிதம்பர சுவாமிகளுக்கும், ரெட்டி சிதம்பர சுவாமிகளுக்கும் அருள்புரிந்து பரி பூரணமடைந்தவர். அத்துவிதவுண்மை, விஞ்ஞான சாரம், பிரமானுபூதி விளக்கம், மகாராசா துறவு, ஆகம நெறிய கவல், பிரமானுபவ வகவல், வேதாந்த தசாவ வத்தைக் கட்டளை,வேதாந்த தச காரியக் கட்டளை,ஞானவம்மானை, பிரமசித்தி யகவல், உபதேச சித்தாந்தக் கட்டளை, சிவதரிசன வகவல், சமரச வகவல், சுத்தசாகம், சகசநிட்டை, திருவாதவூரர் புராண உரை முதலியன இவர் செய்த நூல்கள்.

குமார பாரதியார், புதுவை: சரவண தேசிகர் தோத்திரம், திருத்தொண்டர் மாலை.*

குமாரமலை மருந்தர்: (-?) இவர் பச்சைகந்த தேசிகராதீனத்தவர்; திருத்தினை நகர்ப்புராணம் பாடியவர்.*

குமாரவேலு முதலியார்: தில்லை வெண்பா மாலை. (அட்சய)

குமிழிஞாழலார் நப்பசலையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 160.

கும்ப கவி: (17ஆம் நூ.) குடந்தை வாசி; சாதியிற்கம்மாளர்; படிக்காசுப் புலவரோடு பகைமை கொண்டவர்; அவரைத் தொண்டைமான் சபையில் வென்றவர்; கிழவன் சேதுபதி சபையில் சம்மான மடைந்தவர்.

கும்பநாத செட்டியார்: ஆதிகும்பேசுவரர் தோத்திரப் பதிகங்கள். (பார்த்திப)

குருகைப் பெருமாள் கவிராயர்: (16ஆம் நூ.) இவர் திருநெல்வேலியைச் சேர்ந்த ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்த வேளாண் புலவர். இவர் மாறனலங் காரம் என்னும் அணி நூலொன்றியற்றியவர். மாறன்கிளவி மணிமாலை, நம்பெருமாள் மும்மணிக் கோவை, மாறனகப்பொருள், குருகாமான்மியம், திருப்பதிகக் கோவை முதலிய நூல்களும் இவர் செய்தவை. மாறன் பாப்பாவினம் என்னும் நூலும் இவர் செய்ததாகக் கருதப்படும்.

குருகை வைகுண்டர்: இராமாயணச் சிந்து.*

குருசரணாலயர்: - திருக்குறள் வசனம் (த. கனக சுந்தரம் பிள்ளை 1924.)

குரு ஞான சம்பந்தர்: ஞானசம்பந்த தேசிகர் பார்க்க.

குரு நமச்சிவாயர்: (16ஆம் நூ.) இவர் குகை நமச்சிவாயரின் சீடர். இவர் சிதம் பரத்தில் உறைந்து சிதம்பர வெண்பா, அண்ணாமலை வெண்பா, பரமரகசிய மாலை முதலிய நூல்களியற்றினவர். இவர் 1592-வரையில் வாழ்ந்தவர்.

குருபாத தாசர்: (18ஆம் நூ. முற்.) இவர் புல் வயலில் எழுந்தருளியிருக்கும் குமாரக் கடவுள் மீது குமரேச சதகமென்னும் நூல் பாடினார்.

குரு வாசு தேவேந்திர சுவாமிகள்: விவேக சாரம்.*

குலசேகர ஆழ்வார்: (9ஆம் நூ.) இவர் குலசேகரப் பெருமாள் எனவும் பெறுவர். இவர் திருவஞ்சைக் களத்திற் பிறந்த அரசர். இவர் தம் மகனுக்குப் பட்டமளித்துவிட்டுச் சீரங்கம், காஞ்சி முதலிய திருப்பதிகங்களை வணங்கி மன்னார்குடியில் பரம பதமடைந்தவர். இவர் சமக்கிருதத்தில் முகுந்தமாலை என்னும் நூல் செய்து அதனை 105 பாடல்களாகத் தமிழிற் செய்தார். இதுவும் நாலாயிரப் பிரபந்தத்தில் அடங்கியது.
இவர் பாடியது பெருமாள் திருமொழி.

குலசேகர பாண்டியன்: அம்பிகை மாலை, இலிங்க புராணம்.*

குலசேகர வரதுங்க பாண்டியன்: (16ஆம் நூ.) வாயுசங்கிதையைத் தமிழிற் பாடிய ஒரு பாண்டியன். அதிவீரராம பாண்டியன் பார்க்க.

குலசேகர வரகுண ராம பாண்டியன் ; வாயுசம்கிதை*

குலபதியார்: (-?) இவர் “உள்ளக் கமல மலர்த்தி” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் பாடியவராகக் காணப்படுகின்றார். இவர் பெயர் சங்கப் புலவர் வரிசையில் காணப்படவில்லை.

குவாவங் காஞ்சன்: (8ஆம் நூ.) கிழக்கூற்றத்துப் பவதாய மங்கலத்து அருளினிலை ஆயின குவாவங் காஞ்சன் எனச் சாசனத்தில் இவர் பெயர் காணப்படுகின்றது. இவர் பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறனைப் பாடிய பாடல் சாசனங்களிற் காணப்படுகின்றன. (சா.த.க.ச.)

குழந்தைக் கவிராயர்: மான்விடு தூது (உ.வெ. சாமிநாதய்யர் பதிப்பு 1936.)

குழந்தை முதலியார்: இராகவர் பிள்ளைத் தமிழ்.*

குழந்தை வேலுப்பிள்ளை, விழுப்புரம்: இவரும் அசலாம்பிகை அம்மாளும் திருவிடை யூர்த்தல புராணம் செய்தனர். (1909.)

குழற்றத்தன்: (சங்க காலம்) இவர் பாடியது குறு. 242.

குளம்பாதாயனார்: இவர் சங்ககாலப் புலவர்களிலொருவர். இவர் பாடியது: புறம். 253.

குளவலிங்கர்: திருவிடைக்கலைத் தல புராணம்.*

குறட்டி வரதையன்: (-?) வட ஆற்காட்டுச் சில்லா, திருவல்லத்துச் சிவாலயத்தின் கர்ப்பக் கிருகத்திருமதிலொன்றிற் கண்ட கல்வெட்டில் இவர் பெயர் காணப்படு கின்றது. இவர் வல்லை அந்தாதி என்னும் பிரபந்தம் பாடியுள்ளார். (சா.த.க.ச.)

குறமகள் இளவெயினி: (சங்ககாலம்) இவர் புறத்தில் (157) ஏறைக் கோனைப் பாடியுள்ளார்.

குறமகள் குறிஎயினி: (சங்ககாலம்) இவர் பெண்பாலார். இவர் பாடியது: நற். 357.

குறியிறையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 394. “குறமகளீன்ற குறியிறைப் புதல்வரோடு” என்று தமது பாடலிற் கூறினமையின் இவர் இப்பெயர் பெற்றார்.

குறுங்கீரன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 382.

குறுங்குடிமருதனார்: (சங்ககாலம்) இவர் பாடியன: அகம். 4; குறு. 344.

குறுங்கோழியூர் கிழார்: (கி.மு. 60.) இவர் தெற்கே குமரியையும் வடக்கே இமயத்தையும் கிழக்கிலும் மேற்கிலும் கடலையும் தமிழ்நாட்டெல்லையாகக் கூறியுள்ளார். புறம். 17, 20, 22 என்பன இவர் பாடியவை.

குறுவழுதி: இவர் சங்ககாலப் புலவர்களிலொருவர்.

குன்றத் தூரையன்: சிறீவசன பூஷண மீமாம்சா* (மணிப்பிரவாளம்.)

குன்றமெறித்த குமரவேள்: தலைச்சங்கப் புலவர்களுள் ஒருவர். (இ.க.உ.)

குன்றம் பூதனார்: (சங்ககாலம்) இவர் முருகக்கடவுள் பால் அன்புடையர்; அவருக்குரிய 9, 18ஆம் பரிபாடற் பாடல்களை இயற்றியவர். திருப்பரங் குன்றத்திலுள்ள சோலை, சுனை, அருவி, காந்தள், தினை, மயில் முதலிய வற்றை வருணித்து, அக்குன்றம் இமயத்தையும் முருகக் கடவுளின் ஊர்தி யாகிய யானையையும் ஒக்குமென்று இவர் கூறியிருப்பது பாராட்டற்பாலது. குன்றத்தை இங்ஙனம் அழகுபெறப் பாடியிருத்தலால் இவர் இப்பெயர் பெற்றனர் போலும்.

குன்றியனார்: (சங்ககாலம்) இவர் பாடியவை: அகம். 40, 41; குறு. 50, 51, 117, 238, 301, 336; நற். 117, 239.

குன்றூர் கிழார் மகனார் கண்ணத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியவை: நற். 332; புறம். 338.

கூகைக் கோழியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 364.

கூடலூர் கிழார்: (கி.மு. 62) இவர் தாம் குறித்த நாளிலே யானைக்கட் சேய் இறந்துவிட்டதற்காக வருந்திப் புறம் 229இல் பாடியுள்ளார். இதனால் இவர் வான நூல் வல்லுநரெனத் தெரிகிறது. எட்டுத் தொகையுளொன்றாகிய ஐங்குறு நூறு தொகுத்தாரிவரே. “புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்” என இவர் சிறப் பித்துக் கூறப்படுவர். முதுமொழிக் காஞ்சி இவர் பாடியது. இது ஒவ்வொன்று பத்து முதுமொழிகளடங்கிய பத்துப் பகுதிகளையுடையது. காஞ்சிப் பொருளைச் சொல்வதால் காஞ்சி எனப்பெயர் வாய்ந்தது. இவர் பாடியன பிற: குறு. 166, 167, 214; புறம். 229. முதுமொழிக் காஞ்சி செய்த கூடலூர் கிழார் பிறிதொரு கூடலூர் கிழார் எனவும் கருதப்படுவர். புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் பார்க்க.

கூடலூர்ப் பல்கண்ணனார்: (சங்ககாலம்) நற். 200, 380.

கூத்தனூரப்பன்: (16ஆம் நூ.) இவர் கிருட்டிண தேவராயர் காலத்து வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்.

கூர்மானந்தர்: கூர்மானந்தர் 50 (யோகம், இசவாதம்), கூர்மானந்தர் சூத்திரம் (³).*

கூலவாணிகன் சாத்தனார்: மதுரைக் கூலவாணிகன் சாத்தனார் பார்க்க.

கூவன் மைந்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 244.

கூழங்கையார் அல்லது கூழங்கைத் தம்பிரான்: (-1795) இவர் காஞ்சிபுரத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் திருவாரூர் மடத்தில் சில காலம் தம்பிரா னாக விருந்து மடாதிபதி சாட்டிய குற்றச்சாட்டில் தான் குற்றமற்றவரெனக் காட்டப் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியைப் பிடித்தமையால் இவர் கை ஊனமடைந்தது. ஆகவே இவர் கூழங்கையரென்று அழைக்கப்பட்டார். இவர் வண்ணை வைத்தியலிங்கச் செட்டியாரின் ஆதரவின்கீழ் யாழ்ப்பாணத் தில் குடியேறி கிறித்துவ மதத்தைத் தழுவியிருந்து தேவப் பிரசையின் திருக் கதை, யோசேப் புராணம் (1023 பாடல்) முதலிய நூல்கள் செய்தார். இவர் சிவியா தெருவில் வாழ்ந்து காலமானார்.

கூழிக் கொற்றன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 276.

கூற்றங் குமரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது ; நற். 244.

கேசவ முதலியார் க., திருத்தொட்டிக்கலை: இவர் அறுபத்து நாலு திருவிளை யாடற் சற்குருமாலை என்னும் நூல் இயற்றியவர் (1862).

கேசவனார்: (சங்க காலம்) இவர் முருகக் கடவுளுக்குரிய பரிபாடல் 14ஆம் பாடலை இயற்றியவர். இசைச் செய்திகளை இவர் பலபடப் பாராட்டியிருக் கிறார். இப்பாடலுக்கு இசை வகுத்தவரும் இவரே.

கையனார்: (-?) இவர் பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர். இவர் இலக் கணச் சூத்திரங்கள் பல யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்பட்டுள்ளன. நச்சினார்க்கினியரும் இன்னூற் சூத்திரங்களை மேற்கோள் காட்டியுள்ளார். “இயைபுத் தொடைக்கிவ்வாறெட்டு விகற்பமுஞ் சொன்னார் கையனார்.” (யா.வி.ப. 129)

கைலாச நாதபண்டாரம்: வீரைத்தல புராணம் (ஆங்கீரச)

கைலாச நாதர்: கைலாச நாதர் சதகம்.*

கைலாச நாதர்: கைலாச நாதர் சூத்திரம் (211.)

கைலாச நாதர் சீடர்: கைலாச நாதர் தோத்திரம்.*
கைலாச பிள்ளை, சிற்: (1857 - 1916) இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூரிற் பிறந்தவர். தந்தை பெயர் திருச்சிற்றம்பலம். இவர் இராச காவல் முதலியார் என்னும் பட்டம் வழங்கப் பெற்றவர். இவர் ஆங்கிலம், தமிழ் என்னும் இருமொழி வல்லுநராய் அரசாங்கப் பகுதியில் உத்தியோகத்திலமர்ந்தவர்; செய்யுள் யாத்தலில் வல்லவர்.

கொக்கோகர்: மதன நூல்.*

கொங்கணர்: (15ஆம் நூ.) இவர் கொங்கு நாட்டிலுள்ள ஊதியூர் மலையில் வாழ்ந்தவர். அதற்குக் கொங்கண மலை யென்றும் பெயருண்டு. இவரைத் திருமழிசை ஆழ்வார் காலத்தவர் என்று கூறுவாருமுளர். இவர் தஞ்சாவூரில் தம் பெயரால் சிவலிங்கம் தாபித்துப் பூசித்து முத்தி பெற்றனரென்பர். கடைக்காண்டம், திரிகாண்டம், கொங்கணர் ஞானம், குண வாகடம் என்பன இவர் பெயரால் வழங்குவன. “கடவுளோனொருவ னுண்டே வேத மொன்றே, காரண சற்குரு தீட்சை தானு மொன்றே, யடைவுடனே யவனருளுள்ளும் பதவியொன்றே, யம்புவியின் மனுப்பிறவி யானதொன்றே, நடைவழியும் பலமனுவோர்க் கொன்றேயல்லால், நால்வேத மறுசமய நடக்கை வேறாய்த், திடமுடைய தேவர் பலருண் டென்போர்கள் நரகுக் குள்ளாவர் திண்ணந் தானே” (கொங்கணர் ஞானம்). சமண பௌத்த மதங்கள் ஒழிக்கப்பட்டபின் தமிழ் மதம் ஆரிய மதச் சார்பு பெற்று பல கடவுட் கொள்கையும் வருணாச் சிரம ஒழுக்கங்களும் தலை காட்டிய காலத்திலேயே சித்தர்கள் தோன்றி னார்கள். சித்தர் காலத்தை கி.பி. 8ஆம் நூற்றாண்டு முதல் 15ஆம் நூற்றாண்டு எனக் கூறலாம்.

கொங்கண நாயனார்: வாலைக் கும்மி.*

கொங்குவேள்: (7ஆம் நூ.?) இவர் விசயமங்கலமென்னு மூரினர்; உதயணன் கதை என்னும் நூலைப் பாடியவர். இது கொங்குவேள் மாக்கதை பெருங்கதை எனவும் வழங்கும் “ஆரியத்திற் பைசாக மொழியிற் குணாட்டியர் என்னும் கவி கி.பி. முதல் நூற்றாண்டில் கோசாம்பி நகரத்தில் அரசாண்ட உதயணன் என்னும் வீரனைப் பற்றி இயற்றிய பெருங்கதையைத் தழுவி இந்நூலியற்றப் பட்டமையால் இதற்குப் பெருங்கதை யெனப் பெயர் வழங்குவதாயிற்று. குணாட்டியரது நூல் சைவ சமயக் கொள்கைகளை இடையிடையே எடுத்துக் கூறும். இந் நூலாசிரியர் சைனராயிருந்திருப்பின் தமது சமயக் கொள்கை யையே தமது நூலிற் சிறப்பாக எடுத்து மொழிதல் இயல்பே. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் கங்கை நாட்டை ஆண்ட துர்விநீதன் என்பவன் வட மொழியில் மொழி பெயர்த்துச் செய்த நூலிலிருந்து இந்நூலியற்றப் பட்டதென்று கொள்ளின் 6ஆம் நூற்றாண்டினிறுதியில் அல்லது 7-வது நூற்றாண்டில் இந்நூல் இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” (இலக்கிய வரலாறு. கா. சு.) கொங்குவேள் கொங்கு நாட்டு வேளாள வகுப்பினரைச் சேர்ந்த சிற்றரசர் களுளொருவர். உதயணன் கதை, கொங்குவேள் மாக்கதை எனவும் பெருங் கதை வழங்கும். உதயண குமார காவியமெனப் பிறிதொரு நூலுமுளது. அதுவும் உதயணன் கதையைக் கூறுவது.

கொ°தான், (Kostan): இவர் மாந்தையுவான் கொ°தான் என்பவரின் குமாரர். பூதத் தம்பி விலாசம் இயற்றியவர். இது மயிலட்டி நல்லையா பிள்ளையால் அச்சிடப்பட்டது. (யாழ்ப்பாணம் 1888)

கொடிக் கொண்டான் பெரியான் அதிச்ச தேவன்: (1230) இவர் மாறவர்மன் சுந்தர பாண்டியன் காலத்தே அவனது ஆத்தானத் தமிழ்ப் புலவராலும் தலைவர்களாலும் பெரிதும் அபிமானித்துக் கொண்டாடப் பெற்ற பெருங் கவிஞரென்பதும் காங்கேயன் பிள்ளைத் தமிழ் என்ற பிரபந்தமொன்று இவராற் பாடப் பெற்றிருந்த தென்பதும் சாசனங்களால் அறியப்படுதல் கண்டு கொள்க. (சா.த.க.ச.)

கொடி மங்கலம் வாதுளி நற் சேந்தன்: (சங்க காலம்) கொடி மங்கலமென்பது மதுரை சில்லாவிலுள்ளது. இவர் பாடியன: அகம். 179, 232.

கொட்டம் பலவனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 95.

கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகர்: இவர் கொட்டையூர் சிவக்கொழுந்து பண்டாரம் எனவும் அறியப்படுவர். இவர் இயற்றிய நூல்கள்: கொட்டையூர்ப் புராணம், கோடீச்சுரக் கோவை, பிரகதீசுவரர் உலா, குறவஞ்சி, சரபேந்திரர் சன்னிரோக சிகிச்சை, சரபேந்திரர் பலரோக வைத்தியம், சரபேந்திரர் வைத்திய முறை, சரபோசராசன் குறவஞ்சி.

கொடி ஞாழல் மணி பூதனார்: (-?) “ அறனறிந்தே மான்ற” என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்கப் புலவர் வரிசையில் இவர் பெயர் காணப்படவில்லை.

கொல்லனழிசி: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 26, 138, 145, 240.

கொல்லிக் கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 34.

கொள்ளம் பக்கனார்: (சங்ககாலம்) இவர் பெயர் பக்கனார். கொள்ளம் ஓர் ஊர். இவர் பாடியது: நற். 147

கொற்கைக் கோமான் குணராச சூரியன்: அசுவ வைத்தியம். (ச.கை.)

கொற்றங் கொற்றனார்: (கி.பி. 1-) கொற்றன் என்பதின் அன்விகுதிகெட்டு அம்முச்சாரியை புணர்ந்தது. இவர் பண்ணனென்னும் வள்ளலைப் பாடியுள்ளார். இவர் பாடியது: அகம். 52, 54; நற். 259.

கொற்றனார்: (சங்ககாலம்) இவர் செல்லூர்க் கொற்றனார் எனவும், செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங் கொற்றனார் எனவுங் கூறப்படுவர். செல்லூர் கீழைக் கடலருகிலுள்ளது. இவர் வணிக மரபினர். செல்லூர் கிழார் மகனார் பெருங் கொற்றனார் பார்க்க.

கோக்குள முற்றனார்: (சங்ககாலம்) இஃது ஊர் பற்றி வந்த பெயர். குளமுற்ற மென்பது ஓர் ஊர். குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனென வருவதால் இது ஓர்க. இவர் கோவென்னும் உரிமை பெற்ற உழுவித்துண்ணும் வேளாண் மரபினர். இவர் பாடியன: நற். 96; குறு. 98

கோடைபாடிய பெரும்பூதனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 259.

கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான்: (சங்ககாலம்) கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை எனப் புறத்துக் (245) காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம் 168; புறம். 245.

கோட்டாற்று இளம் பெருமானார்: (8ஆம் நூ.) கோட்டாறு என்பது திருவிதாங் கூரைச் சேர்ந்த நாகர்கோயிலின் பழைய பெயர். இவர் பெரும்பிடுகு முத்தரையன் சுவரன் மாறனைப் பாடியுள்ளார். (சா.த.க.ச.)

கோட்டியூர் நல்லாந்தையார்: (சங்ககாலம்) நல்லன்தந்தை நல்லாந்தை எனமுடியும். (தொல். எ. 348இல் ‘துவர’ என்றதினால் முடிக்க) பாண்டி நாட்டதாகிய திருக்கோட்டியூர் என்பது இதுவே. இவர் பாடியது: நற். 21.

கோணமா நெடுங்கோட்டனார்: (சங்ககாலம்) இவர் மருதத்திணையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது ; நற். 40.

கோதமனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம் 366. பதிற்றுப்பத்தில் மூன்றாம் பத்தில் பல் யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாடிய புலவர் பாலைக் கௌதமனார் எனப்படுவர். புறம் பாடிய கௌதமனாரிலிருந்து இவரைப் பிரித்தற்குப் போலும். இவர் பாலை என அடை கொடுக்கப்பட்டார். “ஆற்றல ழியும்” என்னும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாக காணப்படு கின்றது.

கோபால கிருட்டிண தாசர்: (18ஆம் நூ. முற்.) இவர் எம்பிரான் சதகம் என்னும் நூலியற்றியவர்; இடையர் மரபினர்.

கோபால கிருட்டிண பாரதியார்: (19ஆம் நூ.) இவர் நந்தனார் கீர்த்தனமும் பிற தனிக்கீர்த்தனங்களும் சிதம்பரக் கும்மியும் பாடியவர்.

கோபாலதாசர்: கர்ம சுலோக விரிவுரை, இராமனுச திவ்விய சூரிவைபவ மாலிக பிரகாசிகை, உத்தர°வாதினி, திருப்பல்லாண்டுரை.*

கோபால தேசிகர்: (20ஆம் நூ.) இவர் கோவை நாட்டினர்; சோதிடம் முதலிய பல நூல்களியற்றியவர்.

கோபால தேசிகர்: இலக்கியத் திரயசார உரை.*

கோபால பிள்ளை: பத்த விசயம் (ச.கை.)

கோப்பெருஞ் சோழன்: (கி.மு. 25) இவர் பிசிராந்தையார் பொத்தியார் என்னும் புலவர்களின் உயிர்த்தோழன். பிசிராந்தையார், பொத்தியார், புல்லூற்றூர் எயிற்றியனார், கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாகனார் என்போர் இவர் காலத்தவர். இவர் சோழன் இரும்பொறையால் வெல்லப்பட்டு வடக்கிருந்து உயிர் துறந்தார். இவர் பிரிவாற்றாது பிசிராந்தையாரும் வடக்கிருந்தார். இவர் பாடியன: குறு. 20, 53, 129, 147; புறம். 214, 215, 216.

கோரக்கர்: (10ஆம் நூ.) இவர் மச்சேந்திரர் மாணாக்கர்; கஞ்சாவை முதற் சரக்காகக் கொண்டு மருந்து பல செய்தவர். கோரக்கர் வைப்பு என்னும் நூல் இவர் செய்ததாக வழங்குகின்றது. மருந்துகளுக்கு கஞ்சாவைப் பயன் படுத்தும் முறையை இவர் கண்டு பிடித்தவராதலின் கஞ்சா கோரக்கர் முலி எனப்படும்.

கோவத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியன: குறு. 66, 194.

கோவிந்தசாமி ஆச்சாரியார்: (20ஆம் நூ.) இவர் திருப்பூரினர்; தென் செரிப்பிரந்தங்கள் பாடியவர். (கொ.பு.)

கோவிந்தசாமி ராசு. ஊ. வோ: (20ஆம் நூ.) இவர் கோவையினர்; எங்கள் ஊர் குன்றுடையானும் மக்களும் என்னும் நூல்கள் செய்தவர். (கொ.பு.)

கோவிந்தசாமி பிள்ளை, இராம: தருமை சண்முக தேசிக ஞான சம்பந்த பரமாசாரியார் ஆற்றுப் படை (1924).

கோவிந்த பாரதி: கூடற் பதிகம் (1925).

கோவிந்தப் பிள்ளை. வி.: மன்னார்கோயிற் புராணம் (1868.)

கோவூர் கிழார்: (கி.பி. 1-) இஃது ஊர்பற்றி வந்த பெயர். இவர் வேளாண் மரபினர்; நலங்கிள்ளியையும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனையும் பாடியவர். அவர்களாலாதரிக்கப்பட்டு வருகின்ற நாளில் நலங்கிள்ளி யென்பான் ஆவூரை முற்றுகை செய்ய, அக்காலத்து உள்ளே அடைத்திருந்த நெடுங்கிள்ளியை அதனைத் திறந்து போர் செய்யும்படி இவர் பாடினர். (புறம் 44). அந்நெடுங்கிள்ளி அதனைத் திறந்து நலங்கிள்ளி பால் விட்டுச் சென்று உறையூரை யடைந்து அங்கு வைகினர். ஆவூரைக் கைப்பற்றிய நலங்கிள்ளி சென்று உறையூரை முற்றுகை செய்தான் (புறம். 45). அந்நாளில் நலங்கிள்ளி யிடமிருந்து உறையூரினுட் புகுந்த இளந்தத்தனை ஒற்றுவந்தானென்று நெடுங்கிள்ளி கொல்லப் புகுந்தபோது அவனைக் கொல்லாதபடி தடுத்து உய்யக் கொண்டார். (புறம். 947). பின்னர் பகை முற்றாவண்ணம் முற்கூறிய சோழரிருவரையும் சந்துபடுத்திப் போரை விலக்கி நெடுங்கிள்ளியையும் பலவாறு புகழ்ந்து பாடி அப்பால் கிள்ளிவளவன்பால் வந்தனர். அம்மன்னன் யாதோ ஒரு காரணத்தால் மலையமான் மக்களை யானையின் காலில் வைத்து இடறும்படி கட்டளையிடக்கண்டு அவனைப்பாடி அம்மக்களை உய்வித் தார். இவர் பாடியன: புறம்.31, 32, 33, 41, 44, 45, 46, 47, 68, 70, 308, 373, 382, 386, 400; நற். 393; குறு. 65; திருவள்ளுவ மாலை 38ஆம் பாடல். பன்னிரு பாட்டியலின் பகுதி இவர் செய்த பாட்டியலிலுள்ளதெனக் கொள்ளப்படும்.

கோவூர் கிழார் மகனார் செழியனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 383.

கோவேங்கைப் பெருங்கதவன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 134.

கோழிக் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 276.

கோழியூர் கிழார் மகனார் செழியனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 383.

கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்: (கி.பி. 21.) சேரமான் குட்டுவன் கோதை, சோழன் இலவந்திகைப் பள்ளியிற்றுஞ்சிய நலங்கிள்ளி, சேட்சென்னி, ஏனாதி திருக்கிள்ளி, ஈழத்தூர்கிழான், தோயன்மாறன், சோழன் குராப்பள்ளித்துஞ்சிய பெருந்திருமாவளன், சோழிய ஏனாதிக்குட்டுவன் முதலியோரை இவர் பாடியுள்ளார். இவர் பாடியன: புறம். 54, 61, 167, 180, 197, 394.

கோனேரி தாஜே: திருவாய்மொழி, வாசகமாலை (ச.கை.)

கோனேரியப்ப முதலியார்: (18ஆம் நூ. முற்.) இவர் உபதேச காண்ட மியற்றியவர். இதில் 41 சருக்கங்களும், 4,350 பாடல்களுமுண்டு. இவர் கச்சியப்ப முனிவரின் மாணவர் எனச் சிலர் கூறியுள்ளனர். இவர் 12ஆம் நூற்றாண்டில் விளங்கியவராகிய கச்சியப்ப சிவாசாரியரின் மாணவரெனக் கூறுவர் எம்.எ°. பூரணலிங்கம் பிள்ளை. இலக்கிய வரலாறுகாரர் 18ஆம் நூற்றாண் டென்றனர்.

கௌசிக முனி: கௌசிக முனி வகார சூத்திரம்.*

கௌசியனார்: இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங் கௌசியனார் பார்க்க.

கௌதமனார்: கோதமனார் பார்க்க.

சகநாதையர்: மீனாட்சியம்மை, இரட்டை மணிமாலை (துந்துபி.)

சகலாகம பண்டிதர்: அருணந்தி சிவாசாரியர் பார்க்க.

சகாதேவர்: தொடுகுறி சாத்திரம். (1892)

சக்கரபாணி ஆச்சார்: (-?) கொங்கு நாட்டு ஊஞ்சலூரினர்; செல்லாண்டி யம்மன் சதகம் என்னும் நூல் செய்தவர். (கொ.பு.)

சங்கத்தார்: அழகர் பிள்ளைத் தமிழ்.*

சங்கயாப்புடையார்: (-?) இவர் பழைய இலக்கண நூலாசிரியருள் ஒருவர். இவர் சங்கயாப்பு என்னும் இலக்கணம் செய்துள்ளார். இச்சூத்திரங்களிற் பல யாப்பருங்கல விருத்தியில் எடுத்தாளப்பட்டுள்ளன. “`அகவலென்பது ஆசிரியப்பாவே’ என்பது சங்கயாப்பாகலின்” (யா.வி.ப. 78.)

சங்கர கவி: சங்கராச்சாரியர் பார்க்க.

சங்கர பண்டிதர்: (1821 - 1891) இவர் யாழ்ப்பாணத்து நீர்வேலியில் வாழ்ந்தவர்; தந்தை பெயர் சிவகுருநாதர். இவர் வடமொழி, தமிழ் என்னும் இருமொழி வல்லவர். சிவப்பிரகாச பண்டிதர் இவருடைய மகனாராவர். இவர் இயற்றிய நூல்கள் சைவப் பிரகாசனம், சத்தசங்கிரகம், அகநிர்யணத் தமிழுரை, சிவபூசையந்தாதியுரை, கிறித்துமத கண்டனம், சிவதூடண கண்டனம், அனுட்டான விதி முதலியன.

சங்கர நமச்சிவாயர்: (17ஆம் நூ. பிற்.) இவர் திருநெல்வேலியிற் பிறந்து இலக்கணக் கொத்து சாமிநாத தேசிகரிடமும், ஈசான தேசிகரிடமும் தமிழ் பயின்றவர். இவர் பொலிகார் மருதப்பதேவன் என்பவர் கேட்டுக் கொண்ட படி நன்னூலுக்கு ஒரு விருத்தியுரை செய்தார். இவ்வுரை சிவஞான யோகி களால் திருத்தப்பட்டது. அவரது மூல உரையை உ.வே. சாமிநாதையர் பதிப் பித்துள்ளார்.

சங்கர நாராயண பிள்ளை: திருத்தொண்டர் ஆனந்தக் களிப்பு.

சங்கர நாராயணர்: மதுரைக் கோவை (எ°. வையாபுரிப்பிள்ளை 1934).

சங்கரமூர்த்திப் புலவர், நல்லூர்: மாணிக்கவாசக ரம்மானை.*

சங்கவருணர் என்னும் நாகரிகர்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 390.

சங்கரமூர்த்தி கவிராயர்: (18ஆம் நூ.) இவர் சிவஞான முனிவரின் மாணாக்கரு ளொருவர். இவர் இராசபாளையத்தில் கார்காத்த வேளாள மரபிற் பிறந்தவர்; கன்னிவாரி செமீன்தார்மீது கோவை பாடி யானைக் கன்றும் ஊரும் பெற்றவர்; சேற்றுர் செமீன்தார் மீது பள்ளும் பாடியவர்.

சங்கராச்சாரியர்: ஞானவுலா, சங்கராச்சாரியம் (சோதிடம்) சத்தகாண்டம் (சோதிடம்).

சசிவர்ணர்: (15ஆம் நூ.) இவர் விருத்தாசலத்தில் சாந்த சீலனுக்கும் விரதசீலை என்பவருக்கும் பிறந்த குமரன். இவர் பிறக்கும்போது வெண்குட்டமிருந் தமையால் இவருக்கு இப்பெயர் வந்தது. இந் நோய் இவருக்குத் தத்துவராயர் தீட்சை செய்தபின் நீங்கிற்று. இவர் செய்த நூல் சசிவர்ணபோதம். இது தத்துவராயர் செய்ததாகவும், சோதிப்பிரகாசர் செய்ததாகவும் வழங்கும்.

சச்சிதானந்த சுவாமிகள்: சித்தானந்த கீதை.*

சடகோப தாசர் கீழையூர்: (18ஆம் நூ.) வைணவப் புலவராகிய இவர் அரிசமய தீபம் என்னும் நூல் செய்தவராவர்.

சடகோபப் புலவர்: குருகூர்ப்பள்ளு (1932).

சடகோபர்: நம்மாழ்வார் பார்க்க.*

சடாட்சர சித்தர்: குரு உபதேசம்.*

சடையன்: திருக்குருகைப் பெருமாள் கவிராயர் பார்க்க.*

சட்டைநாத வள்ளல்: (18ஆம் நூ. முற்.) இவர் சீகாழியிலிருந்து வாதுளாகமத்தின் ஞானபாகத்தைச் சதாசிவரூபம் எனத்திரட்டியவர்.

சட்டைமுனி: (-?) இவர் போக முனிவரின் மாணாக்கர்; சேணிய மரபினர்: இவர் பாடிய நூல்கள்: சட்டை முனிஞானம் 200, சட்டைமுனி 1200, திரிகாண்டம், சரக்குவைப்பு, நவரத்தின வைப்பு, சடாட்சரக் கோவை, கற்பம் நூறு, வாதநிகண்டு, நவரத்தின வைப்பு, வாத வைப்பு.

சண்முக சுவாமிகள்: திருப்பனந்தாள் சடையப்பர் மாலை முதலியன (விகாரி), தருமைச் சந்தான தேசிகர் போற்றிக் கலி வெண்பா, தருமை ஞானசம்பந்த தேசிகர் மாலை (1893), செந்தமிழ் இரட்டை மணி மாலை (1909).

சண்முகச் சட்டம்பியார்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே வட்டுக் கோட்டையில் 1794-இல் பிறந்தவர்; வட்டுக்கோட்டை கலாசாலையில் ஆசிரிய ராக விருந்தவர்; சைவராயிருந்து பின் கிறித்துவ சமயத்தைத் தழுவியவர்.

சண்முகம் பிள்ளை: (1869-1914) அரசஞ் சண்முகனார் பார்க்க. (பின் சேர்ப்பு.)

சண்முகம் பிள்ளை, மயிலை: (20ஆம் நூ.) இவர் மயிலாப்பூரில் வாழ்ந்தவர்; மணிமேகலையை முதலில் அச்சிட்டவரிவரே. திருமுல்லை வாயிற் புராணம், திரிசிரா மலைமான்மிய சங்கிரகம் (1889), புவனாம்பிகை சோடசயாகோத்பவ மாலை இவர் இயற்றியவை. இவர் பல மாணவருக்குக் கல்வி பயிற்றியவர்.

சதாசிவ சோதிடர்: சோதிட சந்திர காவியம்.*

சதாசிவ தேசிகர்: (17ஆம். நூ.) இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரின் புதல்வர்; இலக்கண விளக்கத்துக்குச் சிறப்புப்பாயிரங் கூறியவர்.

சதாசிவ பண்டிதர்: (20ஆம் நூ.) இவர் பொன் வினைஞர் குலத்திலே யாழ்ப்பாணத்து நாச்சிமார் கோயில் என்னும் கிராமத்திற் பிறந்தவர். இவர் பாடிய நூல்கள்: வண்ணையந்தாதி, வண்ணை நகரூஞ்சல், சிங்கை நகரந்தாதி முதலியன. இந்நூல்கள் 1887இல் அச்சிற் பதிப்பிக்கப் பெற்றன.

சதாசிவ நாவலர்: (வைத்தியநாத நாவலர் புதல்வர்), இலக்கண விளக்க உரை*. சதாசிவ தேசிகர் பார்க்க.

சதாசிவம் பிள்ளை: (1820-1896) இவர் யாழ்ப்பாணத்து மானிப்பாயிலே பிறந்து ஆங்கிலம் தமிழ் என்னும் இருமொழியுங்கற்று உதயதாரகைப் பத்திரி கைக்குத் தலைவராயிருந்தவர். இவர் கிறித்துவ மதத்தைத் தழுவி ஆணல் என அறியப்பட்டார். இவர் இயற்றிய நூல்கள் பாவலர் சரித்திர தீபகம், வெல்லையந்தாதி, திருச்சதகம், நன்னெறிமாலை, நன்னெறிக் கதாசங்கிரகம் முதலியன. பாவலர் சரித்திர தீபம் 1886இல் அச்சிடப்பட்டது. இந்நூல் சைமன் காசிச் செட்டி செய்த தமிழ்ப்புலவர் (Tamil Plutarch) என்னும் நூலின் மொழி பெயர்ப்பாகவுள்ளது.

சதானந்த தாசர்: முத்துக் குமார சுவாமி பதிகம் (சர்வ சித்து).

சத்தி நாதனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 119.

சத்திமுற்றப் புலவர்: (13ஆம் நூ.) இவர் பிறந்தவூர் சத்தி முற்றம்; அது கும்ப கோணத்துக் கருகிலுள்ளது. இவரை ஆதரித்தவர் சோழநாட்டுக் குடிதாங்கி யென்னும் வள்ளல். இப்புலவர் வறுமையால் பாண்டியன் அவைக்குச் செல்லக்கருதிக் கூடற்பதியினை யடைந்து ஒரு சத்திரத்திற் படுத்துக்கொண்டு தமது வறுமையை நினைந்து ஒரு நாரையைத் தம் மனைவிபால் தூது விடுப்பப் பாடிய பாட்டிற் பனங்கிழங்கினை அந்நாரையின் மூக்கிற்கு உவமை கூறினமையை நகர சோதனைக்கு வந்த அரசன் கேட்டு மனமகிழ்ந்து வறுமை தீர்த்தனன். அவர் பாடிய நாரைவிடு தூது வருமாறு: “நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன, பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய், நீயுநின் மனைவியும் தென்றிசைக் குமரியாடி, வடதிசைக் கேகுவீ ராயின், எம்மூர்ச் சத்திமுற்ற வாவியுட்டங்கி, நனைசுவர்க் கூரை கனைகுரற்பல்லி, பாடு பார்த்திருக்கு மென் மனைவியைக் கண்டு, எங்கோன் மாறன் வழுதி கூடலில், ஆடையின்றி வாடையின் மெலிந்து, கையது கொண்டு மெய்யது பொத்திக், காலது கொண்டு மேலது தழீஇப், பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும், ஏழையாளனைக் கண்டன மெனுமே.”

சத்திய ஞானி, நாகை: நீதிசார அனுபவத் திரட்டு.*

சத்திவேற் பிள்ளை ஆ. தேவகோட்டை: இறகு சேரி மந்திரமூர்த்தி விநாயகர் பிள்ளைத் தமிழ். (விய).

சந்திரசேகர கவிராயர்: (19ஆம் நூ. பிற்) இவர் சோழநாட்டிலே தில்லையம்பூரிற் பிறந்து பொன்னுச்சாமி தேவர் காலத்தில் வாழ்ந்தவர். இவர் தனிப்பாடற் றிரட்டு என்னும் நூலை அச்சிட்டனர். துலங்காணத்தம்மன் பதிகம், வருடாதி நூல் என்பன இவர் இயற்றியவை.

சந்திரசேகர சுவாமி: சர்வவேத சித்தாந்த சாரசங்கிரகம்.*

சந்திரசேகர பண்டிதர்: (-1878) இவர் உவின்சுலோ அகராதி தொகுத்து வெளியிடுவதற்குத் துணைபுரிந்தவர். இவர் தமிழன்றி ஆங்கிலமும் சமக்கிருதமும் நன்கு பயின்றவர்.

சந்திரசேகர பண்டிதர்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலே அந்தண மரபிற் பிறந்தவர். இவர் பாடியது நல்லூர்க் கந்தசுவாமி மீது கிள்ளைவிடு தூது. இது 1786இல் பாடப்பட்டது.

சந்திரசேகர நாயகர்: திருக்கூடலை யாற்றுப் புராணம் (1934).

சந்திரசேகரன்: பேரகராதி (மானிப்பாய் அகராதி 1842). முதலிற்கூறிய சந்திரசேகர பண்டிதர் இவராகலாம்.

சபாபதி நாவலர்: (1843-1903) இவர் யாழ்ப்பாணத்து வடகோவையில் 1844இல் பிறந்தவர். இவர் தந்தை பெயர் சுயம்புநாத பிள்ளை. இவர் ஆறுமுக நாவலரிடம் கல்வி கற்றவர்; பேசும் எழுதும் திறமை நிறைந்தவர். இவர் இயற் றிய நூல்கள்: யேசுமத சங்கற்ப நிராகரணம், சிதம்பர சபா நாதர் புராணம், சிவகர்ணாமிர்தம், பாரததாற்பரிய சங்கிரகம், இராமாயண தாற்பரிய சங்கிரகம், சதுர்வேத தாற்பரிய சங்கிரகம், திருச்சிற்றம்பல யமக வந்தாதி, திருவிடை மருதூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி, மாவையந்தாதி, நல்லைச் சுப்பிரமணியக் கடவுள் பதிகம், இலக்கண விளக்கப் பதிப்புரை மறுப்பு; வைதிக காவிய தூஷண மறுப்பு, திராவிடப் பிரகாசிகை என்பன. திராவிடப் பிரகாசிகை தமிழ்ப் புலவர்களையும் அவர்கள் நூல்களைப் பற்றியும் கூறுகின்றது. இது 1899இல் அச்சிடப்பட்டது.

சபாபதிப் பிள்ளை: திருச்சிற்றம்பல யமகவந்தாதி (தாது).

சபாபதிப்பிள்ளை: (20ஆம் நூ.) இவர் கும்பகோணத்தினர்; கோவை கவுடாம்பிகை மாலை, பேரூரந்தாதி முதலிய நூல்களியற்றியவர். (கொ.பு.)

சபாபதிப்பிள்ளை: (-?) இவர் கொங்குநாட்டைச் சேர்ந்த பொள்ளாச்சி என்னும் ஊரினர்; பொள்ளாச்சி, நடராசர் தோத்திரப்பாமாலை, சுப்பிரமணியர் நான்மணி மாலை முதலிய நூல்களியற்றியவர். (கொ.பு.)

சபாபதி முதலியார்: திருக்கழுக்குன்றச் சிலேடை. (உ.வே. சாமிநாதையர், 1933).

சபாபதி முதலியார், காஞ்சிபுரம்: நீதி நெறி விளக்க உரை.*

சப்த இருடிகள்: சப்த இருடி நாடி.*

சமண முனிகள்: நாலடியார்.*

சமய திவாகர வாமன முனிவர்: (16ஆம் நூ.) இவர் நீலகேசி என்னும் சமண நூலுக்கு விரிவான உரை செய்தவர். “மெய்ந் நூனெறியை விளக்கி விளங்காப் பிடகமுதற், பொய்ந் நூலிருள்களைப் போகத் துரந்தது பூதலத்தி, லெந்நூலும் வல்லவ ரேத்தச் சமயத் திறைவன் கண்ட, செந்நீல கேசிவிருத்தி சமய திவாகரமே” எனவும் “அருகன்றிருவறத் தன்புசெய் வாரு மழிவழக் காற், பெருகுந்துருநெறிப் பீடழிப் பாருமிப் பேருலகிற், பொருவின்றி நின்ற தமிழ்ப்புல வோர்க்கிப் பொருளை யெல்லாந், திரிவின்றிக் காட்டுஞ்சமய திவாகரஞ் சேவிக்கவே” எனவும் வரும் பழம் பாடல்கள் இவ்வுரையின் சிறப்பை விளக்குவன. வாமனமுனிவர் ii பார்க்க.

சம்பந்த சரணாலயர்: (16ஆம் நூ.) இவர் தருமபுரமடத்துப் பண்டார சந்நிதிகளி லொருவர்; மைசூர் அரசன் வேண்டுகோளுக் கிணங்கிக் கந்தபுராணச் சுருக்கம், சிகர ரத்னமாலை என்னும் நூல்கள் செய்தவர். கந்தபுராணச் சுருக்கத்தில் தெய்வயானை; வள்ளிநாச்சியார் திருமணம், சூராதியருற்பத்தி ஒடுக்க முதலிய கூறப்பட்டுள்ளன.

சம்பந்த முனிவர்: (16ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டிலே அளகாபுரியில் சைவ வணிகர் குலத்திற் பிறந்தவர். நிரம்பவழகியரிடம் உபதேசம் பெற்றவர். திருவாரூர்ப் புராணம் பாடியவர்.

சம்பந்தர்: (7ஆம் நூ.) இவர் சீகாழியிலே அந்தணர் குலத்தில் பிறந்து சிவபிரான் மீது பலதுதிகள் பாடியுள்ளார். இவர் காலத்திலிருந்தவன் கூன்பாண்டியன். இவன் சமண சமயத்தைத் தழுவியிருந்தான். சம்பந்தர் கூன்பாண்டியனுக்கு நேர்ந்த வெப்பு நோயைத் தீர்த்துச் சமணரை வென்றார். 16-வது வயதில் இவர் இறைவனுடன் ஐக்கியமானார். இவர் திருக்கோணேசுவரம், திருக்கேச் சுரம் முதலிய இலங்கைச் சிவன் கோயில்கள் மீதும் பதிகங்கள் பாடியுள்ளார். இவர் பாடியனவாகச் சொல்லப்படும் பதிகங்கள் 10,000. இன்று உள்ளவை 384 பதிகங்களே. அப்பர் சுவாமிகள், சிறுத்தொண்ட நாயனார் என்போர் இவர் காலத்தவர். சம்பந்தர் சிறுவராயிருக்கும்போது அப்பர் சுவாமிகள் முதியவராக விருந்தார்.

சம்பந்தாண்டான்: (15ஆம் நூ.) இவர் திருவண்ணாமலைக் கோயிற் குருக்களும் புலவருமாவர். இவர் கர்வத்தால் தாம் சவரம் செய்து கொள்ளும் செயலைப் பாடலாகக் காளமேகப் புலவரைப் பாடச் சொல்ல அவர் “மன்னு திரு வண்ணாமலைச் சம்பந்தாண்டாற்கு, பன்னு தலைச்சவரம் பண்ணுவதேன் மின்னின், இளைத்த இடைமாதரின் குடுமிபற்றி, வளைத்திழுதுக்குட்டா மலுக்கு” எனப் பாடிய பாடல் பெற்றவர். இரட்டையர் செய்ததாகவும் இப் பாடல் வழங்கும்.

சம்போக நாதர்: சம்போக நாதர் வாதசித்தி.*

சயங்கொண்டார்: (11ஆம் நூ.) இவர் குலோத்துங்க சோழனின் அரண்மனைப் புலவர் (1078-1118). இவர் தீபங்குடியைச் சார்ந்தவர்; சோழனது கலிங்கப்போர் வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி பாடியவர். உமாபதி, திருமால், நான்முகன், இரவி, பிள்ளையார், முருகன், நாமகள், உமையவள், ஏழு மாதர் என்போர்க்கு வணக்கம் கலிங்கத்துப் பரணியிற் காணப்படுதலின் இவர் சைவ மதத்தினரென அறியலாகும். இவர் சமண மதத்தினர் என்று கூறுவாரு முளர். இவர் தீபங்குடியைச் சார்ந்தவர். இவர் செட்டிகள்மீது இசையாயிரம் பாடியதாகக் கேட்கப்படுகின்ற தென்பர் இலக்கிய வரலாற்று ஆசிரியர்.

சரசலோசன செட்டி, திருவெவ்வுலூர்: (19ஆம் நூ. பிற்.) இவர் சரசாங்கி என்னும் தமிழ் நாடகம் இயற்றியவர் (1897).

சரவண தேசிகர்: (சுவர்க்க புரம் தவப்பிரகாசரின் மாணவர்) பஞ்சாக்கர வனுபூதி.*

சரவண தேசிகர்: (19ஆம் நூ.) இவர் திருப்போரூர் சிதம்பரசுவாமிகளின் சீடர்; முத்தி முடிவு, ஒருபா உண்மை உபதேசம், உபதேச சித்தாந்தம், உபதேச ஒருபா ஒருபஃது, வீட்டு நெறி உண்மை, தேவி காலோத்தரம், உபதேச சித்தாந்த விளக்கம் முதலிய நூல்கள் இயற்றியவர்.

சரவண தேசிகர் சீடர்: சரணவ தேசிகர் தோத்திரம், சிவானந்த மாலை.*

சரவணப் பெருமாள் ஐயர்: (19ஆம் நூ. நடுப்பகுதி) இவர் திருத்தணிகையில் வாழ்ந்த வீரiசவராகிய கந்தப்பையரின் இரண்டாவது குமாரர். இவர் 1830இல் பரிமேலழகர் உரையுடன் திருக்குறளைப் பதிப்பித்தார். கைக்கிளைப் படலம் வரையில் நைடகத்துக்கு உரை எழுதினார். இவரது புதல்வர் கந்தப்பையர் மீதிக்கு உரை எழுதினார். சரணவப் பெருமாள் ஐயர் நாலடியார், திருவிளையாடற் புராணம், திருவாசகம் முதலிய நூல்களைப் பதிப்பித்தார்; நல்வழி, மூதுரை, நன்னெறி முதலிய நூல்களுக்கு உரை எழுதினார்; இயற் றமிழ்ச் சுருக்கம், அணிஇயல் விளக்கம், கோளதீபிகை, நான்மணிமாலை, களத்தூர்ப் புராணம் என்பவற்றை இயற்றினார். இவர் பிரபுலிங்க லீலைக்கு மாலை உற்பத்தி வரையில் எழுதிய உரை உள்ளது.

சரவணப் பெருமாள் கவிராயர்: (19ஆம் நூ.) இவர் சிவஞான முனிவரின் மாணவராகிய சோமசுந்தர பிள்ளையிடம் கல்விகற்றவர்; முத்துராமலிங்க சேதுபதியின் அரண்மனைப் புலவராயிருந்தவர். இவர் பாடிய நூல்கள் பணம் விடுதூது, அசுவமேதயாக புராணம், விநாயகர் திருமுக விலாசம், முத் திருளப்ப பிள்ளை மீது காதல் முதலியன. இவர் பாடிய தனிப் பாடல்கள் பல.

சரவண முத்துப் பிள்ளை பி.ஏ. (B.A.): (19ஆம் நூ. பிற்.) இவர் திருக்கோண மலையினர். சென்னை பிரசிடென்சிக் கல்லூரி நூல் நிலையத் தலைவராகச் சிலகாலமிருந்தவர்; மோகனாங்கி என்னும் கதை (நாவல்) எழுதியவர், (1895). தத்தைவிடு தூது, தமிழ்ப் பாஷை என்னும் நூல்களுமிவர் செய்தன. (1892).

சரவணமுத்துப் புலவர்: (-1851) இவர் யாழ்ப்பாணத்திலே நல்லூரில் வாழ்ந்தவர்; சேனாதிராய முதலியாரின் மாணவர்; தர்க்கம் செய்வதில் வல்லவர். இவர் இயற்றிய நூல்கள் ஆத்மபோதப் பிரகாசிகை, வேதாந்த சுயம்சோதி முதலியன.

சர்க்கரை அருணாசலப் புலவர்: (18ஆம் நூ.) இவர் இராமநாதபுரம் பகுதியினர்; இவர் பொன்பற்றிச் செல்வி அம்மை மீது ஊசல் பாடியவர்.

சர்க்கரைப் புலவர்: (18ஆம் நூ.) இவர் சவ்வாது என்னும் முகமதிய புலவர் காலத்தவர். இவர் அராபியாவிலுள்ள மெக்காத் தலத்தின் மீது மெதீனந்தாதி பாடியவர். (எம்.எ°. பூரணலிங்கம் பிள்ளை.)

சர்க்கரைப் புலவர் - 2: (1645-70) இச் சைவப் புலவர் இராமநாதபுரம் கடார ஊரினர். இவர் திருச்செந்தூர்க் கோவை பாடியவர்; சிறு கம்பையூர், கொந்தளம் குளம், கூத்திக்குடி முதலிய இடங்களில் மானியம் அளிக்கப் பெற்றவர். சேதுபதி யின் அமைச்சர் தாமோதரன் வேண்ட வேதாந்த சூடாமணி சித்தாந்த உரை என்னும் உரை செய்தவர், தாமோதரன் மீது வேள்விக் கோவை பாடியவர்.

சர்க்கரைப் புலவர் - 3: (17ஆம் நூ.) இவர் மிழலைச் சதகம் பாடியவர். வண்டு வனப் பெருமாள் ஊசல், திருவனை சித்திர கவிமஞ்சரி முதலியனவும் இவர் பாடியன. இவர் பரம்பரையில் வந்த இராமசாமிப் புலவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஒரு தமிழாசிரியராக விருந்தவர்.

சர்க்கரை முத்துக் கறுப்ப புலவர்: இவர் இராமநாதபுரப் பகுதியினர். இவர் வைரவர் பதிகம் பாடியவர்.

சல்லிய முனி: சல்லிய நூல்.*

சவக்காரப் பிள்ளை: சவக்காரப் பிள்ளை இரகசியம்.*

சவரிராய பிள்ளை: பண்டிதர் சவரிராய பிள்ளை பார்க்க.

சவ்வாதுப் புலவர்: (17ஆம் நூ.) இவர் இராமநாதபுர அரசரால் பரிபாலிக்கப்பட்ட சைவப்புலவர்; இராச இராசேசுவரி பஞ்சரத்தினம் என்னும் நூல் இவர் இயற்றியது. இவ்வாறு எம்.எ°. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

சவ்வாதுப் புலவர்: (18ஆம் நூ.) இவர் முகைதீன் என்னும் முகமதிய புலவர்; செமினீச் சரத்திற் பிறந்தவர்; ஆண்டவன் பிள்ளைத் தமிழ் பாடியவர். இவர் தொண்டை நாட்டில் வாழ்ந்தவர்; ஆனந்தரங்க பூபதி மேலும் சோலையப்ப முதலியார் மீதும் பாடி இவர் பரிசு பெற்றார்.

சற்குரு சுவாமிகள்: சொரூப ஞான சங்கிரகத் திரட்டு. (1937)

சாகலனார்: (சங்ககாலம்) சாகலென்பது இவர் ஊர் போலும், இவர் குட்டுவனையும் அவனது கழுமலத்தையும் புகழ்ந்துள்ளார். இவர் பாடியவை: அகம். 16, 270.

சாக்கிய குத்தாநன்: உதீசித்தேவர் பார்க்க.*

சாத்தந்தையார்: (கி.மு. 130-) சாத்தன் தந்தை; சாத்தந்தை என்றாயிற்று (தொல். எழுத்து 347). இவர் முக்காவல்நாட்டு ஆமூர் மல்லனைப் போரிற் கொன்ற சோழன். தித்தன்மகன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளியின் வீரச்செயல் களைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். (புறம். 80). இவர் மகன் கண்ணஞ் சேந்த னாரே பதிணெண்கீழ்க் கணக்கிலொன்றாகிய திணைமொழி ஐம்பது பாடினர். இவர் பாடியன: நற். 26; புறம். 80, 81, 82, 287.

சாத்தனார்: (சங்ககாலம்) “ஆவனவு மாகாதனவும்” என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. குறுந்தொகையில் 349-வது பாடல் இயற்றியவர் சாத்தனாராகக் காணப்படுகின்றார். சீத்தலைச் சாத்தனார், மதுரைக் கூலவாணிகன் சாத்தனார், பெருந்தலைச் சாத்தனார், பெருஞ் சாத்தன் முதலிய பெயர்களும் சங்கப்புலவர் வரிசையிற் காணப்படுகின்றன. இவ்வாறு சாத்தனெனப் பெயர் பெற்றவர் பலராவர்.

சாந்த கவிராயர்: (18ஆம் நூ.) இவர் பிறசையிற் பிறந்தவர்; திருவரங்கக் கடவுள் பெயரால் இரங்கேச வெண்பா செய்தவர். இது சூடாமணி எனவும் வழங்கும். ஒவ்வொரு வெண்பாவிலும் குறள் வெண்பாவும் அதற்குப் பொருத்தமான கதையும் காணப்படும்.

சாந்தலிங்க கவிராயர்: (18ஆம் நூ.) இவர் சோழ நாட்டைச் சேர்ந்த தண்டலை என்னுமூரினர். இவர் தண்டலையார் சதகம் என்னும் நூல் செய்தார். இது படிக்காசுப் புலவர் செய்ததாகவும் வழங்கும்; அவ்வாறு கொள்வது தவறு எனத் தெரிகிறது. தண்டலையார் சதகம் பழமொழி விளக்கம் எனவும் வழங்கும்.

சாந்தலிங்க சுவாமிகள்: (17ஆம் நூ. முற்.) இவர் திருத்துறையூர் வீரசைவர் குடியிற் பிறந்தவர்; பேரையூர் காளத்தி தேவர் மாணாக்கர்; குமார தேவருக்கு ஆசிரியர்; வேதாந்த சித்தாந்தக் கொள்கைகளை நன்கு பயின்றவர்; வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலை மறுத்தல், நெஞ்சுவிடு தூது முதலிய நூல்களியற்றியவர். அவிரோதவுந்தியார் உந்தீபற எனமுடியும் மூன்றடியாலாகிய 100 பாடல்கள் உடையது. இவர் நூல்களுக்குத் திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் உரை செய்துள்ளார். இவர் வீராக மதத்தைத் தமிழிலியற்றியவருமாவர்.

சாந்துப் புலவர்: (18ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டிலே திருப்புன்னை வாயிலுக்கு அரைமையிலிலுள்ள சிறு கம்பையூரினர்; மயூரகிரிக் கோவை பாடியவர்.

சாமிநாத கவிராயர்: (18ஆம் நூ.) இவர் ஆழ்வார் குறிச்சியில் 150 ஆண்டுகளின் முன் விளங்கியவர். இவர் செய்த நூல் சிவசைலப் பள்ளு. இது ஆறை அழகப்ப முதலியார் மீது பாடப்பட்டது. அழகப்ப முதலியார் திருச்சியிலாட்சி புரிந்த நாயக்க அரசனின் கீழ் தேசாதிபதியாக விருந்தவர்.

சாமிநாத தேசிகர்: ஈசான தேசிகர், சுவாமிநாத தேசிகர் பார்க்க.

சாமிநாத தேசிகர் ?: பழமலைக்கோவை (உ.வே. சாமிநாதையர் 1935).

சாமிநாத தேசிகர், பொ.: அரியலூர் பால சுப்பிரமணிய சுவாமி பதிகம். (1927).

சாமிநாத தேசிகர்: குங்குமவன தலபுராண வசனம். (1927)

சாமிநாத பண்டிதர்: (20ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்தவர்; சிவஞானமா பாடியதையும் (1906) தேவாரங்களை அச்சிட்டவர்; சைவ நூற்சாரசங்கிரக மென்னும் நூலியற்றியவர். (1920).

சாமிநாத பிள்ளை: (20ஆம் நூ.) இவர் கும்பகோணத்தினர்; பிள்ளை விடு தூது என்னும் நூல் செய்தவர். (கொ.பு.)

சாமிநாத பிள்ளை: (18ஆம் நூ.) இவர் புதுச்சேரியிற் பிறந்த கிறித்துவ கத்தோலிக்க புலவர். சென்னையில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய நூல்கள் நரசைக் கலம்பகம், சாமிநாதன் பிள்ளை தமிழ், ஞானாதிக்கராயர் காப்பியம் முதலியன.

சாமிநாத பிள்ளை, வி.: திருவோத்தூர் சிறீ இளமுலையம்பிகை யந்தாதி. (1925)

சாமிநாத பிள்ளை, பாயனூர்: மேற்காவல் அம்மன் பதிகம்.*

சாமிநாத முதலியார்: (18ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து மானிப்பாயினர்; அருணாசலத்தின் புதல்வர்; தரும புத்திர நாடகம், இராம நாடகம் என்னும் நூல்கள் பாடியவர். (1890, 1896)

சாமிநாத முதலியார்: சாவித்திரி வெண்பா. (1901)

சாமிநாதையர் உ.வே.: (1855 - 1942) இவர் கும்பகோணம் கலாசாலையிலும், சென்னை அரசாங்கக் கல்லூரியிலும் தலைமைத் தமிழாசிரியாராயிருந்தவர்; பல நூல்களை ஏட்டுப் பிரதிகளிலிருந்து அச்சேற்றியவர். பத்துப்பாட்டு, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பரிபாடல், பதிற்றுப் பத்து, ஐங்குறுநூறு, பெருங்கதை, வேம்பத்தூர் திருவிளையாடல், நன்னூல் மயிலைநாதருரை, தணிகைப் புராணம் முதலியனவும் பிறவும் இவர் பதித்தவை. இவர் இயற்றிய வசன நூல்கள் புத்தர் சரித்திரம், உதயணன் கதை, சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றின் கதைச் சுருக்கம், சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும், மீனாட்சி சுந்தரம்பிள்ளை சரித்திரம், மத்தியார்ச்சுன மான்மியம், என் வாழ்க்கை வரலாறு, கண்டதும் கேட்டதும், புதியவும் பழையவும் என்பன.

சாமுண்டித் தேவர்: மாகலூர் கிழார் பார்க்க.

சாலிவாடிபுரம் சிவப்பிரகாசர்: இவர் சிவஞானசித்தியார் சுபக் கத்துக்கோருரை எழுதியுள்ளார். (செ.அ.நூ.கை.)

சிகண்டி: (-?) இவர் இசை நுணுக்கம் என்னும் நூல் இயற்றியவர். “இனித் தேவவிருடியாகிய குறுமுனிபாற் கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி யென்னும் அருந்தவமுனி இடைச்சங்கத்து அநாகுலனென்னும் தெய்வப் பாண்டியன் தேரோடு விசும்பு செல்வோன் திலோத்தமை யென்னும் தெய்வ மகளைக் கண்டு தேரிற் கூடின விடத்துச் சனித்தானைத் தேவரும் முனி வரும் சரியா நிற்கத் தோன்றினமையாற் சாரகுமாரனென அப்பெயர் பெற்ற குமரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும்” (அடியார்க்கு நல்லா ருரை). அகத்தியர் மாணவர் பன்னிருவரென வழங்கும் பெயர்களுள் சிகண்டி பெயர் காணப்படவில்லை.

சிங்காரவேலு முதலியார் ஆ: (-1931) இவர் இயற்றிய நூல் அபிதான சிந்தாமணி (1910): இரண்டாம் பதிப்பு (1934).

சிங்காரவேற்பிள்ளை, ப: திருநாகே°வர புராணம். (1929)

சிதம்பர சுவாமிகள்: (19ஆம் நூ.) இவர் திருப்போரூர் சரவண தேசிகரின் சீடர்; குமாரதேவர் நெஞ்சுவிடு தூது, குயிற் பத்து, மீனாட்சியம்மை கலிவெண்பா, பஞ்சாதிகார விளக்கம், சரவண தேசிகர் கலித்துறை, சரவண தேசிகர் மாலை, ³ இரட்டை மணி மாலை, சரவண ஞானியார் ஒருபா ஒருபஃது, சரவண சற்குரு மாலை, தோத்திரப் பிரபந்ததிரட்டு (1897) முதலியன இவர் செய்தன.

சிதம்பர சுவாமிகள் அல்லது சிதம்பர தேசிகர்: (18ஆம் நூ. நடுப்பகுதி). இவர் மதுரையிலிருந்த இலக்கண வித்துவான். இவருக்குச் சிதம்பரம்பிள்ளை எனவும் பெயர். இவர் சாந்தலிங்க சுவாமிகளின் மாணவராய் திருப்போரூரில் வாழ்ந்து தமது ஆசிரியர் செய்த வைராக்கிய சதகம், வைராக்கிய தீபம், அவிரோதவுந்தியார், கொலைமறுத்தல், நெஞ்சுவிடு தூது முதலிய நூல் களுக்கு உரை எழுதினார். இவர் இயற்றிய நூல்கள்; உபதேச உண்மை, உப தேசக்கட்டளை, பஞ்சதிகார விளக்கம், திருப்போரூர்ச் சந்நிதிமுறை, தோத்திர மாலை, திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ் முதலியன.

சிதம்பரஞ் செட்டியார்: விநாயகர் பதிற்றுப் பத்தந்தாதி (1913), தில்லைக் கற்பக விநாயகர் வெண்பாவந்தாதி. (1916).

சிதம்பர ஞானியார்: சிதம்பரஞானி பாட்டு.*

சிதம்பர தத்துவலிங்கையன்: பொய்யாமொழியீசர் குறவஞ்சி.

சிதம்பர தாண்டவராய முதலியார்: (20ஆம் நூ.) இவர் தொண்டாமுத்தூரினர்; பேரூர் மரகதமஞ்சரி பாடியவர். (கொ.பு.)

சிதம்பரத் தம்பிரான்: சிவஞானத் தெளிவு உபதேசத்திரயம். (1913).

சிதம்பரநாத தேசிகர்: இலக்கணா விருத்தி. தசகாரியம்.*

சிதம்பரநாத முனிவர் 1: (18ஆம் நூ.) இவர் தருமபுரம் பத்தாவது பட்டத்திருந்த சிவஞான தேசிகரிடம் உபதேசம் பெற்றவர்; குறட்பாவால் நித்தியகன்ம நெறி என்னும் நூல் செய்தவர். நடராச சதகம் என்னும் ஒரு நூல் சிதம்பர முனிவர் செய்ததாக தருமபுர ஆதீனத்தாரால் 1946இல் பதிக்கப்பட்டது. சிவஞான தேசிக சுவாமி மீது திருப்பதிகம் ஒன்றும் இவர் பாடியுள்ளார். (1930).

சிதம்பரநாத முனிவர் 2: (18ஆம் நூ.) இவர் சிவஞான முனிவரின் பன்னிருமாணவரு ளொருவர்; இலக்கணம் சிதம்பரநாத முனிவரெனவும் அறியப்படுவர்; திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் இயற்றியவர்.

சிதம்பரநாத முனிவர் 3: மணிகண்ட முதலியார் புதல்வர் சிவப்பிரகாசத்துக்கு உரை எழுதியவர்.*

சிதம்பரநாதன்: சித்திர புத்திர ரம்மானை (ச.கை.)

சிதம்பரப்பிள்ளை: (வில்லியம் நெவின்சு): (-1889) இவர் யாழ்ப்பாணத்துச் சங்கு வேலியிற் பிறந்தவர்; தந்தை முத்துக்குமாரசுவாமிப் பிள்ளை. இவர் யாழ்ப் பாணம் இந்துக் கல்லூரியில் தலைமை ஆசிரியராக விருந்தவர்; சிவ கவி களைத் திரட்டி இலக்கிய சங்கிரகமென ஒரு நூலையும், ஆங்கிலத்திலுள்ள தர்க்க விதிகள் சிலவற்றைத் தமிழில் பெயர்த்துப் பாட்டும் உரையுமாக நியாய இலக்கணம் என்னும் ஒரு நூலையும் வெளியிட்டவர்; உவின்சுலோ அகராதி தொகுப்பதற்குத் துணை புரிந்தவர்.

சிதம்பரம் பிள்ளை: (-?) இவர் கொங்குநாட்டு ஊற்றுக் குளியினர்; உசித சூடா மணி என்னும் நிகண்டு நூல் இயற்றியவர் (கொ.பு.)

சிதம்பரம் பிள்ளை வ. உ.: (1872-1936) இவர் நூல்கள் அகமே புறம், இன்னிலை விருத்தியுரை, பாடற் றிரட்டு, மனம்போலவாழ்வு, மெய்யறம், மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம், வள்ளியம்மை சரித்திரம் (1915) திருக்குறள் மணக் குடவர் உரை, தொல்காப்பியம் இளம் பூரணர் உரை என்பவற்றை இவர் பதித் துள்ளார். கப்பலோட்டிய தமிழன் எனப்படுபவர் இவரே. இவர் திருநெல் வேலியினர். நாட்டு இயக்கங்களில் ஈடுபட்டிருந்தவர்.

சிதம்பர ராமலிங்கம் பிள்ளை: சிவஞான சுவாமிகள், ஆனந்தக் களிப்பு. (பிங்கள).

சிதம்பரவாணர்: (-?) இவர் சேலஞ் சில்லாவிலிருந்த விசுவலிங்க பிள்ளை குமாரர்; வீரசைவர். இவர் இயற்றிய நூல்: கைலாசநாதர் சதகம்.

சித்தர்: சித்தரந்தாதி. (ச.கை.)

சித்தர் ஒன்பதின்மர்: சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அநாதிநாதர், வெகுளிநாதர், மதங்கநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர், பதினெண்மர்: அகத்தியர், போகர், கோரக்கர், கைலாச நாதர், சட்டைமுனி, திருமூலர், நந்தி, கூன்கண்ணர், கொங்கணர், மச்சமுனி, வாசமுனி, கூர்மமுனி, கமலமுனி, இடைக்காடர், புண்ணாக்கீசர், சுந்தரானந்தர், உரோமரிடி, பிரமமுனி.

சித்தர் சிவப்பிரகாசர்: (17ஆம் நூ.) இவர் கும்பகோணத்தில் வேளாண் குடியிற் பிறந்தவர்; திருவாவடுதுறை நமச்சிவாய மூர்த்தியிடம் ஞானோபதேசம் பெற்றவர்; வீர சைவ மதத்தைத் தழுவியவர், இவர் இயற்றிய நூல்கள்: திருக்கழுக்குன்ற மாலை; அத்துவித வெண்பா; கணபாஷித இரத்தின மாலை, சதகத்திரயம், அனுபவ சட்°தலம், திருவாலந்துறைச் சிந்து.

சித்தரங்கம் பிள்ளை: (20ஆம் நூ.) சுஞ்சுவாடி என்னுமூரினர்; பல தனிப் பாடல்கள் செய்தவர். (கொ.பு.)

சித்தனாதியார்: சானாந்த கணேசர் புராணம்.*

சித்தானந்த சுவாமி: சித்தானந்த கீதை.*

சித்பவாநந்த சுவாமிகள்: திருக்கைலாசகிரி யாத்திரை. (1939).

சிலேடைப் புலிபிச்சுவையர்: குன்றக்குடி சண்முகநாத ருலா. (1938).

சிவக்கொழுந்து கவிராயர்: மும்மணிக் கோவை.*

சிவக்கொழுந்து தேசிகர்: சரபேந்திர பூபால குறவஞ்சி நாடகம், தஞ்சைப் பெருவுடையார் உலா (அட்சய), சிவநெறிப் பிரகாசம்*. ஆச்சாபுரத் தல புராணம் (சர்வதாரி) இயற்றியவர் இவரோ, பிறிதொருவரோ தெரியவில்லை.

சிவக்கொழுந்து தேசிகர்: இவர் சிவ நெறிப் பிரகாசம் என்னும் நூலியற்றியவர். இதில் 216 செய்யுட்களுள்ளன.

சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாசாரியார்: பல சாத்திரத்திரட்டு.*

சிவசம்புப் புலவர்: (1852 - 1910) இவர் யாழ்ப்பாணத்து உடுப்பிட்டி என்னுமூரில் 1830இல் பிறந்தார். இவர் பாற்கர சேதுபதியின்மீது கல்லாட சாகரக் கலித்துறையும், செந்தில் யமகவந்தாதி, கந்தவன நாதர் பதிகம், வல்லிபுரநாதர் பதிகம், எட்டுக்குடிப் பிரபந்தம், புலோலி நான்மணி மாலை, யாப்பருங்கலக் காரிகை உரை, மறைசையந்தாதி உரை முதலிய பிற நூல்களுமியற்றியவர்.

சிவசாமி சேர்வை - P: தருமை சுப்பிரமணிய தேசிகர் மீது பதிகம் (1930).

சிவசுப்பிரமணிய கவிராயர்: (-?) இவர் கல்லிடக் குறிச்சியினர். நாமதீப நிகண்டு இயற்றியவர். (எ°. வையாபுரிப் பிள்ளை.) (1930).

சிவசூரியம் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் பழநி அந்தாதி முதலிய 12 நூல்கள் இயற்றியவர்; ஆனைமலையினர். (கொ.பு.)

சிவஞான தேசிகர்: (-?) இவர் கொங்கு நாட்டுக் கொடுமுடி என்னு மூரினர்; சேவூர்ப்புராணம் பாடியவர். (கொ.பு.)

சிவாஞான தேசிகர்: காசி சேத்திரத் திருவருட்பாத் திரட்டு (1923).

சிவஞான பாலைய சுவாமிகள்: துதிபஞ்சகம் (³), பாராயண திருவருட்பா (1936).

சிவஞான முனிவர்: (மறைவு 1785) “பாவநாசத் திருப்பதியின் பாங்கர் மேவுறும் விக்கிரமசிங்க புரத்திலே ஏழுதலைமுறை வரையும் அருட்புலமை நிரம்பு மாறு அகத்தியமுனிவர் பால் வரம் பெற்ற பரம்பரைச் சைவ வேளாளர் குலத்திலே, கல்வியுஞ் செல்வமுங் கனிந்து மல்கிச் சிவபத்தி அடியார் பத்தியிற் சிறந்து விளங்கிய ஆநந்தக் கூத்தர் என்பவருக்கு அவர் மனைவி யாராகிய வலம் புரியீன்றவான் முத்தென்ன நலங்கனிந் தோங்கிய நற்குணம் வாய்ந்து புரையற விளங்கிய மயிலம்மையாரது திருவயிற்றிலே ஏழாவது தலைமுறையாக ஒரு புத்திரர் திருவவதாரஞ் செய்து, முக்களாலிங்கர் எனப் பிள்ளைத் திருநாமம் பெற்று, அவ்விளம் பருவத்திற்றானே கூர்ந்தநுண் ணறிவும், சீர்த்த செம்மொழியும், குலவிய அன்பும், நிலவிய அருளுமாகிய உயர்பெருங் குணங்களெல்லாம் முற்செய்த தவத்தால் ஒருங்கே வாய்க்கப் பெற்றுப் பெற்றோரும் மற்றோருங் கண்டு கண்ணு முளமுங் களிப்ப வளர்வா ராயினர். இங்ஙனம் வளருநாளில் ஐந்தாவது ஆண்டு நிரம்பியவுடன், அவர் கல்வி தொடங்கப்பெற்றுப் பாடசாலையிற் சென்று கல்வி பயின்று வந்தார். இவ்வாறு கல்வி பயின்று வரும் நாளில் ஒருநாள் முக்களாலிங்கர் பாடசாலை யினின்றும் வரும் வழியிலே திருவாவடுதுறை ஆதினத்தினின்றுஞ் சிவத் தல யாத்திரையாகப் போந்து விக்கிரமசிங்கபுரத்து வீதியில் வந்த சிவ முனிவர்களைக் கண்டனர்; காண்டலும் விரைந்துசென்று அம்முனிவர் களை வணங்கிச் சுவாமிகாள்! அடியேன் வீட்டிற் கெழுந்தருளித் திருவமுது கொண்டருளவேண்டும்’ என்று அன்பளைந்த இனியமொழிகளாற் பிரார்த் தித்தனர். அதற்கு அம்முனிவர்கள் உடன்படலும் ஆண்டின் இளைஞரும் அறிவின் முதியருமாகிய முக்களாலிங்கர் அவர்களைப் பெருவிருப்புடன் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆசனத் திருத்தித் தாயாரிடஞ் சென்று அம்மையே! நம் வீட்டிற்குச் சிவனடியார் சிலர் எழுந்தருளினர்; அவர் களுக்கு அமுதளித்தல் வேண்டும் என வேண்டினர். அதுகேட்ட அவ் வம்மையார் தம்மருமைப் புதல்வரது அரும்பெருஞ் செய்கையைக் கண்டு மனம் மிகமகிழ்ந்து அப்பெரியோர்களை வணங்கித் திருவமுதளித்தனர். அப்பொழுது முக்களாலிங்கர்அருந்ததியென்னம்மை யடியவர்கட்கென் றும், திருந்தவமுதளிக்குஞ் செல்வி - பொருந்தவே, யானந்தக் கூத்தரக மகிழத் தொண்டுசெயு, மானந்த வாத மயில்’ என்னும் வெண்பாவைக் கூறினார். முக்களாலிங்கரது இளமையையும், கல்விப் பெருமையையும், பெற்றோரைப் பேணும் சற்குணமேன்மையுங் கண்டு மகிழ்ந்து அவரைப் புகழ்ந்து அவருக்குப் பல ஆசிமொழி கூறி அவ்வடியார் விடைபெற்றுச் சென்று அங்குள்ள தொரு திருமடத்திலுற்று வைகினார். அப்பொழுது புறம்பே சென்றிருந்து, தம்வீடு புக்க ஆநந்தக்கூத்தர். அங்கு நிகழ்ந்தவற்றை அறிந்து அடங்காத பேருவகையுற்றுத் தம் புதல்வரை மார்புறத் தழுவித் தம் புதல்வ ரோடு முனிவரிருந் துழிச்சென்று அவர்களை வணங்கி நின்றனர். அவ்வேளை யில் முக்களாலிங்கர் ‘இம்முனிவர்களோடு சென்று ஞானகுருவை யடைந்து பிறப்பறும்பேன்’ எனத் துணிந்து அக் கருத்தைத் தந்தையாருக் குணத்தினர். தந்தையார் தமது அருந்தவப் புதல்வரைப் பிரிதற்கு ஆற்றாதவராய் உள்ளந் தளர்ந்து, பின் ஒருவாறு தேறி மகனாரை முனிவர்பால் விடுத்துத் தம்மில்லம் ஏகினர். தந்தையார் நிங்கிய பின் முக்களாலிங்கர் முனிவர்களுடன் திருவா வடுதுறையை அடைந்து மடத்திற் புகுந்து அஞ்ஞான்று சின்னப்பட்டத்தி லெழுந்தருளியிருந்த ஞான சாரியராகிய பின் வேலப்ப தேசிகரை ஒடுக் கத்திற்கண்டு வணங்கித் தரிசித்து அக்குரவரருள் பெற்று அவர் திருவுளப் பாங்கின்படி ஒழுகிவந்தனர்.”

“பின்னர் அந்த ஞானாசாரியரிடத்திலேயே சிவதீக்கையும், சைவசன்னி யாசமும், சிவஞானயோகி என்னும் தீட்சா நாமமும் பெற்றுச் சிவாகமங்களிற் கூறப்படும் சரியா கிரியா யோகங்களை ஆராயும் நூல்களை எல்லாங் கற்றுத் தெளிந்து, பின் மெய்க்கண்ட சாத்திரங்களையும், பண்டார சாத்திரங்களையும், அந்த ஞானாசாரியரிடத்திற்றானே ஐயந்திரிபறக் கேட்டுச் சிந்தித்துத் தெளிந்து வடமொழிக் கடல் தென்மொழிக் கடல் இரண்டையும் நிலைகண்டு ணர்ந்து சைவ சித்தாந்த வழிதேறி அதீத வாழ்வு கைவரப்பெற்று விளங்கினர்.”

சிவஞானயோகிகள் இலக்கணம், இலக்கியம், தருக்கம். சித்தாந்த சாத்திரம் முதலியன பற்றிப் பல நூல்களும் உரைகளும் இயற்றிப் பல நன் மாணாக்கருக்கு வித்தியாதானமுஞ் செய்துகொண்டிருந்தார். இவருக்குக் கச்சி யப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர், இலக்கணம் சிதம்பரநாத முனிவர் முதலிய பன்னிரு மாணவர்களிருந்தனர். இவர் இயற்றிய நூல்களுள் சிவஞான போதத்துக்கு இயற்றிய திராவிட மாபாடியம் சிறப்புடையது. இவர் சாலிவாகன சகம். 1708இல் (1785 ஆ. ஏப்பிரல் மீ. 17உ) காலமானார். “மன்னுவ சுவாவசுவருடமேடமதி, யுன்னிரவி நாட்பகலோ தாயிலியம் - பன்னுந், திருவாள னெங்கோன் சிவஞான தேவன், திருமேனி நீங்குந் தினம்”. இவரியற்றிய நூல்கள் ; தொல்காப்பியச் சூத்திர விருத்தி, இலக்கண விளக்கச் சூறாவளி, சங்கர நமச்சிவாயப் புலவர் நன்னூல் விருத்தியுரைத் திருத்தம், காஞ்சி புராணம் முதற் காண்டம், சோமேசர் முதுமொழி வெண்பா, குளத்தூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, இளசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, கச்சி ஆநந் தருத்திரேசர் பதிகம், திருவே கம்பர் ஆநந்தக் களிப்பு, கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத் தமிழ், குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ், செப் பறைப்பதி இராசை அகிலாண்டேசுவரி பதிகம், திருவேகம்பரந்தாதி, திருமுல்லை வாயிலந்தாதி, திருத்தொண்டர் திருநாமக் கோவை, பஞ்சாக்கரதேசிகர் மாலை, கம்பராமாயண முதற் செய்யுட் சங்கோத்தர விருத்தி, தருக்க சங்கிரகமும் அன்னப் பட்டீயமும், சிவஞான பாடியம் (திராவிட மாபாடியம்), சிவஞான போதச் சிற்றுரை, சிவஞான சித்திப் பொழிப்புரை (சுபக்கம்), சித்தாந்தப் பிரகாசிகை, என்னை இப்பருவத்தில் என்னுஞ் செய்யுட் சிவசம வாதவுரை மறுப்பு, எடுத்து என்னுஞ் சொல்லுக்கிட்ட வைரக்குப் பாயம், சிவ சமவாத உரை மறுப்பு, அரதத் தாசாரியார் சுலோக பஞ்சகமொழி பெயர்ப்பு,
சிவதத்துவ விவேகம், சித்தாந்த மரபு கண்டனம் முதலியன. (மெய்கண்டார் பார்க்க.)

தருக்க சங்கிரகம் ஒரு தமிழ் உரை நடை நூல்; தெலுங்கராகிய அன்னப் பட்ட ரென்பவரால் செய்யப்பட்டதான தருக்க சங்கிரகத்திலிருந்து இவ்வாசிரிய ரால் மொழி பெயர்க்கப்பட்டது. அன்னப்பட்டீயம் என்பது தருக்க சங்கிரக தீபிகை எனவும் படும். அன்னப்பட்டர் தாம் வடமொழியிற் செய்ததருக்க சங்கி ரகத்துக்கு உரையாகச் செய்ததை இவ்வாசிரியர் தமிழில் மொழி பெயர்த்தது.

சிவஞான யோகிகள் விருதை: (20ஆம் நூ.) இவர் தமிழ் வடமொழிப் புலமை பெற்ற மருத்துவர்; தமிழின் மரபினை நிலைநாட்டப் பெரிதும் உழைத்தவர். பற்பல செய்யுள் நூல்களும், உரைநடை நூல்களும் இயற்றியவர். இவர் வியாச சூத்திரம் அல்லது பிரம சூத்திரம் என்னும் நூலை 555 அடிகளிலும், யோக சூத்திரத்தை 200 பாடல்களிலும், கோயிற்புரி புராணத்தை 18 சருக்கத் திலும், முடிசூட்டு வைபவத்தை 400 அடிகளிலும், தமிழக ஒழுக்கை 4,000 பாடல்களிலும் இயற்றினார். இவர் இயற்றிய வசன நூல்கள் விபூதி உருத்தி ராக்கதாரண நிரூபணம் (1901), தேவோபாசன தீபம், போதம் (சிவஞான), சிவஞான விளக்கம், வேதாகமஉண்மை, தமிழர் தொன்மை அகவல் 10. இவர் கருணாமிர்தசாகரத்துக்கு 250 அடிகள் கொண்ட பாயிரம் வழங்கி யுள்ளார். இதில் இசையைப் பற்றிய பல அரிய செய்திகள் அறியக் கிடக்கின் றன. இவர் சித்த வைத்தியக் கொள்கைகளைக் கடைப்பிடித்தவர். இவர் ஏறக்குறையத் தமது 90-வது வயதில் 1930-க்கு மேல் காலமானார்.

சிவஞான வள்ளல்: (18ஆம் நூ. பிற்.) இவர் வள்ளலார் மடத்தைச் சேர்ந்தவர். இம் மடம் சீகாழியிலுள்ளது. இம்மடத்தைச் சேர்ந்தவர்கள் வைதிக சைவ சித்தாந்திகள். இவர் இயற்றிய நூல்கள் வள்ளலார் சாத்திரம், சிவாகமக் கச்சிமாலை என்பன.

சிவஞானி கருணாலயன்: போப்பு வேதவிவகாரம் *

சிவப்பிரகாச சுவாமிகள் துறைமங்கலம்: (17ஆம் நூ.) இவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த குமாரசுவாமிப் பண்டாரம் என்பவரின் புதல்வர்; வீர சைவமதத்தினர். குமாரசுவாமிப் பண்டாரத்துக்குச் சிவப்பிரகாசர், கருணைப் பிரகாசர், வேலைய தேசிகர் என மூன்று புதல்வர்களிருந்தனர். அவருள் சிவப் பிரகாசர் மூத்தவர்; 1652 வரையில் இவர் துறைமங்கலத்தில் வாழ்ந்தார். இவர் தருமபுர ஆதீனத்திலிருந்த வெள்ளியம்பலத் தம்பிரானிடம் இலக்கணங் கற்றவர். விரும்பிய வண்ணம் கவிபாட வல்லவர். வெள்ளியம்பலத் தம்பிரா னோடு எதிரியாயிருந்த திருச்செந்தூர் புலவரொருவரைத் திருச்செந்தில் நீரோட்டக யமகவந்தாதி என்னும் 30 பாட்டுப் பாடி வென்றவர். இதழ்கள் சேராமற் சொல்லும் மொழிகளை அமைத்துப் பாடுவது இவ்வகைச் சிறு காப்பியமாகும். இவர் கற்பனைக் களஞ்சியம் என்று போற்றப்படுவர். இவர் இயற்றிய நூல்கள்: பிரபுலிங்க லீலை (இது 1652இல் பாடப்பட்டது). திருக்கூவ புராணம், சிவநாம மகிமை, சோண சைல மாலை, வேங்கைக் கோவை, வேங்கைக் கலம்பகம், வேங்கையுலா, வேங்கையலங்காரம், திருச்செந்திலந் தாதி, நால்வர் நான்மணிமாலை, கைத்தலமாலை, சித்தாந்த சிகாமணி, வேதாந்த சூடாமணி, தர்க்க பரிபாடை, சதமணிமாலை, நிரஞ்சனமாலை, இட்டலிங்கப் பெருங்கழி நெடில் விருத்தம், அபிடேகமாலை, நன்னெறி, பெரியநாயகி கலித்துறை, பிட்சாடன நவமணி மாலை, துறைசை வெண்பா, சீகாளத்திப் புராணத்தில் நடு இரண்டு சருக்கங்கள் என்பன. இவர் தம்பி கருணைப் பிரகாசர் சீகாளத்திச் சருக்கம்வரை பாடினர். வேலைய தேசிகர் அதில் எஞ்சிய பன்னிரண்டு சருக்கமும் பாடினர். ஏசுமத நிராகரணம் என்னும் நூலை இவர் வீரமா முனிவருக்கு எதிராகச் செய்தனர்.

சிவப்பிரகாச தேசிகர் (ஞானக்கூத்தர்): விருத்தாசல புராணம் (விருத்தகிரி புராணம்.)*

சிவப்பிரகாச பண்டிதர்: (1864-1916) இவர் யாழ்ப்பாணத்து நீர் வேலியிற் பிறந்தவர்; சங்கர பண்டிதரின் புதல்வர். இவர் இயற்றிய நூல்கள் பாலாமிர்தம், பாலபாடம், திருச்செந்தூர்ப் புராண உரை, சிவானந்த லகரித் தமிழுரை முதலியன.

சிவப்பிரகாசர்: இவர் மதுரை ஞானப்பிரகாச தம்பிரானார் சீடர்; சிவப்பிரகாசத் துக்கு உரை செய்தவர்.*

சிவயோக நாவலர்: மாயாவிவரணம் (மணிப்பிரவாளம்).*

சிவராமலிங்கம் பிள்ளை: சீகண்டேச்சுரமாலை. (பிரசோற்பத்தி )

சிவவாக்கியர்: (8ஆம் நூ.?) இவர் பாடல்கள் சிவவாக்கியம் என்னும் பெயரால் வழங்குகின்றன. தாயுமானவர் இவரை விதந்து ஓதியிருக்கின்றனர். 10 அல்லது 11-வது நூற்றாண்டில் வாழ்ந்தவரெனக் கொள்ளப்படும் பட்டினத்தடிகள் இவரைக் குறிப்பிடுகின்றார். சைவராயிருந்து பின் திருமாலடியாராக மாறிய திருமழிசை யாழ்வாரே சிவ சிவாக்கிய ரென்று சில வைணவர் கருதுகின்ற னர், திருமழிசை ஆழ்வார் திருச்சதகம் பாடிய நடையிலேயே சிவவாக்கியர் பாடல்கள் அமைந்துள்ளன. இவர் பாடல்கள் காலத்துக்குக் காலம் வளர்ந்தன. இவர் சித்தருள் முற்பட்டவர் எனக் கூறலாம். நாடிப் பரீட்சை 35 என்னும் நூலும் இவர் செய்ததாக வழங்கும்.

சிவன் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் வீராச்சிமங்கலத்தினர்; பிங்கலத்தை நிகண்டு பதிப்பித்தவர். (கொ.பு.)

சிவாக்கிர யோகிகள்: (16ஆம் நூ.) இவர் சோழ நாட்டிலுள்ள சூரியனார் கோயில் ஆதீனத் தலைவராய் விளங்கியவர்; மணவாள முனி காலத்தவர். இவர் தஞ்சாவூர் சரபோசி மகாராசா முன்னிலையில் மணவாள முனியோடு வாதம் புரிந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: சைவ சன்னியாசபத்தாதி, வட மொழிச் சிவஞான போத சங்கிரக வியாக்கியானம், கிரியாதீபிகை, சைவ பரிபாஷை, சர்வக்ஞானோத்தரத் தமிழுரை, தேவி காலோத்தரத் தமிழுரை, அரதத்தாசாரியர் செய்த சுருதி சூக்திமாலை தமிழுரை, சித்தாந்த தீபிகை, வேதாந்த தீபிகை, மணிப்பிரவாள வியாக்கியானம், சிவஞான சித்தியாருரை, சிவநெறிப் பிரகாசம் முதலியன.

சிவாலய முனிவர்: இவர் பொருட்டு அகத்தியர் தேவாரப் பாடல்கள் சிலவற்றைத் திரட்டினாரென்று சொல்லப்படுகிறது. “இப்பரி சகத்திய முனிவ னிருநிலத், தொப்பரு மூவருமோது தேவார, முழுதையுஞ் சிவாலைய முனிக்கறிவித்துப், பழுதிலா வவையுட் பரிந்தெடுத், திருபானைந்துயர் பதிகமு மறிவுறத் திரட்டி.”

சிவானந்த சாகர யோகீ°வரர்: திருச்செந்தில் வெண்பா வந்தாதி. (1915.)

சிவானந்த தேசிகர்: காசித்துண்டி விநாயகர் பதிகம்.*

சிவானந்த முனிவர்: சிவானந்த போதசாரம் (தருமபுர ஆதீனம். 1931.)

சிவானந்தையர், வித்துவான்: (1873 - 1916) இவர் யாழ்ப்பாணத்துப் பன்னாலை யென்னு மூரினர்; தந்தை பெயர் சபாபதி ஐயர். இவர் சுன்னாகம் குமார சுவாமிப் புலவரிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றிய நூல்கள் புலியூர்ப் புராணம், புலியூரந்தாதி, சனிதுதி முதலியன.

சிவானுபூதிச் செல்வர்: பேரானந்த சித்தியார் (1908).

சிறிய இரத்தினக் கவிராயர்: காரி இரத்தினக் கவிராயர் பார்க்க.

சிறியவாச்சான் பிள்ளை: ஆத்ம சமர்ப்பணம்.*

சிறீசயிலேசர்: உபதேச இரத்தினமாலை வியாக்கியானம்.*

சிறீசைல தேசிகர்: யதீந்திரப் பிரவண பிரபாவசங்கிரகம்.*

சிறுகாக்கை பாடினியார்: (-10ஆம் நூ.?) இவர் பழைய இலக்கண நூலாசிரியருள் ஒருவர். இவர் செய்த இலக்கண நூல் சிறுகாக்கை பாடினியம் எனப்படும். “அறுசீரெழு சீரடிமிக வரூஉ-முறைமைய நாலடி விருத்த மாகும்” என இவரது இலக்கணத்துள் விருத்தப்பா எடுத்து மொழியப்படு தலின் இவர் காலம் ஏறக்குறைய கி.பி. 10ஆம் நூற்றாண்டாகலாம்.

சிறுபாண்ட ரங்கன்: இடைச்சங்கப் புலவருளொருவர். (இ.க.உ.)

சிறு மேதாவியார்: கடைச்சங்கப் புலவருள் ஒருவர். (இ.க.உ.) “வீடொன்று” என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்கப் பாடல்கள் செய்த புலவர் வரிசையில் இவர் பெயர் காணப்படவில்லை.

சிறு மோலிகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற்.61.

சிறு வெண்டேரையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 362.

சிறைக்குடி ஆந்தையார்: (சங்ககாலம்) ஆதன் தந்தை - ஆந்தை; சிறைக்குடி ஓர் ஊர். இவர் பாடியன: நற். 16; குறு. 56, 57, 62, 132, 168, 222, 273, 300.

சிற்றம்பல உபாத்தியாயர்: (20ஆம் நூ.) இவர் சேலத்தினர்; திருச்செங்கோட்டுப் புராண உரை செய்தவர். (கொ.பு.)

சிற்றம்பல சுவாமிகள்: சிற்றம்பல சுவாமிகள் வாக்கியம்.*

சிற்றம்பல நாடிகள்: (15ஆம் நூ.) இவர் தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்த கங்கை மெய் கண்டார் மாணவர்; சீகாழியிற் பிறந்தவர். இவர் பாடிய நூல்கள்: துகளறு போதம், சிவப்பிரகாசக் கருத்துரைச் சூத்திரம், திருச்செந்தூரகவல், வினாவெண்பா, திருச்சிற்றம்பல நாடிகள் கட்டளை முதலியன. இவர் காலிற் பழுதை கட்டியிருந்தமையால் பழுதை கட்டிய சிற்றம்பல நாடிகள் எனவும் அறியப்பட்டார்.

சிற்றம்பல நாடிகள் சீடர்: சிற்றம்பல நாடியார் கலித்துறை, ³ தாலாட்டு, ³ திரிகாலத்திரங்கல், துகளறு போதக் கட்டளை.*

சிற்றம்பலப் புலவர்: (18ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து மாதகல் என்னுமூரில் வேளாண் மரபிற் பிறந்தவர். இருபாலைச் சேனாதிராய முதலியார் இவரிடம் கல்வி பயின்றவருள் ஒருவர். இவர் கண்டி அரசன் மீது கிள்ளை விடுதூது என்னும் ஒரு பிரபந்தம் பாடி அதனை அரங்கேற்றற்காகச் சென்றபொழுது வழியில், அவ்வரசன் ஆங்கிலேயரால் அகப்படுத்தப்பட்டான் என்ற சொற் கேட்டுத் திரும்பியவர்.

சிற்றம்பல முதலியார்: ஐயாசுவாமீயம் அம்மணீயம் (1883.) (சோதிடம்)

சின்மயானந்தர் சீடர்: நாதப்பத்து.*

சின்னக் குட்டிப் புலவர்: (19ஆம் நூ. முற்.) இவர் ஏறக்குறைய 125 ஆண்டு களின்முன் தெல்லிப்பழை என்னுமூரில் வாழ்ந்தவர்; மாதகல் சிற்றம்பலப் புலவரின் மாணவர். இவர் பாடியது கனக தண்டிகைக் கனகராயன் பள்ளு.

சின்னச் சரவணப் பெருமாள் கவிராயர்: (19ஆம் நூ. பிற்.) இவர் பாற்கர சேதுபதியின் அரண்மனைப் புலவராயிருந்தவர்; பெரிய சரவணப் பெருமாள் கவிராயருக்குப் பேரர். இவர் பாடியவை: திருச்சுழிய லந்தாதி, புவனேந்திர னம்மானை, கயற்கண்ணி மாலை, கந்தவருக்கச் சந்த வெண்பா, குன்றக்குடிச் சிலேடை வெண்பா முதலியன.

சின்னத் தம்பி: (1830 - 1878) இவர் உடுப்பிட்டியிற் பிறந்தவர். தந்தை பெயர் தாமோதரம் பிள்ளை. இவர் செய்த நூல்கள்: வீரபத்திரர் சதகம், மதனவல்லி விலாசம், நில அளவை சூத்திரம், சோதிடச் சுருக்கம், நொண்டி நாடகம், கோவல நாடகம், அநிருத நாடகம்.

சின்னத் தம்பிப் புலவர்: (1716 - 1780) இவர் யாழ்ப்பாணத்து நல்லூரில் பிறந்தவர்; தந்தை பெயர் வில்லவராய முதலியார். இவர் இளமையிலே பாடும் திறமை பெற்று விளங்கினார். இவர் இயற்றியவை: மறைசையந்தாதி, கல்வளையந் தாதி, பறாளைப் பள்ளு, கரவை வேலன் கோவை என்பன. கரவை என்பது கரவெட்டி யென்னுமூர். 1706இல் யாழ்ப்பாண மக்களின் தேசவழமைச் சட்டத்தைத் திருத்தியமைத்தவர்களுள் இவரொருவராவர்.

சின்னத் தம்பிப் புலவர், இணுவில்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து இணுவில் என்னுமூரிற் பிறந்தவர். இவர் பாடியவை: இணுவைச் சிவகாம சுந்தரியம்மை பதிகம், காலிங்கராயன் பஞ்சவண்ணத் தூது என்பன. இவர் இளந்தாரி புராணம் என ஒரு நூல் செய்ததாகவும் அறிய வருகின்றது.

சின்னப்ப நாய்க்கர்: பழநிப்பிள்ளைத் தமிழ் (உ.வே. சாமிநாதையர் 1932.)

சின்னைய செட்டியார்: (19ஆம் நூ.பிற்.) இவர் தேவகோட்டையினர்; வன் றொண்டச் செட்டியாரிடங் கல்வி பயின்றவர். இவர் பாடியவை: தேவைத் திரிபந்தாதி, அருணைச் சிலேடை வெண்பாமாலை முதலியன.

சின்னைய தேசிகர்: (பொய்கைப் பாக்கம் பச்சையப்ப உபாத்தியாயரின் தந்தை) மயிலாசலத் தந்தாதி.*

சின்னையன்: (சோலையப்ப கவிராயரின் மாணவன்) பாகவத வசனம், சாரங்கதரன் கதை, திருச்செந்திலந்தாதி.*

சீகாழி வள்ளல்: கண்ணுடைய வள்ளல் பார்க்க.

சீதக்காதி நொண்டி ஆசிரியர்: (17ஆம் நூ.) இவருடைய பெயர் முதலியன அறியப்படவில்லை. இப்புலவர் சீதக்காதியைப் பாடிய இந்நூலில் 222 பாடல் களுண்டு.

சீத்தலைச் சாத்தனார்: (கி.பி. 140-) சீத்தலை என்பது இராமநாதபுரப் பகுதியிலுள்ள ஓர் ஊர். இவர் சித்திர மாடத்துத்துஞ்சிய நன்மாறனைப் பாடியுள்ளார். இவர் மதுரையிற் கூலவாணிகம் செய்தமையின் மதுரைக் கூல வாணிகன் சாத்தனார் எனப்படுவர். இவர் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழி யன், வெற்றிவேற் செழியன் காலத்தில் விளங்கினார். “மும்மலையுந் நாடும்” என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம். 53, 134, 229, 306, 320; குறு. 154, 349; நற். 36, 127, 339; புறம். 59. மணிமேகலை என்னும் நூல் செய்தவரும் இவரே. இவர் பௌத்த மதத்தவராவர். சீத்தலை என்பதைச் சீழ்த்தலை எனப் பொருள் கொண்டு சாத்தனார் சொற்பிழை பொருட் பிழையுள்ள பாடல்களைப் படிக்கக் கேட்டபோதெல்லாம் எழுத்தாணியால் தமது தலையில் அடிப்பாரென்றும் அதனால் நேர்ந்த காயத்தினின்றும் எப்பொழுதும் சீழ்வடிந்து கொண்டிருக்கு மென்றும் அதனால் அவர் சீ(ழ்)த்தலைச் சாத்தனார் என அழைக்கப்பட்டா ரென்றும் பிற்காலத்து ஒரு கதை வழங்குவதாயிற்று. இது திருவள்ளுவ மாலைப் பாடலிற் றொனிக்கின்றது. மணிமேகலையும்
சிலப்பதிகாரமும் ஒரே காலத்திற் செய்யப்பட்ட நூல்கள். மணிமேகலை செய்தபின்
சிலப்பதிகாரம் செய்யப்பட்டது.

சீத்தலையார்: (?) இவர் செய்த பாட்டியற் சூத்திரங்கள் பன்னிரு பாட்டியலின் பகுதி எனக் கொள்ளப்படும்.

சீபட்டர்: (13ஆம் நூ.) இவர் பகவத் கீதையைத் தமிழிற் பாடிய ஆசிரியர்.

சீரங்க சிறீமான்: இரகசியத்திரய சரார்த்தம்.*

சீவலமாற பாண்டியனார்: சங்கர நாராயணசாமி கோயிற் புராணம். (1909.)

சீனிச் சர்க்கரைப் புலவர்: புகையிலை விடுதூது (உ.வே. சா. 1936.)

சீனிவாசகர்: (19ஆம் நூ. முற்.) இவர் இராமநாதபுரத்தில் வாழ்ந்த பிராமணப் புலவர்; சதிராட்டத்துக்குரிய பாடல் செய்வதில் வல்லவர்.

சீனிப் புலவர்: (18ஆம் நூ.) இவர் மிழலைச் சதகம் பாடிய சர்க்கரைப் புலவர் மரபில் வந்தவர்; திருச்செந்தூர்ப் பரணி, துறைசைக் கலம்பகம் முதலிய நூல்கள் பாடியவர்.

சீனிவாச இரங்கநாதசாமி, கௌசிக: நான்முகன் திருவந்தாதி உரை.*

சீனிவாச ஐயர்: இலக்குமிகாந்த சதகம்.*

சீனிவாச கவி: சீயர் ஈடுபாடு. (குணதர்ப்பணம்)*

சீனிவாசகவி, திருமலை: பிரபந்த நிர்வாகம்.*

சீனிவாச தாசன்: விண்ணப்பப் பத்திரிகை.*

சீனிவாசதாத தேசிகர்: துரோணபர்வ தாத்பரிய சந்திரிகை.*

சீனிவாச தேசிகன்: யதீந்திரப் பிரவண °வரூப விஞ்ஞான விகாசதர்ப்பணம்.*

சீனிவாச பிள்ளை, கே. எ°.: (20ஆம் நூ.) இவர் தஞ்சாவூரில் வாழ்ந்த வக்கீலும் அருங்கலை விநோதருமாவர். இவர் தமிழ் வரலாறு என்னும் நூலை எழுதித் தமிழ் வரலாறு முற்பாகம், தமிழ் வரலாறு பிற்பாகம் என வெளியிட்டவர். இவர் 1922-க்கு மேல் காலமானார்.

சீனிவாச முதலியார், ஏ.ஆர்.: (20ஆம் நூ.) இவர் ஆனைமலை என்னும் ஊரினர். உரோமியோ சூலியட் கதையைச் செய்யுளில் இயற்றியவர். (கொ.பு.)

சீனிவாச ராகவாசாரியர்: இராமாயண விசேடார்த்தங்கள்.*

சீனிவாசர்: பரவ°து வைபவம்.*

சீனிவாசன்: கம்பராமாயண வசனம்.*

சீனிவாசன்: ஞாயிறு வாழ்த்து (சிவஞான பாலைய சுவாமிகள் 1938.)

சீனிவாசாசாரியதனயர்: இரகசியத்திரய சார உரை.*

சீனிவாசாசாரியர்: திருவாய்மொழி °வாபதேச நிர்வாகம்.*

சீனிவாசாசாரியர்: (திருநம்பி வழி): திவ்விய சூரி காதார்த்த வர்ணம்.*

சீனிவாசாசாரியர் சீடர்: தேசிகர் மும்மணிக்கோவை உரை.*

சீனிவாசாசாரியர், சிறீபாசியம்: ஆகார நியம வியாக்கியானம், இராக சாத்திரய சார வியாக்கியானம், பிரபந்த நிர்வாகம்.*

சீனிவாசாசாரியார், ஆத்திரேய: இராமாயணசாரம்.*

சீனிவாசாசாரியார், கரிசன்கல்: பாகவத வசனம், பாரத வசனம். விட்டுணு புராண வசனம், ‘பகவத் கீதை உரை.*

சீனிவாசாசாரியார், குன்னத்தூர்: அட்ட சுலோகி உரை.*

சீனிவாசாசாரியார், பாரத்துவாச: இரகசியத் திரயசார உரை.*

சுகர்: சுக்கிரன் யோகபாவகம்.* (சோதிடம்)

சுந்தர கவிராயர்: (19ஆம் நூ.) இவர் பல அகத்துறைப் பாடல்கள் பாடியுள்ளார்.

சுந்தர தேசிகர்: இராமானுச இரகசியார்த்தம், சாரார்த்த இரத்தினாவளி.*

சுந்தர தேசிகர்: (19ஆம் நூ.) இவர் திருக்கோவையாருண்மை என்னும் நூலியற்றியவர்.

சுந்தரநாத பிள்ளை: ஆதிவயலூர் வெண்பாவந்தாதி. (1918.)

சுந்தரநாதன்: திரிசிராமலைக்கோவை (உ.வே. சாமிநாதையர் பதிப்பு.)

சுந்தர பாண்டியன் ஓதுவார்: (20ஆம் நூ.) இவர் மதுரையில் வாழ்ந்த ஓதுவார்; செங்கோன் திரைச்செலவு, மூவடி முப்பது முதலியன பதித்தவர்; திருக் குடந்தை முருகக் கடவுள்மீது திருவருண்மாலை பாடியவர் (1929). அரசஞ் சண்முகனாரின் மாணவர். ஏறக்குறைய 1940 வரையில் காலமானார்.

சுந்தர முதலியார்: (20ஆம் நூ.) இவர் சேலத்தினர்; திருச்செங்கோட்டுக் கலம்பகம் பாடியவர். (கொ.பு.)

சுந்தர முதலியார்: (20ஆம் நூ.) இவர் சேலத்தினர்; திருமந்திர உரை செய்தவர். (கொ.பு.)

சுந்தர முதலியார் கா.மு.: காந்தி சதகம். (துந்துபி)

சுந்தரம் பிள்ளை, எம்.ஏ. இராவ்பகதூர்: (1855-97) இவர் மலையாளத்தில் ஆலப்புழை என்னுமூரிற் பிறந்தவர். இவர் தந்தை பெருமாள் பிள்ளை துணிவாணிகம் நடத்தி வந்தார். சுந்தரம் பிள்ளை திருவனந்தபுரம் மகாராசாக் கல்லூரியில் தத்துவப் பேராசிரியராக விருந்தார். இவர் இயற்றிய நூல்கள் மனோன்மணியம், நூற்றொகை, விளக்கம், தமிழ் இலக்கியத்தில் சில எல்லைக் கற்கள் (ஆங்கிலம்) முதலியன. இவரே தமிழ் சம்பந்தமான ஆராய்ச்சியில் தமிழ் மக்களை விழிப்படையச் செய்தவராவர்.

சுந்தரலிங்க முனிவர்: திருப்பெருந்துறைப் புராணம். (ச.கை.)

சுந்தரராசு பாண்டியர்: (19ஆம் நூ. பிற்) இவர் பாண்டி நாட்டுச் சேற்றூர்ச் செமீந்தாராக விளங்கியவர். இவர் தல யாத்திரைக் கவிகளும், திருவிழாக் கவிகளுமியற்றி யுள்ளார்.

சுந்தரர்: (9ஆம் நூ.) இவர் திருவாரூரில் ஆதிசைவ குலத்திற் பிறந்து நரசிங்க முனையரால் வளர்க்கப்பட்டுத் திருவெண்ணெய் நல்லூரில் தமது திருமணம் நிகழாதபடி தடுத்தாட்கொள்ளப்பட்டுத் திருவாரூரிலே பரவையாரையும் திருவொற்றியூரிலே சங்கிலியாரையும் மணந்து வாழ்ந்து திருத்தொண்டத் தொகை பாடிச் சேரமான் பெருமாளோடு கயிலை சென்றவர். இவர் பாடிய பதிகங்கள் 37,000. இன்று உள்ளவை 100 பதிகங்களே.

சுந்தரானந்தர்: (-?) இவர் போகர் மாணாக்கர்; சுத்தரானந்தர் சூத்திரம் 110, செய்தவர் (ச.கை.).

சுந்தரேச வாண்டையார். வே: அப்பர் ஐம்மணி மாலை. (1943.)

சுப்பராயக் கவிராயர்: சரபேந்திரர் வைத்தியம் (ச.கை.)

சுப்பராய பிள்ளை: திருவேரக நான்மணிமாலை. (சர்வ சித்து.)

சுப்பராய புலவர்: சிறீ விருந்தீசுரர் சதகம். (1910.)

சுப்பராய முதலியார்: மெய்ஞ்ஞானரத்னம் (1867.)

சுப்பிரதீபக் கவிராயர்: அட்டாவதானி பார்க்க, இவர் விறலிவிடு தூது. கூளப்ப நாயக்கன் காதல், பெரிய நாகேந்திரன் காதல் முதலிய நூல்களியற்றியவர்.

சுப்பிரமணிய கவிராசர்: திருக்கட வூருலா. (1917.)

சுப்பிரமணிய கவிராயர்: (19ஆம் நூ. பிற்.) இவர் சேற்றூர் இராமசாமிக் கவிராயர் புதல்வர். இவர் ஆம்பலவாண தேசிகர் காலத்துத் திருவாவடுதுறை ஆதீனப் புலவராயிருந்தவர். ஞானாமிர்தம் இவராற் பதிப்பிக்கப்பட்டது. செப்பறைப் பிள்ளைத் தமிழ் இவர் பாடியது.

சுப்பிரமணிய கவிராயர் சே.ரா.: மதுரை மீனாட்சியம்மை கொம்மைத் தமிழ்ப் பாட்டு. (1919.)

சுப்பிரமணிய குரு: அபரோட்சான் மானு பூதி தீபிகை.*

சுப்பிரமணியச் செட்டியார்: மூவர் முப்பது. (1927.)

சுப்பிரமணிய தீட்சிதர்: (17ஆம் நூ.) இவர் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்தவர்; பிரயோக விவேகம் என்னும் நூல் செய்தவர். இது ஆரியத்துக்கும் தமிழுக்கு முள்ள இலக்கண ஒற்றுமையைத் தெரிவிக்கும். இவர் இரு மொழிகளுக்கும் இலக்கணம் ஒன்று என்னும் கருத்து மயக்கம் பெற்றிருந்தார். இவர் திருக்குரு கூரிற் பிறந்தவர்; சாமிநாத தேசிகர், வைத்தியநாத நாவலர் காலத்தவர்.

சுப்பிரமணிய தேசிகர்: (19ஆம் நூ.) இவர் திருவாவடுதுறை யாதீனத் தலைவராயிருந்தவர். இவரே ஆறுமுக நாவலருக்கு நாவலர் என்னும் பட்டமளித்தவர். இவர் சிவஞான சித்தியாருக்குப் பதவுரை எழுதியுள்ளார்.

சுப்பிரமணியத் தம்பிரான்: திருத்தணிகை விருத்தம். (1892.)

சுப்பிரமணிய பண்டிதர்: (19ஆம் நூ. பிற்.) இவர் தளவரிசை முத்தையா ஞானியாரின் புதல்வர்; மருத்துவப் புலவர். பதார்த்தகுண சிந்தாமணி (1867), தைல வருக்க சிந்தாமணி, தைலவருக்கச் சுருக்கம் முதலிய நூல்களை அச்சிட்டவர்; சிறீகந்த பண்டிதர் வடமொழியிற் செய்த சீவரட்சாமிர்தம் என்னும் நூலை தமிழில் மொழி பெயர்த்தவர். (1867)

சுப்பிரமணிய பண்டிதர்: தணிகைமலைக் கண்ணி (சுபகிருது.)

சுப்பிரமணிய பாரதியார், சி.: (1882-1921) இவர் எட்டையபுரத்திற் பிறந்தவர்; அரசியல் இயக்கங்களிலீடுபட்டிருந்தவர்; தெள்ளிய நடையில் பாடும் ஆற்றல் வாய்ந்தவர். இவர் தேசீயமான கவிகள் பாடினமையின் தேசிககவி சுப்பிரமணிய பாரதியார் என அறியப்படுவர். இவர் இயற்றியதாக சந்திரிகையின் கதை என்னும் ஒரு நூல் 1939இல் அச்சிடப்பட்டது.

சுப்பிரமணிய பிள்ளை, கா. (M.A. M.L.): (-1945) இவர் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்; ஆங்கிலம் தமிழ் என்னும் இரு மொழிப் புலமையும் நிறைந்தவர்களுள் தலைசிறந்தவர். இவர் இயற்றிய நூல்கள்: தமிழ் இலக்கிய வரலாறு (1930), மெய்கண்ட நூல்கள் உரைநடை (1938), சைவ சித்தாந்த விளக்கச் சுருக்கம் (1923), மெய்கண்டாரும் சிவஞான போதமும் (1932), இந்து சமயங்களின் சுருக்க வரலாறும் சிவாலயங்களின் சுமார்த்தக் கலப்பும் (1924), சந்தானாசாரியர் சரித்திரம் (1925), உலகப் பெருமக்கள் (1839), மொழி நூற் கொள்கையும் தமிழ் மொழி அமைப்பும் (1939), பழந்தமிழர் நாகரிகம் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரக் கருத்து (1939), வானநூல், தாயுமானவர், முதலியவும் பிறவும்.

சுப்பிரமணிய பிள்ளை. த.: சிவத்தல மஞ்சரி. (1931.)

சுப்பிரமணியம் செட்டியார் லா.சி.: சங்கரசதகம் (1935).

சுப்பிரமணிய முதலியார், வெ.ப. வெள்ளக்கால்: (1857 - 1947.) இவர் மாட்டு மருத்துவத் தொழில் முறையில் அரசாங்க உயர்தர வேலையிலிருந்து ஆறுதலடைந்திருந்தவர். இவர் இயற்றிய நூல்கள் இராமாயண உள்ளுறை பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும், அகலிகை வெண்பா, கோம்பி விருத்தம், நெல்லைச் சிலேடை வெண்பா முதலியன. ஆங்கிலத்தில் மில்டன் எழுதிய சொர்க்க நீக்கத்தின் ஒரு பகுதியையும், எர்பேட் பென்சர் கல்வியைப் பற்றி எழுதிய பகுதியையும் முறையே செய்யுள் நடையிலும் உரை நடையிலும் மொழி பெயர்த்தவர். (1895).

சுப்பிரமணிய முனிவர்: (18ஆம் நூ. பிற்.) இவர் தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவரெனவும் அறியப்படுவர்; சிவஞான முனிவரின் மாணவர். இவர் இயற்றிய நூல்கள்: திருத்தணிகைத் திருவிருத்தம், துறைசைக் கோவை, கலைசைக் கோவை, கலைசைச் சிலேடை வெண்பா, சிதம்பரேசர் வண்ணம், திருக்குற்றாலச் சித்தித் திருவிருத்தம், பழனி முருகக் கடவுள் பஞ்சரத்தின மாலை, திருச்சிற்றம்பல தேசிகர்மீது சிந்து, பஞ்சரத்தின மாலை, தணிகை விருத்தம், சுப்பிரமணியர் விருத்தம், கேசவப் பெருமாள் இரட்டை மணிமாலை, அம்பலவாண தேசிகர் மீது ஆனந்தக் களிப்பு, பூவனூர்ச் சிலேடை வெண்பா முதலியன.

சுப்பிரமணியர்: அட்டாவக்கிர கீதை.*

சுப்பிராய சுவாமிகள்: குமாரதேவர் தாலாட்டு. (பிரபவ.)

சுப்பிராயச் செட்டியார், த.க.: திருவதிகை வீரட்டானம் பெரிய நாயகியம்மையார் பிள்ளைத் தமிழ். (சர்வ சித்து.)

சுப்பையர்: (-1795). இவர் யாழ்ப்பாணத்திலே காரை தீவில் வாழ்ந்த பிராமணர். இவர் இயற்றியன: நல்லை நான்மணிமாலை, காரைக் குறவஞ்சி என்பன.

சுப்பையா: (19ஆம் நூ. பிற்.) இவர் யாழ்ப்பாணத்து ஏழாலை என்னுமூரினர்; நட்டுவச் சுப்பையா என அறியப்பட்டார்; மேளகார வகுப்பைச் சேர்ந்தவர். இவர் இயற்றிய நூல் கனகி புராணம். இது அக்காலத்தில் வாழ்ந்த கனகி என்னும் ஒரு தேவடியாளின் வாழ்க்கையைப் பற்றியது. இப்பாடல்கள் மிக இன்சுவையும் நகைச்சுவையுமுடையன. இவற்றுள் சில பாடல்கள் முதியோர் ஞாபகத்திலிருந்து சொல்லக் கேட்டெழுதி அச்சிடப்பட்டுள்ளன. இப் புலவரைப்பற்றிப் பாவலர் சரித்திர தீபகஞ் செய்த (1886) சதாசிவம் பிள்ளை பாராட்டி எழுதியுள்ளார்.

சுப்பையா தேசிகர்: ஆருட நவநீதம்.*

சுவாமி கவிராயர்: (-?) இவர் கல்லிடைக் குறிச்சி என்னுமூரினர். இவர் இயற்றிய நூல் பொதிகைகண்டு.

சுவாமிநாத தேசிகர்: (17ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டில் சைவவேளாண் குலத்தினராகிய மயிலேறும் பெருமாள் பிள்ளையிடத்தில் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்று வல்லவராய் செப்பறைப் பகுதியிலுள்ள கனக சபாபதி சிவாசாரியரிடம் வடநூல் பயின்று, திருவாவடுதுறைக்கு வந்து ஞான தேசிகராகிய ஆம்பலவாண தேசிகரிடம் ஞான நூலாராய்ந்து, ஈசான தேசிகர் எனத் தீட்சா நாமம் பெற்றுத், திருநெல்வேலியிலிருந்து நன்னூற்கு உரைசெய்த சங்கர நமச்சிவாயப் புலவருக்கு நன்னூல் கற்பித்து, இலக்கணக் கொத்து, தசகாரியம், திருச்செந்திற் கலம்பகம் முதலிய பல நூல்களியற்றினர். இவர் இலக்கண விளக்கம் இயற்றிய வைத்தியநாத நாவலர், தமிழ்ப் பிரயோக விவேகஞ் செய்த சுப்பிரமணிய தீட்சிதர் காலத்திருந்தவர். ஈசான தேசிகர் பார்க்க. சிவஞான போதச் சூர்ணிகை கொத்து இவர் செய்ததெனக் கருதப்படும். சென்னை அரசாங்கக் கையெழுத்து புலவர் வரிசைப் பட்டிகையில், இலக்கணக் கொத்து, நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் முதலியன இவர் செய்தனவாகக் குறிக்கப்பட்டிருக்கின்றன.

சுவாமிநாத பிள்ளை: படைவேட்டம்மை, துதி, சமளையம்மன்பதிகம், வீரபத்திர சுவாமி பதிகம்.*

சுவாமிநாத பிள்ளை: திருத்தொண்டார் போற்றிக் கலிவெண்பா. (பிரபவ.)

சுவாமிநாத முனிவன், திருவாவடுதுறை: துறைசைப் புராணம்.*

சுவாமிநாதர்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து மானிப்பாயில் ஏறக்குறைய 125 ஆண்டுகளின் முன் வாழ்ந்தவர்; பல தனிப் பாடல்கள் இயற்றியவர்.

சுவாமிநாதன்: பணசை வீரியம்மன் பதிகம். (1935.)

சுவாமிநாதையர்: தசகாரியம்.*

சுவேதவனப் பெருமாள்: மெய்க்கண்ட தேவர் பார்க்க.*

சூடிக் கொடுத்த நாச்சியார்: ஆண்டாள் பார்க்க.

சூதமுனி: நீல கண்ட வாலை சூத்திரம் 50, சூதமுனி வாக்கியம் (வைத்தியம்.)

சூரிய நாராயண சாத்திரியார், வி.கோ.: (1870-1903) இவர் மதுரையில் சபாபதி முதலியாரிடம் கல்வி பயின்றவர்; பி.ஏ. பட்டம் பெற்றவர்; சென்னை பிரசி டென்சிக் கல்லூரியில் தமிழ்ப் புலமை நடத்தியவர்; தமிழ் மொழி ஆக்கத் தின் பொருட்டு அல்லும் பகலும் உழைத்தவர்; தனது பெயரை ‘பரிதிமால் கலைஞன்’ எனத் தமிழ்ப்படுத்திக் கொண்டவர். இவர் இயற்றிய நூல்கள்: தமிழ் மொழி வரலாறு, மதிவாணன் கதை, பாவலர் விருந்து, உரூபாவதி, கலாவதி, நாடகவியல் முதலியன. இவர் தனது 33-வது வயதில் காலமானார்.

சூரியானந்தர்: சூரியானந்தர் சூத்திரம் 13.*

செகராச சேகர மன்னர்: (17ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து நல்லூரிலிருந்து ஆட்சி செய்த அரசர்; கனகசூரிய சிங்கை ஆரிய மன்னரின் புதல்வர். இவரது தமையன் பரராச சேகர மன்னர். இவர் தமிழ்ச் சங்கம் ஒன்றை நிறுவித் தமிழ்ப் புலவரை ஆதரித்து தக்கண கைலாச புராணம் இயற்றினர். இவர் அவையி லிருந்த புலவோர் இவர் பெயரால் செகராச சேகர மாலை என்னும் நூலை சோமையரைக் கொண்டு செய்வித்தனர். அங்காதி பாதம், செகராச சேகரம், பரராச சேகரம் என்னும் வைத்திய நூல்கள் இவர் காலத்தில் தொகுக்கப் பெற்றவை. இம் மருத்துவ நூல்கள் ஏழாலையில் வாழ்ந்த ஐ. பொன்னையா அவர்களால் அச்சிடப்பட்டுள்ளன. தட்சண கைலாச புராணம் 632 விருத்தப் பாக்களுடையது; இதற்கு அரச கேசரி பாயிரம் அளித்துள்ளார். பண்டிதராசர் இயற்றிய பிறிதோர் தக்கண கைலாச புராணமுமுண்டு.

செங்கண்ணனார்: மதுரைச் செங்கண்ணனார் பார்க்க.

செங்குன்றூர் கிழார்: (-?) “ புலவர் திருவள்ளுவரன்றி” எனவரும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்கப் பாடல்கள் பாடியவர் வரிசையில் இவர் பெயர் காணப்படவில்லை.

செஞ்சடை வேதிய தேசிகர்: திருப்பனந்தாள் தலபுராணம் (தருமபுர ஆதீனம் 1944.)

செண்பக மன்னார்: சிறீ கிருட்டிண னேசல்.*

செண்பையார் காவலன்: செண்பைஞானப் பிரகாசர் பிள்ளைத் தமிழ்.*

செந்தி நாதையர்: (1848-1924) இவர் யாழ்ப்பாணத்து ஏழாலை என்னுமூரினர். இவர் பத்து ஆண்டுகளாகக் காசியில் வாழ்ந்தமையின் காசிவாசி செந்தி நாதையர் எனவும் படுவர். இவர் இயற்றிய நூல்கள்: நீலகண்டமா பாடிய மொழி பெயர்ப்பு, விவிலிய குற்சிதம், தத்துவ விளக்கம் (1918), சீகாழிப் பெரு வாழ்வின் சீவகாருண்ணியம் (1907), மகாவுக்கிர வீர பத்திரா°திரம் (1915), ஞனரத்தினாவளி (1888) முதலியன.

செம்பியனார்: (சங்ககாலம்) இது சோழர் குடிக்குரிய பெயர். இதனால் இவர் சோழவரசர் மரபினர் எனத்தெரிகிறது. இவர் பாடியது: நற். 102.

செம்புலப் பெய்நீரார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 40. இவர் தமது பாடலில் செம்புலப் பெய்நீர் போல என்று கூறினமையின் இப்பெயர் பெற்றார்.

செம்பூட் சேய்: அகத்தியர் மாணவரிலொருவர்.

செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பொன் வணிகர். அயிரியாறு இவராற் புகழப்பட்டுள்ளது. சிறுகுடிக் கிறைவனாகிய பண்ணனை இவர் புகழ்ந்துள்ளார். இவர் பாடியது ; அகம். 177.

செயலூர் கொடுஞ் செங்கண்ணனார்: (?) திருவள்ளுவமாலை 42-வது பாடல் இவர் செய்ததாக வழங்கும்.

செயலூர்க் கோசங் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 66.

செயவீர மார்த்தாண்ட தேவன்: (-?) இவர் பஞ்சதந்திரக் கதை என்னும் வட மொழி நூலைத் தமிழில் செய்யுள் நடையிலியற்றியவர்; செங்குந்த மரபினர்.

செயிது மீறாப் புலவர்: (18ஆம் நூ.) இவர் மதுரையைச் சேர்ந்த உசையின் நயினாரின் புதல்வர்; பப்பரத்தியார் அம்மானை பாடியவர்.

செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்: (?) திருவள்ளுவமாலை 41 இவர் பாடியதாக வழங்கும்.

செயிற்றியனார்: (சங்ககாலம்) செயிற்றிய மென்னும் நாடகத் தமிழ் நூலியற் றியவர். இந்நூல் இறந்துபட்டது. “கவியுறுப்புக்கு அளவை செயன்முறையுள் ளும் செயிற்றியத்துள்ளும் அகத்தியத்தும் கண்டு கொள்க” (யா.வி.ப. 282.) இதனால் செயிற்றியம் என்னும் யாப்பு இலக்கணமும் ஒன்று உண்டு எனத் தெரிகிறது.

செய்கு அப்துல் காதிறு நயினார் அலிம்: (19ஆம் நூ.) இவர் காயற்பட்டினத்தைச் சேர்ந்தவர்; நாகையந்தாதி, மத்தான்சகிபு பாடலுக்கு ஒருபா ஒருபஃது, வாயுறை வாழ்த்து முதலியன பாடியவர்.

செய்தி வள்ளுவன் பெருஞ் சாத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 228.

செல்லப் பிள்ளை: சிதம்பரக் குறவஞ்சி.*

செல்லூராசிரியர் ஆண்டைப் பெருங் குமரனார்: (கி.பி-) இவர் கீரவி கொற்றனாரிடம் அகப்பொருள் உரைகேட்டவர்.

செல்லூர் கிழார் மகனார் பெரும் பூதங் கொற்றனார்: (சங்க காலம்) இவர் பாடியது: அகம் 250; குறு. 218, 358; 363; நற். 30

செல்லூர்க் கோசிகன் கண்ணனார்: (சங்ககாலம்) செல்லூர் சோழ நாட்டின் கீழ்க்கடற்கரையின் கண்ணதான ஓர் ஊர். மக்கட் பேறுடையார்க்கே இம்மை மறுமைப் பயன் உண்டாகுமென்று இவர் கூறியுள்ளார். இவர் பாடியது: அகம். 66

செல்வக் கேசவராய முதலியார், எம்.ஏ.: (-1921) இவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ் விரிவுரையாளராக விருந்தவர்; தமிழ் ஆக்கத்திற்காகப் பெரிதும் உழைத்தவர்; கம்பன் (1902), திருவள்ளுவர் (1904), குசேலர் சரித்திரம், கண்ணகி, தமிழ் (1904), முதலிய நூல்கள் இயற்றியவர்; பழமொழி என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நூலைப் பழைய உரையோடு பதித்தவர்.

செல்வத்தாசிரியர் பெருஞ் சுவனார்: (-?) கீரவி கொற்றனாரிடம் அகப் பொருளுரை கேட்டவர்.

செவ்வந்திநாத தேசிகர்: (1907-1932) இவர் யாழ்ப்பாணத்திலே கரணவாயென்னு மூரில் சைவக் குருக்கள் மரபிற் பிறந்தவர். வித்துவான் சி. கணேசையரிடம் கல்வி பயின்றவர். இவர் இயற்றியன: நல்லூர்க் கந்தசாமிக் கோவை, மாவைக் கந்தசாமி மும்மணிமாலை முதலியன.

செவ்வைச் சூடுவார்: (16ஆம் நூ.) இவர் விண்டு பாகவத புராணத்தைத் தமிழிற் பாடிய புலவர். ஆரியப்ப முதலியார் செய்த பாகவதம் பிறிதொன்று. இதனை “கதிக்கு மறுபிறப் பொழித்துக் கதி கொடுக்கும் பாகவத கதையை முன்ன, மதிக்கு முயர் வடமொழியாற் புனைந்தருள வியாத முனிவரனே மீள, வுதிக்கு நிம்பை மாதவ பண்டிதச் செவ்வைச் சூடியென வுலகுபோற்ற, விதிக்கு மறைய வர் குலத்திற் றோன்றியருந் தமிழாலும் விளம்பினானே,” என்பதாலறிக. இவரிருந்தது நிம்பை யென்னும் வேம்பத்தூர்; பிறப்பால் வைணவ வேதியர். இவர் செய்த பாகவதம் விண்டு பாகவதமென்றும், பாகவத புராணமென்றும் பெயர் பெறும்.

சென்ன மல்லையர்: (18ஆம் நூ. பிற்.) இவர் வீர சைவ மதத்தினர்; சிதம்பரத்தில் பச்சை கந்தையர் மடத்தில் வாழ்ந்தவர்; சிவ சிவ வெண்பா இயற்றியவர். சிவ சிவ வெண்பா 1768இல் பாடப்பட்டது.

சேகம் பூதனார்: (சங்ககாலம்) சேந்தம் பூதனார் என்பவரும் மதுரை எழுத்தாளன் சேந்தம் பூதனா ரென்பவரும் இவரே. இவர் பாடியன: நற். 69, 261; அகம். 84, 207; குறு. 90, 226, 247.

சேக்கிழார்: (12ஆம் நூ.) இவர் குன்றத்தூரிலே வேளாண் மரபில் சேக்கிழார் குடியிற் பிறந்தவர். “இப்பெரியார் அனபாயன் என்ற 2ஆம் குலோத்துங்க சோழன் காலத்தவர் என்பது அவர் தம் வாக்காலே அறியப்பட்டது. இவ் வேந்தனிடம் அமைச்சர் தலைவராய், அவனால் உத்தமசோழ பல்லவ வரையர் என்ற சிறப்புப் பெயர் பெற்றுச் சேக்கிழார் விளங்கியவரென்பதும், அச் சோழன் விருப்பின்படி திருத்தொண்டர் புராணத்தை அவர் பாடி முடித்துப் பின்பு தம்மமைச்சுத் தொழிலினின்றும் விலகிச் சிவதொண்டு புரிந்து முனிவராய் வாழ்ந்தவ ரென்பதும், இப்பெரியார் வகித்த அரசியற் பதவியை இவரிளவல் பாலறா வாயர்க்குத் `தொண்டைமான்’ என்ற பட்டத்துடன் அச் சோழன் அளித்தனன் என்பதும், பிறவும் உமாபதி சிவாசாரியார் பாடிய சேக்கிழாhர் புராணத்தாலறியப் படுகின்றன. அவ்வனபாயனுக்குத் திருநீற்றுச் சோழன் என்ற வேறு பெயருமுண்டு என்று அவர் கூறுவர். இச்சோழன் தில்லையம்பலம் வேய்ந்தவன் என்பது பெரிய புராணத்தாலறியப்படும். கி.பி. 1133-1146-வரை வாழ்ந்தவனும் விக்கிரமன் மகனுமான சோழவரசன் காலத்தேதான் பெரிய புராணம் இயற்றப்பட்டதென்று கொள்ளற்பாலது” (சா.த.க.ச.) சேக்கிழாருக்கு பாலறாவாய ரென்னுமொரு பெயருமுண்டு. பெரிய புராணம் திருத்தொண்டர் புராணம் எனவும் வழங்கும். இது சுந்தரமூர்த்தி சுவாமிகள் செய்த திருத்தொண்டத்தொகையை முதனூலாகவும், நம்பி யாண்டார் நம்பி செய்த திருத்தொண்டர் அந்தாதியை வழி நூலாகவுங் கொண்டு 4286 பாடல்களும், இரண்டு காண்டங்களும், பத்துச் சருக்கங்களும் கொண்ட நூலாக இயற்றப்பட்டது.

சேஷகவி: (சீரங்கம் கந்தாடை அண்ணனின் மாணவன்) பாராங்குச நாடகம்.*

சேஷசாத்திரியார்: இராம சாதகம். (1870.)

சேசாத்திரி சிவனார்: இலக்கணவிருத்தி தத்துவக் கட்டளை, நானாசீவ வாதக் கட்டளை (தத்துவக் கட்டளை).*

சேசாத்திரி, வேதாரணியம்: ஆத்மபோத உரை.*

சேதிராயர்: (11ஆம் நூ.) இவர் திருவாரூர்ப் பக்கத்துள்ள மெய்ப் பொருணா யனாரது சேதி நாட்டு மன்னர் மரபினர். இவர் தில்லைச் சிவனார் மீது ஒரு திருவிசைப்பாப் பாடியுள்ளார். இது 9ஆம் திருமுறையிலுள்ளது.

சேந்தங் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் இயற்பெயர் கண்ணனார். சேந்தன் என்னும் தந்தை பெயரின் அன்விகுதி கெட்டு ஆம் முச்சாரியை புணர்ந்து சேந்தங் கண்ணனா ரென்றாயிற்று (தொல் எழுத்து. 350). நாரைவிடுதூதாக இவர் பாடியுள்ள செய்யுள் கேட்பார் மனதைப் பிணிக்கும் தகையது. இவர் பாடியன: அகம் 350; நற். 54.

சேந்தம் பூதனார்: (11-13ஆம் நூ.) இவர் செய்த பாட்டியலிலுள்ள சூத்திரங்கள் பன்னிரு பாட்டியலின் பகுதி என்று கொள்ளப்படும்.

சேந்தனார்: (10ஆம் அல்லது 11ஆம் நூ.) இவரைப்பற்றி வழங்கும் வரலாறு வருமாறு: “காவிரிப்பூம்பட்டினத்தில் பட்டினத்தடிகள் மாளிகையில் கரு வூலத் தலைவராயிருந்து பட்டினத்தடிகள் கட்டளைப்படி பொருள்களைச் சூறைவிட்டனர். இதனைக் கேள்வியுற்ற அரசன் அப்பொருள்களைக் கருவூலத்திற் சேர்ப்பிக்கவும் மிகுந்த சொத்துக்களைக் காட்டவும் கூறி வருத்தினான். பின் சிறையிலிருந்து ஆசாரியரால் நீங்கி மனைவி மக்களுடன் சிதம்பரமடைந்து விறகு விற்று வரும் இலாபத்தால் ஒரு சிவனடியாரை உண்பித்து வரும் நாட்களில் சிவமூர்த்தி ஒரு நாள் நடு இரவில் இவரிடஞ் சென்று கூழுண்டு அந்தக் கூழை மறுநாள் தமது திருமேனியிற் காட்டிச் சேந்தனார் வீட்டிலுண்ட கூழென்று அனைவர்க்குந் தெரிவித்து, அந்த அற்புதம் இவரால் நடந்ததோ என்று ஐயம் கொண்டவர்க்கு ஐயம் நீங்கத் திருத்தேரை எழுந்தருளச் செய்து சேந்தனார் திருப்பல்லாண்டு பாட அசையச் செய்தனர்”. முருகதாச சுவாமிகள் இயற்றிய புலவர் புராணத்தில் சேந்தனார் வரலாறு இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இவர் திருவீழிமிழலையி லிருந்தவரென்றும், கௌணிய கோத்திரத்தினரென்றும், ஏறன் என்னும் பெரியன ரென்றும், அத்தலத்தில் காணப்படும். “இவ்வூர் கவுணியன் ஏறன் சேந்தன்” என்னும் கல்வெட்டைக் கொண்டு சிலர் கூறுகின்றனர். திருவீழி மிழலை, திருவாவடுதுறை, திருவிடைக்கழி முதலிய தலங்களுக்கு இவ ருடைய திருவிசைப்பாப் பதிகங்களுள்ளன. திருவிடைக்கழித் திருவிசைப்பா முருகக் கடவுள் மீது பாடப் பெற்றது. ஆம்பர் என்னும் நாட்டுச் சிற்றரசரும் திவாகரம் என்னும் நிகண்டு செய்வித்த வருமாகிய ஒரு சேந்தனுமுளர். சேந்தன் என்னும் பெயருடன் சங்ககாலம் முதல் பிற்காலம் வரை பலர் விளங் கினார்கள். திருமாளிகைத் தேவர் பார்க்க.

சேந்தன் கீரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 311.

சேரமானந்தையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 41.

சேரமானெந்தை: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 22.

சேரமான் இளங்குட்டுவன்: (சங்ககாலம்) இவர் சேர மரபினர். கோங்கின் மலர் உதிர்ந்து விழுவது கைவிடு சுடர் போலுமென வருணித்துள்ளார். இவர் பாடியது: அகம். 153.

சேரமான் கணைக்காலிரும் பொறை: (கி.பி. 50.) இவன் சோழன் செங் கண்ணானோடு போர் செய்து பிடிக்கப்பட்டுக் குடவாயிற் கோட்டத்துச் சிறையிற் கிடந்து தண்ணீர் தாவென்று கேட்டு உடனே பெறாது பின்பு பெற்று அதனை மானத்தால் உண்ணாது கைக் கொண்டிருந்து “குழவியிறப்வினும்” என்னும் பாடலைப் பாடித் தன் கருத்தைப் புலப்படுத்தி அப்பால் துஞ்சினான். இவன் பாடியது: புறம். 74.

சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை: (சங்ககாலம்) இவன் தன் மனைவி யிறந்தபொழுது பிரிவாற்றாது, “யாங்கு பெரிதாயினும்” என்னும் புறம். 245 வது பாடலைப் பாடினான்.

சேரமான் பெருமாள்: (9ஆம் நூ.) இவர் மாக்கோதையார் என்னும் சேர அரசர்; செங்கோற் பொறையனுக்குப் புதல்வராகக் கொடுங்கோளூரிற் பிறந்தவர். இவர் பாடியன: திருவாரூர் மும்மணிக்கோவை, பொன்வண்ணத்தந்தாதி, திருவந்தாதி, திருக்கைலை ஞானவுலா முதலியன. இவர் காலம் கி.பி. 825இல் முடிவடைந்ததாக ஆராய்ச்சியாளர் கூறுவர். இவர் சுந்தரமூர்த்தி சுவாமி களோடு தலங்களுக்கு யாத்திரை செய்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஏழாம் எட்டாம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த இரண்டாம் நரசிம்மனை, “கடல் சூழ்ந்த உலகெல்லாம் ஆள்கிறை கழற் சிங்கன் அடியார்க்கு மடியேன்” என நிகழ் காலத்திற் குறிப்பிட்டுள்ளார். சுந்தரரும் சேரமானும் கைலைக்குச் சென்றதாக ஐதீகமுண்டு.

சேறைக் கவிராசபிள்ளை: (16ஆம் நூ.) இவர் சோழ நாட்டிலுள்ள சேறை என்னுமூரினர்; சாதியிற் கணக்கர்; ஆசுகவி எனப் புகழ் பெற்றவர். இவரியற்றிய நூல்கள் காளத்திநாதருலா, அண்ணாமலையார் வண்ணம், சேயூர் முருகனுலா, வாட்போக்கி நாதருலா (இரத்தினகிரியுலா), திருக்காளத்தி நாதர் கட்டளைக் கலித்துறை என்பன. இவர் சேறை ஆசு கவிராசர் எனவும் அறியப்படுவர்.

சேனாதிராச முதலியார்: (1750-1840) இவர் யாழ்ப்பாணத்திலே தெல்லிப்பழை என்னுமூரிலுள்ள உயர் வேளாண் குடும்பத்தில் நெல்லை நாதருக்குப் புலவராகத் தோன்றினார். நெல்லை நாதர் இரு பாலையில் வாழ்ந்து வந்தார். சேனாதிராயர் கூழங்கைத் தம்பிரான் சிற்றம்பலப் புலவர் என்போரிடம் கல்வி பயின்றவர்; அம்பலவாண பண்டிதர், சரவணமுத்துப் புலவர், ஆறுமுக நாவலர் என்போரின் ஆசிரியர். இவர் ஆங்கில மொழி அறிவும் உடையராய் சட்டச் சோதனையில் தேறி வழக்கறிஞராக (Proctor) யாழ்ப்பாணத்தில் தொழிலாற்றியவர். இவர் இயற்றிய நூல்கள்: நல்லை வெண்பா, நல்லைக் குறவஞ்சி, நல்லை யந்தாதி, நீராவிக் கலிவெண்பா, ஊஞ்சற் பதிகங்கள் முதலியன; மனிப்பாயில் அமெரிக்க மிசன் அச்சிட்ட தமிழ் அகராதியைத் தொகுத்தவருள் இவரொருவராவர். இவர் 1840இல் காலமானார்.

சேனாவரையர்: (13ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டிலுள்ள ஆற்றூரில் படைத்தலைவர் குடும்பத்திற் பிறந்து 1280இல் உலகு நீத்தனர் எனச் சாசன தமிழ் கவி சரிதம் கூறும். இவரைப் பிராமண வகுப்பினர் எனக் கூறுவாரு முளர். இவர் பேராசிரியருக்குப்பின் வாழ்ந்து தொல்காப்பியச் சொல்லதிகாரம் ஒன்றற்குமே உரை எழுதினர். நச்சினாக்கினியர், சேனாவரையர் உரைகளை மறுத்துள்ளார். சேனாவரையர் மூன்றாம் குலோத்துங்கன் காலத்தவரான பவணந்தி நேமிநாதர் என்போரை மறுத்துள்ளார். “வட நூற் கடலை நிலை கண்டறிந்த சேனாவரையர் எழுத்ததிகாரத்திற் குரை செய்தாராயின் இன்னோ ரன்ன பொருளனைத்துந் தோன்ற ஆசிரியர் கருத்துணர்ந்துரைப்பர்” எனச் சிவஞான முனிவர் தமது தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தியுள் கூறி யிருப்பதும் “ஆனாவியல் பிற் சேனாவரையம்” என இலக்கணக் கொத் துடையார் எழுதியிருப்பதும் இவர் உரைத்திறத்தை விளக்குவன.

சைநமாமுனிவர்: (-?) இவர் சிநேந்திர மாலை என்னும் சோதிட நூல் இயற்றியவர். இவர் உபேந்திராசிரியர் எனவும் அறியப்படுவர்.

சைமன் காசிச் செட்டி: (1807 - 1861) இவர் இலங்கையின் ஆங்கிலர் ஆட்சி தொடங்கிய காலத்தில் அரசினர் உத்தியோகத்திலமர்ந்து சரித்திர ஆராய்ச்சி யையே பொழுது போக்காகக் கொண்டவர். இவர் இறுதியில் சிலாபாத்தில் பெரிய கோட்டு நீதிவானாக (District Judge) கடமை யாற்றியவர். இவர் இயற்றிய நூல்களில் தமிழ்ப்புலவர் (Tamil Plutarch) என்னும் நூல் மிகச் சிறப்புடையது. இது புலவர் வரலாறுகளை அகரவரிசைப் படுத்திக் கூறும் நூல்; இது விநோதரச மஞ்சரிப் போக்கிலமையாது. வரலாற்று முறையாக எழுதப்பட் டுள்ளது . இதனையே மொழி பெயர்த்தும் பிற்காலத்து வாழ்ந்த சில புலவர்கள் வரலாற்றைச் சேர்த்தும் எழுதிய பாவலர் சரித்திர தீபகம் என்னும் நூலைச் சதாசிவம் பிள்ளை அவர்கள் 1886இல் வெளியிட்டார். தமிழ்ப்புலவர் என்னும் நூல் 1859இல் அச்சிடப்பட்டது. திருவாதவூரர் புராணத்தின் சில பகுதிகளை இவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இவர் ஆங்கிலத்தில் செய்த நூல்கள் 50-க்குமேல்.

சொக்கசீயர்: (13ஆம் நூ.) இவர் அவனி நாராயணக் காடவப் பெருஞ்சிங்கன் என்னும் அரசனது வெற்றித் திறங்களைப் பாடிய புலவர். இவ்வரசன் 1243இல் பட்டம் பெற்றான். (சா.த.க.ச.)

சொக்கநாதப் புலவர்: (17ஆம் நூ.) இவர் தொண்டை நாட்டினர்; மதுரையில் அரங்க கிருட்டிணப்ப நாயக்கரின் (1653) அமைச்சராக விளங்கிய திரு வேங்கிட நாதையர் காலத்தவர். இவர் சில தனிப்பாடல் பாடியுள்ளார். திரு வேங்கிடநாதையர் பிரபோத சந்திரோதய மென்னும் தமிழ் நூலியற் றியவராவர்.

சொக்கநாதர்: சொக்கநாதர் சூத்திரம்.*

சொக்கப்ப நாவலர்: (18ஆம் நூ. முற்.) இவர் குன்றத்தூரினர்; பொய்யாமொழிப் புலவர் இயற்றிய தஞ்சைவாணன் கோவைக்குச் சிறந்ததோர் விரிவுரை இயற்றியவர்.

சொக்கப்ப நாவலர்: (20ஆம் நூ.) இவர் பொள்ளாச்சியினர்; சேலம் தல புராணம், பாடியவர். (கொ.பு.)

சொக்கலிங்க தேசிகர்: பழநியாண்டவர் பதிகம் (கீலக.)

சொக்கலிங்கச் செட்டியார் ; நால்வர் பிள்ளைத்தமிழ் (பிரபவ), வீரசேகர மாமணிமாலை (சார்வரி), காசி விசுவேசர் அடைக்கலப் பதிகம் (1927), சோமசுந்தரமாலை (பிங்கள), அகத்தீச்சுரப் புராணம் (1917.)

சொக்கலிங்கஞ் செட்டியார், காரைக்குடி: (20ஆம் நூ.) நகரத்தார் குடியினர்; செய்யுள் செய்வதில் வல்லவர். இவர் இயற்றிய செய்யுள் நூல்கள் 49; உரைநடை நூல்கள் 14. திருப்பத்தூர்ப் புராணம், பெருந் தோட்டத்து அகத் தீசுரப் புராணம், முதலிய செய்யுள் நூல்களும், வேதாந்தத் தெளிவு, மாயா வாதக் கொள்கை மறுப்பு, சிவஞான போதார்த்த லகுவசனம் முதலியன சிறப் புடையன.

சொக்கலிங்கப் புலவர்: (-?) இவர் கொங்கு நாட்டிலுள்ள குன்றத் தூரினர்; திருவள்ளுவப்
புராணம்; (1927), பாவநாசப் புராணம் முதலிய நூல்கள் பாடியவர். (கொ.பு.)

சொருபானந்தர்: (15ஆம் நூ.) திருவாரூர்ச் சிவப்பிரகாசர் மாணவர்; தத்துவராயரின் குரு.

சொல்லூராசிரியர் ஆண்டைப் பெருங் குமரனார்: (-?) மணலூராசிரியர் புளியங்காய்ப் பெருஞ் சேந்தனாரிடம் அகப் பொருளுரை கேட்டவர். (இ.க.உ.)

சோணாசல பாரதி திருவருணை: உண்ணாமுலையம்மை பிள்ளைத் தமிழ். (1919.)

சோணாட்டு முகையலூர் சிறுகருந் தும்பியார்: (சங்ககாலம்) இவர் பாடியன: புறம். 181, 265.

சோதிடசார்வ பௌமர்: (17ஆம் நூ. பிற்.) இவர் திருவாரூரினர்; சாதக அலங்கார மென்னும் சோதிட நூல் இயற்றியவர்.

சோதிப் பிரகாசர்: அஞ்ஞவதைப்பரணி (ஞானபரணி), மோகவதைப் பரணி, சசிவன்ன போதம்* அஞ்ஞவதைப்பரணி தத்துவராயர் செய்ததாகவும் வழங்கும்.

சோமசுந்தர தேசிகர், ப.: தியாகராச சுவாமி இருபா இருபஃது, ³ சதகம் (பார்த்திப.)

சோமசுந்தர நாயகர் ; (1846-1901) இவர் வைணவக் குடும்பத்திற் பிறந்து அரங்கசாமி என்னும் பெயர் பெற்றிருந்தவர். இவர் உறவினராகிய ஏகாம்பர சிவயோகியால் வளர்க்கப்பட்டு சோமசுந்தரம் என்னும் பெயர் இட்டுக் கொண்டவர். இவர் மாயாவாதம், விட்டுணுபரத்துவம் முதலிய கொள்கை களை எதிர்த்துவாதப் போர் நடத்துவதிலும் சைவசித்தாந்தக் கொள்கை களைப் பரப்புவதிலும் தமது வாழ்நாளைச் செலவிட்டனர். வைணவருக் கெதிராக நடத்திய வாதங்களின் பொருட்டு சிவாதிக்க இரத்தினாவளி என்னும் தலைப்புடைய நூல்களை வெளியிட்டு வந்தார். சித்தாந்த இரத்தினா கரம், சித்தாந்த ஞான போதம் முதலிய தலைப்புகளுடனும் நூல்கள் வெளி யிடப்பட்டன. இவர் வெளியிட்ட நூல்கள் 110 வரையில். இவர் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரிடத்துப் பத்தி பூண்டவர். இவர் சென்னையிலே சூளையில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய நூல்களிற் சில: ஆசாரியப் பிரபாவம், மெய்கண்ட சிவதூடண நிரோதம், சித்தாந்தசேகரம், ஆவாச ஞான நிரோதம், வேத சிவாகமப் பிரமாணியம், பிரமானுபூதி, சிவநாமப் பஃறொடை வெண்பா முதலியன. மறைமலையடியாரின் சமயக் கல்வி ஆசிரியரும் இவராவர்.

சோமசுந்தரம் பிள்ளை: (18ஆம் நூ.) இவர் சிவஞான முனிவரின் மாணாக்கரு ளொருவராவர்.

சோமி: (15ஆம் நூ.) இவள் ஆற்றூரிலிருந்த ஒரு தாசி, தமிழ் வல்லவள்; காளமேகப் புலவரால் பாடப்பட்டவள்.

சோழன்குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்: (கி.பி. 1-20) இவனது இராசதானி உறையூர்; மிக்க கொடையும் வீரமுமுடையோன்; செய்யுள் செய்வதில் வல்லவன். கருவூரை முற்றுகை செய்து சேரனை வென்றவன். இவனைப் பாடிய புலவர் ஆலத்தூர் கிழார், வெள்ளைக் குடிநாகனார், மாறோக் கத்து நப்பசலையார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், ஆடுதுறை மாசாத்தனார், ஐயூர் முடவனார், நல்லிறையனார், எருக்காட்டூர் தாயங்கண் ணனார். இவருள் இவன் இறந்தபின்பு மிருந்து பிரிவாற்றாது வருந்தியவர்கள் மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார். (உ.வே.சா.) இவன் தென்னவர் மரபில் வந்த சிறு குடி கிழான் பண்ணன் என்னும் கொடை யாளியைப் புறம். 173ல் பாடியவன்.

சோழன் நலங்கிள்ளி: (கி.பி.1-) இவன் கவி செய்வதில் வல்லவன்; பாண்டிய நாட்டிலிருந்த ஏழு அரண்களை அழித்துக் கைக்கொண்டு அவற்றில் தனது புலிக்கொடியை நாட்டினான்; தனது தாயத்தாரோடு பகைத்து அவர்களிருந்த ஆவூரையும், உறையூரையும் முற்றுகை செய்தான்; மாவளத்தான் என்பவனுக்குத் தமையன்; இவனுக்குச் சேட்சென்னி யென்றும், புட்பகை யென்றும், தேர்வண் கிள்ளியென்றும் பெயருண்டு; நெடுங்கிள்ளியோடு பகைமையுடையோன். முன்னர் போர் செய்வது வெற்றி கொள்ளுதலையே பொருளாகக் கொண்டிருந்த இவன் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சொல்லால் பின்பு அதனைத் துறந்து அறஞ் செய்தலையே மேற் கொண்டான். இவனைப் பாடிய புலவர்கள் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார் (உ.வே.சா.) இவன் பாடியன: புறம். 73, 75.

சோழன் நல்லுருத்திரனார்: (கி.பி. 100) இவன் நற்குண நற்செய்கை யுடையோன்; செய்யுள் செய்வதில் வல்லவன்; இவன் பாடிய பாடல் சிறந்த நட்புடை யோர்பாற் பழகுதலில் மிக்க விருப்பமுடையோனென்பது வெளியாகின்றது. இவன் பெயர் சோழன் நல்லுத்தர னெனவும் வழங்கும். இவன் முல்லைக் கலி பாடியவன்; இவன் புறத்தில் பாடியன ; 73, 190. 73-வது பாடல் நலங்கிள்ளி எனவும் பாடமுண்டு.

சௌரிப் பெருமாள் தாசர்: பார்த்தசாரதி மாலை (1907).

ஞானக்கூத்தர்: (16ஆம் நூ.) இவர் நிரம்பவழகியரின் மாணாக்கர்; தொண்டை நாட்டில் வெண்பாக்கமென்னு மூரிற் பிறந்தவர். திருவையாற்றுப் புராணம் பாடியவர். இது பஞ்சநதிப் புராணம் எனவும் அறியப்படும். செப்பேசர் புராணமுமிவரால் இயற்றப்பட்டது.

ஞானக்கூத்தர் - 2: (17ஆம் நூ. அல்லது 18ஆம் நூ. முன்) இவர் சிவன்பாக்கத்தில் வாழ்ந்த சைவத் துறவி; விருத்தாசல புராணமியற்றியவர். இப் புராணம் 435 விருத்தப்பாக்களடங்கியது. இவர் பெயர் ஞானக்கூத்த சிவப்பிரகாச தேசிக ரெனவும் வழங்கும்.

ஞானசம்பந்த தேசிகர்: (16ஆம் நூ.) இவர் பாண்டிநாட்டுச் சீவில்லிபுத்தூர் வேளாளர்; சிவபோகசாரம், சொக்கநாத வெண்பா, பரமானந்த விளக்கம், முத்தி நிச்சயம், திரிபதார்த்த தசகாரிய அகவல், நவரத்தின மாலை, பண்டாரக் கலித்துறை, சொக்கநாதக் கலித்துறை, பேரானந்த சித்தியார் முதலியன இவர் பாடிய நூல்கள்.

ஞான சம்பந்தர்: (நிரம்பவழகியரின் மாணவர்) திருவாரூர்ப் புராணம். (1895.)

ஞானசிகாமணிப் பிள்ளை, தஞ்சாவூர்: இருசமய சம்பந்தம், (சென்னை 1852.)

ஞானசித்த சுவாமி, திருக்குருகூர்: திருமலைப் பதிகம் (திருநெல்வேலி 1902), சடாதார விளக்க மென்னும் திருமந்திரம் நூறு (1894.)

ஞானசித்த சுவாமிகள்: (20ஆம் நூ.) இவர் பேரூரினர். பட்டீச்சுர பதிகம் பாடியவர். (கொ.பு.)

ஞானசித்த மூர்த்தி சுவாமிகள்: செங்கழுநீர் விநாயகர் பதிகம் (1906), திரிசிராப்பள்ளி பதிகங்கள், திருவெண்காட்டடிகள் பதிகம். (1906.)

ஞானப்பிரகாச தேசிகர், யாழ்ப்பாணம்: (17ஆம் நூ. பிற்.) இவர் யாழ்ப் பாணத்திலே திருநெல்வேலியிற் பிறந்தவர். அக்காலத்தில் போர்த்துக் கேயரின் சமய நெருக்குதலால் இளமையில் தென்னிந்தியா சென்று பல அறிஞரிடம் தமிழ் இலக்கண இலக்கியங் கற்றார்; சமக்கிருத ஆகமங்களைப் படித்தறியும் பொருட்டுக் கௌடநாடு சென்றிருந்தார். சூத்திரன் ஒருவன் சமக் கிருதம் கற்றலும் ஆகமங்களைப் படித்தலும் ஆகாது என்னும் கொள்கை யுடைய பிராமணர்கள் அவருக்குச் சமக்கிருதங் கற்பிக்க மறுத்தார்கள். அவருள் தாராள சிந்தையுள்ள ஒருவர் இவருக்குச் சமக்கிருதங் கற்பித்தார். இவர் திருவண்ணாமலைச் சைவ மடத் தம்பிரானாக இடம் பெற்றிருந்து பல நூல்களியற்றினர். இவர் பௌட்கர ஆகமத்துக்கு ஒரு விரிவுரை எழுதினார்; சிவஞான சித்தி சுபகத்துக்கும் இவர் எழுதிய ஓர் உரை உண்டு. சிதம்பரத்தில் இவர் வெட்டுவித்த குளம் ஞானப்பிரகாசர் குளம் என்னும் பெயருடன் உள்ளது.

ஞானப்பிரகாசநாத சுவாமி, இராயபுரம்: அண்டபிண்ட வியாக்கியானம் (1879), செபத்தியானக் குறள் (1878.)

ஞானப்பிரகாச பட்டாரகர்: (-?) இவர் திருவாரூரிலிருந்த சுத்த சைவ வேளாளர், புட்பவிதி என்னும் நூலியற்றியவர்.

ஞானப்பிரகாசம் பிள்ளை M.J.: நூதன அர்ச். இ°தாக்கியார் நாடகம். (சென்னை 1896.)

ஞானப்பிரகாசர் 1: ஞானப்பிரகாச தேசிகர் பார்க்க.

ஞானப்பிரகாசர் 2: திருவொற்றியூர் ஞானப்பிரகாசர் பார்க்க.

ஞானப்பிரகாசர் 3: கமலை ஞானப்பிரகாசர் பார்க்க.

ஞானப்பிரகாசர் கச்சி 4: கச்சி ஞானப்பிரகாசர் பார்க்க.

ஞானப்பிரகாசர் 5: (1875 - 1947) இவர் மானிப்பாயைப் பிறப்பிடமாகக் கொண்டு கத்தோலிக்க கிறித்துவ மதத்தைத் தழுவிக் கிறித்துவ குருவாக நல்லூரிலிருந்தவர்; கல்வியைப் பொழுது போக்காகக் கொண்டவர். இவர் தமிழ், சமக்கிருதம், ஆங்கிலம், இலாத்தின் முதலிய 20 மொழி வரையில் அறிந்தவர். இவர் செய்த தமிழ் நூல்கள் பல. தமிழ் அமைப்புற்ற வரலாறு, தமிழ்ச் சொற் பிறப்பு ஒப்பியல் அகராதி என்பன அவற்றுள் தலை சிறந்தன. தமிழ் ஒப்பியலகராதியில் இலாத்தின், கிரீக், கொதிக், சுமேரியம், கிதைதி, சமக்கிருதம் முதலிய மொழிகளில் சென்று உருத்தெரியாது வழங்கும் தமிழ்ச் சொற்களும் அவற்றின் மூலங்களும் ஆராய்ந்து காட்டப்பட்டுள்ளன. இவ்வகராதியை அச்சிடுவதற்கு இலங்கை அரசாங்கம் ஆண்டில் 2000 ரூபாய் நன்கொடை வழங்கி வந்தது. இதன் பகுதியே வெளி வந்தது. இவ் வகை நூல்களின் அருமை பெருமைகளை அறிந்து ஊக்குவாரின்மை யினாலேயே இந்நூல் தடைப்பட்டது.

ஞானமணி நாடார்: தமிழ் இலக்கண சிந்தாமணி. (சென்னை 1893.)

ஞான வரோதய பண்டாரம்: (16ஆம் நூ.) இவர் தமிழிலே உபதேச காண்ட மியற்றிய ஆசிரியர். இது கோனேரியப்பர் செய்த உபதேச காண்டத்தின் வேறானது போலும். (தமிழ் லெக்சிக்கன் அகராதி.)

ஞானானந்த சுவாமி: பஞ்சாட்சர இரகசியம். (சென்னை 1900.)

தங்கவேலுசாமி தேவர், இராமநாதபுரம்: கந்தபுராணச் சுருக்கம் (வசனம்). (1907.)

தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார்: (சங்ககாலம்) தங்கால் என்பது திருத்தண்கால் என இக்காலத்து வழங்கும். இது சீவில்லிபுத்தூருக்கருகி லுள்ள விட்டுணுகோயிலுள்ள இடம். இவர் பாடியது: நற். 368.

தங்காற் பொற் கொல்லனார்: (சங்ககாலம்) புலியெனக் கூறிக் குறமகளிர் வேங்கைப் பூப்பறிக்கும் வழக்கினை இவர் கூறியுள்ளார். தங்கால் முடக் கோவனார், தங்கால் பூட் கோவனார், தாட் கோவலனார் என்றும் இவர் பெயர் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம். 48, 108, 355; குறு. 217; நற். 313; புறம். 326.

தட்சிணாமூர்த்தி: தட்சிணாமூர்த்தி காலம், ³ வாக்கியம், ³ விநோதம், மெய்ச்சுருக்கம் 50; பரிபாடை 500.

தட்சிணாமூர்த்தி ஐயர்: தசகாரியம், தசகாரிய அனுபூதி விளக்கம்.*

தட்சிணாமூர்த்தி தேசிகர்: இவர் திருவாவடுதுறை நமச்சிவாயத் தம்பிரானின் மாணவர்; உபதேசப் பஃறொடை இயற்றியவர்.*

தண்டபாணி சுவாமிகள்: முருகதாச சுவாமிகள் பார்க்க.

தண்டி: (12ஆம் நூ.) தாராபுர அரசனாகிய போசனது அரண்மனைப் புலவருள் ஒருவராகிய தண்டி காவிய தரிசனம், அலங்காரம் என்னும் இரு நூல்களை வடமொழியிற் செய்தார். வீர சோழியம் காவிய தரிசனத்தைத் தமிழில் மொழி பெயர்த்துக் கூறுகின்றது. அதன் இன்னொரு மொழி பெயர்ப்பு தமிழ்த் தண்டி ஆசிரியரால் ஆசிரிய வடிவில் செய்யப்பட்டது. தமிழ் தண்டியலங்காரத்தின் முன்னுரை அந்நூல் செய்தவர் நடனத்தில் வல்லவரென்றும், அந்நூல் செம்பியன் அல்லது இரண்டாம் குலோத்துங்கன் சபையில் அரங்கேற்றப் பட்டதென்றும் கூறிகின்றது . இதன் உரை மேற்கோளில் ஒட்டக்கூத்தர் குறிப் பிட்டுள்ளார். தண்டியாசிரியர் கம்பன் மகனாகிய ஆம்பிகாபதியின் புதல்வ ரெனவுங் கொள்ளப்படுவர். இதற்குச் சுப்பிரமணிய தேசிகர் உரை செய்தனர். தண்டியலங்காரம் 123 சூத்திரங்கள் அடங்கியது.

தத்துவதேசிக நாயனார்: தத்துவராயர் பார்க்க.

தத்துவ நாதன்: (தத்துவராயரின் மாணவர்) உண்மை நெறி விளக்கம். *

தத்துவபோதசாமி: ஞானோபதேசம் (வசனம்.)*

தத்துவபோத சுவாமி (Roberto De Nobili): (16ஆம் நூ.) இவர் வீரமாமுனிவர் வருவதற்கு நூறு ஆண்டுகளின்முன் கோவாவில் வந்திறங்கிய ஐரோப்பியர்; கத்தோலிக்க மதகுரு. இவர் தமிழ் கற்று மத சம்பந்தமான சில நூல்கள் தமிழில் எழுதியுள்ளார். இந்நடைமிகத் தெளிவில்லாதது. ஆத்தும நிருணயம் (1889). ஞானோப தேசம் (1907) என்பன இவர் செய்த நூல்கள்.

தத்துவப் பிரகாசர்: (16ஆம் நூ.) இவர் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலே கும்பகோணத்துக் கண்மையிலுள்ள சிவபுரம் என்ற ஊரிலே பரம்பரைச் சைவ வேளாள மரபிலே தோன்றிக் கல்வி கேள்விகளில் நிறைந்து சீகாழியை அடைந்து சிற்றம்பல நாடிகளிடத்தில் ஞனோபதேசம் பெற்று வாழ்ந்தவர். இவர் இயற்றியது தத்துவப் பிரகாசம் என்னும் நூல். தத்தவப் பிரகாசத்தில் 337 விருத்தங்களுள. சிவஞான சித்தி பரபக்கத்துக்குரை செய்த தத்துவப் பிரகாசர் பிறிதொருவராவர்.

தத்துவப் பிரகாசர் 2: (16ஆம் நூ.) இவர் திருவொற்றியூர் ஞானப்பிரகாசருக்கு மாணாக்கர்; சிவஞான சித்தி பரபகரத்தக்கு உரை இயற்றியவர்.

தத்துவராயர்: (16ஆம் நூ.) இவர் சோழ நாட்டில் வீரை என்னுமூரில் பிறந்த வேதியர்; இவருடன் கல்வி பயின்றவர் சொரூபானந்தர். இவ்விருவரும் சன்னியாசிகளாய் ஞானாசிரியர்களைத் தேட ஒருவர் தென்னாடும் ஒருவர் வடநாடும் செல்லப் புறப்படுகையில் அவ்விருவரும் நம்மில் யார் முதலில் ஆசாரியரைக் காண்கின்றோமோ அவர் மற்றவருக்கு ஆசாரியராகிறதென உடன்பட்டுப் புறப்பட்டுச் சென்றனர். தென்னாடு சென்ற சொரூபானந்தர் சிவப் பிரகாசர் என்னும் ஞான குருவைத் தரிசித்து உண்மையுணர்ந்தனர். முன் சொன்ன வாக்கின்படி தத்துவராயர் இவருக்கு மாணாக்கராயினர். இவர் இயற்றிய நூல்கள்: சிவப் பிரகாச வெண்பா, தத்துவாமிர்தம், திருத்தாலாட்டு, பிள்ளைத் திருநாமம், வெண்பாவந்தாதி, கலித்துறை யந்தாதி, சின்னப்பூ வெண்பா, தசாங்கம், இரட்டைமணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலை, திருவடி மாலை, ஞான விநோதன் கலம்பகம், உலா, சிலேடையுலா, நெஞ்சு விடுதூது, கலிமடல், அஞ்ஞவதைப் பரணி, மோகவதைப் பரணி, அமிர்தசார வெண்பா, திருவருட்கழன்மாலை, போற்றி மாலை, புகழ்ச்சி மாலை, சசிவண்ண போதம், பெருந்திரட்டு, குறுந்திரட்டு, பாடுதுறை, ஈசுர கீதை, பிரம கீதை என்பன. சைமன் காசிச்செட்டி, இவர் காலம் 16ஆம் நூற் றாண்டெனவும் இலக்கிய வரலாறுகாரர் (கா.சு.) 15ஆம் நூற்றாண்டென்றும் கூறியுள்ளனர்.

தத்துவலிங்க தேவரின் சீடர்: தத்துவாநிசானு போதம்.*

தமரானந்தர்: தமரானந்த சூத்திரம் 16.*

தமிழறியும் பெருமாள், ஏலக்குழலி: ஒளவையாரையும் நக்கீரரையும் சம்பந்தப் படுத்தித் தமிழறியும் பெருமாள் கதை என ஒரு நூல் வழங்குகிறது. இது உண்மை அல்லாத ஒரு கற்பனைக் கதையைக் கூறுவது. இந்நூலிற் காணப் படும் ஒரு வெண்பா யாப்பருங்கலவிருத்தியில் வந்துள்ளது.

தமிழாகர முனிவர்: (17ஆம் நூ.) இவர் தருமை யாதீனத்தைச் சேர்ந்தவர், திருநெல்வேலியினர்; வேளாண் மரபினர். இவர் செய்த நூல்கள் ; ஞானசம்பந்த குருராய வட்டகம், சந்திர கலாமாலை, நெல்லையப்பர் நான் மணிமாலை, நெல்லைகாவல மாலை, திருப்பணி மாலை, கலை மகளிரட்டை மணி மாலை, நீதிசாரம், ஆசௌசதீபிகை, பிராயச்சித்த சமுச்சயம். (1930)

தம்பா பிள்ளை: (George. C) இலங்கைப் பூமி சாத்திரம். (யாழ்ப்பாணம் 1891.)

தம்பிமுத்துப் பிள்ளை, அச்சுவேலி: எ°தாக்கியர் நாடகம், (யாழ்ப்பாணம் 1890), பாலியக்கும்மி (1886), சம்சோன் கதை. (1892.)

தம்பிரான்: தம்பிரான் படி.*

தம்பிரான்மார்: கண்ணினுட் சிறு தாம்பு உரை.

தம்பையா உபாத்தியாயர் J.P.: பிரலாப கவிதை. (கொழும்பு 1896.)

தம்பையா பிள்ளை. S. திருமரியாயி பேரில் தோத்திரப் பதிகம். (யாழ்ப்பாணம் 1888.)

தருமர்: (12ஆம் நூ.) இவர் திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருள் ஒருவர்.

தர்க்ககுடாரி தாலுதாரி: அரிகர தார தம்மியம். (1895).

தலைமலை கண்ட தேவர்: (18ஆம் நூ.) இவர் மறவர்; அந்தகர்; கல்வி வல்லவர். கலியாணம் செய்துகொள்ள விருப்பங்கொண்டு பெண் கேட்க ஆம்மறவர் சாதி வழக்கப்படி மும்முறை களவு செய்து அக்களவில் அகப்படாதவர்க்குப் பெண் கொடுப்பதுபோல் இவர் களவு செய்யாதவராதலால் மறவர் இவர்க்குப் பெண் கொடுக்க மறுத்தனர். இவர் மணஞ் செய்து கொள்ளப் பொருள் வேண்டிக் களவின் பொருட்டுப் பூவணத்திலுள்ள தாசி வீட்டில் அவள் படுக்கை அறையில் உள்ள கட்டிலின்கீழ் ஒளிந்திருந்தனர். தாசி தான் கட்டிலில் உறங்குமுன் திருப்பூவண நாதர்மேல் செய்யுள் பாடி முடிப்பதுபோல் கவிபாடச் செய்யுள் முடியாது மயங்குகையில் அடியி லிருந்த தேவர் கேட்டுச் செய்யுளை முடித்தனர். தாசி திடுக்கிட்டு நீவிர் யார் எனத் தேவர் வரலாறு கூறித் தாசியிடம் பொன் பெற்று மணமுடித்துக் கொண்டனர். இவர் ஊர் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள காடடர்ந்தகுடி. இவர் திருப்புடை மருதீசர் மீது மருதூர் யமக வந்தாதி பாடியுள்ளார்.

தவப்பிரகாசர் சீடர்: தவப்பிரகாசர் துதி.*

தனிமகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 153. “பாழ் காத்திருந்த தனிமகனார் போன்றே” என உவமை கூறிய தொடர் மொழியே இவர்க்குரிய பெயராகி வழங்கலாயிற்று.

தன்வந்திரி: வடநாட்டில் தன்வந்திரி என்னும் பெயருடன் புகழ் பெற்ற மருத்துவர் ஒருவர் விளங்கினாரெனத் தெரிகிறது. தன்வந்திரி யென்னும் பெயருடன் தென்னாட்டிலும் சிறந்த வைத்தியர் ஒருவர் விளங்கினார். இவர் தென் னாட்டில் அடங்கியதாகக் கூறும் பழம் பாடல் ஒன்று உள்ளது. இவர் சித்தர் வகுப்பைச் சேர்ந்தவர். இவர் தீர்க்க தர்மரின் புத்திரன். இவர் செய்த நூல்கள்: தன்வந்திரி நிகண்டு (302 பாடல்), செயநீர் (50), வாகடம் (1100), வைத்திய சிந்தாமணி (1200 பாடல்), சிமிட்டு இரத்தினச் சுருக்கம் (360 பாடல்), கலை ஞானம் (500 பாடல்), தன்வந்திரி பச்சைவெட்டு என்னும் செவ்விய செய்யுள் நடையில் எழுதப்பட்ட நூலொன்று யாழ்ப்பாணத்தில் வழங்குகின்றது. இதனை ஏழாலையில் இருந்த ஐ. பொன்னையா அவர்கள் அச்சிட்டுள் ளார்கள். இம் முறையை யாழ்ப்பாணத்திலுள்ள மருத்துவர் பலர் பழமையி லிருந்து கையாண்டு வருவதாகத் தெரிகிறது.

தாசி காளிமுத்து: காளிமுத்து பார்க்க.

தாசியம்மைச்சி: (17ஆம் நூ.) இவர் அந்தகக்கவி வீரராகவ முதலியார் காலத்துக் காஞ்சிபுரத்திற்கருகிலுள்ள திருப்பனங் காட்டிலிருந்த பெண் புலவர். இவர், கவி வீரராகவ முதலியார் சந்திரவாணன் மீது கோவை பாடி அரங்கேற்று கையில் அக் கோவையில் “`பெரு நயப் புரைத்தல்’ என்னும் பாற்படும்” மாலே நிகராகும் சந்திரவாணன் வரையிடத்தே, பாலேரிபாயச் செந்தேன் மாரிபெய்ய நற்பாகு கற்கண், டாலே யெரு விட முப்பழச் சேற்றின் முதவயன், மேலே முளைத்த கரும்போ இம் மங்கைக்கு மெய்யெங்குமே” என்னும் பாடலைக் கூறுகையில் இவள் கரும்பு புன்செய் பயிராயிற்றே சேற்றில் முளைத்த கரும் பென்றீரே எனத்தடை கூற கவிராயர் வேண்டுமாயின் மாறி விடலாமென்று ஏடுவாசிப்பானை நோக்கிக் கொம்பைத் தூக்கிக் காலை நிறுத்து எனலும் தாசி தலை குனிந்து நண்பு கொண்டனள். (அபி. சிந்.)

தாச்சி அருணாசல முதலியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் சென்னையைச் சார்ந்த மயிலாப்பூரில் வாழ்ந்தவர். இவர் திருமயிலை கபாலீசர் கற்பகாம்பிகை மீது பல பதிகங்களும், திருமுல்லை வாயில் மாசிலாமணியீசர் பதிகமும் பாடியுள்ளார்.

தாண்டவ சாத்திரி: பாகவத சாரம்.*

தாண்டவராய சுவாமிகள்: (17ஆம் நூ. முற்.) இவர் நன்னிலம் நாராயணசாமி தேசிகர் மாணாக்கர்; கைவல்லிய நவநீதம் என்னும் மாயாவாத நூல் செய்த வர். இதற்கு அருணாசல சுவாமி உரை செய்துள்ளார். கைவல்லிய நவநீதம் சங்குகவி என்பவரால் வடமொழிப் படுத்தப் பட்டது. சங்குகவி, சித்தாந்த சித்தாஞ்சனம் என்னும் நூலை 17ஆம் நூற்றாண்டிற் செய்த கிருட்டிணானந்த சுவாமியாரின் சீடராகக் கருதப்படுவர். கைவல்லிய நவநீதத்தில் 293 பாடல்களுள்ளன.

தாண்டவராய முதலியார்: (19ஆம் நூ.) இவர் 1824இல் பஞ்சதந்திரத்தை மராட்டி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தார். இலக்கண வினாவிடை (1820), கதா மஞ்சரி என்னும் நூல்களைச் சிறுவரின் பொருட்டு இயற்றினார் (1826); திவாகரம் சூடாமணி நிகண்டு (1856), சதுர அகராதி (1824) முதலிய நூல்களை முதலில் அச்சேற்றினார்.

தாண்டவராயர்: திருமயிலைக் கோவை.*

தாண்டவ வேந்தர் ; அப்பர் பார்க்க.

தாததேசிக தாதாசாரியர்: வால்மீகி இராமாயண வசனம். (மொழிபெயர்ப்பு.) (1902.)

தாமத்தர்: (12ஆம் நூ.?) திருக்குறளுக்கு உரை கண்ட பதின்மருள் ஒருவர்.

தாமப்பல் கண்ணனார்: (கி.பி. 1-) இவர் காஞ்சிபுரத்தினருகிலுள்ள தாமல் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவர் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானைப் பாடியுள்ளார். இவர் பாடியது: புறம். 43.

தாமோதரம் பிள்ளை, சி.: சந்தியாவந்தன இரகசியம் (சார்வரி), சைவ சிந்தாந்த சாரமான மரபு (சோபகிருது), கடம்பவனம் இரத்தினாசலம் மரகதாசலம் தலமான்மியங்கள் (1881.)

தாமோதரம் பிள்ளை சி.வை., பி.ஏ., பி.எல்.: (1832 - 1901) இவர் யாழ்ப்பாணத்து ஏழாலை ஊரினர். கிங்° பெரி தாமோதரம் பிள்ளை என அறியப்படுவர். இவர் சுன்னாகம் முத்துக் குமாரக் கவிராயரிடம் கல்வி கற்றவர்; புதுக் கோட்டை உயர் நீதி மன்ற நீதிபதியாகவிருந்து ஓய்வெடுத்துக் கொண்டவர்; பழந்தமிழ் இலக்கியங்களை ஏடுகளிலிருந்து பெயர்த்து எழுதி அச்சிடுவதை யும், தமிழ் நூல்களைக் கற்பதையுமே பொழுதுபோக்காகக் கொண்டவர். “பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்தமையால் உ.வே. சாமிநாதையருக்கு எவ்வளவு புகழுண்டோ அவ்வளவு புகழ் இவருக்குமுண்டு. இவர் பதித்த நூல்கள் வீரசோழியம் (1881); இறையனா ரகப்பொருள் (1883), தொல்காப்பியப் பொருளதிகாரம் (1885), தொல்காப்பியச் சொல்லதிகாரம் நச்சினார்க்கினியம், இலக்கண விளக்கம் (1900), சூளாமணி, கலித்தொகை, தணிகைப் புராணம் (1883) முதலியன. வீரசோழியப் பதிப்பு, கலித்தொகைப் பதிப்பு (1887) முதலியவற்றின் முகவுரைகள் ஆழ்ந்த ஆராய்ச்சி நுட்பமுடையன. இவர் சைவ மகத்துவம் என்னும் ஒரு நூல் செய்துள்ளார்.

தாமோதரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 92, 195.

தாயங் கண்ணனார்: எருக்காட்டூர் தாயங் கண்ணனார் பார்க்க.

தாயங் கண்ணியார்: இவர் பாடியது: புறம். 250.

தாயினல்ல பெருமாள் முனைய தரையன்: (13ஆம் நூ.) சிதம்பரம் தெற்குக் கோபுரத் தெதிரில் உள்ள திருமண்டபத்தே வரையப்பட்ட சாசனப் பாடல் “புவனேக வீரத் தொண்டைமானான தாயிலன்ன பெருமாள் முனைய தரையன்” என்று அறிய வருகிறது.

தாயுமான சுவாமிகள்: (1706-1744) இவர் திருமறைக் காட்டில் வாழ்ந்த கேடிலியப்ப பிள்ளையின் இரண்டாவது புதல்வர். இவர் தந்தை திரிசிர புரத்தில் விசய ரகுநாத சொக்கலிங்க நாயகரின் கணக்கப் பிள்ளையாயிருந் தவர். தந்தைக்குப் பின் இவர் அரசியல் அலுவலில் அமர்ந்து மௌன குரு விடம் உபதேசம் பெற்று தமது நாட்டை விட்டுச் சென்று தமது தமையனா ரோடு சிலகாலமிருந்தார். இவர் மணஞ் செய்து குழந்தை பிறந்ததும் மனைவி இறந்து போகத் துறவு பூண்டு இருந்தார். இவர் பாடல்கள் தாயுமான சுவாமி பாடல் எனப் பலராலும் போற்றப்படுகின்றன.

திண் பொற்கோழி காவிதிமகன் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது; அகம். 252.

திப்புத்தோளார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 1.

தியாகராசக் கவிராயர்: மயூராசல புராணம் (1931.)

தியாகராச தீட்சிதர்: (17ஆம் நூ.) இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத தீட்சிதரின் புதல்வர். இலக்கண விளக்கத்தில் பாட்டியல் இவர் செய்ததாகக் கருதப்படும்.

தியாகராச தேசிகர்: (20ஆம் நூ.) பொள்ளாச்சி என்னுமூரினர்; ஆனந்தரங்கன் கோவை பாடியவர். (கொ.பு.)

தியாகராச பிள்ளை திரிசிரபுரம்: செண்பகவல்லி என்னும் பவளக்கொடி நாடகம் (சென்னை 1893), பொன்னரர் சங்கரர் நாடகம் (1902.)

திரிகூட ராசப்ப கவிராயர்: இராசப்ப கவிராயர் பார்க்க.

திரிபுரமெரித்த விரிசடைக் கடவுள்: தலைச்சங்கப் புலவருளொருவர். (இ.க.உ.)

திருக்கச்சி நம்பி: திருக்கச்சி நம்பி ஆறு வார்த்தை.*

திருக்கடவூர் உய்யவந்த தேவ நாயனார்: (12ஆம் நூ.) இவர் திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார் மாணாக்கர், ஆளுடைதேவ நாயனாரின் மாணாக்கர். இவர் 1178இல் திருக்களிற்றுப் படியார் என்னும் நூல் செய்தார். திருவியலூர் உய்யவந்த தேவநாயனாரே காவேரிக் கரைக்குத் தெற்கிலுள்ள திருக்கடவூரில் தங்கியபோது ஆளுடை தேவரின் வேண்டுகோளுக்கு இணங்கித் திருக்களிற்றுப் படியாரைப் பாடினர் என்று மு.சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் கூறியுள்ளார். இவர் கூற்றிபடி திருக்கடவூர் உய்யவந்தார், திருவியலூர் உய்யவந்தார் என்னும் இருவரும் ஒருவரேயாவர். திருக் களிற்றுப் படியாரில் 100 பாடல்களுண்டு. சிவப்பிரகாசர் இதற்கு உரை எழுதி யுள்ளார். திருவுந்தியாரும் இவர் பாடிய தாகும். இது உந் தீபற என முடியும் 45 மூன்றடிப் பாடல்களுடையது.

திருக்குருகூரார்: விட்டுணு புராண வசனம்.*

திருக்குருகூர்ச் சிறிய இரத்தினக் கவிராயர்: (16ஆம் நூ. பிற்பகுதியும் 17ஆம் நூ. முற்பகுதியும்) இவர் பாடியது புலவராற்றுப்படை. இது இரசை வட மலையப்ப பிள்ளை மேற் பாடப்பட்டது. இவர் திருமேனி இரத்தினக் கவிராயரெனவு மறியப்படுவர்.

திருக்குருகூர்ப் பெருமாட் கவிராயர்: குருகைப் பெருமாள் கவிராயர் பார்க்க.

திருக்குருகைப் பிரான் பிள்ளான்: (13ஆம் நூ.) இவர் இராமானுசாரியரின் மாணாக்கருள் ஒருவரும், திருவாய் மொழியின் முதலாம் உரையாகிய ஆறாயிரப்படி இயற்றியவருமான ஆசிரியர். திருக்குருகைப் பிள்ளான் பரம இரகசியமும் இவர் செய்தது.

திருக்குருகைப் பெருமாள் கவிராயர்: குருகைப் பெருமாள் கவிராயர் பார்க்க.

திருக்குறுங்குடி நம்பி: இவர் திருநெல்வேலிப் பகுதியிலுள்ள திருக்குறுங்குடி யூரிற் பிறந்த அந்தணர்; படிக்காசுப் புலவர் காலத்தவர்; தொண்டை மண்டலம் காளத்தி முதலியாரைப் பாடிப் பரிசு பெற்றவர்.

திருக்குன்றத்தாசிரியர்: சொல்லூராசிரியர் ஆண்டைப் பெருங் குமரனாரிடம் அகப் பொருளுரை கேட்டவர். (இ.க.உ.)

திருக்கோட்டி நம்பி: (12ஆம் நூ.) இவர் சூடாமணி உள்ளமுடையான் என்னும் சோதிட நூல் இயற்றிய ஆசிரியர். இது மண்டலபுருடரியற்றியதென அச்சுப் புத்தகத்தில் காணப்படுகின்றது. நட்சத்திரமாலை, மரணகண்டிகை என்னும் நூல்களும் இவரியற்றியன. (ச.கை.). திருக்கோட்டியூர் நம்பி பதிற்றுப்பத்து, ஷெ இரகசியம், ³ வார்த்தை, திருக்குருகை இரத்தினம், உள்ள முடையான் சூடாமணி, விசாயாந்தர் அக்குரூரம் என்னும் நூல்களும் இவர் இயற்றியன வாக அறிய வருகின்றன.

திருச்சிற்றம்பல தேசிகர்: (19ஆம் நூ. பிற்.) இவர் கம்பராமாயண வசனம், உத்தரகாண்ட வசனம் முதலிய நூல்களை 1815இல் செய்தார். எழுத்துச் சொல் அடங்கிய இலக்கண நூலொன்றும் உரை நடையில் இவராற் செய்யப்பட்டது.

திருச்சிற்றம்பல நாவலர் மாம்பாக்கம்: அண்ணாமலைச் சதகம். (1899.)

திருச்சிற்றம்பல முனிவர்: (-?) இவர் வேதாரணியத்திலிருந்த புலவர்; திருக்காவிரி புராணமியற்றியவர்.

திருச்சிற்றம்பலம் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் கோவை நாட்டினர்; மாணிக்க வாசகர் வரலாறு முதலிய எட்டு நூல்கள் இயற்றியவர். (கொ.பு.)

திருச்செந்தூர்ப் புலவர்: (17ஆம் நூ.) இவர் திருச்செந்தூரில் வாழ்ந்தவர். வெள்ளியம்பலவாண முனிவரிடத்துப் பகை பாராட்டியவர்; சிவப்பிரகாச அடிகளால் ஒடுக்கப்பட்டவர்.

திருஞான சம்பந்த உபாத்தியாயர்: (-1906) இவர் ஏறக்குறைய 110 ஆண்டு களின்முன் யாழ்ப்பாணத்துச் சுளிபுர மென்னுமூரிற் பிறந்தவர். ஆறுமுக நாவலரிடம் இலக்கண இலக்கியம் கற்றவர். இவர் செய்த நூல்கள் மாணிக்கப் பிள்ளையார் திருவருட்பா, கதிர்காம வேலவர் திருவருட்பா என்பன.

திருஞான சம்பந்த சுவாமிப்பிள்ளை, திருசிரபுரம்: சித்தாந்த சைவ வினா விடை. (சென்னை 1899.)

திருஞான சம்பந்த தேசிகர், தருமபுரம்: சிவபோகசாரம்.* (இவர் திருவொற்றியூர் ஞானபிரகாசர் மாணவர்.)

திருஞான சம்பந்தப் பிள்ளை: (1849-1901) இவர் ஏறக்குறைய நூறு ஆண்டு களின்முன் யாழ்ப்பாணத்து நல்லூரிலே வேளாள குலத்திற் பிறந்தவர்; நாவலர்க்கும் பொன்னம்பல பிள்ளைக்கும் மாணவர். இவர் இயற்றிய நூல்கள் தர்க்காமிர்த மொழி பெயர்ப்பு, அரிகரதார தம்மியம், வேதாகம வாத தீபிகை, நாராயண பரத்துவ நிச்சயம். இவர் சிதம்பரத்திற் காலமானார்.

திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார்: சம்பந்தர் பார்க்க.

திருத்தக்க தேவர்: (10ஆம் நூ.) இவர் சிந்தாமணி என்னும் சிறந்த தமிழ் நூல் செய்த சமண முனிவர். மகாபுராணம் என்னும் வடமொழி நூலின் சீவக சரித்திரத்தை ஆதாரமாகக் கொண்டு இந்நூல் செய்யப்பட்டது. சோழ அரசன் சிந்தாமணியைக் கொண்டாடியதையும், சேக்கிழார் அவ்வழியினின்று திரும்பக் கருதித் திருத்தொண்டர் புராணஞ் செய்ததையும் சேக்கிழார் நாயனார் புராணத்தில் உமாபதி சிவம் குறிப்பிட்டுள்ளார். சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் செய்த உரை உண்டு. திருத்தக்க தேவர் செய்த இன்னொரு நூல் நரி விருத்தம். சீவக சிந்தாமணியில் 13 இலம்பகமும், 3145 பாடல்களு முள்ளன. நரி விருத்தத்தில் 50 பாடல்களுமுள்ளன. சீவக சிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் உரைக்கு முந்திய பிறிதொரு உரையும் இருந்ததெனத் தெரிய வருகிறது.

திருத்தாமனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 398.

திருத்தோணியப்பர்: (16ஆம் நூ.) இவர் தத்துவராயரின் மாணவர். இவர் பாடிய தனிப்பாடல் ஒன்று காணப்படுகின்றது.

திருநகரிப் பிள்ளை: திருநகரிப் பிள்ளை வார்த்தை. *

திருநாவுக்கரசர்: அப்பர் பார்க்க.

திருநாராயண தாசர்: சதுர்வேதி சரித்திர சங்கீர்த்தனை. (மொழி பெயர்ப்பு) (1900).

திருநாவுக்கரசு தேசிகர்: சைவசித்தாந்த நிச்சயம். (தருமபுர ஆதீனம் 1928)

திருநின்றவூரர்: அரிதசாவதா வாற்சாலிய சாரம்.*

திருப்பதிசாரச் சாமி: (20ஆம் நூ.) இவர் திருநெல்வேலிக் குறுக்குத் துறையில் வாழ்ந்தவர்; சிவப்பிரகாசத்துக்கு ஒரு விரிவுரை எழுதியவர்.

திருப்பாணாழ்வார்: (9ஆம் நூ.) இவர் உறையூரிற் பிறந்து பஞ்சமரால் வளர்க்கப்பட்டமையின் திருவரங்கம் பெரிய கோயிலுட் செல்ல இயலாமல் காவிரிக் கரையிலிருந்து இன்னிசையுடன் பாடினர். பெருமாள் கட்டளைப்படி கோயிலர்ச்சகர் ஆழ்வாரைத் தோள் மேலேற்றிச் சென்று பெருமாள் முன் இறக்கிச் சென்றனர். இவரருளிய திருப்பாசுரங்கள் அமலனாதிப்பிரான், பெரிய திருமொழி முதலியன.

திருமங்கை ஆழ்வார் அல்லது திருமங்கை மன்னன்: (9ஆம் நூ.) இவர் திருவாரி நகரத்தின் நீலன் என்னும் படைத்தலைவரின் மகன். இவர் நாகபட்டனத்தி லிருந்த புத்தரின் பொன்னுருவை அழித்து சீரங்கத்தின் மூன்றாம் பிரகா ரத்தை அமைத்தார். இவர் அருளிய பிரபந்தங்கள் திருவெழு கூற்றிருக்கை, சிறிய திருமடல், பெரிய திருமடல், திருக்குறுந்தாண்டகம், திருநெடுந்தாண் டகம் முதலியன.

திருமலைக்கொழுந்து பிள்ளை: மாணிக்கவாசகர் காலம். (1899.)

திருமலை நாதர்: (16ஆம் நூ. முற்.) இவர் சிதம்பரத்திலே சைவ வேளாளர் குலத்திற் பிறந்தவர். இவர் மதுரைச் சொக்கநாதருலாவைப் பாடி வீரபாண்டிய னுடைய அவையிலே அரங்கேற்றினார். சிதம்பர புராணத்தை 1508இல் பாடி னார். இது 813 விருத்தங்களுடை யது. புராணச் சொற்பொழிவாற்றுவதில் வல்லவராயிருந்தமையின் இவர் புராணத் திருமலையர் எனப்படுவர். சொக்க நாதருலா 516 கண்ணிகளையுடையது.

திருமலையர்: (12ஆம் நூ.?) இவர் திருக்குறளுக்குரை செய்த பதின்மருளொருவர்.

திருமலை யாழ்வான்: பகவத் விடய தனியன்கள்*

திருமழிசை ஆழ்வார்: (8ஆம் நூ.) இவர் திருமழிசையிற் பிறந்தவர்; சைவ சமய ஆசிரியர்களோடு வாது புரிந்து வந்தவர். இவர் பாடியவை நான்முகன் திருவந்தாதி, திருச்சந்த விருத்தம், திரு விருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி முதலியன.

திருமாலைக் கவி: சித்திர கூட மகத்துவம். *

திருமாளிகைத் தேவர்: (11ஆம் நூ.) இவர் திருவாவடுதுறையிலிருந்தவர்; இவர் போக முனிவரின் மாணாக்கரென்றும் போகமுனிவர் திருமூலரின் மாணாக்கராகிய காலாங்கி நாதருக்கு மாணாக்கரென்றும் அறியப்படுகின்றனர். கருவூர்த் தேவரும் போகருக்கு மாணாக்கர். சேந்தனாரும் திருமாளிகைத் தேவரும் ஒரே காலத்தவர். திருமாளிகைத் தேவர் நான்கு திருவிசைப்பாப் பதிகங்களைத் தில்லையிற் பாடினார். இவர் திருவீழிமிழலையினர்.

திருமுனைப் பாடியார்: முனைப் பாடியார் பார்க்க.

திருமூலதேவர்: திருமந்திரமாலை, திருமூலதேவர் பாடல்கள். 103, வாலைப் பஞ்சாக்கர விளக்கம் 20.*

திருமூலநாயனார்: சிதம்பர ரகசியம், திருமூலநாயனார் நிகண்டு 300, திருமூலநாயனார் வாத சூத்திரம் 300.*

திருமூலர்: (கி.பி. 5ஆம் நூ.) இவர் வரலாறு பின்வருமாறு வழங்கும்: சிவயோகி ஒருவர் வடக்கினின்றும் திருவாவடுதுறையைத் தரிசிக்க நினைந்துவரும் வழியில் அவ்வூரிலுள்ள மூலனென்னுமிடையன் தன் பசுக்களை யோட்டிக் கொண்டு மேய்க்க வந்து உயிர் நீங்கினன். இடையன் உயிர் நீங்கியதைக் கண்ட பசுக்கள் அவனுடலை நக்கி வருந்துவதைக் கண்ட சிவயோகியார் அப்பசுக்களின் துன்பத்தைப் போக்கத் தம்முடலைப் பத்திரப்படுத்தித் தாம் ஆம்மூலனுடலிற் புகுந்து பசுக்களைக் களிப்பித்துப், பொழுது நீங்கியபின் பசுக்களை வீடு சேர்த்துத் தாம் தனித்து நின்றனர். இவ்வகைச் சித்தரை மூலன் மனைவி கண்டு கணவனென எண்ணித் தொடச் செல்லுகையில் சித்தர் அவளை நோக்கித் தம்மைத் தொடுதற்கு நியாயம் இல்லையெனக் கூறிப் பொது மடஞ் சென்றிருக்க, இடைச்சி அவ்வூர் வேதியரிடஞ் சென்று கூற அவர்களிவரைக்கண்டு சிவயோகியரென்று இடைச்சியை யகற்றினர். பின்பு சிவயோகியார் தாம் பத்திரப்படுத்திய உடம்பினைப் பார்த்துக் காணாமல் யோகத்தால் பரமசிவம் சிவாகமங்களைத் தமிழிற் செய்ய இவ் வகை செய்தனரெனவறிந்து தாம் அத்தலத்திற்கு மேற்புறத்தில் அரச மரத்தடி யில் யோகத்திலிருந்து வருடத்துக்கொரு பாடலாக 3000 பாடல் செய்தனர். இவர் பாடிய நூல் திருமந்திரம். திருமந்திரப் பாடல் ஒன்று யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக வந்துளது. “இலைநல வாயினு மெட்டி பழுத்தாற், குலநல வாங்கனி கொண்டுண வாகா விலையாண், முலைநலங் கண்டு முறுகலிக்கின்ற, வினையுடை நெஞ்சினை வேறுகொ ளீரே’ இம்மூலர் வாக்குமிக்கு வந்தவாறு காண்க” (யா.க.வி.) திருமந்திரத்திலுள்ள செய்யுளடி கள் வெண்டளை பயின்று வருகின்றன. வெண்பாவிற்கும் விருத்தப்பாவிற் கும் இதன் யாப்பு நடுநிலையாகவுள்ளது. இதற்குப் பின்னமைந்த பெரு நூல்கள் விருத்தப்பாவினாலேயே ஆக்கப்பட்டுள்ளன. திருமந்திரமென்னும் நூலானது திருவாவடுதுறையிற் கயிலையினின்றும் போந்த திருமூல ரென்னுஞ் சித்தராலியற்றப்பட்ட தென்று பெரிய புராணங் கூறுகின்றது. இந்நூல் திருஞான சம்பந்தர் காலத்துக்கு முன்னேயே செய்யப்பட்ட தென்று கருத ஓர் ஐதீகம் இடங் கொடுக்கிறது. நம் சமயாசாரியர் துறைசைக்குச் சென்ற காலை திருமூலர் திருமந்திரம் கொடிமரத்தின் கீழ் அடக்கஞ் செய்து வைக்கப்பட்டிருந்ததாகவும், கொடி மரத்துக்கெதிரே அவர் சென்ற காலை தமிழ்மணம் வருவதாக அவர் இயம்பினரென்றும், அப்பொழுது அஃது ஆண்டுக் கண்டெடுக்கப்பட்ட தென்றும் துறைசைப் புராணங் கூறுகின்றது. திருமூலர் வரலாற்றில் “சேர்ந்திருந்தேன் சிவனாவடுதுறை’ என்பதால் அவர் துறைசையிலிருந்தமை தெளிவு” திருமந்திரம் திருமுறையில் பத்தாவதாக வுள்ளது. 8-வது நூற்றாண்டில் விளங்கிய சுந்தரர் இவர் பெயரைக் குறிப்பிடு கின்றார். பிற்காலத்தில் திருமந்திரத்தில் பல பாடல்கள் நுழைக்கப் பட்டன. திரு மூலரின் பெயர் தாங்கிய பிற்காலச் சித்தர் பலர் பலநூல்கள் செய்துள்ளார்கள்.

திருமேனி இரத்தினக் கவிராயர்: இரத்தினக் கவிராயர் பார்க்க.

திருமேனிக் கவிராயர் சீடர்: மகர நெடுங்குழைக் காதர் பதிகம், ³ பிள்ளைத் தமிழ்.

திருமேனித் திருவேங்கிட கவிராயர் சீடர்: குழைக்காதர் பதிகம். *

திருவண்ணாமலை ஐயர்: தசகாரியம்.

திருவண்ணாமலைப் புலவன் சிதம்பரநாதன்: (16ஆம் நூ.) இவர் அதிவீர ராம பாண்டியன் காலத்து விளங்கிய ஒரு புலவர். (சா.த. க.ச.)

திருவதிகை மனவாசகங் கடந்தார்: மணவாசகங் கடந்தார் பார்க்க.

திருவரங்கத் தமுதனார்: (13ஆம் நூ.) இவர் இராமானுசர் காலத்தவரும் இராமானுச நூற்றந்தாதி செய்தவருமாகிய புலவர்.

திருவழுத்தூர்த்தாசி: (-?) இவளைச் சோழன் எந்தவூரென்று கேட்டபோது, “கம்பன் பிறந்தவூர் காவிரிதங்குமூர், கும்பமுனி சாபங் குலைந்தவூர் - செம்பதுமத், தாதகத்து நான்முகனுந் தாதையுந் தேடிக் காணா, வோதகத்தோர் வாழுமழுத் தூர்” என்றனள். (அபி. சிந்.)

திருவள்ளுவர்: (கி.மு. 1 ஆம் நூ.) திருவள்ளுவர் பகவனென்னும் அந்தணர்க் கும் ஆதி என்னும் ஆதனூர்ப் புலைச்சிக்கும் பிறந்த ஏழு பிள்ளைகளுள் ஒருவரெனக் கபிலரகவல் என்னும் நூல் கூறும். கபிலரகவல் என்னும் நூல் சென்ற நூற்றாண்டில் விளங்கிய சரவணப் பெருமாளையர், விசாகப் பெரு மாளையர் என்போரால் எழுதப்பட்டதென்பது அறிஞர் கருத்து. ஏறக்குறைய நானூறு ஆண்டுகளுக்குமுன் எழுதப்பட்ட ஞானாமிர்த மென்னும் நூலில் “யாளி கூவற்றூண்டு மாதப் புலைச்சி, காதற் சரணியாகி மேதினி யின்னிசை யெழுவர்ப் பயந்தோளீண்டே” எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் வள்ளுவர் யாளிதத்தன் என்பவருக்குப் புலைச்சி வயிற்றில் பிறந்த எழுவருள் ஒருவ ரென்னும் செய்தி பழங்கதை வடிவில் அக்காலத்திருந்ததெனத் தெரிகிறது. பண்டை இலக்கியங்கள் வள்ளுவர் என்போர் அரசனது கட்டளையை யானை மீதேறிச் சென்று மக்களுக்கறிவிக்கும் கருமத் தலைவர்களில் ஒருவர் எனக்கூறும். அரச அவைகளிலும் அரச கருமங்களிலும் நெருங்கிப் பழகாத ஒருவர் திருக்குறள் போன்ற ஒரு நூலை எழுத முடியாதென்பது விளங்கும். வள்ளுவரின் இயற்பெயர் மறக்கப்பட்டது. பிற்கால மக்களால் அவர் அவரது உத்தியோகப் பெயரால் மாத்திரம் அறியப்படலாயினர். பிற் காலத்தில் வள்ளுவர் என்னும் பெயர் பறைக்குலத்தினரிலொருவராய் பறை சாற்றி அரச கட்டளைகளைத் தெரிவிப் போர்க்கும் அவருட் சிலர்க்கும் வழங்கலாயிற்று. இதனால் முற்கால வழக்கை அறியாத சிலர் வள்ளுவர் பறைக்குலத்திற் பிறந்தவரெனக் கற்பனையாகக் கதை சிலவற்றைப் படைத்து வழங்குவாராயினர். புலவர் புராணமெழுதிய வரும் இக் கற்பனைக் கதையையே பின்பற்றியுள்ளார். இவர் மயிலாப்பூரிலிருந்தவரென்பது ஐதீகம். இவர் செய்த நூல் திருக்குறள். ஞான வெட்டியான் என்னும் 1890 பாடல் அடங்கிய ஒரு நூலும் இவர் செய்ததாக வழங்கும். இது இரண்டு நூற்றாண்டு களுக்கு முன் தஞ்சாவூரிலிருந்த ஒருவரால் பாடப்பட்டதென்றும், வெட்டி என்பது வழி என்னும் பொருளது என்றும் கூறுவர் பூரணலிங்கம் பிள்ளை அவர்கள். திருக்குறள் 18 கீழ்க் கணக்கு நூல்களிலொன்று. திருவள்ளுவ நாயனாரைச் சைவர் தங்கள் மதத்தினரெனவும், ஆருகதர் தங்கள் சமயத்தின ரெனவும், பிற சமயத்தவர்களும் தத்தம் சமயத்தினரெனவுங் கூறுவர். இவர்கள் வாதம் இன்றும் ஒழிந்திலது. மேல் நாட்டார் சிலர் கிறித்து மதம் வெகுயாண்டுகளுக்கு முன்னரே இந்நாட்டிற்பரவியது. நாயனார் அதன் கொள்கைகளை நன்றாயறிந்த பின்னரே குறளை இயற்றினர் என்பர். திருக்குறள் 1330 குறள் வெண்பாக்களடங்கியது. உக்கிரப் பெரு வழுதி காலத்திலே திருக்குறள் தமிழ்ச் சங்கத்தில் புலப்படுத்தப் பட்டதென்பது ஐதீகம். சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் நூல்கள் திருக்குறளைப் பற்றிக் குறிப்பிடுகின்றன. “தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழு வாள், பெய்யெனப் பெய்யும் பெருமழை யென்றவப் பொய்யில் புலவன் பொரு ளுரை தேறாய்” என்பது மணிமேகலை. இந்நூல்கள் கி.பி. இரண்டாம் நூற்றாண்டிற் செய்யப்பட்டவை. ஆகவே திருக்குறள் இரண்டாம் நூற்றாண்டுக்கு முற்பட்ட நூலென்பது தெளிவு.

திருக்குறள் கி.பி. 6ஆம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்ட நூலெனத் திரு. வையாபுரிப் பிள்ளை அவர்கள் சாதிப்பர். இக் கொள்கை ஏற்றுக்கொள்ளத் தக்க தன்று என்பதை, பன்மொழிப் புலவர் த. பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள், சைமன் காசிச் செட்டியின் தமிழ்ப் புலவர் (Tamil Plutarch) என்னும் நூலில் திருவள்ளுவர் என்னும் தலைப்பின் கீழ் எழுதிய அடிக் குறிப்பை நோக்கியறிக.
திருக்குறளுக்கு பதின்மர் உரை கண்டுள்ளார்கள். “தருமர், மணக்குடவர், தாமத்தர் நச்சர், பரிதி பரிமேலழகர் திருமலையர், மல்லர் கவிப்பெருமாள் காளிங்கர் வள்ளுவர் நூற். கெல்லையுரை செய்தா ரிவர்”.

திருவாய் மொழிப்பிள்ளை: சிறீவசன பூஷணம்.*

திருவாரூர் வைத்தியநாத தேசிகர்: திருவாரூர்ப் பன்மணி மாலை, நல்லூர்ப் புராணம், இலக்கண விளக்கம் (ச.கை.) வைத்தியநாத தேசிகர் பார்க்க.

திருவாலியமுதனார்: (11ஆம் நூ.) இவர் ஆலி என்னுமூரிற் பிறந்த அமுதனா ரென்னும் சிவனடியார். இவர் சிதம்பரத்துக்குரிய நான்கு திருவிசைப்பாப் பதிகங்கள் பாடியுள்ளார். சாசன தமிழ்கவி சத்திரகாரர் இவர் காலம் 12ஆம் நூற்றாண்டென்பர்.

திருவாழி பரப்பினான் கூத்தன்: (12ஆம் நூ.) திரிபுவன சக்கரவர்த்தி மூன்றாம் இராசராச சோழனது 21ஆம் ஆட்சி வருடத்துச் சாசனமொன்று காஞ்சிபுரத்து சீ வரதராசப் பெருமாள் கோயில் திருமண்டபத்தின் மேற்குத் திருமதிலில் வரையப்பட்டுள்ளது. இதனால் திருவாழி பரப்பினான் கூத்தன் என்னும் புலவர் சிந்துப் பிரபந்தமொன்று பாடினாரெனத் தெரிகிறது.

திருவியலூர் உய்யவந்த தேவ நாயனார்: (12ஆம் நூ.) இவர் திருவியலூரிற் பிறந்தவர்; ஆகவே இவர் பெயர் திருவியலூர் உய்யவந்த தேவர் என வழங்கும். இவர் 1148இல் திருவுந்தியா ரென்னும் நூல் செய்தார். திருக்கடவூர் உய்யவந்த தேவரும் திருவியலூர் உய்யவந்த தேவரும் ஒருவராகக் கூறியுள்ளார் மு.சி. பூரணலிங்கம் பிள்ளையவர்கள்.

திருவிளங்கம்: (20ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்தினர். கொழும்பில் வாழ்ந்தவர்; வழக்கறிஞர். சிவப்பிர பிரகாசத்துக்குத் தெளிவுரை எழுதியவர். திருப்புகழ்ப் பாடல்கள் சிலவற்றுக்கும் உரை எழுதியவர். (1914)

திருவெண்காட்டடிகள்: பட்டினத்தடிகள் பார்க்க.

திருவேங்கடையர்: (14ஆம் நூ.) இவர் சீவில்லிபுத்தூரில் வாழ்ந்த வேதியர். உவமான சங்கிரகமியற்றியவர். உவமான சங்கிரகம் புகழேந்திப் புலவர் செய்ததாகக் கூறப்படுவதுமுண்டு.

திருவேங்கடசாமி முதலியார்: பகவத்கீதை சாரசங்கிரகம் (பங்களூர் 1890); சீதர சுவாமிகளுடைய சரித்திரம் (1907).

திருவேங்கடநாத பிள்ளை: சரபேந்திரர் வைத்தியமுறை, (ச.கை.)

திருவேங்கடநாதையர்: (17ஆம் நூ.) இவர் மாதைத் திருவேங்கட நாதர் எனவும் அறியப்படுவர். இவர் சோழ நாட்டில் மாதை என்னு மூரில் ஸ்மார்த்தவேதியர் குடியிற் பிறந்து கல்வி வல்லவராய் பாண்டிய நாட்டை யாண்ட நாயக்க வம்சத்தைச் சேர்ந்த அரங்க கிருட்டிண முத்துவீரப்ப நாயகரிடம் மந்திரி யாக இருந்தவர்; வைத்தியநாத தேசிகரைக் கொண்டு இலக்கண விளக்கம் என்னும் நூல் செய்வித்தவர்; பிரபோத சந்திரோதயம் என்னும் நாடக சரித்திரத்தை தமிழில் 2000-க்கு மேற்பட்ட விருத்தப் பாடல்களால் மெய்ஞ் ஞான விளக்கமென்ற பெயரால் பாடியவர். கீதாசாரத் தாலாட்டு, ஞான சோபனம் என்பனவும் இவர் செய்தன. இலக்கண விளக்கம் வைத்தியநாத தேசிகரே பிரபோத சந்திரோதயத்தைப் பாடி வெங்கட நாதையர் பெயரைக் கொடுத்தார் எனச் சொல்லப்படுவதுண்டு.

திருவேங்கடநாயுடு, பச்சையப்பன் கல்லூரி: திருவருட்பா இங்கிதமாலை (1904). சிவபுராண தோத்திர மஞ்சரி. (1899).

திருவேங்கடபிள்ளை: கட்டுக்கதைகள் (ஈசோப் கதைகள்); மொழி பெயர்ப்பு (1853).

திருவேங்கடாசல கவிராயர், திருவண்ணாமலை: இவர் எல்லப்பரின் மாணவர். வல்லாள மகாராசன் கதை இயற்றியவர். (1879).

திருவேங்கடாசல பிள்ளை: திருநீலகண்ட நாயனார் விலாசம். (1875).

திருவேங்கடாச்சாரி, சர°வதி: பிருஹச் சாதகம் தமிழ் மொழி பெயர்ப்பு. (1905.)

திருவேங்கிடாச்சாரி, திருவள்ளூர்: வைத்திய அனுபோகசார சங்கிரகம். (1893.)

திருவேங்கிடம் பிள்ளை பிரமபுரி: நந்தமண்டல சதக உரை. (1894.)

திருவேங்கிடராமானுச சீயர்: எம்பெருமானார் திருமஞ்சனக் கட்டியம், பிரபன்னானுட்டானம், சிறீவசன வியாக்கியான வரும்பத விளக்கம்.*

திருவையாற்றுப் புராண ஆசிரியர்: இந்நூலியற்றியவர் யாரெனத் தெரியவில்லை. இது கி.பி. 1605இல் அரங்கேற்றப் பட்டது.

திருவொற்றியூர் ஞானப்பிரகாசர்: (16-ம் நூ.) இவர் கமலை ஞானப்பிரகாசரின் மாணாக்கர்; சிவஞான சித்தியார் பரபக்கத்துக்கும், சங்கற்ப நிராகரணத்துக்கும் உரை எழுதியவர்;
திருவொற்றியூர்ப் புராணம் பாடியவர்.

திரையன் மாறன்: இடைச் சங்கப் புலவர்களிலொருவர். (இ.க.உ.)

தில்லைநாயக சோதிடர்: (19ஆம் நூ.) இவர் திருவானைக் காவினர்; சாதக சிந்தாமணி என்னும் சோதிட நூல் செய்தவர்.

தில்லைநாயக முதலியார்: சிதம்பரம் குமரவேள் மும்மணிக் கோவை. (1915.)

தில்லை நாயகன்: காலசக்கரம். (ச.கை)

திவாகரர்: (10ஆம் நூ.) இவர் அம்பர் என்னும் ஊரில் வாழ்ந்தவர். இவரியற்றிய நூல் திவாகரம் என்னும் நிகண்டு. இது சேந்தன் என்னும் அரசனால் செய்விக்கப்பட்டது. அம்பர் என்பது சோழ நாட்டிற் காவிரிக் கரையின் கண்ண தோரூர். திவாகரத்தில் 10 தொகுதிகளும், 2256 சூத்திரங்களும் உள. இது 8ஆம் நூற்றாண்டளவிற் செய்யப்பட்டதெனக் கருதுவாருமுளர். திவாகரத்தில் “வேள்புல வரசர்களுக்கு வேந்தர்” எனக் கூறப்பட்டுள்ளது. இவர்கள் ஆட்சி 6ஆம் நூற்றாண்டு நடுவில்; ஆகவே திவாகரம் 6ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட தென்பது தெளிவாகின்றது. சேந்தன் என்னும் பெயருடன் பலர் விளங்கினார்கள். ஆதி திவாகரம் என ஒன்று சேந்தன் திவாகரத்துக்கு முன் இருந்ததெனக் கருதுவாருமுளர். இதற்கு யாதும் ஆதாரம் காணப்படவில்லை.

திவ்விய கவி நாராயண பாரதி, வெண்மணி: (18ஆம் நூ. முற்.) இவர் நாராயண பாரதி எனவும் அறியப்படுவர். இவர் தொண்டை நாட்டில் வெண்மணி என்னு மூரிற் பிறந்த பிராமணர். இவர் மணவாள நாராயணனென்னும் பிரபுவை முன்னிட்டுத் திருவேங்கட சதகமென்னும் மணவாள நாராயண சதகம் பாடிய வர். திருவெவ்வளூரந்தாதியும் இவர் பாடியது. நாராயணதாசர் பார்க்க, கோவிந்த சதகம் செய்த நாராயண பாரதி இவரோ பிறரொருவரோ தெரியவில்லை.

தி நாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 111.

தும்பிசேர் கீரனார்: (சங்ககாலம்) பாடலில் தும்பியை நோக்கி “தோழியை வாழியை தும்பி எனவும்” அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி எனவும் (குறு 392.) விளித்தமையால் இவர் தும்பிசேர் கீரனார் எனப்பட்டார். இவர் பாடியன: குறு. 61, 315, 316, 320, 392; நற். 277; புறம். 249.

துரப் முகமத் உசேன் இபின் இ°மேயில்: தொழுகை ரஞ்சித அலங்காரம். (1896.)

துராலிங்கர்: அகத்தியர் மாணாக்கர் பன்னிருவருள் ஒருவர்.

துரைசாமி சாமி: அறநெறி விளக்க சங்கிரகம். (1908.)

துரைசாமிப் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் சேலத்தினர்; போற்றித் திருவகவல் என்னும் நூல் செய்தவர். (கொ.பு.)

துரைசாமி மூப்பனார்: (19ஆம் நூ. பிற்.) இவர் சோழ நாட்டுக் கற்பிதமென்னு மூரிற் பொன்னுச்சாமி தேவர் காலத்து வாழ்ந்தவர்; அயோத்தி மாநகர மான்மியம், மகா பாரதச் சுருக்கம், கம்பராமாயண அருங்கவிப் பொருள் விளக்கம், சானகி பரிணயம் என்னும் நூல்கள் இயற்றியவர்; வைணவ மதத்தவர்.

துவரைக் கோமான்: (-?) இடைச் சங்கப் புலவருளொருவர். (இ.க.உ.)

துறைக் குறுமாவிற் பாலங் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 286.

துறையூர் அரிசில் கிழார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 136.

துறையூர் ஓடை கிழார்: (கி.மு. 125-) இவர் பாடியது: புறம். 136.

துறையூர்ச் சிவப்பிரகாச சுவாமிகள்: (17ஆம் நூ.) இவர் திருவாவடுதுறை ஆதீனத்து மெய்கண்ட சந்தானத்தவர்; வேலையர், கருணையர் என்போரின் ஆசிரியர்.

தூரியகவி திருமலைக் கொழுந்து கவிராயர்: (19ஆம் நூ. பிற்.) இவர் சிக்கிலி ஐயர் குளம் என்னும் மூரில் கம்மாள குலத்திற் பிறந்தவர்.

தூங்கலோரியார்: (சங்ககாலம்) இவர் பாடியவை: குறு. 151, 295; நற். 60.

தெக்கணா மூர்த்தி தேசிகர்: (16ஆம் நூ.) இவர் திருவாவடுதுறை மடத்து நமச்சிவாய தேசிகரின் மாணாக்கர்; தசகாரியம், உபதேசப் பஃறொடை முதலிய சாத்திரங்கள் இயற்றியவர்.

தெய்வசிகாமணிப் பிள்ளை: (1802 - 1846) இவர் திண்டுக்கல்லில் பிறந்து வளர்ந்த கிறித்துவர். இன்ப மணிமாலை, தோத்திரக் கும்மி முதலிய கிறித்துவமத சார்பான நூல்களியற்றியவர்.

தெய்வச் சிலையார்: (12ஆம் நூ.?) இவர் தொல்காப்பியச் சொல்லதிகாரத்துக்கு உரை செய்தவருளொருவர்.

தெய்வேந்திர முனி: சீவ சம்போதனை.*

தேய்புரிப் பழங் கயிற்றினார்: (சங்ககாலம்) இவர் பாடலில் நெஞ்சமும் அறிவும் மாறு கொண்டிருத்தலால் என்னுடம்பு இரண்டு யானையாலிழுக்கப்பட்டுத் தேயும். கயிறு இற்றொழிவது போல அழிய வேண்டியது தானோ என்று கூறிய உவமையே இவருக்குப் பெயராயிற்று. இவர் பாடியது: நற். 284.

தேரையர்: (11ஆம் நூ.?) இவர், தரும சௌமியர் மாணாக்கர்; இவரை அகத்தியர் மாணாக்கர் என்று சிலர் கூறுவர். இவர் ஒருவருக்குத் தலை நோயிருந்த காலத்து அதைத் தீர்க்க அகத்தியரிடம் செல்ல அகத்தியர் கபாலத்தை நீக்கிப் பார்க்கையில் தேரையிருக்க அதை யெடுக்கச் செல்லுகையில் இவர் தடுத்துத் தாம்பாளத்தில் நீர் காட்டின் அது குதித்து விழுமென அவ்வாறு காட்ட அது குதித்து நீரில் விழுந்தது. இவ்வாறு கூறியமையால் இவர் தேரையர் எனப் பட்டார் எனக் கூறுவர். இது கற்பனைக் கதை. இவர் சித்தர் வகுப்பைச் சேர்ந்தவர், பதார்த்த குண சிந்தாமணி, நீர்க்குறி நெய்க்குறி சாத்திரம், தைல வருக்கச் சுருக்கம், வைத்திய யமகவெண்பா, மணிவெண்பா, மருத்துப் பாதம், வைத்தியக் கரிசல்கள், நோயணுகா விதி, நாடிக் கொத்து, சிகாமணி வெண்பா முதலிய நூல்கள் செய்தவர்.

தேவ குலத்தார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 3.

தேவராச பிள்ளை, வல்லூர்: (19ஆம் நூ.) இவர் தொண்டை மண்டலத்திலுள்ள வல்லூரிற் பிறந்தவர். தந்தை பெயர் வீரசாமிப் பிள்ளை. மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் கல்வி பயின்றவர்; இவரியற்றிய நூல்கள் சூதசங்கிதை (3000 பாடல்), குசேலோ பாக்கியானம் (726 பாடல்), தணிகாசல மாலை, சேடமலை மாலை, பஞ்சாக்கர தேசிகர் பதிகம், பஞ்சரத்தினம் முதலியன. குசேலோபாக்கியானம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையாற் பாடப்பட்டு இவர் பெயரால் வெளியிடப்பட்டதெனவும் வழங்கும்.

தேவராய சுவாமி: (19ஆம் நூ. பிற்.) இவர் கந்தசட்டிக் கவசம் என்னும் நூலியற்றியவர்.

தேவன்: (-?) இவர் பால்வண்ண தேவனான வில்லவ தரையனா ரென்பவர். இவர் அகநானூற்றுக்கு அகவலால் ஒரு உரை செய்தாரெனத் தெரிகிறது.

தேவன் திருவரன் குளமுடையான்: (13ஆம் நூ.) புதுக்கோட்டைச் சீமைத் திருவரன் குளத்துள்ள திருமால் கோயிலில் வரையப்பட்டுள்ள சாசனத்தால் “பாண்டி மண்டலத்துப் பொன்னமராவதி முதலிய நாடுகளில் வாழும் பெருவீரர்களான மற மாணிக்கர்கள் மேல் தேவன் திருவரன் குளமுடையான் என்ற புலவர் பாடிய பேர்வஞ்சி என்ற பிரபந்தத்தை அவ்வீரர்கள் கேட்டு மகிழ்ந்து, அப்புலவர்க்கு `மறச்சக்கரவர்த்திப் பிள்ளை’ என்ற பட்டப் பெயரு தவியும், தூத்திற்குடி என்ற கிராமத்திற் பாதி இறையிலியாகக் கொடுத்தும் பெருஞ் சிறப்புச் செய்தனர்” என்னும் செய்திகள் தெரிகின்றன. (சா.த.க.ச.)

தேவேந்திர மாமுனி: (-?) சீவ சம்போதனை என்னும் சைன நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

தேனிக்குடிக் கீரனார்: (-?) “பொய்யாப் பால்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாக வழங்குகின்றது. சங்கப் பாடல் செய்தவர் வரிசை யில் இவர் பெயர் காணப்படவில்லை.

தையங் கண்ணன்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணன் பார்க்க.

தொடித்தலை விழுத்தண்டினார்: (கி.மு. 270-) “அறனான் கறி பொருளே” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாக காணப்படுகின்றது. இவர் பாடியது: புறம். 243.

தொட்டயாசாரியர்: வேதாந்தாச்சாரிய வைபவப் பிரகாசிகை.* இவர் கோவிந்தாச்சாரிய சீனிவாசாசாரியரின் புதல்வர்.

தொட்டயாசாரியர், சுத்தத்துவம்: தத்துவத்திர வியாக்கியான அரும்பதம், திருமந்திரார்த்த வியாக்கியான அரும்பத விளக்கம், திருப்பாவை °வாபதேச வியாக்கியானம்.*

தொட்டயாச்சாரியார், வாதூல: தொட்டயாசாரியர் சிறீமுகம்.*

தொண்டரடிப்பொடி ஆழ்வார்: (9ஆம் நூ.) இவர் திருமணங்குடியிற் பிறந்தவர். சீரங்கத்துக்கு எழுந்தருளித் திருப்பள்ளி எழுச்சி (45 பாடல்) என்னும் பிரபந்தம் பாடியவர்; திருமங்கை ஆழ்வார் காலத்தவர். விப்பிர நாராயணர் என்பவரும் இவரே. தேவதேவி என்னும் கோயிற்றாசியின் வரலாறு இவரோடு சம்பந்தப்பட்டது.

தொண்டி ஆமூர்ச் சாத்தனார்: (சங்ககாலம்) ஆமூரென்பது சேர நாட்டில் குறும்பொறை மலைக்குக் கீழுள்ள ஓர் ஊர். இவர் பாடியது: அகம். 169

தொண்டைமான் இளந்திரையன்: (கி.மு. 220) இவன் காஞ்சி நகரத்திருந்த ஓரரசன்; பாடுவதில் வல்லவன். கடியலூர் உருத்திரங் கண்ணனார் பாடிய பெரும்பாணாற்றுப் படைக்குத் தலைவன் இவனே. இவன் பாடியது: புறம். 185

தொத்தாரைய சுவாமிகள்: சமாதி சகசம் முதலிய பதினொரு பதிகங்கள் (1919.)

தொம்பிலிப்பு: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே தெல்லிப்பழை என்னுமூரிற் பிறந்த வேளாண் குலத்தினர்; கத்தோலிக்க மதத்தினர்; ஞானானந்த புராணம் பாடியவர். இது மூன்று காண்டங்களும் 1104, விருத்தப் பாக்களுமுடையது; இது சென்னையிலிருந்த சவரியப்ப முதலியார் குமாரர் செகராவு முதலியாரால் 1874இல் பதிப்பிக்கப்பட்டது.

தொல்கபிலர்: (கி.மு. 230) ‘புள்ளித் தொல்கரை’ என்று தமது பாடலிற் கூறிய சிறப்பினால் இவர் தொல் கபிலரெனப்படுவர். கபிலருக்குமுன் விளங்கியவ ராதலின் தொல்கபிலரெனப்பட்டா ரென்பதும் ஒரு வழக்கு. இவர் பாடியன: நற். 114, 276, 328, 399; அகம். 282; குறு. 14.

தொல்காப்பிய தேவர்: (14ஆம் நூ. பிற்.) இவர் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் பாடியவர். இத்தலத்துக்கு வந்த இரட்டைப் புலவர்களை அத் தலவாசிகள் கலம்பகம் பாடித்தர வேண்டியபோது தொல்காப்பியதேவர் பாடியுள்ள இத் தலத்திற்கு நாங்கள் கலம்பகம் பாடல் தகுமோ எனப் புகழப்பட்டவர். இதனைத் “தொல்காப்பிய தேவர் சொற்ற தமிழ்ப் பாடலன்றி, நல்காத்திருச் செவிக்கு நாமுரைத்த தேறுமோ, மல்காப்புனல் ததும்ப மாநிலத்துக் கண்பிசைந்து, பல்காற் பொருளழற்கும் பாற்கட லொன்றீந் தார்க்கே” என்பதாலறிக.

தொல்காப்பியர்: (கி.மு. 350-) இவர் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவரென்றும் பழங்கதை வழங்குகின்றது. அவ்வாறு கொள்வதற்குரிய ஆதாரம் தொல்காப்பியத்திலாவது அதன் பாயிரத்திலாவது காணப்பட வில்லை. இவரைக் குறித்த உண்மை வரலாறெதுவும் அறிய முடியவில்லை. பழங்கதை வடிவிலுள்ள இவர் வரலாறு நச்சினார்க்கினியராற் கூறப்பட் டுள்ளது. தொல்காப்பியர் செய்த நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம் என்பதற்குப் பழைய மரபைக் காப்பதொரு நூல் என்பது பொருள். இது வீரமா முனிவர் தாம் செய்த இலக்கணத்துக்குத் தொன்னூல் விளக்கம் எனப் பெயரிட்டது போன்றதோர் வழக்கு. தொல்காப்பியரின் இயற்பெயர் யாது என்று தெரியவில்லை. திரண தூமாக்கினி என நச்சினார்க்கினியர் கூறுவது கொள்ளத்தக்கதன்று. இது திருவிளையாடற் புராணத்திற் காணப்படும் பாண்டிய அரசரின் வடமொழிப் பெயர்கள் போன்ற மொழி பெயர்ப்புப் பெயராய்ப் புராண காலத்தில் எழுந்ததாகலாம். புலத்தியன் என்பதைப் புல்-அகத்-தியன் எனப் பிரித்து வடமொழிப்படுத்தியதால் திரண தூமாக்கினி (திரணம் - தூமம் = அக்கினி) என்றாயிற்றென அறிஞர் சிலர் புகல்வர்.

இவர் தொல்காப்பியக் குடியினராதலால் தொல்காப்பியரென அழைக்கப் பட்டனர் என்பர் இளம்பூரணர். அப் பெயரினையுடைய ஊர் ஒன்று சீகாழிப் பக்கத்திலுள்ளது. இவரைச் சிலர் சைன மதத்தினரென்கின்றனர். சைன மதம் தென்னாடு வந்தது கி.மு. மூன்றாம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலென்பர் சரித்திர ஆராய்ச்சி வல்லோர். தொல்காப்பியர் காலம் அதற்கு முந்தியதாம். சைனம் பௌத்தம் என்ற இம் மதங்களின் கொள்கைகளகாவது, அம் மதத்தினர் ஒழுக் கங்களாவது தொல்காப்பியத்திற் காணப்படா. தொல்காப்பியர் சைனரல்லர் என் பதைச் செந்தமிழ்ப் பத்திரிகையில் பலரும் விரித் தெழுதியிருப்பதால் அதை இதனுடன் விடுகின்றேன். தொல்காப்பியரோடு ஒரு சாலை மாணாக்கராயிருந்த பதினொருவருள் காக்கை பாடினியார், நற்றத்தனார், அவிநயனார், வாய்ப்பியனார், பனம்பாரனார் என்ற இவர்க ளியற்றிய நூல்கள் இறந்துபட்டன வேனும் சில சூத்திரங்கள் கிடைத்துள. பிற்காலத்து நூலாசிரியருள் பல்காயர், சங்கயாப் புடையார், கையனார், நல்லாறனார் பரிமாணனார், கடிய நன்னியார், நக்கீரனார், சிறுகாக்கை பாடினியார் முதலிய பலர் செய்த சூத்திரங்கள் கிடைத்துள” (தமிழ் வரலாறு - சீனிவாச பிள்ளை). தொல்காப்பியத்துக்கு உரை எழுதியவர்கள் இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், கல்லாடர், தெய்வச் சிலையார் என அறுவர். தொல்காப்பியருடன் உடன் பயின்றவர்களாகக் கூறப்படு வோர் பெயரால் வழங்கும் யாப்பு நூற் சூத்திரங்கள் விருத்தப்பாவிற்கு இலக் கணங் கூறுவதால் அவற்றின் பழமையில் ஐயுறவுண்டு.

தொல் பரணர்: (கி.மு. 230) இவர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் ஆயுதச் சிறப்பை வியந்து பாடியுள்ளார். தொல் பரணர் என்னும் பெயர் சங்கப் புலவர் வரிசையிற் காணப்படவில்லை. அரசர் காலக்கணக்கை வரிசைப் படுத்திப் பார்க்குமிடத்து பாணரில் இருவர் இருந்தனராகக் கொண்டு இலக்கிய வரலாறுகாரர் (கா.சு.) இவ்வாறு கொண்டுள்ளார். இவர் பாடியது: புறம். 4.

தொல் பெருங்குன்றூர் கிழார்: (கி.மு. 230) இவர் கரிகால் வளவனின் தந்தையாகிய உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் புறம். 226-லும், கண்ணகி காரணமாகப் பேகனைப் புறம். 147-லும் பாடியுள்ளார். சங்கப் புலவர் வரிசையில் பெருங்குன்றூர் கிழார் என்னும் பெயர் காணப்படுகின்றது. இலக்கிய வரலாறுகாரர் (கா.சு) பெருங்குன்றூர் கிழார் என்னும் பெயருடன் இருவர் இருந்தனரெனக் கொள்கின்றார்.

தோலா மொழித் தேவர்: (10ஆம் நூ. பிற்.) இவர் சூளாமணி என்னும் நூலியற்றிய சைன ஆசிரியர்; குணபத்திரர் என்னும் சைன ஆசிரியர் காலத்தவர். குணபத்திரர் காலம் 10ஆம் நூற்றாண்டின் தொடக்கம். இவருக்குப்பின் குமார சேனரும், திருத்தக்கத்தேவரும் இருந்தனர். இப்புலவரை ஆதரித்தவன் கார் வெட்டி நகரத் தலைவன் விசயன். கார்வெட்டி நகரம் வட ஆற்காட்டி லுள்ளது. சேந்தன் என்னும் புலவர்பால் இந்நூல் அரங்கேற்றப்பட்டது. சூளாமணியில் 2131 செய்யுளுண்டு.

நக்கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 252.

நக்கண்ணையார்: (கி.மு. 180) இவர் பெண்பாலினர்; பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையாரெனவும் கூறப்படுவர்; அரசர்க்கு மகட்கொடை நேரும் வணிக மரபினர். உறையூர் வீரை வெண்மான்வெளியன் தித்தனது மகன் போர்வைக்கோ பெருநற்கிள்ளியெனுஞ் சோழன் தன் தந்தையோடு பகைத்து நாடிழந்து புல்லரிசிக் கூழுண்டு வருந்தியவன். ஆமூர் மல்லனைப் போரில் வென்றது கேட்ட இந் நக்கண்ணையார் அவ்வரசனைத் தாம் மணக்க விரும்பிப் பாடியவர்; இவர் பாடியன: நற். 19, 87; அகம். 252; புறம். 83, 84, 85.

நக்கீரர்: (கி.பி. 50) இவர் மதுரை நக்கீரனாரெனவும் கணக்காயனார் மகனார் நக்கீரனாரெனவும் கூறப்படுவர். இவர் இயற்பெயர் கீரனார்; ந சிறப்புப் பொருளுணர்த்தும் இடைச்சொல். இறையனாரகப் பொருளுக்கு உரை செய்தவரிவரே. திருமுருகாற்றுப்படை நெடுநல்வாடை இவ்விரண்டையும் இவரே இயற்றினார். இவர் காலத்திலே கொண்டானென்னும் குயவன் பட்டி மண்டபமேறி வட மொழியே சிறப்புடைய தென்றும் தமிழ் சிறப்புடைய தன்றென்றும் கூறினானென்றும் அது கேட்ட நக்கீரர், “முரணில் பொதியின் முதற்புத்தேள்வாழி, பரண கபிலரும் வாழி - அரணிலா, ஆனந்த வேட்கை யான் வேட் கோக்குயக் கொண்டான், ஆனந்தஞ் சேர்க சுவாகா” என்று கூற அவனிறந்தானென்றும் அதனைக் கண்ட பிறர் வந்து வேண்ட, “ஆரியநன்று தமிழ் தீதெனவுரைத்த, காரியத்தாற் காலக்கோட்பாட்டனைச் - சீரிய, அந்தண் பொதியி லகத்தியனா ராணையாற், செந்தமிழே தீர்க்க சுவாகா” என்றொரு வெண்பாப்பாட அவன் உயிர் பெற்றெழுந்தானென்றும் ஒரு செய்தி தொல் காப்பிய உரையிற் காணப்படுகின்றது. கார்த்திகை மாதத்துக் கார்த்திகைக்குப் புதுவதாக மணம் புரிந்துகொண்ட மருமகளை அழைத்துவந்து அவளால் முதலில் பாலை அடுப்பில் வைக்கச் செய்வதும், கார் நெற்கதிர்களை மண் படாமற் கொண்டுவந்து அவலிடித்துப் பொரித்துப் படைத்தும், அன்று வீதிகளிலும் வீடுகளிலும் விளக்கு வைத்துக் கொண்டாடுவதுமாகிய கார்த்திகை விழாவை இவர் விரித்துக் கூறியுள்ளார் (அகம் 141). இவர் பாடிய திருமுருகாற்றுப்படை 317 அடிகளையுடைய அகவற்பாவா லமைந்துள்ளது; வீடு பெறுதற்குச் சமைந்த ஓரிரவலனை வீடு பெற்றானொருவன் முருகக் கடவுளிடத்தே ஆற்றுப்படுத்தியதாக ஆம்முருகக் கடவுளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது; இப்பாட்டு முருகக் கடவுளுடைய திருப்பதிகளுட் சிறந்த திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய், திருவாவினன் குடி, திருவேரகம், குன்று தோறாடல், பழமுதிர் சோலை, என்னும் ஆறு படை வீட்டிலும் அவரெழுந்தருளியிருத்தலைப் பாராட்டிக் கூறும்; முருகக் கடவுளுடைய திருவருளைப் பெற விரும்புவோர் இந்நூலை நியமமாகப் பாராயணஞ் செய்வர்.

இவர் பாடிய நெடுநல்வாடை பத்துப் பாட்டினுள் 7-வது; 188 அடிகளை யுடையது; பகைமேற் சென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பிரிந்து வருந்துந் தலைவிக்கு அவ்வருத்தந் தீரும்படி அவன் பகையை வென்று விரைவில் வருவானாகவென்று கொற்றவையைப் பரவுவாள் கூற்றாக அவனை நக்கீரனார் பாடியது. இது ஐப்பசி, கார்த்திகை மாதங்களாகிய கூதிர்க்காலத்தி னியல்பையும் தனித்திருக்கும் தலைவியது வருத்த மிகுதியையும், படை வீட்டில் தலைவ னிருக்கும் வண்ணத்தையும் விளங்கக் கூறும்.

நக்கீரர் நாலடி நானூறு, அடி நூல் என்னும் யாப்பு நூல்களைப் பற்றி யாப்பருங்கலவிருத்தி குறிப்பிடுகின்றது. “இன்னவை பிறவும் நக்கீரர் நாலடி நானூற்று வண்ணத்தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்படுலோசை” (யா.வி.ப. 217). `ஐஞ்சீரடுக்கலு மண்டில மாக்கலும் வெண்பா யாப்பிற் குரியவல்ல’ என நக்கீரர் நூலுள் வெண்பா யாப்பிற் குரியவல்ல வென்றமையால்” (யா.வி.ப. 414)
அடி நூல், நாலடி நானூறு முதலிய இலக்கண நூல்கள் செய்த நக்கீரர் சங்க கால
நக்கீரரோ பிறரொருவரோ தெரியவில்லை. இவர் பாடியன: அகம். 36, 57, 78, 80, 93, 120, 126, 141, 200, 205, 227, 249, 253, 290, 310, 340, 346, 369, 389; குறு. 78, 105, 131, 143, 161, 266, 280, 368; நற். 31, 86, 197, 258, 340, 358, 367; புறம். 56, 189, 395. திருவள்ளுவமாலை 7வது பாடல் இவர் பாடியதாக வழங்கும்.

நக்கீரர் 2: (10ஆம் நூ.?) நக்கீரர் பாடியனவாகச் சில பிரபந்தங்கள் 11ஆம் திருமுறையிற் காணப்படுகின்றன. அவை கைலைபாதி காளத்தி பாதியந்தாதி, திருஈங்கோய்மலை யெழுவது, திருவலஞ்சுழி மும்மணிக்கோவை, பெருந் தேவபாணி, திருவெழு கூற்றிருக்கை, கோவப் பிரசாதம், காரெட்டு, போற்றிக் கலிவெண்பா, திருக்கண்ணப்ப தேவர் திருமறம் என்பன. இவை 10ஆம் நூற்றாண்டளவிலிருந்த ஒரு நக்கீரராற் பாடப்பட்டனவென்று கருதப்படும். தஞ்சாவூர் சரசுவதி மாலில் நக்கீராற் செய்யப்பட்டதென ஒரு வடமொழி நிகண் டிருப்பதாக மு.சி. பூரணலிங்கம் பிள்ளை அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இது எந்த நக்கீரரியற்றியதோ தெரியவில்லை.

நச்சர்: (13ஆம் நூ.?) இவர் திருக்குறளுக்குரை செய்த பதின்மரி லொருவர்.

நச்சினார்க்கினியர்: (14ஆம் நூ.) இவர் பழைய உரையாசிரியர்களிலொருவர்; மதுரையிற் பிராமண குலத்திற் பாரத்துவாச கோத்திரத்திற் பிறந்தவர்; தொல் காப்பியத்திற்கும் பத்துப் பாட்டிற்கும் எட்டுத்தொகையுள் இரண்டாவதான குறுந்தொகையில் இருபது பாட்டிற்கும், ஆறாவதான கலித் தொகைக்கும், ஐந்து காப்பியங்களிலொன்றான சீவக சிந்தாமணிக்கும் உரை செய்தவர். இளம் பூரணர், பேராசிரியர், சேனாவரையர், ஆளவந்த பிள்ளை ஆசிரியர் முதலியோர் இவராற் கூறப்பட்டிருத்தலின் அவர்கள் இவர் காலத்திற்கு முற்பட்டவர்களென்று தெரிகிறது.

நச்சுமனார்: (-?) ‘எழுத்தசைசீரடி’ எனத் தொடங்கும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்க நூற்பாடல்கள் செய்தவர் வரிசையில் இப்பெயர் காணப்படவில்லை.

நஞ்சயப் புலவர்: (20ஆம் நூ.) இவர் திங்கள் ஊரினர். பல தனிப் பாடல்கள் செய்தவர்.

நஞ்சீயர்: (13ஆம் நூ.) இவர் திருவாய்மொழிக்கு ஒன்பதினாயிரப் படி உரை இயற்றிய ஒரு வைணவ ஆசிரியர்; பராசரபட்டரின் மாணாக்கர்; அஞ்ஞான ஞானா அவத்தைகள், வாக்கிய திரய விவரண வாக்கிய தீபிகை, கண்ணினுட் சிறுதாம்பு உரை, திருப்பள்ளி எழுச்சி உரை முதலியன செய்தவர்.

நடராசக் கவிராயர்: முத்தீசுவரர் பதிகம் (1904) சீகாழிச் சட்டைநாத சுவாமி பேரில் சரசசல்லாபப் பதிகம், (சர்வதாரி).

நடராச சுவாமி, தில்லை: புகழேந்திப் புலவர் செய்த அல்லி அரசாணி மாலையை அச்சிட்டவர் (1884)

நடராச பிள்ளை: (20ஆம் நூ.) இவர் பேரூரினர்; பேரூர் நான்மணிமாலை பாடியவர். (கொ.பு.)

நடராசர் கீரனூர்: (17ஆம் நூ.) இவர் 1665இல் சாதக அலங்காரம் என்னும் நூலியற்றியவர். (1867)

நடராசையர்: (1844-1905) இவர் யாழ்ப்பாணத்திலுள்ள இணுவிலில் வாழ்ந்தவர்; கவிபாடும் திறமுடையவர். இவர் பல தனிநிலைச் செய்யுட்கள் செய்தவர்; சிவஞான சித்தியாரை உரையோடு பதித்தவர். (1888).

நடராசையர்: இவர் மருதூர் வெங்கட்டராமையரின் புதல்வர். தேவி சந்திரப்பிரபா (1902), ஞான பூஷணி (1896), ஞான தரிசினி, இலலிதாங்கி, நிர்மலா, தத்துவதரிசனி (1899) முதலிய நூல்கள் செய்தவர்.

நடுவிலாழ்வான் பிள்ளை: முமுட்சு சேதநானு சந்தானம். *

நடேச சாத்திரி: செங்கண்டி மகாலிங்கரின் புதல்வர்; தீனதயாளு (1902), திராவிட பூர்வகாலக் கதைகள் (1886) சுகசந்தர்சன தீபிகை (1902) தன்னுயிரைப் போல மன்னுயிரை நினை (1893), திராவிட மத்தியகாலக் கதைகள் (சென்னை 1886), மாமி கொலுவிருக்கை, முத்திராராட்சசம், கோமளம் குமரியானது, வயோலா சரித்திரம் (12th night), திக்கற்ற இரு குழந்தைகள், மதிகெட்ட மனைவி முதலிய நூல்களியற்றியவர்.

நடேச தேசிகர்: திருநீற்றுப் பெருமை. (1909)

நடேசபிள்ளை, மங்காணம்: சாத்திர விசித்திரம். (1898)

நத்தத்தனார்: (கி.பி. 100) இவர் பாடியது: புறம். 218. “ஆயீராறு முந்நூறு” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது.

நத்தத்தனார் 2: (-?) இவர் பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர் “`வஞ்சி விரவினு மாசிரிய முரித்தே, வெண்பா விரவினுங் கலிவரை வின்றே’ என்றார் பொது வகையாயினும் நத்தத்தினாரெனக் கொள்க” (யா.வி.ப. 119.). அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவரும் இப்பெயர் பெறுவர்.

நந்திசிவாக்கிர யோகிகள்: (16ஆம் நூ.) இவர் சிவாக்கிர யோகிகளின் மாணவர்; ஆசிரியர் செய்த சிவநெறிப் பிரகாசமென்னும் நூலுக்கு உரை எழுதியவர்.

நந்திதேவர்: அமிர்த பஞ்சாக்கரம், நந்திதேவர் தண்டகம், நந்திதேவர் வாதசூத்திரம், தத்துவக் கட்டளை.*

நந்தீசர்: (-?) போகர் மாணாக்கரிலொருவர்.

நந்தீசுவரர்: நந்தீசுவரர் கைத்தாள சூத்திரம் (5), (8), நந்தீசுவரர்கரகைப்பா 500, ஷெயார் மதிகைப்பா 100, ஷெயார் பாடல் 8, ஷெயார் சூத்திரம் 100.*

நந்நாகனார்: (-?) இவர் 12ஆம் பரிபாடலுக்கு இசை வகுத்தவர்; நப்பண்ணனார் என்பதிற் போல் ந என்பது சிறப்புப் பொருளை யுணர்த்தும்.

நப்பசலையார்: (கி.மு. 87.) காமக்கணி நப்பசலையார் பார்க்க.

நப்பண்ணனார்: (சங்ககாலம்) இவர் பரிபாடலில் முருகக் கடவுளுக்குரிய 19ஆம் பாடல் இயற்றியவர். திருப்பரங்குன்றத்தில் திகழும் வள்ளியம்மை யின் திருமண விழாச் செய்தியும்; முருகக் கடவுளைத் தரிசிக்க விரும்பி மதுரையிலுள்ளார் தத்தமக்குரிய ஊர்திகளிலேறியும் நடந்தும் செல்லுதலும், அவர்களுடைய நெருக்கத்தால் தோன்றும் வழியின் காட்சியும், பாண்டியன் உரிமை மகளிரோடும் மந்திரிமார் முதலியவர்களோடும் வந்து அம்மலை யின் மீதேறித் திருக்கோயிலை வலம் வருதலும், தரிசிக்க வந்தவர்கள் அம் மலையில் நிகழ்த்தும் பலவகைச் செய்திகளும், முருகக் கடவுள் கடம் பின் கீழ் எழுந்தருளி யிருப்பதும் இப் பாடலிற் கூறப்பட்டுள்ளன. நப்பண்ணனார் என்பதில் ந என்பது சிறப்புப் பொருளைத் தருவதோர் இடைச்சொல்.

நப்பாலத்தனார்: (சங்ககாலம்) இவர் கடை எழுவள்ளல்களுளொருவனாகிய வில்வல்லோரியைப் பாடியுள்ளார். இவர் பாடியவை: நற். 52, 240 யாப்பருங்கல விருத்தி மேற்கோள்களுள் நப்பாலத்தனார் சூத்திரமெனச் சில சூத்திரங்கள் காட்டப்படுதலின் இவர் யாப்பிலக்கணமொன்று செய்துள்ளாரெனத் தெரி கிறது. இவர் பிறிதொரு நப்பாலத்தனாகிலுமாகலாம். திருவள்ளுவ மாலை 47வது பாடல் இவர் செய்ததாகக் காணப்படுகிறது.

நப்பூதனார்: காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் பார்க்க.

நமச்சிவாய ஐயர்: ஞானவாசிட்டத் திரட்டு.*

நமச்சிவாயக் கவிராயர்: (19ஆம் நூ.) இவர் இற்றைக்கேறக்குறைய 150 ஆண்டுகளின் முன் திருநெல்வேலியிலுள்ள விக்கிரமசிங்க புரத்தில் வாழ்ந்த வேளாண்புலவர். இவர் பாடிய நூல்கள்: உலகுடையம்மையந்தாதி, சிங்கைச்சிலேடை அந்தாதி. (சிங்கை விக்கிரமசிங்கபுரம்).

நமச்சிவாயச் செட்டி: விவேக சுந்தரம் (நாவல்). (சென்னை 1888).

நமச்சிவாய தேசிகர் அல்லது நமச்சிவாய தம்பிரான்: (15ஆம் நூ.) இவர் திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த ஒரு தம்பிரான். உமாபதி சிவாசாரியரின் வினாவெண்பாவிற்கும், சிவஞான சித்தியராச்சுபக்கத்துக்கும், அருணந்தி சிவாசாரியாரின் இருபா இருபஃதுக்கும் உரை எழுதியவர்.

நமச்சிவாய நாவலர்: திருவரங்கச் சந்நிதி முறை. (1928).

நமச்சிவாய பிள்ளை, மாயூரம்: பட்டணத்துப் பிள்ளையார் சரித்திர சங்கிரகம். (1898).

நமச்சிவாயப் புலவர்: (19ஆம் நூ.) இவர் ஏறக்குறைய 85 ஆண்டுகளின் முன் யாழ்ப்பாணத்து ஆவரங்கால் என்னுமூரிற் சுப்பிரமணிய பிள்ளைக்குப் புதல்வராகப் பிறந்தவர்; உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரிடத்தும், மட்டு வில்வேற் பிள்ளையிடத்தும் இலக்கண இலக்கியங்கற்றவர். இவர் சங்கீத கீர்த்தனை பாடுவதில் வல்லவர்.

நமச்சிவாயப் புலவர்: 2 (1707 - 1761) இவர் தொண்டை நாட்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுவர். திருக்கருவை, திருக்காளத்தி, திருக்குடந்தை, திருக்கழுக் குன்றம், தில்லை, திருமாலிருஞ்சோலை, மதுரை முதலியவற்றிலுள்ள கடவுளரைப் பாடியுள்ளார்.

நமச்சிவாய முதலியார். கா: (1876 - 1937) இவர் பல பள்ளிக் கூடப் பாடப் புத்தகங்களை வெளியிட்டவர். தமிழ்ப் புலவர்களை ஆதிரித்தவர். தமிழ்க் கல்வியினால் அதிக செல்வாக்குப் பெற்றிருந்தவர்களுள் இவர் தலைவ ராவர். இளம்பூரணம் சொல்லதிகாரம், அகத்திணை புறத்திணை இயல்களை பதிப்பித்தவர்.

நமச்சிவாயர்: வினா வெண்பாவுரை.*

நம்பி: (15ஆம் நூ.) இவர் திருக்குறுங்குடியில் வாழ்ந்த புலவர். வல்லமென்னு மூரில் வாழ்ந்த காளத்தி முதலியாரைப் பாடிப் பரிசிலாக யானை முதலிய செல்வம் பெற்றவர்.

நம்பி காடநம்பி: பூந்துருத்திநம்பி, காடநம்பி பார்க்க.

நம்பிகாளி: (12ஆம் நூ.) இவர் நெற்குன்றங்கிழார் களப்பாளர் (நெற்குன்ற வாணர்) காலத்து விளங்கிய ஒரு புலவர். “கற்குங் கவிவல்ல யாதவர் கோனம்பி காளிக்கியாம், விற்கும் பரிசனமாகிவிட் டோம்வட வேங்கடமும், பொற்குன்றமு நம் மரபுமெந் நாளு நிலைநிற்கவே” என்னும் பாடல் காண்க.

நம்பிகுட்டுவன்: (கி.மு. 87.) இவர் சேரமரபினர்; ஆம்பல் மலர்வதைக் காக்கை கொட்டாவி விடுதல் போலுமென உவமை கூறியவர். இவர் பாடியன: நற். 145, 236, 345: குறு. 109, 243.

நம்பியாண்டார் நம்பி: (10ஆம் நூ.) இவர் திருநாரையூரிலே ஆதிசைவ மரபிற் பிறந்தவர்; அவ்வூர் விநாயகர் கோயிலுக்கு அருச்சகராக விருந்தவர்; இராசராசனோடு தில்லைக்குச் சென்று அங்கு பூட்டிவைக்கப் பட்டிருந்த தேவாரப் பாடல்களை எடுத்தவர்; தேவாரங்களைப் பிற அருட்பாக்களோடு சேர்த்துத் திருமுறைகளாகத் தொகுத்தவர்; இவர் செய்த நூல்கள் திருத் தொண்டர் திருவந்தாதி, கோயிற்றிறுப்பணியர் விருத்தம், திருவந்தாதி, திருச் சண்பை விருத்தம், திருமும்மணிக்கோவை, திரு உலாமாலை, திருக்கலம் பகம், திருத்தொகை முதலியன. திருநாவுக்கரசு சுவாமி பேரில் ஏகாதசமாலை ஒன்றும் இவராற் பாடப்பட்டது. இவர் பாடல்கள் இராசராசனால் 11ஆம் திரு முறையுட் சேர்க்கப்பட்டன.

“நம்பியாண்டார் நம்பி முதலாங் குலோத்துங்கன் காலத்திருந்தவனென்று சிலரும், முதலாம் இராசராசன் காலத்திருந்தவரென்று வேறு சிலருங் கூறுவர். திருமுறை கண்ட புராணத்தை ஆதாரமாகக் கொண்டு பதினொரு திருமுறை களும் இவராற் றொகுக்கப்பட்டனவெனக் கொள்ளப்பட்டு வருகின்றது. திருமுறை கண்ட புராணம் உமாபதி சிவத்தினாற் செய்யப்பட்டதெனத் தவறாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் கூறப்பட்ட வரசன் இராசராச மன்னன் அபய குலசேகரன். இப்பெயர் சோழ அரசனைப் பொதுவகையிற் குறிக்கும். திருமுறை கண்ட புராணம் இரண்டுவகைப் பாடல்களாலமைந்தது. இரண்டாவது வகைப் பாடல்களமைந்த பகுதி பிற்காலச் சேர்ப்பு ஆகலாம். முதற்பகுதி தேவாரத் தொகுப்பைப் பற்றிக் கூறுவதோடு முடிவடைகின்றது. இரண்டாவது பகுதி பதினொரு திருமுறைகளைப் பற்றிக் கூறுகின்றது. திருமுறை என்னும் பெயர் முதல் முதல் சேக்கிழாரின் பெரியபுராணத்திலும், மூன்றாம் குலோத்துங்கனின் பட்டயங்களிலும் காணப்படுகின்றது. பாடல்கள் எப்போதாவது தொகுக்கப்பட் டனவோ வென்பது ஐயத்துக் கிடமானது. அப்பர், சுந்தரர், சம்பந்தர் முதலி யோரின் பாடல்களைத் தேவாரம் என்று கூறும் வழக்கு பிற்காலத்தது. தேவாரம் என்பதன் ஆதிப் பொருள் வணக்கத்துக் குரியதென்பது. 16ஆம் நூற்றாண்டில் தத்துவப் பிரகாசர் செய்த சிவப்பிரகாசப் பெருந்திரட்டில் அப்பர் பாடல்கள் தேவாரமென்றும், சம்பந்தர் சுந்தரர் பாடல்கள் திருக்கடைக் காப்பு, திருப்பாட்டு என்றும் முறையே வழங்கப்பட்டுள்ளன. அந்தரங்க வழிபாட்டில், பாடுதற்கேற் றனவா யிருந்தமையால் அப்பாடல்கள் தேவாரம் எனப்பட்டன. பிராமணரல்லா தார் பாடல்களானமையால் அவை பொது வழிபாட்டில் ஓதத்தகாதனவாகக் கொள்ளப்பட்டன வென்னும் கொள்கை உண்மையானதன்று. திருத்தாண்டகம் முதலியன ஒதுதற்கு மானியங்கள் விடப்பட்டிருந்ததைப் பற்றிச் சாசனங்கள் குறிப் பிடுகின்றன. மூவர் பாடல்கள் தொகுக்கப்படவில்லை என்பதற்கு இவ்வளவுங் கூறினோம். நம்பியாண்டார் நம்பி திருமுறைகளைத் தொகுத்தாரோ வென்பதை அவர் பாடல்களைக்கொண்டே அறிந்து கொள்ளலாம். அவர் சோழ அரசனின் மதிப்பிற்குரியராயிருந்தமையால் தேவாரத்தைப் பரவச்செய்தார். இலங்கையை வென்றவனும், கொங்கு நாட்டினின்றும் கிடைத்த பொன்னைக் கொண்டு சிதம்பரத்தைப் பொன்வேய்ந்தவனுமாகிய அரசன் இறந்து போனதைப் பற்றி இவர் குறிப்பிட்டுள்ளார். முதலாம் பராந்தகன் இலங்கையை வென்றான். இவனது படையெடுப்பு இவன் தந்தை முதலாம் ஆதித்தன் ஆட்சிக் காலத்திலாயிருக்க லாம். முதலாம் ஆதித்தன் கொங்கு நாட்டை வென்றதைக் குறித்துக் கொங்கு நாட்டரசர் வரலாறு கூறுகின்றது. கி.பி. 876ஆம் ஆண்டுவரையும் தேவாரம் ஓதுதற்கு ஒழுங்குகள் இருந்தன. முதலாம் பராந்தகனது ஆட்சிக் காலத்தின் 3ஆம் ஆண்டு முதல் (கி.பி. 910) இவ்வகைப் பட்டையங்கள் மிகப் பல காணப் படுகின்றன. இதனால் நம்பியாண்டார் நம்பியின் ஆதிக்கம் புலப்படுகிறது. இவர் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 10ஆம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் விளங்கியவர்.” (குறிப்பு: Tamil Plutarch).

நம்பி நாயுடு: பாசுரப்படி ராமாயணம், மோட்ச சூக்குமமென்னும் விட்டுணு தோத்திர நாமாவளி (1903).

நம்பிள்ளை: (14ஆம் நூ.) இவர் நம்பூரிற் பிறந்தவர். இவருக்கு வரதராச ரென்பது இயற்பெயர். இவர் திருவாய்மொழியுரை, திருவிருத்தவுரை, பெரிய திருமொழியுரை, நம் பிள்ளை நாலு வார்த்தை, நம் பிள்ளை இரகசியம் முதலியன செய்தனர்.

நம்மாழ்வார்: (8ஆம் நூ. இறுதி அல்லது 9ஆம் நூ. தொடக்கம்) இவர் சடகோபன் எனவும் பெயர் பெறுவர். இவர் திருநெல்வேலியிலுள்ள ஆழ்வார் திருநகரியில் வேளாண் குலத்துப் பிறந்தவர்; திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய் மொழி முதலியன பாடியவர்.

நயனப்ப முதலியார்: சித்தாந்த சைவர்களின் உண்மை நிலை.*

நயினாமகம்மதுப் புலவர்: (18ஆம் நூ. பிற்.) இவரியற்றிய நூல் முகைதீன் மாலை.

நயினார் ஆசாரியர்: பிள்ளையந்தாதி.* இவர் வேதாந்த தேசிகரின் புதல்வர்.

நரசிம்ம சுவாமியார்: (20ஆம் நூ.) இவர் ஒண்டிபுதூர் என்னு மூரினர். வேதாந்த நூல்கள் பல இயற்றியவர். (கொ.பு.)

நரசிம்ம பாரதி: அன்பிலாந்துறை மான்மியம். (1895)

நரசிம்மலு நாயுடு, சேலம்: பலிசவாரு புராணம் அல்லது நாயுடுகாரு சம°தான சரித்திரம், ஆரிய சந்தியா வந்தனம், இந்து பைபிள், ஆரியருடைய சங்கீத சாத்திரத்தின் சரித்திரம், தக்கண இந்தியாவின் சரித்திரம், பெண்கள் சரித்திரம் (1883). சாரசங்கிரகம் (1905).

நரசிம்மையர், மணஞ்சேரி: அரிச்சந்திரோ பாக்கியான நாடகாலங்கார மென்னும் கீர்த்தனை. (சென்னை 1875)

நரிவெரூஉத் தலையார்: (கி.மு. 9) இவர் யாது காரணத்தலோ தம்முடம்பு வேறுபட்டிருந்து சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேரலிரும் பொறையைக் கண்டநாளில் அவ்வேறுபாடு நீங்கித் தம்முடம்பு பெற்றனர். இதனைப் புறநானூற்றின் 5ஆம் பாட்டின் பின்புள்ள வாக்கியத்தாலும் தொல்காப்பிய மெய்ப்பாட்டியலில் “புதுமை பெருமை” என்னும் 7ஆம் சூத் திரத்திற்கு நச்சினார்க்கினியர் எழுதிய விசேடவுரையானுமுணர்க. (உ.வே.சா.) இவர் பாடியன: குறு. 5, 236; புறம். 5, 195. “இன்பம் பொருளறம்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது.

நரைமுடி நெட்டையார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 339.

நல்கூர் வேள்வியார்: (-?) “உப்பக்க நோக்கி” என்னும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்கப் பாடல்கள் செய்தவர் வரிசையில் இப்பெயர் காணப்படவில்லை.

நல்லசாமிப் பிள்ளை, யே எம்,பி.ஏ., பி.எல்.: (1886-1920) இவர் டி°ரிக் மியூனிசிபாக (District Munisif) கடமை ஆற்றியவர். சிவஞான சித்தி, சிவஞான போதம், சிவப்பிரகாசம், பெரிய புராணம், உண்மை விளக்கம், சைவ சமய நெறி, திருவருட்பயன் முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். டாக்டர் போப்பையரின் புறப் பொருள் வெண்பாமாலை மொழி பெயர்ப்பிற்கோர் சிறந்த முன்னுரை எழுதியுள்ளார். சித்தாந்த தீபிகை என்னும் திங்கள் இதழில் இவர்கள் கட்டுரைகளும் மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன; அவ்விதழுக்குத் தலைமையாகச் சிலகாலம் இருந்து நடத்தியவருமிவராவர்.

நல்லசிவ தேவர்: சிவப்பிரகாசச் சிந்தனையுரை.*

நல்லச்சுதனார்: (சங்ககாலம்) இவர் பரிபாடலில் முருகக் கடவுளுக்குரிய 21ஆம் பாடலியற்றியவர்; இப்பாட்டில் முருகக் கடவுள் ஊரும், யானை, அவர் தொடும் அடையற் செருப்பு, அவரது வேற்படை, அவரணிந்த கடப்ப மாலை, திருப்பரங்குன்றம், அதிலுள்ள மகளிருடைய பலவகைச் செயல்கள், அங்கே ஆடும் மயிலின் காட்சி, மகளிரும்மைந்தரும் சுனையில் நிகழ்த்தும் நீர் விளையாட்டு, பலவகை மணத்துடன் அங்கே தவழுங்காற்றினியல்பு, கேள்வனுருட்டும் துடிச்சீர்க்கிசையக் குன்றத்து மகளிராடல் ஆகிய இவை களும் பிறவும், கூறப்பெற்றுள்ளன. திருப்பரங்குன்றம் யானையாக உருவகஞ் செய்யப் பெற்றிருத்தல் மிக அழகிது. முருகக் கடவுளுடைய அடியின் கீழும் திருப்பரங்குன்றத்தின் கீழும் உறைதல் தமக்கு இயைய வேண்டுமென்று இவர் வேண்டுதல் அவர்பால் இவருக்குள்ள அன்பின் மிகுதியைக் காட்டு கின்றது. பரிபாடல் 16, 17, 18, 20ஆம் பாடல்களுக்கு இசை வகுத்தவரும் இவரே. இவற்றால் இயலிசைகளில் இவர் வல்லுநரென்று தெரிகிறது. (உ.வே.சா.)

நல்லந்துவனார்: (கி.பி.50-) இவர் மதுரை ஆசிரியர் நல்லந்துவனாரெனவும் அறியப்படுவர். இவர் இயற் பெயர் அந்துவன் “அந்துவன் பாடிய நந்துகெழுநெடுவரை” (அகம் 59) என மருதனிள நாகனார் பாடியுள்ளார். இவர் பாடியவை: அகம் 43; கலித்தொகை கடவுள் வாழ்த்து; கலி 118-150; நற். 88; பரி. 6,8, 11, 20. திருவள்ளுவமாலையிலுள்ள “ சாற்றிய பல்கலை” என்னும் வெண்பா இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் நல்லந்து வனார் பார்க்க. கலித்தொகைக் கடவுள் வாழ்த்து நல்லந்துவனார் பாடியதாக வழங்கியபோது அது அவர் செய்ததென்பது ஐயத்துக்கிடம். சங்கத்தொகை நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்தவரே இதற்கும் செய்தாராகலாம்.

நல்லழுசியார்: (சங்ககாலம்) இவர் பரிபாடலில் வையைக்குரிய 16ஆம் பாடலை யும், முருகக் கடவுளுக்குரிய 17ஆம் பாடலையும் இயற்றியவர். 16-வதில் வையையினது கரை, அதன் துறை, அதன் கரைச் சோலை முதலியவற்றின் சிறப்பும், அதன் நீர்ப் பெருக்கும், அதில் விளைந்த நீர் விளையாட்டுச் செய்தியும்; 17வதில் திருப்பரங்குன்றத்தில் முருகக் கடவுள் எழுந்தருளிய கடம்பை அன்பர்கள் வந்து வழிபடுவதிலும், மாலைதோறும் அக்குன்றத்தின் அடியிலுறைவோர் விண்ணுலக வின்பத்தையும் விரும்பாரென்பதும் அதிலுள்ள பலவகை விசேடங்களும், மதுரையின் வளமும் செவ்வனே கூறப்பெற்றுள்ளன. (உ.வே.சா.)

நல்லவீரப்ப பிள்ளை: (19ஆம் நூ.) இவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த குளத்தூரில் வாழ்ந்தவர். இவர் முருகக் கடவுள்மீது பள்ளும், குறவஞ்சியும் பாடியுள்ளார்.

நல்லாசிரியர்: (-?) இவர் பழைய நூலாசிரியருள் ஒருவர்.(யா.வி.)

நல்லாதனார்: (5ஆம் நூ.?) இவர் திரிகடுகம் என்னும் பதினெண்கீழ்க் கணக்கு நூல் இயற்றியவர். இது கடவுள் வாழ்த்து உட்பட 101-பாடல்களுடையது. திரிகடுகு என்பன சுக்கு, திப்பிலி, மிளகு. இவை மக்களுக்கு வியாதியைப் போக்கி நன்மையைப் பயப்பதுபோல் நன்மை பயக்கும் மூன்று உபாயங்கள் ஒவ்வொரு பாவிலும் சொல்லப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பழைய உரை ஒன்றுண்டு.

நல்லாப் பிள்ளை: (18ஆம் நூ. தொடக்கம்) இவர் தொண்டை மண்டலத்திலே முத்தாலப்பேட்டையிலே கணக்கர் குலத்தில் பிறந்தவர்; தமிழ், தெலுங்கு, சமக்கிருதம் என்னும் மூன்று மொழிகளிலும் வல்லுநர். இவர் வில்லிபார தத்தை விரித்து இடையிடையே வடமொழிப் பாரதத்திலிருந்து கதைகளை வைத்துப் பாரதம் ஒன்று செய்தனர். நல்லாப்பிள்ளை பாரதத்தில் 14,728-பாடல்களுண்டு; இது வில்லிபாரதத்திற் காணப்படுவதிலும் 10-ஆயிரம் பாடல்கள் அதிகம். இவர் இந்நூல் இயற்றும்போது 20 வயதினராக விருந்தார். நல்லாப் பிள்ளை பாரதம் 1732-க்கும், 1744-க்குமிடையிற் செய்யப்பட்டது. இவர் செய்த இன்னொரு நூல் தெய்வயானை புராணம் என்று சொல்லப்படு கிறது. இதனை நல்லான் என்னும் பிறிதொருவர் செய்தாரெனத் தெரிகிறது.

நல்லாவூர் கிழார்: (சங்ககாலம்) இவருடைய ஊர் நல்லாவூர்.அகப்பாட்டிற்கு எல்லையாகக் கூறப்படும் முப்பத்தோரடியுள்ள பாடல் இவருடையதாகும். இவர் பாடியன: அகம் 86; நற். 154.

நல்லாறனார்: (-?) இவர் நல்லாறன் மொழிவரி என்னும் நூல் செய்தவர். “`உரியசைச் சீர்ப்பி னுகர நேராய்த், திரியுந்தளைவகை சேர்தலானே’ என்றார் நல்லாறனார்” (யா.வி.ப. 429).

நல்லாற்றூர் சிவப்பிரகாச சுவாமிகள்: சிவப்பிரகாச சுவாமிகள் துறைமங்கலம் பார்க்க.

நல்லான்: தெய்வயானை புராணம்.* சென்னை அரசாங்க நூல் நிலையக் கையெழுத்து நூல் வரிசையிற் கூறப்படுவதின்படி நல்லான் என்பவர் நல்லாப்பிள்ளையிலும் வேறானவராவர். நல்லாப்பிள்ளை பார்க்க.

நல்லிறையனார்: (கி.பி. 1-) இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடிய புலவருள் ஒருவர். இவர் பாடியது: புறம். 393.

நல்லுத்திரனார்: இவர் பாடியது: கலி 101-117.

நல்லூர்ச் சிறு மேதாவியார்: நன்பனுவலூர் சிறு மேதாவியார் பார்க்க.

நல்லெழுனியார்: (சங்ககாலம்) இவர் பாடியது பரிபாடல் 13ஆம் பாடல். இதில் திருமாலின் திருவுருவம் முதலியவற்றைப் பலபடப் பாராட்டியிருக்கும் பகுதிகளும் அவரைத் துதிக்கும் பாகங்களும் அன்பர்களுடைய மனத்தை ஆனந்த வெள்ளத்திலழுத்தும். அதிகமான் நெடுமானஞ்சியின் பரம்பரை யோர் பெயர்களில் ‘எழுனி’ என்பது விரவி வருவதால், இவர் அவன் பரம்பரையினரோவென்று நினைத்தற்கிடமுண்டு. இவர் பெயர் நல்லெழினி எனவும் வழங்கும்.

நல்லையாபிள்ளை, மயிலிட்டி: இவர் கொ°தான் பாடிய பூதத்தம்பி விலாசத்தைப் பார்வையிட்டு அச்சிட்டவர். (யாழ்ப்பாணம் 1888.)

நல்வழுதியார்: (சங்ககாலம்) இவர் பாடியது வையைக்குரிய 12ஆம் பரிபாடல். சையமலையிலிருந்து மரங்கள் போன்றவற்றை வையை அடித்துக்கொண்டு வருதல், அது மதுரையின் மதிலைப் பொருதல், அதிற் புதுநீர் பெருகி வரு தலைக் கேட்ட மகளிர் தலைவர்களுடன் ஊர்தியில் ஏறிச்செல்லல், அது கண்ட பிறமகளிர் தம்மிற் கூறுங்கூற்றுக்கள், சனங்களின் முழக்க மிகுதி, பல வகை வாச்சிய ஒலிகள், சென்றோர் தம்மவர்க்கு அங்கங்கே நிகழ்ந்தவற்றை உவந்து காட்டிக் கூறல், விளையாட்டின் வகை முதலியன இதில் மிக நன்றாகக் காட்டப் பெற்றுள்ளன. வழுதியாரென்பது இவர் பாண்டியர் குடியிற் பிறந்தவ ரென்பதைக் காட்டும்.

நல்வெள்ளியார்: (சங்ககாலம்) இவர் மதுரை நல்வெள்ளியாரெனவும், நல்லொளி யர் எனவும் அறியப்படுவர். இவர் பெயரால் இவர் பெண்பாலின ரெனத்தெரிகிறது. இவர் பாடியன: நற். 7, 47; குறு. 365; அகம்.32.

நல்வேட்டனார்: (சங்ககாலம்) இவர் மிளைகிழான் நல்வேட்டனாரெனவும் அறியப்படுவர். மிளை ஓர் ஊர். இவர் பாடியன: நற். 53, 210, 292, 349.

நவநீதன்: நவநீதப் பாட்டியல் (கலித்துறைப் பாட்டியல்). இவர் பெயர் நவநீதநாதன் எனவும் வழங்கும்.

நற்சேந்தனார்: கொடிமங்கலத்து வாதுளி சேந்தனார் பார்க்க.

நற்றங்கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது; நற். 136.

நற்றத்தனார்: (-?) இவர் அகத்தியர் மாணவர் பன்னிருவருள் ஒருவரெனப்படு வர். இவர் நற்றத்தமென்னும் செய்யுளிலக்கண நூல் செய்தார். (யா.வி.) சிறுபாணாற்றுப்படை பாடிய நற்றத்தனார் இவரின் வேறானவர். இடைக் கழிநாட்டு நல்லூர் நற்றத்தனார் பார்க்க.

நற்றமனார்: (சங்க காலம்) இவர் நல்லூர் சிறுமேதாவியாரெனவும் படுவர். இவர் பாடியன: அகம். 94, 394.

நன்பலூர் சிறுமேதாவியார்: (சங்ககாலம்) இவர் நல்லூர்ச் சிறுமேதாவியா ரெனப்படுவர். இவர் பாடியன: அகம். 94, 394.

நன்விளக்கனார்: (சங்ககாலம்) இவர் நன்விளக்கு என்னுமூரினர். இவர்
பாடியது: நற். 85.

நன்னாகனார்: (சங்ககாலம்) இவர் நன்னாதனார், புறத்திணை நன்னாகனார் எனவும் படுவர். இவர் பாடியன: புறம். 176, 376, 379, 381, 384. பரிபாடல் 2ஆம் பாடலுக்கு இசை வகுத்த நன்னாகனார் இவரோ தெரியவில்லை.

நன்னாகையார்: (சங்ககாலம்) இவர் கச்சிப்பேட்டு நன்னாகையார் எனவும் படுவர். இவர் பாடியன: குறு. 30, 118, 172, 180, 192, 197, 287, 325.

நன்னிலம் நாரணன்: சுபத்திரா கலியாண நாடகம். (ச.கை.)

நாகசாமி ஐயர் புலவர்: சப்த ரிஷிவாக்கியம் 5500 என்னும் நூலைப் பார்வையிட்டு அச்சிட்டவர். (1899).

நாகநாத பண்டிதர்: (1824-1884) இவர் யாழ்ப்பாணத்திலே சுன்னாகத்தில் வாழ்ந்தவர்; வடமொழி தென்மொழிப் புலமை வாய்ந்தவர்; மேகதூதம், பகவத் கீதை, இதோபதேசம், சாந்தோக்கிய உபநிடதம் முதலிய நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

நாகமணிப் புலவர்: (1891-1933) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நயினார் தீவிலே வாழ்ந்தவர்; கவிபாடுவதில் வல்லவர். இவர் பாடியன: நயினை நீரோட்டக யமகவந்தாதி, நயினை மான்மியம் என்பன.

நாகமலார் மகன் இளங் கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 250.

நாகம் போத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 282.

நாகரத்தின நாயக்கர்: இவர் நியாயப் பிரகாசம் என்னும் நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர். (1906.)

நாகராசன்: (16ஆம் நூ.) இவர் பாடியது தினகர வெண்பா. இது தினகர பிள்ளை என்பவர்மீது பாடப்பட்டது.

நாகனார்: (-?) இவர் பரிபாடல் 6ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர்.

நாகன் றேவனார்: (-?) “தாளார் மலர்ப் பொய்கை” என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. சங்கச் செய்யுள் செய்த புலவர் வரிசையில் இவர் பெயர் காணப்படவில்லை.

நாகி செட்டியார்: வீரசைவ விளக்க வினாவிடை (1933), வீராசாரக் கட்டளை. (1931.)

நாகேச ஐயர்: (19ஆம் நூ.) இவர் 140 ஆண்டுகளின் முன் வட்டுக்கோட்டையில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய நூல்கள் அருச்சுன நாடகம், சுபத்திரை நாடகம், அடைக்கலத்துக் கோயில் கொண்டருளியிருக்குங் கந்தசுவாமி பேரில் நாணிக்கண் புதைத்தல் என்னும் துறையில் 100 செய்யுள், அமுத நுணுக்கம் என்னும் விட வைத்திய நூல் என்பன.

நாச்சியார்: ஆண்டாள் பார்க்க.*

நாதமுனி: (11ஆம் நூ. முற்.) இவர் ஆழ்வார்கள் காலத்திற்குப் பின் நம்மாழ்வாரது திருவாய் மொழியினை யாவரும் கைக்கொள்ளத் தக்க முறையில் பாராயணத்திலும் ஆட்சியிலும் வைத்தவர். இவர் வீர நாராயணபுரத்திருந்த வைணவர். இவர் இயற்றிய நூல்கள் யோக ரகசியம். நியாயதத்துவம் முதலியன.

நாரத சரிதை ஆசிரியர்: (-?) இவரது இயற் பெயர் தெரியவில்லை. இவர் இயற்றிய நூல் நாரத சரிதை. (புறத்திரட்டு.)

நாரதர்: (-?) இவர் பஞ்ச பாரதீயம் என்னும் இசை நூல் செய்தவர். (அடி-உரை)

நாராயண ஐயர்: மனவுல்லாச கதை. (சென்னை 1901.)

நாராயண கவி: பாண்டிய கேளி விலாசம். (ச.கை.)

நாராயண சாத்திரி: போச சரித்திரம். (சென்னை 1900.)

நாராயணசாமி ஐயர்: நெடுவை அண்ணாசாமி ஐயர் புதல்வர்; சங்கிரக இராமாயணம் செய்தவர். (மதுரை 1905.)

நாராயணசாமி ஐயர், கும்பகோணம் அரசினர் கல்லூரி: நடுவேனிற் கனவு; (Mid summer night dream) மொழிபெயர்ப்பு. (1893.)

நாராயணசாமி ஐயர், பின்னத்தூர்: (1862-1914) இவர் திருத்துறைப்பூண்டிப் பிரிவிலுள்ள பின்னத்தூரென்னுமூரினர். இவர் நற்றிணைக்குச் சிறந்த உரை எழுதியுள்ளார். இவர் இயற்றிய பிற நூல்கள்: பிரகசன நாடகம், இடும்பாவன புராணம், இறையனாராற்றுப் படை, நீலகண்டேச்சரக் கோவை, சிவ புராணம், சிவ கீதை, நரிவிருத்தம், மாணாக்கராற்றுப் படை, இயன் மொழி வாழ்த்து, தென்றில்லை (தில்லைவளாகம்) உலா, தென்றில்லைக் கலம்பகம், பழையது விடுதூது, மருதப் பாட்டு, செருப்பு விடுதூது, தமிழ் நாயக மாலை, களப்பாழ்ப் புராணம், இராமாயண அகவல், அரதைக் கோவை, வீரகாவியம். இவற்றுள் சில நூல்களே அச்சில் வந்துள்ளன.

நாராயணசாமி ஐயர், புதுவை: சாரங்கதரன் சரித்திரப்பா. (சென்னை 1899.)

நாராயணசாமி நாயகர்: அனுபவாநந்த தீபிகை. (1893)

நாராயணசாமி நாயக்கர்: குருவருட்பேறு. (சென்னை 1896.)

நாராயணசாமிப் பிள்ளை, பங்களூர்: சித்திரங் காட்டிச் சத்தியம் நிறுத்திய கதை (பங்களூர் 1879), மங்களவல்லி விலாசம் (1882), மெய்க்கண்ட முதலியார் கீர்த்திமாலை. (1901.)

நாராயணசாமி முதலியார் கி.மு.: (20ஆம். நூ.) இவர் கோவையினர்; படிக்காசுப் புலவர் சரித்திரம் (1928), ஒட்டக்கூத்தர், இரட்டையர் முதலிய புலவர் வரலாறுகள் எழுதியவர். (கொ.பு.)

நாராயண தாசர் புதுவை: இராமாயண வசனம் இரணிய நாடகம் முதலியவற்றைப் பார்வையிட்டவர்; செயங்கொண்ட சௌந்தர வல்லிகதை எழுதியவர். (1902).
நாராயண தீட்சிதர்: மகர நெடுங்குழைக்காதர் பாமாலை (உ.வே.சா.) (1939)

நாராயண பாரதி: (18ஆம் நூ. முற்.) இவர் தொண்டை நாட்டில் வெண்ணெய் என்னு மூரிற் பிறந்த பிராமணர். இவர் மணவாள நாராயண னென்னும் பிரபுவை முன்னிட்டுத் திருவேங்கட சதகமென்னும் மணவாள நாராயண சதகம் பாடியவர்; முத்தாரையர் குமாரர் திவ்விய நாராயண பாரதி பார்க்க. நாராயண சதகம் கோவிந்த சதகம் எனவும் படும்போலும்!

நாராயண பிள்ளை: கௌளி நூற்றெளிவு. (1885)

நாராயண பிள்ளை: சிவதூடண பரிகாரம். (1889)

நாராயண பிள்ளை: வல்லிபுரம் சிதம்பர நாதரின் புதல்வர்; விட்டுணு தூஷண பரிகாரம் என்னும் நூல் செய்தவர். (1885)

நாராயண முனி: சிறீ பாஷியம், இராமானுச நூற்றந்தாதி உரை.*

நாராயணன் பட்டாதித்தன்: (11ஆம் நூ.) இவர் முதல் இராச ராசன்மேல் ஸ்ரீ ராச ராச விசயம் என்னும் நூல் பாடியவராகக் கருதப்படுவர்.

நாவலூரர்: சுந்தரர் பார்க்க.

நாற்கவிராச நம்பி: (12ஆம் நூ. இறுதி) இவர் தொண்டை நாட்டிற் புளியங்குடி யிற் பிறந்த உய்யவந்தார் என்பவருக்குக் குமாரர். இவர் சமண மதத்தினர். இவர் தமிழ் நூல்கற்று வல்லவராய் ஆசு, வித்தாரம், மதுரம், சித்திரம் என்னும் கவியில் வல்லவரானது பற்றி இவருக்கு நாற்கவிராச நம்பி என்று பெயர் வந்தது. இவர் அகப்பொருளின் விரிவைச் சுருக்கிச் சுருங்கிய நூலாகத் தம் பெயரால் நாற்கவிராச நம்பி அகப்பொருளென இயற்றினார். இது அகப் பொருள் விளக்கம் எனவும் அறியப்படும். அந்நூல் அகத்திணையியல் களவியல், வரைவியல், கற்பியல், ஒழிவியல் என ஐந்து இயல்களுடையது. இவ்விலக்கணத்துக்கு இலக்கியமாக அமைந்தது தஞ்சைவாணன் கோவை.

நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார்: (சங்ககாலம்) மான் கொம்பைக் கைக்கோலாகக் கொண்டமையின் இவர் கலைக்கோட்டுத் தண்டனெனப் பட்டார். நிகண்டனென்ற அடைமொழியால் இவர் தமிழில் நிகண்டொன்று செய்தாரெனத் தெரிகிறது. அதுவே கலைக்கோட்டுத் தண்டெனப்படுவது (இ.க.உ.) இதனை இடுகுறிப் பெயரென கொண்டார் களவியலுரைகாரர். நன்னூல் விருத்தியுரை காரரும் இதனைக் குறிப்பிட்டுள்ளார் (சூ. 49.). இவர் பாடியது: நற். 382.

நிசகுணயோகி: (19ஆம் நூ. முற்.) இவர் விவேக சிந்தாமணி என்னும் நூல் இயற் றியவர். (மொழிபெயர்ப்பு.) இது இப்பெயருடன் வழங்கும் நீதி நூலின் வேறானது.

நி°சல தாசர்: விசார சாகரம் என்னும் வேதாந்த சங்கிரகம் (கும்பகோணம் 1893), சிறீ விசார சாகரம், சிறீ விருத்திப் பிரபாவம், விருத்திரத்தினாவளி.

நிதியின் கிழவன்: தலைச்சங்க மிருந்த புலவருளொருவர். (இ.க.உ.)

நித்தியானந்த சுவாமி: இலக்கணா விருத்தி, ஆத்தும நிரூபணம், ஞான உபதேசம் (1888, 1889, 1907).

நிரம்பவழகிய தேசிகர்: (16ஆம் நூ.). இவர் வேதராணியத்தில் சைவ வேளாளர் குலத்திற்றோன்றி வடமொழி தென்மொழி வல்லவராய் கருணை ஞானப் பிரகாசரிடம் சிவ தீட்சை பெற்று மதுரையில் வாழ்ந்தனர். இவர் ஒருநாள் ஒரு மரத்தடியில் சிவத்தியானத்திலிருக்க அவ்வழி சென்ற சிற்றரசனொரு வன் அவ்விடம் தனித்து மரத்தடியில் உட்கார்ந்திருப்பவர் யார் என வினவ அவ்வேவலர் இவர் இருந்த நிலையையும் இவரது தேக அடையாளங் களையும் கூற அரசன் இவரை அறிந்தவனாதலாலும், இவர் தேகத்திலிருந்த நுணாக்காய்க் கிரந்தியாலும் நிரம்ப அழகியரோ என்றனன்; அதுவே பெய ராயிற்று என்னும் கதை வழங்கும். இக்கதை ஆதாரமற்ற தென்றும் நிரம்ப வழகியர் என்பது அவர் இயற் பெயரென்றும் கூறுவர் சோமசுந்தர தேசிக ரவர்கள். இவர் 1508-க்கு மேல் இருந்தவர் என அறியப்படுகின்றது. இவர் செய்த நூல்கள் சேது புராணம், சிவஞான சித்தி, சுபக்க உரை, திருவருட் பயனுரை, திருப்பரங்கிரிப் புராணம், குருஞான சம்பந்தர் மாலை என்பன. இவர் திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவருடன் கல்வி பயின்றவர் என்பர். அதிவீரராம பாண்டியன், வரதுங்க பாண்டிய னென்போர் இவருடைய மாணாக்கர் எனவும் கேட்கப்படுவதுண்டு.

நீலகேசி ஆசிரியர்: (7ஆம் நூ.) நீலகேசி என்னும் நூல் செய்த ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. குண்டல கேசியில் சைன குரு தோல்வியுற்ற நிகழ்ச்சி கூறப்படுவதைக் கண்டு வருந்திய அருகர் நீலகேசி என்னும் ஒரு நூல் இயற்றி னர். அதில் குண்டல கேசிக்கு உபதேசித்த அருக்க சந்திரனையும், குண்டல கேசியையும் அருகர் வாதித்து வென்றதாகக் கூறப்பட்டுள்ளது. நீலகேசி என்னும் நூல் நீலகேசித் தெருட்டு எனவும் வழங்கும். இது பாயிரத்தையும் அவை யடக்கத்தையும் முதலிற் பெற்று சுகத நிர்ணயச் சருக்கம், குண்டல கேசி வாதச் சருக்கம், அர்க சந்திரவாதச் சருக்கம், மொக்கலவாதச் சருக்கம், புத்தவாதச் சருக்கம், ஆசீவகவாதச்சருக்கம், சாங்கியவாதச் சருக்கம், வைசேடிகவாதச் சருக்கம், வேதவாதச் சருக்கம், பூதவ வாதச் சருக்கம் என்னும் பத்துச் சருக்கங்களை முறையே உடையது. இதற்கு நீலகேசி விருத்தி சமய திவாகரமெனப் பெயரிய ஓர் உரை உண்டு.

நீலாம்பிகை ஆம்மையார்: (-1945) இவர் மறைமலைஅடிகளின் புதல்வி; திருவிளங்கம் பிள்ளையவர்களின் மனைவி. இவர் செய்த நூல்கள்: ஆராய்ந் தெடுத்த 600 பழமொழிகளும் அவற்றுக்கேற்ற ஆங்கிலப் பழமொழிகளும் (1931), வடசொற் செந்தமிழ் அகரவரிசைச் சுருக்கம் (1939), பிளாரன்° நைட்டிங்கேல் அம்மையார், பட்டினத்தார் பாராட்டிய மூவர், (1935).

நெடுங்கழுத்துப் பரணர்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 291.

நெடும் பல்லியத்தனார்: (கி.மு. 350) இவர் முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். இவர் பாடியது: புறம். 64.

நெடும் பல்லியத்தை: (சங்ககாலம்) இவர் பெண்பாலினர் போலும்; இவர் பாடியது: குறு. 178, 203.

நெடு வெண்ணிலவினார்: (சங்ககாலம்) இவர் பெண்பாலினர் போலும்; இவர் பாடியது: குறு. 47

நெட்டிமையார்: (கி.மு. 350) நீண்ட இமையுடைமையால் இவருக்கு இப்பெயர் வந்ததெனச் சிலர் கூறுவர். இவர் பாடல்களால் பகைவர் அரண்களை அழித்து அவை இருந்த இடத்தைக் கழுதை பூட்டி உழுது பாழ்படுத்தும் வழக்கம் அக்காலத்திருந்த தென்பதும் முதுகுடுமி ஊன் வேள்வியல்லாத நெய்மலி ஆவுதி பொங்கும் வேள்வி வேட்டனன் என்பதும் புலப்படுகின்றன. இவர் பாடியன: புறம். 9, 12, 15.

நெய்தற் கார்க்கியார்: (சங்ககாலம்) இவர் பாடியன: குறு. 55 , 212.

நெய்தற் சாய்த்துய்த்த ஆவூர் கிழார்: (சங்ககாலம்) இவர் வேளாண் குலத்தினர். இவர் பாடியது: அகம். 112.

நெய்தற்றத்தனார்: (சங்ககாலம்) இவர் பெயர் குடிக்கிழார் மகனார் நெய்தற் றத்தனார், கொடியூர் கிழார் மகனார் நெய்தற்றத்தனார் எனவும் காணப்படு கின்றது. இவர் பாடியவை: அகம். 243; நற். 49, 130

நெல்லைநாத முதலியார்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்து இரு பாலையில் வாழ்ந்த புலவர். ஞாபகசக்திமிக்குடையவர். வண்ணை வைத்தியலிங்கச் செட்டியார் மீது வட தேயப் புலவர் ஒருவர் பாடிக் கொண்டு வந்த அந்தாதிப் பாடல்கள் நூற்றையும் அப்புலவர் செட்டியார் முன்னிலையில் படிக்க, அவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த நெல்லை நாதர், அப்பாடல்களைப் பழம் பாடல் எனக் கூறி அவற்றைத் தான் பாடி ஒப்பித்தார் என்னும் செய்தி வழங்குகின்றது.

நெல்லை நாதர்: (18ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டிலே வாழ்ந்தவர்; சிவராத்திரிப் புராணம் பாடியவர். இவருக்கு முன் வாழ்ந்த வரதபண்டிதர் செய்த சிவராத்திரி புராணம் ஒன்றும் உளது.

நெல்லையப்ப பிள்ளை: திருநெல்வேலித் தலபுராணம் (1869). இவர் பெயர் நெல்லையப்ப கவிராயர் எனவும் வழங்கும்.

நெற்குன்றங் கிழார் களப்பாளராசர்: (12ஆம் நூ.) இவர் முதலாம் குலோத்துங்கன் காலத்து விளங்கிய ஒரு புலவர், சோணாட்டுத் திருப்புகலூர்ச் சிவபிரான்மீது அந்தாதி நூலொன்று பாடியவர். (சா.த.க.ச.) களப்பாளர் என்பார் பண்டைக் காலம் முதல் தமிழ் நாட்டில் தமிழர்களாய் விளங்கியவர்.

நெற்குன்றவாண முதலியார்: புகலூரந்தாதி (அ.கை.)

நேமி சந்திராசிரியர்: (-?) இவர் சைன ஆசிரியருளொருவர்; சோமசாரம், இலப்தீசாரம் என்னும் நூல்களியற்றியவர்.

நேமி நாதர்: குணவீர பண்டிதர் பார்க்க.

நைநாரச்சாம் பிள்ளை: (18ஆம் நூ. முதற்) இவர் சரமோபாயம் என்னும் நூலியற்றியவர்.

நையாண்டிப் புலவர்: (19ஆம் நூ.) இவர் இராமச்சந்திர கவிராயர் காலத்தவர்; தொண்டை நாட்டவர். பள்ளி கொண்டான் என்னும் பரதவன் மீது “வள்ளி கொண்டான் மயிலேறிக் கொண்டான் மதிபோலுமலை, வெள்ளி கொண்டான் விடையேறிக் கொண்டான் விண்ணவர்க் கமுதம், துள்ளிக் கொண்டான் சுபசோபனஞ் சேர், பள்ளி கொண்டான் புகழேறிக் கொண்டானென்று பார்க்க வென்றே” என்று புகழ் பாடிப் பரிசு பெற்றவர்.

நைல்° (Niles): சிலுவையின் உபதேசம் (யாழ்ப்பாணம் 1893).

நொச்சி நியமங் கிழார்: (சங்ககாலம்) நொச்சி நியமம் ஓர் ஊர். வேங்கை மலரைக் கொய்யக் குறமகளிர் புலி புலி என்று கூற ஆடவர் வில்லுங் கையுமாகப் புலி காக்க வந்து வெட்கிப் போவதனை இவர் சுவை பயக்கப் பாடியுள்ளார். இவர் பாடியன: அகம். 52; நற். 17, 208, 209; புறம். 293.

நோய் பாடியார்: (சங்ககாலம்) இவர் நடுகற்குப் பீலிசூட்டும் வழக்கினையும் நடுகல்லிடத்தவன் பிடித்த வேல் முதலிய கருவிகளை அங்கு சார்த்தும் வழக்கினையும் வருணித்துள்ளார். இவர் பாடியது: அகம். 67.

பகடாலு நரசிம்மலு நாயுடு: (20ஆம் நூ.) இவர் கொங்கு நாட்டினர்; கலாநிதி ஆசிரியர்; தென்னிந்திய சரித்திரம், பலிசவாரு புராணம் முதலிய நூல்கள் இயற்றியவர் (கொ.பு.)

பகழிக் கூத்தர்: (18ஆம் நூ. முற்.) இவர் இராமநாத புரம் பிரிவைச் சேர்ந்த சன்னியாசிக் கிராமத்தில் வைணவ குடும்பத்தில் பிறந்து பின் சைவ சமயத்தைத் தழுவியவர். இவர் இயற்றிய நூல் திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்.

பக்குடுக்கை நன்கணியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 194.

பங்களராயன்: இவர் பெயர் புதுக்கோட்டைச் சீமை திருமெய்யம் தாலுகா காரை யூர் மாரியம்மன் கோயிலில் பொறிக்கப்பட்ட வெண்பா ஒன்றில் காணப்படு கின்றது. (சா.த.க.ச.)

படிக்காசுப் புலவர்: (1686-1723) இவர் தொண்டை நாட்டில் தென் களத்தூரில் செங்குந்தர் குடியிற் பிறந்தவர்; இலக்கண விளக்கம் செய்த வைத்திய நாத தேசிகர் மாணவர். இவர் பாடல்கள் விளங்குதற் கெளிமையும் சுவையும் உடையன. இவர் ஒரு முறை வல்ல நகர் காளத்தி பூபதியைக் கண்டு “ பெற்றா ளொரு பிள்ளை என் மனையாட்டியப் பிள்ளைக்குப் பால், பற்றாது கஞ்சி குடிக்குந்தரமல்ல பாலிரக்கச், சிற்றாளுமில்லை யிவ்வெல்லா வருத்தமுந் தீர வொரு, கற்றாதரவல்லையோவல்லை மாநகர்க் காளத்தியே” என்று பாடிப் பசுவும் கன்றும் பெற்றார். மாவண்டூரில் கத்தூரி முதலியார் வேண்ட இவர் தொண்டை மண்டல சதகம் பாடினார். இதனை “காவை வென்றிடு கத்தூரி கண் மணிக்கறுப்பனென்று, மாவையம் பதியான் றொண்டை மண்டல சதகங் கேட்டு, நாவலர் புகழ்ந்து மெச்ச நவநிதி பொழிந்து நன்றாய், பூவுலகெங்கும் போற்றப் புகழ்நிலை நிறுத்தினானே” என்னும் பாடல் விளக்கும். இவர் பாடிய நூல்கள்: தொண்டை மண்டல சதகம், புள்ளிருக்கும் வேளூர்க் கலம்பகம், சிவந்தெழுந்த பல்லவனுலா, சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத்தமிழ், உமை பாகர் பதிகம், பாம்பலங்காரர் வருக்கக்கோவை. இவர் செய்யுட் பாடுந் திறத்தைப் புகழ்ந்து பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் பாடியுள்ளது வருமாறு: “மட்டாருந் தென் களந்தை படிக் காசனுரைத்த தமிழ் வரைந்த வேட்டைப், பட்டாலே சூழ்ந்தாலு மூவுலகும் பரிமளிக்கும் பரிந்த வேட்டைத், தொட்டாலுங்கை மணக்குஞ் சொன்னாலும் வாய்மணக்குந் துய்ய சேற்றில், நட்டாலுந் தமிழ் பயிராய் விளைந்திடுமே பாட்டினது நளினந்தானே”. இவர் இரகுநாத சேதுபதி, சீதக்காதி (பெரிய தம்பி மரக்காயர்) முதலியோரைப் பாடிய பாடல்களுமுண்டு. தண்டலையார் சதகம் இவர் செய்ததெனவும் வழங்கும்; அதனைச் செய்தவர் சாந்தலிங்க கவிராயராவர்.

படுமரத்து மோசி கீரனார்: (சங்ககாலம்) இவர் பெயர் படுமரத்து மொழி கீரனார். படுமாற்று மோசி கீரனார் என்றும் காணப்படுகின்றது. இவர் பாடியன: குறு. 33, 75, 383.

படுமாற்றூர் மோசிகீரன் கொற்றனார்: (சங்க காலம்) இவர் பாடியது: குறு. 376.

பட்டர் (-): இவர் பகவத் கீதை என்னும் வடமொழி நூலைத் தமிழில் மொழி பெயர்த்தவர்.

பட்டர் (கூரத்தாழ்வார் மகன்): பட்டர் பத்தர்த்தம், கைசிக புராணவுரை, மைவண்ணனார் நறுங்குஞ்சி உரை. அட்டசுலோகி வியாக்கியானம். (ச.கை.)

பட்டர்பிரான் சீயர்: அந்திமோபாய நிட்டை.*

பட்டினத்தடிகள்: (10ஆம் நூ.) இவர் பெயர் திருவேங்கட செட்டியார். இவர் திருவெண்காடர் எனவும் அறியப்படுவர். இவர் உயர்ந்த செல்வத்திற் பிறந்து செல்வ நிலையாமை, யாக்கை நிலையாமைகளை உணர்ந்து உலகைத் துறந்த வர். இவர் பிறப்பிடம் காவிரிப்பூம்பட்டினம். இவர் திருவிடை மருதூரில் பத்திரகிரியாரோடு சில காலந் தங்கிப் பின் திருவொற்றியூரையடைந்து இறைவன் திருவடி நிழலை அடைந்தவர். இவர் பாடியருளிய கோயின் நான் மணிமாலை, திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும் மணிக் கோவை, திருவே கம்ப முடையார் திருவந்தாதி, திருவொற்றியூர் ஒருபா ஒருபஃது என்பவை பதினோராந் திருமுறையிலுள்ளவை. “பிற்காலத்திலே பட்டிணத்துப் பிள்ளையார் பாடல்கள் என்று சொல்லப்படும் திருவேகம்ப மாலை முதலிய சிறு காப்பியங்கள் இவராலியற்றப்பட்டனவென்று தோன்ற வில்லை; இவராலியற்றப் பட்டிருக்குமாயின் அவை பதினொராந் திருமுறை யிற் சேர்க்கப்பட்டிருக்கும். ஆதலால் அவர் பெயருடைய பிறிதொருவரால் அவை இயற்றப்பட்டிருத்தல் வேண்டும்.” (இலக்கிய வரலாறு. கா.சு.) இப் பாடல்கள் 15ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டன வாகாவெனக் கூறுவர் திரு. தெ.பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்கள்.

பணவிடுதூது ஆசிரியர்: (17ஆம் நூ.) பணவிடுதூது இயற்றிய புலவரின் பெயர் அறியப்படவில்லை. இது மாதைத் திருவேங்கடநாதர் மீது பாடப்பட்டது. மாதைத் திருவேங்கடநாதரே குட்டித் தொல்காப்பியமென விளங்கும் இலக்கண விளக்கம் என்னும் ஐந்திலக்கணம் கூறும் நூலை வைத்தியநாத நாவலரைக் கொண்டு செய்வித்தவராவர். பணவிடுதூது திருவேங்கடநாத ருடைய இரண்டாவது குமாரர் வேங்கடேசையர்மேற் பாடப்பட்டதென்பர் சோமசுந்தர தேசிகர்.

பண்டிதராசர்: (18ஆம் நூ.) இவர் திருகோணமலையில் திருக்கோணே சராலயத்தில் அருச்சகரா யிருந்தவர்; வடமொழி, தென்மொழி வல்லவர். இவர் தக்கண கைலாச புராணம் என்னும் கோணாசல புராணமியற்றியவர். இதில் 635 பாடல்களுண்டு. இவர் தமது குருவணக்கத்தில் மயில் வாகனப் புலவரைக் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிதர் சவரிராய பிள்ளை: (20ஆம் நூ.) இவர் திரிசிரபுரம் சென்யோசைப்புக் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடத்தியவர். தமிழர் பழமை (Tamilian antiquary) என்னும் இதழின் ஆசிரியராயிருந்தவர். தமிழர் ஆரியர் கலப்பு, சங்ககாலம் போன்ற அரிய கட்டுரைகள் எழுதியவர். இவர் கத்தோலிக்க மதத்தினர்; தமிழைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்களுள் தலை சிறந்தவர்.

பதஞ்சலி: பதஞ்சலி மதிவெண்பா, பதஞ்சலி பாடல்கள் 50, பதஞ்சலி வாதத்திறவுகோல் 20.*

பதடிவைகலார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 323.

பதுமனார்: (9ஆம் நூ-?) இவர் நாலடியாருக்குப் பாலியல் அதிகாரம் வகுத்து உரை இயற்றியவர். நாலடியார் சைன முனிவர்களால் இயற்றப்பட்டது. கடவுள் வாழ்த்து உட்பட 401-வெண்பாக்களையுடையது. பதுமனாரென்பவர் திருக் குறளிற் போல இதன் பொருளை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாற் படுத்தி ஒவ்வொரு பொருளை வற்புறுத்துவனவாகிய பப்பத்துப் பாடல் களைத் தனியே தொகுத்து நாற்பது அதிகாரமாகப் பகுத்தனர். இதற்குப் பதும னாரும் வேறுசிலரும் உரை செய்திருக்கின்றனர்.
பத்திரகிரியார்: (10ஆம் நூ.) இவர் பத்திரகிரி அரசர் எனப்படுவர். பட்டினத் தடிகள் அவ்வூர்க் காட்டுப் பிள்ளையார் கோயிலில் நிட்டை கூடியிருக்க, இவ்வரசர் மாளிகையில் திருடப் போகும் கள்வர் எமக்குப் பொருள் அகப்படின் ஆபரணஞ் சாத்துகிறோ மென்றபடி கள்வர் பொருள் கொண்டு மீளுகையில் ஆபரணஞ் சாத்த, அது நிட்டை கூடியிருந்த பட்டினத்தடிகள் கழுத்தில் விழுந்தது. கழுத்தில் பூண்ட முத்தாரத்துடன் வெளிவந்த பட்டினத் தடிகளைக் காவலர் கள்வனென்று அரசரிடம் விட அரசர் அடிகளைக் கழுவி லேற்றக் கட்டளையிட்டுத் தாமும் தொடர்ந்து கழுமரத்தையடைந்தனர். பட்டினத்தடிகள் கடவுளை நினைந்து கழுமரத்தை நோக்க மரம் பற்றியது. அரசர் துணுக்குற்றுப் பணிந்து அடிமை பூண்டு அடிகள் கட்டளைப்படி துறவு பூண்டு திருவாரூரடைந்து பிச்சை ஏற்று ஆசாரியருக்களித்து தம்மையடைந்த நாய்க்கும் சிறிது அன்னமளித்து வந்தனர். இவ்வகை யிருக்கையில் சிவபெருமான் சித்தவுருக் கொண்டு பட்டனத்தடிகளிடம் பிச்சைக்குச் செல்ல அடிகள் பத்திரகிரி சமுசாரி அவனிடம் செல்க என்றபடி அரசனிடம் எழுந்தருளி அடிகள் கூறிய சொற்களைக் கூறி யருளினர். அரசர் இவ்வோடும் நாயுமல்லவோ என்னைச் சமுசாரியாக்கினவென்று ஓட்டை நாயின்மீது எறிந்தனர். நாய் இறந்து காசிராசன் மகளாகப் பிறந்து தன்னை ஆசாரியரிடங்காட்டி அவர் அருளினால் சோதியிற் கலந்தது. இவ்வாறு இவர் வரலாறு வழங்குகின்றது. இவர் பாடிய நூல் பத்திரகிரியார் புலம்பல். “இப் பாடல்கள் சித்தர் கொள்கையைச் சேர்ந்தனவாக விருக்கலாம். பத்திரகிரியார் பட்டினத்தாரின் சீடர் எனப்படுகின்றார். பதினோராந் திருமுறையிற் காணப் படும் பாடல்கள் செய்த பட்டினத்தார் 10ஆம் நூற்றாண்டினராவர். இன்று பட்டினத்தார் பாடல் என வழங்குவன 15ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டன வாயிருக்க முடியாது. அவை சித்தர் பாடல் வரிசையைச் சேர்ந்தனவாகக் கொள்ளப்படலாம்” (Tamil Plutarch - குறிப்பு.)

பத்மநாப ஐயர், கோயமுத்தூர்: தேடச் சிறந்த தெரிசனம் (சைவப் பாடல்கள்). (1894)

பரகால சீயர் (பெரியவர்): திருவாய்மொழி 18000 படிஉரை.*

பரகால சுவாமி (பெரியவர்): திருவிருத்த உரை.*

பரசுராமன்: சர்வார்த்தச பூடணம்.*

பரசுராம கவிராயர்: (19ஆம் நூ.) இவர் சென்னையைச் சேர்ந்த புரசை வாக்கத்தில் வாழ்ந்தவர்; சிறுத்தொண்டர் புராணம் பாடியவர்.

பரஞ்சோதி முனிவர்: (16ஆம் நூ.) இவர் திருமறைக்காட்டில் சைவ வேளாள குலத்திற் பிறந்து மதுரையிலுள்ள மடத்தில் தம்பிரானாக விருந்தவர். இவர் நிரம்ப வழகியருடன் கல்வி பயின்றவர் என்பர். இவர் வேதாரணியமான் மியம் என்னும் வடமொழி நூலை மொழி பெயர்த்து வேதாரணிய புராணம் பாடினர்; திருவிளையாடற் புராணம் (68 படலமும் 3,363 பாடல்களும்), மதுரைப் பதிற்றுப்பத்தந்தாதி, திருவிளையாடற் போற்றிக் கலிவெண்பா முதலிய நூல்களியற்றினர்.

பரஞ்சோதியார்: (16ஆம் நூ.) இவர் சிதம்பரத்திலே சைவ வேளாளர் குலத்தில் தோன்றியவர். இவரது தந்தை புராணத் திருமலை நாதர் என்பவராவர். இவர் இயற்றிய நூல்கள் சிதம்பரப் பாட்டியல், மதுரையுலா என்பன. சிதம்பரப்பாட் டியல் தனி நிலையும் தொடர் நிலையுமான செய்யுள்களை விளக்கிக் கூறுவது. அது உறுப்பியல், செய்யுளியல், ஒழிபியல், பொருளியல், மரபியல் என்று
ஐந்து உறுப்புகளை உடையது. இவர் 16ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் விளங்கியவர்.

பரணதேவ நாயனார்: (10ஆம் நூ.) இவர் பதினோராம் திருமுறையிலுள்ள சிவபெருமான் திருவந்தாதி பாடியவர். இவர் சங்ககாலப் பரணரின் வேறாவர்.

பரணர்: (கி.மு. 180-) இவர் கடல் பிறங்கோட்டிய வேல்கெழுகுட்டுவனைப் பதிற்றுப் பத்து ஐந்தாம் பத்திற்பாடியுள்ளார். இவர் அவனைப் பாடி உம்பற் காட்டு வருவாயையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும் பரிசிலாகப் பெற்றனர். இவர் கபிலருக்கு முற்பட்டவர். பரணி நாளிற் பிறந்தமையால் இவருக்குப் பரணர் என்னும் பெயர் இடப்பட்டதென்று சிலர் கூறுவர். இவர் சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் புகழ்ந்து பாடியவர் (புறம்.4.); நெடுஞ்சேரலாதனும் பெருவிறற்கிள்ளியும் போர்புரிந்து மடிந்த தனையும், போர்க்களத்தின் அழிவையும் நோக்கி இரங்கிக் கூறியவர் (புறம். 63); வையாவிக் கோப்பெரும் பேகனை பாணாற்றுப்படையும் இயன் மொழி யும் பாடி உவப்பித்தவர் (புறம் 141, 142). “மாலுங்குறளாய்” என்னும் திருவள் ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம் 6. 62, 76, 116, 122, 125, 135, 142, 148, 152, 162, 178, 181, 186, 196, 198, 208, 212, 222, 226, 236, 246, 258, 262, 266, 276, 322, 326, 356, 367, 372, 376, 386, 396; குறு. 19, 24, 36, 60, 73, 89, 120, 128, 165, 199, 258, 292, 298, 328, 393, 399; நற். 6, 100, 201, 247, 260, 265, 270, 280, 300, 310, 350, 356; பதி 41-50; புறம். 4, 63, 141, 142, 144, 145, 336, 341, 343, 348, 352, 354, 369. தொல்பரணர் பார்க்க. பன்னிரு பாட்டியலின் பகுதி இவர் செய்ததாகவும் வழங்கும்.

“இம்மூன்று புலவர்களும் (பரணர், கபிலர், நக்கீரர்) பாடியனவாகச் சில செய்யுட்கள் பதினோராந் திருமுறையிற் காணப்படுகின்றன. அவை அவர்கள் பாடியன வென்பது பலரால் மறுக்கப்பட்டுள்ளது. அங்ஙனம் மறுப்போர் அவர்கள் செய்தனவாக எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட செய்யுட்களின் சொன்னோக்கு, பொருணோக்குகளை இவற்றோடு ஒப்பிட்டு வேறுபாடு காட்டுகின்றனர்” (தமிழ் வரலாறு - சீனிவாசபிள்ளை.)

பரத சூடாமணி: (-?) இவர் செய்த நூல் தாள சமுத்திரம். (தமிழ்லெக்சிகன்.)

பரமானந்த தேவர்: ஆனந்த இரகசியம்.*

பரமானந்த முனிவர்: உத்தர போதம் (ச.கை)

பரமேசுவர ஐயர். சு.: சங்கீத சாத்திரம். (சென்னை 1905.)

பரமேசுவரப் புலவர்: (16ஆம் நூ.) இவர் எல்லப்ப நயினார் காலத்தவர். சேறை ஆசுகவிராயர் வண்ணப் பிரபந்தமொன்று அண்ணாமலைநாதர்மேற் பாடி அத்தலத்தில் அரங்கேற்றவந்தகாலை அத்தலத்தார் அவரைச் சிவிகையில் வைத்து ஊர்வலஞ் செய்வித்தனரென்றும் அதனைப் பொருட்படுத்தாது மூலையிலிருந்த எல்லப்ப நயினாரைப் பரமேச்சுவர கவிராயர் இழித்துப் பாடினரென்றும், அதற்கு வெகுண்டு எல்லப்ப நயினார் வசை பாடின ரென்றும் தமிழ் நாலவர் சரிதை கூறும்.

பராசர பட்டர்: (13ஆம் நூ.) இவர் கூரத்தாழ்வார் குமாரர்; சகத்திரநாமம், சீரங்கசத்வம் முதலியன பாடியவர்.

பரிதியார்: (13ஆம் நூ?) இவர் திருக்குறள் உரையாசிரியருள் ஒருவர். இவர் பருதியார் எனவும் வழங்கப்பெறுகின்றார். “தருமர் மணக்குடவர்” என்ற பாடலில் தருமர் என்ற எதுகை நோக்கிப் பருதி என்றிருத்தலே பொருத்தம் போலும் என்று எண்ணுவர் சிலர். பருதி பரிதி இரண்டுமே சூரியனை உணர்த்தும் பெயர்கள். இவர் பழுத்த சைவ சித்தாந்தி என்பதைப் பல இடங் களில் அறியலாம். “நற்றாள்” என்பதற்கு “அறிவாளனான சிவன்சீபாதம்” என்றும் “இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு இருவினை சேரா” என்பதற்கு “மும்மலவித்தாகிய பாவமானது சிவகீர்த்தி பாராட்டு வானிடத்து இல்லை” என்றும் “அறவாழியந்தணன்’ பரமேசுவரன் என்றும் “மெய் யுணர்வு இல்லாதார்க்கு” என்பதற்கு மெய்யுணர்வாகிய சிவஞானம் அறியா விடில் என்றும் இடமிடங்கள் தோறும் சிவனையே குறித்துச் செல்கின்றார்.” (திருக்குறள் உரை வளம்) இவருடைய காலம் முதலியன அறியக்கூட வில்லை. இவருரையில் சில பகுதிகள் அச்சில் வெளிவந்துள்ளன.

பரிமாணனார்: (-?) இவர் ஓர் இலக்கண நூலாசிரியர். (நன்னூர் மயிலை நாதருரை). யாப்பருங்கலவிருத்தியில் இவர் சூத்திரங்கள் மேற்கோளாக வந்துள்ளன. “என்றார் பரிமாணனார். அவர் இயைபுத்தொடைக்கு விகற்பம் வேண்டிற்றிலர்” (யா.வி.ப. 117.)

பரிபூரணனார், கானூர் விருத்தாசலம்: பரிபூரண சித்தி.*

பரிமேலழகர்: (13ஆம் நூ.) இவர் காஞ்சிரபுரத்தில் உலகளந்த பெருமாள் கோயிலில் பூசகராயிருந்த வைணவப் பிராமணர். உமாபதி சிவம் செய்த தாகச் சொல்லப்படும் ஒரு பாடலில் “தெள்ளு பரிமேலழகர் செய்தவுரை” என வருதலாலும், உமாபதி சிவம் 1313இல் சங்கற்ப நிராகரணம் என்னும் நூல் செய்தமையாலும் இவர் 13ஆம் நூற்றாண்டில் அல்லது அதன் முன் இருந்தவ ராகக் கருதப்படுவர். பரிமேலழகர் 11ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆட்சி புரிந்த போசன் காலத்துக்குப் பிற்பட்டவரென்பது அவர் திருக்குறளுக்குச் செய்த உரையைக் கொண்டு அறியப்படுகின்றது. பரிமேலழகர் கி.பி. 1272லும் சேனாவரையர் 1276-லும் வாழ்ந்தவராவர் எனக் கூறும் சாசன தமிழ்க்கவி சரிதம். இவர் திருக்குறளுக்கும் பரிபாடலுக்கும் உரை செய்துள்ளார். திரு முருகாற்றுப்படை உரை ஒன்று இவர் பெயரால் வழங்குகின்றது. இது இவர் செய்ததன்று என்பது அறிஞர் கருத்து. இவ்வுரையைப் பழைய உரை என உ.வே. சாமிநாதையரவர்கள் ஆண்டுள்ளார்கள். “அரிமேலழகு றூஉமன் பமைநெஞ்சப், பரிமேலழகன் பகர்ந்தான் - விரிவுரைமூ, தக்கீரிஞ்ஞான்று தனி முருகாற்றுப்படையாம், நக்கீர னல்ல கவிக்கு” என்னும் பழைய வெண்பாவொன்று பரிமேலழகர் திருமுருகாற்றுப்படைக்கு உரைசெய்தா ரெனக் கூறுகின்றது. பரிபாடலில் கந்தி என்பவர் எழுதிச் சேர்த்த இடைச் செருகல்களைக் களைந்து இவர் அந்நூற்கு உரையெழுதினா ரென்பதை, “கண்ணுதற் கடவுளண்ணலங் குறுமுனி, முனைவேன் முருக னென விவர் முதலிய, திருந்து மொழிப் புலவரருந்தமிழாய்ந்த, சங்கமென்னுந் துங்கமலி கடலுளரிதி னெழுந்த பரிபாட்டமுதம், அரசுநிலை திரீஇய வளப்பருங்காலங், கோதில் சொன் மகணோத கக்கிடத்தலிற், பாடிய சான்றவர் பீடு நன்குணர, மிகைபடு பொருளை நகைபடு புன்சொலிற், றந்திடை மடுத்த கந்திதன் பிழைப் பும், எழுதினர் பிழைப்பு மெழுத் துருவொக்கும், பகுதியின் வந்த பாடகர் பிழைப்பும், ஒருங்குடன் கிடந்த வொவ்வாப் பாடமும், திருந்திய காட்சியோர் செவிமுதல் வெதுப்பலிற், சிற்றறிவினர்க்குந் தெற் றெனத் தோன்ற, மதியிற் றகைப்பு விதியுளியகற்றி, யெல்லையில் சிறப்பிற் றொல்லோர் பாடிய, வணிதிகழ் பாடத்துத் துணிதரு பொருளைச், சுருங்கிய வுரையின் விளங்கக் காட்டினன், நீணிலங் கடந்தோன்றா டொழுமரபிற், பரிமேலழகனுரிமை யினுணர்ந்தே” என்பதனாலறியவரும்.

பரூஉமோவாய்ப் பதுமனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 101.

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்: (18ஆம் நூ. முற்.) இவர் தொண்டை நாட்டில் வாழ்ந்தவர். சொக்கர்மீதும் மீனாட்சியம்மைமீதும் பல பாடல்கள் புனைந்தவர்; சிவதான், செங்குன்றறையூரன், வல்லைக்காளத்தி முதலியார் முதலியோரைப் புகழ்ந்து பாடியவர். இவர் படிக்காசுப் புலவரைப் புகழ்ந்து பாடியிருக்கின்றார். இவரியற்றிய நூல் அழகர் கிள்ளை விடுதூது.

பலராம ஐயர்: (20ஆம் நூ.) இவர் கோவை, நாட்டினர், யவனாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பாடியவர். (கொ.பு.)

பல்காப்பியனார்: (-?) இவர் பல்காப்பியமென்னும் இலக்கண நூல் இயற்றியவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் இவர் நூலை எடுத்தாண்டிருக்கின்றனர்.

பல்காயனார்: (-?) இவர் பழைய இலக்கண நூலாசிரியருள் ஒருவர். “`தூக்கும் பாட்டும் பாவும் மொன்றென, நோக்கிற் றென்ப நுணங்கி யோரே’ என்றார் பல்காயனாராகலானும்” (யா.வி.ப. 19) பன்னிரு பாட்டியலின் பகுதி இவர் செய்த பாட்டியலிலிருந்து எடுக்கப்பட்டதெனக் கொள்ளப்படும்.

பவணந்தி முனிவர்: (13ஆம் நூ.) சைன முனிவராகிய இவர் தொண்டைநாட்டுச் சனகாதிபுரத்தில் சன்மதி முனிவரின் புதல்வராவர். மூன்றாங் குலோத்துங்கன் காலத்தவனான (1178-1216) சீயகங்கன் என்னும் (மைசூர் அரசன் மரபைச் சார்ந்தவனாய் கோலாரென்னுமிடத்தில் ஆட்சிசெய்த) சிற்றரசன் வேண்டு கோட்கிணங்கி இவர் நன்னூல் என்னும் இலக்கணஞ் செய்தார். இது 5 இலக்கணமும் நிரம்பியது. இப்பொழுது எழுத்தும் சொல்லுமே இருக்கின் றன. இதற்கு மயிலைநாதர், ஆண்டிப்புலவர், சங்கர நமச்சிவாயர், ஆறுமுக நாவலர், இராமனுசக் கவிராயர் முதலானோர் உரை செய்தனர்.

பவானிப் புலவர், பாலக்காடு: அப்துல் றகுமான் அறபிச் சதகம். (1895)

பழநி உபாத்தியாயர்: (20ஆம் நூ.) இவர் குருகூரினர்; தென்சேரிமாலை பாடியவர். (கொ.பு.)

பழநி நாவலர்: (20ஆம் நூ.) இவர் ஏரகாம்பட்டி என்னுமூரினர்; பல தனிப் பாடல்கள் பாடியவர். (கொ.பு.)

பழநிசாமிப் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் தடாகப் பிறகு சுஞ்சுவாடி என்னு மூரினர்; முக்கூட்டுப் பள்ளு என்னும் நூல் இயற்றியவர் (கொ.பு.)

பழநி மாமுனிவர்: பஞ்சமலக் கழற்சி.*

பழநியப்ப ஐயர், செரனானந்தபுரம்: (பழனி யாண்டவர்) பாடற்றிரட்டு. (1898.)

பழநியப்பன் சேர்வைக்காரர்: (17ஆம் நூ.) இவர் நொச்சியூரிலிருந்தவர்; திருவுசாத்தான புராணம் பாடியவர்.

பறநாட்டுப் பெருங்கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 323.

பனம்பாரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 52. பனம்பாரனார் சூத்திரம் என இலக்கண நூலொன்று யாப்பருங்கல விருத்தியி லாளப்பட்டுள்ளது. “அகத்திணையல் வழியாங்க தன் மருங்கின், வகுத்தன சொற்சீர் வஞ்சி யொடு மயங்கும்” என்றார் பனம்பாரனார். (யா.வி.ப. 118). இலக்கணஞ் செய்த பனம்பாரனார் எவரோ தெரியவில்லை. தொல்காப்பியச் சிறப்புப் பாயிரம் செய்தவரும் பனம்பாரனாராவர். பனம்பாரனார் என்னும் பெயருடன் பலர் இருந்தனராகலாம்.

பன்னிரு இருடிகள்: தத்துவக்கூறு (நந்திதேவர் கட்டளை).

பன்னிரு படலமுடையார்: (-?) பன்னிருபடல மென்னும் புறப்பொருள் இலக் கண நூல் அகத்தியர் மாணவர் பன்னிருவரும் ஒவ்வோர் படலமாகச் செய்த பன்னிரு படலங்களை யுடையதாதலின் இது பன்னிரு படலம் எனப்பட்டது. புறப்பொருள் வெண்பாமாலை பன்னிரு படலத்தைத் தழுவிச் செய்யப் பட்டது. “துன்னருஞ்சீர்த்தித் தொல்காப்பியன் முதல், பன்னிரு புலவரும் பாங்குறப் பயந்த” என்பது புறப்பொருள் வெண்பாமாலைப் பாயிரம். பன்னிரு படலம் அகத்தியர் மாணவரால் செய்யப்பட்டதென்பதில் ஐயுறவிருந்ததாக இளம் பூரணர் தொல்காப்பியப் புறத்திணை இயல் உரையிற்கூறியிருப்பது கொண்டு புலனாகும். அகத்தியர் மாணவர் பன்னிருவராவார்: அதங்கொட்டா சான், தொல்காப்பியர், துராலிங்கர், செம்பூட்சேய், வையாபிகர், வாய்ப்பியர், பனம்பாரர், கழாரம்பர், அவிநயர், காக்கைபாடினியார், நத்தத்தர், வாமனர் என்போர் பனம்பாரர், வாய்ப்பியர், அவிநயர், காக்கை பாடினியார், நத்தத்தர், என்போர் பெயரால் வழங்கும் இலக்கணச் சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியிற் காணப்படுகின்றன. யாப்பருங்கல விருத்தியில் பன்னிருபடலத்தி லிருந்து பல்லிடங்களில் மேற்கோள்கள் எடுத்தாளப்பட்டுள்ளன.

பன்னிரு பாட்டியலுடையார்: (கி.பி. 12ஆம் நூ.?) இந்நூல் பல புலவர்கள் இயற்றிய சூத்திரங்களின் திரட்டு எனப்படுகின்றது. அப்புலவர்களாவார்: பொய்கையார், பரணர், இந்திர காளியார், அவிநயனார், அகத்தியர், கல்லாடர், கபிலர், சேந்தம்பூதனார், கோவூர்க்கிழார், சீத்தலையார், மாபூதனார் , பல்காய னார், பெருங்குன்றூர்க் கிழார் என்போர். இந்நூல் மிகப் பழமையுடைய தன் றெனக் கருதப்படுகின்றது. இச் சூத்திரங்களை இப்புலவர்களே செய்தார்கள் என்பதும் ஐயத்துக்கிடம். பிற்காலத்து ஒருவர் இப்புலவர்கள் பெயரைக் குறித்திருக்கலாம்.

பன்னாடுதத்த மாறன்வழுதி: (கி.பி. 225) இவன், “குறுந்தொகை 270ஆம் பாட்டினை முல்லைத்திணையிற் பாடியுள்ளான். இவனே நற்றிணையிற் பாடலியற்றிய சீத்தலைச் சாத்தனார் காலத்தவனான நெடுஞ்செழியன்; வெற்றிவேற் செழியனுக்குப் பின்னிருந்து நற்றிணை தொகுப்பித்தவனாவன்” (இலக்கிய வரலாறு. கா.சு.)

பாகை அழகப்பன்: (17ஆம் நூ.) இவர் வட மலையப்ப பிள்ளை மீது வடமலை வெண்பாப் பாடியவர். இவர் ஏகசந்த கிராகி எனவும் அறியப்பட்டாரெனத் தெரிகிறது.

பாக்கிக்கோ கபிரியல் (Pacheco): தேவப் பிரசையின் திருக்கதை. (மானானம் 1880.)

பாக்கிக்கோ பிரான்சி° (Pacheco): சந்தானாள் சமுக விலாசக் கும்மி. (யாழ்ப்பாணம் 1855.)

பாஞ்சால நாதர்: நாலு மந்திரி கதை. (ச.கை.)

பாடலனார்: (-?) இவர் பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர். “`நுதலிப் புகுத லோத்து முறைவைத்தல், தொகுத்துக் காட்டல், வகுத்துக் காட்டல், முடிவிடங் கூறல், முடித்துக் காட்டல், தானெடுத்து மொழிதல், பிறன் கோட் கூறல், சொற் பொருள் விரித்த லிரட்டுற மொழிதல், ஏதுவின் முடித்தலெடுத்த மொழியி னெய்த வைத்தலின்ன தல்ல, திதுவென மொழித றன்னின முடித்தல், எஞ்சிய சொல்லி னெய்தக் கூறன், மாட்டெறிந் தொழிதல், பிறநூன் முடிந்தது, தானுடம் படுதறன்குறி வழக்க, மிகவெடுத் துரைத்த லிறந்தது விலக்கல், எதிரது போற்றன் முன்மேற் கோடல், பின்னது நிறுத்த லெடுத்துக் காட்டல், முடிந்தது முடித்தல் சொல்லின முடிவின், அப்பொருள் முடித்த றொடர் சொற் புணர்த்தல், யாப் புறுத் தமைத்தலுரைத்து மென்றல், விகற்பத்து முடித்த றொகுத்துடன் முடித் தல், ஒருதலை துணித லுய்த்துணர வைத்தல்’ என இவை பாடலனாருரை” (யா.வி.பி. 405)
பாட்டியன் மரபுடையார்: (-?) இவர் பாட்டியன் மரபு என்னும் யாப்பிலக்கணநூல் செய்த புலவர்; இவர் இயற்பெயர் யாதெனத்தெரியவில்லை. “ஆரிடச் செய்யுள் பாடுதற்குரியோர், கற்றோ ரறியா வறிவுமிக் குடையோர், மூவகைக் காலப் பண்பு முறையுணரு, மாற்றல் சான்ற வருந்தவத் தோரே’ என்று சொன்னார் பாட்டியன் மரபுடையாராகவின்” (யா.வி.ப. 357.)

பாணெல் (Parnell): மனங்குழம்பிய மாதவத்தோன். (தஞ்சாவூர் 1904.)

பாண்டரங் கண்ணனார்: (கி.மு. 50) இவர் இராச சூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப் பாடியுள்ளார். புறம். 16

பாண்டி கவிராசர்: (16ஆம் நூ.) புதுக்கோட்டைச் சீமை ராங்கிய மென்ற ஊரிலுள்ள சிவாலயத்தமைந்த சாசன மொன்றினால் புலவர் பாண்டி கவிராசர் வீர வெண்பா மாலை பாடினாரென்னும் செய்தி அறிய வருகின்றது. இவர் 16ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் விளங்கியவர். (சா.த.க.ச.)

பாண்டித் துரைத் தேவர்: (1867-1911) இவர் பொன்னுச்சாமித் தேவரின் மகன்; இப்போதுள்ள மதுரைத் தமிழ்ச் சங்கத்தை நிலை நாட்டியவர். இவர் செய்த தொகை நூல்கள் சைவமஞ்சரி, துதிமஞ்சரி, பன்னூற்றிரட்டு முதலியன; பிற நூல்கள் சிவஞான யோகிகள் இரட்டை மணிமாலை, இராசராசேசுவரி பதிகம் என்பன.

பாண்டிப் பெருமாள்: (17ஆம் நூ.) இவர் சிவஞான போதத்துக்கு ஓர் உரை செய்தவர்; திருநெல்வேலியினர்.

பாண்டியன் (Thomas): ஈசாக்கு ஆபிரகாம் ஐயரவர்களின் சீவிய சரித்திரம். (பாளையங்கோட்டை 1906.).

பாண்டியன் அறிவுடை நம்பி: (கி.மு. 25) இவன் அரசன்; புதல்வர்களாலுண் டாகும் இன்பம், இம்மை இன்பம் எல்லாவற்றிலும் சிறந்ததென்பதை “படைப்புப் பலபடைத்து” என்னும் பாடலால் நன்கு விளக்கியிருக்கின்றான். இவன் காலத்துப் புலவர் பிசிராந்தையார். இவர் பாடியது: புறம்188

பாண்டியன் ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன்: (கி.பி. 2ஆம் நூ.) இவன், கற்றோர்பால் மிக்க மதிப்புடையவனென்றும் கற்றலையே பெரும் பயனாக வெண்ணியவனென்றும் இவன் பாடிய பாடல் விளக்குகின்றது. சிலப்பதி காரத்திற் கூறப்படும் கோவலனைக் கொல்வித்தவனிவனே. அவ்வாறாயின் இவன் காலம் கி.பி. 2ஆம் நூற்றாண்டாகும்.

பாண்டியன் உக்கிரப்பெருவழுதி: உக்கிரப்பெருவழுதி பார்க்க.

பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 156.

பாண்டியன் தலையாலங்காணத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன்: (கி.பி. 120-144) இவன் பகைவரை வெல்வதிற் சிறந்தவ னென்பதும், குடிகளைப் பாதுகாத்தலில் வன்மையுடையவ னென்பதும், புலவர்களின் மதிப்பை விரும்பியவ னென்பதும், இரப்போர்க்குக் கொடுப்பவனென்பதும் இவன் பாடிய பாட்டால் விளங்கும். இவன் பாடியது: புறம். 72.

பாண்டியன் மாறன் வழுதி: பன்னாடு தந்த மாறன் வழுதி பார்க்க. இவர் பாடியன: நற். 97, 301.

பாம்பாட்டிச் சித்தர்: (-?) இவர் பாண்டி நாட்டினரென்றும் சட்டை முனியிடம் தீக்கை பெற்றவரென்றும் சொல்லப்படுவர்; கொங்கு நாட்டு மருத மலையி லிருந்தவராகவும் கூறப்படுவர். இவர் பாடியன: பாம்பாட்டிச் சித்தர் பாடல், சித்தாரூடம் என்பன.

பாயனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 155.

பாரதம்பாடிய பெருந்தேவனார்: (சங்ககாலம்) “சங்க காலத்தில் பாரதத்தைத் தமிழிற் செய்தவர் இவராவர். இவர் மொழி பெயர்ப்பு இக்காலத்திற் கிடைக்க வில்லை. வேள்விக்குடிச் சாசனம் முதலியவற்றில் பாரதத்தைத் தமிழில் மொழி பெயர்த்தவராகச் சுட்டப்படுபவர் இவரே. இக்காலத்தில் வழங்கும் பாரத வெண்பாவைப் பாடிய பெருந்தேவனார் வேறு ஒருவர். அவரைச் சிலர் இரண்டாம் நந்திவர்மன் காலத்தவரென்றும் மூன்றாம் நந்திவர்மன் காலத்தவரென்றும் கூறுவர். அவர் கூற்றின் படி இவர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராவர். கி.பி. 11ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அதற்குப் பின்னரோ ஒரு பெருந்தேவனார் இருந்துள்ளார். அவர் வீர சோழியத்துக்கு உரை எழுதியவர். சங்க காலத்தில் பெருந்தேவனார் எனப் பெயரிய வேறு புலவர் இருந்தனர் என்றும் தெரிகிறது. (தமிழ் வரலாறு சீனிவாசப்பிள்ளை). பழைய பாரத வெண்பா இறந்துபட்டதென்றும் உரை யாசிரியர்கள் மேற்கோ ளெடுத்தாண்ட சில பாடல்களே உள்ளன வென்றும் இக் காலம் வழங்கும் பாரத வெண்பாவினிடை யிடையே பழைய வெண் பாக்கள் உள்ளனவென்றும் அறிஞர் கூறுவர். பெருந்தேவனார் பாரதத்தில் 12,000 பாடல்கள் இருந்தன வென்று அறியப்பட்ட தென்பது. “சீருறும் பாடல் பன்னீரா யிரமுஞ் செந்தமிழுக்கு, வீரர் தஞ்சங்கப் பலகையிலேற்றிய வித்தகனார், பாரதம் பாடும் பெருந்தேவர்” எனவரும் தொண்டை மண்டல சதகத்தாலறியப்படும். பாரதம் பாடிய பெருந்தேவனார் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறு நூறு முதலியவற்றுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களிலுள்ள துதிகள் சிவபெருமான் மேலதாகவும், நற்றிணையிலுள்ளது திருமால் துதியாகவும், குறுந்தொகையிலுள்ளது முருகக் கடவுள் துதியாகவுமுள்ளன. இப்பொழுது வழங்கும் பாரத வெண்பாவிலுள்ள கடவுள் துதி வினாயகக் கடவுள் மேலது. விநாயக வழிபாடு தமிழ் நாட்டுக்கு 7ஆம் 8ஆம் நூற் றாண்டுகளில் வந்ததெனச் சொல்லப்படுகிறது. ஆகவே சங்கத்தொகை நூல் களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்த பெருந்தேவனார் பாரத வெண்பா செய்தவரின் வேறானவரெனவும் கருத இடமுண்டு. விநாயகக் கடவுளுக்குக் கடவுள் வாழ்த்துக்கூறி நூல் தொடங்கும் கட்டாயம் 11ஆம் நூற்றாண்டளவி லிருக்க வில்லையென்பது கலிங்கத்துப் பரணியைக் கொண்டு அறியலாம். மணிமேகலை சிலப்பதிகாரம் முதலிய நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துக் கூறப்படவில்லை. தொல்காப்பியம் இறையனார் களவியல் முதலிய நூல் களுக்கும் கடவுள் வாழ்த்துக் காணப்படவில்லை. “எப்பொருளும் யாரும்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாக வழங்குகின்றது.

பாரதம் மொழி பெயர்த்த பாண்டியன்: “சின்ன மனூர்ச் சாசனம் (கி.பி. 10ஆம் நூ.) பாண்டியனொருவன் பாரதத்தை மொழி பெயர்த்த வரலாறு கூறுகின்றது. “மஹா பாரதந் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்” என்பது அச் சாசனத் தொடர். இத்தொடரிற் சுட்டப்படுகின்ற பாரதம் தெள்ளாறெறிந்த மூன்றாம் நந்திவர்மன் காலத்தது. (கி.பி. 9ஆம் நூ.) பாரத வெண்பாவிலும் வேறானது. அப்பாடல்கள் நச்சினார்க்கினியர் தொல்காப்பிய உரையில் எடுத் தாண்டுள்ள வெண்பாக்களிலும் வேறானவை என்று கருதக்கிடக்கின்றன. பாண்டியன் மொழி பெயர்த்த பாரதம் நச்சினார்க்கினியர் எடுத்தாண்ட பாரதமோ பிறிதோ தெரியவில்லை. (சா.த.க.ச.)

பாரதி: இராமாயணத் திருப்புகழ்.*

பாராங்குச தாசர்: அரிநாம சங்கீர்த்தனம்.* (1868)

பாராங்குசர்: நம்மாழ்வார் பார்க்க.*

பாரிமகளிர்: (கி.மு. 87-) இவர் பறம்பு மலைக்குத் தலைவனாகிய பாரி என்னும் வள்ளலினுடைய மகளிர், இவர்களுளொருத்தி மழையில்லாத வறட்சிக் காலத்தில் இரந்துவந்த ஒரு பாணனுக்குச் சோறு இல்லாமையால் பொன்னை உலையிலிட்டுச் சோறாக்கிக் கொடுத்தாளென்று பழமொழியில் (171) கூறப்பட்டுள்ளது. இவர் தமது தந்தையிறந்த பின்பு அவன் பிரிந்தமைக்கு வருந்திப் பாடினர். கபிலர் இவர்களை மலையமானுக்கு மணமுடித்து வைத்தனர். கபிலர் பார்க்க. இவர் பாடியது: புறம். 112.

பார்காப்பான்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 254.

பாலகவி கிருட்டிணன்: இசைப்பாடற் கொத்து.

பாலகாப்பியர்: (-?) இவர் வரலாறு யாதும் தெரியவில்லை இவர் செய்த நூல் பாலகாப்பியம் என்னும் யானை வைத்திய நூல்.

பாலசுப்பிரமணியக் கவிராயர்: (-?) இவர் பழநி என்னும் ஊரினர்; பழநித்தல புராணம், கந்தர் நாடகம், பழநியந்தாதி முதலியன பாடியவர். (கொ.பு.)

பாலதாத்தாரியர்: சிறீபாடியார்த்த சங்கிரகம்.*

பாலபாரதி: இராமாயணத் திருப்புகழ். (ச.கை.)

பாலைக் கௌதமனார்: (கி.மு. 270) இவர் பல் யானைச் செங்கெழு குட்டுவன் மீது பதிற்றுப்பத்து 3ஆம் பத்துப் பாடி அவனை இரந்து, அவனுதவியால் ஒன்பது வேள்வி கேட்டுப் பத்தாம் பெருவேள்வி வேட்கையில் மனைவி யுடன் சுவர்க்கம் பெற்ற அந்தணர். இவர் பாடியது: பதி. 21-30.

பாலைபாடிய பெருங்கடுங்கோ: (கி.மு. 180) இவர் பெயர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ எனவும் வழங்கும். பாலைக் கலி பாடியவ ரிவரே. இவர் பாடியன: அகம். 5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 337, 379; கலி. 2-36; குறு. 16, 37, 124, 135, 137, 209, 231, 262, 283, 398; நற். 9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391; புறம். 282.

பாலையானந்த சுவாமிகள்: ஞானக்கும்மி.*

பாவைக் கொட்டிலார்: (கி.மு. 328) இவர் சோழரது வல்லத்துப் புறங்காட்டில் ஆரியர் படை பட்டமையைக் கூறுகின்றார். இவர் பாடியது: அகம். 336.

பாற்கர சேதுபதி: (19ஆம் நூ. பிற்.) இவர் இராமநாதபுர அரசராயிருந்த முத்துராமலிங்க சேதுபதியின் புதல்வர்; தமிழறிவு சான்று விளங்கியவர்.

பாற்கரன்: கௌளி சாத்திரம்.*

பிங்கல முனிவர்: (11ஆம் நூ.) “செங்கதிர் வரத்திற்றிவாகரன் பயந்த, பிங்கல முனிவன் றன்பெயர் நிறீஇ” எனக் கூறப்படுதல் கொண்டு இவர் திவாகர முனிவரின் புதல்வர் எனத் தெரிகிறது. ஆராய்ச்சியில் பிங்கல முனிவர் இயற்றிய பிங்கலநிகண்டு திவாகரத்துக்கு நீண்ட நாட்களின் பின் செய்யப் பட்ட நூலென்றும், திவாகரருக்கு நீண்ட காலத்தின் பின் பிங்கலர் நிகண்டு செய்தாரென்பதற்குப் பல காரணங்கள் உண்டென்றும் தமிழ் வரலாற்று ஆசிரியர் கே.எ°. சீனிவாச பிள்ளை அவர்கள் கூறுவர். இவர் இயற்றியது பிங்கலந்தை நிகண்டு. இந்நிகண்டு பல்லவரை இழிந்தவராகக் கூறுகின்றது. ஆகவே, பல்லவராட்சிக்குப் பின் இந்நூல் செய்யப்பட்டதென ஆராய்ச்சி யாளர் கூறுவர். பல்லவர் ஆட்சிக் காலம் கி.பி. 300 முதல் 750 வரை.

பிசிராந்தையார்: (கி.மு. 25-) இவர் பாண்டியன் அறிவுடை நம்பியைப் பாடியவர்; கோப்பெருஞ்சோழனுக்கு உயிர்த் தோழர். இவர் குமரி முனைக்கு அயலே யுள்ள பிசிரென்னு மூரிலிருந்த பெருஞ்செல்வர். இவர் கோப்பெருஞ்சோழ னோடு வடக்கிருந்து உயிர் துறந்தார். பரிமேலழகர் 785ஆம் குறளுரையில் ‘கோப்பெருஞ்சோழனுக்கும் பிசிராந்தையாருக்கும் போல உணர்ச்சி யொப்பின் அதுவே உடனுயிர் நீங்கு முரிமைத்தாய் நட்பினைப் பயக்கும்’ எனக் கூறினர். இவர் பாடியன: அகம். 308; நற். 91; புறம். 67, 184, 191, 212.

பிச்சுவையங்கார்: நம்மாழ்வார் தாலாட்டு. (1900.)

பித்தாமத்தர்: (-?) இவர் பரிபாடல் 7ஆம் பாடலுக்கு இசை வகுத்தவர். இப் பெயர் பித்தாமக்கர் எனவும் காணப்படுகிறது.

பிரதந்திர சுவதந்திரர்: குருபரம்பரைப் பிரபாவம்.*

பிரதமாச்சாரியார்: நம்மாழ்வார் பார்க்க.*

பிரதிவாதி பயங்கரம் அண்ணன்: பிரதிவாதி பயங்கர அண்ணன் பிரபந்தம்.*

பிரமசாரி: (சங்ககாலம்) இவர் பெயரினால் இவர் மணஞ்செய்யாது வாழ்ந்தா ரெனத் தெரிகிறது. இவர் பாடியது: நற். 34.

பிரமமுனி: (-?) இவர் 18 சித்தர்களிலொருவர். பிரமமுனி வைத்தியம் 360, பிரம முனி வைத்தியம் 700 என்பன இவர் செய்த நூல்கள்.

பிரமனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 357.

பிரமாதராயன்: சௌந்தரிய லகரி.*

பிராணாதிகார சிவன் (B.A.): (19ஆம் நூ. பிற்.) இவர் தொண்டைமண்டலம் உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக விருந்தவர். தமயந்தி நாடகம், வியாசமஞ்சரி என்னும் நூல்கள் செய்தவர். (1902)

பிரான் சாத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 68.

பிரான்சீசுப் பிள்ளை: (19ஆம் நூ.) இவர் 140 ஆண்டுகளின் முன் யாழ்ப் பாணத்திலே வயாவிளான் என்னுமூரில் வாழ்ந்தவர். கத்தோலிக்க மதத்தினர். இவரியற்றிய நூல்கள் மூவிராசர் வாசகப்பா, தசவாக்கிய விளக்கப் பதிகம், இரட்சயப் பதிகம், திருவாசகம், பிள்ளைக்கவி முதலியன.

பிருகான்: காசிம் படை வெட்டு.*

பிலிப்பு (Philip J): இந்துமத பாப்புமத சம்பந்த தீபம். (யாழ்ப்பாணம் 1842.)

பிலிப்பு (Philip): ம°கொல்லை அர்ச் ஆனாளீ°பரிபேரில் பதிகம். (யாழ்ப்பாணம் 1903)

பிலிப்பு மெல்லோ: (1723 - 1790) இவர் கொழும்பிலே பிறந்த கிறித்துவபுரத° தாந்து மதத்தினராகிய தமிழர். இவர் இலங்கையிலுள்ள ஒல்லாந்தரின் கிறித்துவ கோயில்களுக்குத் தலைவராயிருந்தார். இவர் பைபிளில் பல பகுதி களை தமிழ்ப் படுத்தியுள்ளார். இவர் சூடாமணி நிகண்டின் இரண்டாம் பகுதிக்கு 20 பாடல்களையும், 12ஆம் பகுதிக்கு 100 பாடல்களையும், புதிதாய் சேர்த்துள்ளாரென்றும், அவர் பாடல்கள் 1856இல் மானிப்பாய் அச்சியந்திர சாலையில் அச்சிட்ட 10 பகுதிகளடங்கிய சூடாமணி நிகண்டில் காணப்படு கின்றனவென்றும், மீதி யாழ்ப்பாணத்து வழங்கும் கையெழுத்துப் படிகளில் உள்ளனவென்றும் சைமன் காசிச் செட்டி குறிப்பிட்டுள்ளார்.

பிள்ளான்: (-?) இவர் திருமலை நம்பிக்குக் குமாரர்; திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி உரை செய்தவர்.

பிள்ளை உலோகாசாரியர்: (15ஆம் நூ.) இவர் வடக்கு வீதிப் பிள்ளையின் குமாரர்; அழகிய மணவாள நயினாருக்குத் தமையன். அட்டாதசரசம், தத்துவசேகரம், தத்துவத்திரயம், தனிப் பிரணவம், தனி சரமம், நவிதசம்பந்தம், நவரத்தின மாலை, பரந்தபடி, முமூட்சுப்படி, யாதருச்சிகப்படி, சீயப்பதியப்படி, பிரபந்த பரித்திராணம், பிரயோகசேகரம், சாரசங்கிரகம், அர்ச்சிராதி, அர்த்தபஞ்சரம், சம்சார சாம்பிராச்சியமென்பன இவரியற்றிய நூல்கள்.

பிள்ளை உலோகாசாரியர் சீடர்: சித்தோபாய நிர்ணயம்.*

பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்: (17ஆம் நூ.) இவர் திருமங்கையில் வாழ்ந்த வைணவர். இவர் 108 வைணவ தலங்கள் மீது அந்தாதிகள் பாடினர். இவ்வந்தாதிகளின் திரட்டு அட்டப் பிரபந்தமெனப்படும். இவர் சீரங்கக் கோயிலில் வாழ்ந்து பசுவினால் முட்டி இறந்தார். இவர் இயற்றிய நூல்கள் அழகரந்தாதி, திருவரங்கக் கலம்பகம், திருவரங்கத்தந்தாதி, திருவரங்க மாலை, திருவரங்கத் தூசற்றிருநாமம், திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கட மாலை, 108 திருப்பதி அந்தாதி, எதிராசரந்தாதி முதலியன. இவர் மறு பெயர் அழகிய மணவாள தாசர். மணவாள தாசர் பார்க்க.

பிள்ளையுறங்கா வில்லிதாசர்: பிள்ளையுறங்கா வில்லிதாசர் அந்தி மதிசை.*

பிள்ளை லோகஞ்சீயர்: இராமானுச திவ்விய சூரிசரிதை, சிறீவைணவ சமயாசார நிட்சர்சம், உபதேசத்திருநாமம், யதீந்திரப்பிரணவப் பிரபாவம், அந்தாதிப் பிரபந்த உரை, இராமானுச நூற்றந்தாதி உரை, முமூட்சுப்படி உரை, நாலாயிரத் தனியன்கள் உரை, சப்தகாதை உரை, திருமந்திரார்த்தம் உரை, திருவாய் மொழி நூற்றந்தாதி உரை.

பிள்ளை லோகார்ய சீயர்: (16ஆம் நூ.) இவர் வைணவ நூல்களுக்கு உரை செய்தவர்.

பிறவா நெறி காட்டியார்: (15ஆம் நூ.) இவர் திருமலைராயன் அரண்மனைப் புலவருள் ஒருவர்.

பின்பழகிய பெருமாள் சீயர்: (15ஆம் நூ.) இவர் குருபரம்பரைப் பிரபாவம், ஆறாயிரப் படியுரை முதலியன செய்தவர்.

பின்வேலப்ப தேசிகர்: (18ஆம் நூ. பிற்) வேலப்ப தேசிகர் என்னும் பெயருடன் இருவர் விளங்கினர். இவருள் முன்னவர் திருப்பறியலூர்ப் புராணம் பாடி யவர். திருவாவடுதுறை ஆதீனத்திருந்த பின்வேலப்ப தேசிகரிடம் சிவஞான முனிவர் உபதேசம் பெற்றனர்.

பின்னொக் (Pinnock): திருச்சபையின் சரித்திர வினாவிடை. (நாகர்கோயில் 1856.)

பீட்டர் (Peter J. S.): இந்தியா, இலங்கை, பர்மா தேசங்களிலுள்ள பெரிய ஆலயங்கள். (சென்னை 1901)

பீதாம்பரப் புலவர்: (1819) இவர் யாழ்ப்பாணத்திலே சேனாதிராயர் காலத்து வாழ்ந்த புலவர்களிலொருவர்; நீர்வேலியிற் பிறந்தவர். இவரியற்றிய நூல்கள்: மறைசைக் கலம்பகம், மறைசைத் திருப்புகழ், நீர்வை வெண்பா, வல்லிபுரநாதர் பதிகம் முதலியன.

பீரங்கி ஞானியர்: பீரங்கி ஞானத்திரட்டு.

புகழேந்திப் புலவர்: (13ஆம் நூ.) இவர் தொண்டை நாட்டிலே பொன்விளைந்த களத்தூரிற் பிறந்தவர். இவர் பாடிய நளவெண்பாவில் முரணை நகர்ச்சந்திரன் சுவர்க்கி என்னும் சிற்றரசன் புகழப்பட்டுள்ளான். முரணைநகர் உறையூர்ப் பக்கத்திலுள்ளது. செஞ்சியர் கோனாகிய கொற்றந்தைமீது ஒரு கலம்பகமும் இவர் பாடியுள்ளார். அல்லி அரசாணிமாலை, பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை, சுபத்திரை மாலை, விதுரன்குறம், புலன்திரன் தூது, அபிமன்னன் சுந்தரி மாலை, நல்ல தங்காள் கதை, பஞ்சபாண்டவர் வனவாசம், ஏணி ஏற்றம் முதலிய நூல்களும் இவரியற்றியதாக வழங்குகின்றன. ஒட்டக்கூத்தர், கம்பர், ஒளவையார், புகழேந்தி என்றோரை ஒரு காலத்தவராகக் கொண்டு வழங்கும் கதைகள் உள்ளன. தமிழ் நாவலர் சரிதையில் இவர் இலங்கையில் 13ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த ஆரியசேகரனைப் பாடியதாகக் கூறும் பாட லொன்று காணப்படுகின்றது. அது உண்மையாயின் இவர், கம்பர் ஒட்டக் கூத்தர் காலத்தவரென்று கொள்ளுதல் தவறாகும். இரத்தினச்சுருக்கம் என்னும் நூலும் இவர் செய்ததாகும். மதுரைவீரன் கதை சித்திர புத்திர நாயனார் கதை, தேசிங்குராசன் கதை, கோவிலன் கதை முதலியவும் இவர் செய்தனவாக வழங்குவதுண்டு.

புட்கரனார்: (-?) இவர் மந்திர நூலாசிரியர். இவர் இளம்பூரணராலும் யாப்பருங்கலவிருத்தி உரையாசிரியராலும் குறிப்பிடப்பட்டுள்ளார். “இது மந்திர நூலிற் புட்கரனார் கண்ட எழுத்துக்குறி வெண்பா” (யா.வி.ப. 352.)

புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 294. வண்ணக்கன் - நாணய சோதகன். புதுக்கயம் - ஓர் ஊர்.

புத்தமித்திரன்: (11ஆம் நூ.) இவர் வீரசோழன் (1063-1070) காலத்தவர்; வீரசோழன் பெயரால் வீரசோழியம் என்னும் இலக்கணம் செய்தவர்; பொன் பற்றி ஊரினர். பொன்பற்றியூர் மிழலைக் கூற்றத்தைச் சார்ந்தது. அவ்வூர் தஞ்சாவூர் சில்லா அறங்தாங்கித் தாலுகாவில் பொன்பேத்தி என்று இப்போது வழங்குகின்றது. வீரசோழியத்தில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்னும் ஐந்திலக்கண விதிகளும் கூறப்பட்டுள்ளன; இவ்வைந்தினுட் பொருளிலக்கண மொழிந்த மற்றவற்றுட் பெரும்பாலான வடமொழி விதியே. பண்டைத் தமிழாசிரியர்களும் சில நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்த தமிழுரை ஆசிரியர்களாலும் இஃது எடுத்தாளப்பட்டிலது; அதற்குக் காரணம் தெரியவில்லை. இதிலுள்ள கலித்துறைகள் 181; இதற்குப் பெருந்தேவனா ரென்பவர் உரை செய்துள்ளார். திகழ் + சக்கரம் = திகடசக்கரம்; கீழ் + திசை = கீட்டிசை போன்ற புணர்ப்புக்கு விதி வீர சோழியத்திற் காணப்படுகின்றது.

புருடோத்தம நம்பி: (11ஆம் நூ.) இவர் அந்தணர்; தில்லைக் கடவுள்மீது இரண்டு பதிகங்கள் பாடியவர். இவை 9ஆம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளன.

புலத்தியர்: தட்சிணாமூர்த்தி சௌமிய சங்கிரகம்.*

புலத்துறை முற்றிய கூடலூர் கிழார்: (கி.மு. 62) இவர் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரலிரும்பொறையின் வேண்டுகோளின்படி ஐங்குறுநூறு தொகுத்தவர் முதுமொழிக் காஞ்சி இயற்றிய கூடலூர் கிழார் இவரின் வேறானவர்; மதுரைக் கூடலூர் கிழார் எனப்படுபவர். ஐங்குறு நூறு ஐந்து புலவர்களியற்றிய ஐஞ்ஞூறு அகவற்பாக்களையுடையது. “மருதமோ ரம்போகி நெய்தலம் மூவன், கருதுங் குறிஞ்சி கபிலர் - கருதிய, பாலை யோதலாந்தை பன்முல்லை பேயனே, நூலையோ தைங்குறு நூறு” என்னும் வெண்பாவால் இன்ன திணைப் பாடல்களை இன்ன புலவர் பாடினரென வறியலாம். இதனைத் தொகுப்பித் தார் மாந்தரஞ் சேரவிரும்பொறை. இதற்குப் பாரதம் பாடிய பெருந்தேவனார் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இதற்குப் பழைய உரையொன்றுளது அதனைச் செய்தவர் யாரெனத் தெரியவில்லை.

புலிப்பாகை மூர்த்தியார்: வள்ளியம்மை புராணம்.*

புலிப்பாணி: (-?) இவர் போகர் மாணாக்கர், வைத்தியம் ஐஞ்ஞூறு, சாலத்திரட்டு, சிதம்பரம் இருபத்தைந்து, புலிப்பரணி சோதிடம், பலதிரட்டு நூறு முதலிய வைத்திய சோதிட நூல்கள் இவர் செய்தனவாக வழங்குகின்றன.

புறத்திணை நன்னாகனார்: (கி.மு. 42.) இவர் ஓய்மான் நல்லியக்கோடன், ஓய்மான் நல்லியாதன், கரும்பனூர் கிழான் முதலியோரைப் பாடியவர். புறத்துறை பாடுவதில் திறமை பெற்றிருந்தமையால் இவர் இப்பெயர் பெற்றார் போலும். இவர் பாடியன: புறம். 176, 376, 379, 384.

பூங்கணுத்திரையார்: (சங்ககாலம்) இவர் பெண்பாலினர். இவர் பாடியன: குறு. 48, 171; புறம். 277.

பூங்கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 253.

பூங்கோதை: (18ஆம் நூ.) இவள் மதுரையில் வாழ்ந்த கல்விவல்ல ஒரு தாசி. இவள் சீதக்காதி என்னும் காயலானாகிய பிரபுவிற்குக் காமக் கிழத்தியா யிருந்தமையால் இவளை இனத்தவர் நீக்கினர். இவள் ஒரு முறை கள்வரால் பறிக்கப்பட்டுப் பொருள் இழந்து மீண்டும் அப்பிரபுவை நோக்கி “தினங் கொடுக்குங்கொடையானே தென்காயற் பதியானே சீதக்காதி, யினங் கொடுத்த வுடைமையல்ல தாய் கொடுத்த வுடை மையல்ல வெளியாளது. மனங்கொடுத்து மிதழ் கொடுத்து மபிமானந்தனைக் கொடுத்து மருவிரண்டு, தனங்கொடுத்த வுடைமை யெல்லாங் கள்வர் கையிற் பறிகொடுத்துத் தவிக்கின்றேன்” என்று பாடி மீண்டும் பொருள் பெற்றனள்.

பூங்கோதையார்: (19ஆம் நூ.) இவர் தக்கை இராமாயணம் பாடிய எம்பிரான் கவிராயரின் மனைவி; பல தனிப் பாடல்கள் இயற்றியவர். (கொ.பு.)

பூங்கோயில் நம்பி: (11ஆம் நூ.) இவர் வீரசோழன் என்ற வீர ராசேந்திரன் காலத்த வர் (1063-1070.) வீரசோழன் மகன் வீரசோழ வணுக்கர்மேல் வீரவணுக் கவிசயம் என்ற நூல் பாடியவர். (சா.த.க.ச.)

பூதஞ்சேந்தனார்: (-?) இவர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் எனவும் அறியப்படுவர். இவர் கீழ்க்கணக்கு நூல்களுளொன்றாகிய இனியவை நாற்பது இயற்றியவர். இந்நூல் கடவுள் வாழ்த்துச் செய்யுள் உட் பட நாற்பது வெண்பாக்களை யுடையது. இதில் இனியனவாகிய நாற்பதைக் கூறும் நாற்பது வெண்பாக்கள் உண்மையின் இது இப்பெயர் பெற்றது. பதினென் கீழ்க்கணக்கு என்னும் தொகுப்பு ஏழு அல்லது எட்டாம் நூற் றாண்டளவிலிருந்த எவராலோ செய்யப்பட்ட தாதல் வேண்டு மென்பதும் அத்தொகுப்பிலுள்ள நூல்கள் எல்லாம் சங்ககாலத்தனவல்ல என்பதும் அறிஞர் கருத்தாகும். “தங்கண் மரபுடையார்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது.

பூதத்தாழ்வார்: (8ஆம் நூ.) இவர் மாபலீசுவரத்திற் பிறந்தவர். இவரும் பொய்கை யாழ்வாரும் ஒரே காலத்தவர். நாலாயிரப் பிரபந்தத்தின் இரண்டாந்திரு வந்தாதி இவர் பாடியது.

பூதத்தேவன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 285.

பூதப்பாண்டியன்: ஒல்லையூர்ந்த பூதப்பாண்டியன் பார்க்க.

பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு: (கி.மு. 245.) இவர் தமது கணவன் ஒல்லையூர்ந்த பாண்டியன் இறந்த காலை தீப்பாய்ந்தார். இவர் பாட்டால் அக்காலத்தே நெய்கலந்த சோற்றினை வெள்ளெள்ளுத் துவைய லோடும் புளிசேர்த்து வேகவைத்த வேளைக் கீரையோடும் உண்டு பாயில் லாது பருக்கைக் கற்கள் மேலே படுத்தல் கைம்மை நோன்பு கைக்கொண்ட வர்களது வழக்கமென்று தெரிகிறது. இவள் தலைவிரிகோலமாய்ப் புறங் காட்டிற் சென்று தீப்பாய்வதைக் கண்டு இரங்கிய மதுரைப் பேராலவாயார் பாடிய பாட்டு புறம். 247. இவர் பாடியது: புறம். 246

பூதபுராணமுடையார்: (-?) பூதபுராணம் என்னும் ஒரு நூல் பழைய உரைகளிற் கூறப்படுகின்றது. அந்நூலியற்றிய ஆசிரியர் பெயர் விளங்கவில்லை. “முந்து நூல் அகத்தியமும் மாபுராணமும் பூதபுராணமும், இசை நுணுக்கமும்; அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன: எழுத்துச் சொற் பொருள் யாப்புஞ், சந்தமும், வழக்கியலும், அரசியலும், அமைச்சியலும், பார்ப்பனவியலும், சோதிடமும், காந்தருவமும், கூத்தும் பிறவுமாம்” என்பது நச்சினார்க் கினியர் தொல்காப்பியப் பாயிர வுரையிற் கூறியது. “ இனிப் படர்ந்துபட்ட பொருண் மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில் வாழ்நாட் சிற் றறிவின் மாக்கட்கு உபகாரப் படாமையின் தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச் சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்று.” (தொல். மரபு. 97. பேராசிரியர் உரை.)

பூதம் புல்லனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 190.

பூதனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 29. இன்னிலை என்னும் பொய்கையார் செய்த நூலைத் தொகுத்தவர் மதுரை ஆசிரியர் பூதனார். இவர் இந்நூலுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். நற்றிணையிற் பாடிய பூதனாரிலிருந்து இவரை வேறுபடுத்துவதற்குப் போலும். இவர் மதுரையாசிரியர் எனச் சிறப்பிக்கப்பட்டார்.

பூந்துருத்தி நம்பிகாடவ நம்பி: (11ஆம் நூ.) இவர் திருவிசைப்பாப் பாடியவருள் ஒருவர். இவர் பூந்துருத்தியில் வாழ்ந்த ஆதிசைவர் ஆகலாம். இவர் ஆத்திரேய கோத்திரத்தாராய் முதல் இராசராசன் காலத்தில் வாழ்ந்தவர்; திருவிசைப்பாப் பாடியவருள் ஒருவர்.

பூபால பிள்ளை: (20ஆம் நூ.) இவர் மட்டக் களப்பிலே புளியந்தீவில் வாழ்ந்தவர். இவர் செய்த நூல்கள் சீமந்தனி புராணம், விநாயக மான்மியம், தமிழ் வரலாறு என்பன; இவர் நவநீத கிருட்டிண பாரதியார் இயற்றிய உலகியல் விளக்கத்துக்கு அகலவுரையும் எழுதியுள்ளார்.

பூரணலிங்கம் பிள்ளை. எம்.எ°. (மு.சி.): (1866 - 1947) இவர் திருநெல் வேலியைச் சார்ந்த முன்னீர் பள்ளத்தினர்; தமிழாக்கத்தின் பொருட்டுப் பெரிதும் உழைத்தவர். தமிழ் இந்தியா, தமிழ் இலக்கிய வரலாறு (Tamil Literature) என்பன இவர் ஆங்கிலத்தில் செய்த சிறந்த நூல்களாகும். இவர் தமிழிலும் கட்டுரைக் களஞ்சியம் (1930), தப்பிலி முதலிய சில நூல்கள் எழுதியுள்ளார். பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

பூரிக்கோ: (கி.பி. 250) இவர் குறுந்தொகை தொகுப்பித்தவர். குறுந்தொகையில் பன்னாடு தந்தமாறன் வழுதி பாடியிருத்தலால் பூரிக்கோ வழுதி காலத்திலாதல் அதற்குப் பின்னாதல் இருந்திருக்கவேண்டும். குறுந்தொகை கடவுள் வாழ்த்துச் செய்யுள் உட்பட 402-பாடல்களையுடையது. இதற்குக் கடவுள் வாழ்த்துச் செய்தார் பாரதம் பாடிய பெருந்தேவனார். மற்றைய பாடல்களை இருநூற்று நால்வர் பாடியுள்ளார்கள். இப்பாடல்களின் சிறுமை நாலடியும், பருமை 8 அடியுமாகும். இது அளவால் தொகுக்கப்பட்ட தென்பர். இத் தொகையின் பாக்களுள் இருபது பாக்களுக்கு நச்சினார்க்கினியர் உரை எழுதினாரென்றும், ஏனைய வற்றுக்குப் பேராசிரியர் உரை எழுதினாரென்றும் நச்சினார்க்கினியர் உரையைப் பற்றிக் கூறும் சிறப்புப் பாடல்களால் தெரிய வருகின்றன. இவ்வுரைகள் இறந்துபட்டன.

பூலோகசிங்க முதலியார்: (19ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே காரை தீவிற் பிறந்து தெல்லிப்பழையில் வாழ்ந்தவர்; கத்தோலிக்க மதத்தினர். திருச்செல்வ ராசர் காப்பிய மியற்றியவர். இதில் 25 படலமும், 1900 செய்யுட்களுமுண்டு, இவருடைய மறுபெயர் அருளம்பல நாவலர்.

பூவர் (Poor): வேதமொழி அறிவித்தல் (யாழ்ப்பாணம் 1844), உண்மை நாட்டம் (யாழ்ப்பாணம் 1842.)

பெட்டனாகனார்: (-) இவர் பரிபாடல் 3, 4ஆம் பாடல்களுக்கு இசை வகுத்தவர்.

பெரிய சஞ்சீவிநாத சுவாமி: அண்ட பிண்ட வியாக்கியானம். (1874.)

பெரிய சீயர்: மணவாள முனிகள் பார்க்க.

பெரிய சுப்ப ரெட்டியார், பால்வனம்: மகாராணி அம்மானை. (சென்னை 1901)

பெரிய திருமலை நம்பி: பெரிய திருமொழி நம்பி அருளிச் செயல்.*

பெரிய நம்பி சீடர்: திருவாய்மொழி அருஞ்சொல் விளக்கம்.*

பெரிய நாயகன்: மாயா ராவணன் கதை. (ச. கை.).

பெரியநூ லெப்பை, காயற்பட்டினம்: வேதபுராணம், (சென்னை 1894).

பெரியவன் கவிராயர்: திருமலை யதியர் பள்ளு.*

பெரியவாச்சான் பிள்ளை: (15ஆம் நூ. முற்.) இவர் நம்பிள்ளையின் மாணாக்கர். இவரியற்றிய நூல்கள்: தனி சுலோகி, பரந்தபடி, திரிமத சித்தாந்த சார சங்கிரகம், கலியனருளப்பாடு, 24,000 படி கத்திய உரை, திவ்விய பிரபந்த உரை, அமலனாதிப்பிரான் வியாக்கியானம் முதலியன. இவர் உரைகள் மணிப்பிரவாள நடையிலுள்ளன.

பெரியாழ்வார்: (9ஆம் நூ.) இவர் பாண்டிய நாட்டிலுள்ள வில்லிபுத்தூரிற் பிறந்தவர்; பிராமண மரபினர். இவர் அருளிய நூல்கள் பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு, நித்தியநு சந்தானம் என்பன.

பெரியான் பிள்ளை: அரிச்சந்திரன் கதை. (ச.கை.)

பெருங்கண்ணனார்: (சங்க காலம்) இவர் பாடியன: குறு. 289, 310; நற். 137.

பெருங்குன்றூர்க் கிழார்: (கி.பி. 25-) இவர் பதிற்றுப்பத்து 9ஆம் பத்தில் பெருஞ் சேரலிரும்பொறையைப் பாடி 32 ஆயிரம் பொற்காசும், மலைவளமும், ஊர்வளமும், அணிகலச் சிறப்பும் அமைத்துக் கொடுக்கப்பட்டார். கி.மு. 230-வரையில் பெருங்குன்றூர் கிழார் என்னும் இன்னொரு புலவர் இருந்தாரெனக் கொண்டு அவரைத் தொல் பெருங்குன்றூர் கிழார் எனக் குறிப்பிடுவர் இலக்கிய வரலாற்று ஆசிரியர். இவர் பாடியன அகம். 8; குறு. 338; நற். 5, 112, 119, 347; பதி. 80-90; புறம். 147, 210, 211, 266, 318 என்பன. பன்னிருபாட்டியலின் பகுதி இவர் செய்த பாட்டியலிலுள்ளதென்று கொள்ளப்படும்.

பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார்: (கி.மு. 125.) இவர் போர்வைக் கோப் பெருநற்கிள்ளியைப் பாடியுள்ளார். இவர் பாடியன: புறம். 83, 84, 85.

பெருங் கௌசிகனார்: (சங்ககாலம்) இவர் பாடியன: நற். 44, 139.

பெருஞ் சாத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 263.

பெருஞ்சித்திரனார்: (கி.பி. 21-) இவர் கடை எழுவள்ளல்களைப் பாராட்டியிருக் கின்றார். இவராற் பாடப்பட்டோர் குமணன், இளவெளிமான், அதியமான், நெடுமானஞ்சி, வெளிமான் என்பார். தாழியிலிட்டுப் பிணங்களைப் புதைக் கும் அக்கால வழக்கம் புறம் 238இல் கூறப்பட்டுள்ளது. யாப்பருங்கலவிருத்தி யில் காணப்படுவது வருமாறு: “என்றித் தொடக்கத்துப் பெருஞ்சித்திரனார் செய்யுளும் அவ்வையார் செய்யுளும் பத்தினிச் செய்யுளும் முதலாக வுடையன வெல்லாம் எப்பாற் படுமோ வெனின் ஆரிடப் போலியென்றும் ஆரிடவாசக மென்றும் வழங்கப்பெறும்” (யா.வி.ப. 351) “ஏதமில் வள்ளு வரின்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப் படுகின்றது.

பெருந்தலைச் சாத்தனார்: (கி.பி. 20-) ஆவூர் கிழார் மகன் பெருந்தலைச் சாத்தான், ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார், பெருந் தலைச் சார்த்தனார் என இவர் பெயர் காணப்படுகின்றது. குராப்பள்ளித் துஞ்சிய பெருமாவளவன் காலத்தவரான குமணனைப் பாடியவர் இப் புலவர். இவர் ஆவூர் மூலங்கிழார் மகன். தம்பியின் பகையால் நாடிழந்து ஒளித் திருந்த குமணனை அடைந்த அவர், தனது தலையைக் கொய்து தன் தம்பி பாற் கொடுத்துப் பொருள் பெறுமாறு குமணன் தனது வாளைப்புலவர் கையிற் கொடுக்க அவர் அவ்வாளை அவன் தம்பியிடங் காட்டியதாகத் தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியிற் காணப்படுவது வருமாறு: “இவைகளெல்லாம் இருடிகளல்லா வேளையோராகி மனத்தது பாடவும், ஆகவும், கெடவும், பாடறரும், கபிலர், பரணர், கல்லாடர், மாமூலர், பெருந்தலைச் சாத்தனார், இத் தொடக்கத் தோராலும் பெருஞ்சித்திரர் தொடக்கத் தோராலும் ஆரிடச் செய்யுட்போல மிகவும் குறையவும் பாடப்படுவன வெனக் கொள்க” (யா.வி.ப. 351.) இவர் பாடியன: அகம். 13, 224; நற். 262; புறம். 151, 164, 165, 205, 209, 294. என்பன.

பெருந்தேவனார் I: (சங்ககாலம்) இவர் பெயர் கடுகு பெருந்தேவனார் எனவுங் காணப்படுகின்றது. பாரதம் பாடிய பெருந்தேவனாரும் இவராகலாம். தொல்காப்பியம் புறத்திணையியலில் நச்சினார்க்கினியர் மேற்கோள் காட்டியுள்ள ஆசிரியத்தாலும் வெண்பாவாலுமாகிய பாரதப் பாடல்கள் சங்ககால நடையுடையனவாய்க் காணப்படுகின்றன. இவர் பாடியன: அகம். 51; நற். 83; குறு. 255. திருவள்ளுவமாலைச் செய்யுள் ஒன்று பாடியவர் கவிசாகரப் பெருந்தேவனாராவர்.

பெருந்தேவனார் II: (கி.பி. 815 - 870) இவர் ஐங்குறு நூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை முதலிய நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துப் பாடியுள்ளார். இப்பொழுது வழங்கும் பாரத வெண்பாவும், நந்திக் கலம்பக மும், கவிசாகரமும் செய்தவரிவராகலாம். இவர் பாரத வெண்பாவினிடை யிடையே பழைய பாரத வெண்பாப் பாடல்கள் காணப்படுகின்றதெனக் கூறுவர் அறிஞர். திருவள்ளுவ மாலைச் செய்யுளொன்று பாரதம் பாடிய பெருந்தேவனார் பாடியதாகக் காணப்படுகின்றது. “ஆனால் இப்பெருந்தேவ னார் (சங்க நூல்களுக்குக் கடவுள் வாழ்த்துச் செய்தவர்) இப்போது காணப் படும் பாரத வெண்பாவை இயற்றியவரும் தெள்ளாறெறிந்த நந்திபோத் தரையன் காலத்தவருமான பெருந்தேவனாரல்லர்”. என்பர் திருவாளர் எ°. வையாபுரிப்பிள்ளை அவர்கள்.

பெருந்தேவனார் III: (12ஆம் நூ.) இவர் வீர சோழியத்துக்கு உரை எழுதிய சமணப் புலவர்.

பெருந்தோட் குறுஞ்சாத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 308.

பெருமாக் கோதையார்: இது சேரமான் பெருமாளுக்கு மறுபெயர்.

பெருமாளையர்: தேரூர்ந்த நாடகம்.*

பெருமாள் கவிராயர்: குருகைப் பெருமாள் கவிராயர் பார்க்க.

பெரும்பதுமனார்: (சங்ககாலம்) இவர் பெயர் மீளிப் பெரும்பதுமனா ரென்றும் காணப்படுகின்றது. இவர் பாடியன: குறு. 7; நற். 2, 109; புறம். 199.

பெரும்பற்றப் புலியூர் நம்பி: (12ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டில் வேம்பத்தூர் சோழியர் குலத்தில் கௌணிய கோத்திரத்தில் பிறந்த வேதியர். இவர் செல்லி நகரினரெனவும் காணப்படுகிறது. இவருக்குத் தில்லைநம்பி எனவும் ஒரு பெயர். இவர் திருவாலவாயுடையார் திருவிளையாடல் பாடியவர். இது பழைய திருவிளையாடல், நம்பி திருவிளையாடல், வேம்பத்தூரர் திருவிளையாடல் என்னும் பெயர்களாலு மறியப்படும்.

பெரும்பாக்கன்: (சங்க காலம்) இவர் பாடியது: குறு. 296.

பெருவழுதி: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 55, 56, இளம் பெருவழுதி பரிபாடல் 15ஆம் பாடல் செய்தவர். கடலுள்மாய்ந்த இளம் பெருவழுதி என்னும் பெயரும் காணப்படுகின்றது.

பெருவாயின் முள்ளியார்: (5ஆம் நூ?) இவர் இயற்றிய நூல் ஆசாரக் கோவை, இதன் கடவுள் வாழ்த்தினால் இவர் சைவமதத்தினர் எனத் தெரிகிறது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைச் சேர்ந்தது. இதில் கடவுள் வாழ்த்து உட்பட 101 பாடல்கள் உள்ளன.

பெரைரா: திருத்தலை வில்லின் (தலை வில்லா) வழிநடைப் பதிகம். (யாழ்ப் பாணம் 1893.)

பேச்சியப்ப பிள்ளை: சங்கரநாராயண சுவாமி கோயில் மான்மியம். (1898.)

பேயாழ்வார்: (8ஆம் நூ.) இவர் மயிலாப்பூரிற் பிறந்தவர்; பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் காலத்தவர்; நாலாயிரப் பிரபந்தத்தின் மூன்றாந் திருவந்தாதி பாடியவர்.

பேய்மகள் இளவெயினி: (கி.மு. 180) இவர் பாலைபாடிய பெருங் கடுங்கோவை புறம். 11இல் பாடியுள்ளார்; அரசர், பாணருக்கும் விறலியருக்கும் முறையே பொன்னணிகலமும், வெள்ளி நாராற்றொடுத்தபொற்றாமரைப் பூவும் பரிசாகக் கொடுப்பதைப்பற்றிக் கூறியுள்ளார். இவர் பரணர் காலத்தவர்.

பேரம்பலப் புலவர்: (1859 - 1935) இவர் யாழ்ப்பாணத்து வேலணை என்னுமூரிற் பிறந்தவர். இவர் இயற்றிய நூல்கள் வண்ணைச்சிலேடை வெண்பா. வேலணை இலந்தைக் காட்டுச் சித்திவிநாயகர் இரட்டைமணிமாலை, கடம்பரந்தாதி முதலியன.

பேராசிரியர் I: (12ஆம் நூ.) இவர் தொல்காப்பியப் பொருளதிகாரம் முழுமைக்கும், திருக்கோவையாருக்கும் குறுந்தொகைக்கும் உரை செய்த ஆசிரியர். “பேராசி ரியரது கல்வியறிவின் பெருமை அளவிடற்கரிது. நச்சினார்க்கினியருடைய உரை பெரும்பான்மை இவருரையைத் தழுவியதே. செய்யுளியலுக்கு இவருரையுமுளது. அவற்றை ஒப்புநோக்கில் இது விளங்கும். இவரதுரை சொல்லதிகாரத்துக்கும் பொருளாதிகாரத்தின் இறுதி நான்கு இயல்களுக்கு முளது. பொருளதிகாரத்தின் இறுதி நான்கு இயல்களுக்குமுள்ள உரை நச்சினார்க்கினியருரையென அச்சில் வெளி வந்துள்ளது” (தமிழ் வரலாறு - சீனிவாச பிள்ளை). பேராசிரியர் மதுரை ஆசிரியர் எனவும்படுவர். இவர் இளம்பூரணருக்கு முன்னிருந்தவராகச் சிலர் கூறுவர்.

பேராசிரியர் II: (12ஆம் நூ.) “யாப்பருங்கல விருத்தியிற் பேராசிரியர் சூத்திரங்கள் எனப் பல மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளன. இவர் யாப்பு நூலொன்று செய்தாரெனத் தெரிகிறது. பிறைமுடிக் கறைமிடற்றரனார் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்’நீர்மலிந்தகார் சடையோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர் திரிபுரமெரித்தவர் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்’கறைமிடற்றோன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்’ பெண்ணொருபாகன் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்’பெருமான் பெயர் மகிழ்ந்த பேராசிரியர்’ வாமமேகலை மாதையோர் பாகனார் நாமம் மகிழ்ந்த பேராசிரியர்’காமனைக் காய்ந்தவர் நாமம் மகிழ்ந்த நல்லாசிரியர்’ என இவர் யாப்பருங்கல விருத்தி யாசிரியராற் கூறப்படுகின்றார். இவ்விருத்தியுரையுள் பேராசிரியரென வருமிடங்களிற் சில ஏடுகளின் பாடம் மயேச்சுரர் என்று காணப்படுகின்றமையின் அப்பேராசிரியர் தம் இயற் பெயர் மயேச்சுரர் என்று எண்ண இடமுண்டு. மயேச்சுரர் என்பது சிவபெருமான் பெயர்களுள் ஒன்றாதலும், பேராசிரியருக்குக் கொடுக்கப்பட் டுள்ள அடைமொழித் தொடர்களெல்லாம் சிவபெருமான் பெயரையே குறிப் பனவாதலும் இக்கூற்றை வலியுறுத்தும். அன்றியும் மயேசுரரால் யாப்பிலக் கண மொன்று இயற்றப்பட்டுள்ள தென்பது யாப்பருங்கலக் காரிகைப் பாயிரவுரையில் `மயேச்சுரர் யாப்பே போல உதாரணமெடுத்தோதி’ என்று குணசாகரர் கூறியிருப்பது கொண்டு அறியலாகும். யாப்பருங்கலக் காரிகை யில் மயேச்சுரர் சூத்திரங்களாகக் காட்டப்பட்டவற்றுட் சில இவ்விருத்தி யுரைக் காரரால் பேராசிரியர் சூத்திரங்களெனக் காட்டப்படுகின்றன. விருத் தியுரைகாரர் பேராசிரியர் எனச் சிறப்பித்துக் கூறுவது மயேச்சுரர் என்னும் ஆசிரியரையென்று காட்டுவதற்கு இஃதொன்றே போதிய சான்றாகுமன்றோ? இதனுண்மை எவ்வாறிருப்பினும் இப்பேராசிரியர் விருத்தியுரைகாரரால் பெரிதும் மதிக்கப்பட்டவ ரென்பதில் ஐயமில்லை.

“யாமறிந்த அளவில், இந்நூலைத் தவிர்த்துப் பிற நூல்களில் பேராசிரிய ரெனக் குறிக்கப்படுவோர் இருவருள் ஒருவர் இளம்பூரணர் முதலிய உரையா சிரியர்களாற் சுட்டப்படும். ஆத்திரையன் பேராசிரியன் என்பார். மற்றவர் தொல் காப்பியத்துக்கு உரையியற்றிய பேராசிரியர். விருத்தியுரையிற் கூறப்பட்ட பேராசிரியர் இவ்விருவருள் ஒருவரையோ அன்றிப் பிறரொருவரையோ என்பது ஆராயத்தக்கது. தொல்காப்பியம் செய்யுளியலுரையால் தெரியக் கிடக்கும் பேராசிரியர் கொள்கைகளிற் சிலவற்றோடு இவ்விருத்தியுரையிற் கண்ட பேராசிரியர் சூத்திரங்கள் மாறுபடுகின்றன. அது கொண்டு ஈண்டு சுட்டப்பட்டவர் தொல்காப்பியத்துக்குக் குரையியற்றிய பேராசிரியரல்ல ரென்பது துணியப்படும்.” (யா.வி. முன்னுரை பவானந்தம்பிள்ளை பதிப்பு.)

பேராலவாயார்: மதுரைப் பேராலவாயார் பார்க்க.

பேரிசாத்தனார்: (கி.மு. 60) வடமவண்ணக்கன் பேரிசாத்தன் பார்க்க.

பேரெயின் முறுவலார்: (கி.மு. 90) இவர் நம்பி நெடுஞ்செழியனின் சிறப்பைப் பாடியுள்ளார். இவர் சோழ நாட்டிலுள்ள பேரெயிலென்னுமிடத்தில் வாழ்ந்தவர். இவர் பாடியன: குறு. 17; புறம். 239.

பேர்சிவல் (Percival): நீதி நூற்றிட்டு (1872), வீராசாமிச் செட்டியாரின் விநோத ரசமஞ்சரி முதற் பதிப்பு (1891), அருளவதாரம் யாழ்ப்பாணம் (1842), திருட்டாந்த சங்கிரகம் (பழமொழித்திரட்டு 1843), இதில் 6000 பழமொழி களும் ஆங்கில மொழிபெயர்ப்புமுண்டு. இங்கி° தமிழ் அகராதி. இவர் மேல்நாட்டு கிறித்துவ பாதிரி.

பொதுக்கயத்துக் கீரந்தை: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 337.

பொதும்பில் கிழார்: (சங்ககாலம்) இஃது ஊர் பற்றி வந்த பெயர். இவ்வூர் மதுரைப் பகுதியிலுள்ளது; இப்பொழுது பொதும்பு என வழங்குகின்றது. இவர் பாடியது: நற். 57.

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 375

பொதும்பில் கிழான் வெண்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் தாழையின்தலை பேய்த்தலை போன்றுள்ளதென்றும், கிளியின் கழுத்திரேகை வானவிற் போன்றுள்ளதென்றும் கூறியுள்ளார். இவர் வெண்கண்ணனாரெனவுங் கூறப்படுவர். இவர் பாடியன: அகம். 130, 192.

பொதும்பிற் புல்லாளங் கண்ணியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 154; நற். 315, 287.

பொத்தியார்: (கி.மு. 25) இவர் கோப்பெருஞ் சோழனின் உயிர் நண்பர். கோப்பெருஞ் சோழன் வடக்கிருந்திறந்தபின் அவர் உயிர் துறந்த இடத்தே இவரும் உயிர் விட்டனர். இவர் பிசிராந்தையையும் பாடியுள்ளார். இவர் பாடியன: புறம். 217, 220, 223.

பொய்கைத் தலையானைச் சூழியார்: (-?) பழைய நூலாசிரியருளொருவர். (யா.வி.)

பொய்கையார்: (கி.பி. 50) இஃது ஊர்பற்றி வந்த பெயர். பொய்கை ஓர் ஊர். இவர் சேரன் கணைக்காலிரும் பொறைக்கும், சோழன் செங்கண்ணானுக்கும் (கோச் செங்கட்சோழன்) பகைமேலிட்டதனால் இருவருக்கும் வெண்ணிப் பறந்தலை (கோயில் வெண்ணிவெளி)யில் பெரும் போர் செய்தார்கள். அப்போரிலே சேரன் தோற்கச் சோழன் வென்று அச் சேரனைப் பிடித்துக் குடவாயிற் கோட்டத்திற் சிறையிட்டான். இதனையறிந்த பொய்கையார் சோழனது வெற்றியைச் சிறப்பித்துக் களவழி நாற்பது என்னும் ஒரு நூலியற்றிச் சோழனவைக்களத்திற்பாடித் தம்மரசனை மீட்டுக் கொண்டார். இதனை “களவழிக் கவிதை பொய்கையுரை செய்ய வுதியன் - கால்வழித் தளையை வெட்டிச் சிறைமீட்ட பரிசும்” எனக் கலிங்கத்துப் பரணி கூறும். களவழி நாற்பதில் 41 வெண்பாக்களுள்ளன. பொய்கையார், பாட்டியல் என்னும் யாப்புநூல் ஒன்றும் செய்துள்ளார் எனத் தெரிகிறது. யாப்பு நூல் செய்த பொய்கையார் எவரோ தெரியவில்லை. இவர் பாடியன: களவழி 40; நற். 18; புறம். 48. களவழி 40 கீழ்க்கணக்கு நூல்களிலொன்று.

பொய்கையார்: II (8ஆம் நூ.) இவர் இன்னிலை என்னும் நூல் இயற்றியவர். மதுரையாசிரியர் இந்நூலைத் தொகுத்துத் கடவுள் வாழ்த்துப் பாடிச் சேர்த்து அறப்பால், பொருட்பால், இன்பப்பால், வீட்டிலக்கப்பால் என நான்கு பால்களாகப் பிரித்திருக்கின்றார். இஃது அறப்பாலில் 10ஆம், பொருட்பாலில் 9ஆம், இன்பப் பாலில் 12ஆம், வீட்டிலக்கப்பாலில் 14-மாக அமைந்த 45 வெண் பாக்களையுடையது. “உரையாசிரியர் என்று சொல்லப்படுபவராகிய இளம் பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் இந் நூலின் செய்யுட்களை எடுத்தாண்டிருக்கிறார்கள். இனி நாலாயிரப் பிரபந் தத்தின் மூன்றாம் பிரிவாகிய இயற்பாவிலுள்ள முதற்றிருவந்தாதியும், இந் நூலும், களவழி நாற்பதும், புறநானூற்றிலுள்ள செய்யுட்களும், யாப்பருங்கல விருத்தியிற் காட்டப்பட்டுள்ள சில உதாரணச் செய்யுட்களும் பொய்கையார் வாக்கென்றே குறிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்நூற்களை எல்லாம் இயற்றிய பொய்கையார் ஒருவரா இருவரா என்னும் ஐயம் பலர்க்குத் தோன்றியிருக்கின்றது. இவற்றுள் முதற்றிருவந்தாதியையும் இன்னிலை யென்னும் இந்நூலையும் இயற்றியருளிய பொய்கையார் ஒருவரே என்பதை சிறீமான் வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்கள் தாம் இயற்றிய உரையுடன் பதிப் பித்த இன்னிலை நூலின் முகவுரையில் நன்கு கூறியிருக்கின்றனர். இயற் பாவின் முதற்றிருவந் தாதியையும் இன்னிலையையும் இயற்றி யருளியவர் ஒருவரே என்பதில் ஐயுறவில்லை. இனி களவழி நாற்பதையும் புறநானூற்றுச் செய்யுட்களையும் இயற்றியவர் இவர் தாமோ, அப்பெயர் கொண்ட மற்றொரு புலமிக்காரோ என்பன நன்கு ஆராய்தற்குரியன. (சங்க நூல். கா.ர.கோ.)

பொய்கையாழ்வார்: (8ஆம் நூ.) இவர் காஞ்சிபுரத்திற் பிறந்தவர்; நாலாயிரப் பிரபந்தத்தில் இயற்பா முதற்றிருவந்தாதி மூன்றாந்திருவந்தாதி பாடியவர். முதற்றிருவந்தாதிப் பாடலொன்று யாப்பருங்கல விருத்தியில் மேற்கோளாக வந்துள்ளது. (யா.வி.ப. 60)

பொய்யாமொழிப் புலவர்: (13ஆம் நூ.) இவர் சோழ நாட்டிலுள்ள துறையூரில் வேளாண் குடியிற் பிறந்தவர். இவர் பாண்டிய அரசனின் படைத்தலைவனும் மந்திரியுமாகித் தஞ்சாக்கூரிலிருந்த சந்திரவாணன் என்பவன் மீது தஞ்சை வாணன் கோவை என்னும் சிறந்த நூலொன்று இயற்றினார். இது நம்பி அகப்பொருளுக்கு இலக்கியமாக அமைந்துள்ளது. நம்பி அகப்பொருள் 1196 முதல் 1266 வரை வாழ்ந்த குலசேகர பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப் பட்டதாக அதன் பழைய உரையால் அறிய வருகிறது. தஞ்சை வாணன் கோவைக்கு குன்றத்தூர் சொக்கப்ப நாவலர் ஓர் அகல உரை செய்துள்ளார். யாழ்ப்பாணம் வைத்தியலிங்க பிள்ளையும் இதற்குச் சிறந்த ஓர் உரை எழுதியுள்ளார். தஞ்சை வாணன் கோவையில் 425 செய்யுட்கள் உள்ளன.

பொருந்தில் இளங்கீரனார்: (கி.மு. 65.) பொருந்தில் என்பது ஓர் ஊர். இவர் ஒரு வள்ளலும் புலவருமாவர்; இவர் கபிலரைப் புகழ்ந்துள்ளார். சேரமான் மாந்தரஞ் சேரவிரும் பொறையைப் பாடியுள்ளார். இவர் பாடியன: அகம். 19, 351, 20; புறம். 53.

பொன்பற்றியூர்ப் புத்தமித்திரனார்: புத்தமித்திரன் பார்க்க.

பொன்மணியார்: (கி.மு. 42.) இவர் பாடியது: குறு. 391.

பொன்முடியார்: (கி.மு. 42) இவர் சங்ககாலத்து விளங்கிய ஒரு பெண் புலவர். இவரும் அரிசில் கிழாரும் தகடூர் யாத்திரை என்ற உரைநடையிட்ட பாட்டுடைக் காப்பியத்தை இயற்றினார்கள். இது பெருஞ் சேரலிரும்பொறை தகடூரையெறிந்து அதிகமானைக் கொன்றதைக் கூறுகின்றது. இந்நூலிற் சில பகுதிகளே கிடைத்துள்ளன. “காணின்ற தொங்கலாய்” என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இவர் பாடியவை: புறம் 299, 310, 312.

பொன்னம்பல தாசர்: சிதம்பரம் - தில்லைச் சிவகாம சௌந்தரி திருவிரட்டை மணிமாலை, திருநாமாவளி (1895.)

பொன்னம்பல பிள்ளை, நல்லூர்: (1836 - 1902). இவர் ஆறுமுக நாவலரின் மருகர்; வில்லிபாரதம், ஆதிபர்வம், மயூரகிரிப் புராணம் முதலிய நூல் களுக்கு உரை எழுதியவர்; இரகுவம்சம் (1887), திருக்கேதீசுர மகிமை முதலிய நூல்களை அச்சிட்டவர்.

பொன்னவன்: (14ஆம் நூ.) சைனராகிய இவர் அம்பரிலிருந்த கணபுரத் தேவன் விரும்பியபடி கனா நூல் செய்தார்.

பொன்னாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 114.

பொன்னாச்சியார்: பொன்னாச்சியர் இரகசியம்.*

பொன்னுச்சாமி, சி.: (20ஆம் நூ.) இவர் பொள்ளாச்சி என்னும் ஊரினர்; புறநானூறும் மகளிரும் என்னும் நூல் செய்தவர். (கொ.பு.)

பொன்னுச்சாமித் தேவர்: (19ஆம் நூ. பிற்.) இவர் இராமநாதபுரம் சிற்றரசில் தலைமை பெற்றிருந்தவர்; யமகம் பாடுவதில் வல்லவர்; 1890 வரை வாழ்ந்தவர்; இராசமன்னார் கோவில் தல புராணமும், அலங்காரக் கோவையும் இவர் இயற்றியவை.

பொன்னுச்சாமிப் பிள்ளை, திரிசுரபுரம்: கமலாட்சி சரித்திரம். (சென்னை 1903).

பொன்னோதுவார்: திருஞானசம்பந்தர் புராண வசனம் (1900.)

போகர்: (கி.பி. 8ஆம் நூ.?) திருமூலருக்கு மாணாக்கர் எழுவர்; அவருள் காலாங்கநாதரின் மாணாக்கர் போகர். இவரும் இவர் மாணாக்கராகிய புலிப்பரணியும் பழநிமலை அடிவாரத்திலுள்ள வைகாவூரில் வாழ்ந்தன ரென்று கொங்கு மண்டல சதகம் 36ஆம் பாடலால் தெரிகிறது. பாண்டி நாட்டிலுள்ள சதுரகிரி, சிவகிரி என்னுமிடங்களில் இவர் வாழ்ந்ததாகவும் தெரிகிறது. இவர் செய்த நூல்கள் போகர் 7000, நிகண்டு 17,000, சூத்திரம் 700 யோகம், போகர் திருமந்திரம் முதலியன.

போக்கியார்: (-?) இவர் திருவள்ளுவமாலை 22ஆம் பாடல் செய்தவராகக் காணப்படுகிறார். சங்கச் செய்யுள் செய்தவர் வரிசையில் இவர் பெயர் காணப் படவில்லை. போக்கியம் என்னும் ஒரு நூலுண்டென்பது “புணர்ப் பாவை யுள்ளும், போக்கியத்துள்ளும், கிரணியத்துள்ளும், வதுவிச்சையுள்ளும் கண்டு கொள்க” என யாப்பருங்கல விருத்தியில் வருவதால் தெரிகிறது. (யா.வி.ப. 497.)

போதனார்: (சங்ககாலம்). இவர் நற்றிணையில் வரும் பாடற் பெருமைக்குக் கூறிய 13 அடிப் பாடல் செய்தவர். இவர் பாடியது: நற். 110.

போந்தைப் பசலையார்: (சங்ககாலம்). இவர் பாடியது: அகம் . 110.

போப்பையர் (Dr. G.U. Pope): (1820 - 1907) இவர் கிறித்தவ வெ°லியன் மிசனைச் சேர்ந்த ஆங்கில பாதிரியார். இவர் தமிழ்மொழியை நன்கு கற்று திருவாசகம் (1897), நாலடியார் (1903), திருக்குறள் (1886), புறப்பொருள் வெண்பாமாலை முதலிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். தமிழ் இலக்கண நூற் சுருக்க வினாவிடை (1846), தமிழ் இலக்கண நூல் (1858) என்பவற்றை இயற்றினார்; தமிழ்ச் செய்யுட் கலம்பகம் (1859) என்னும் தொகுப்பு நூலை அச்சிட்டார் (1859). பல இலக்கண நூல்கள் இயற்றினார்.

மகமது உசெயின்: (18ஆம் நூ. பிற்.) இவர் இயற்றிய நூல் பெண் புத்திமாலை.

மகாலிங்கையர், மழவை: (19ஆம் நூ.) இவர் திருவாவடுதுறைத் தாண்டவராய சுவாமிகளுக்கு முற்பட்டவர்; தொல்காப்பியம் நச்சினார்க்கினியர் உரையைப் பதிப்பித்தவர் (1847). அருணாசல புராணத்துக்கு உரை எழுதியவர் (1898); இலக்கணம் செய்தவர் (1879). போத வாசகம் என்னும் ஒரு நூலும் இவராற் செய்யப்பட்டது.

மகேச குமார சர்மா: பாங்கிம் சந்திர சதோபாத்தியாயர் வங்காளி மொழியிற் செய்த ஆநந்தமடம் என்னும் நூலின் மொழி பெயர்ப்பு (1908), நிர்மலா (1907).

மங்கைபாக கவிராயர்: (19ஆம் நூ.) இவர் அழகிய சிற்றம்பலக் கவிராயர் மரபில் வந்தவர். கொடுங்குன்ற புராணமியற்றியவர்.

மச்சமுனி: (-?) இவர் போகர் மாணாக்கருள் ஒருவராகிய சித்தர். இவர் செய்தனவாக வழங்கும் நூல்கள்: திராவகம் 800, வைத்தியம் 800, குலால புராணம். கடைக்காண்டம் 800, கலைக்ஞானம் 800, நிகண்டு 300, பெரு நூல் 800, சாலகாண்டம், முப்பு தீட்சை விதி 80. இவரைச் செம்படவர் என்று கூறும்.

மச்சுச் செட்டியார்: (14ஆம் நூ.) இவர் சீகாழிச் சைவ வேளாளர்; தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர். உமாபதி சிவாசாரியாரிடம் உபதேசம் பெற்றவர்; ஞானபூசைத் திருவிருத்தம் என்னும் நூலியற்றியவர்.

மச்சேந்திரையர்: மச்சேந்திரர் ஞானக் களிப்பு.*

மடல் பாடிய மாதங்கீரனார்: (சங்ககாலம்). இவர் பாடிய பாடல்களில் மடலேறு தலைப் பற்றி வருதலால் இவர் மடல் பாடிய என்று சிறப்பிக்கப்பட்டார். இவர் பாடியன: நற். 377; குறு. 182.

மணக்குடவர்: (13ஆம் நூ.?) இவர் திருக்குறளுக்கு உரை செய்தவருள் ஒருவர். இவருடைய பெயர் மணக்குடியர்; மணக்குடையர் என்றும் வழங்கப் பெறு கின்றது. இவருடைய பிறப்பு வரலாறு ஒன்றும் அறியக்கூடவில்லை. மணக் குடியர் என்பதுதான் இவர் என்று சாதிப்பவர் சிலர் இவர் பிறந்த ஊர் மணக்குடியாதலால் இடம் அடியாக இவர் வழங்கப்பெற்றாரென்பர். மணக் குடி என்னும் ஊர்கள் சோழ பாண்டிய நாடுகளில் பலவுள்ளன. அவற்றுள் எது என்று துணிய முடியாத காரியம். இவர் பரிமேலழகருக்கு முந்தியவ ராகலாம்.

மணலூர் ஆசிரியர் புளியங்காய்ப் பெருஞ் சேந்தனார்: இவர் செல்வத்தா சிரியரிடம் இறையனார் அகப் பொருளுரை கேட்ட ஆசிரியருள் ஒருவர்.

மணவாளதாசர்: (17ஆம் நூ.) இது பிள்ளைப் பெருமாளையங்காருக்கொரு பெயர். “மணவாளதாசர் என்ற பெயருடையார் பல்லோராவர். பல மணவாள தாசர்களையும் ஒருவராகவே கருதுவர். முன்னோரும், மணவாளதாசர் பலருள் ஒருவர் சோழமண்டலத்துள்ள திருமங்கை என்று சொல்லப்படும் திருநகரி யிலே பிறந்தவர். மற்றொருவர் வெண்மணி என்ற ஊரிலே பிறந்தவர். பிறி தொருவர் பிறந்த ஊர் அறிதற்கிலது. இவர்கள் பாடிய நூல் களைச் சேர்த்து அட்டப்பிரபந்தம் எனப் பேர்கொடுத்துப் பல ஆசிரியர் களையும் ஒருவராக முடிவிற் செய்தவர் திரிசிரபுரம் கோவிந்த பிள்ளை அவர்கள் (சோமசுந்தர தேசிகர்.)

மணவாள முனிவர்: (15ஆம் நூ.) இவரே பெரிய சீயர் எனப்படுபவர். இவரே தென் கலையாருக்குத் தலைவர். இவர் பாண்டிய நாட்டில் சிக்கில் கிடார மென்னு மூரிற் பிறந்து வளர்ந்து கலை பயின்று அரச சேவையிலமர்ந்து பின் துறவற நெறி நின்றவர். இவருக்கு யதீந்திரப் பிரணவரென்ற பெயரு முண்டு. இவரியற்றிய நூல்கள் உபதேச ரத்தினமாலை, திருவாய் மொழி, நூற்றந்தாதி, பிரமேய சாரம், ஆர்த்திப் பிரபந்தம், கீதா தாத்பரியதீபம், திருவா ராதனைக் கிரமம், விரோதி பரிகாரம், ஆசாரிய இருதயம் உரை, திருமந்தி ரார்த்த வியாக்கியானம் என்பன.

மணவைக் கூத்தன்: (15ஆம் நூ.) புதுக்கோட்டைச் சீமை திருமெய்யஞ் சேகரத் துள்ள கோவிற்பட்டிச் சிவாலயத் தமைந்த சாசன மொன்றால் மணவைக் கூத்தன் என்னும் புலவர் பெயர் காணப்படுகின்றது. “மணவை யூருடையான் பூமாலைக் கூத்தர் பாண்டிப் பெருமாள்” எனவும் இவர் பெயர் காணப்படு கின்றது. (சா.த.க.ச.)

மண்டல புருடர்: (16ஆம் நூ.) இவர் தொண்டை நாட்டிலே வீரை என்னும் ஊரிலே சைனக் குடியிற் பிறந்தவர்; திவாகரம், பிங்கலந்தை முதலிய நிகண்டுகளைச் சுருக்கி விருத்தப்பாவால் ஆசிரியராகிய குணபத்திரர் கட்டளைப்படி சூடாமணி நிகண்டு செய்தவர். இவர் செய்த இன்னொரு நூல் சிறீபுராணம். சூடாமணி நிகண்டில் 1125 பாடல்களுள்ளன என்று ஏடுகளிற் காணப்படும் பழைய செய்யுள் கூறுகின்றது. இப்பொழுது அச்சு நூலிலுள்ளன 1196. இவர் விசயநகர அரசர் கிருட்டிண தேவராயர் (1508-1530) காலத்தவர். சூடாமணி உள்ளமுடையானென்னும் நூல் இவர் செய்ததாகவும் வழங்கும். சிறீபுராணம் திருப்புகழ்ப் புராணம் எனவும் வழங்குமெனத் தெரிகிறது.
“சூடாமணி நிகண்டு தெய்வத் தொகுதி முதற் பல பெயர்க் கூட்டத் தொகுதி யிறுதியாகிய பன்னிரண்டு தொகுதிகளையுடையது; திவாகரத்துக்கும் பிங்கலந்தைக்கும் வழி நூலாகவுள்ளது. இந்நூலாசிரியர் சைன மதத்தினரும் பெரு மண்டூரென்று வழங்கிய வீரபுரத்திலிருந்தவரும் அருகதேவன் சரிதத்தைப் புராணமாகச் செய்தவருமாகிய மண்டல புருடரென்பவர்; இந்நூலை ஆக்குவித் தார் இம்மண்டல புருடருடைய ஆசிரியரும் திருநறுங்குன்றை யென்னும் ஊரிலிருந்த வருமான குணபத்திர தேவரென்பவர்; இந்நூல் 9வது செயல்பற்றிய பெயர்த் தொகுதியில் “கிருட்டிணராயன் கைபோற், கொடைமட மென்பதம்ம வரையாது கொடுத்தலாமே” என்றிருத்தலால் இது கிருட்டிணராயனென்னும் ஒரு பிரபுவின் காலத்திற் செய்யப்பட்டதெனத் தெரிகிறது. (உ.வே.சா.)

மண்ணிப்பங்கார்: தேசிக நூற்றந்தாதி.

மதன சிந்தாமணி: பரத்தையர் மாலை.*

மதாறுசாகிபு புலவர்: (18ஆம் நூ. பிற்.) இவர் மிதினுசு நாமா என்னும் காப்பிய மியற்றிய முகமதிய புலவர்.

மதிவாணனார்: இவர் கடைச்சங்ககாலப் பாண்டியருள் கவியரங்கேறிய ஓர் அரசர். “கடைச்சங்க பாண்டியருள் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாண னார் செய்த முதனூல்களிலுள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற மதிவாணனார் நாடகத் தமிழுமென இவ்வைந்தும்” என்பது அடியார்க்கு நல்லார் உரை. மதிவாணனார் செய்த நாடகத் தமிழ் நூலிலுள்ள பாக்கள் சூத்திரப்பாவும் வெண்பாவுமெனத் தெரிகின்றன. இந்நூல் கூத்த நூல் எனவும் படும்.

மதுரகவி ஆழ்வார்: (8ஆம் நூ. அல்லது 9ஆம் நூ. முற்.) இவர் பாண்டி நாட்டிலே திருக்கோளூரென்னு மிடத்திற் பிறந்து அயோத்திக்குச் சென்று நம்மாழ்வார் புகழ் கேட்டு மீண்டு திருக்குருகூருக்கு வந்து, அவர் திருவடிகளை வணங்கி, அவர் திருப்பாடல்களனைத்தையும் தாமே எழுதிக் ‘கண்ணினுண் சிறு தாம்பு’ என்னும் பதிக மருளிச்செய்து நம்மாழ்வார் திருநாட்டுக் கெழுந்தருளி ஐம்பதாண்டுகள் அவர் திருவடிவத்தை வைத்து வணங்கி வைணவத்தை நிலைநிறுத்தினவராவர். இவர் வைணவ அந்தணர்.

மதுரகவி பாரதி (கணபதி சுப்பையர்): மதுரகவி பதங்கள் (1896.)

மதுரகவிப் புலவர்: சிதம்பர தத்துவலிங்கையன் பார்க்க.

மதுரகவி ராயர்: (18ஆம் நூ. முற்.) இவர் தொண்டை நாட்டில் அமரம் பேட்டையிற் பிறந்தவர்; திருக்கச்சூர் நொண்டி நாடகம் பாடியவர். பிரம்பூர் ஆனந்தரங்கன் மீதும், காளத்தி முதலியார் மீதும் பாடிப் பரிசு பெற்றவர்.

மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்: அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பார்க்க.

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்: இளவேட்டனார் பார்க்க. திருவள்ளுவமாலை 35-வது வெண்பா இவர் பாடியதாக வழங்கும்.

மதுரை ஆசிரியர் கோடங் கொற்றனார்: இவர் பாடியது: குறு. 144.

மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்: நல்லந்துவனார் பார்க்க.

மதுரை ஆசிரியர் பூதனார்: பூதனார் பார்க்க.

மதுரை ஆருலவிய நாட்டு ஆலம் பேரிசாத்தனார்: ஆலம் பேரி சாத்தனார் பார்க்க.

மதுரை இளங் கண்ணிக் கௌசிகனார்: (சங்ககாலம்) இவர்பாடியது. புறம். 309.

மதுரை இளங் கௌசிகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 381.

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தன்: (சங்க காலம்) இவர் தினைமேய வந்த யானை கொடிச்சி பாட்டைக் கேட்டுத் தினையைக் கவராது உறங்குமென்று கூறுவதோடு மூங்கிற் குழாயிலுள்ள பாம்பு விடம் போலக் கடுப்புடைய தோப்பிக் கள்ளை மலைத்தெய்வத்துக்குப் படைத்து விட்டுப் பின்பு அதனை எல்லோரும் குடிக்கும் மலைநாட்டார் வழக்கினையும் கூறுகின்றார். இவர் பெயர் மதுரைப் பாலாசிரியன் சேனங் கூத்தன் எனவுங் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம். 102, 348; நற். 273.

மதுரை ஈழத்துப் பூதந் தேவனார்: (கி.மு. 180) இவர் ஈழ நாட்டினின்றும் சென்று மதுரையில் வாழ்ந்த பூதன் மகன் தேவனாராவர். தினைக்கதி ருண்ணவந்த பன்றி பல்லிச் சகுனம் பார்த்து வரும் என்றும், வண்டோசையை யாழோசை யென்று அசுணம் ஆராயுமென்றும் இவர் கூறியுள்ளார்; பசும்பூட் பாண்டியன் வெற்றிச் சிறப்பினையும் கூடலினது பெருமையினையும் புகழ்ந்து பாடி யுள்ளார். ஈழத்துப் பூதந்தேவனார் பார்க்க.

மதுரை எழுத்தாளனார்: சேகம்பூதனார் பார்க்க. கழுதை மேலே உப்புப் பொதி ஏற்றிப்போகும் உமணர் வழக்கினையும் அவர் தாம் புறப்படுமுன் புள்நிமித்தம் பார்த்துக்கொண்டு புறப்படுவதனையும் இவர் கூறுகின்றார்.

மதுரை ஓலைக் கடையக் கண்ணம்புகுத நாராயத்தனார்: (சங்ககாலம்) இவர் பெயர் மதுரை ஓலைக் கடைக்கண்ணம் புகுந்தாராயத்தனார் எனவும் காணப்படும். இவர் பாடியது: புறம். 350

மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார்: (சங்ககாலம்) இவர் பாடியன: நற். 250, 369.

மதுரைக் கடையத்தார் மகன் வெண்கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 223.

மதுரைக் கணக்காயனார்: (சங்ககாலம்) கணக்காயரென்பது ஓத்துரைப்போர், உவாத்தியாயர் எனப்பொருள் படும். இவர் ஊர் மதுரையாகும். இவர் அக்காலத்துப் பரந்த புகழுடைய சிறந்த பள்ளிக்கூட உவாத்தியாயராக விருந்தனர் போலும். குறுந்தொகையில் 304 கணக்காயன் தத்தன் என்றிருத் தலால் இவர் இயற்பெயர் ததன் என்று ஒருவாறு கொள்ளலாம். இவர் நக்கீர னாரது தந்தையும், கீரங்கொற்றனாரது பாட்டனுமாவர்.இவர் வேங்கடத்தரசர் பாண்டியர்க்குத் திறையாக யானைகளைத் தருவதனையும், கொற்கைத் துறைமுகத்தின் சிறப்பையும், பசும்பூட் பாண்டியனது செங்கோல், வெற்றிப் பிரதாபம் இவற்றினையும், பொறையனது கொல்லிமலையையும், சோழரது பாக்கப் பெருந்துறையையும் சிறப்பித்துக் கூறுவதோடு “தென்னன் ஒருவன் தொடா வண்ணம் அருவி பாயும் மலைக்குகையில் மறைந்து கொண்ட வரை அரமகளிரது செய்தியையும் விரித்துள்ளார்” (பி.நா.ஐ.) இவர் நக்கீரரின் தந்தை அல்லாதவரும் கி.மு.180இல் வாழ்ந்த பிறிதொருவருமென இலக்கிய வரலாறு காரர் கூறியுள்ளார். இவர் பாடியன: அகம். 27, 338, 342; நற். 23; புறம். 330.

மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார்: நக்கீரனார் பார்க்க.

மதுரைக் கண்டாகத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 317

மதுரைக் கண்ணங் கூத்தனார்: (சங்ககாலம்) இவர் செய்தது கீழ்க்கணக்கு நூல்களிலொன்றாகிய கார் நாற்பது. இந்நூல் தலைவன் பிரிவைத் தலைவி ஆற்றியிருத்தலாகிய முல்லைத்திணைப் பொருளமைந்த 40-வெண்பாக் களையுடையது.

மதுரைக் கண்ணத்தனார்: (சங்ககாலம்) செவ்வானம் படிந்த மேல்கடல் சங்கர நாராயணர் அவதாரம் போன்றுள்ள தென்று இவர் வருணித்துள்ளார். இவர் பாடியன: அகம். 360; நற். 351

மதுரைக் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பெயர் கண்ணனார் எனவும் வழங்கும். இவர் பாடியது: குறு. 107.

மதுரைக் கதக்கண்ணனார்: கதக்கண்ணனார் பார்க்க.

மதுரைக் கந்தரத்தனார்: (சங்ககாலம்) இவர் பெயர் மதுரைக் கூத்தனார், மதுரைக் கடாரத்தனார், மதுரைக் கோடரத்தனாரெனவுங் காணப்படுகின்றது. இவர் பாடியது: அகம். 334.

மதுரைக் கவுணியன் பூதத்தனார்: (சங்ககாலம்) இவர் பெயர் மதுரைக் கவுணி யன் முத்தனார் எனவுங் காணப்படுகின்றது. இவர் பாடியது: அகம். 74.

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்: (சங்ககாலம்) நாகனா ரென்பது இவர் இயற் பெயர். அத்தன் இவரது தந்தையின் பெயர். இவர் அலவனைத் தலைவி தூது விடுவதாகப் பாடியுள்ளார். இவர் பாடியன: அகம். 170; புறம். 316.

மதுரைக் காஞ்சிப் புலவர்: மாங்குடி மருதனார் பார்க்க.

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்: (சங்ககாலம்) இவர் வழுதியின் வெற்றிச் சிறப்பினையும், வாணன் சிறு குடியினையும் பாராட்டிக் கூறியுள்ளார். இவர் பாடியது: அகம். 204.

மதுரைக் காருலவியங் கூத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 325.

மதுரைக் கூடலூர் கிழார்: (கி.பி. 5ஆம் நூ.?) இவர் கீழ்க்கணக்கு நூலொன்றாகிய முதுமொழிக் காஞ்சி பாடியவர். இவர் ஐங்குறு நூறு தொகுத்த புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரின் வேறானவர் என்று கருதப்படுவர். இந்நூலில் ஒவ் வொன்றிலும் 10-ப் பாடல்கள் அடங்கிய 10-ப் பிரிவுகளுள. அவை சிறந்த பத்து, அறிவுப் பத்து, பழியாப்பத்து. துவ்வாப் பத்து, அல்லபத்து, இல்லை பத்து, பொய்ப்பத்து, எளியபத்து, நல்கூர்ந்த பத்து, தண்டாப்பத்து என்பன. ஒவ்வொரு பத்தும் முதற் செய்யுள் குறட்டாழிசையாகவும் மற்றைய ஒன்பது பிற செய்யுட்களாகவும் அமைந்துள்ளன.

மதுரைக் கூத்தனார்: மதுரைக் கந்தரத்தனார் பார்க்க.

மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்: (கி.பி. 140-) கூலம், எள்ளு கொள்ளு முதலிய தானியங்களாகும். வாணிகன் இவற்றை விற்கும் வியாபாரி. சீத்தலைச் சாத்தன் என்பது உறுப்புப் பற்றி வந்த பெயரென்பர் சேனாவரையர். (தொல். சொல் 174). சீத்தலை ஓர் ஊர் என்று கருதப்படுகின்றது. இவர் சாத்தன் என்னும் இயற் பெயருடையராய் மதுரையில் நவதானியம் விற்றுவந்தவராவர்; மணிமேகலை என்னும் நூலை இயற்றியவர்; பௌத் தத்திற் சிறந்த பயிற்சியுடையவர். நடுகல்லின் நிழலை இனிய நிழலெனக் கருதிச் செந்நாயுறையு மெனச் சுரத்தின் கொடுமை கூறியுள்ளார். (அகம் 53.) “இவர் தமிழில் ஐம்பெருங்காப்பியங்களிலொன்றாகிய மணிமேகலையை இயற்றியவர். அது துறவின் பெருமைகளை விரித்துக்கூறுவதோடு அக் காலத்திய மதங்களின்கொள்கைகள் இன்னவென்றும் காட்டுவது. சேரன், செங்குட்டுவன் அவைப் புலவராக இருந்தாரெனப் பலர் கூறுவர். ஆரியப் படைதந்த நெடுஞ்செழியன், வெற்றிவேற் செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், உக்கிரப் பெருவழுதி என்ற நால்வர் காலத் தும் இவர் இருந்தன ரென்பர். இவரியற்றிய மணி மேகலையும், இளங்கோ வடிகள் இயற்றிய சிலப்பதிகாரமும் இரு பெருங் காப்பியங்களாக எண்ணப் படினும் இரண்டும் ஒரு தொடர்ந்த கதையைச் சொல்வனவாம். இவர் பௌத்தமதத்தை நன்றாயறிந்தவர். அதன் பெருமையைத் தமிழ் மக்கள் அறியும்படி தெளிவாக இவர் சொல்லியிருப் பதுபோல் கூறும் வேறு நூல் தமிழில் இல்லை . இவர் காலத்தில் பௌத்தமதம் தமிழ்நாட்டில் பரவியிருந் ததைச் சிலப்பதிகாரம், மணிமேகலை என்னும் இரண்டாலும் அறியலாம். இவரது கல்விப் பெருமை ‘தண்டமிழ்ச் சாத்தன்’, ‘தண்டமிழாசான் சாத்தான்’, ‘நன்னூற் புலவன்’ என இளங்கோவடிகள் சொல்லியிருப்பதால் விளங்கும். இவர் இலக்கண நூலும் செய்தாரென்பர்.” “ஆரியப்படை தந்த நெடுஞ்செழி யன் இறந்த அணிமையில் கூலவாணிகன் சாத்தனார் செங்குட்டுவன் என்னும் சேர அரசனோடு பேரியாற்றங்கரை சென்று கோவலன் கதையை அவ் விடத்துச் சொல்லியதும் கூட இருந்த இளங்கோவடிகள் அக்கதையைச் செய்யுளில் செய்வே னென்றபொழுது, சாத்தனார் கதையின் தொடர்ச்சியை மணிமேகலை என்னும் செய்யுளாகத் தாம் செய்வதாகச் சொல்லி இளங்கோ வடிகள் சிலப்பதிகாரத்தைச் செய்து முடிப்பதற்கு முன்னரே மணிமே கலையைப் பாடிமுடித்தனரென்பது ‘மணிமேகலை மேலுரைப் பொருண் முற்றிய சிலப்பதிகாரம்’ என்று நூற்கட்டுரையில் இளங்கோவடிகள் சொல்வ தனாலே விளங்கும்.” (தமிழ் வரலாறு - சீனிவாச பிள்ளை). சீத்தலைச் சாத்தனார் பார்க்க.

மதுரைக் கொல்லன் புல்லன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 373 மதுரைக் கோலம் புல்லனாரெனவும் இவர் பெயர் காணப்படுகின்றது.

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்: (சங்ககாலம்) மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்ணாகனார் எனவும் இவர் பெயர் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம் 363; நற். 285.

மதுரைச் சுள்ளம் போதனார்: (சங்ககாலம்) இவர் சுள்ளம்போது என்னும் ஊரிலிருந்து மதுரையை அடைந்து வாழ்ந்தவர். இவர் பாடியது: நற். 215.

மதுரைச் செங்கண்ணனார்: (சங்ககாலம்) சிவந்த கண்ணுடைமையால் இப்பெயர் பெற்றனர் போலும். இவர் பாடியது: அகம். 39. (செங்கண்ணனார் பார்க்க.)

மதுரைத் தத்தங் கண்ணனார்: (சங்ககாலம்) தத்தன் என்பது இவர் தந்தை பெயர். பாண்டியனது கூடலை இவர் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது: அகம். 335.

மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார்: (-) திருவள்ளுவமாலை 34ஆம் வெண்பா இவர் பாடியதாக வழங்கும்.

மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார்: (கி.பி. 5ஆம் நூ?) இவர் கீழ்க்கணக்கு நூலொன்றாகிய இனியவை நாற்பது செய்தவர். பூதஞ்சேந்தனார் பார்க்க.

மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 164.

மதுரைத் தமிழ்க் கூத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 334.

மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார்: (சங்ககாலம்) இவர் பெயர் கடுவன் மள்ளனாரெனவுங் காணப்படுகின்றது. ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து என்பவற்றுள் தமிழ்க் கூத்து ஆடுபவர் இவர். கடுவனென்பது ஒரு ஊர். மள்ளன் இவரது இயற்பெயர். தனுக்கோடிக் கரையில் இராமர் மந்திராலோ சனை செய்தபோது ஓராலமரத்திற் புட்கள் மிக ஒலித்து ஆலோசனைக்கு இடையூறு செய்ய அவ்வொலியை அவர் அவித்த கதையினை இவர் கூறி யுள்ளார். (அகம். 70). கள்ளூரிலுள்ள ஒருத்தியைக் கற்பழித்தவனை அவ் வூரவையத்தார் சாட்சியாற் குற்றவாளியெனக் கண்டு அவனை நீற்றறையி லிட்ட கதையினையும் கூறினார். இவர் பாடியன: அகம். 70, 256, 354; நற். 204.

மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன் தேவனார்: (சங்ககாலம்) இவர் பாடியது:
அகம். 164.

மதுரைத் தமிழ் நாகனார்: (-) திருவள்ளுவமாலை 29-வது வெண்பா இவர் பாடியதாக வழங்கும்.

மதுரைத் தமிழ் நாயகனார்: (-?) “எல்லாப் பொருளுமிதன்பால்” என்னும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இப்பெயர் சங்கப்புலவர் வரிசையிற் காணப்படவில்லை.

மதுரை நக்கீரனார்: நக்கீரனார் பார்க்க.

மதுரை நல் வெள்ளியார்: (சங்ககாலம்) இவர் பெண் புலவர். இவர் பாடியன: அகம். 32, குறு. 365; நற். 7, 47. இவர் பாட்டிற்கு நச்சினார்க்கினியர் விளக்கமான உரை எழுதியுள்ளார். (தொல். பொ. 519).

மதுரைப் பண்ட வாணிகன் இளந்தேவனார்: (சங்ககாலம்) இவர் பெயர் இளந்தேவனார் எனவும் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம். 58, 298, 328; நற். 41.

மதுரைப் பள்ளி மருதங் கிழார் மகனார் சொகுத்தனார்: (சங்ககாலம்) இவர் மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் எனவும் அறியப்படுவர். இவர் பாடியன: நற். 329, 352.

மதுரைப் பாலாசிரியர்: (-?) “வெள்ளி வியாழம்” என்னும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. பாலாசிரியரென்பது பாலர் (சிறுவரின்) ஆசிரியர் எனப் பொருள்படும். மதுரைப் பேராசிரியர் சேந்தன் கொற்றனார். மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் முதலிய பெயர்கள் சங்கப் புலவர் வரிசையிற் காணப்படுகின்றன.

மதுரைப் பாலாசிரியர் சேந்தங் கொற்றனார்: மதுரை இளம் பாலாசிரியன் சேந்தன் கூத்தன் பார்க்க.

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்: (சங்ககாலம்) இவர் கானவன் கை இரும்பு வடித்தது போலும் என்று கூறுவதனோடு அக்கானவன் யானையைக் கொன்று வெண்கோடு பெறுவதனையுங் கூறுகின்றார். இவர் பாடியது: அகம். 172.

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 92.

மதுரைப் பாலாசிரியர் சேனங் கூத்தன்: மதுரை களப்பாலாசிரியன் சேந்தன் கூத்தன் பார்க்க.

மதுரைப் பிள்ளை: மதுரை வெண்பா மாலை. (1891.)

மதுரைப் புல்லங் கண்ணனார்: (சங்ககாலம்) இவரது தந்தை பெயர் புல்லன். இவர் பாலையைப் புனைந்து பாடியுள்ளார். இவர் பாடியது; அகம். 161.

மதுரைப் பூதனார்: (-?) இவர் இன்னிலை என்னும் பதினெண்கீழ்க் கணக்கு நூல் தொகுத்தவர்.

மதுரைப் பூதனிள நாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 276.

மதுரைப் பூவண்டநாகன் வேட்டனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 317.

மதுரைப் பெருங் கொல்லனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 141.

மதுரைப் பெருமருதனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 241. “அறமுப்பத் தெட்டு” என்னும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப் படுகின்றது.

மதுரைப் பெருமருதிள நாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 251.

மதுரைப் பேராலவாயார்: (கி.மு. 245.) பேராலவாயார் எனவும் இவர் பெயர் காணப் படுகின்றது. இவர் ஒல்லையூர்ந்த பூதப்பாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டு தன் கணவன் இறந்தபோது தீய்ப்பாய்ந்த காலை இரங்கிப் பாடி யுள்ளார். இவர் பாடியன: அகம். 87, 296; நற். 5, 361; புறம். 247, 262.

மதுரைப் பொன்செய் கொல்லன் வெண்கண்ணனார்: (சங்ககாலம்) மதுரைக் கொல்லன் வெண்கண்ணனார் பார்க்க. இவர் தட்டார் மரபினர்; பாலை நிலத் தில் நெல்லிக்காய் உதிர்வது பொன் காசு உதிர்வது போலுமென வருணித்துப் பாடியவர். இவர் பாடியது: அகம். 363.

மதுரைப் போத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 75.

மதுரை மருதங் கண்ணனார்: மருதனிள நாகனார் பார்க்க.

மதுரை மருதங் கிழார் மகனார் சொகுத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியன: நற். 329, 352.

மதுரை மருதங் கிழார் மகனார் பெருங் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் வேளாளர். ஆடுகளப் பறையைப் போலத் தவளை ஒலிப்பன வென்றும், பொன்னாபரணத்தைத் தொங்கவிட்டதுபோல் கொன்றைப் பூங்கொத்து மலர்ந்து விளங்கு கின்றனவென்றும் இவர் உவமை கூறியுள்ளார்; கரடி இருப்பைப்பூ உண்பதை வருணித்துள்ளார். இவர் பாடியன: அகம். 247, 364; நற். 388.

மதுரை மருதங் கிழார் மகன் இளம் போத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 332.

மதுரை மருதனிள நாகனார்: (கி.மு. 62-) இவர் கலித்தொகையில் மருதக் கலிப்பாட்டு முப்பத்தைந்து பாடிய ஆசிரியராவர். இதனை “மருதனிள நாகன் மருதம்” என்றதனால் அறியலாம். அதனைக் கோத்த நல்லந்துவ னாரிடம் இவர் பெருமதிப்புடையர்; தொழுநை (யமுனை) யாற்றங்கரையில் கண்ணன் கோபியரது ஆடையைப் பறித்துக்கொண்டு குருந்த மரத்தில் ஏறிய கதையினைக் கூறியுள்ளார் (அகம். 56.). கொங்கரது உள்ளி விழாவினையும் கழுவுளது காமூரிடத்து பூதந்தந்த வேங்கையினையும், வாணன் சிறுகுடியி னையும், கடவுளரெல்லாம் பலிபெறுதற்கிடமானதும் கோசரது சிறந்த கடைத் தெருவைக் கொண்டுள்ளதுமான செல்லூரிலே பரசுராமன் வேள்வி செய்த வரலாற்றினையும், வேளிரது வீரை மூன்றுறையிலே உப்புக் குவடு மிக்குள் ளன வென்பதையும், ஊனூர், சாய்க்காணம் முதலியவற்றையும் புகழ்ந்தனர். மற்றும் இவர் எருமையின் வளைந்த கொம்பு பேடிப் பெண்ணின் ஆடுகை போன்றுள்ளது என்றும், இரலையின் திரிமருப்புக் கானவன் கவை பொறுத் தாற் போன்றுள்ள தென்றும் வருணித்துள்ளார். குடவோலை யெடுத்துப் பிரமாணம் வாங்கும் வழக்கினையும் கூறுவர். இறையனார் களவியலுக்கு இவருமோருரை யியற்றினார். அதனையும் உருத்திர சன்மர் ஒருவாறு ஏற்றுக் கொண்டனரெனத் தெரிகிறது. இவர் புறத்தில் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி, நாஞ்சில் வள்ளுவன் முதலியோரைப் பாடியுள்ளனர். இவர் பாடியன: புறம். 55, 349, 138. 139, 140; அகம். 34, 59, 77, 90, 104, 121, 131, 184, 193, 206, 220, 245, 255, 269, 283, 297, 312, 343, 358, 365, 368, 380, 387; குறு. 77, 160, 279, 367 என்பன.

மதுரை வேளாசான்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 305.

மத்தான் சாயிபு: (19ஆம் நூ. முற்.) இவர் திருச்சினாப்பள்ளியில் அத்தர் வியாபா ரியாக விருந்தவர்; வாலையை வழிபட்டுச் சித்தர் நெறியில் நின்ற முகமதியர். இவர் இயற்றிய பாடல்கள் தாயுமானவர் பாடல்கள் போன்று உருக்கமுடை யன. இவர் குணங்குடியார் எனவும் அறியப்படுவர். இவர் இயற்றிய நூல்கள் அகத்தீசர் சதகம், நந்தீசர் சதகம், கிறித்துமத கண்டன வச்சிரத்தண்டம் முதலி யன. ஐயாச்சாமி முதலியார் என்பார் குணங்குடிநாதர் பதிற்றுப்பத்தந்தாதி ஒன்று பாடியுள்ளார்.

மயன்: மனை நூலென்னும் சிற்ப சாத்திரம்; சிற்ப சிந்தாமணி.

மயிலுப் பிள்ளை: ஞான சவுந்தரி அம்மானை. (கொழும்பு 1890.)

மயிலேறும் பெருமாள் பிள்ளை: (17ஆம் நூ.) இவர் திருநெல்வேலி தாண்டவ மூர்த்திப் பிள்ளையின் குமாரர்; வேளாண் குடியினர்; ஈசான தேசிகர் எனப் படும் இலக்கணக்கொத்து சுவாமிநாத தேசிகரின் ஆசிரியர். இவர் கல்லாடம் 37 பாடல்களுக்கு உரை செய்துள்ளார். மீதிப் பாடல்களுக்குச் சுப்பிரமணிய முதலியார் உரை செய்தனர். இவர் தொல்காப்பியம், குறள் என்பவற்றுக்கும், சில சைன நூல்களுக்கும் உரை செய்ததாகக் கேட்கப்படுகின்றது.

மயிலை நாதர்: (13ஆம் நூ.) இவர் நன்னூலுக்கு உரையியற்றிய சைன முனிவர்.

மயில் வாகனப் புலவர்: (1779-1816) இவர் யாழ்ப்பாணத்து மாதகல் என்னு மூரிற் பிறந்தவர்; கூழங்கைத்தம்பிரானிடம் கல்வி கற்றவர். இவர் இயற்றிய நூல்கள் புலியூர் யமகவந்தாதி, யாழ்ப்பாணவைபவம், ஞானாலங்கார நாடகம், காசி யாத்திரை விளக்கம் என்பன. புலியூர் யமகவந்தாதிக்கு க. வேற்பிள்ளை அவர்கள் உரை செய்துள்ளார்.

மயேச்சுரர்: (11-நூ. - 13-நூ.) இவர் செய்த நூல் மயேச்சுரர் யாப்பு. இவர் பெயர் மயேச்சுவரர் எனவும் காணப்படும். (யா.க.வி.) பேராசிரியர் ii பார்க்க.

மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்: (சங்ககாலம்) இவர் வேளாண் குடியினர். மருங்கூர் என்னும் ஓர் ஊர் நாகப்பட்டினத்துக் கருகிலுள்ளது. பாண்டியநாட்ட கத்தும் ஒரு மருங்கூர் உள்ளதெனத் தெரிகிறது. இவர் பாடியது: அகம். 80.

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்: (சங்ககாலம்) மருங்கூர்ப் பட்டினம் பாண்டிநாட்டிலுள்ள தோரூர். இவர் பாடியது: நற். 289.

மருங்கூர்ப்பாகை சாத்தன் பூதனார்: (சங்ககாலம்) மருங்கூர்ப்பாகை ஓர் ஊர் போலும். இவர் அத்தத்திற் செல்வோரை வேடர் அம்புவிட்டுக் கொன்று விட்டுத் தமது அம்பு சிதைந்தமைக்கு வருந்துதலல்லது இறந்தவர்க்கு இரங் கார் என அவரது கொடுமையைக் கூறுகின்றார். இவர் பாடியது: அகம். 327.

மருதத்தூருடையான் குன்றன் திருச்சிற்றம்பல முடையான்: (11ஆம் நூ.) இவர் முதற்குலோத்துங்க சோழன் காலத்து (1070-1119) வாழ்ந்த தமிழ்ப்புலவர்களி லொருவர். இவர் சோணாட்டிலுள்ள உறத்தூர்க் கூற்றத்துப் பையூருடையான் என்ற தலைவனைக் கவிபாடிப்புகழ்ந்த புலவரென்பது புதுக்கோட்டைச் சாசனமொன்றால் அறிய வருகின்றது. (சா.த.க.ச.)

மருதம்பாடிய இளங்கடுங்கோ: (கி.மு. 180-) இவர் பரணர் காலத்து விளங்கி யவர். இவர் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் உடன் பிறந்தவராகலாம். அவ்வாறாயின் இவர் சேரர் மரபினராவர். இவர், தாமரையின் தண்டு கழை போன்று பருத்து உள்ளே தூம்புடையதாயிருக்கிறதென்றும், இலை களிற்றுச் செவி போன்றுள்ளதென்றும் முகை கழு நிவந்தது போன்றுள்ள தென்றும், மலர் மகளிர் முறுவல் முகம்போல் இரா நின்றதென்றும் வருணிப் பதுமன்றி, வேப்பம்பூ முகைபோல நண்டின் கண்கள் விளங்குகின்றன வென்றும் உவமை கூறியுள்ளார் (அகம் 176.) அகுதை என்ற வனப்பின் மிக்க ஒருத்தி யின் தந்தையாகிய சோழர் பாண்டியரைப் பருவூரில் தாக்கி முறியடித்தன ரென்றும் கூறியுள்ளார். இவர் பாடியன: அகம். 96, 176; நற். 50.

மருதவன் கவிராசன் இராமநாதன்: (16ஆம் நூ.) திருநெல்வேலி சில்லா திருப்புடை மருதூர்ச் சிவாலயத்தே கோமதியம்மன் சன்னிதி மண்டபத்து அமைந்த கல் எழுத்துக்களால் இராமநாதன் என்பார் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளுள் ஒருவரெனத் தெரிகிறார். (சா.த.க.ச.)

மருதனிள நாகனார்: மதுரை மருதனிள நாகனார் பார்க்க.

மருதூர் ஆபத்தாரணர்: இவர் குருஞான சம்பந்தரின் மாணவர் என்று கருதப்படு வர். இவர் செய்த நூல் பூகோள விலாசம். இது நீட்டலளவையின் விவரண மும், அண்டம், புவனம், திக்குப்பாலர், நவ கண்டம் இவைகளின் விவரண மும், மருதூர் சிவபிரானது சிறப்பும் கூறுவதொரு நூல். இது கலிவெண்பாவா லாகியது. 899 கண்ணிகளையுடையது.

மருத்துவனல்லச் சுதனார்: (-?) இவர் பரிபாடல் 6, 8, 9, 10, 15, 19 ஆம் பாடல் களுக்கு இசை வகுத்தவர்.

மருத்துவன் தாமோதரனார்: (கி.பி. 50) இவர் உறையூர் மருத்துவன் தாமோதரனார் எனவும் படுவர். “சிந்தி நீர்க்கண்டம்” என்னும் திருவள்ளுவ மாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. உறையூர் மருத்துவன் தாமோதரனார் பார்க்க.

மருந்துமலை தேசிகர் சீடர்: சிவாநந்த போதகம்.*

மருள் நீக்கியார்: அப்பர் பார்க்க.*

மலைக்கொழுந்து கவிராயர்: (20ஆம் நூ.) இவர் கொடுமுடி என்னும் ஊரினர்; பல தனிப்பாடல்கள் செய்தவர். (கொ.பு.)

மலையப்ப பண்டிதர்: உடுமலைப்பேட்டை செங்குந்தர் குலதிபிகை, (1905.)

மலையனார்: (சங்ககாலம்) இவர் தமது பாடலில் “மல்லற்றம்ம இம்மலை கெழுவெற்பு” எனக் கூறிய அருந்தொடர் மொழியைத் தமக்குப் பெயராகப் பெற்றவர். இவர் பாடியது: நற். 93.

மல்லர்: (12ஆம் நூ.) இவர் திருக்குறளுக்கு உரை செய்த பதின்மருளொருவர்.

மல்லிகம் முதலியார்: ஞானோதயம் (யாழ்ப்பாணம்) (1841), தற்சமய சாட்சி. (ஷெ 1845)

மல்லிசேணர்: (14ஆம் நூ.) இது மேருமந்தர புராணஞ் செய்த வாமனாசாரியருக்கு மற்றொரு பெயர்.

மல்லையர், பாலவாயல்: தாரா சங்கிரக விசய மென்னும் தாரா சங்கிரக நாடகம். (சென்னை 1905.)

மள்ளனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 72; நற். 204.

மறைஞான சம்பந்தர்: (13ஆம் நூ.) இவர் திருக்களன் சேரியிற் பிறந்த வேளாளர்; அருணந்தி சிவாசாரியரின் மாணவர்; உமாபதி சிவாசாரியரின் ஆசிரியர். இவர் சிவதருமோத்தரமென்னும் நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்து இயற்றினார் என்னும் செய்தி வழங்கும். சிவதருமோத்தரம் செய்தவர் 16ஆம் நூற்றாண்டில் விளங்கிய பிறிதொரு மறைஞான சம்பந்தரெனத் தெரிகிறது.

மறைஞான சம்பந்தர்: (1555-) இவர் சிதம்பரத்தில் வாழ்ந்த துறவி; வேளாண் மரபினர்; வடமொழி, தென்மொழி வல்லுநர். இவரியற்றிய நூல்கள் தொல் காப்பியம் சிவமயம், கமலாலய புராணம், சிவதரு மோத்தரம், பதி பசு பாசப்பனுவல், சங்கற்ப நிராகரணம் (இது உமாபதிசிவம் செய்த சங்கற்ப நிராகரணத்தின் வேறானது), பரமோபதேசம், முத்திநிலை, சைவசமயநெறி, அருணகிரிப் புராணம் என்பன. பரமததிமிரபானு, இறைவனூற்பயன், சகலாகமசாரம் என்னும் நூல்களும் இவர் செய்ததாகக் கூறப்படும். கமலாலய புராணம் திருவாரூர்த் தலப்பெருமையைக் கூறுவது. இது கி.பி. 1548இல் இயற்றப்பட்டது. இந்நூல் 20 சருக்கங்கள் கொண்ட 1065 பாடல்களை யுடையது. அருணகிரிப் புராணம் செய்யத் தொடங்கிய காலம் கி.பி. 1555ஆம் ஆண்டு. மகாசிவராத்திரி கற்பம், சோமவார கற்பம், வருத்தமற உய்யும் வழி, உருத்திராக்க விசிட்டம், திருக்கோயிற் குற்றம் என்னும் நூல்களும் இவர் செய்தனவாக வழங்கும். இவற்றை இவர் மாணாக்கர் ஒருவர் செய்தனராக லாம் எனக் கூறுவர் எ°. சோமசுந்தர தேசிகரவர்கள். சிற்றம்பல நாடி மாலை, சிற்றம்பல நாடி வெண்பா முதலியனவும் இவர் செய்ததாக வழங்கும்.

மறைஞான தேசிகர்: (16ஆம் நூ.) இவர் மறைஞான சம்பந்தரின் மாணவர். சிவஞான சித்தியாருக்கு உரை செய்தவர்.

மறைமலையடிகள்: (1876-1950) இவர் இயற்பெயர் வேதாசலம் பிள்ளை; சுவாமி வேதாசலம் எனவும் அறியப்படுவர். இவரது பிறப்பிடம் நாகப்பட்டினம்; தந்தை பெயர் சொக்கநாத பிள்ளை. இவர் சென்னை கிறி°துவ கல்லூரியில் தமிழ்ப்புலமை நடத்திப் பல்லாவரத்தில் தங்கி வாழ்ந்தவர். இவர் தமிழ்ப் பெரும் புலமைபெற்றுச் செந்தமிழ் நடையில் அரிய நூல்கள் பல எழுதியவர். தூய தமிழ்நடை எழுதுவதில் இவருக்கு இணையானவர் எவரும் இன்னும் தோன்றவில்லை. இவர் இயற்றிய நூல்கள்: முல்லைப்பாட்டாராய்ச்சி, பட்டினப் பாலை ஆராய்ச்சி, சிந்தனைக் கட்டுரைகள், அறிவுரைக் கொத்து, பண்டைக் காலத்தமிழரும் ஆரியரும், கோகிலாம்பாள் கடிதங்கள், சாகுந்தல நாடகம், குமுதவல்லி - நாகநாட்டரசி, தமிழர் நாகரிகம், சைவசித்தாந்த ஞானபோதம், மாணிக்கவாசகர் வரலாறும் காலமும், திருவாசக விரிவுரை (அகவல்கள் மாத்திரம்), யோக நித்திரை, மக்கள் நூறாண்டு உயிர் வாழ்வதெப்படி, சிவஞான போத ஆராய்ச்சி (முடிவுறவில்லை), மரணத்தின் பின் மனிதர் நிலை, தமிழ்மொழி பிறமொழிக் கலப்பு, பொருந்துமுணவும் பொருந்தா உணவும், வேளாளர் நாகரிகம், தமிழர் சமயம். திருவொற்றியூர் முருகர் மும்மணிக் கோவை (1900) ஒங்கார உண்மை (1920) முதற்குறள்வாத நிராகரணம் (1898) சோம சுந்தரக் காஞ்சியும் ஆக்கமும், பஞ்சாட்சர ரகசியம் (1920).

மனவாசகங் கடந்தார்: (13ஆம் நூ.) இவர் மெய்கண்ட தேவரின் 49 மாணவருள் ஒருவர்; திருவதிகையில் இருந்தவர். இவர் உண்மை விளக்கம் என்னும் நூலை கி.பி. 1245இல் இயற்றியவர். இந்நூலில் 54 வெண்பாக்களுண்டு; இதற்குப் பழைய உரை ஒன்று உண்டு.

மனவாசகங் கடந்தார்: (திருவதிகை மெய்கண்ட தேவர் மாணவர்). குருமொழி வினாவகவல், உண்மை விளக்கம்.* இவர் முன் கூறப்பட்டவரேயாவர்.

மாகலூர் கிழான்: (-?) இவர் புறப்பொருள் வெண்பா மாலைக்கு உரை இயற்றிய வர்; சாமுண்டித் தேவநாயனாரென்றும் இவர் அறியப்படுவர்.

மரக்காயர் மகனார் கணிமேதாவியார்: (7ஆம் நூ.) சைனப் புலவராகிய இவர் செய்த நூல் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களிலொன்றாகிய ஏலாதி. ஏலம், இலவங்கம், சிறுநாவற் பூ, மிளகு, திப்பிலி, சுக்கு இவ்வாறும் ஒன்றுமுதல் ஆறுவராகனெடையாகச் செய்த சூரணம் உடலுக்கு நன்மை பயப்பதுபோல் ஆறு நீதிகளைப் புகட்டி நன்மை பயப்பது இந்நூல். பெயர்க்காரணம் இதனால் விளங்கும்.

மாங்குடி கிழார்: காஞ்சிப்புலவர் பார்க்க.

மாங்குடி மருதனார்: (கி.மு. 62) இவர் பாடியது மதுரைக் காஞ்சி. இது தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது. இது 782 அடிகளை யுடைய அகவற்பாவா லமைந்துள்ளது; வீடு பெறுவதனிமித்தம் அப்பாண்டி யனுக்கு நிலையாமையைச் செவியறிவுறுத்திப் பாடப்பட்டது. இந்நூல் அப் பாண்டியனுடைய முன்னோரின் பெருமையையும், பாண்டி நாட்டின் ஐந்திணைவளங்களையும், மதுரையின் அழகையும் கூறும். தொல்காப்பியர் காஞ்சி இலக்கணம் “பாங்கருஞ் சிறப்பிற் பல்லாற்றானும், நில்லாவுலகம் புல்லிய நெறித்தே” எனக் கூறினார். நச்சினார்க்கினியர் “வீடுபேறு நிமித்த மாகப் பல்வேறு நிலையாமை சான்றோறையும் குறிப்பினது காஞ்சித்திணை” என்றதனால் அது விளங்கும். மதுரைக் காஞ்சி என்பதற்கு மதுரையிடத்து அரசற்குக் கூறிய காஞ்சி என்று நச்சினார்க்கினியர் பொருள் கூறுவர். காஞ்சிப் புலவர் பார்க்க. திருவள்ளுவமாலை 24-வது பாடல் இவர் செய்ததாக வழங்கும்.

மாசிலாமணிச் சம்பந்தர்: (16ஆம் நூ.) இவர் கமலை ஞானப்பிரகாசருக்கு மாணவர்; உத்தரகோச மங்கைப் புராணமியற்றியவர்; தொண்டை நாட்டினர்.

மாடலூர் கிழார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 150.

மாணிக்க நாயக்கர் பா.வே.: (1871-1931) இவர் அரசாங்கத்தில் அளவைப் பெரும்பிரிவில் மேற்பார்வைக்குரிய உயர்தரவேலையில மர்ந்து ஆறுத லடைந்திருந்தவர். பிறமொழிச் சொற்களைத் தமிழில் திறம்பட மொழி பெயர்த்து அமைக்கும் ஆற்றல் சான்றவர். தமிழ் ஆராய்ச்சியையே பொழுது போக்காகக் கொண்டவர். இவர் இயற்றிய நூல்கள் தமிழ்மறை விளக்கம் (ஆங்கிலம்), தமிழலகைத் தொடர், அஞ்ஞானம் முதலியன.

மாணிக்கவாசகர்: (4ஆம் நூ.க்கும் 6ஆம் நூ. க்கும் இடையில்) இவர் வாதவூரிற் பிறந்த ஆமாத்தியர் குலத்தந்தணர். இவர் பொருட்டுச் சிவபெருமான் பல திருவிளையாடல்கள் நிகழ்த்தினார் எனக் கல்லாடம், திருவிளையாடற் புராணம் முதலிய நூல்கள் கூறுகின்றன. கடவுள் முனிவர், திருவாதவூரடிகள் புராணமென இவர் வரலாற்றைக் கூறும் புராணஞ் செய்துள்ளார். இவர் பாடியன திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார் என்பன. திருவாசகம் 8ஆம் திருமுறையாக அமைந்துள்ளது. திருச்சிற்றம்பலக் கோவையாருக்கு (திருக்கோவை) பேராசிரியர் எழுதிய உரையுளது. மாணிக்கவாசகர், தேவாரம் பாடியவர்களுக்கு முன்னிருந்தவரென்பது உயர்திரு ஆறுமுக நாவலர், உ.வே. சாமிநாதையர், இராமசந்திர தீட்சிதர், மறைமலையடிகள் இலக்கிய வரலாறுகாரர், சேஷையர் முதலிய பலர் கருத்துமாகும். ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னிருந்தவரென்பது திருவாளர் தஞ்சைச் சீனிவாச பிள்ளை, அனவரதவிநாயகம் பிள்ளை, மு.சி. பூரணலிங்கம் பிள்ளை முதலியோர் கருத்தாகும்.

மாணிக்கவாசர்: இவர் திருவாசகம் பாடிய மாணிக்க வாசகரிலும் வேறானவர்; சதுட்கோணமாலை, மாணிக்கவாசகர் ஞானத்தாழிசை, மாணிக்கவாசகர் பதம். திருமணி அகவல், மாணிக்கவாசகர் வெண்பா, தெளிவுண்மை போதம் முதலிய நூல்கள் இயற்றியவர்.*

மாதவபட்டர்: ஞானவாசிட்டம்.* (வீரை ஆளவந்தார்.)

மாதவனார் இளநாகனார்: (-?) இவர் திருக்குன்றத்தாசியரிடம் இறையனாரகப் பொருளுரை கேட்டவர். (இ.க.உ.)

மாதவாசாரியர்: வித்தியாரணியர் பார்க்க.

மாதவையர்: ஒதல்லோ (1902), பத்மாவதி சரித்திரம். (1898.)

மாதி மாதிரத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம், 186.

மாதீர்த்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 113.

மாதைத் திருவேங்கடநாதர்: திருவேங்கடநாதையர் பார்க்க.

மாநதுங்காசாரியர்: (-?) பக்தாமிர்தம் செய்த சைனர் (அபி. சிந்தாமணி.)

மாபுராணமுடையார்: (-) மாபுராணம் செய்தவர் பெயர் அறியப்படவில்லை. இடைச்சங்கத்தார்க்கு “நூல் அகத்தியமும் தொல்காப்பியமும், மாபுராணமும், இசை நுணுக்கமும், பூதபுராணமு மென்ப” என இறையனார் களவியலுரை கூறுகின்றது. தொல்காப்பியம் பொருளதிகாரம் மரபியலின் 97ஆம் சூத்திரவரையில் “இனிப் படர்ந்துபட்ட பொருண்மையவாகிய மாபுராணம், பூதபுராணம் என்பன சில் வாழ்நாட் சிற்றறிவின் மாக்கட்கு உபகாரப்படாமை யின், தொகுத்துச் செய்யப்பட்டு வழக்கு நூலாகிய தொல்காப்பியம் இடைச் சங்கம் முதலாக இன்று காறும் உளதாயிற்று.” என்று பேராசிரியரும், தொல் காப்பியச் சிறப்புப் பாயிரவுரையில் “முந்துநூல் அகத்தியமும், மாபுராணமும், பூதபுராணமும், இசை நுணுக்கமும் அவற்றுட் கூறிய இலக்கணங்களாவன: எழுத்துச் சொற்பொருள்யாப்பும், சந்தமும், வழக்கியலும், அரசியலும், அமைச்சியலும், பார்ப்பனவியலும், சோதிடமும், காந்தருவமும், கூத்தும் பிறவுமாம்.” என்று நச்சினார்க்கினியரும் கூறியிருக்கின்றனர். இடைச்சங்க நூல்களென அடியார்க்கு நல்லாராற் குறிக்கப்படுவனவும் யாப்பருங்கல விருத்தி முதலியவற்றுள் மேற்கோள் காட்டப்பட்டனவுமாகிய நூல்கள் பிற்காலத்தன வென்று கருதப்படுகின்றன. “பதினோராவது நூற்றாண்டு முதல் பதின்மூன்றாவது நூற்றாண்டு வரையுள்ள காலத்திலே பல புலவர் பெய ரமைத்த பன்னிரு பாட்டியலும், மயேச்சுர னென்னும் சமண முனிவராலியற் றப்பட்ட மயேச்சுர யாப்பும், யாமளேந்திரரால் இயற்றப்பட்ட இசைத்தமிழ் நூலாகிய இந்திரகாளியமும், அறிவனாராலியற்றப்பட்ட பஞ்சமரபு என்னும் இசை நூலும், நாரதனது பஞ்ச பாரதீய மென்னும் இசை இலக்கணமும், ஆதிவாயிலாரது நாட்டிய நூலாகிய பரத சேனாபதீயமும், பிற இலக்கண நூல்களும் தோன்றியிருக்கலாம்.” (இலக்கிய வரலாறு கா.சு.) அடியார்க்கு நல்லார் உரை வருமாறு “இனி இசைத்தமிழ் நூலாகிய பெருநாரை பெருங் குருகும் பிறவும் தேவ விருடி நாரதன் செய்த பஞ்ச பாரதீயம் முதலாயுள்ள தொன்னூல்கள் இறந்தன. நாடகத் தமிழ் நூல்களாகிய பரதம், அகத்தியம் முதலாயுள்ள தொன்னூல்களு மிறந்தன. பின்னர் முறுவல் சயந்தம் குணநூல் செயிற்றியம் என்பவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்றன. அத் துணையல்லது முதல், நடு, இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும். இவற்றுள் இறக்கவரும் பெருங்கல முதலியனவுமாம்” “இனித் தேவ விருடியாகிய குறுமுனிபாற் பாடங்கேட்ட மாணாக்கர் பன்னிருவருட் சிகண்டி யென்னும் அருந்தவமுனி, இடைச்சங்கத்து… அப் பெயர் பெற்ற குமாரன் இசையறிதற்குச் செய்த இசை நுணுக்கமும், பாரசவமுனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரத சேனாபதீயமும், கடைச்சங்க பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முதனூல்களிலுள்ள வசைக்கூத்திற்கு மறுதலையாகிய புகழ்க் கூத்தியன்ற மாதிவாணனார் நாடகத் தமிழுமென இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத்தறிந்த நூல்களன் றேனும் ஒருபுடை ஒப்புமை கொண்டு முடித்தலைக் கருதிற்று இவ்வுரை யெனக் கொள்க.” யாப்பருங்கலவிருத்தியில் மாபுராணச் சூத்திரங்கள் பல் லிடங்களில் எடுத்தாளப் பட்டுள்ளன. மயேச்சுவரர் யாப்பு, காக்கை பாடினி யம், பல்காப்பியம், அகத்தியம் என்னும் பெயருடைய யாப்பு நூல்களிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ள சூத்திரங்கள் பிற்காலத்தன வென்றும் அவை கூறும் விருத்தப்பா இலக்கணம் முதலியவற்றைக்கொண்டு அறியக்கிடக்கின்றன. இந்நூல்களை ஒப்பவே மேற்கூறிய நூல்களுமோ என்பது ஆராயற்பாலது.

மாபூதனார்: (12ஆம் நூ.) இவர் செய்த பாட்டியற் சூத்திரங்கள் பன்னிரு பாட்டிய லின் பகுதி என்று கொள்ளப்படும். பன்னிரு பாட்டியல். 12 அல்லது 13ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்டதெனக் கருதப்படும்.

மாப்பாண முதலியார்: (மறைவு 1827) இவர் 165 ஆண்டுகளின் முன் யாழ்ப் பாணத்திலே எழுதுமட்டுவாள் என்னும் கிராமத்திற் பிறந்தவர்; ஆங்கிலம் கற்றவர்; தென் மராட்சி மணிய உத்தியோகம் பெற்றிருந்தவர்; சோமகேசரி நாடகம், பரிமளகாச நாடகம், விரத நிச்சயம், ஆசௌச விதி முதலிய நூல்கள் இயற்றியவர். திருச்செந்தூர்ப் புராணத்துக்கு ஒரு விரிவுரையும் செய்தவர்.

மாமிலாடன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 46.

மாமூலனார்: (கி.மு. 245.) இவர் முக்காலமு முணர்ந்தவரென நச்சினார்க்கினியர் கூறுவர். “யோகிகளாய் உபாயங்களால் முக்காலமு முணர்ந்த மாமூலர் முதலி யோர் அறிவன் றேயத்து அனைநிலைவகை யோராவர்.” (ந. உரை.) யாப் பருங்கல விருத்தியிலும் இருக்கருத்துக் கூறப்பட்டுள்ளது. (பெருந்தலைச் சாத்தனார் பார்க்க.) இவர் மோரியர் படையெடுப்பைப் பற்றியும், நந்தரென் பார் வடநாட்டில் பாடலிபுரத்தில் கங்கை நீருள் தமது செல்வத்தை மறைத்து வைத்ததைப் பற்றியும் குறிப்பிடுகின்றார். இவர் பாடியன: அகம். 1, 15, 31, 55, 61, 65, 91, 101, 115, 127, 187, 197, 201, 211, 233, 251, 265, 281, 295, 311, 325, 331, 347, 349, 359, 393; குறு. 61; நற். 14, 75. “அறம் பொருள் இன்பம்” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது.

மாம்பழக் கவிச்சிங்க நாவலர்: (1836 - 1884) இவர் பழநியிற் பிறந்த கம்மிய குலத்தினர்; முத்து ராமலிங்க சேதுபதியிடம் கவிச்சிங்க நாவலர் என்ற பட்டம் பெற்றவர்; பல தனிப்பாடல்கள் பாடியவர்; தேவாங்குப் புராணம், பழநித் திருவாயிரம் முதலியனவும் இவர் பாடியன.

மாயேண்டன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 235.

மாரனேரி நம்பி: மாரனேரி நம்பி அந்திமதசை.*

மாரிமுத்தா பிள்ளை: மாரிமுத்தா பிள்ளை கீர்த்தனம், புலியூர் வெண்பா. (சென்னை 1888.)

மாரிமுத்து உபாத்தியாயர், மானிப்பாய்: அங்க கணிதம், இலங்கைத் தேசாதிபதிகள். (1889.)

மாரிமுத்துப் பிள்ளை: (18ஆம் நூ.) இவர் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள தில்லை விடங்கனில் வேளாண் குடியில் பெருமாள் பிள்ளையின் புதல்வராகத் தோன்றியவர். இவர் இயற்றிய நூல்கள் சிதம்பரேசர் விறலிவிடு தூது, வருணாபுரிக் குறவஞ்சி, புலியூர் வெண்பா, நொண்டி, அநீதி நாடகம், பள்ளு, சித்திரகவி முதலியன. இவர் 1787இல் காலமானார். முன்கூறிய மாரி முத்தாப்பிள்ளை என்பவருமிவரே.

மாரியப்ப கவிராயர்: பாகவத அம்மானை. (1893)

மார்க்கலிங்க சோதிடர், பிச்சைப்பாக்கம்: மரண கண்டிகை, சினேந்திர மாலை உரை.*

மார்க்கசகாய தேவர்: (-) இவர் திருவிரிஞ்சைப் பிள்ளைத் தமிழ் பாடியவர்.

மார்க்கண்ட முனிசாமிப் பிள்ளை, சேலம்: வீரகுமார நாடகம்.

மார்க்கண்டேயனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம் 365. மார்க்கண்டேய னார் காஞ்சி என ஒரு நூலும் இவர் செய்ததாகத் தெரிகிறது. “மாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின், ஆயிரமா மணிவிளக் கழலுஞ்சேக்கைத், துணிதரு வெள்ளந்துயில் புடை பெயர்க்கு, மொளியோன் காஞ்சி யெளி தினிற் கூறின், இம்மையில்லை மறுமையில்லை. நன்மையில்லைத் தீமையில்லை, செய்
வோரில்லைச் செய்பொருளில்லை. யறிவோர் யாரஃதிறு வுழியிறுகென.’ இது மார்க்கண்டேயனார் காஞ்சி.” (யா.வி.ப. 378.) நச்சினாக்கினியர் இவர் செய்த நூலைத் தலையாய ஓத்து என்பர்.

மாலைமாறன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 245.

மால்ட் (Mault): போதகர் இலக்கணம் (யாழ்ப்பாணம் 1844).

மாவளத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 348.

மாவைப் பொன்னம்பல பிள்ளை: (19ஆம் நூ. பிற்.) இவர் யாழ்ப்பாணத்து மாவிட்ட புரத்தினர்; சைவ மதத்தவர்; இவரியற்றிய நூல்கள்: மாவையந்தாதி, சித்திரகவி.

மாறன் பொறையனார்: (கி.பி. 5ஆம் நூ.) இவர் செய்த நூல், ஐந்திணை ஐம்பது. இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இது திணைக்குப் பத்தாக அமைந்த ஐம்பது வெண்பாக்களை யுடையது. இதன் முகப்பில் சிறப்புப் பாயிரச் செய்யுள் ஒன்றுளது; கடவுள் வாழ்த்துக் காணப்படவில்லை.

மாறன் வழுதி: (கி.பி. 225) இவரே பன்னாடு தந்த மாறன் வழுதி; நற்றிணை தொகுப்பித்தவர். நற்றிணை கடவுள் வாழ்த்துச் செய்யுள் நீங்கலாக நானூறு பாடல்களையுடையது. இந்நூலின் பாடல்கள் ஒன்பது முதல் 12 அடி வரையினுமான அடிகளை யுடையவை. “குறுந்தொகையின் செய்யுட்கள் நான்கு முதல் எட்டு வரையினுமான அடிகளை யுடையனவாகவும், நெடுந் தொகையின் (அகநானூற்றின்) செய்யுட்கள் பதின்மூன்று முதல் முப்பத் தேழு வரையினுமான அடிகளை உடையனவாகவும் இருத்தலைக் கவனிக்க. அடியளவிற் குறைந்த செய்யுட்களைத் தொகுத்துக் குறுந்தொகை எனவும், அடியளவின் மிக்க செய்யுட்களைத் தொகுத்து நெடுந்தொகை யெனவும் பெயரிட்டோர், அடியளவில் இடைப்பட்ட செய்யுட்களால் தொகுக்கப்பட்ட இந்நூலுக்கு இடைத்தொகை எனப் பெயரிடாமல் பொருள் பற்றி நற்றிணை எனப் பெயரிட்டது இடைத் தொகை என்னும் பெயர் இனிமையாய் இராமையைக் கருதிப் போலும்”. (கா. ர. கோ.). இதன் கடவுள் வாழ்த்து பெருந்தேவனாரால் திருமால்மீது பாடப்பட்டுள்ளது. பன்னாடு தந்த மாறன் வழுதி பார்க்க.

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்: (சங்ககாலம்) மாறோக்கம் கொற்கையைச் சூழ்ந்ததொரு நாடு. இவர் அருஞ்சுரத்தில் மறவர் எறும்பு சேகரித்து வைத்திருக்கும் தானியத்தை எடுத்து உண்பதனைக் கூறுவத னோடு அவர் நிரை கவர்தலையும் வருணித்துள்ளார். மாறோகம் என்பதும் பாடம். இவர் பாடியது: அகம். 377.

மாறோக்கத்து நப்பசலையார்: (கி.பி. 1.) இவராற் பாடப்பட்டோர். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன். மலையமான் திருமுடிக்காரி, மலையமான் சோழியவேனாதி திருக்கண்ணன். இவர் பெயர் மாறோகத்து நப்பசலையாரெனவும், மாறோக்கத்து நப்பாலையார் எனவும் வழங்கும். இவர் பாடியன: நற். 304; புறம் 37, 39, 126, 174, 226, 280, 383.

மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர் காவிதியார் மகனார் புல்லங்காடனார்: (சங்ககாலம்) கைந்நிலை என்பது இவர் இயற்றிய நூல். (சங்கநூற் புலவர் பெயர் அகராதி 6. பா.) “நாலடி நான்மணி நானாற்பதைந்திணை முப், பால்கடுகங் கோவை பழமொழி - மாமூலம், இன்னிலை சொல் காஞ்சியுட னேலாதி யென்பவே, கைந்நிலையவாங் கீழ்க் கணக்கு” என்னும் “வெண்பா விலுள்ள `இன்னிலை’ என்னும் சொற்றொடர் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றனது பெயர் என்று கொள்வோர் சிலர்; சிலர் அதைக் காஞ்சி யென்னும் பெயரின் அடைமொழியின் பகுதியாக்கி வெண்பாவினீற்றடியில் இருக்கும் கைந்நிலை யென்பதைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றன் பெயரெனக் கொள்வர். கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றெனக் கொள்வோருள் மகா மகோபாத்தியாய ஐயரவர்கள் ஒருவராவர். அவரெழுதிய ஐங்குறு நூற்றின் முகவுரையைப் பார்க்க. இன்னிலையைப் பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றெனக் கொள்வோருள் சிறீமான். வ.உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் ஒருவராவர். அவர் பதிப்பித்த இன்னிலை யென்னும் புத்தகத்தைப் பார்க்க.” (தமிழ் வரலாறு சீ.பி.) இன்னிலை அக் கணக்கில் சேர்ந்ததென்று கூறுவோர் கைந்நிலையவாம் என்னும் வெண்பா வின் நான்காவது அடியிலுள்ள சொற்களுக்கு “ஒழுக்கத்தைப் பற்றிக் கூறும் நூல்களாம்” எனப்பொருள் கொள்வர். கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கிலொன்றென்பார். “இன் னிலை சொல் காஞ்சி” என்பதற்கு இனிமையாகிய நிலைமையைச் சொல்லும் காஞ்சி எனப்பொருள் கூறுவர்.

“ஐந்திணை யொழுக்கங்களை மேற்கூறியவாறு பாகுபாடு செய்து தொகுத்துத் தனித்தனியே கூறும் வேறு பழைய நூல்களுள் இப்பொழுது தெரிந் தவை வருமாறு - எட்டுத் தொகையுள் கலித் தொகையும், பதினெண் கீழ்க்கணக் கினுள் ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திணைமொழியைம்பது, ஐந்திணையெழுபது கைந்நிலை என்பனவும், பத்துப்பாட்டுள் மதுரைக் காஞ்சி முதலியனவும் பழைய உரைகளிற் காணப்படுகின்ற சிற்றடக்க மென்பது மாம்; சிற்றடக்கத்திலுள்ள சில பாடல்கள் மட்டும் பழைய வுரைகளிற் காணப்படுகின் றனவேயன்றி நூல் முழுவதும் காணப்படாமையின் அதனைப் பற்றி ஒன்றும் இப்பொழுது எழுதக்கூடவில்லை.” (உ.வே.சா.) கைந்நிலையில் குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் எனத் திணைவைப்பு இருப்பதாக ³ யார் கூறியுள் ளார். இலக்கிய வரலாறுகாரர் இன்னிலையைப் பதினெண் கீழ்க்கணக்கு நூலாகக் கொள்வர்.

மாற்பித்தியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 251, 252.

மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார்: (சங்ககாலம்) இவர் வேளாண் மரபினர். இவர் பாடியது: அகம். 59 (கொற்றங் கொற்றனார் பார்க்க.)

மிலேச்ச மதாந்தகார பா°கரன்: நிகார நிகாரணம் (கிறித்துவமத கண்டனம்) (யாழ்ப்பாணம் 1891).

மிளைக் கந்தனார்: (கி.மு. 87.) இவர் பாரியின் சுனையைப் பாடியுள்ளார். இவர் பாடியது: குறு. 196.

மிளைக் கிழான் நல்வேட்டனார்: நல்வேட்டனார் பார்க்க.

மிளைப்பெருங் கந்தன்: (சங்ககாலம்) இவர் பாடியன: குறு. 136, 204, 234.

மிளைவேள்தித்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 284.

மீகாமன்: (18ஆம் நூ. முற்.) இவர் கும்பகோணத்துக் கருகிலுள்ள வலங்கை மானில் வாழ்ந்தவர். இவர் வலங்கை மீகாமன் எனவும் அறிவானந்தர் எனவும் அறியப்படுவர். இவர் அறிவானந்தசித்தியார் என்னும் நூலியற்றியவர்.

மீளிப் பெரும்பதுமனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 109.

மீனாட்சிசுந்தர கவிராயர்: (19ஆம் நூ. பிற்.) இவர் எட்டாயபுரம் செமீனின் அரண்மனைப் புலவராயிருந்தவர்; முருகரனுபூதி, குதிரைமலைப்பதிகம், கழுகுமலைத் திரிபந்தாதி பாடியவர்; குவலயானந்தம் என்னும் தாம் தமிழில் மொழி பெயர்த்த அலங்கார நூலுக்கு உதாரணக் கவிகள் முதலியன பாடியவர். இவர் 1895இல் காலமானார்.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை: (1815-1875) இவர் திருச்சினாப்பள்ளியிற் பிறந்து துறைசை யாதீனத்துப் பெரும்புலவராக விளங்கியவர். இவரிடத்துக் கல்வி பயின்ற மாணவர் பலர். ஆறுமுக நாவலர் இவர் காலத்தவர். உ.வே. சாமி நாதையர் இவர் மாணவருள் ஒருவர். இவர் 75 நூல்களுக்குமேல் பாடி யுள்ளார். அவற்றுள் 22 புராணம், 10 பிள்ளைத்தமிழ், 11 அந்தாதி, 2 கலம்பகம், 7 மாலை, 2 கோவை, 1 உலா, 1 லீலை, 1 வெண்பா, 1 களிப்பு, 1 காசி ரகசியம். அவையாவன: திருநாகைக் காரோண புராணம் (2506 பாடல்), திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ், திருத்துவத்துறைப் பெருந்தவப் பிராட்டி பிள்ளைத்தமிழ், திருவுறந்தைக் காந்திமதியம் மன்பிள்ளைத்தமிழ், திருப் பெருமணலூர் திருநீற்றம்மை பிள்ளைத்தமிழ், திருக்குடந்தை மங்களாம் பிகை பிள்ளைத்தமிழ், கன்னபுரப்பாகம் பிரியாள் பிள்ளைத்தமிழ், திருவெண் காட்டுப் பெரியநாயகியம்மை பிள்ளைத்தமிழ், திருவிடைக் கழிமுருகர் பிள்ளைத்தமிழ், திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ், வாட்போக்குக் கலம்பகம், துறைசைக் கலம்பகம் திருத்தில்லை யமகவந்தாதி, திருச்சிராப்பள்ளி அந்தாதி, திருக்குடந்தைத் திரிபந்தாதி, திருவானைக்காத் திரிபந்தாதி, பட்டீச்சுரப் பதிற்றுப் பத்தந்தாதி, பூவள்ளூர்ப் பதிற்றுப் பத்தந்தாதி, பாலைவனப்பதிற்றுப் பத்தந்தாதி, தண்டபாணி பதிற்றுப் பத்தந்தாதி, திருஞானசம்பந்தர் பதிற்றுப் பத்தந்தாதி, எறும்பீச்சுரம் வெண்பா, திரவானைக் காமாலை, திருக்கலைசைமாலை, திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மாலை, திருமயிலைச் சச்சிதானந்த தேசிகர்மாலை, திருஞானசம்பந்தர் ஆனந்தக்களிப்பு, திருவுறந்தைப் புராணம், திருக்குடந்தைப் புராணம், மயூர புராணம், திருத்துருத்திப் புராணம், திருக்குறுகை வீரட்டபுராணம், திருவா ளொளிப்புற்றூர் புராணம், விளத் தொட்டி புராணம், ஆற்றூர்ப்புராணம், தனி யூர்ப் புராணம், மணிபட்டிக்கரைப் புராணம், கோயிலூர்ப் புராணம், கண்ட தேவிப் புராணம், சூரைக்குடிப் புராணம், வீரைவனப் புராணம், திருமயிலைப் புராணம், காசிரகசியம், திருவாரூர்த் தியாகராசலீலை, காழிக் கோவை, திருவிடைமருதூர் உலா. இவரியற்றிய நூல்கள் இன்னும் பலவாகும்.

மீனெறிதூண்டிலார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு 54. தனது பாடலில் மீனெறிதூண்டிலின் எனக் கூறினமையின் இவர் இப்பெயர் பெற்றார்.

முகமது: மெய்ஞ்ஞானக் குறவஞ்சி.*

முகமது உசேயின்: அந்திரயவதனி படைவெட்டு சந்திரவதனை கதை.

முகமது பீர்: திருமெய்ஞ்ஞானசர நூல். (1907.)

முகமது, வீரசோழம்: பன்னிரண்டு மாலை. (1907.)

முகமத் அப்துல்லா: அனுபோக வைத்தியம் (1906), பிரமேக நிவாரணபோதினி (1897), யூநானி வைத்திய தாதுவிருத்தி போதினி (1893.)

முகமத் அப்துல்லா, பாபுராசபுரம்; பாவாசகிப்பின் புதல்வர்: இவர் அகத்தியர் பள்ளுக்கு உரை எழுதிப் பதித்தவர். (1907.)

முகமத் அப்துல் காதர் புலவர்: கீர்த்தனத் திரட்டு. (சிங்கப்பூர் 1896.)

முகமத் இபின் முகமட்: பத்துகுல்மிசிர் - பகனசா வசன காவியம். (சென்னை 1894.)

முகமத் இமாம் கசலி இபின் முகமத் அலி, நாகூர்: கலறத்து மீறான் சாகிபு ஆண்டவரவர்கள் காரண சரித்திரம். (காரைக்கால் 1876.)

முகமத் கண்ணு, பெருமாள் துறை: அஷகுறாக்காரண கும்மிச் சிந்து (கொழும்பு 1893), கம்ஹீனாபரீளா மாலை (கொழும்பு 1892.)

முகமத் கமால் அல்தின், வேலூர்: அஹ்காமு°ஸியாம். (1893)

முகமத் காதிர்: துத்திநாமா என்னும் கிளி கதை. (சென்னை 1883.)

முகமத் சுல்தான் இபின் அஹமத் உமார்: ஆனந்தக் கீர்த்தனை, (பினாங்கு), பதாநந்த மாலை (1890), சீறாச் சதகம் (1900.)

முகமத் தம்பி இபின் சாயின் அல்தின்: மனோரஞ்சிதத் திரட்டு. (1901.)

முகமத் நிசாம் முஹ்யி அல்தீன் முகமது: குடும்ப சம்ரட்சணி (1896), மகாசால இரகசிய விளக்கம் (1901), மகாவிகட விநோதக் களஞ்சியம் (1901), நீதிசார மஞ்சரி (1901), நீதி விநோதக்கதை (கொழும்பு 1883.)

முகமத் மீரான் ம°தான் இபின் லுக்மான்: ஞான இரத்தினாகரம். (சென்னை 1896.)

முகமத் மீர் யவாத்: தொழுகை ரஞ்சித அலங்காரம். (சென்னை 1897.)

முகமத் முகுமத் இபின் பீர்முகத், காயற்பட்டினம்: மதுர வாக்கிய கீர்த்தனா சங்கிரகம்.

முகவூர் கந்தசாமிப் புலவர்: (1823-1877) இவர் சேற்றூர். செமீன் அரண்மனைப் புலவர் பரம்பரையில் வந்தவர்.

முகைதின் மலுக் முதலியார், கோட்டாறு: மெய்ஞ்ஞானத் திருப்பாடற்றிரட்டு. (சென்னை 1898.)

முகையலூர்ச் சிறு கருந்தும்பியார்: (-?) திருவள்ளுவமாலை 17-வது வெண்பா இவர் பாடியதாக வழங்கும்.

முஹ்யி அல்தின் கற்புடையார் இபின் சின்ன இபிரகாம்: நபியுல்லாபேரிற் பதிகமும் யானைக் காதலும். (யாழ்ப்பாணம் 1891.)

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்: (சங்ககாலம்) முக்கல் ஓர் ஊர். இவர் பாடியது: நற். 273.

முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன்: (சங்ககாலம்) முடங்கிக் கிடந்த என்பதனால் இவர் நடக்க முடியாத முடவர் எனக் கருதப்படுவர். இவர் பாடியது: அகம். 30.

முடத்தாமக் கண்ணியார்: (கி.மு. 220-) இவர் பத்துப் பாட்டில் இரண்டாவதாகிய பொருநராற்றுப் படையில் கரிகாற் சோழவனைப் பாடியுள்ளார். பொருந ராற்றுப்படை 248 அடிகளையுடைய அகவற் பாவாலமைந்தது; பரிசில் பெறக்கருதிய ஒரு பொருநனைப் பரிசில் பெற்றானொருவன் இளஞ்சேட் சென்னியின் புதல்வனாகிய சோழன் கரிகாற் பெருவளத்தானிடத்தே ஆற்றுப் படுத்தியதாக அக்கரிகாற் பெருவளவனைப் பாடியது; இது கரிகாற் பெருவளவன் கொடையையும் அவன் வீரத்தையும் அவனாண்ட சோழ நாட்டின் வளத்தையும் காவிரி பயன்படுதலையும் நன்றாகக் கூறும்.

முடத்திரு மாறன்: (-?) இவன் கடைச்சங்கத்தைத் தொடக்கிய பாண்டிய அரசனாக இறையனாரகப் பொருளுரை கூறுகின்றது. இவன் பாடியன: நற். 105, 228.

முதலியாண்டான்: முதலியாண்டான் பத்து வார்த்தை.*

முதலியாண்டான் தாசர்: வேதாந்த சாரசங்கிரகம். (சென்னை 1896)

முதுகுளத்தூர் சரவணப் பெருமாள் கவிராயர்: (18ஆம் நூ. பிற்.) இவர் சிவஞான முனிவரின் மாணாக்கராகிய இராமநாதபுரம் சோமசுந்தரம் பிள்ளையின் மாணாக்கர்.

முதுகுளத்தூர் சுப்பிரமணிய பிள்ளை: (19ஆம் நூ. பிற்.) இவர் பொன்னுச்சாமி தேவர் காலத்து விளங்கிய சிறந்த புலவராவர்.

முது கூற்றனார்: உறையூர் முதுகூத்தனார் பார்க்க.

முத்தமிழாசிரியர் பெருநம்பி: (-?) செங்கற்பட்டு சில்லா திருக்கச்சூர்க் கச்சபேசு வரர் ஆலயத்துள்ள கல்லெழுத்தொன்றில் இப்புலவர் பெயர் காணப்படு கின்றது. (சா. த. க. ச.)

முத்தமிழ்க் கவிராயர்: சுகீந்திரத் தல புராணம். (திருநெல்வேலி 1894)

முத்தமிழ்க் கவிவீரராகவ முதலியார்: (19ஆம் நூ.) இவர் பொன் விளைந்த களத்தூரிற் பிறந்தவர்; அந்தகக் கவி வீரராகவரின் வேறானவர்; வைணவ மதத்தினர். இவர் பாடியன: திருவேங்கடக் கலம்பகம், திருக்கண மங்கை மாலை, திருவேங்கடமுடையான் பஞ்சரத்தினம், பெருந்தேவித் தாயார் பஞ்சரத்தினம் முதலியன.

முத்தன் ஆச்சாரி: சத்தியவாக்கு அரிச்சந்திர நாடகம். (சென்னை 1905.)

முத்தானந்தர், ஆற்றூர்: முத்தானந்தர் குறவஞ்சி.

முத்திராசர்: (18ஆம் நூ.) இவர் உறையூர் செந்தியப்பரின் மகன். இவர் கைலாய மாலை என்னும் நூலைக் கலிவெண்பாவாற் செய்தவர்; இது யாழ்ப்பாணக் குடியேற்ற வரலாறு கூறும் நூல்.

முத்திராம கவிராயர்: இவரும் கதிர்வேல் கவிராயபண்டிதரும் பாடியது மகாபாரதக் கீர்த்தனை. (1905)

முத்து: ஞானக் கப்பல்.*

முத்துக்கிருட்டிண நாயுடு, திருவல்லிக்கேணி: அரிசமய தீப உரை. (1904.)

முத்துக்கிருட்டிண பிரமம்: (16ஆம் நூ.) இவர் ஆறுமுகசாமி செய்த நிட்டானு பூதிக்கு உரை செய்தவர். (1852.)

முத்துக்கிருட்டிண முதலியார்: (-?) இவர் சென்னையிலிருந்த ஒரு பிரபு. இவர் ஊர் மணலி. இவர் இராமாயண கீர்த்தனை பாடிய அருணாசலக் கவியைப் பாடியவர்.

முத்துக்குட்டி ஐயர், சிவகங்கை: வசன சம்பிரதாயக் கதை. (திருவாதி 1895.)

முத்துக்குமார கவிராயர்: (1780-1851) இவர் ஏறக்குறைய 150 ஆண்டுகளின் முன் யாழ்ப்பாணத்து உடுவில் என்னும் ஊரிற் பிறந்தவர். இவர் தந்தை பெயர் அம்பலவாணர். இவர் பல தனிப்பாடல்கள் பாடியுள்ளார். அவற்றுட் சில வற்றைச் சுன்னாகம் குமார சுவாமிப் புலவர் முத்தக பஞ்சக விஞ்சதி என்னும் பெயருடன் அச்சிட்டுள்ளார். இவர் சி.வை. தாமோதரம் பிள்ளையவர்களின் ஆசிரியர். ஞானக்கும்மி (1891), யேசுமத பரிகாரம், ஐயனாரூஞ்சல், நடராசர் பதிகம் என்பன இவர் செய்த நூல்கள்.

முத்துக்குமார சுவாமிகள். ஆ: (20ஆம் நூ.) இவர் வேட்டைக்காரன் புத்தூரினர்; சிவஞான தத்துவ தீபம், சரவணபவமாலை, கதிர்காமத்தந்தாதி முதலிய நூல்களியற்றியவர். (கொ.பு.)

முத்துக்குமார சுவாமிக் குருக்கள்: (1853 - 1936) இவர் பருத்தித் துறையைச் சேர்ந்த புலோலி என்னுமூரிற் பிறந்தவர். இவர் பாடியன: பசுபதீச்சுரன் அந்தாதி, சிவபெருமான் அலங்காரம் என்பன.

முத்துக்குமார சுவாமிக் கோனார்: (20ஆம் நூ.) இவர் திருச்செங்கோடு என்னு மூரினர்; விவேகதிவாகரம் என்னும் நூல் இயற்றியவர். (கொ.பு.)

முத்துக்குமார சுவாமி முதலியார் (Knight): அரிச்சந்திர நாடகம் ஆங்கில மொழிபெயர்ப்பு. (1863.)

முத்துக்குமார சுவாமிப் புலவர்: (1791) திருநெல்வேலிச் சில்லா, நாங்குனேரித் தாலுக்காவில் இராதபுரமென்று வழங்கும் பூசங்குடியில் ஆலயங்கள் சில வுள்ளன. அவற்றும் பிள்ளையார் கோயிற் கிழக்கு வாயிலில் கொல்லமாண்டு 967 (கி.பி. 1791)இல் அமைந்த சாசனமொன்று தமிழ் பாடல்கள் சில உடைய தாம். இச்சாசனப் பாடல்களைப் பாடிய புலவர் முத்துக் குமார சுவாமி என்பா ரென்றும் அப்பிள்ளையார் கோயிற் சாசனங் கூறுதல் குறிப்பிடத் தக்கதாம். இவற்றினின்று 18ஆம் நூற்றாண்டிறுதியில் முத்துக்குமார சுவாமிப் புலவ ரென்பாரொருவர் வாழ்ந்த செய்தி தெரியலாம்.” (சா.த.க.ச.)

முத்துக்குமாரப்ப கவி, புதுவை: திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ்.*

முத்துக்குமாரப் பிள்ளை: நிராகரண திமிரபானு (அரசஞ்சண்முகனாரின் பாரத உரைக்கு இராகவாசாரியார் நிகழ்த்திய தடைகளுக்கு விடை.) (கும்பகோணம் 1888.)

முத்துக்குமாரர்: (18ஆம் நூ. பிற்.) இவர் இற்றைக்கு 170 ஆண்டுகளின் முன் யாழ்ப்பாணத்து வட்டுக் கோட்டையில் வாழ்ந்தவர். இவர் இயற்றிய நூல் கஞ்சன் காவியம், வலை வீசு புராணம், தேவசகாய நாடகம், சீமந்த நாடகம், பதுமாபதி நாடகம் முதலியன.

முத்துச்சாமி உபாத்தியார், திண்டுக்கல்: விசுவப் பிரம்ம அஃனித் தீபிகை. (1908.)

முத்துச்சாமி ஐயர், கலியாணசுந்தரம் பள்ளி: விசுவநாதம் (நாடகம்), (தஞ்சாவூர் 1906.)

முத்துச்சாமிக் கவிராயர்: (20ஆம் நூ.) இவர் உடுமலைப்பேட்டையினர்; இராமா யணக் கீர்த்தனைகள், சிங்காரவேலர் சதகம் முதலிய நூல்கள் செய்தவர். (கொ.பு.)

முத்துச்சாமி சாத்திரி, சென்னை கிறித்தவ கலாசாலை: கதாரத்தினாவளி. (1893.)

முத்துச்சாமி பாரதியார், திருவையாறு: விசுவபுராணம்.

முத்துச்சாமி பாரதியார்: விசுவப் பிரம புராணம். (1894.)

முத்துச்சாமிப் பிள்ளை: வள்ளியம்மை சரித்திரம் (ச.கை.)

முத்துச்சாமிப் பிள்ளை அப்பு: ஆத்தும உத்தியானம் (கத்தோலிக்க நூல்) (சென்னை 1817.)

முத்துச்சாமி முதலியார்: விநாயக புராண வசனம். (1899.)

முத்துச் சிதம்பரம் பிள்ளை, சென்யோசெப் கல்லூரி திருச்சி யாப்பிலக்கணச் சுருக்கம். (1898.)

முத்துச் சுப்பையா, புனல்வேலி: சானகி பரிணய நாடகம். (திருநெல்வேலி 1901.)

முத்துத் தம்பிப் பிள்ளை. ஆ: (1848 - 1917) இவர் யாழ்ப்பாணத்து மானிப்பாயினர். விவேகானந்த சுவாமி பிரசங்கம் மொழிபெயர்ப்பு (1897), பிரபோத சந்திரோ தயவசனம் (1889), அபிதானகோசம் (1902), தென்மொழி வரலாறு முதலிய நூல்களியற்றியவர்.

முத்துத் தம்பிப் புலவர்: யேசுக் கிறித்து நாதருடைய திருப்பாடுகளின்மேல் ஒப்பாரி. (யாழ்ப்பாணம் 1892.)

முத்துநைநாத்தை முதலியார்: (20ஆம் நூ.) இவர் செட்டிப்பாளையம் ஓராட்டுக் குப்பை என்னும் ஊரினர்; பச்சை நாயகியம்மன் பிள்ளைத் தமிழ் பாடியவர். (கொ.பு.)

முத்துத் தாண்டவர்: (18ஆம் நூ. முற்.) இவர் சீகாழியில் நட்டுவ வகுப்பைச் சேர்ந்தவர். இவர் சிவனடியாராக விளங்கி சிவபெருமான்மீது கீர்த்தனம் பாடி யவர். இவர் கீர்த்தனங்கள் சிதம்பர சபாநாத கீர்த்தனம், திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனம் என வழங்கும். (1870)

முத்துப் புலவர்: (கடிகை முத்துப் புலவர் பார்க்க.)

முத்துராம முதலியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் ஏறக்குறைய 80 ஆண்டுகளின் முன் சென்னையில் வாழ்ந்தவர். இவர் செய்த நூல்: மகாபாரதக் கீர்த்தனம்.

முத்துராமலிங்க சேதுபதி: (18ஆம் நூ. பிற்.) இவர் இராமநாதபுர அரசராய் விளங்கியவர். இவர் இயற்றிய நூல்கள் முருகர் அனுபூதி, பிரவாகர மாலை, வள்ளி மணமாலை, சரச சல்லாபமாலை, சடாக்கரசாரப் பதிகம், நீதிபோதம் முதலியன. இவர் 1783இல் காலமானார்.

முத்துராயக் கவுண்டர்: (20ஆம் நூ.) இவர் முள்ளூரினர்; பல தனிப் பாடல்கள் இயற்றியவர் (கொ.பு.)

முத்துலிங்க தேசிகர், பாலக்காடு: கசேந்திர மோட்சம் தோரா. (பாலக்காடு 1898.)

முத்துவீர கவிஞர்: வள்ளியம்மை நாடகம். (சென்னை 1879.)

முத்துவீர ராமர்: இவர் சாலத்திரட்டு, பலதிரட்டுச் சாலம் முதலிய நூல்களுக்கு உரை எழுதிப் பதித்தவர். (1906.)

முத்துவீரிய பாண்டியன்: (19ஆம் நூ. பிற்.) இவர் கம்மாள மரபினர்; முத்துவீரிய மென்னும் இலக்கணமியற்றியவர். (1899); உறையூரினர்.

முத்து வெங்கடேசுவர சுப்பையர்: அண்ட கோளவிலாசம்.

முத்தூரகத்தியன்: (-?) செங்கோன் தரைச் செலவுப்பாயிரச் செய்யுள் செய்த புலவர் ஏழ்தெங்க நாட்டு முத்தூர் அகத்தியன் எனக் காணப்படுகின்றார். செங்கோன் தரைச்செலவு முதலூழியிற் செய்ததெனச் சொல்லப்படுகின்றது; அவ்வாறு கொள்ள இடமின்று.

முத்தூற்று மூதெயினனார்: (சங்ககாலம்) விற்றூற்று மூதெயினனா ரெனவும் இவர் பெயர் காணப்படும். இவர் பாடியது: அகம். 288.

முத்தையா சுவாமி, விருத்தாசலம்: சின்மயதீபிகை; இதற்கு இராமானந்த யோகி உரை செய்துள்ளார். (சென்னை 1907.)

முத்தையர்: சயங்கொண்டார் வழக்கம்.*

முத்தையாப் பிள்ளை: கிறித்தவர்களின் ஆசாரமும் குருமார் போதகமும். (பாளையங்கோட்டை 1894.)

முத்தையாப் புலவர்: வேத சாட்சியாகிய தேவசகாயம் பிள்ளை வாசகப்பா. (சென்னை 1894)

முத்தையா முதலியார், செய்யூர்: இராசராசேசுவரி அல்லது காதலின் வெற்றி. (சென்னை 1906.)

முப்பேர் நாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 314 முப்பேர் ஓர் ஊராகலாம்.

முரஞ்சியூர் முடிநாகராயர்: (கி.மு. 600) இறையனாரகப் பொருளுரை இவரைத் தலைச்சங்கப் புலவருள் ஒருவராகக் கூறுகின்றது. இவர் பாரதப்போரில் பெருஞ்சோறு வழங்கிய உதியஞ் சேரலாதனைத் தனது பாடலில் (புறம் 2) குறிப்பிட்டுள்ளார். அவ்வரசன் பாரதப் போரில் பெருஞ் சோறு வழங்கவில்லை; அவன் தனது முன்னோரான பாண்டவரை நினைந்து அவர் பொருட்டுச் செய்த திவசத்தில் பெருஞ் சோறு வழங்கினான் எனச் சிலர் கருதுவர். பாரதப் போர் கி.மு. 12ஆம் நூற்றாண்டளவில் நிகழ்ந்தது. இவர் பாடியது: புறம். 2.

முராரி சீரங்கராய தனயர்: குசலவர் கதை.*

முருகதாச சுவாமிகள்: (1840-99) வண்ணச் சரபம் திருப்புகழ் சுவாமி, தண்ட பாணி சுவாமி எனவும் இவர் அறியப்படுவர். இவர் திருநெல்வேலியில் வேளாண் குடியிற் பிறந்தவர்; வில்லுப்புரத்துக்கு அண்மையிலுள்ள ஆமாத் தூரில் காலமானவர். இவருடைய குமாரன் செந்திநாயகம் பிள்ளை, புலவர் புராணம், திருவரங்கத் திருவாயிரம் என்னும் இருநூல்களை வெளியிட் டுள்ளார். இவரியற்றிய நூல்கள்: தில்லைத் திருவாயிரம், தெய்வத் திருவாயிரம், ஏழாயிரப் பிரபந்தம், திருச்செந்தூர்க் கோவை, திருச்செந்தூர்த் திருப்புகழ், திருமயிலைக் கலம்பகம், சென்னைக் கலம்பகம், தமிழலங்காரம், ஆமாத்தூர் தலபுராணம், அருணகிரிநாதர் புராணம், வண்ணத்திலக்கணம், அறுவகை இலக்கணம், திருப்புகழ், ஒலியலந்தாதி, தமிழ்த்திருப்பதிகம், திருவையாற்றந் தாதி முதலியன.

முருகப்பச் செட்டி, வாணியம்பாடி: முருகப்ப நவரச சிலேடை. (1894.)

முருகேச உபாத்தியாயர், சண்டிருப்பாய்: சாமிநாதர் செய்த தருமபுத்திர நாடகத்தைப் பார்வையிட்டுப் பதித்தவர். (1890.)

முருகேச பண்டிதர்: (1830 - 1900) இவர் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் ஆசிரியர்; சரவணமுத்துப் புலவரும் இவரிடம் பயின்றவர். இவரியற்றிய நூல்கள் மயிலணிச் சிலேடை வெண்பா, நீதி நூறு, சந்திரசேகர விநாயக ரூஞ்சல், பதார்த்த தீபிகை, குடந்தை வெண்பா.

முருகேச பிள்ளை, சுன்னாகம்: நீதி நூறு (கும்பகோணம் 1885), பதார்த்த தீபிகை. (1897.)

முருகேச முதலியார், ஆரணி: மாதர் நீதி. (1894.)

முருகேச முதலியார், திருமயிலை: நீதிமஞ்சரி தருப்பணம், (நாலடியார், நீதிநெறி விளக்கம் முதலிய நீதி நூல்களின் உரை) (1881.)

முருகேசையர்: (மறைவு 1830) இவர் காரை தீவிலே கார்த்திகேசையரின் புதல்வர். இவர் பாடியன தன்னை யமகவந்தாதி, தன்னை விநாயகரூஞ்சல், குருச்சேத்திர நாடகம் என்பன.

முருகைய சோதிடர்: (20ஆம் நூ.) இவர் அனுப்பர்பாளையத்தினர்; முருகசேகரம் என்னும் நூல் இயற்றியவர். (கொ.பு.)

முள்ளியார்: பெருவாயின் முள்ளியார் பார்க்க.

முள்ளியூர்ப் பூதியார்: (கி.மு. 270) இவர் பெயர் முன்னியூர் வழுதியார் எனவும் காணப்படும். இவர் மூங்கிலினின்றும் தெறித்து விழும் முத்தம் கழங்குபோல உருளுகின்ற தென்று வருணிக்கின்றார். நன்னனது பொன்விளை சுரங்கங்களை யுடைய மலையைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். இவர் பாடியது: அகம். 173.

முறுவெங்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 232.

முனிசாமி முதலியார், சிறுமணவூர்: (20ஆம் நூ.) இவர் சிறு செய்யுள் நூல் களும், வசன நூல்களும் வெளியிட்டார். பிரபஞ்ச உற்பத்தி, நாரதர் கலகம், வைத்தியரத்தினாகரம், மூலிகை மர்மம், அனுபவ வைத்தியம், சிவமகா மந்திரம், நவக்கிரக மந்திரம், சோதிடவிளக்க சிந்தாமணி, நவகண்ட ஆரூடம், நடராசப் பத்து என்பன அவற்றுட் சில.

முனிசாமி நாயுடு: பதிப்பிலக்கண வினாவிடை (Practical guide to the art of printing) (சென்னை 1892.)

முனிசாமி முதலியார், வேலூர்: துக்காராம் சரித்திரம். (1887.)

முனைப்பாடியார்: (13ஆம் நூ.) சமணப் புலவராகிய இவர் இயற்றிய நூல் அறநெரிச்சாரம் என்னும் நீதி நூல்.

முன்சி (Munshi): திராவிட இலக்கிய சித்தாந்த தீபிகை. (சென்னை 1902.)

முன்றுறையரையனார்: (கி.பி. 5ஆம் நூ.) இவர் பழமொழி என்னும் நூல் செய்த வர். இவர் சைன மதத்தினர் என்பது “பிண்டியி னீழற் பெருமா னடி வணங்கிப், பண்டைப் பழமொழி நானூறும் - கொண்டினிதா, முன்றுறை மன்னவன் நான்கடியும் செய்தமைத்தான், இன்றுறை வெண்பா இவை” என்னும் இதன் சிறப்புப் பாயிரத்தால் விளங்கும். இதற்குப் பழைய உரை ஒன்றுளது. இதி லுள்ள ஒவ்வொரு வெண்பாவிலும் ஒவ்வொரு பழமொழி அமைந்துளது. பழமொழியை உரையுடன் முதலிற் பதித்தவர் செல்வக் கேசவராய முதலியா ராவர்.

மூக்கப்பன்: நீதிசாரம். (ச.கை.)

மூர் (More): காவலப்பன் கதை. (யாழ்ப்பாணம் 1856.)

மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார்: பெருந்தலைச் சாத்தனார் பார்க்க.

மூலங்கீரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 73.

மூலனார்: திருமூலர் பார்க்க.

மூவாதியர்: (கி.பி. 5ஆம் நூ.) இவர் கீழ்க்கணக்கு நூல்களிலொன்றாகிய ஐந்திணை எழுபது செய்தவர். இந்நூல் ஒவ்வொரு திணைக்கும் 14-அமைந்த 70 வெண்பாக்களை உடையது.

மெய்கண்ட தேவர்: (13ஆம் நூ. முற்.) இவர் சடையப்ப வள்ளலின் கால் வழியில் வந்த அச்சுதர் களப்பாளர் என்னும் வேளாண் குடியினருக்குப் புதல்வராகத் திருபெண்ணாக்கடத்திற் பிறந்தவர். இவரது பிள்ளைத் திரு நாமம் சுவேதனப் பெருமாள்; இவர் பரஞ்சோதி முனிவர் பால் உபதேசம் பெற்றுச் சிவஞான போதம் செய்தார். இவர் மாணாக்கருள் ஒருவர் திருத் துறையூர் ஆதிசைவ ராகிய சகலாகம பண்டிதரென்னும் காரணப் பெயருடைய அருணந்தி சிவாசாரியார். சிவஞான போதத்தில் 12 சூத்திரங்களும் 81 வெண்பாக்களு முள்ளன. இதன் சூர்ணிகைக் கொத்து சாமிநாத தேசிகர் செய்ததெனக் கருதப் படும். சிவஞான போதம் ரௌரவ ஆகமத்திலிருந்து மொழி பெயர்க்கப் பட்டதென மாபாடியஞ் செய்த சிவஞானயோகிகள் கூறியுள்ளார். தமிழ்ச் சிவ ஞானபோதம் வடமொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதென அறிஞர் காட்டியுள்ளனர். தலபுராணங்கள் கூட வடமொழிப் புராணங்களிலிருந்து மொழி பெயர்க்கப் பட்டன என்று புராணக்காரர் கூறியுள்ளது போன்றதோர் மரபே சிவஞானபோதம் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பட்ட தென்பதாகும். சிவஞான போதத்துக்கு சிவஞான முனிவர் சிறந்த பாடியம் செய்துள்ளார். சிவஞான போதத்தைப் பற்றியும் அதன் பாடியத்தைப் பற்றியும் பேராசிரியர் கா.சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் கூறியிருப்பது வருமாறு, “அப்பெற்றித்தாகிய பேருரைப் பெரு நூலைத் தமிழ் மக்களுக் களித்தருளிய வள்ளல், வேளாண் குலமுதல்வராய்த் தோன்றித் தமிழ் நூற்கடலும் வடநூற் கடலும் நிலைகண்டுணர்ந்த சிவானு பூதிச் செல்வராகிய துறைசை மாதவச் சிவஞானயோகிகளாவார். இந்நூலானது பண்டைமறைப் பொருள் கிளக்கும் திருவள்ளுவர், பன்னிரு திருமுறை, பிற அறிவர் நூல் என்னும் இவைகளின் கனிந்த பொருள் நலத்தையும், வட மொழி வேதாகமப் பொருட்டிட்பமும் இரு மொழிச் சைவ நூற்பொருளொரு மையும் அறிதற்குரிய தெளிவினையும் ஒருங்கே கொண்டுள்ளது. இந்நூல் இனிய செந்தமிழ் நடையிலுள்ள உரை நூல்களுள் தலையானது. இதிலுள்ள ஒவ்வொரு சொற்றொடரிலும் தமிழ்ச் சுவை பொங்கித் ததும்பும் பான்மையது. வடசொற்களும் வடமொழிச் சுலோ கங்களும் அம்மொழியிலுள்ளவாறே எழுதப்பெறாமல் தமிழ்ச் சுவைக் கேற்றவண்ணம் திரிக்கப் பெற்றும் அமையப் பெற்றுள்ளன. அவ்வகை நூலாட்சியில் இதற்கிணையாய தமிழ்நூல் வேறுயாது மில்லை.”

மையோடக் கோவனார்: (சங்ககாலம்) இவர் பரிபாடல் 7ஆம் பாடல் செய்தவர்; இது வையைக்குரிய பாடல். இப்பாடலுக்கு இசை வகுத்தவர் பித்தாமத்தர்.

மோசி: உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பார்க்க.

மோசி கண்ணத்தனார்: (சங்ககாலம்) மோசி என்பது ஓர் ஊர். திருப்பூவணப் பகுதியில் மோசிப்பட்டினமெனவும், பரமக்குடித் தாலுகாவில் மோசுகுடி யெனவும் இரண்டு ஊர்கள் காணப்படுகின்றன. இவ்வூர்களில் மோசிக்கீர னார், மோசிசாத்தனார், முடமோசியாரெனப் புலவர்கள் தோன்றிப் புகழெய்தி னார்கள். இவர் பாடியது: நற். 124.

மோசி கீரனார்: (கி.மு. 42) இவர் அதிகமானைவென்ற சேரலிரும்பொறையைப் பாடியுள்ளார்: சேரமானது அரசமுரசு வைத்திருந்த கட்டிலில் அப்புலவர் அறியாது துயின்றதைக் கண்டு சேரமான் அவருக்குத் துன்பஞ்செய்யாது அவர் தூங்கி எழுந்திருக்கும் வரை கவரி கொண்டு வீசியதாக இவர் பாடிய புறம் 50இல் அறியக்கிடக்கின்றது. “ஆண்பா லேழாறிரண்டு” என்னும் திருவள்ளுவமாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம். 392; குறு. 59, 84;நற். 342; புறம். 50, 154, 155, 156, 186.

மோசி கொற்றனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 377.

மோசிக் கரையனார்: (சங்ககாலம்) மோசிக்கரை என்பது ஓர் ஊர். இவர் பாடியது: அகம். 260.

மோசி சாத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 272.

மோசி தாசனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 229.

மோசே (Moses): விசுவாச பத்தி. (யாழ்ப்பாணம் 1844.)

யசோதர காவிய ஆசிரியர்: (11ஆம் நூ. முற்.) இவருடைய பெயர் தெரிய வில்லை. யசோதரகாவிய மென்னும் நூல் அச்சில் வந்துள்ளது; இது ஐஞ்சிறு காப்பியங்களுளொன்று, சைனமுனிவ ரொருவரால் இயற்றப்பட்டது. ஐஞ்சிறு காப்பியம் அல்லது காவியங்களாவன: யசோதர காவியம், சூளாமணி, உதயணன் கதை, நாக குமார காவியம், நீலகேசி என்பன. மாரிதத்தன் என்னும் அரசனுக்கு உயிர்ப்பலி தீதென அறிவுறுத்தற்கு யசோதரன் என்பானின் பல பிறப்புக்களைப் பற்றிக் கூறுவதாக அமைந்தது யசோதர காவியம். இது வடமொழி யசோதர சரித்திரம் என்னும் நூற்கதையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்பட்டது. வடமொழி நூல் 1025இல் செய்யப்பட்ட தெனப் படுகின்றது. யசோதர காவியத்தில் 320 பாடல்களுண்டு.

யாப்பியல் நூலுடையார்: (-?) யாப்பியல் என்பது பழைய யாப்பு நூல்களி லொன்று. இதனைச் செய்தார் யாரெனத் தெரியவில்லை. யாப்பருங்கல விருத்தியில் இந்நூற் சூத்திரங்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. (யா.வி.ப. 458.)

யாமளேந்திரர்: (கி.பி. 11-13ஆம் நூ.) இவர் செய்தது இந்திரகாளிய மென்னும் நாடகத் தமிழ் நூல். அடியார்க்கு நல்லார் இந்நூலை எடுத்தாண்டுள்ளார். ‘பாரச முனிவரில் யாமளேந்திரர் செய்த இந்திரகாளியமும், அறிவனார் செய்த பஞ்சமரபும், ஆதிவாயிலார் செய்த பரதசேனாதீபதியமும், கடைச் சங்க பாண்டியருட் கவியரங்கேறிய பாண்டியன் மதிவாணனார் செய்த முத னூல்களிலுள்ள வசைக் கூத்திற்கு மறுதலையாகிய புறக்கூத்தியன்ற மதி வாணனார் நாடகத் தமிழுமென இவ்வைந்தும் இந்நாடகக் காப்பியக் கருத் தறிந்த நூல் களன்றேனும் ஒருபுடை ஒப்புமை கொண்டு முடித்தலைக் கரு திற்று இவ்வுரையெனக் கொள்க” (அடியார்க்கு நல்லாருரை.)

யூகிமுனி: (-?) இவர் தேரையர் மாணாக்கரிலொருவர்; வைத்திய சிந்தாமணி என்னும் நூலியற்றியவர்.

வஞ்சணத்தி முனிவர்: (12ஆம் நூ.) இவர் களந்தை ஊரினர்; சைன மதத்தினர்; குணவீர பண்டிதரின் ஆசிரியர். குணவீர பண்டிதர் இவர் பெயரால் செய்யுள் இலக்கணங் கூறும் வஞ்சணந்தி மாலை செய்தனர். இந்நூல் திருபுவன தேவன் ஆட்சியில் பண்டித முனியின் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டது. இது வெண்பாப் பாட்டியல் எனவும் படும்.

வடக்குத் திருவீதிப் பிள்ளை: (15ஆம் நூ.) இவர் திருவாய்மொழிக்கு முப்பத்தாறாயிரப்படி உரை செய்தவர்; பிள்ளை லோகாசாரியரின் தந்தை.

வடமநெடுந்தத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 179.

வடமலையப்ப பிள்ளை: இரசை வடமலையப்ப பிள்ளையன் பார்க்க.

வடம வண்ணக்கன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 81.

வடம வண்ணக்கன் தாமோதரன்: (கி.பி. 50-100) இவர் பாடியன: குறு. 85; புறம். 172.

வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்: (கி.மு. 60) மாந்தரஞ் சேரலிரும் பொறை யும் சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போர் செய்தபோது சோழர்க்குப் படைத்தலைவனான தேர்வண் மலையனைப் பற்றி இவர் பாடியுள்ளார். இவர் பாடியன: புறம். 198, 125; அகம். 38, 214, 242, 268, 305; குறு. 81, 159; 278, 314, 366; நற். 25, 37, 67, 104, 199, 299, 323, 378.

வடமோதங் கிழார்: (சங்ககாலம்) கொங்குமலரில் குரவமலருதிர்வது பொன் தராசுத் தட்டில் வெள்ளித்துண்டு சொரிவது போலுமென்று இவர் வருணித் துள்ளார். இவர் பாடியது: அகம். 317; புறம். 260.

வடிவேலு முதலியார், திருக்கழுக்குன்றம்: சூரபத்ம நாடகம் (1905).

வடிவேலு முதலியார், திருமழிசை: திருவெண்காட்டடிகள் புராணத்துக்கு உரையெழுதிப் பதித்தவர். (1901.)

வடிவேலு முதலியார், மாங்காடு: திருப்புகழ், ஒளவை குறள், நெஞ்சறி விளக்கம், மத்தான் சாகிப்பு பாடல், சாதக அலங்காரம், பட்டினத்தார் பாடல், பலதிரட்டுச் சாலம், திருவருட்பா, வாதக்கோவை, சிவவாக்கியர் பாடல் முதலிய நூல் களுக்கு உரையெழுதிப் பதித்தவர்; (1900); தற்கால வைத்திய போதினி என்னும் நூல் செய்தவர்.

வடுகநாத தேசிகர்: (17ஆம் நூ.) இவர் இலக்கண விளக்கம் வைத்தியநாத நாவலரின் நான்காவது புதல்வர்; திருமுல்லைப் புராணம் செய்தவர்.

வண்ணக் களஞ்சியப் புலவர்: (18ஆம் நூ. பிற்.) இவர் மதுரைக்கு அண்மை யிலுள்ள மீசல் என்னுமிடத்திற் பிறந்தவர்; வண்ணம் பாடுவதில் வல்லவர். இவர் தம்பிரானொருவரை அடுத்துத் தமிழ், சமக்கிருதம், மலையாளம் என்னும் மூன்று மொழி கற்றவர்; முகைதீன் புராணம் பாடியவர். இவர் நாகூரில் வாழ்ந்து 89-வது வயதில் காலமானார். சாமு தேசத்தரசனாகிய அலி பாதுஷா நாடகமும் இவர் பாடியது. (1887.)

வண்ணக்கஞ் சாத்தனார்: (-?) “ஆரியமுஞ் செந்தமிழுமாராய்ந்து’ என்னும் திருவள்ளுவ மாலைச் செய்யுள் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. வண்ணக்கன் - நாணய பரிசோதகன்.

வண்ணக்கன் சொரு மருங் குமரனார்: (சங்ககாலம்) இவர் பாடி யது: நற். 257.

வண்ணப்புறக் கந்தரத்தனார்: (சங்ககாலம்) “வண்ணப்புறவின் செங்காற் சேவல்” என்று இவர் பாடினமையால் இவர் வண்ணப்புறக் கந்தரத்தனாரென் றழைக்கப்பட்டார். இவர் பாடியது: அகம். 49; நற். 71. வண்ணப்புறக் கல்லாட னார் எனவும் இவர் பெயர் காணப்படும்.

வயித்தியலிங்கம், வல்வை: (1852 - 1901) இவர் யாழ்ப்பாணத்திலே வல்லு வெட்டித் துறையிலே பரதவ குலத்திலே சங்கரக்குரிசிலின் புதல்வராகப் பிறந்தவர்; வடமொழி, தென்மொழி வல்லவர். இவர் இயற்றி அச்சிட்டு வெளியிட்ட நூல்கள்; சிந்தாமணி நிகண்டு, செல்வச் சந்நிதிமுறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதிநிர்ணய புராணம் என்பன.

வரகவி ராமலிங்கையர்: (-?) இவர் பெயர் வட ஆற்காட்டுச் சில்லா வாலச பாத்தை அடுத்துள்ள தென்னேரி (திரையனேரி)ச்சிவாலய மண்டபத் திரு மதிலுளமைந்த சாசன மொன்றிற் காணப்படுகின்றது. (சா.த.க.ச.)

வரத பண்டிதர்: (18ஆம் நூ.) இவர் யாழ்ப்பாணத்திலே சுன்னாகத்தில் வாழ்ந்த அந்தணர், காசி அரங்கநாதரின் புதல்வர்; இவரியற்றிய நூல்கள் சிவராத்திரி புராணம் (1881), கிள்ளை விடுதூது, ஏகாதசி புராணம் (1898), அமுதாகரம், பிள்ளை யார் கதை என்பன. இவருக்குப்பின் பாண்டி நாட்டில் வாழ்ந்த நெல்லை நாதரென்பவரும் சிவராத்திரி புராணமொன்று செய்தார். அமுதாகர மென்பது விட வைத்திய நூல். இவர் பெயர் வரதராச பண்டிதர் எனவும் வழங்கும்.

வரதராச ஐயங்கார்: (16ஆம் நூ.) இவர் நெல்லி நகரில் வாழ்ந்தவர். மகா பாகவதத்தை 1553இல் பாடினார். இது வாசுதேவ கதை என்ற புராண பாகவதத் தின் மொழி பெயர்ப்பு. செவ்வைச் சூடுவார் பாடிய பாகவதம் இதின் வேறானது.

வரதராச தீட்சிதர்: இந்து தேச சரித்திரம் ஆதிகாலந் தொடங்கி. (சென்னை 1890.)

வரதராசர்: (20ஆம் நூ.) இவர் செக்கார் பாளையத்தினர்; தர்மாங்கத சரித்திரம் முதலிய நூல்கள் இயற்றியவர். (கொ.பு.)

வரதராசுலு நாயுடு: சடகோபர் உபாக்கியானம் (மொழி பெயர்ப்பு) (1898). இராம இருதயம், சுத்த நிராலம்பம்.

வரதாச்சாரியர், ஈகை: புருஷ சாமுத்திரிகம். (1892).

வரதாச்சாரியர், சர்க்கரை: சோதிமாலை (நாடகம்). (சென்னை 1902).

வரதுங்க ராம பாண்டியன்: (16ஆம் நூ.) இவர் அதிவீரராம பாண்டியனுடைய பெரிய தந்தையின் மகன். இவர் கொக்கோகம், பிரமோத்தர காண்டம், கருவை யந்தாதி, கூர்ம புராணம் முதலிய நூல்களியற்றியவர். இவர் மனைவி யாரும் புலமையிற் சிறந்து விளங்கியவர். இவர் பட்டமெய்திய காலம் 1588. கூர்ம புராணம் அதிவீரராம பாண்டியன் செய்ததாகவும் வழங்கும்.

வரதுங்க ராம பாண்டியன் மனைவி: (16ஆம் நூ.) இவர் இயற்பெயர் தெரிய வில்லை. இவர் சிறந்த புலவராக விளங்கினாரெனத் தெரிகிறது. இவர் பாடிய தனிப்பாடல்கள் காணப்படுகின்றன. வரதுங்க ராமன் 1588இல் பட்டத்துக்கு வந்தான்.

வரதையர்: திராவிட பால நீதி. (1889).

வரந்தருவார்: (15ஆம் நூ.) இவர் வில்லிபுத்தூரரின் புதல்வர். வில்லிபுத்தூரர் செய்த பாரதத்துக்கு இவர் பாயிரம் பாடியுள்ளார்.

வரராசை யுலா ஆசிரியர்: (17ஆம் நூ.) இவர் இயற் பெயர் தெரியவில்லை. வரராசை என்பது சங்கர நயினார் கோயில். இந்நூலில் வடமலையப்ப பிள்ளையன் செய்த திருப்பணிகள் செவ்வனே விளக்கப்பட்டுள்ளன.

வருமுலை யாரித்தி: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 176.

வலங்கை மீகாமன்: (-?) மீகாமன் பார்க்க.

வளையாபதி ஆசிரியர்: (10ஆம் நூ.) வளையாபதி செய்த ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இந்நூலாசிரியர் சைனர். இது சிந்தாமணிக்கு முற்பட்ட தென்பது சிலர் கருத்து.

வள்ளுவர்: (கி.மு. 1ஆம் நூ.) இவர் கீழ்க்கணக்கு நூல்களிளொன்றாகிய திருக்குறள் செய்தவர். திருவள்ளுவர் பார்க்க.

வன்பரணர்: (கி.பி. 87-) இவர் பரணருக்குப் பின் வாழ்ந்தவர்; ஓரியைப் பாடி யுள்ளார். ஓரிபாற் சென்ற தம் சுற்றத்தினர் வெள்ளி நாராற்றொடுத்த பொன்னரி மாலைகளையும், யானைகளையும் பெற்றமையால் பசி நீங்கிச் செல்வச் செருக்குற்றுப் பாடுதலையும் ஆடுதலையும் மறந்தனர் எனக் கூறியுள்ளார். இவர் “கபிலன் இன்றுளனாயின் நன்றுமன்” எனக் கூறினமையால் கபிலர் இவர் காலத்துக்கு முற்பட்டவரெனத் தெரிகிறது. இவர் பாடியன: நற். 374; புறம். 144, 148, 149, 150, 152, 153, 255.

வாகீச முனிவர்: (13ஆம் நூ.) இவர் செய்தது ஞானாமிர்தமென்னும் சைவ சித்தாந்த நூல். இந்நூல் சிவஞான முனிவரால் பெரிதும் எடுத்தாளப்பட் டுள்ளது. இது ஆறாம் நூற்றாண்டில் இயற்றப் பெற்றிருத்தல் கூடுமெனபர் இலக்கிய வரலாற்று ஆசிரியர்.

வாசுதேவ நாயுடு: ஆயுர்வேத பாராவாரம். (சென்னை 1901.)

வாசுதேவ முதலியார்: (-?) கொங்கு நாட்டைச் சேர்ந்த ஓராட்டுக்குப்பை என்னு மூரினர்; திருமுருகன் பூண்டித்தல புராணம், பவானிப் புராணம் முதலியன பாடியவர். (கொ.பு.)

வாசுதேவ முதலியார்: அவிநாசிக் கருணாம்பிகை சதகம் (1891), வித்தியா விநோதினி (1889).

வாடாப் பிரமந்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 331.

வாமன முனிவர் i: (14ஆம் நூ.) இவர் காஞ்சிபுரத்தையடுத்த திருப்பருத்திக் குன்றம் என்னும் ஊரினர். இவர் செய்த நூல் மேருமந்தர புராணம். இதனுள் சிம்ம சந்திரன், பூரண சந்திரன் என்னும் உடன் பிறந்தாரிருவர் ஒரு கெட்ட அமைச்சன் வசப்பட்டுத் தீங்கிழைக்கப்பட்டுப் பல பிறவி யெடுத்துப் பின் தவங்கிடந்து முத்தி பெற்றதும் அமைச்சன் நரகெய்தியதும் கூறப்பட்டுள்ளன. சமணர் செய்த காவியங்களுள் தமிழில் புராணமென்ற பெயரால் நிலவுவன வற்றுள் இதுவே முதலாவதாகும். இப்புராணத்தில் 12 சருக்கங்களும், 1406 பாடல்களுமுள்ளன. தீர்த்தங்காரர் 24 வரில் 13 -ஆவரான விமல தீர்த்தங்கார ருடைய கணதரர்களாகிய மேரு மந்தர ரென்னுமிருவரின் சரித்திரங்களை விரித்துக் கூறுதலின் இது இப்பெயர் பெற்ற தென்பர்.

வாமன முனிவர் ii: (16ஆம் நூ.) இவர் நீலகேசிக்கு உரை எழுதியவர்.

வாமனர்: அகத்தியர் மாணவர் பன்னிருவரிலொருவர்.

வாயிலிளங் கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 346.

வாயிலான் றேவன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 103, 108.

வாய்ப்பியனார்: (-?) இவர் பழைய இலக்கண ஆசிரியருள் ஒருவர். இவர் செய்த நூல் வாய்ப்பியமெனப்படும்.

“பாலை குறிஞ்சி மருதஞ் செவ்வழியென
நால்வகைப் பண்ணா நவின்றனர் புலவர்”

என்றார் வாய்ப்பியனார். (யா.வி.ப. 526).

வால கோகிலம்: (16ஆம் நூ.) இவர் கிருட்டிண தேவராயர் காலத்து வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர்.

வாலர், புதுவை: வாலர் கணிதம் (1853).

வாலாம்பாள், எழும்பூர்: வேதாந்தப் பாட்டுகள் (சென்னை 1907), சீவநாடகம் முதலிய அத்வைதப் பாட்டுகளும் பஞ்சீகரண மகா வாக்கியமும் (1908).

வாலைவாவாபசகிப்: தொழுகை அகீகத்து விளக்கம். (சென்னை 1862).

வான்மீகியார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 358. “இனித் தமிழ் செய்யுட் கண்ணும் இறையனாரும் அகத்தியனாரும் மார்க்கண்டேயனாரும் கவுதம னாரும் போல்வார் செய்தன தலையும். இடைச் சங்கத்தார் செய்தன இடையும் கடைச் சங்கத்தார் செய்தன, கடையுமாகக் கொள்க. (நச். உரை.)

விசயரங்க முதலியார், பம்மல்: இவர் கவிக்குஞ்சர பாரதி, மதுரகவி பாரதி, இராமகவி பாரதி பாடிய பதங்களை அச்சிட்டவர் (சென்னை 1886).

விசயராகவ பிள்ளை: (18ஆம் நூ. முற்.) இவர் குருபரம்பரைப் புராணஞ் செய்தார். இது 4161 பாடல்களுடையது.

விசாகப்பெருமாள் ஐயர்: (19ஆம் நூ.) இவரும் சரவணப் பெருமாளையரும் திருத்தணிகையில் வாழ்ந்த வீரசைவப் புலவராகிய கந்தப்பையரின் புத்திரர். இவர் சென்னை மாகாணக் கலாசாலைத் தமிழாசிரியராக விருந்தவர். இவர் நன்னூலுக்கு ஒரு காண்டிகை உரையும், யாப்பிலக்கண அணியிலக்கண வினாவிடையும் செய்துள்ளார். இவர் உவின்சுலோ தமிழகராதிக்குப் பெரிதும் துணை புரிந்தவர்.

விசாலாட்சி அம்மாள்: கௌரி (நாவல்) (சென்னை 1906).

விசுவநாத சாத்திரியார்: (-1835) இவர் யாழ்ப்பாணத்திலே அராலியைச் சேர்ந்தவர்; வண்ணைக்குறவஞ்சி, நகுலமலைக் குறவஞ்சி (கொக்குவில் 1895) முதலிய நூல்கள் இவர் இயற்றியன. இவர் சோதிட வல்லவர். பரகிதம் என்னும் சோதிட நூல் வெளியிட்டவர் (1892); 1835இல் காலமாயினர்.

விசுவநாதசூரி, களமூர்: மணிப்பிரவாள விராடபர்வம் (சென்னை 1905).

விசுவநாத முதலியார்: சந்திரவதனை அல்லது இரண்டு சகோதரர்கள் (சென்னை 1898).

விட்ட குதிரையார்: (சங்ககாலம்) இவர் பாடலில் விட்ட குதிரை என வந்திருத்தலால் இவர் இப்பெயர் பெற்றார். இவர் பாடியது: குறு. 74

வித்தியாரணியர்: (13ஆம் நூ.) இவர் கருநாடகத்தில் கோல்கொண்டா என்று சொல்லப்படுகிற விசயநகரத்தில் இற்றைக்கு 600 ஆண்டுகளுக்கு முன் பிறந்த பிராமணர். இவரது சகோதரர் சாயணர். இவரது இயற்பெயர் மாதவர்; வித்தியாரணிய மென்னும் நகரை ஆண்ட அரசருக்கு மந்திரியாக இருந்தவர். இவர் சிருங்ககிரி மடத்தில் 12-வது சங்கராச்சாரியர் பதவியிலிருந்தவர். இவர் செய்த நூல்கள்: சதுர்வேதபாடியம், அனுபூதிப் பிரகாசம், பரமகீதை, பஞ்சதசி, சீவன் முத்தி விவேகம், திருக்குத் திருசிய விவேகம், மாதவ விருத்தி, நிதான மாதவம் (வைத்தியம்), காலமாதவம், பராசர மிருதி வியாக்கியானம், ஆசாரமா தவம், வியவகார மாதவம், வித்தியாரணிய காலஞானம், சங்கர திக்குவிசயம், சூதசங்கிதையின் வியாக்கியானம், சங்கரவிலாசம், விவரணப் பிரமேய சங்கிரகம், உப நிஷத்தீபிகை, பிரமவிதாசீ, கர்மவிவாக மாதவியம், பாட்ட சாரம், பாட்டசார வியாக்கியானம், வேதாந்த விசயம், பாஞ்சசார வியாக்கி யானம், சங்கர பாஷிய டீகா, கீதாதாற்பரியம், °மிருதி சங்கிரகம், சர்வ தரிசன சங்கிரகம்.

வித்தியானந்த சுவாமி: சகல கலா பூஷணம் (சென்னை 1899).

வித்துவான் கந்தசாமி முதலியார்: (20ஆம் நூ.) இவர் கோவை வழக்கறிஞர். பேருர்ப் பிரபந்தங்கள் பாடியவர். (கொ.பு.)

விநாயகமூர்த்திச்செட்டி, நல்லூர்: கதிரை யாத்திரை விளக்கம் ( யாழ்ப்பாணம் 1907).

விபுலானந்தர்: (-1947) இவர் பண்டிதர் மயில் வாகனம் எனவும் அறியப்படுவர்: மட்டக் களப்பிற் காரை தீவிற் பிறந்தவர். ஆங்கிலத்தில் பீ.எ°.சி. பட்டம் பெற்றவர். இவர் இராமகிருட்டிண மடத்தைச் சேர்ந்திருந்து தொண்டாற்றிய வர்; இலங்கைப் பல்கலைக் கழகத்திலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திலும் தமிழ் விரிவுரையாளராயிருந்தவர். இவர் செய்த நூல்கள் யாழ்நூல், மதங்க சூடாமணி என்பன.

விப்பிர நாராயணர்: தொண்டரடிப் பொடி ஆழ்வார் பார்க்க.

விருச்சியூர் நன்னாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 292.

விரியூகநக்கனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 332

விருபாக்சிலிங்கையர்: திருக்குளமென்னும் தென் திருப்பதி புராணம் (சென்னை 1890).

வில்லக விரலினார்: (சங்ககாலம்) இவர் பாடிய பாடலில் ‘வில்லக விரல்’ என் வருதலின் இவர் இப்பெயர் பெற்றார். இவர் பாடியது: குறு. 370.

வில்லிபுத்தூரர்: (15ஆம் நூ.) இவர் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்த வைணவ அந்தணராவர். இவர் அருணகிரிநாதரோடு வாதம்புரிந்து தோற்றா ரென்னும் செய்தி கேட்கப்படுகின்றது. வக்கபாகை யிலாண்ட கொங்கர்குல மன்னனான வரபதியாட் கொண்டான் வேண்ட இவர் பாரதம் பாடினாரென இவர் மகன் வரந்தருவார் பாடிய பாயிரத்தால் விளங்கும்.

விழிகட்பேதைப் பெருங்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடலில் மான் குட்டியை விழிகட்பேதை என்று கூறிய சொற்சிறப்பினால் இவர் விழிகட் பேதைப் பெருங்கண்ணனார் எனப்படுவர். இவர் பாடியன: நற். 242. திரு வள்ளுவமாலையி லொரு பாடலும் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது.

விளக்கத்தனார்: (-) பழைய இலக்கண நூலாசிரியருள் ஒருவர்.(யா.வி.)

விளம்பி நாகனார்: (5ஆம் நூ.?) பதினெண் கீழ்க்கணக்கி லொன்றாகிய நான் மணிக்கடிகை என்னும் நூல் இவர் பாடியது. இது கடவுள் வாழ்த்து உட்பட 101 பாக்களையுடையது.

விளாஞ் சோலைப் பிள்ளை: (15ஆம் நூ.) இவர் பிள்ளைலோகாசாரியர் மாணாக் கருள் ஒருவர். இவர் சத்தகாதை என்னும் நூல் செய்தவர்.

விற்றூற்று மூதெயினனார்: (சங்ககாலம்) விற்றூற்று ஓர் ஊர். எயினன் - வேடன். இவர் பாடியன: அகம். 37, 136; 288; குறு. 372.

விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 298.

வினைத்தொழிற் சோகீரனார்: (சங்ககாலம்) இவர் பாடியது நற். 319.

வின்சுலோ: உவின்சுலோ பார்க்க.

வீரகவி ராயர்: (16ஆம் நூ.) இவர் பொற்கொல்லர் மரபில் பாண்டி நாட்டிலுள்ள நல்லூரில் பிறந்தவர். இவர் அரிச்சந்திர புராணமென்னும் நூலைச் செய்து 1524இல் திருப்புல்லாணி திருமால் கோயிலில் அரங்கேற்றினார்.

வீரபத்திர ஐயர், திருவண்ணாமலை: தேசிங்குராசன் நாடகம். (சென்னை 1881).

வீரபத்திரக் கவுண்டர்: (20ஆம் நூ.) இவர் வடக்கலூரினர்; தொண்டனூர் அரக்கி நாடகம் பாடியவர். (கொ.பு.)

வீரபத்திரப் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் திப்பம்பட்டி என்னு மூரினர்; கொட்டராய அம்மானை பாடியவர். (கொ.பு.)

வீரபத்திரப் புலவர்: (20ஆம் நூ.) இவர் திருச்செங்கோட்டினர்; சக்கரை மன்றாடியார் காதல் என்னும் நூல் இயற்றியவர். (கொ.பு.)

வீரபிரமேபேந்திர சுவாமி: அற்புத காலக்கியான மஞ்சரி வசன காவியம். (சென்னை 1897).

வீர முத்தண்ண நாட்டார், நடுக்காவேரி: தோத்திரப்பா மாலை (நடுக்காவேரி 1898).

வீரமா முனிவர்: (1680 - 1746) இவர் இத்தாலி நாட்டினின்றும் இந்தியநாடு போந்து தமிழ் கற்றுப் புலமை எய்திய உரோமன் கத்தோலிக்க பாதிரி. இவர் 1724இல் தேம்பாவணி என்னும் நூல் செய்தார். இவர் செய்த நூல்கள் வேதியரொழுக் கம், சதுர அகராதி, செந்தமிழ், கொடுந்தமிழ் (இவ்விரண்டும் இலாத்தின் மொழியில்). தொன்னூல் விளக்கம், அவிவிவேக பூரண குருகதை, திருக் காவலூர் கலம்பகம், வேதவிளக்கம், அடைக்கலமாலை என்பன. இவருக்குப் பெரிதும் துணைபுரிந்தவர் சைவராயிருந்து கிறித்தவராக மாறிய சுப்பிரதீபக் கவிராயர். இவர் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் காலத்தவர். துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் இவர் கொள்கைகளை மறுத்து சைவ தூடண நிக்கிரக மென்னும் நூல் செய்தார். தைரியநாத ரென்பதும் வீரமா முனிவருக்கு இன்னொரு பெயர். இவர் பிராமணர்களைப் போலவே சைவ உணவு கொண்டு ஆசாரமுடையவராய் வாழ்ந்தார்.

வீரமார்த்தாண்ட தேவர்: (19ஆம் நூ.) இவர் செங்குந்த மரபினர், பஞ்சதந் திரத்தை விருத்தப்பாவாற் பாடியவர்.

வீராசாமி உபாத்தியாயர், எழுமூர்: சிவசங்கர சதகம் (1906).

வீராசாமி உபாத்தியாயர் கும்மட்டிபூண்டி: கொந்தி தேசத்தரசனாகிய மதிகெட்ட நாடகம் (சென்னை 1902).

வீராசாமிச் செட்டியார் அட்டாவதானம்: சென்னை பிரசிடன்சிக் கல்லூரியில் தமிழ்ப்புலமை நடத்தியவர். இவர் 1856-க்கு மேல் விநோதரச மஞ்சரி என் னும் நூல் எழுதினார்.

வீராசாமிப் பிள்ளை: (20ஆம் நூ.) இவர் கோவை வழக்கறிஞர், பழநிப்பதிகங்கள் பாடியவர் (கொ.பு.)

வீராசாமி முதலியார்: சிற்ப சிந்தாமணி (சென்னை 1887).

வீராந்தப் பல்லவரையர்: (13ஆம் நூ. முற்.) சோணாட்டுத் திருக்கடவூர்ச் சிவா லயத்து வரையப்பட்ட சாசன மொன்றால் வீராந்தப் பல்லவரையர் என்பார் மூன்றாம் குலோத்துங்கனது வாயிற் புலவராயிருந்தா ரெனத் தெரிகிறது.

வீரை அம்பிகாபதி: (16ஆம் நூ.) இவர் கவிராச பண்டிதரின் புதல்வர். இவர் நெல்லை வருக்கக் கோவை என்னும் நூல் செய்தார். நெல்லை வருக்கக் கோவை இயற்றியவர் பெருமாளையர் என்பர் உ.வே.சாமிநாதையரவர்கள்.

வீரைக் கவிராச பண்டிதர்: கவிராச பண்டிதர் பார்க்க.

வீரை வெளியனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: புறம். 320.

வீரை வெளியன் தித்தனார்: (சங்ககாலம்) வீரை என்பது ஓர் ஊர். இவர் மின்னல் விளங்குவது அரசர் உறை கழித்த வாள் மின்னுவது போலுமென்று உவமித் துள்ளார். இவர் பாடியது: அகம். 188.

வீரைத்தலைவன் பரசமயகோளரி: (12ஆம் நூ.) இவர் முதற் குலோத்துங்கன் காலத்து (1070 - 1119) வாழ்ந்த புலவர்களிலொருவர். தென்னாற்காடு சில்லா திருப்பாதிரிப்புலியூர் பாடலீசுவரர் கோயிலிற் காணப்படும் 2 சாசனப் பாடல் களால் இவர் அஷ்டாசதபுராணம், கன்னிவன புராணம், பூம்புலியூர் நாடகம் என்னும் நூல்கள் பாடினாரெனத் தெரிகிறது. இந்நூல்கள் ஒன்றும் கிடைக்க வில்லை. இவர் கம்பர் கூத்தர்களுக்கு முன் செயங்கொண்டார் காலத்து வாழ்ந்தவர். (சா.த.க.ச.)

வெங்கடரமண ஐயங்கார்: (20ஆம் நூ.) இவர் சாதக அலங்காரம், வைணவாதி 16 நூல்கள் செய்தவர்; ஈடுப்பட்டி என்னு மூரினர். (கொ.பு.)

வெங்கடரமண தாசர்: (-?) கொங்கு நாட்டைச் சேர்ந்த சாமக்குளம் என்னும் ஊரினர்; கொடுமுடிப் புராணம் பாடியவர். (கொ.பு.)

வெங்கடாசலப் புலவர்: (20ஆம் நூ.) இவர் பொறூரினர் (பழநி); நாட்டிராயன் பாடல் செய்தவர். (கொ.பு.)

வெங்கண்ணனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 232.

வெண்கண்ணன்: (சங்ககாலம்) இவர் பெயர் பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் எனவும் காணப்படும். இவர் பாடியன: அகம். 130, 192.

வெண்கொற்றன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 86.

வெண்ணாகனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: அகம். 247.

வெண்ணிக் குயத்தியார்: (கி.மு. 220) கரிகாலனோடு வெண்ணிப் பறந்தலையிற் பொருது முதுகிற் பட்ட புண்ணுக்கு நாணி வடக்கிருந்த பெருஞ்சேரலாதனை குயத்தியார் என்னும் இப்புலவர் பாடியுள்ளார். இதில் கடற்போர்வல்ல கரிகாலன் சிறந்தவனென்றும் அவனைப் பார்க்கிலும் சேரலாதன் சிறந்தவ னென்றும் கூறப்பட்டுள்ளது. இவர் பாடியது: புறம். 66.

வெண்ணிமலைக் கவிராயர்: திருச்செந்தூர்ப் புராணம். நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர் உரை எழுதி இதனை அச்சிட்டார் (யாழ்ப்பாணம் 1907.)

வெண்ணிமலைப் பிள்ளை, சிவகங்கை: நைடதமென்னும் நளச்சக்கரவர்த்தி அம்மானை (மதுரை 1904).

வெண்பாப்புலிக் கவிராயர்: (19ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டிலே மணப்புச்சேரி என்னும் சிற்றூரில் வாழ்ந்த சைவப் பண்டார மரபினர். இவர் சிவகங்கைச் சிற்றரசரால் ஆதரிக்கப்பட்டவர். வெண்பாப் பாடுவதில் திறமையுடையவ ராதலின் இவர் இப்பெயர் பெற்றார்.

வெண்பூகன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 83.

வெண்பூதியார்: (சங்ககாலம்) வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் எனவும் இவர் பெயர் காணப்படும். இவர் பாடியன: குறு. 97, 174, 219.

வெண்மணிப் பூதி: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 299.

வெள்ளாடியனார்: (சங்ககாலம்) புலி தானடித்தகளிறு இடப்புறம் வீழின் உண்ணாது என்று இவர் கூறியுள்ளார். இவர் பாடியது: அகம். 29.

வெள்ளியந் தின்னனார்: (சங்ககாலம்) இவர் பாடியது: நற். 101.

வெள்ளி வீதியார்: (கி.மு. 180-) இவர் பெண்பாலினர். “பொய்யா மொழிக்கு” என்னும் திருவள்ளுவமாலைப் பாடல் இவர் பாடியதாகக் காணப்படுகின்றது. இவர் பாடியன: அகம். 45, 362; குறு. 27, 44, 58, 130, 146, 149, 169, 386; நற். 70, 335, 348.

வெள்ளெருக்கிலையார்: (கி.மு. 180-) இவர் பரணர் காலத்து விளங்கிய ஒரு புலவர். எவ்வியின் மனைவி யானை அடி அளவு மெழுகிய சிறிய இடத்தில் புல்மேல் இறந்த கணவனுக்குப் பிண்டம் வைத்தலைக் குறித்துள்ளார். இவர் பாடியன: புறம். 233, 234.

வெள்ளைக்குடி நாகனார்: (கி.பி. 20) இவர் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வள வனைப் பாடியவர்களுள் ஒருவர். இவர் பாடியன: நற். 158, 196; புறம். 35.

வெள்ளியம்பலத் தம்பிரான்: (17ஆம் நூ.) இவர் துறை மங்கலம் சிவப்பிரகாச சுவாமிகளின் ஆசிரியர். இவர் முத்திநிச்சயமென்பதற் கோருரையும், சிவஞான சித்தியாருக்கு ஞானாபரண விளக்க மென்னுமுரையு மியற்றியவர்; தருமபுர ஆதீனத்தைச் சேர்ந்தவர். தேவாரங்களுள்ளும் பெரிய புராணத்தும் தாம் பாடிய பல பாடல்களை இடைச்செருகியவர். வெள்ளி என அறியப்படுப வர் இவரே. இவர் இடைச் செருகிய பாடல்கள் வெள்ளிபாடல் எனப்படும். இவர் செய்த நூல்கள்: ஞானசம்பந்தர் சமூகமாலை, தாலாட்டு, திருப்பள்ளி எழுச்சி, முத்தி நிச்சயச் சிற்றுரை, பேருரை, மிருகேந்திர ஆகமத்தமிழுரை முதலியன.

வெள்ளூர்க்காப்பியன்: இடைச்சங்கப் புலவருளொருவர். (இ.க.உ.)

வெறிமங்கைபாகக் கவிராயர்: (19ஆம் நூ.) இவர் பாண்டி நாட்டில் கொடுங் குன்றத்திற் பிறந்தவர். இவர் மருங்காபுரிச் சிற்றரசராற் போற்றப்பட்டவர்; அவர் மீது குறவஞ்சி, கோவை உலா முதலியன இயற்றியவர்.

வெறிபாடிய காமக் கண்ணியார்: (சங்ககாலம்) இவர் வெறிபாடலை வருணித் துள்ளமையால் வெறிபாடிய என்று சிறப்பிக்கப்பட்டுள்ளார். இவர் பாடியன: அகம். 22, 98; புறம். 271, 302; நற். 298.

வென்றிமாலைக் கவிராயர்: (1565) இவர் திருச்செந்தூரினர்; திருச்செந்தூர்ப் புராணஞ் செய்தவர்.

வேங்கடசாமி கங்காதரதேவர், பாண்டேசுரம்: அட்டாங்க இருதயம் சாரீர° தானம் என்னும் நூலை வடமொழியிலிருந்து மொழி பெயர்த்தவர். (1898).

வேங்கடசாமி நாட்டார் ந.மு.: (1884-1945) இவர் தமிழ்ப் புலமை மிக்கவராய்ப் பற்பல தமிழ் நூல்கள் இயற்றியுள்ளார். இவர் திருச்சியைச் சேர்ந்தவர். இவர் அகநானூறு, சிலப்பதிகாரம், பரஞ்சோதி திருவிளையாடல் முதலிய பல நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். கபிலர், நக்கீரர் முதலிய பல ஆராய்ச்சி நூல்களுமியற்றியவர். இவர் தமது 60ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குப்பின் 1945இல் காலமானார்.

வேங்கடசுப்பப் பிள்ளை, பங்களூர்: தம்பு சிந்தாமணி (சென்னை 1905).

வெங்கடசுப்பராவ்: ஆனந்ததீபிகை (மைலாப்பூர் 1901), கதாரத்தினாவளி (1893), மர்மசாத்திரம் (1894).

வேங்கடதாசர், சித்தூர்: மகா பக்த விசயம் (மொழி பெயர்ப்பு) (1870).

வேங்கடரங்க இராமனுச தாசர்: மணவாள முனிகள் திருவந்தாதி (சென்னை 1869).

வேங்கடரங்கப் பிரசங்கியார்: (20ஆம் நூ.) கரடிபாவி இராமானுச நாவலருடைய தந்தையார்; சீரங்க மஞ்சரி, அட்டோத்ரமானசீகம் முதலிய நூல்கள் இயற்றியவர். (கொ.பு.)

வேங்கடராம உபாத்தியாயர்: மார்க்கண்டேய விலாசம் (சென்னை 1869).

வேங்கடராம சாத்திரி, கரந்தையம்பதி: திருவையாற்றுப் புராண வசனம் (1907).

வேங்கடராம சாத்திரி, செங்கல்பட்டு: கதா சரித்திர சாகரம் (மொழி பெயர்ப்பு) (1905), சஞ்சீவிகிரி அல்லது செஞ்சி (1903).

வேங்கடராய சாத்திரி: தரும நூல் (1826).

வேங்கடராய யோகீந்திரர், கனகாம்பாக்கம்: யோக ஞானானுபவ தீபிகை (சென்னை 1895).

வேங்கடாசல தீட்சிதர்: விபூதி ருத்திராக்கதாரண நிரூபணம் (1901).

வேங்கட்ட ராமையங்கார்: வால்மீகி ராமாயண வசனம் (1906).

வேங்கட்ட ராமையர்: இராமாயணக் கும்மி (1901).

வேங்கட்ட ராமையர் S.: நீதி விவாத மஞ்சரி (1901).

வேட்ட கண்ணன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 389.

வேணாட்டடிகள்: (16ஆம் நூ.) இவர் வேணாட்டு அரசராவர். தென் திருவிதாங் கூருக்கு வேணாடு என்று பெயர். இவர் தில்லைக்கு ஒரு திரு விசைப்பாப் பதிகம் பாடியுள்ளார். இவர் சொன்னடையால் 10ஆம் நூற்றாண்டினராதல் கருதப்படும் எனக் கூறுவர் இலக்கிய வரலாற்று ஆசிரியர்.

வேதகிரி முதலியார்: (1795 - 1852) இவர் தொண்டை மண்டலத்திலுள்ள களத்தூரிற் பிறந்தவர். இராமனுசக் கவிராயரின் மாணவர். இவர் மனுநீதி சதகம், மனுவிக்கியான சதகம், சன்மார்க்க சதகம், நீதி சிந்தாமணி என்னும் நூல்கள் செய்தவர். இலக்கணக் களஞ்சியம், இலக்கியக் களஞ்சியம் என்னும் இரு தொகுப்பு நூல்களும் இவராற் செய்யப்பட்டன. இலக்கணக் களஞ்சியத் திலே இலக்கணத் திரட்டு, பிரபந்த தீபம், கவி சாகரம், குவலயானந்தம், அரிய விதி, மயேச்சுரம், அவனியம், பஞ்ச லட்சணப்பயன் முதலிய இலக்கணங் களிலிருந்து பல சூத்திரங்கள் எடுத்து எழுதியுள்ளார். இலக்கியக் களஞ் சியத்துள் கயாகர நிகண்டு, ஏகபாத நிகண்டு, பொதிய நிகண்டு, அவ்வை நிகண்டு முதலிய நூல்கள் எடுத்து எழுதியுள்ளார். அமெரிக்கன் மிசன் 1843இல் அச்சிட்ட சூடாமணி நிகண்டின் 11-வது பகுதியில் இவர் செய்த பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வேதக்கண் ஐயர்: (19ஆம் நூ.) இவர் சிலாபப் பகுதியில் வாழ்ந்த புரத்த°தாந்து கிறித்துவ போதகர். இவர் இலங்கைக்கும்மி என்னும் நூல் பாடியுள்ளார். (1873).

வேதநாயக சாத்திரி, தஞ்சாவூர்: (தஞ்சாவூர் 1907) செபமாலை, தேவாலயத்திலும் குடும்பத்திலும் பாடத்தக்க ஞான கீர்த்தனைகள் (சென்னை 1855), ஞானத் தச்சன் நாடகம் (1908), சாத்திரக்கும்மி (1850).

வேதநாயகம் பிள்ளை, மாயவரம்: (1824 - 89) இவர் திரிசிரபுரத்திலுள்ள வேளாண் களத்தூரிற் பிறந்தவர்; கத்தோலிக்க கிறித்துவ மதத்தினர்; சில்லா முனிசீப்பாகக் கடமை ஆற்றியவர். இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் மாணவருள் ஒருவர். பெண் புத்திமாலை, நீதி நூல், சர்வ சமரச கீர்த்தனை, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி சரித்திரம் முதலியன இவர் செய்த நூல்கள். (1887.)

வேதாசலம் பிள்ளை, நாகை: மறைமலையடிகள் பார்க்க.

வேதாந்த சுப்பிரமணிய பிள்ளை, சிவகங்கை: மயூரகிரிப் புராணம் (யாழ்ப் பாணம் 1885).

வேதாந்த தேசிகர்: (1269-1371) இவர் காஞ்சீபுரத்திற் பிறந்தவர். இயற்பெயர் திருவேங்கடமுடையார்; இவர் வடகலை ஆசிரியர். இவர் வடமொழியில் 95 நூல்களும், தமிழில் 24 நூல்களுமியற்றியவர். காஞ்சீபுர வரதராசப் பெருமாளது பெருமையை இவர் அத்தகிரி மான்மியம் என்னும் நூலாகப் பாடினர். இவர் பாடிய தோத்திர நூல்கள்: அடைக்கலப்பத்து, நவரத்தின மாலை, திருச்சின்ன மாலை என்பன. இவர் பகவத் கீதையின் சாரத்தைக் கீதார்த்த சங்கிரகம் என்னும் நூலாகச் செய்தார். பரம பதங்கம், அர்த்த பஞ்ச கம், பிரபந்த சாரம், மும்மணிக் கோவை, துவயச் சுருக்கு, பரம சோபனம், சரம சுலோகம், அமிர்த ரஞ்சினி, அமிர்தா சுவாதினி, பதினேழு சுலோகம், பன்னிரு நாமம் என்பன இவர் செய்த பிற நூல்கள்.

வேதாந்தராம ஐயங்கார், தில்லையாம்பூர்: வால்மீகி ராமாயண கிளைக் கதைகள் (1906), வில்லிபுத்தூரர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் சரித்திரச் சுருக்கம் (1904).

வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது ; குறு. 362.

வேம்பற்றூர்க் குமரனார்: (சங்ககாலம்) வேம்பற்றூர் திருநெல்வேலிப் பகுதியி லுள்ள ஓர் ஊர். இவர் பாடியது: அகம். 157; புறம். 317

வேம்பு அம்மாள்: வச்சலா கல்யாணம் (பாடல்) (கும்பகோணம் 1906).

வேம்பையர்கோன் நாராயணன்: (9 அல்லது 10ஆம் ஆண்டு) “திருச்சிராப் பள்ளி குன்றின்மேல் பல்லவர் அமைந்த குடைவரை மதில்களில் பாயிரமுட் பாடல்களாகிய அந்தாதி நூலொன்று பொறு எனப்பட்டுள்ளது. இதன் எழுத்தமைதி கொண்டு உத்தேசம் 9 அல்லது 10ஆம் நூற்றாண்டில் இந்நூல் வரையப் பட்டதாதல் வேண்டுமென்று சாசன வறிஞர் கருதுவர். இவ்வந்தாதி பாடியவர் மணியன் மகன் நாராயணன் என்பார்.

வேரி சாத்தன்: (சங்ககாலம்) இவர் பாடியது: குறு. 278.

வேலப்ப தேசிகர்: (18ஆம் நூ.) இவரிலிருவர் உண்டு. இருவரும் ஒரு சாலை மாணவர். ஒருவர் மடாதிபதியாகவிருந்து பறியலூர்ப் புராணம் செய்தார். மற்றவர் சின்னப் பட்டத்திருந்தவர். இவர் பஞ்சாக்கப் பஃறொடை, ஞான பூசாவிதி, மரபட்டவணை என்னும் நூல் செய்தவர்.

வேலாயுத உபாத்தியாயர்: சரபேந்திரர் கரப்பான் ரோக வைத்தியம், சரபேந்திரர் குன்மரோக வைத்தியம், சரபேந்திரர் சுரரோக வைத்தியம், சரபேந்திரர் நயனரோக வைத்தியம், ³ நீரிழிவு வைத்தியம், ³ விரணரோக வைத்தியம், ³ விஷ வைத்தியம் ³ வைத்திய முறைகள்.

வேலாயுத பண்டிதர்: (-?) இவர் கொங்கு நாட்டிலுள்ள தாரா புரத்தினர்; தாராபுரத் தலபுராணம் (1906), திருமூர்த்தி மலைப் புராணம் முதலியன பாடியவர் (கொ.பு.)

வேலாயுத முதலியார்: (19ஆம் நூ. பிற்.) தொழுவூரினராகிய இவர் இராசதானிக் கலாசாலையில் தலைமைத் தமிழாசிரியராயிருந்தவர். திருவெண்காட்டடிகள் வரலாறு, வேளாண் மரபியல், சங்கர விசயம் முதலிய உரை நடை நூல்கள் செய்தவர்.

வேலுப்பிள்ளை, திரிகோணமலை: திறான்°றாவால் யுத்தக் கும்மி (கொழும்பு 1902).

வேலுப்பிள்ளை, தெல்லிப்பழை: கேத்திர கணிதம் (The elements of Euclid in Tamil) (1888).

வேலுப்பிள்ளை, வட்டுக்கோட்டை: திருத்தில்லை நீரோட்டக யமகவந்தாதி (யாழ்ப்பாணம் 1891.)

வேலுப்பிள்ளை, க. வயாவிளான்: சிங்கைமுருகேசர் பேரில் பதிகம் (1893).

வேலு தேசிகர், கவித்தலம்: திருவைகாவூர்ப் புராணம் (1894).

வேலைய தேசிகர்: (17ஆம் நூ.) இவர் துறைமங்கலம் சிவப்பிரகாசரின் தம்பி; வெள்ளியம்பலத் தம்பிரானிடம் கல்வி கற்றவர். சீகாளத்திப் புராணத்தின் இறுதிப் பன்னிரண்டு சருக்கங்கள் பாடியவர்; இவர் செய்த பிற நூல்கள் நல்லூர்ப்புராணம், கைத்தலமாலை, வீரசிங்காதன புராணம், குருநமச்சிவாய லீலை; மயிலை இரட்டைமணி மாலை, பாரிசாத லீலை, மயிலத்துலா என்பன. வீரசிங்காதன புராணம் 1716இல் பாடப்பட்டது.

வேற் பிள்ளை. க.: (1847 - 1930) இவர் மட்டுவில் என்னும் ஊரிற் பிறந்தவர். இவர் தந்தை பெயர் வேலாயுத பிள்ளை கணபதிப் பிள்ளை உடையார். இவர் செய்த நூல்கள்: வாதவூர்ப் புராண விரிவுரை, புலியூரந்தாதி உரை, அபிராமி அந்தாதி உரை, கௌளி நூலுரை, புலோலி பர்வதத் தனியம்மை தோத்திரம், புலோலிவயிரவக் கடவுள் தோத்திரம், ஈழ மண்டல சதகம் என்பன. இவர் சிதம்பரத்திலே காலமானார்.

வைகாபியர்: அகத்தியர் மாணவர் பன்னிருவரு ளொருவர்.

வைத்தியநாதச் செட்டி, உறையூர்: சிவத்துரோக கண்டன நிராகரணம் (1896).

வைத்தியநாத தம்பிரான், யாழ்ப்பாணம்: (17ஆம் நூ.) இவர் அளவட்டியினர். சிதம்பரத்தில் வாழ்ந்து வியாக்கிரயாத புராணஞ் செய்தார். ஞானபிரகாசர் காலத்தவர். வடமொழி தமிழ் என்னும் இருமொழி வல்லவர்.

வைத்தியநாத தேசிகர்: (17ஆம் நூ.) இவர் வைத்திய நாவலர் எனவும் படுவர். இவர் இலக்கண விளக்கம் என்னும் நூல் செய்தார். சிவஞான யோகிகள் இந்நூற் குற்றங்களை இலக்கண விளக்கச் சூறாவளி என்னும் நூலியற்றி மறுத்தனர். இவர் செய்த பிற நூல்கள் திருவாரூர்ப் பன்மணி மாலை, நல் லூர்ப் புராணம், மயிலம்மை பிள்ளைத் தமிழ் என்பவை. இவர் படிக்காசுப் புலவருக்கு ஆசிரியர்.

வைத்தியலிங்கச் செட்டியார்: (19ஆம் நூ.) இவர் அச்சுவேலி தெற்கிலே 1753இல் பிறந்தவர். இவர் நெல்லியோடைத்தேவிமீது பல தனிப்பாடல்களும், பிள்ளைக் கவி என்னும் பிரபந்தமும் பாடினார்.

வைத்தியலிங்கப் பத்தர், திருமலைராயன் பட்டணம்: வராகமிகிரர் செய்த பிருஹஜ் சாதகம் என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்தவர் (1905).

வைத்தியலிங்க பிள்ளை, வண்ணைநகர்: நல்லை வடிவேலர் ஆசிரிய விருத்தம் (யாழ்ப்பாணம் 1892).

வைத்தியலிங்க பிள்ளை, வல்வை: (வல்லு வெட்டித்துறை) அகப் பொருள் விளக்கம் (1878), கந்த புராணம் (1879), கல்வளையந்தாதி (1887) முதலிய நூல்களுக்கு உரை யெழுதிப் பதித்தவர்; சிவராத்திரி புராணம் சூடாமணி நிகண்டு முதலிய நூல்களை அச்சிட்டவர் (1875), சித்தி விக்கினேசுவரர் ஊஞ்சல் பாடியவர் (1893)

வைத்தியலிங்கம், வல்வை: வயித்தியலிங்கம் பிள்ளை வல்வை பார்க்க.

வைத்தியலிங்கர், திருமயிலை: ஞானவெட்டி என்னும் நூலைப் பதித்தவர் (1884)

வையாபுரிப் பிள்ளை, ஐயாக்கண்ணு: நல்லதங்காள் நாடகம் (சென்னை 1875).

வையாபுரி முதலியார், திருத்தொட்டிக்கலை: அருணாசலக் கவிராயர் பாடிய இராம நாடகத்தைப் பதித்தவர். (1867)

பின் சேர்ப்பு
அங்கப்பிள்ளை, பவானி: முருகப்ப நவரச சிலேடை (1894)

அசலாம்பிகை அம்மாள்: இவரும் குழந்தை வேலுப்பிள்ளையும் மேல் சேவூ ரென்று வழங்கும் திருவிடையூர்த் தல புராணம் இயற்றினர். (கூடலூர் 1899.)

அட்சர முதலியார்: மகுடவல்லி. (சென்னை 1906.)

அண்ணாசாமி ஐயர்: சிதம்பரமான்மியம். (மொழிபெயர்ப்பு.) (1897.)

அண்ணாசாமிப் பிள்ளை: மனோரம்மிய சிங்காரப்பதம், (1893).

அண்ணாமலை முதலியார், ஆரணி: மதுரை வெண்பாமாலை (இரங்கூன் 1891.)

அண்ணாவியார், அதிவீரராமன்பட்டினம்: மகாபாரத அம்மானை, (தஞ்சாவூர் 1903)

அந்திரீசுப் பிள்ளை, யாழ்ப்பாணம்: அன்னை அழுங்கல் ஒப்பாரி. (1693)

அப்ட் அல் காதிர்: ஈமானுண்மை இசுலா நன்மை என்னும் ஹக்கீகத்துல் இ°லாம். (சென்னை 1898.)

அப்ட்அல் காதிர், (வாலை பாபாவின் புதல்வர்): இரத்ந முகம்மது காரண சரித்திரம். (சென்னை 1882.)

அப்ட்அல் காதிர் நயினார், காயற்பட்டினம்: சித்திரகவி முதலிய பாடற்றிரட்டு, (முகம்மது சமயப் பாடல்கள்.) (சென்னை 1896.)

அப்ட்அல் காதிர் லெப்பை: பன்னிரண்டு மாலை. (இரங்கூன் 1907.)

அப்துல்லா இபின் அபிட்அல் காரிம்: ஆன்றோர் அனுபோக கைவல்லிய வைத்தியம்; செய்யுள் நடையிலமைந்தது. (பெங்களூர் 1900.)

அப்பன்சாமி, தொட்டாச்சாரிய புரம்: திருமலை மகாத்மியம். (1878.)

அப்பாசாமிப் பிள்ளை: நவநீதசாரம். (சென்னை 1859.)

அப்பு முதலியார்: அரிநாம தோத்திரப்பா. (1887.)

அமிர்த கவிராயர் பாலாறு: கோகுல சதகம்.

அமிர்தலிங்கத் தம்பிரான்: திருமயிலைத் தலபுராணம்.

அம்பலத்தாடுமையன் தொண்டைமான் துறை: வசுசரித்திரம்.

அரசஞ் சண்முகனார்: (1868-1911) இவர் சோழவந்தான் என்னுமூரினர். அரசப் பிள்ளையின் புதல்வர். இவரியற்றிய நூல்கள்: முருகக் கடவுள் கலம்பகம், இன்னிசை இருநூறு, பஞ்சதந்திர வெண்பா, மதுரைச் சிலேடை வெண்பா, மதுரை மீனாட்சியம்மை சந்தத் திருவடிமாலை, திருவள்ளுவர் நேரிசை, திருக்குறள் சண்முகவிருத்தி, தொல்காப்பியப் பாயிரம், சண்முக விருத்தி ஆகு பெயர், அன்மொழித்தொகை ஆராய்ச்சி என்பன.

அன்பம்மாள் போல்: அழகம்மாள் (கதை) (சேலம் 1906.)

ஆதிநாராயண ஐயர்: சனமனோல்லாசனி. (புகைவண்டிப் பிரயாணப்பாட்டு. சென்னை 1896.)

ஆறுமுக நாயக்கர், காஞ்சீபுரம்: வருணதர்ப்பணம், (1907.)

இராகவமூர்த்தி, பாணம்பட்டி: விராடபர்வ நாடக மென்னும் மாடுபிடி சண்டை நாடகம். (சென்னை 1907).

இராமசாமிப் பிள்ளை: சென்னை கல்விச் சங்கத்துப் புத்தக பரிபாலகர் (Librarian) ஆக இருந்தவர்; தாண்டவராய முதலியாராற் பரிசோதிக்கப்பட்ட திவாகரத்தை 1839ஆம் வருடத்திற் பதித்தவர். இவர் ஊர் கொற்றமங்கலம். (உ.வே.சா.)

எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியார்: இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்து விளங்கிய தமிழ்ப் புலவர்களுளொருவர்.

க°தூரி றங்கையார்: மகாபாரத வினாவிடை. (சென்னை 1907.)

கண்ணையா நாயுடு, வேலூர்: காசி ராமேசுவர மசிலிக் கதைகள். (சென்னை 1908.)

கந்தசாமிக் கவிராயர், உடுமலைப்பேட்டை: அரிமழத்தல புராணம். (சென்னை 1907.) இவர் கம்பராமாயணம் ஆரணிய காண்டத்துக்கு உரையெழுதியவர் (1903), அரசன் சண்முகனாரியற்றிய மாலைமாற்று மாலையை உரை எழுதிப் பதித்திவர் (1900).

கனகரத்தின உபாத்தியாயர்: இவர் ஆறுமுக நாவலர் சரித்திரத்தை 1892இல் எழுதினார். இவர் யாழ்ப்பாணத்தவர்.

கனகசபைக் கவிராயர், உடையார்பாளையம்: திருப்புன்கூர்ப் புராணம். (சிதம்பரம் 1907.)

காஞ்சிபுரம் மகா வித்துவான் சபாபதி முதலியார்: இவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை காலத்தில் விளங்கிய தமிழ்ப் புலவர்களிலொருவர்.

சோமசுந்தர தேசிகர். ச.: (-1941). இவர் திருவாரூர் சாமிநாத தேசிகர் பரம்பரை யினர். இவர் இயற்றிய நூல்கள் சைவசிகாமணி இருவர், கமலை ஞானப்பிர காசர், நரவாகன தத்த சரிதம், பெரிபுளு°, தமிழைக் குறித்த பழைய குறிப்பு. தமிழ்ப் புலவர் வரலாறு 16ஆம் நூற்றாண்டு, ³ 17ஆம் நூற்றாண்டு.

தாண்டவராயத் தம்பிரான்: (19ஆம் நூ.) இவர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை காலத்தில் சென்னையில் கோவிந்தப்ப நாயக்கன் தெருவிலுள்ள திருவாவடு துறை மடத்தில் இருந்த திருவாவடுதுறை ஆதீன வித்துவான்.

தாண்டவராய முதலியார்: இவர் சென்னை கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமையை 1839ஆம் வருடம் வரையில் நடத்தியவர்; பின்பு வேறு உத்தி யோகத்தில் நியமிக்கப்பட்டு விசாகப்பட்டணம் சென்றார். இலக்கண வினா விடை என்னும் நூல் ஒன்று இவரால் இயற்றப்பட்டு 1926ஆம் வருடம் பதிப் பிக்கப்பெற்றது. இவர் நாலடியாரையும் திவாகரம் முதல் எட்டுத் தொகுதி களையும் ஆராய்ந்து பதித்தற்குச் சித்தஞ் செய்தார். இவரிடம் 22 மாணவர் பாடங்கேட்டு வந்தார்களென்றும் அவர்களில் தாமும் ஒருவரென்றும் புரசை அட்டாவதனம் சபாபதி முதலியார் என்னிடம் சொல்லியதுண்டு. (உ.வே.சா.)

(19ஆம் நூ.) இவர் 1824இல் பஞ்சதந்திரத்தை மராட்டி மொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தார். இலக்கண வினாவிடை (1820)இல் கதா மஞ்சரி என்னும் நூல்களைச் சிறுவரின் பொருட்டு இயற்றினார் (1826); திவாகரம் சூடாமணி நிகண்டு (1856), சதுர அகராதி (1824) முதலிய நூல்களை முதலில் அச்சேற்றினார்.

திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்: (19ஆம் நூ. பிற்.) இவர் தொண்டை மண்டல வேளாளர்; திரிசிரபுரம் மாணிக்க முதலியாருடைய வீட்டு வித்துவா னாகவிருந்து விளங்கியவர். சைவ நூல்களில் நல்ல பயிற்சியுடையவர். (உ.வே.சா.)

திருநயம் அப்பாவையர்: (19ஆம் நூ. பிற்.) இவர் திருவிளையாடற் கீர்த்தனம் முதலியவற்றை இயற்றியவர்.

தேவராச சுவாமி: சத்திகவசம்.*

நயனப்ப முதலியார்: (10ஆம் நூ.) இவர் சென்னை கல்விச் சங்கத்து வித்துவானாக இருந்தவர். தாண்டவராய முதலியாருடைய அனுமதிப்படி திவாகரம் 9,10ஆம் பகுதிகளைப் பதித்தவர்.

பசுபதிப் பண்டாரம்: (19ஆம் நூ. பிற்.) இவர் மீனாட்சி சுந்தரம்பிள்ளை காலத் தில் பட்டீச்சுரத்தில் வாழ்ந்த புலவர். தேவாரம் முதலியவற்றில் பயிற்சியுற்று அவற்றைப் பண்ணோடு ஓதுபவர். சைவ நூல்களிற் பயிற்சியுடையவர்.

பாலசுப்பிரமணிய பிரமசாமி, மதுரை: காங்கிரெ° கீதை. (சென்னை 1908).

பூவை கலியாணசுந்தர முதலியார்: (1854 - 1918) இவர் தொண்டை நாட்டைச் சேர்ந்த புத்திவேடு என்னும் மூரினர்; அண்ணாசாமி முதலியாரின் புதல்வர். இவர் செய்த நூல்கள்: திருவான்மீயூர்ப் புராணம், திருப்பாசூர்ப் புராணவசனம், திருவலிதாயப் புராண வசனம், திருவேற்காட்டுப் புராண வசனம், திரு வொற்றியூர்ப் புராணவசனம், சீகாளத்திப் புராணவசனம், சேக்கிழார் சுவாமி வரலாறு, ஏகாம்பரேசர் பதிகம், சுந்தர விநாயகர் பதிகம், கற்பக விநாயகர் பதிகம், திருமுல்லைவாயில் மாசிலாமணியீசர் பதிகம்.

பேரூர் வாத்தியார்: இவர் கச்சியப்ப முனிவர் சென்னையிலிருந்து விநாயக புராணத்தை அரங்கேற்றியபோது சிறப்புப் பாயிரமளித்தவர்களு ளொருவர்.

போசராச பண்டிதர்: சரசோதிமாலை.

மதுரைக் கந்தசாமிப் புலவர்: (19ஆம் நூ.) சென்னை கல்விச் சங்கத்திருந்தவர். மிருதி சந்திரிகை முதலியவற்றைத் தமிழிலியற்றியவர். அந்நூல் 1825ஆம் வருடம் பதிப்பிக்கப் பெற்றது. (உ.வே.சா.)

மனோன்மணி அம்மையார் பண்டிதை: (1863 - 1908) இவர் குன்றத்தூரை யடுத்த மண்ணிவாக்கம் என்னுமூரினர்; முருகேச முதலியாரின் புதல்வி; தமிழ்ப் புலமையோடு மருத்துவப் புலமையும் பெற்று விளங்கியவர். இவர் இயற்றிய நூல்கள்: பழநிப்பாமாலை, பழநியிரங்கல், விருத்தப் பதிகம், பழநி வெண்பாப் பதிகம், திருவாமத்தூர் அழகியநாதர் பஞ்சரத்தினம், சென்னைக் கந்தசுவாமிப் பதிகம், திருவானைக்கா அகிலாண்ட நாயகி அந்தாதி, திருமுல்லை வாயில் கொடியிடை நாயகி அந்தாதி, திருமயிலைக் கற்பக வல்லி அந்தாதி, திருக் கழுக்குன்றம் திரிபுர சுந்தரிமாலை, பழநிச் சந்நிதி முறை, பழநிச் சிங்காரமாலை, பூவைச் சிங்கார சதகம், குன்றத்தூர் பொன்னி யம்மன் பதிகம். புதுவைக் காமாட்சியம்மன் பதிகம், தனிப்பாடற் றிரட்டும் பல பாடற் றிரட்டும், மனோன் மணீயம். (மருத்துவ நூல்.)

வீமநாயக்கன் பாளையம், இருளாண்டி வாத்தியார்: (19ஆம் நூ. பிற்.) இவ ருடைய கால்கள் பயனற்றனவாக இருந்தமையால் எருதின் மேலேறி ஒரு மாணாக்கனை உடன் அழைத்துக்கொண்டு செல்வவான்களிடம் சென்று தமது பாண்டித்தியத்தை வெளிப்படுத்திப் பரிசு பெற்று வருமியல் புடையவர். (உ.வே.சா.)

வேலாயுத கவிராயர்: இராமநாதபுரம் - (19ஆம் நூ.) இவர் சிறந்த வாக்கி; திருட்டுக்கும்மி முதலிய நூல்களைச் செய்தவர்; திரிச்சிராப்பள்ளி அரியலூர் முதலிய இடங்களிலுள்ள செல்வராலாதரிக்கப்பட்டவர். (உ.வே.சா.)

சங்ககாலப் புலவர் அரசர் காலக்கணிப்பை
பற்றிய குறிப்பு
சங்ககாலப் புலவர் அரசர் காலங்களைப் பலர் பலவாறு கணித்துக் கூறியுள்ளனர். இவர்கள் காலக்கணக்கைக் குறிப்பதற்கு எல்லைக் கல்லாக உள்ளது இலங்கைக் கயவாகுவின் காலமாகும். கண்ணகியின் கல் நடுதல் விழாவுக்கு இலங்கைக் கயவாகு சேரநாடு சென்றிருந்தான் எனச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. கயவாகு கண்ணகியின் சிலம்பைக் கொண்டுவந்து பத்தினி வழிபாட்டை இலங்கையில் தொடக்கினான் எனச் சிங்கள நூல்களும் கூறு கின்றன. கயவாகுவின் காலம் கி.பி. 173 - 195. கண்ணகியின் கல் நடுதல் விழா சேரன் செங்குட்டுவனால் எடுக்கப்பட்டது. புலவர்கள் சேரன் செங்குட்டுவனின் முன்னோரைப் பத்துப் பாட்டிற் பாடியுள்ளார்கள். பத்துப் பாட்டிற் பாடப்பட்டுள்ள அரசரின் ஆட்சிக் காலம் அந்நூலிற் காணப்படுகின்றது. ஆகவே சேரன் செங்குட்டுவனின் காலத்தை கி.பி. 173இல் ஆரம்பித்து அவனுக்குமுன் ஆண்ட சேர அரசர்களின் காலம் கணிக்கப்படுகின்றது. இவ்வரசர்களைப் பாடிய புலவர்கள் சோழ பாண்டிய அரசர்களைப் பாடியுள்ளார்களாயின் அவ் வரசர் இச்சேர அரசர் காலத்தவர் என்று துணியப்படுவர். இவ்வாறு சில சேர, சோழ, பாண்டிய அரசர்களின் காலத்தைத் தெரிந்துகொண்டால் அவ்வரசரைப் பாடிய புலவர்களின் காலமும் தெளிவாகின்றது. இம்முறையைப் பின்பற்றிப் பேராசிரியர் கா. சுப்பிரமணியப் பிள்ளை அவர்கள் தமது இலக்கிய வரலாற்றில் புலவர்கள், அரசர்கள் காலங்களைக் குறிப்பிட்டுள்ளார். முன் உள்ளவர்கள் செய்துள்ள காலக்கணிப்பைவிட இவர் காலக் கணிப்பில் பலமாறுதல்கள் காணப்படுகின்றன. முன்னுள்ளவர்கள் கரிகாற் சோழனின் காலம் கி.பி. 50 வரையில் எனக்கூறிச் சென்றனர். இவர் அவன் காலம் கி.மு. 220-200 எனக் கூறியுள்ளார். இவர், பரணரில் இருவர், பெருங்குன்றூர் கிழாரில் இருவர், கணக்காயரில் இருவர், இளநாகனாரில் இருவர் இருந்தார்கள் எனக் கூறியுள்ளார்கள். ³ ஆசிரியரின் இலக்கிய வரலாற்றிற் கண்ட காலக் குறிப்பினையேயாம் பின் பற்றியுள்ளோம்.

சேர அரசர்
பதிற்றுப்பத்து:
1ஆம் பத்து உதியன் சேரலாதன் ? கி.மு. 350-
2ஆம் பத்து இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் கி.மு. 328-270
3ஆம் பத்து பல்யானைச் செல்கெழுகுட்டுவன் கி.மு. 270-245
4ஆம் பத்து களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் கி.மு. 245-220
(பெருஞ்சேரலாதன்) கி.மு. 220-200
(குடக்கோ நெடுஞ் சேரலாதன்) கி.மு. 200-180
5ஆம் பத்து கடல் பிறங்கோட்டிய வேல்கெழுகுட்டுவன் கி.மு. 180-125
6ஆம் பத்து ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கி.மு. 125-87
7ஆம் பத்து செல்வக்கடுங்கோவாழியாதன் கி.மு. 87-62
8ஆம் பத்து பெருஞ்சேரலிரும் பொறை கி.மு. 62-25
9ஆம் பத்து இளஞ்சேரலிரும்பொறை கி.மு. 25-9
10ஆம் பத்து கருவூரேறிய ஒள்வாட்கோப் பெருஞ்சோழன்? கி.மு. 9-1
(கணைக்காலிரும்பொறை) கி.பி. 123- 42
(கோக்கோதை மார்பன்) கி.பி. 123- 100
சேரன் செங்குட்டுவன் கி.பி. 175 -

தொண்டியிலாண்ட சேரர்

அந்துவஞ் சேரலிரும்பொறை … கி.மு 125 - 87
மாந்தரஞ் சேரலிரும்பொறை … கி.மு. 87-62
யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும் பொறை … கி.மு. 62-42
சேரமான் மாரிவெண்கோ … கி.மு. 42-

சோழ அரசர்

பெரும்பூட் சென்னி கி.மு. 123-245
இளம்பூட் சென்னி கி.மு. 123-245
நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி கி.மு. 245-230
உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி கி.மு. 230-220
கரிகால் வளவன் கி.மு. 220-200
வெற்றிவேற்பஃறடக்கை பெருநற்கிள்ளி கி.மு. 200-180
போர்வைக்கோ பெருநற்கிள்ளி கி.மு. 180-125
முடித்தலைக்கோ பெருநற்கிள்ளி கி.மு. 125-87
இராசசூயம் வேட்ட நெடுநற்கிள்ளி கி.மு. 62-42
கோப்பெருஞ் சோழன் … கி.மு. 25-9
நெடுங்கிள்ளி … கி.மு. 9-1
நலங்கிள்ளி - கி.பி. 1-
மாவளத்தான் (நலங்கிள்ளியின் தம்பி) கி.பி.
குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் கி.பி. 1-20
குராப்பள்ளித்துஞ்சிய பெருந் திருமாவளவன் கி.பி. 21-42
செங்கண்ணான் … கி.பி. 42-
சோழன் நல்லுருத்திரன் … கி.பி
மாவண் கிள்ளி … கி.பி. 120-144
தொண்டைமான் இளந்திரையன் கி.மு. 220-200
ஓய்மாநாட்டு நல்லியக்கோடன் கி.மு. 62-
பாண்டிய அரசர்

முதுகுடுமிப் பெருவழுதி … கி.மு. 350-
கருங்கை ஒள்வாட் பெரும்போர் வழுதி கி.மு. 230-
பசும்பூட் பாண்டியன் … கி.மு. 180-125
நம்பி நெடுஞ்செழியன் …
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்
செழியன் கி.மு. 87-62
கானப்பேரெயிலெறிந்த உக்கிரப் பெருவழுதி கி.மு. 63-
பாண்டியன் அறிவுடை நம்பி …
பழையன் மாறன் …. கி.மு. 25-9
வெள்ளியம்பலத்துத்துஞ்சிய பெருவழுதி கி.பி. 21-42
இலவந்திகை நன்மாறன்… கி.பி. 43-100
சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் … கி.பி. 101-120
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் கி.பி. 121-144
வெற்றிவேற் செழியன்
பன்னாடு தந்த மாறன் வழுதி … கி.பி.
உக்கிரப் பெருவழுதி … கி.பி. 225-
பூரிக்கோ … …. கி.பி.

அஅஅ

-   இக்குறியிட்டவை இப்புத்தகத்தில் வந்துள்ள நூல்களின் பெயர்கள்